திங்கள், ஏப்ரல் 27, 2015

உச்சநீதிமன்றத்தின் குழப்பமான தீர்ப்பு. அடுத்து என்ன ?.




ஜெயலலிதா என்றால் நீதிமன்றங்களுக்கு என்ன பயம்மோ தெரியவில்லை. அவர் சார்ந்த வழக்கு என்றால் விதவிதமாக தீர்ப்புகளை தருகிறார்கள். 

1996ல் தொடரப்பட்ட ஜெ, சசிகலா, இளவரசி, சுதாகரன் மீதான வருமானத்துக்கு அதிகமாக 66.5 கோடி ரூபாய் சொத்துக்குவித்த வழக்கில் 2014 ஆகஸ்ட் மாதம் கர்நாடகா தனி நீதிமன்றத்தில் மைக்கல் டி குன்ஹாவால், 4 ஆண்டு சிறை தண்டனை 100 கோடி ரூபாய் அபராதம் என தீர்ப்பு தரப்பட்டது. முதல்வர் பதவி பறிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதா, உடனே ஜாமீன்க்கு முயற்சி செய்கிறார். கர்நாடகா உயர்நீதிமன்றம் மறுத்துவிடுகிறது. உச்சநீதிமன்றம்மோ, அரசு தரப்பின் வாதத்தை கேட்காமல் வித்தியாசமாக ஜாமீன் வழங்கி, 3 மாதத்தில் மேல்முறையீட்டு மனுவை விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என உத்தரவிடுகிறது. ( ஜெ வுக்கு முன்பு இதேபோல் ஊழல் வழக்கில் குறைவான தண்டனை பெற்ற அரசியல் பிரபலங்கள் மாதக்கணக்கில் சிறையில் இருந்து அதன்பின்பே ஜாமீனில் வெளியே வந்தார்கள் ). 

கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், அரசின் சார்பில் பவானிசிங் ஆஜராகிறார். இவர் ஆஜராவது தவறு என்கிறார்கள். உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றத்துக்கு வழிகாட்டுகிறது. உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத்துக்கு வழிகாட்டுகிறது. உயர்நீதிமன்றம் தனிநீதிபதிக்கு வழிகாட்டுகிறது, அங்கிருந்து மீண்டும் உச்சநீதிமன்றம் செல்கிறது. இப்படி பந்தாடப்பட்டு இறுதியில் உச்சநீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கிறது. அதில் ஒருவர் பவானிசிங்கை நியமனம் செய்யும் அதிகாரம் தமிழகரசுக்குயில்லை என்கிறார். மற்றொரு நீதிபதி உள்ளது என்கிறார். வித்தியாசமான தீர்ப்பால் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு வழக்கு மாற்றப்படுகிறது. உச்சநீதிமன்றத்தில் இந்த அமர்வு அமைக்க மாதக்கணக்கில் ஆகும். உதாரணத்துக்கு ஒரு வழக்கு பார்க்கலாம், ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் தூக்குதண்டனை கைதியாக சிறையில் உள்ள 3 பேர் வழக்கில் முடிவு எடுக்க அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாகியும் அந்த அமர்வு பற்றி உச்சநீதிமன்றம் வாய்திறக்கவில்லை. இதேபோல் பல வழக்குகள் உள்ளன. ஆனால், இரண்டு நீதிபதிகள் தீர்ப்பு தந்த மறுநாளே, மூன்று நீதிபதிகள் அமர்வை அமைத்து அறிவிப்பு செய்கிறது உச்சநீதிமன்றம். மறுநாள், அவர்கள் என்று விசாரிப்பார்கள் எனவும் அறிவிக்கப்படுகிறது. இஸ்ரோ ராக்கெட் வேகத்தை விட அதிக வேகமாக உச்சநீதிமன்றம் செயல்பட்டுள்ளதை நிச்சயமாக பாராட்ட வேண்டும். 

மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இரண்டு அமர்வில் விசாரித்து முடித்துவிட்டார்கள். மூன்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் ஒரே கருத்தாக கூறியது.

1.       அரசு வழக்கறிஞராக பவானிசிங் நியமனம் செல்லாது.
2.       அவரது எழுத்துபூர்வ வாதங்களை நிராகரிக்க வேண்டும்.
3.       அன்பழகன் 90 பக்கங்களுக்கு மிகாமல் தங்கள் தரப்பு பதில் தரலாம்.
4.       சுப்பிரமணியசாமிக்கும் பதில் தர அனுமதி.
5.       ஊழல் எந்தளவுக்கு சமுதாயத்தை பாதிக்கும் என கருத்தில்கொண்டு தீர்ப்பு வழங்க வேண்டும்………

இப்படி தீர்ப்பு தந்து குழப்பி வைத்துள்ளார்கள் நீதிபதிகள். அரசு வழக்கறிஞர் நியமனம் தவறு என மூன்றாம் தரப்பு உச்சநீதிமன்றத்துக்கு வந்ததன் நோக்கம்மே அரசு வழக்கறிஞர் குற்றவாளிகளுக்கு சாதகமாக கீழ் நீதிமன்றத்தில் செயல்பட்டு அபராதம் விதிக்கப்பட்டார், ஜாமீன் மனு மீதான விசாரணையில் பல்டியடித்தார், மேல்முறையீட்டில் முறையான அனுமதியில்லாத போதும், வழக்கு நடைபெறும் மாநில அரசு அனுமதியில்லாமல், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை நியமன கடிதத்தை வைத்துக்கொண்டு மேல்முறையீட்டு மனுவில் ஆஜராகிறார் என்பதால்தான். 

அரசு வழக்கறிஞராக பவானிசிங் நியமனம் செல்லாது என தீர்ப்பு வழங்கும் நீதிபதிகள் எழுத்து வடிவிலான வாதத்தை நிராகரிக்கசொல்கிறது. அப்படியாயின் அவரது வாய் வார்த்தை வாதங்களை ஏற்றுக்கொள்ளளாம் என அர்த்தமாகிறது. 

தவறான சட்ட வழியில் நியமிக்கப்பட்ட வழக்கறிஞரின் வாதம் எப்படி அரசு தரப்புக்கு சாதகமாக இருந்திருக்கும் என யோசிக்காமல் போனது ஏன் ?. 

அவரது நியமனம் செல்லாது எனச்சொல்லும் போது அவரது வாதங்கள் முழுவதும்மே தவறு தானே?. வாய் வார்த்தை வாதத்துக்கு அனுமதி, எழுத்துபூர்வ வாதத்துக்கு அனுமதியில்லை என்பது எப்படி சரியாகும். இல்லை பவானிசிங் நியாயமாக வாதாடியிருப்பார் என நீதிபதிகள் கருதினார்கள் என்றால் எழுத்து பூர்வமான வாதத்துக்கு அனுமதி வழங்கியிருக்கலாம்மோ ஏன் செய்யவில்லை ?.

ஜெ, சசிகலா, இளவரசி, சுதாகரன் தரப்பில் பிரபலமான மூத்த வழக்கறிஞர்கள் தங்கள் கட்சிக்காரருக்கு சாதகமாக வாதங்களை எடுத்து வைத்துள்ளார்கள், ஆவணங்களை சமர்பித்துள்ளார்கள், அரசு தரப்பு தவறு செய்துள்ளது என வாதாடியுள்ளார்கள்.  

அரசு தரப்பில், அதனை மறுத்தும், முறையான ஆவணங்களை பரிசீலிக்க சொல்ல வேண்டும்மென்றால் வாய் வாதங்கள், எழுத்துபூர்வ சட்ட நுணுக்கள் இருந்தால் தானே முடியும். பவானிசிங்கின் எழுத்துபூர்வ வாதத்தை ஏற்றுக்கொள்ளகூடாது என உத்தரவிட்டுள்ளது. எதிர் தரப்புக்கான அரசு தரப்பின் வாதங்கள் எழுத்து வடிவிலான வாதத்தில் மட்டும் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். இப்போது அந்த வாதங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இப்போது குற்றவாளிகள் தரப்பின் வாதம் மட்டும் தான் நீதிபதி முன் உள்ளது. அவர் எப்படி தீர்ப்பு வழங்குவார் ?. 

சட்டம் என்ன சொல்கிறது, ஆவணங்கள், சாட்சிகள் அடிப்படையில், நீதிபதியின் ஏற்றுக்கொள்ளும் தன்மையின் அடிப்படையில் மட்டும்மே தீர்ப்பு வழங்கப்படுகிறது. ஒரு தரப்பு தன் வாதத்தை பலமாக வைத்துள்ளது. அதனை மறுக்க வேண்டிய அரசு தரப்பு பலகீனமாக இருந்தது. அந்த பலகீனத்தில் எழுத்து பூர்வ வாதத்தை ஏற்றுக்கொள்ளகூடாது எனச்சொல்லி இன்னும் பலகீனமாக்கியுள்ளது. இப்போது நீதிபதி முன் குற்றவாளி தரப்பு பதில்கள் மட்டும்மே உள்ளது. இந்த நிலையில் தீர்ப்பு வழங்கச்சொன்னால் எதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்குவார் ?.


ஊழல் எந்தளவுக்கு சமுதாயத்தை பாதிக்கும் என கருத்தில் கொண்டு தீர்ப்பு வழங்குங்கள் எனச்சொல்லியுள்ளார் ஒரு நீதிபதி. அந்த கடமை கீழ்நீதிமன்ற நீதிபதிக்கு மட்டும் தான் உள்ளதா ? உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு கிடையாதா ?.

இந்த வழக்கில் அதிகாரவர்க்கத்தின் கைகள் உச்சநீதிமன்றம் வரை வந்துள்ளது என்பது கண்கூடாக தெரிகிறது. உச்சநீதிமன்ற தலைமை வழக்கறிஞர் தத்து மீது வழக்கறிஞர்களே, சட்டத்துக்கு புறம்பாக செயல்படுகிறார் என ஜனதிபதி வரை புகார் தந்துள்ளார்கள்.

நீதித்துறை என்பது மக்களுக்கு நம்பிக்கை தரும் இடமாக இருக்க வேண்டும். ஏன் எனில் பாமர மக்கள் அதைத்தான் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் நீதித்துறை செல்லரிக்கும் அமைப்பாக மாறிக்கொண்டுயிருப்பதை உச்சநீதிமன்றம்மே வெளிச்சம் போட்டு காட்டிக்கொண்டுயிருக்கிறது.

நீதியை நிலைநாட்ட வந்ததாக நீங்கள் நினைக்கலாம்........... நிச்சயம் மக்கள் அதை நம்பவில்லை என்பதை உணருங்கள்.

புதன், ஏப்ரல் 01, 2015

சன் சாம்ராஜ்யம் சரிந்ததா ?


எது நடக்ககூடாது என மாறன் சகோதரர்கள் நினைத்தார்களோ அது நடந்துவிட்டது. மாறன்களின் 742 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. 

ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவில் இருந்து இயங்கும் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கச்சொல்லி மத்திய அமைச்சராக இருந்த தயாநிதிமாறன் நெருக்கடி தந்தார் அதன்படி விற்கப்பட்டது என ஏர்செல் முதலாளி தந்த புகாரின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதிகாரத்தை பயன்படுத்தி அதனை விற்க செய்து அதற்கு பிரதிபலனாக சன் டி.டி.எச் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்தது என்றது அமலாக்கத்துறை. அந்த வழக்கில் தான் அமலாக்கத்துறை மாறன் சகோதரர்கள் சொத்துக்களில் முக்கியமான சன் தொலைக்காட்சி நிறுவனம் உட்பட 11 சொத்துக்களை முடக்கியுள்ளது. 

2014ல் மத்தியில் பி.ஜே.பி ஆட்சி அமைந்தது முதல் விசாரணை, கைது, சொத்துக்கள் பறிமுதலில் இருந்து தங்களை காத்துக்கொள்ள கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆலோசகர் மற்றும் பிரபல வழக்கறிஞரான தற்போதைய மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லியை பலமுறை சந்தித்தனர்.

சந்திப்பில் பாஸிட்டிவ்வாக எதுவும் நடக்கவில்லை. மத்திய அரசின் அதிகார கோர பிடிகளில் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்தனர் சன் முதலாளிகள். கோரபிடியில் இருந்து தங்களை காத்துக்கொள்ள அதனை விற்க முடிவு செய்யபோவதாக கடந்த வாரம் ஒரு தகவல் டெஹல்கா புலனாய்வு செய்தி இணையதளம் வழியாக பரவியது.

பூமலை என்ற வீடியோ லைப்ரரி தொடங்கிய கலாநிதிமாறன் பின் சன் டிவி உருவாகி அது பல சேனல்களாக மாறி தென்னிந்தியாவின் மன்னர்களாக இருந்தார்கள் என்றால் அது மிகையில்லை. கார்ப்பரேட் ரவுடியான அம்பானியின் வாழ்க்கை வரலாற்றை குரு என படமாக எடுத்த மணிரத்தினம் அதில் குருபாய் பேசுவதாக ஒரு வசனம் வைத்திருப்பார், யாரை எதால அடிக்கனும்மோ அதால அடிச்சன் சிலருக்கு வெள்ளி செருப்பு, சிலருக்கு தங்க செருப்பு என பேசும். மாறனும் அப்படித்தான் அடித்து மிதித்துக்கொண்டு சென்றார். எங்கும் எதிர்ப்புயில்லை. எல்லாரும் நம்மை பார்த்து பயப்படுகிறார்கள் என மனக்கோட்டை கட்டினார். மனக்கோட்டை கட்டிய மாறனுக்கு உண்மை அவருக்கு எங்கு உரைத்தது என்றால் திமுக என்ற அரசியல் கட்சியோடு மோதும் போதுதான் புரிந்தது. 

திமுக தலைவர் கலைஞரின் சகோதரி மகனான முரசொலிமாறன் திமுக தலைவரின் மனசாட்சியாக இருந்தவர். திமுகவின் டெல்லி முகம்மாக விளங்கியவர். திமுக தலைவர் கலைஞரை உயிரினும் மேலாக நேசித்தவர். அவரது மகன்கள் தான் கலாநிதிமாறன், தயாநிதிமாறன். தன் மகன் கலாநிதியை மீடியா பக்கம் திசை திருப்பியவர் முரசொலிமாறன் தான். முரசொலிமாறன் இறந்தபோது அவரது குடும்பத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக தயாநிதிமாறனுக்கு எம்.பி சீட் தந்து தேர்தலில் நிற்க வைத்து வெற்றி பெற்றபின், கேபினட் அமைச்சர் என்ற பதவியும் வாங்கி தந்தார் கலைஞர். சீனியர்கள் பலர்யிருக்க திமுகவின் டெல்லி முகம்மாக, தனக்கு, திமுகவுக்கு பக்கபலமாக இருப்பார் என்பதால் கலைஞர் முன்னிறுத்தினார். ஆனால் நடந்தது யாரும் எதிர்பாராதது. 

டெல்லியில் அமர்ந்ததும் நாம்யில்லை என்றால் திமுகயில்லை என்ற எண்ணம் தயாநிதிக்குள் வந்து நாற்காலி போட்டு உட்கார்ந்துக்கொண்டது. 2006ல் திமுக  ஆட்சிக்கு வந்தபோது, தன் தொலைக்காட்சியால் தான் திமுக ஆட்சிக்கு வந்தது என்ற எண்ணம் சன் குழுமம் நடத்திய கலாநிதிமாறன்க்கும் வந்துவிட்டது. மாறன்கள் மத்தியரசை மிரட்டுவது, தங்கள் தொழிலை குறுக்கு வழியில் வளர்ப்பது, சக கார்ப்பரேட் நிறுவனங்களின் முதலாளிகளை  வரவைத்து மிரட்டுவது தொடர்ந்தது. 

மாறன்களின் தினகரன் பத்திரிக்கை திமுகவில் அடுத்த முதல்வர் யார் என்ற கருத்து கணிப்பு நடத்தியது. அதுவரை போட்டியிலேயே இல்லாத அழகிரி, தயாநிதி பெயர்கள் அந்த பட்டியலில் இருந்ததோடு, அழகிரியை விட தயாநிதிக்கு செல்வாக்கு அதிகம் என காட்டியது அந்த கருத்துகணிப்பு. அழகிரி கண் அசைவு, மதுரை தினகரன் அலுவலம் பற்றி எரிந்தது மூன்று உயிர்கள் கருகின. அப்போது தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக திமுக சார்பில் இருந்த தயாநிதிமாறன் டெல்லியில் இருந்தபடி அப்போது கட்சியின் பொருளாளராக தமிழக மின்துறை அமைச்சராக இருந்த ஆற்காடுவீராசாமிக்கு போன் செய்து, ஆட்சியை கலைச்சிடுவன் என மிரட்டிய மிரட்டல் தான் பாம்புக்கு பால் வார்த்துவிட்டோம் என திமுக தலைவரை அதிர்ச்சியடையவைத்தது.

ஆட்சியை கலைப்பேன் என மிரட்டும் தைரியம் மாறன்களுக்கு எப்படி வந்தது ?.

சன் டிவி தொடங்கியபோது தமிழகத்தில் அரசு அதிகாரிகளை மிரட்டியது, சுமங்கலி கேபிள்க்காக ஆப்ரேட்டர்களை நசுக்கியது, ராஜ் டிவியை ஆட்டம் காண வைத்தது, தமிழக்தில் சேனல் தொடங்கிய ஸ்டார் விஜய் நிர்வாகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியது, டாடா ஸ்கைக்காக பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவை மிரட்டியது, தமிழகத்தின் தினசரிகளின் வியாபாரத்தை நசுக்கியது, சினிமாத்துறையில் ஏதோச்சதிகாரம் செய்தது, எந்திரன் படத்தின் போது ரஜினியை மிரட்டியபோது அவர்கள் அமைதியாக இருந்தனர். இதை பார்த்துவிட்டு நம்மைக்கண்டு எல்லோரும் அலறுகிறார்கள் என தப்பு கணக்கு போட்டார்கள் மாறன் பிரதர்ஸ். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் நேரம் வந்தபோது தங்கள் கோபத்தை திமுக மீதுதான் காட்டினார்கள். அதற்கு காரணம், மாறன்களுக்கு பின்னால் திமுக என்ற ஒளிவட்டம் இருந்தது. அதை மாறன்கள் அறியவில்லை, மற்றவர்கள் அறிந்திருந்தனர். 

மாறனின் மத்தியமைச்சர் பதவி பறிப்பு, கலைஞரின் கடிதம், மாறன்களின் மறுப்பு கடிதம், கண்கள் பனித்த வரலாறு எல்லாம் தமிழகம் அறிந்தது தான். விலக்கிவைக்கப்பட்டு இருந்தபோது மாறன் செய்த துரோகத்தை தான் திமுக தலைவர் மட்டுமல்ல திமுக தொண்டர்கள் கூட மறக்க முடியாமல் தவித்தார்கள். திமுக மத்தியில், மாநிலத்தில் ஆட்சியில் இல்லாமல் போனதற்கும் வரலாற்றின் கரையாகிப்போன 2ஜீ பிரச்சனை தமிழகத்தில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு, அதன் தகவல்களை ஜெவுக்கு தந்ததற்க்கு பின்னால் இருந்தது இந்த மாறன்கள் தான். கண்கள் பணித்தபோதும், 2009, 2011 எம்.பி சீட் தந்ததுக்கு பின்னால் குடும்பபேரங்கள் இருந்தாலும் முழு நேர அரசியல்வாதியோடு மோதினால் என்ன நடக்கும் என்பதை இப்போது அனுபவிக்கிறார்கள் மாறன்கள்.

ஏர்செல் – மேக்சிஸ் நிறுவன வழக்காகட்டும், விதிமுறைக்கு மாறாக அதிகாரத்தை பயன்படுத்தி வீட்டில் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வைத்த வழக்குகளில் இருந்து தப்பிக்க வழி தெரியாமல் முழிக்கிறார்கள். முடியவில்லை. இப்போது அவர்களுக்கு புரிந்திருக்கும் இதுவரை தன்னை காத்தது தனது தொலைக்காட்சிகள் கிடையாது திமுக என்கிற கட்சி என்பது. நம்மால் திமுக கிடையாது, திமுகாவால் தான் நாம் தொழிலை பிரச்சனையில்லாமல் நடத்திக்கொண்டுயிருந்தோம் என்பது இப்போது புரிந்திருக்கும் அவர்களுக்கு. புரியும்போது எல்லாம்மே முடிந்த கட்டத்துக்கு போய்நின்றுள்ளது. தொழில் வளர்ச்சிக்காக வளர்த்த ஏணியையே எட்டி உதைத்தவர்கள் என்பதால் தான் இப்போது இவர்களுக்கு உதவக்கூட யாரும்மில்லை. பிரச்சனையில் இருந்து தப்பிக்க மாபெரும் சன் சாம்ராஜ்ஜியத்தை மீடியா சாம்ராட்டாக உருவாக முயலும் ரிலையன்ஸ் முகேஷ் அம்பானிக்கு கைமாற்றிவிட முயன்று அதுவும் தோல்வியில் முடிந்துள்ளது.

சன் சாம்ராஜ்ஜியம் வீழ்ந்துள்ளது. படு பாதாளத்தில் தள்ளப்பட்டுள்ளது. இதிலிருந்து அவர்கள் மீள்வது என்பது பெரும்பாடு என்றே தோன்றுகிறது. 

தமிழ்நாட்டுக்கு ஒரு தேவர்மகன் போதும்.......





கொம்பன் படத்தை வெளியிடுவதை தடை செய்ய வேண்டும் என நீதிமன்றத்தை நாடியிருக்கிறார் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் மருத்துவர் கிருஷ்ணசாமி. திரைப்படத்தின் கருத்தை கருத்தால் எதிர்க்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாடு கொண்டவன் நான். கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தை பார்க்காமலே முஸ்லிம் அமைப்புகள் சில எதிர்த்தபோது கமல்ஹாசனுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்து கட்டுரை எழுதியவர்களில் நானும் ஒருவன். கத்தி திரைப்படத்தின் போது எதிர்ப்பு வந்தபோது எதற்காக எதிர்க்க வேண்டும் படம் வரட்டும் என்ற கருத்தில் இருந்தவன். 

50 கோடியில் தயாராகும் படங்களை ஐந்தாயிரம் ரூபாய் இருந்தால் லட்டர் பேடு சங்கங்களால் கூட முடக்கிவிட முடிகிறது. வட்டிக்கு கடன் வாங்கி படம் தயாரிக்கும் தயாரிப்பாளர் நிலையை யாரும் கவனத்தில் கொள்வதில்லை. ஒரு படத்தின் கதை எதைப்பற்றியது என்பது தெரியாமலே அறைகுறை விஷயங்களை வைத்துக்கொண்டு தடை செய்ய வேண்டும் என்பது ஏற்க முடியாதது என்பது என் கருத்து அதில் உறுதியாக இருக்கிறேன். 

ஆனால் கொம்பன் படத்துக்கு அப்படி ஆதரவு தர முடியவில்லை. பல பிரபல எழுத்தாளர்கள், கருத்தாளர்கள் கிருஷ்ணசாமியின் நிலைப்பாட்டை ஆதரித்தும் எதிர்த்துக்கொண்டும் இருக்கிறார்கள். கமல்ஹாசனின் சண்டியர் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பெயர் மாற்ற வைத்த கிருஷ்ணசாமி அதே பெயரில் பின்னால் வந்த திரைப்படத்தை எதிர்க்கவில்லை என்கிறார்கள் சிலர். கமல்ஹாசனும், பெயர் தெரியாத அந்த நடிகனும் ஒன்றாக பார்ப்பது முட்டாள் தனமாகயில்லை. 

தமிழ்நாட்டில் பல பிரச்சனைகள் உள்ள நிலையில் ஒரு சினிமாவை எதிர்த்து ஏன் போராட வேண்டும்மென கேட்கிறார் தராசில் வைத்து தமிழன் யார் என அடையாளம் காணும் சீமான். அதே கேள்வியை அவர் திருப்பி கேட்டால் சீமான் என்ன பதில் சொல்லியிருப்பார் என்பது அவர் தான் சொல்ல வேண்டும். 

திரைப்படத்தை பார்த்து சாதி மோதல் வரும் என்பது முட்டாள் தனமானது என ஒருவர்  சொல்லியிருந்தார். கம்யூட்டர் முன்னால் உட்கார்ந்துக்கொண்டு அதில் வரும் தகவல்கள் உண்மை என நம்பவர்களால் மட்டுமே இப்படி சொல்ல முடியும்.

இவர்களின் கருத்தை ஆழ்ந்து நோக்கினால் சாதி வெறி மனதில் எங்கோ ஒரு ஓரத்தில் இவர்களிடம் உள்ளது என்பதை அறிய முடிகிறது. தென்மாவட்ட சாதி கலவரம் வேண்டும் என நினைக்கும் சாதி வெறியர்களே சாதி ரீதியிலான படத்தை வரவேற்கிறார்கள். 

ஒரு திரைப்படம் என்பது மக்களை சந்தோஷப்படுத்த வேண்டும்மே தவிர சாதி மோதலை உருவாக்குவதாக இருக்ககூடாது. ஆனால் சில ஆண்டுகலாக பல படங்கள் மறைமுகமாக சாதிய வர்ணம் பேசுபவையாக வருகின்றன. அந்த திரைப்படங்கள் ஒன்று தாழ்த்தப்பட்ட சாதி பற்றியோ இல்லையேல் உயர்சாதி பெருமை பேசுகின்றன. நான் அறிந்தவரையில் தென்மாவட்ட சாதி பெருமை, கொங்கு பகுதி சாதி பெருமை பேசும் படங்கள் அதிகளவில் வந்துக்கொண்டு இருக்கின்றன. அந்த வரிசையில் தான் கொம்பனையும் பார்க்க வேண்டியுள்ளது. 

கிருஷ்ணசாமி எதிர்ப்பது படத்தின் கதை சாதி பெருமை, தாழ்த்தப்பட்ட மக்களை எதிர்த்து பேசுகிறது என்கிறார். (அவர் அதை எப்படி அறிந்தார் என்பது தெரியவில்லை. இருந்தாலும் டிரைலரில் சில இடங்களில் சாதி வர்ணம் தூக்கலாக உள்ளது அதை கொண்டே முழு படமும் சாதி பேசுகிறது என கிருஷ்ணசாமி கருதவாய்ப்புள்ளது. அவர் எண்ணுவது தவறில்லை. தமிழகத்துக்கு ஒரு தேவர்மகன் போதும் என்பதால் வரும் முன் காப்போம் என்பதால் எதிர்க்கலாம் )

போற்றி பாடி பெண்ணே......... தேவர் காலடி மண்ணே என்ற பாடல் தென்மாவட்டத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட சாதி மக்களின் பாடலாக இன்றளவும் உள்ளது. இந்த பாடல் எத்தனை எத்தனை சாதி மோதல்களை உருவாக்கி எத்தனை எத்தனை குடும்பங்களின் வாழ்வை சின்னாபின்னமாக்கியது என்பது வரலாறு. அந்த வரலாறு தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. 


இதையெல்லாம் இன்றைய தலைமுறை அறியாதது. சாதி பிரச்சனை பற்றி பேசினால் அது இருக்கிறது இல்லை என சொல்லாமல் விவகாரத்தை திசை திருப்பியுள்ளது கொம்பன் படத்தயாரிப்பாளர் மற்றும் சினிமாத்துறையினர். 

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சிவக்குமார் குடும்பத்தின் பினாமி ஞானவேல்ராஜா ஏப்ரல் 2ந்தேதி என் படம் வருவதால் தான் இந்த சிக்கல் என விவகாரத்தை அரசியலாக்குகிறார். இதே போன்ற ஒரு கருத்தை தான் செய்தி தொலைக்காட்சி ஒன்றின் நேர்காணலில் ஹீரோ கார்த்தி சொன்னார். அவர்கள் குறிப்பிடும் பின்னணி அதே ஏப்ரல் 2ந்தேதி உதயநிதிஸ்டாலின் படம் வெளிவருகிறது. அதனால் அரசியல் சாயம் பூசுகிறார் என நினைக்கிறேன். 

சாதி சாயம்மில்லையென ஒரேயடியாக இதை ஒதுக்கிவிட முடியாது. படத்தின் தயாரிப்பாளர் சாதி பற்றி பேசுகிறது என மறைமுகமாக நேர்காணல் ஒன்றில் ஒப்புகொண்டுள்ளார், அதை நீக்கவும் செய்துள்ளோம் என்கிறார். அப்படியிருந்தும் இந்த விவகாரத்தை அழகாக திசை திருப்புகிறார்கள். சினிமா அமைப்புகளும் வக்காலத்து வாங்குகிறார்கள். அவர்கள் பிணத்திலும் பணம் தின்னும் கழுகுகள். சாதி மோதல் வந்தால் என்ன, எவன் குடும்பம் அழிந்தால் என்ன அவர்களுக்கு தேவை பணம். அதற்காக அவர்கள் சப்போட் செய்கிறார்கள். 

கிருஷ்ணசாமி ஒரு அரசியல் கட்சியின் தலைவர். தென்மாவட்டத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதி மக்களின் தலைவராக உள்ளவர், அவருக்கு பணத்தின் மீது ஈர்ப்பு இருந்தாலும் அவரது மக்கள் மீது ஈர்ப்பு உள்ளவர். சினிமாக்காரர்களை பணம் மட்டுமே குறிக்கோளாக வாழ்பவரல்ல.  
நீதிமன்றம் படத்துக்கு தடை விதிக்காத நிலையில், படம் பார்ப்பதில் ஏற்பட்ட பிரச்சனையில் 1ந்தேதி மாலை தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி தெரிவித்த நிலையில் படத்தை ஒருநாள் முன்னதாக ரிலிஸ் செய்துள்ளது கொம்பன் படக்குழு.