சனி, ஜூலை 23, 2011

தலைவராக ஸ்டாலின் ? தடுக்கும் அழகாி

தலைமை மாலுமி இல்லாத கப்பலை போல் தடுமாறுகிறது திமுக. திமுகவின் தலைவராக இருப்பவர் கலைஞர். இந்தியாவில் திமுகவிற்க்கு பின் ஆரம்பிக்கப்பட்ட பல மாநில கட்சிகள் காணாமல் போய்விட்டன. பல கட்சிகள் கடலில் கரைந்த பெருங்காயமாக்கி விட்டது மத்தியில் ஆளும் காங்கிரஸ். 

தமிழகத்தில் திமுகவை அழிக்க ஆளாணப்பட்ட இந்திராகாந்தி,  எம்.ஜீ,ஆர் போன்றவர்களே முயன்று தோற்று போனார்கள். அதற்க்கு காரணம், திமுக என்ற ஆலமரத்தை தாங்கும் வேராக கலைஞர் இருக்கிறார் என கூறினால் அது மிகையில்லை.

திமுகவை நேரு அழிக்க முயன்றார். அதிலிருந்து கழகத்தை காப்பாற்றியவர் அண்ணா. மிசா காலத்தில் திமுகவை அழிக்க இந்திராகாந்தி எண்ணிய போது  அதை தடுத்தவர் கலைஞர். அதன்பின் எம்.ஜீ.ஆர், ஜெ என பலர் முயன்றும் தோற்றனர். அதற்கு காரணம் திமுக அரசியல் பாடம் படித்தது கறுஞ்சட்டை முதியவனிடம். 

ஆளானப்பட்ட அந்த தலைவர்களால் செய்ய முடியாததை இன்று கலைஞாின் பிள்ளையான அழகிாி சுலமாக செய்கிறார். வை.கோ கட்சியை விட்டு வெளியேரும் போது கலைஞர் கழகத்தில் தனக்கு பின் தன் மகனை கழகத்தின் தலைவராக்க முயல்கிறார் என குறைப்பட்டுக்கொண்டார்.

ஸ்டாலினை கலைஞாின் மகனாக மட்டும் பார்க்க முடியாது. அரசியலில் நெருப்பாற்றில் நீந்தியவர். பிறந்து, வளர்ந்து, படித்துவிட்டு  செய்ய வேறு வேலையில்லாமல் கழகத்திற்க்குள் வரவில்லை. சிறு வயது முதலே கட்சிக்காக நாடகங்கள் நடத்தி, சிறை சென்று, அடி உதை பட்டு அதன் பின்பே பதவிகளுக்கு வந்தார். கருணாநிதியின் மகனாக இருப்பதால் தான் அவர்க்கு வரவேண்டிய அமைச்சர் பதவி, துணை முதல்வர் பதவிகள் தாமதமாக வந்தன.  அப்படிப்பட்டவர் திமுகவின் தலைவர் பதவிக்கு ஆசைப்படுவதில் தவறில்லை. தலைவராக்கலாம். 

ஆனால் இதற்க்கு பெரும் முட்டுக்கட்டையாக இருப்பவர் கட்சிக்காக குறிப்பிட்டு சொல்லும்படி எந்த தியாகத்தையும் செய்யாதவர் கருணாநிதியின் இரண்டாவது மகன் அழகிாி. மதுரைக்கு முரசொலி பதிப்பை கவனிக்க அனுப்பி வைக்கப்பட்டார். தலைவர் மகன் என்பதால் அவாிடம் கட்சியினர் வந்தனர். அப்படியே தனக்கென ஆதரவு வட்டங்களை உருவாக்கி கொண்டார். திருச்சியை தாண்டி கன்னியாகுமாி வரை நான் சொல்லும் நபர்கள் தான் கட்சி பொறுப்பாளராக்க வேண்டும் என்ற அளவுக்கு உயர்ந்தார். 96 தேர்தலில் கட்சியை எதிர்த்து போட்டி வேட்பாளர்களை நிறுத்தி கழகம் தோல்விக்கு வழி வகுத்தார். கட்சி அவரை கட்டம் கட்டியது. பின் சில ஆண்டுகள் பொறுத்து சேர்த்துக்கொண்டது. கட்சியின் தென்மாவட்ட முக்கியஸ்தரான தா.கியை கொன்றார். 

இப்படி கட்சிக்கு துரோகியாகவே இருந்தவர்க்கு 2006 சட்டமன்ற தேர்தலில் தென் மாவட்டத்தில் நான் தான் அதிக நபர்களை வெற்றி பெற வைத்தேன் என பந்தா செய்தார். தனக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை என வந்த கருத்து கணிப்பை அடுத்து தினகரன் அலுவலத்தை அவரது அடிப்பொடிகள் தாக்கி 2 பேரை உயிரோடு எறித்தார்கள். பின் கட்சி தலைமையை மிரட்டி  தென் மண்டல செயலாளர் என்ற பதவியை உருவாக்கி அதில் உட்கார்ந்துகொண்டார். 2009 தேர்தலில் எம்.பி சீட் பெற்று வெற்றி பெற்று மத்திய அமைச்சரானார்.

வாாிசு அரசியல் என சொன்னாலும் தமிழக மக்கள் ஸ்டாலினை ஏற்றுக்கொண்டார்கள். கட்சியினரும் ஏற்றுக்கொண்டனர். ஆனால் அழகிாி உள் நுழைக்கும் போது தான் மக்கள் மத்தியில் முக சுளிப்பும், கட்சியினர் மத்தியில் வெறுப்பும் ஏற்பட்டது. ( பதவி ஆசை பிடித்தவர்கள் அவர் பின்னால் போனார்கள் என்பது தனி). தொடர்ந்தார் போல் கனிமொழிக்கு எம்.பி பதவி தர வேண்டிய கட்டாயம் அதுவும் சர்ச்சையானது. 

இப்போது வாாிசு அரசியலால் ஆட்சியை இழந்தார். ஆட்சி போன பின் கட்சியை சீரமைப்பதை விட்டுவிட்டு அழகிாி மிரட்டுகிறார் என சீரமைப்பு செய்வதை தள்ளி போடுகிறார். கட்சிக்காக பல ஆண்டுகளாக உழைத்தவரும் மக்கள் ஏற்றுக்கொண்டவருமான ஸ்டாலினை மறந்து விடவேண்டும். 

அதோடு அவர் பல தலைவர்களை சமாளித்து காப்பாற்றிய கட்சியை தனது பிள்ளைக்காக அவர் கண் முன்னாலே அழியும் சோகத்தை காண வேண்டி வரும்.

திமுக வெற்றி படியில் ஏறவும், துடிப்பாகவும் இருக்க வேண்டும்மென்றால் ஒரே தலைவர், ஒரே அதிகார மையம், கட்சி ஒரு குடையின் கீழ் வர வேண்டும். அது ஸ்டாலினாக இருக்க வேண்டும். அது தான் இப்போதைக்கு நல்லது. இல்லையேல் சகோதர மோதலில் திமுகவின் தேய்மானத்தை தன் வாழ்நாளிலேயே கலைஞர் காண வேண்டி வரும். 

செவ்வாய், ஜூலை 19, 2011

ரஜினிக்கு நேர்ந்தது அவமானமல்ல...............


சில மாதங்களாக சிறுநீரக கோளாறால் சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரஜினி கடந்த மாதம் மேற்சிகிச்சைக்காக சிங்கப்புர் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஓரளவு உடல் நிலை சீரானதும் அவரது குடும்பத்தார் கடந்த 13ந்தேதி இரவு அவரை சென்னை அழைத்துவந்தனர். 

சிங்கப்புர் ஏர்லென்ஸ் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டவரை விமானநிலைய அதிகாாிகளும், காவல்துறையினரும் கேவலப்படுத்திவிட்டார்கள், தொழிலதிபர்களுக்கு கூழை கும்பிடு போடும் அதிகார வர்க்கம் ரஜினியை கேவலப்படுத்திவிட்டார்கள், மத்திய அமைச்சர்களின் நண்பர், தமிழக முதல்வருக்கு வேண்டப்பட்டவர்க்கா இந்த அவமானம்  என ஒரு நாளிதாழ் என செய்தி வெளியிட்டுயிருந்தது. இதை பாடித்த போது அந்த நாளிதழ் மீது வெறுப்பு தான் வந்தது. 

தமிழ் சினிமாவின் ஒரு பொிய நடிகர் ரஜினிகாந்த். அதை மறுப்பத்திக்கில்லை. லட்ச கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள். மக்களின் ஆதரவு ஒரளவு உள்ளது.  அதை தவிர்த்து அவருக்கு வேறு என்ன தகுதியிருக்கிறது?. அவர் என்ன இந்திய விடுதலைக்காக பாடுபட்டவரா?, ஈழ மக்களுக்காக ரத்தம் சிந்தியவரா-போராடியவரா?, தமிழக மக்களின் உாிமைக்காக குரல் கொடுத்தவரா?, தமிழகத்தில் நிலவும் சாதி பிரச்சனைக்காக போராடி சிறை சென்றவரா?, 1000ம் பேரை வாழ வைக்கும் தொழிலதிபரா?, அரசியல் தலைவரா?, அமைச்சரா?,   எந்த அடிப்படையில் சிறப்பு சலுகை காட்ட வேண்டும் என எண்ணுகிறிர்கள்..........

தமிழ்மக்களின் ஆதரவு பெற்றவர் என்ற ஒன்று போதுமா? தமிழ் மக்களின் ஆதரவு அவர் மட்டுமா பெற்றுள்ளார் கமல் முதல் இப்போது நடிக்க வந்துள்ள சந்தானம் வரை தான் அவர்களது நடிப்பை மக்கள் ரசிக்கிறார்கள். அவர்களுக்கென ரசிகர்கள் ஊருக்கு ஊர் மன்றம் திறக்கிறார்கள். அதற்காக அவர்களுக்காக சிறப்பு சலுகைகள் தர வேண்டுமா என்ன? 


மத்தியமைச்சர்கள் வயலார் ரவி, சிதம்பரத்துக்கு நண்பர் என்பதால்  ரஜினிக்கு சிறப்பு சலுகை காட்ட வேண்டும் என கேட்பது முட்டாள் தனமானது. போலிஸ் சிடம் பாதுகாப்பு கேட்டால் தான் தரவேண்டுமே தவிர. ஒரு பிரபல நடிகர் அவரது வாழ்விடத்திற்க்கு வருகிறார் என்பதற்காக உளவுத்துறை கண்காணித்து பாதுகாப்பு தர வேண்டும் என்ற அவசியம்மில்லை. சட்டம் என்பது எல்லாருக்கும் ஒன்று தான்.

இந்தியாவின் முதல் குடிமகனாக போற்றப்படும் குடியரசுத்தலைவர் ஒருவர் அமொிக்கா சென்ற போது தடுத்து நிறுத்தி சோதனை செய்தபின்பே அனுப்பினார்கள். இந்தியாவின் பாதுகாப்பு துறை அமைச்சராக ஜார்ஜ்பெர்ணான்டஸ் இருந்த போது நிர்வாணமாக்கி சோதனை செய்தார்கள். இப்படி பலப்பல மக்கள் பிரதிநிதிகள் சோதனைக்கு ஆளாகியுள்ளார்கள் மேலை நாடுகளில். நம் நாடு எதிர்ப்பு காட்டும்போது அவர்கள் கூறும் காரணம் , முறைப்படி எங்களுக்கு தொியப்படுத்தினால் வி.வி.ஐ.பிகளுக்கான சோதனை நடைபெறும் இல்லையேல் இப்படித்தான் நடைபெறும் என்றார்கள்.

அதேபோல் தான் இதுவும் . மருத்துவம் பார்க்க வெளிநாடு சென்றார். திரும்பி வருகிறார். அவர் திரும்பி வரும் தகவலை ரசிகர்களுக்கு கசிய விட்ட அவரது குடும்பம் காவல்துறைக்கும், விமானநிலையத்துக்கும் அறிவித்திருந்தால் ஒரளவு ஏதாவது ஏற்பாடு செய்திருப்பார்கள். அதை விட்டுவிட்டு தொழிலதிபர்களுக்கு கூழை கும்பிடு போடுகிறார்கள் அதிகார வர்க்கத்தினர் என்கிறார்கள். அவர்கள் கூழை கும்பிடு போடுவது அறிந்ததுதான். அதோடு அந்த தொழிலதிபர்கள் சொந்தமாக விமானம் வைத்திருப்பவர்கள். அவர்களுக்கு சிறப்பு அனுமதியை அரசாங்கமே வழங்கியுள்ளது. விமான நிலையத்தில் பிரதமர், முதல்வர் செல்லும் வழியில் செல்ல அவர்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. அதோடு கோடி கணக்கி்ல்  கொள்ளையடித்தாலும் கொஞ்சமாவுது வருமானவாி என ஒன்றை கட்டுகிறார்கள். இந்தியாவுக்கு இந்த தொழிலதிபர்களால் வருமானம் வருகிறது. 

ரஜினியால் என்ன வருகிறது ? அவர் படத்தையோ, பெயரையோ பயன்படுத்தினால் சட்டப்படி தண்டனை அனுபவிக்க வேண்டி வரும் என அறிவித்தவர் தான் லதாரஜினிகாந்த். ஏன் தமிழக மக்களுக்கு அந்த உாிமையில்லையா?, அவரை வாழ வைத்தது தமிழகமும், தமிழக மக்களும் தான். அதையே மறந்தவர்கள் தான் ரஜினியும் அவரது குடும்பத்தாரும்.

இவருக்கு போலிஸ் பாதுகாப்பு வேண்டும் என கேட்பவர்கள் அதற்காக முறைப்படி தொிவித்தோ இல்லையென்றால்  தனியார் பாதுகாப்பை நாடிக்கொள்ளட்டும். அதை விட்டுவிட்டு ரஜினியை கண்காணித்து சலுகைகள் செய்திருக்க வேண்டாமா என கேட்பது அநியாயம். 



புதன், ஜூலை 13, 2011

ரஞ்சிதா புகழ் நித்திக்கு ஆதரவா ‘அம்மா’ ?

 
திருவண்ணாமலையில் பிறந்து கர்நாடகாவில் ஆசிரமம் வைத்த நித்தியானந்தா கதவை திற காற்று வரட்டும்மென குமுதம் இதழில் அவர் எழுதிய தொடர் பலப்பல வி.ஐ.பிகளை அவர் ஆசிரமத்துக்கு தள்ளிவிட்டது. உலகம் முழுக்க பக்தார்கள், ஆசிரமங்கள் என பிஸியானார். எப்போதும் இளம்பெண்கள் புடைச்சூழ வலம் வந்த இவர் உன் வீட்டுக்கு வர வேண்டுமா லட்சம், நேரில் சந்திக்க வேண்டுமா, ஆசி வேண்டுமா பல ஆயிரங்கள் என ரேட் பிக்ஸ் செய்து டோக்கன் போட்டு பணம் வசூல் செய்தார்கள். பத்திரிக்கையாளர்கள் படம் எடுத்தபோது கேமராக்கள் உடைப்பட்டன. கோடிகளில் புரண்டவர் நான் தான் கடவுள் என மக்களிடம் பிரச்சாரம் செய்துக்கொண்டிருந்தார்.

2010ம் ஆண்டு எதிர்பாராத விதமாக நடிகை ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா கட்டில் வித்தை காட்டியது வீடியோவாக வெளியானது. அந்த வீடியோ பல நிறுவனங்களுக்கு சென்றது. யாரும் ஒளிப்பரப்ப முன்வராத நிலையில் சன் டிவி முதலில் ஒளிப்பரப்பியது. மீண்டும் மீண்டும் ஒளிப்பரப்பியது என்றும் கூறலாம். இது தமிழகம் முழுவதும் பெரும் பரப்பபை ஏற்படுத்தியது. சிலயிடங்களில் நித்தி ஆஸ்ரமங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. மற்ற சேனல்கள் கொஞ்சம் அடக்கி வாசித்தது. சன் குரூப் பெரியதாக செய்திகளை வெளியிட்டது. ஒரு விதத்தில் இது பத்திரிக்கை தர்மம் என்றும் கூறலாம். ஒரு சந்நியாசி, பிரமச்சாரி என அடையாளப்பத்திக்கொண்டவர் உலகம் முழுவதும் பக்தர்களை வைத்திருப்பவர், இளைஞர் ஒரு நடிகையுடன் சல்லாபம் செய்துக்கொண்டு இருப்பது அவரது பக்தர் ஒருவரே வீடியோ எடுத்து செய்தி நிறுவனங்களுக்கு தருகிறார். இது முக்கிய செய்தி தான். இதற்கான செய்தி அதற்க்கு பின் நடந்தவற்றை தொடர்ந்து செய்தியாக வெளியிடுவது என்பது வாடிக்கை தான்.

இதன்பின் வழக்குகள் தமிழகத்தில், கர்நாடகாவில் பதிவாகின. தலைமறைவான நித்தி கர்நாடகா காவல்துறையால் கைது செய்யப்பட்டார். பலப்பல வழக்குகள் பாய்ந்தன. அந்த வீடியோ போலியானது என நித்தியானந்தா பீடம் அறிவித்தது. இல்லை அது உண்மையான மார்பிங் செய்யப்படாத வீடியோ என அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தடய அறிவியல் துறை ஆராய்ந்து சான்று அளித்துள்ளது. அப்படியிருக்க அந்த வீடியோ போலியானது என திருவாய் மலர்ந்துள்ளார் முன்னால் நடிகையும், அடுத்தவரின் மனைவியும் நித்தியானந்தாவின் காமராணியுமான ரஞ்சிதா.

கடந்த 12ந்தேதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ரஞ்சிதா, கடந்த ஆட்சியில் என்னை பழிவாங்கினார்கள். சென்னைக்குள் வந்தாள் கைது செய்வேன் என்றார்கள். அதனால் தான் பெங்களுரில் தலைமறைவாக இருந்தேன். இந்த ஆட்சி நேர்மையாக நடந்துக்கொள்ளும் என்ற நிலையில் தான் வெளியே வந்துள்ளேன். நான் இருப்பது போன்று மார்பிங் செய்து உருவாக்கப்பட்ட வீடியோவை சன் டிவி ஒளிப்பரப்பி என் புகழை கெடுத்துவிட்டது. என்னை பணம் கேட்டு சன் நிர்வாகத்தினர் மிரட்டினார்கள் அது யார் யார் என கமிஷனரிடம் புகார் தந்துவிட்டு வந்துள்ளேன் என்றார்.

என்னம்மா நடிக்கிறார் இந்த நடிகை. நித்தி இந்த நடிகை மீது பாய்ந்த பாய்ச்சல், அவருடன் கொஞ்சி குலாவிய காட்சிகள் மறக்க முடியாதவை. இந்த காட்சிகள் பட்டி தொட்டி வரை பரப்பி சாமியார்கள் என்றால் இப்படித்தான் என்ற முகத்திரையை கிழிக்கப்பட்டது. இதை உலகமே கண்டது. ஆனால் இது எல்லாமே பொய் என்கிறார். எய்தவன் எங்கோ இருக்க அம்பை நொந்து என்ன பயன் என்பதை போல ரஞ்சிதாவை சொல்லி குற்றம்மில்லை. பணம் தந்தால் யார் சொன்னாலும் நடிப்பார். இப்போதும் நடிக்கிறார் இந்த நாடகத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் செக்ஸ் புகழ் நித்தி.

ஆட்சி மாற்றத்துக்கு பின் சன் நிர்வாகத்தால் பாதிக்கபட்டவர்கள் சினிமா உலகினர் காவல்துறை வழியாக பாய்ந்துள்ளனர். சன் நிர்வாகம் திமுக என்ற கட்சியின் பின்னணியை வைத்துக்கொண்டு சினிமா தொழிலை நசுக்கியது என்ற பல்லவி பல ஆண்டுகாலமாகவே கோடம்பாக்கத்தின் சந்து பொந்துக்களில் கேட்டது. அது உண்மையும் தான். திமுகவின் பின்னணியை வைத்துக்கொண்டு தமிழகத்தை வழி நடத்த ஆசைப்பட்டது. அதற்காக அவர்கள் செய்த அத்துமீறல்களுக்கு இப்போது எடுக்கப்படும் நடவடிக்கைகள் வரவேற்க்கப்பட வேண்டியவை தான். அதில் மாற்றுக்கருத்துக்கு இடம்மில்லை.


ஆனால் நித்தியானந்தா வழக்கு என்பது அப்படியல்லவே?

சந்தியாசி என நாடகமாடிய காமச்சாமியார் பற்றி செய்தி ஒளிப்பரப்பினார்கள். இதில் சம்மந்தப்பட்ட நித்தி-ரஞ்சிதாவுக்கு கருத்து கூற உரிமையிருக்கிறது. சொல்லட்டும். பணம் கேட்டு மிரட்டியிருந்தால் வழக்கு பதிவு செய்யலாம். ஆனால் கர்நாடகா காவல்துறை வீடியோ உண்மை என ஆதாரத்துடன் வழக்கும் போட்டுள்ளது. அப்படியிருக்க தமிழக காவல்துறையிடம், போலியான வீடியோ நடவடிக்கை எடுங்கள் என கேட்பதை அதிகாரிகள் கேட்பது என்பது கேவலமானது. பொய்யான புகார் என தெரிந்தே வாங்குவது வேறு ஏதோ ஒரு திட்டம் உள்ளது என்பதை தான் காட்டுகிறது. முதல்வாரன ஜெயலலிதா இந்த வழக்கில் நடந்துக்கொள்வதை வைத்துதான் அடுத்த 5 ஆண்டுகளில் எப்படி ஆட்சி நடத்துவார் என்பதை அறிய முடியும். நித்திக்கு ஜெ ஆதரவு தெரிவிக்கிறார் என்றால் கொலை குற்றவாளி காஞ்சி சங்கராச்சாரியார் விடுதலையாவார். எப்போதும்மில்லாத அளவுக்கு பிராமண சக்திகளின் கை ஒங்கும், சாமியார் போர்வையில் என்ன தவறுகள் செய்தாலும் கண்டுக்கொள்ள மாட்டார்கள். பொய்யான வழக்குள் யார் மீதும் பாயலாம் என்ற நிலைதான்.

ஒரு நிறுவனத்தின் மீது ஆயிரம் கசப்புகள் இருக்கலாம். அந்த நிறுவனம் தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும் மறுப்பதிற்க்கில்லை. ஆனால் செய்தி வெளியிட்டதற்க்கு தவறு செய்தவர்களுக்கு ஒரு அரசு ஆதரவு தெரிவிப்பது என்பது மோசமான செயல் இதை மீடியா உலகம் கண்டிக்க வேண்டிய சமயம். இல்லையேல் நாளை யாருக்கு வேண்டுமானாலும் இந்த நிலை வரலாம்.

திங்கள், ஜூலை 11, 2011

நியூஸ் ஆப் தி வேல்ட் ஒரு பார்வை.


உலகின் பெரிய புலனாய்வு பத்திரிக்கை எதுவென்றால் அது பிரிட்டனில் இருந்து வெளிவரும் நியூஸ் ஆப் தி வேல்ட். 1.8.1843ல் தொடங்கப்பட்ட பத்திரிக்கை. தொடங்கிய சில ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய புலனாய்வு பத்திரிக்கையாக வளர்ந்தது. ஞாயிறு தோறும் நியூஸ் ஆப் தி வேல்ட் என்ற வார இதழ் வெளிவரும் போது உலக அரசியல் குறிப்பாக பிரிட்டனில் அரசியல் புள்ளிகள் அலறுவார்கள். அந்தளவுக்கு தகவல்களை துல்லியமாக தரும் ஒரு செய்தி புத்தகம். இந்த நிறுவனத்தில் இருந்து தி சன்டே டைம்ஸ், தி டைம்ஸ், தி சன் என பத்திரிக்கைகள் வெளிவருகின்றன. 168 ஆண்டுகள் அசைக்க முடியாத நிறுவனமாக இருந்து செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருந்த இந்த செய்தி நிறுவனம் கடந்த 10.7.2011ல் தன் நிறுவனத்தை மூடிவிட்டது.


ஏன் எதனால்?.



1.8.1843ல் ஜான் பிரவுன் பெல் இச்செய்திதாளை தொடங்கினார். செக்ஸ், க்ரைம், அதிர்ச்சியான செய்திகளுக்கு தான் இதில் முக்கியத்துவம் தரப்படும் என ஆரம்பத்திலேயே முடிவு செய்யப்பட்டது. அதன்படியெ செய்திகள் வெளியிடப்பட்டன. 1920ல் 20 லட்சம் பிரிதிகள் விற்க்கும் செய்திதாளாக இது இருந்ததற்க்கு காரணம், அதிரடியாக வைக்கப்படும் இதன் தலைப்புகளும் அதற்கான செய்திகளும் தான். 1950களில் 80 லட்சம் காப்பிகள் உலகம் முழுவதும் இது விற்பனையானது.



ஏதற்க்கும் அசாராத மேற்கத்திய சினிமா பிரபலங்கள் இந்நிறுவனம் வெளியிடும் செய்திகளால், எங்கள் புகழ்க்கு களங்கம் விலைவிக்கும் வகையில் உள்ளது என பலப் பல பிரபலங்கள் வழக்கு தொடந்துள்ளன. இதன்படி பல வழக்குகளை சந்தித்தது இந்நிறுவனம். உலகின் பல நாட்டு தலைவர்கள் குறிப்பாக அமெரிக்க அதிபர் முதல் பல நாட்டு பிரதமர்கள் வரை இந்த நிறுவனத்திற்க்கு வராதவர்கள்யில்லை. அந்தளவுக்கு முக்கியத்துவம் பெற்ற செய்தி நிறுவனம்மிது.



2006ல் இந்நிறுவனத்தை சேர்ந்த செய்தியாளர்கள் சிலர் 7 ஆயிரம் முக்கிய நபர்களின் தொலைப்பேசி, வாய்ஸ் மெயில் போன்றவற்றை ஒட்டுக்கேட்டுள்ளனர் என தி கார்ட்டியன் என்ற பத்திரிக்கை செய்தி வெளியிட்டது. இதில் 13 வயது சிறுமி தந்த புகார்க்கு முக்கியத்துவம் தரப்பட்டு இந்த நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனை பிரிட்டன் போலிஸார் மற்றும் புலனாய்வு நிறுவனங்கள் விசாரித்து தொடர் விசாரணையில் 3 செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிறுவனம் ஒரு நபரை கொலையும் செய்துவிட்டது, முந்தி செய்தி தர காவல்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் தந்துள்ளது என குற்றம் சாட்டப்பட்டது. இதனால் அப்போதைய ஆசிரியர் ஆன்டி குல்சன் 2007ல் கைது செய்யப்பட்டார். இதனால் பல நெருக்கடிகளை இந்நிறுவனம் சந்தித்தது. பிரிட்டன் பிரதமர் வரை சந்தித்தும் பிரச்சனையை தீர்க்க முடியவில்லை. இதனால் பாரம்பரியம்மிக்க இந்நிறுவனம் தனது பதிப்பை நிறுத்திக்கொண்டது. இதன் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



இந்த 168 ஆண்டில் மொத்தம் 23 பேர் இதில் ஆசிரியர்களாக இருந்துள்ளார்கள். தற்போது சேர்மன் பதவியில் இருந்துக்கொண்டு பத்திரிக்கையை மூடும் அறிவிப்பை வெளியிட்ட ராபர்ட் மூர்டோக் 1969ல் இதன் சேர்மனாக பதவியேற்றுக்கொண்டார். இந்த பத்திரிக்கையின் பலம் இவரை போர்ப்ஸ் பத்திரிக்கை உலகின் மிக முக்கியமானவர் என புகழ வைத்தது.



இந்நிறுவனம் மூடப்படுவது பற்றி ராபர்ட் முர்டக், நான் நம்பியவர்கள் என்னை கைவிட்டுவிட்டார்கள். அதனால் நான் இப்பத்திரிக்கையை கை விடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன் என்றார். மூடும் அறிவிப்புக்கு பின் கடந்த ஜீலை 7ந்தேதி கடைசி இதழ் 48 பக்கம் கொண்டதாக தயாரானது. அதில் அந்நிறுவனத்தின் பற்றிய கடந்த கால தகவல்கள் வரலாற்று ஆவணங்களை கொண்டதாக வெளிவந்துள்ளது. புத்தக பக்கங்கள் தயாரானதும் அதன் ஆசிரியராக இருந்த கோலின்மைலர் கடைசியாக தன் ஊழியர்களிடம், நீங்கள் சிறப்பாக பணியாற்றினீர்கள். தொலைபேசி ஒட்டுக்கேட்பால் இந்த நிலைக்கு இந்நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது. இதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என தனது வறுத்தத்தை தெரிவித்துள்ளார். கடைசி இதழின் அட்டையில் நன்றி விடை பெறுகிறோம் என ஆங்கிலத்தில் தலைப்பிட்டு அட்டைப்படம் வெளியிட்டு பிரிந்துள்ளது பாரம்பரியமிக்க இந்நிறுவனம்.

சுடாதிங்க...சுடாதிங்க...

உத்திரபிரசேத்தில் களமிறங்கியுள்ளார் காங்கிரஸ் சக்கரவர்த்தி ராகுல். உ.பியில் விவசாயிகள் பாதிக்கபட்டுள்ளார்கள். அம்மக்கள் வறுமையில் வாடுகிறார்கள். அவர்களுக்கு ஆறுதல் கூற அந்த மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்கிறாறாம் இந்த சக்கரவர்த்தி. தேசிய தொலைக்காட்சிகள், தேசிய தினசரிகள் எல்லாம் ஆகா ஓஹோ என கூப்பாடு போடுகின்றன. மாயாவதி விவசாயிகளை நசுக்குகிறாறாம் திருவாய் மலர்ந்துள்ளார் ராசா வீட்டு கன்னுக்குட்டி.


அரசியல் அரிச்சுவடி தெரியாத இந்த சக்கரவர்த்தி கால் வைக்கும்மிடங்கள் எல்லாம் மண்ணோடு மண்ணாக போகிறது காங்கிரஸ் கட்சி. உம் தமிழ்நாடு, பீகார் என 6, 7 மாநிலங்களை சொல்லலாம். இப்போது உ.பிக்கு போய்வுள்ளார். எல்லாம் தேர்தல் படுத்தும் பாடு. விரைவில் உ.பியில் சட்டமன்ற தேர்தல் வரப்போகிறது.


அந்த மாநிலத்தில் காங்கிரஸ் தனித்து ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு வலிமையாக உள்ளதாம். காங்கிரஸ்சை மக்கள் விரும்புகிறார்களாம். அதனால் மற்ற கட்சிகள் டெப்பாசிட் கூட வாங்க முடியாத அளவுக்கு இந்த தேர்தல் இருக்க வேண்டும்மென களம்மிறங்கியுள்ளார் சக்கரவர்த்தி.

இந்த சக்கரவர்த்தியின் சுற்றுப்பயணத்தில் யாரோ இவரை கொல்ல துப்பாகியுடன் வந்தார் என கைது செய்துள்ளது காவல்துறை. அய்யா சாமீகளா...... இந்த சக்கரவர்த்தியை கொல்ல துடிப்பவர்களே உங்கள் காலில் விழுந்து கேட்கிறேன் கொஞ்சம் தயவு செய்து உங்களது அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். இந்த சக்கரவர்த்தி கால் வைக்கும்மிடங்கள் எல்லாம் காலி பெருங்காய டப்பாவாக மாறிக்கொண்டுயிருக்கிறது காங்கிரஸ். இந்த நேரத்தில் இவரை கொன்று சரிந்துக்கொண்டுயிருக்கும் காங்கிரஸ் செல்வாக்கை உயர்த்திவிடாதிர்கள். உங்களுக்கு புண்ணியமாக போகட்டும்.

திமுகவினர் பட்டாசு வெடிக்க வேண்டிய தருணம்.


உடன்பிறப்புகள் பட்டாசு வெடித்து கொண்டாட வேண்டிய தருணம்மிது. திமுக என்ற ஆலமரத்தை கொண்டு வளர்ந்த சன் குரூப்பின் தயாநிதிமாறன் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு சி.பி.ஐ விசாரணையை எதிர்க்கொண்டு உள்ளார். அடுத்து சிறைக்கு செல்லவும் தயாராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


திமுக தலைவரின் மனசாட்சிக்கு மகன்களாக பிறந்து திமுக பிம்பத்தை பயன்படுத்தி வளர்ந்தனர். மனசாட்சியின் இழப்பை ஈடுகட்ட இளைய மகனை கட்சிக்குள் கொண்டு வந்து தேர்தல் களத்தில் விட்டபோது நடுநிலை உடன்பிறப்புகள் இதனை எதிர்த்து தகவல்களை தலைமைக்கு கொண்டு சென்றார்கள். மனசாட்சி போல் இருப்பார் என நம்பி பதவியும் பெற்றுதந்தார். திமுகவில் இருந்தபடியே பதவி சுகத்தை அனுபவித்துக்கொண்டு காங்கிரஸ்சோடு சேர்ந்து திமுகவை அழிக்க துணை போனார்கள் மாறன் பிரதர்ஸ்.


 
ஆனால் அவர்கள் தங்களது வியபாரபுத்தியை காட்டினார்கள். குடும்ப சண்டைக்காக கழகத்தையே அழிக்க துணிந்தார்கள். திமுகவின் நீண்ட கால துரோகியான காங்கிரஸ்சுடன் சேர்ந்தே அழிக்க திட்டமிட்டார்கள். தங்களது பண, மீடியா பலத்தை கொண்டு எதையும் சாதிக்கலாம் என எண்ணியவர்கள் இன்று அதுவே அவர்களுக்க எதிரியாகியுள்ளது.



அதன் முதல் கட்டமாக ஸ்பெக்ட்ராம் விவகாரத்தை ஊதி, ஊதி பெரிதாக்கினார்கள். இதற்க்கு காங்கிரஸ்சும், அம்பானி பிரதர்ஸ்சும் மறைமுகமாக பலப்பல உதவிகளை செய்தார்கள். தேசிய அளவில் பெரிய அவமானத்தை உருவாக்கி தந்தார்கள். முன்னால் மத்திய அமைச்சர் ராசா, எம்.பி கனிமொழி ஆகியோர் கைது செய்ய காரணமானவர்கள் காங்கிரஸ், பெரு முதலாளிகளான அம்பானி பிரதர்ஸ் இவர்களுடன் மாறன் பிரதர்ஸ். இதனால் திமுக ஆட்சியை இழந்தது. இப்போது காங்கிரஸ் மற்றும் அதன் பெரு முதலாளிகள் மாறனை கழட்டி விட தான் விரித்த வலையில் அவரும் சிக்கிக்கொண்டார்.



சன் நிர்வாகத்தை அழிக்க முடியாது என ஜம்பமடித்தவர்கள் மாறன் தரப்பினர். வல்லவனுக்கு வையகத்தில் உண்டு…………………. தமிழக முதல்வர் ஜெ, சன் பிக்சர்ஸ் நிர்வாகியும் கலாநிதிமாறனின் பால்ய நண்பருமான சக்சேனாவை கைது செய்து பெரிய ஆட்டம் காண வைத்தார். மத்திய காங்கிரஸ் அரசு, தயாநிதிமாறனை கழட்டி விட்டு அதிர்ச்சியை தந்தது. மாநில காவல்துறை கலாநிதிமாறனை குறிவைக்கிறது, சி.பி.ஐ தயாநிதியை குறிவைக்கிறது. ஆக சன் சரிவை நோக்கி வேகமாக செல்கிறது. அதை தடுத்து நிறுத்த பல வழிகளில் முயற்சி செய்கிறார்கள் இந்த பெரு முதலாளிகள். துரோகத்துக்கு துணை போகிறவர்கள் அதன் பலனை அனுபவித்து தான் ஆக வேண்டும் என்பதை காலம் மாறன்களுக்கு உணர்த்தியிருக்கும் என நம்பலாம்.