செவ்வாய், ஏப்ரல் 30, 2013

ஆசிரியர்களுக்கு அரசு வைக்கும் ஆப்பு.



சமீபத்தில் கல்வித்துறை உயர் அதிகாரிகள் ஒரு ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்கள். அதில் ஒரு பள்ளியின் மாணவ – மாணவிகள் தேர்ச்சி பெறவில்லையெனில் அந்த வகுப்பு மற்றும் பாடத்திட்டத்துக்கு பொறுப்பான ஆசிரியருக்கு சம்பள உயர்வை தடை செய்ய அரசு ஆலோசிப்பதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. உண்மையில் நல்ல விஷயம்மிது.

தனியார் பள்ளிகளில் ஒரு ஆசிரியர் சரியாக பாடம் நடத்தவில்லையெனில் அவரை வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். குறைந்த சம்பளம் தரும் அந்த பள்ளிகளே இத்தகைய நடவடிக்கை எடுக்கும் போது அரசு ஊழியராக சேர்ந்தது முதல் தகுதிக்கு மீறி சம்பளம் வாங்குவதோடு அதுவும் பத்தாமல் இன்னும் இன்னும் வேண்டும் என போராட்டம் நடத்தும் ஆசிரியர்கள் அதற்கான பணியை செய்கிறார்களா என்பதை நாம் சொல்வதை விட அது அவர்களின் மனசாட்சிக்கே தெரியும்.

இன்றைய காலகட்டத்தில் அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்கள் நூற்றுக்கு ஐம்பது சதவிதம் பேர் சரியாக பாடம் நடத்துவதில்லை, ஆசிரியர் சங்கங்களின் பொறுப்புகளில் உள்ள பெரும்பாலானோர் பள்ளிக்கே போவதில்லை. அதோடு சீனியராக உள்ள ஆசிரியர்கள் ஆசிரியர் பணியை தவிர வட்டிக்கு விடுவது, ரியல் எஸ்டேட் என வேறு பல பணிகளை வேலை நேரத்தில் செய்கிறார்கள் என்பது தான் வெட்ககேடு.

அப்படியே இவர்கள் பள்ளிக்கு போனாலும் பாடம் நடத்துவதில்லை, சந்தேகம் கேட்டால் சொல்வதில்லை, வீட்டில் சிறப்பு வகுப்பு எடுத்து பணம் பிடுங்குவது, பிராக்ட்டிக்கல் மார்க் என பயமுறுத்தி பெண் பிள்ளைகளிடம் தவறாக நடக்க முயல்வது, ஆண் பிள்ளைகளை வீட்டு வேலை செய்ய வைப்பது என நடந்துக்கொள்கின்றனர்.

இப்படி இருந்தால் எந்த மாணவன் தான் படிப்பான். இது ஏதோ கற்பனையாக எழுதுவதில்லை. நிஜம். நகரங்களை விட கிராமப்புறங்களில், மாவட்டத்தின் எல்லையோரங்களில், மலைமேல் உள்ள பள்ளிகள் பலவற்றில் இதுதான் நிலமை.

சமீபத்தில் ஒரு சிறு தகவல் இணையத்தில் பார்த்தேன். பி.எஸ்.என்.எல் சிம்கார்டு வாங்க மாட்டார்கள், அரசு மருத்துவமனையில் வைத்தியம் பார்க்கமாட்டார்கள், அரசு பேருந்தில் பயணம் செல்ல மாட்டார்கள், தன் பிள்ளைகளை அரசு பள்ளியில் படிக்கவைக்க மாட்டார்கள். ஆனால் இவர்களுக்கு அரசாங்க வேலை மட்டும் வேண்டும்.

இவர்கள் பிள்ளைகளை கான்வென்டில் படிக்க வைப்பார்கள். அரசு பள்ளியில் பயிலும் பிள்ளைகளுக்கு கற்று தரமாட்டார்கள். மீறி கேட்டால் சங்கம் என்பார்கள், போராட்டம் நடத்துவார்கள். ஆசிரியர்களுக்கு சரியான கடிவாளத்தை போட அரசு முடிவெடுத்துள்ளது. இதை சரியாக செய்தால் சிறப்பாகயிருக்கும்.

வியாழன், ஏப்ரல் 25, 2013

தங்கம் ஏற்படுத்தும் சேதாரம்.



தங்கத்தின் விலையில் படுவேகமான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்த வீழ்ச்சி தொடரும் என்ற பொருளாதார நிபுணர்களின் தகவல் ஒரு சாராருக்கு பதட்டத்தையும், மற்றொரு சாராருக்கு மகிழ்ச்சியையும் வாரி வழங்குகிறது.

எதனால் இந்த வீழ்ச்சி என பார்க்கும் முன்.

உலகில் தங்கம் பயன்படுத்தும் நாடுகளில் இந்திய மக்கள் மிக முக்கிய இடத்தில் நங்கூரம்மிட்டு அமர்ந்துள்ளார்கள். அதற்கு காரணம், நம் இரத்தத்தில், ஜீன்களில் தங்கம் மீதான மோகத்தை கலந்து வைத்துவிட்டார்கள். அதிலும் ஆண்களைவிட பெண்கள் இரத்தத்தில் அதிகமாகவே கலந்து வைத்துள்ளார்கள். அதனால் தான் தங்க நகைகள் பயன்பாட்டில் இந்தியா முன்னனியில் உள்ளது.

இப்படி நாம் தங்கத்தை பயன்படுத்தினாலும் தங்கத்துக்கான விலையை இந்தியா நிர்ணயிப்பதில்லை. காரணம் தங்கம் உற்பத்தியில் முன்னணியில் இருப்பது தென்ஆப்ரிக்கா, கனடா போன்ற நாடுகள் தான். உலகில் தென்னாப்பரிக்காவில் தான் 50 சதவிதத்துக்கும் மேலான தங்க சுரங்கள் உள்ளன. அங்கிருந்துதான் உலக நாடுகளுக்கு தங்கம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதற்கடுத்த இடத்தில் கனடா உள்ளது. இந்தியாவில் தங்கம் வெட்டும் சுரங்கங்கள் சில உள்ளன. அது அரசு வசம் உள்ளன.

உலகளவில் தங்கம் வெட்டியெடுக்கும் பணி 60 சதவிதத்துக்கும் மேலாக தனியார் நிறுவனங்கள் வசம் உள்ளன. அதனால் தங்க விலை நிர்ணயம் என்பது தனியார் நிறுவனங்களின் கைகளிலேயே உள்ளது. விலை நிர்ணயம் செய்ய உலகளவில் அதற்கென தனி அமைப்பு உள்ளது.

வோல்டு கோல்டு கவுன்சில் என்பது அதன் பெயராகும். இது 1987ல் தொடங்கப்பட்டது. உலக தங்க கவுன்சிலின் துணை தலைவர் தமிழகத்தை சேர்ந்த சிவராம் என்பது குறிப்பிடதக்கது. இதில் 23 நாடுகளின் நிறுவனங்கள் உறுப்பினர்களாக உள்ளன. இதன் தலைமையகம் நியூயார்க்கில் உள்ளது. இங்கிருந்து தான் லண்டன் கோல்ட் பிக்சிங் என்ற பெயரில் தங்கத்தின் விலை நிர்ணயிருக்கப்படுகிறது. உலகின் முக்கிய ஐந்து தங்க விற்பனை நிறுவனங்கள் ஒன்று கூடி தங்கத்திற்கான அன்றைய விலையை அறிவிக்கின்றன. அதன்படி விற்பனை நடக்கின்றன.

உலகில் ஆண்டு தோறும் வெட்டியெடுக்கப்படும் மொத்த தங்கத்தில் 24 சதவிதம் இந்தியாவுக்குள் வருகிறது. அதாவது இந்தியாவில் ஆண்டு தோறும் 800 டன் தங்கம் விற்பனையாகிறதாம். அதில் 45 சதவிதத்தை தென்னிந்தியர்கள் வாங்குவதாக கூறப்படுகிறது. இந்தியாவின் ரிசர்வ் வங்கி 557 டன் தங்கம் கையிருப்பு வைத்துள்ளது. ஆனால் இந்திய மக்களிடம் மட்டும் 18 ஆயிரம் டன் தங்கம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. உலக நாடுகளிடம் கையிருப்பில் உள்ள மொத்த தங்கத்தின் அளவு 31,695 டன்னாகும். ( மக்களிடம்மல்ல )

2004க்கு பின் ஏறிக்கொண்டேயிருந்த தங்கத்தின் விலை திடீரென குறைய காரணம் ?


மேற்கத்திய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி, இஸ்லாமிய நாடுகளில் நடந்த உள்நாட்டு கலவரம், போர், ஆட்சி மாற்றம் போன்றவற்றால் பெரும் முதலீட்டாளர்கள் பங்கு சந்தையில் முதலீடு செய்தவற்க்கு பதில் தங்கம், வெள்ளி போன்றவற்றில் முதலீடு செய்தனர். இதனால் தங்கம், வெள்ளி விலை சர்சர்ரென ஏறிக்கொண்டு வந்தது.

தற்போது மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரம் கொஞ்சம் கொஞ்சமாக உயர தொடங்கியுள்ளது. இதனால் தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் பெரும் லாபத்தில் தங்களது தங்க முதலீடுகளை திரும்ப பெற்றுக்கொண்டு அதனை வேறு பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்கின்றனர். இதனாலும் சர்வதேச அளவில் தங்கம், வெள்ளி போன்றவற்றின் விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

அதோடு, சர்வதேச தங்கத்தை வெட்டி எடுக்கும் நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்துக்கொண்டன. அதில் குறிப்பிடதக்கது உலகின் முன்னணி தங்கம் வெட்டியெடுக்கும் நிறுவனமான பாரிக் கோல்ட் கார்ப்பரேசன். இதனால் தங்கத்தின் பற்றாக்குறையால் விலை உயர்ந்தது. விலை உயர்வால் உலகில் தங்கம் அதிகமாக வாங்கும் சீனா, இந்திய மக்கள் தங்கம் வாங்குவதை குறைத்துக்கொண்டனர். இந்தியாவின் நிதித்துறை தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை உயர்த்தியது. சீனா பொருளாதாரம் தள்ளாட்டத்தின் தொடக்கத்தில் இருப்பதால் தங்கம் வாங்குவதை குறைத்துக்கொண்டது. இதனால் தங்கம் மார்க்கெட் படுத்துக்கொண்டது.

அதைவிட முக்கியம் ஐரோப்பிய நாடுகள் சில விழ்ந்து கிடக்கும் தங்களது பொருளாதாரத்தை சீர்படுத்த தங்கள் கையிருப்பில் உள்ள தங்கத்தை விற்பனை செய்ய முடிவு செய்துவிட்டன. அதில் முன்னணியில் இருப்பது குட்டி நாடான சைப்ரஸ். அதன்பின் ஸ்லோவினியா, ஹங்கேரி, போர்ச்சுக்கல், இத்தாலி, கிரிஸ், அயர்லாந்து போன்ற நாடுகள் தங்களது கையிருப்பில் உள்ள தங்கத்தை விற்று உலக வங்கி மற்றும் பிற நாடுகளிடம் உள்ள கடனை அடைக்க விருப்பதாக தகவல் பரவியுள்ளது.

இத்தனைக்கும் சைப்ரஸ் நாட்டிடம் கையிருப்பில் உள்ள தங்கம் 14 டன். சைப்ரஸ் நாடு விற்க போகிறது என்பதனாலே தங்கம் விலை படு வீழ்ச்சியை சந்தித்துள்ளன. இத்தாலி அரசிடம் 2400 டன் தங்கம் கையிருப்பில் உள்ளது. இவை மூன்றில் ஒரு பங்கை விற்பனை செய்வதாக அறிவித்தாலே தங்கத்தின் விலையில் இன்னும் சரிவு ஏற்படும் என்பது நிஜம்.

கட்டுரை எழுதும் போது சர்வதேச சந்தை நிலவரப்படி தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் (31.10கிராம்) 1347 டாலர். இதுவே கடந்த பிப்ரவரி மாதம் 1900 டாலராக இருந்துள்ளது.

விலை குறைகிறதே என தங்கம் ஆசைப்பட்டவர்கள் நகைக்கடைகளில் போய் குவிகிறார்கள். பொருளாதார ஆய்வாளர்கள் இந்த விலை வீழ்ச்சி ஆரம்பம் தான். இதனை பார்த்து மக்கள் விலை குறைந்துள்ளதே என தங்கம் வாங்குவார்கள் இதனால் கொஞ்சம் விலை உயரும். உண்மை நிலவரம் என்னவென்றால் தொடர்ந்து தங்கத்தின் விலை சரியும். அதனால் பொறுமையாக படிப்படியாக தங்கம் வாங்குங்கள் என்கிறார்கள். அதாவது பவுனுக்கு 16 ஆயிரம் முதல் 17 ஆயிரம் வரை விலை குறையும் என்கிறார்கள். அதனால் தங்கம் தற்போதைக்கு சேதாரத்தை மட்டும்மே தரும்.

வியாழன், ஏப்ரல் 18, 2013

மற்றொரு கதை.

வல்லமை இலக்கிய இணைய தளத்தில் வெளியாகியுள்ள சிறுகதை ” மரத்துப்போன மனம் ”.


http://www.vallamai.com/?p=34489

கதைய படிச்சிட்டு உங்க கருத்த எழுதுங்க.

வியாழன், ஏப்ரல் 04, 2013

ஆபாசம் சற்று சிந்தியுங்கள். சீமானின் தம்பிகளே.



நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான். ஈழப்பெண் ஒருவருடன் ‘நெருக்கமா’ இருக்கிறார் என்ற தகவல்களோடு சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அந்தப்படங்களில் அந்தப்பெண் அறைகுறை ஆடைகளுடன் இருக்கும் தனிப்படங்களும், சீமானுடன் ஜோடியாக நின்று எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த படமும், செய்திகளும் வெளிநாடுகளில் வாழும் ஈழத்து மக்கள் மத்தியில் தீவிரமாக பரவிவருகிறது. இதனை வைத்து பெரும் அரசியல் நடக்கிறது.

அதாவது, அந்தப்பெண் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் அதனால் சீமானை சந்தித்து படம் எடுத்துக்கொண்டார். அந்தப்படங்களோடு அந்தப்பெண்ணின் அந்தரங்கப்படங்களை சேர்த்து கொச்சைப்படுத்துக்கிறார்கள் என சீமானோடு கைகோர்த்தவர்கள் வெம்புகிறார்கள். கூடவே இது சீமான் மற்றும் அந்தப்பெண்ணின் அந்தரங்கம் இதில் மற்றவர்கள் எப்படி தலையிடலாம் என கேட்கிறார்கள்.

சீமான் பற்றிய செய்தி உண்மையா, பொய்யா என்பது ஒரு புறமிருக்கட்டும். ஒரு மாதத்துக்கு முன்பு திமுக தலைவரும் இந்தியாவின் மூத்த தலைவரும்மான 90 வயது கலைஞரை நடிகை குஷ்புவுடன் இணைத்து குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் ஒரு செய்தி எழுதப்பட்டுயிருந்தது. எந்த வித அடிப்படை ஆதரமும்மின்றி. ரொம்ப மோசமாக சித்தரித்து எழுதப்பட்ட அந்த செய்தி பற்றி சீமான் தரப்பினர், தமிழ்தேசியவாதிகள், மதிமுகவினர், புலம்பெயர் தமிழர்களின் ஒரு பகுதியினர் இங்கேப்பார் கிழவனின் செயலை என ரொம்ப மோசமாக கிண்டலடித்தார்கள், படு மட்டமாக, கொச்சையாக இணையத்தில், சமூக தளங்களில் எழுதினார்கள். அந்த செய்தி உண்மையில்லை என்பது அனைவரும் அறிந்தது. ஆனால் அதைக்கொண்டு கலைஞரை கொச்சைப்படுத்த காரணம். அவர்கள் மனதில் இருந்த வக்கிரம்.

இப்போது, சீமான் பெண்களுடன் கும்மாலமடிக்கிறார் என எழுதி புகைப்படங்களை வெளியிட்டதும் குதிக்கிறார்கள். தனிப்பட்ட அந்தரங்கம் என வக்காலத்து வாங்குகிறார்கள், உண்மையா பொய்யா என விசாரிக்காமல் எழுதுகிறார்கள். ஆதராவாளராக ஒரு கட்சி தலைவரை வந்து சந்திக்ககூடாதா என கேட்கிறார்கள்.


இதே கேள்வி அன்று திமுகவினர் கேட்டபோது, உங்காளைப்பத்தி தெரியாத என கேட்டு கண்ணதாசனின் வனவாசத்தை துணைக்கு அழைத்தார்கள். திமுக தலைவர்களுடன் கவிஞர் கண்ணதாசன் நெருக்கமாக இருந்தார். நெருக்கம் நொறுங்கியப்பின் திமுக தலைவர்களை கொச்சைப்படுத்தி வனவாசம் என ஒரு புத்தகம் எழுதினார். அதில் உள்ள தகவல்களை எடுத்துக்கொண்டு அப்போவே அப்படி, இப்ப எப்படியிருப்பாரு என வசைப்பாடினார்கள். அன்று கலைஞரை பற்றி கொச்சையாக பேசியபோது இனித்த வாய்களுக்கு, சீமான் பற்றி பேசும் போது கசக்கிறது. ( சீமானின் நடவடிக்கை தெரிந்தவர்கள் சீமான்க்கு வக்காலத்து வாங்கமாட்டார்கள் அது வேறு விஷயம். )

கலைஞரை பேசியதால் சீமானை பேசுவதில் என்ன தவறு என கேட்கவில்லை. இன்று வளர்ச்சி பாதையில், அதிகார பீடத்தில் இருப்பவர்களை அசைக்க, ஒழிக்க, அவர்களை கொச்சைப்படுத்த பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளை வைத்தாலே போதும் அது எடுப்பட்டு விடும். மீடியாக்களின் போட்டியில் அவர்களே அதை உண்மையா, பொய்யா என ஆராயாமல் ஊதி ஊதி பெரிதாக்கிவிடுவார்கள். அதோடு, ஃபேஸ்புக், டூவிட்டர், ஆர்குட் போன்ற தளங்களில் உள்ளவர்கள் தங்கள் விருப்பத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதுவார்கள். அதனால் வக்கிரத்தை காட்ட வேண்டாம். 

நாம் தமிழர் கட்சி, தமிழ் தேசிய இயக்கங்களை சேர்ந்தவர்கள், புலத்தில் உள்ள இன்றைய இளைய தலைமுறையினரே, கலைஞர், சீமான் மட்டுமல்ல தலைவர்களை விமர்சிக்க எத்தனையோ விஷயங்கள் உள்ளன. அதனை தவிர்த்து தனிமனித அந்தரங்க விவகாரங்களில் நுழைந்தால் அது நன்றாக இருக்காது. அதனால் சிந்தித்து செயல்படுங்கள்.

புதன், ஏப்ரல் 03, 2013

மருத்துவரை ஜெயிலுக்கு அனுப்பிய ஜெ. இதுதான் ஜனநாயகம்.




தமிழகத்தில் வெளிவரும் மிக முக்கியமான செய்தித்தாள் தினதந்தி. இதன் உரிமையாளராக உள்ள சிவந்திஆதித்தன் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ஐ.சி.யூ பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பார்க்க தமிழக முதல்வராக உள்ள ஜெயலலிதா 26ந்தேதி வருகிறார். அவர் வருவதற்க்கு முன்பே பாதுகாப்பு போலிஸார் மருத்துவமனையில் குவிக்கப்பட்டுள்ளனர். முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனைக்கு வருகிறார். ஐ.சி.யூ பிரிவில் உள்ள சிவந்திஆதித்தனை சந்திக்க அறைக்கு செல்லும் போது சிவந்தி ஆதித்தனின் தனி மருத்துவரும், சென்னை மருத்துவக்கல்லூரி பேரசிரியராக இருந்தவரும், மருத்துவ தொழிலை புனிதமாக கருதும் கருணாநிதி என்ற 70 வயது மருத்துவர் ஜெயலலிதாவிடம், மேடம் உங்கள் காலணிகளை வெளியே கழட்டி விடுங்கள் எனச்சொல்லியுள்ளார். அவரை முறைத்துவிட்டு உள்ளே சென்று ஆதித்தனாரை சந்தித்துவிட்டு சென்றுவிடுகிறார். 28ந்தேதி தனது மருத்துவமனையில் இருந்த கருணாநிதியை காரணம் சொல்லாமல் அழைத்து சென்ற போலிஸார், பாதுகாப்பு பணியில் இருந்த இளம் காவல் உதவி ஆய்வாளரை பிடித்து தள்ளியதாக வழக்கு பதிவு செய்து அவரை புழல் சிறையில் அடைத்துள்ளனர். பின்னர் ஜாமினில் வெளியே வந்துள்ளார். 

இந்த கைதுக்கு பின்னால் ஜெயலலிதாவின் வெறி தான் உள்ளது. வயது கூடக்கூட பக்குவம் வரும் என்பார்கள். அது ஜெ வுக்கு இன்றளவும் வரவில்லை என்பது வேதனையானது. ஒரு மூத்த மருத்துவரை தன் அதிகாரத்தின் மூலம் காவல்துறையை கொண்டு துன்புறுத்த வைத்த ஜெயலலிதாவை நினைத்தால் வெறுப்பாக இருக்கிறது. தான் மாறவில்லை என்பதை மீண்டும் மீண்டும் நிறுபிக்கிறார் ஜெ.

மருத்துவர் கருணாநிதியின் கைதுக்கு திமுக தலைவர் கருணாநிதி மட்டும்மே எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மற்றப்படி யாரும் கருத்துக்கூறவில்லை. திமுக ஆட்சியில் தங்களுக்கு யூரின் மஞ்சளாக வந்தாலே கருணாநிதி தான் காரணம் என அறிக்கை வெளியிடும் மருத்துவம் பற்றி நன்கறிந்த மருத்துவர்கள் ராமதாஸ், கிருஷ்ணசாமி, பழ.நெடுமாறன், ‘காந்தியவாதி’ தமிழருவி மணியன், சீமான் உட்பட அனைவரும் வாய்மூடி மவுனியாக இருந்துவிட்டனர். கம்யூனிஸ்ட்டுகளும் இதில் அடக்கம். வை.கோ ஒரு படி மேலேப்போய் இலங்கையில் இரண்டு தமிழ் நாளிதழ்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர்களுக்கு உடலில் இருந்து ‘பின்பக்கம் வழியாக வாயு பிரியவில்லை’ என்றாலே இதுக்கு திமுகவில் நடக்கும் உள்கட்சி பூசலே காரணம் என ஆய்வு செய்து எழுதும் ‘புலனாய்வு ஏடுகள்’ கூட சைலண்டாகிவிட்டன. புலனாய்வு இணைய தளங்கள் இந்த கைது நடவடிக்கைக்கும், முதல்வர்க்கும் சம்மதம்மில்லை என பதிவு செய்கின்றன. உச்சகட்டமாக தினதந்தி ஏடு மற்றும் அவர்களது தொலைக்காட்சியோ கூட இதுப்பற்றி வாய் திறக்கவில்லை. 

சமூக இணைய தளங்களான பேஸ்புக், டுவிட்டர் பகுதிகளில் ஈழம், இந்தியா, காங்கிரஸ், திமுக, கலைஞர் விவகாரங்களில் தங்களது கருத்துக்களை எழுதி நாங்கள் தவறு எங்கு நடந்தாலும் படையென புறப்படுவோம் என கீபோர்டில் வேகத்தை காட்டும் ‘நடுநிலை மற்றும் மனித உரிமை போராளிகள்’ கூட இதுப்பற்றி ஒரு கருத்து பதிவிடவில்லை.

நான் என்றாவது ஒருநாள் ஜெவை கூட நம்பிவிடுவேன். ராஜவிசுவாசத்தை விஞ்சிய விசுவாசிகளாக பச்சோந்திகளை விட மோசமான இவர்களை மட்டும் நம்பமாட்டேன்.