சனி, அக்டோபர் 24, 2015

கணிப்பொறி, கைபேசியில் நடக்கும் கழகபணி. களத்தில் ?????????????????







தமிழகத்தில் அதிமுக, திமுக போன்ற பெரிய கட்சிகள் முதல் நேற்று முளைத்த லட்டர் பேட் கட்சி வரை இணையத்தில், சமூக வளைத்தளங்களில் இயங்குகிறார்கள். தங்களது கட்சியின் ஒவ்வொரு நடவடிக்கை மற்றும் கட்சி தலைவர் முதல் ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் வரை என்ன செய்கிறோம் செல்பி படம்மெடுத்து வாட்ஸ்அப்பில் பரப்புகிறார்கள். தமிழகத்தில் உள்ள கட்சிகளில் இணையத்தில் இப்போது தீவிரமாக இருப்பது திமுகவின் இணைய தள அணி என்றால் மிகையில்லை. ஒருகாலத்தில் சோம்பிபோயிருந்த இந்த அணி இன்று இணையத்தில் வேகமாக இயங்குகிறது. திமுகவை தாக்குபவர்களை எதிர்தாக்குதல் நடத்திவருகிறது. 

சில ஆண்டுகளுக்கு முன்பு 2ஜி ஊழல்யில்லை என விளக்கமாக பதிவிட்டார்கள், பிற கட்சியினர் திமுகவின் குடும்ப அரசியல் பற்றி பேச முடியாத படி செய்தார்கள் எந்த பிரதிபலனும் பாராமல் உழைத்தார்கள். ( அப்படி உழைத்த பலர் இன்று அமைதியாக வேறு வேலைகளை செய்துக்கொண்டு உள்ளார்கள். காரணம், இணைய தள திமுகவை தங்களது ஆதிக்கத்தில் கொண்டு வர சிலர் செய்த வேலைகளால் அவர்கள் ஒதுங்கிக்கொண்டார்கள். )

ஸ்டாலின், கலைஞர் போன்ற கட்சியின் தலைவர்கள் பேஸ்புக், டுவிட்டர் தளத்துக்குள் வந்தபின் கட்சியின் பெரும்பாலான மேல்மட்ட, கீழ்மட்ட, மாவட்ட ஒன்றிய, நகர நிர்வாகிகள் முகநூல் மற்றும் டுவிட்டர் தளத்துக்கு வந்து கணக்கு தொடங்கினார்கள். கட்சி தலைமையை கவர வேண்டும் என்பதற்காக போராட்டங்கள், கட்சி நிர்வாகிகள் கலந்துக்கொள்ளும் நிகழ்சிகளை புகைப்படங்களாக எடுத்து முகநூல், டுவிட்டர், வாட்ஸ்அப்பில் போட்டு நாங்கள் வேகமாக கட்சி பணியாற்றுகிறோம் என காட்ட முயல்கிறார்கள். உண்மையில் இவர்கள் கட்சி பணியை கணிப்பொறி முன்பும், கைபேசி வைத்துக்கொண்டு செய்கிறார்களே தவிர களத்தில் செய்கிறார்களா என கேட்டால் இல்லையென உறுதியாக சொல்லலாம்.


முகநூல், டுவிட்டர், வாட்ஸ்அப்பில் செயல்படும் இணைய தள புலிகளுக்கு கிடைக்கும் மரியாதை களத்தில் கில்லியாக செயல்படும் நிர்வாகிகளுக்கோ, தொண்டர்களுக்கோ கிடைக்காததால் நொந்துப்போய்வுள்ளார்கள். முகநூலில் செயல்படுபவர்களுக்கு கிடைக்கும் மரியாதையில் பாதிக்கூட களத்தில் வேலை செய்யும் நிர்வாகிக்கோ, தொண்டனுக்கோ கிடைப்பதில்லை, அதை மாவட்ட நிர்வாகிகள் தருவதில்லை என பலயிடங்களில் குறைப்பட்டுக்கொள்கிறார்கள். முகநூலில் செயல்படுவதன் மூலம் கட்சி மீதான கறைகளை துடைக்க முடியும்மே தவிர ஓட்டுக்களை வாங்க முடியாது. நான் சொல்வதை நம்ப முடியவில்லையென்றால் மதிமுகவினரிடம் கேட்டுப்பாருங்கள்.

இணையத்தில் வை.கோவுக்கு அதிகமான ஆதரவாளர்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள். அவர்கள் செயல்பாட்டை காணும்போது அவர் தான் அடுத்த முதல்வராக வருவார் என நம்பும் படியிருக்கும். ஆனால் கள நிலவரம் என்ன என்பது எல்லோருக்கும் தெரியும். போற்றி பாட இணையத்தில் ஏகப்பட்ட பேர் வை.கோவுக்கு உண்டு ஆனால் ஓட்டுப்போட அவர்களில் ஒருவரும் வரப்போவதில்லை. அந்த உண்மையை எல்லா கட்சியினரும் உணர்ந்துக்கொள்ள வேண்டும். 

இளைய தலைமுறையை ஈர்க்க இணையத்தில் செயல்படுவது ஒரு புறம்மிருந்தாலும் களத்தில் தீவிரமாக செயல்பட வேண்டும். நான் அறிந்த வரையில் வடமாவட்டங்களில் அந்த பணியை கச்சிதமாக செய்வது பாமக தான். இணையத்தில் ஆண்டசாதி என சொல்லிக்கொண்டு திமிர் பேசினாலும் களத்தில் கிராமந்தோறும் பிரச்சாரம், திண்ணை பிரச்சாரம், சாதிக்காரர்களை ஒன்று திரட்டல் பணிகளை கச்சிதமாக செய்கிறார்கள். இந்த சாதி கட்சிக்கு உள்ள திட்டமிடல் தேர்தல் பணியில் கரைகண்ட திமுகவுக்குயில்லை.

மோடி வளைத்தளத்தை பயன்படுத்தி தான் ஆட்சி பொறுப்புக்கு வந்தார் அதனால் அந்த வழியை நாங்களும் பயன்படுத்துகிறோம் என்பவர்கள் கவனத்துக்கு. மோடி இணைய தளங்களை மட்டும் பயன்படுத்திக்கொள்ளவில்லை. பத்திரிக்கை, தொலைக்காட்சி என ஊடகங்களை செமையாக கவனித்து பயன்படுத்திக்கொண்டார். மக்கள் மத்தியில் ஒரு பெரும் கதாநாயாகனாக தன்னை உருவாக்க வைத்தார். அந்த பிம்பம் தான் அவருக்கு பிரதமர் நாற்காலியை மக்களால் தரவைத்தது. 


ஒரு கட்சி இன்றைய காலக்கட்டத்தில் இணையத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல் அந்த கட்சி தலைமை ஊடகங்களிலும் தங்கள் கவனத்தை செலுத்த வேண்டும். அதை கட்சி தலைமை செய்கிறது என்றால் கட்சி நிர்வாகிகள் கார்களை விட்டு இறங்கி தொண்டர்களிடம், மக்களிடம் நெருங்கி செல்ல வேண்டும். பத்தாண்டுகளுக்கு முன்பு ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு திமுக கரை வேட்டி கட்டிய தொண்டர் தெருவில் லைட் எரியவில்லையா பஞ்சாயத்து அலுவலகத்துக்கு போய் கேள்வி கேட்பார், ரேஷன் கார்டுயில்லையா வாங்கி தருவார், வாக்காளர் அடையாள அட்டையில்லையா வாங்கி தருவார், சர்டிப்கெட் வேண்டுமா வாங்கி தருவார். அந்த நபர் சொல்வதை அவரால் பலன் பெற்றவர்கள் செய்வார்கள். இப்படித்தான் ஓட்டுக்களை தக்க வைத்துக்கொண்டு இருந்தனர் திமுகவினர். கட்சியினரை கண்டால் இறங்கி நலம் விசாரித்த நிர்வாகிகள் இருந்தார்கள். இன்று அப்படியா இருக்கிறார்கள் திமுகவினர்?.

திமுகவினரின் அந்தயிடத்தை அதிமுகவினர் பிடித்துக்கொண்டனர். இன்று ஒவ்வொரு கிராமத்திலும் இரண்டு, மூன்று அதிமுக தொண்டர் அந்த பணியை செய்கிறார் அதிலிருந்து தனக்கான கூலியை சம்பாதித்துக்கொள்கிறார். திமுக தொண்டர்கள் ஏன் அதை கைவிட்டார்கள் என்பதை அந்தந்த பகுதி நிர்வாகிகள் ஆராய வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளாக மாவட்ட ஒன்றிய, நகர நிர்வாகிகள் தொண்டர்களை மதிப்பதில்லை. அதிலும் பணவசதியில்லாத கழகத்தினரை சுத்தமாக மதிப்பதில்லை. இன்றைய நிர்வாகிகளுக்கு யார் தேவைப்படுகிறார்கள் என்றால் செல்போன், முகநூலில் கணக்கு, வாட்ஸ்அப்பில் குழு உருவாக்கி வைத்துள்ள தொண்டன் தேவை என நினைக்கிறார்கள். முகநூல் கணக்கு எந்த காலத்திலும் வந்து ஓட்டு போடப்போவதில்லை, முகநூல், வாட்ஸ் அப் பற்றி தெரியாத லட்ச கணக்கான ஏன் கோடிக்கணக்கான வாக்காளர்கள் தமிழகத்தில் உள்ளார்கள் என்பதை திமுகவினர் நினைவில் கொள்ள வேண்டும். அந்த வாக்காளர்களை அழைத்து வந்து ஓட்டுப்போட வைக்க போகிறவன் கிராம தெருக்களிலும், நகர தெருக்களிலும் உள்ளான். அவனை மதிக்காமல் முகநூல், வாட்ஸ் அப்பை மட்டும் மதிக்ககூடாது. 

அந்த கோடிக்கணக்கான வாக்காளர்களையும் மனதில் வைத்து களத்தில் வேலை செய்ய வேண்டும், வாக்குசாவடியில் நின்றுக்கொண்டு படம் எடுத்து போடுவதை விட, வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்ய வேண்டும். ஆளும்கட்சி செய்துள்ள தவறுகளை, ஊழல்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும், கடந்த காலத்தில் திமுக நிர்வாகிகள் செய்த தவறுகளை கலைய வேண்டும், மக்களிடம் நம்பிக்கை வரும் அளவுக்கு நடந்துக்கொள்ள வேண்டும். இதை செய்யாமல் மாற்றம் வராது. களப்பணி மட்டும்மே வெற்றியை தரும் என்பதை திமுக நிர்வாகிகள் உணர வேண்டும். உணர்ந்தால் நல்லது.

1 கருத்து: