சனி, ஆகஸ்ட் 30, 2014

வரலாற்றை தேடி பயணிப்போம்........................ 2.

வரலாற்றை தேடுவோம் என்ற கோரிக்கைக்கு பலர் ஆதரவு தெரிவித்து தங்களால் முடிந்த உதவியை செய்கிறேன் என வாக்குறுதி தந்ததற்க்கு நன்றி.

யார் வேண்டுமானாலும் தகவல்களை தரலாம். ஆனால் அந்த தகவலில் உண்மை இருக்க வேண்டும், ஆதாரங்கள் இருக்க வேண்டும் அவ்வளவே. ஒருவர் பற்றிய வரலாற்றுக்கு, முதலில் அவரது குடும்பம், அவர் சார்ந்த நிலப்பரப்பு, மக்களின் வாழ்நிலை, அவர் பிறந்த ஆண்டு, குடும்பம் பற்றிய தகவல்கள், படிப்பு, சமுதாய பற்று, அரசியல் ஈடுபாடு, அப்போதைய அரசுக்கும் அவருக்குமான தொடர்பு, அவர் இறப்பு, அவருக்கு பின் அவரது குடும்பம், அவர் போராட்டங்கள், சாதனைகள், அவரது பயணத்தில் உள்ள வெற்றி-தோல்விகள், அவர் மீதான விமர்சனங்கள், அவர் காலத்தில் அவர் மீது சமூகத்தில் இருந்த பார்வை போன்றவை இடம் பெற வேண்டும். (வேறு தகவல் இருந்தால் குறிப்பிடுங்கள் அனைவரும் தெரிந்துக்கொள்வோம் )

இதில் உள்ளவை அனைத்தையும் ஒருவரே தர வேண்டும் என்ற அவசியம்மில்லை. நீங்கள் அறிந்ததை தந்தால் போதுமானது. நீங்கள் தரும் தகவல்களுக்கு நிச்சயம் ஆதாரங்கள் தேவை. அவை வாய்மொழி பாடல்கள், எழுத்து, கடிதம், குடும்ப உறுப்பினர்களின் தகவல்கள், நூல்களில் படித்திருந்தால் எந்த புத்தகத்தில் படித்தீர்கள், அதை எழுதியது யார் என்ற விவரத்தை தெரிவிக்க வேண்டும். உங்களுக்கு எழுத வரவில்லை என்றால் பரவாயில்லை. உங்களிடம் உள்ள குறிப்புகளை, விவரங்களை மின்னஞ்சல் செய்யுங்கள். நீங்கள் படித்ததை பற்றி குறிப்பிடுங்கள். இறுதியில் உங்கள் பெயருடன் இருக்கட்டும்.

நீங்கள் தரும் தகவல்கள் உபயோகமாக இருந்தால் உங்கள் பெயரில் அது தொகுப்பில் இடம் பெறும். தொகுத்த பின் அதன் நகல் உங்களுக்கு மின்னஞ்சல் செய்யப்படும். நீங்கள் தரப்போகும் தகவல்களை, உங்களைப்போல நான் தேடி எடுக்கும் தகவல்களை பாதுகாக்கவும், தொகுக்கவும் போவது மட்டும்மே என் வேலை. இதில் யார் அதிகமாக ஈடுபாட்டுடன் தகவல் தருகிறார்களோ அவர்களுடன் வெளிப்படையாக கலந்து ஆலோசித்தபின்பே தொகுப்பை இணையத்தில் வெளியிடலாம்மா அல்லது யாராவது புத்தகம் போட விருப்பம் தெரிவித்தால் தரலாமா என்பது பற்றி முடிவு செய்யப்படும். இது உறுதி.

இது கூட்டு முயற்சி....... கை கொடுங்கள்.......... நம் மண்ணின் வரலாறை பதிவு செய்வோம்.........

செவ்வாய், ஆகஸ்ட் 26, 2014

வரலாறுகளை தேடி பதிவு செய்வோம்...............



திருவண்ணாமலையில் நடந்த நீதிமன்ற வளாகம் திறப்பு விழாவில் பேசிய இந்த மண்ணை சேர்ந்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதியரசராக உள்ள கிருபானந்தம் அவர்கள், இந்த மாவட்டத்தில் பிறந்த மாமேதைகளை நாம் மறந்துவிட்டோம். நம்மவர் தானே என கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டோம். நாம் அதற்காக வெட்கப்பட வேண்டும். இதை சொல்ல எனக்கு முழு உரிமை இருக்கிறது. இந்த மண்ணில் பிறந்த மாமேதைகள் சாதனை புரிந்தவர்கள். அவர்கள்,

இந்தியா சுதந்திரம் அடைந்த பின் இரண்டாவது இந்திய தலைமை நீதிபதியாக வந்தவர் இந்த மண்ணை சேர்ந்த பதஞ்சலி சாஸ்திரி. சென்னையில் சி.பி.ராமசாமி ரோடு இருக்கிறது. அந்த ராமசாமி திருவாரூர் சமஸ்தானத்தின் ஜவானாக இருந்தவர். அவர் சேத்பட்டை சேர்ந்தவர்.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் மன்னர்களால் கூட கட்டி முடிக்கப்படாமல் இருந்த ஒரு பெரிய கோபுரத்தை கட்டி முடித்த ஜீயர் செய்யார் முக்கூரில் பிறந்து, வளர்ந்தவர். புகழ்பெற்ற மருத்துவர் ரங்கபாஷ்யம் இந்த மண்ணில் பிறந்தவர். இப்படி பலர் இந்த மண்ணில் பிறந்து பெருமைப்படுத்தினர். இங்கு பிறந்ததுக்கு நாம் பெருமைப்பட வேண்டும் என்றார்.

அவர் பேசியது கேட்டு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவர் குறிப்பிட்டவர்களில் யாரையும் நான் அறிந்திருக்கவில்லை, நண்பர்கள் வட்டாரத்தில் பேசியபோது அவர்களும் அவ்வளவாக அறிந்திருக்கவில்லை. மூன்றாண்டுக்கு முன் நம் ஊரில் தியாகி அண்ணாமலை மேல்நிலைப்பள்ளி, தியாகி அண்ணாமலை நகர் என இருக்கிறதே யார் இந்த தியாகி அண்ணாமலை என அவரது வரலாற்றை தேடிய போது, அவர் வரலாறு எங்கும் கிடைக்கவில்லை.

இவ்வளவு பிரபலமானவர்கள் பற்றி அவர்கள் பிறந்த மண்ணில் அந்த வரலாற்றை பதிவு செய்து வைக்கவேயில்லை. அவர்களது வரலாற்றை புத்தகமாக்கி அடுத்த தலைமுறையினர் அறிந்துக்கொள்ள வைக்காமல் செய்த்து யார் தவறு என்பது புரியவில்லை. இது நிச்சயம் வெட்கப்படவேண்டிய விஷயம்.

அதனால் நான் நண்பர்களுடன் இணைந்து வரலாறுகளை தேடலாம் என முடிவு செய்துள்ளேன். வாரத்தில் ஒருநாள் விடுமுறை நாளை இதற்காக ஒதுக்கி நம் மண்ணை சார்ந்தவர்களின் வரலாறுகளை தேடி அதை தொகுத்து வைக்கலாம் என்ற எண்ணம் உள்ளது. அந்த தகவல்களை கொண்டு புத்தகமாக்க பொருளதார தடை உள்ளது. அதனால் இப்போதைக்கு அதை புத்தகமாக்கும் எண்ணம் சிறிதும்மில்லை. அதற்கு பதில் அதை சேகரிக்க, பாதுகாக்க, வெளிப்படுத்த இணையதளம் என்ற மாபெரும் சக்தி நம்மிடம் உள்ளது. தொகுத்து அதில் பதிவேற்றம் செய்யலாம் என்ற எண்ணம் உள்ளது. என்றாவது ஒருநாள் அதை புத்தகமாக வெளியிட முயற்சி செய்தால் இதில் ஈடுபடுபவர்களின் ஒப்புதலுடன் அவர்களுக்கு தந்து உதவலாம் என்ற எண்ணமும் உள்ளது.  

இங்கு நிறைய நண்பர்கள் உள்ளீர்கள். நிறைய படிப்பவர்கள், தகவல் தெரிந்தவர்கள், ஆவணங்கள் வைத்திருப்பவர்கள், அவர்களின் குடும்பத்தார் பற்றி தகவல்களை வைத்திருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளலாம். இதில் ஈடுபட போவது யார், யார் என்ற விவரத்தை பதிவு செய்தால். அவர்களை கொண்டு ஒரு குழு அமைத்து இதை செய்யலாம்.

நம் மண்ணின் வரலாற்றை பதிவு செய்து வைக்க ஆர்வமாக இருப்பவர்கள் ஆர்வத்துடன் வாருங்கள். வாரத்தில் ஒருநாள் சில மணி நேரங்களை ஒதுக்கி பணி செய்வோம். நம் மண்ணின் வரலாற்றை பறைசாற்றுவோம்.

நன்றி.

திங்கள், ஆகஸ்ட் 25, 2014

ஊடகங்களை வளைக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள். உண்மைக்கு வேட்டு.



தொலைக்காட்சிகள், எப்.எம்கள் நடத்த கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என மத்தியரசுக்கு டிராய் ஒரு பரிந்துரை செய்துள்ளது. டிராய் அமைப்பு அதை சொல்கிறது என்றால் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா செய்திதாள்களுக்கும் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்கின்றன.

ஊடக நிறுவனங்கள் உரிமம் தொடர்பான பிரச்னைகளை தீர்ப்பது குறித்த பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை டிராய் தலைவர் ராகுல் குல்லார் 19ந்தேதி வெளியிட்டபின் செய்தியாளர்களிடம், தொலைக்காட்சி, பத்திரிகை நிறுவனங்களை நடத்துவதற்கு அரசியல் கட்சிகள், மதச்சார்பு அமைப்புகள், மத்திய மற்றும் மாநில அரசுகளின் அமைச்சகங்கள், அரசு நிதிபெறும் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு அனுமதி தரக் கூடாது. இந்த அமைப்புகளுடன் தொடர்புடைய நபர்கள், துணை நிறுவனங்களுக்கும் ஊடக நிறுவனங்கள் நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். மேற்கண்ட அமைப்புகள் ஊடக நிறுவனங்களை ஏற்கனவே நடத்திவந்தால் அதற்கான உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.

தனிநபர்களால் நடத்தப்படும் ஊடக நிறுவனத்தில் உரிமையாளரின் முதலீட்டு பங்குரிமை 32 சதவீதமாக மட்டுமே இருக்க வேண்டும். பத்திரிகை, தொலைக்காட்சி ஆகிய இரண்டையும் ஒரு சேர நடத்திவந்தாலும் இதே அளவு பங்கு உரிமைதான் அளிக்க வேண்டும்.

பத்திரிகை, தொலைக்காட்சி நிறுவனங்களுக்கென தனியாக ஒழுங்குமுறை ஆணையம் ஒன்றை மத்திய அரசு அமைக்க வேண்டும். இதற்கென தனிச் சட்டத்தை இயற்ற வேண்டும். இந்த ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியை நியமிக்க வேண்டும்.

கையூட்டுச் செய்திகளை வெளியிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டால், சம்பந்தப்பட்ட செய்தியை அளித்த நபர் மற்றும் ஊடக நிறுவனத்தை தண்டிக்கவும், அபராதம் விதிக்கவும் கூடிய அதிகாரத்தை இந்த ஆணையத்துக்கு வழங்க வேண்டும். இதன் உறுப்பினர்களாக ஊடகத் துறைக்குச் சம்பந்தமில்லாதவர்களை நியமிக்க வேண்டும்.

பெரு வணிக நிறுவனங்களால் நடத்தப்படும் ஊடக நிறுவனங்களின் சில செயல்பாடுகள் தரம் தாழ்ந்துவிட்டன. அந்த நிறுவனங்களின் ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் வியாபார நோக்கில் உள்ளன என்றார் ராகுல் குல்லார்.

அவர் சொல்வதை புறக்கணிக்க முடியாதவை என்பதே உண்மை.

இந்தியாவில் பத்திரிக்கை சுத்திரம் படும்பாட்டை லண்டனில் இருந்து வெளிவரும் நியூயார்க் டைம்ஸ் இதழ் சுத்திர தினத்துக்கு முன்நாள் 2014 ஆகஸ்ட் 14ந்தேதி ஒரு தலையங்கம் எழுதியுள்ளது. அதில், இந்திராகாந்தி இந்தியாவின் பிரதமராக இருந்த சமயத்தில் 1975ம் ஆண்டு ஜூன் 25 அன்று நாட்டில் அவசரநிலைப் பிரகடனம் செய்தார். அதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக பத்திரிகைகள் மீது தணிக்கையை கொண்டு வந்தார். ஒருசில செய்தித்தாள்கள் தவிர பெரும்பாலான செய்தித்தாள்கள் அரசாங்கத்தின் விதிகளை ஏற்று சரணடைந்தன. பாஜக தலைவர்களில் ஒருவரான அத்வானி கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அதுப்பற்றி பின்நாளில் அவர் கூறும்போது, நீங்கள் கொஞ்சம் வளைந்து கொடுங்கள் என்றுதான் உங்களை அரசு கேட்டது. ஆனால் நீங்களோ மண்டியிடுவதே உசிதம் என்று தேர்ந்தெடுத்து விட்டீர்கள் என்றார். மேலும், சமீபத்தில் ஊடக உரிமையாளர்கள், செய்தியாளர்கள் எப்படி செய்திகளைத் தர வேண்டும், தலையங்கம் எப்படி இருக்க வேண்டும் என்று நேரடியாகவே நிர்ப்பந்தம் செய்யத் தொடங்கிவிட்டார்கள். மிகவும் பிரபலமான பல செய்தியாளர்கள் தங்கள் வேலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டார்கள் அல்லது தங்கள் மீதான நிர்ப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தாங்களாகவே ராஜினாமா செய்திருக்கிறார்கள்.

உண்மையில் இந்திய நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி எவ்விதமான ஊடக சுதந்திரமும் இந்தியாவில் கிடையாது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் பேச்சுச் சுதந்திரம் மற்றும் அதனை வெளிப்படுத்தும் சுதந்திரம் தொடர்பாக 19(1)ஆவது பிரிவின் கீழ் கொடுத்திருக்கும் அதிகாரத்தின் ஒரு விரிவாக்கம்தான். ஆனால் இப்போது பத்திரிகை சுதந்திரம் இந்திய தேசத்தில் கிடையாது என்கிறது. 



பத்திரிக்கை தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு என தனியாக ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்கிறது டிராய். பிரஸ் கவுன்ஸில் ஆப் இந்தியா என்பது பத்திரிகைகள் குறித்து மட்டுமே அதிகாரங்களைக் கொண்டிருக்கிறது. ஊடகங்கள் தொடர்பாகவும் இதுபோன்றதொரு அமைப்பு உருவாக்கப்படவேண்டும் என்கிறது.

ப்ரஸ் கவுன்சில் ஆப் இந்தியா என்ற அமைப்பு உள்ளது. இதன் தலைவராக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜீ உள்ளார். தமிழகத்தில் வெளியாகும் பிரபலமான நக்கீரன் இதழ் மீது ஆட்சியாளர்கள் தொடர் வழக்கு, அலுவலகம் மீதான ஆளும்கட்சி குண்டர்கள் தாக்குதல் பற்றி புகார் போயும் பத்திரிக்கை சுதந்திரத்தை காக்க இந்த அமைப்பு நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தில் நிறைய வழக்குகள் அரசாங்கத்தால் பத்திரிக்கைகள் மீது போடப்பட்டுள்ளன என ஒரு பேட்டியில் அவரிடம் கேட்கப்பட்டதற்க்கு, அதற்கு நான் என்ன செய்ய முடியும் என அலட்சியமாக பதில் தந்துள்ளார். ஆணையம் அமைத்தால் எப்படி செயல்படும் என்பதற்கு கட்ஜீவின் பதிலே சான்று. டிராய், ஆணையம் அமைக்க சொல்வதை போல் இப்போது பத்திரிக்கை நிறுவனங்கள் உள்ள சூழ்நிலையில் இதை செய்ய தொடங்கினால் அரசு நடத்தும் கொள்ளை, ஊழல், அதிகார அத்துமீறல் போன்றவை வெளிவரவே வராது.

 இப்போது ஊடகங்கள் கார்ப்பரேட் கம்பெனிகளின் ஆதிக்கத்தின் கீழ் செல்வதால் பல செய்திகள் மறைக்கப்படும். கார்ப்பரேட் கைகளுக்கு சிக்காத ஊடகங்கள் உண்மைககைள எழுதும். உண்மைகள் மக்கள் அறிந்துக்கொள்ள வேண்டுமானால் ஊடகங்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும். ஆணையம் அமைத்தால் அரசாங்கம் ஆணையம் மூலம் பத்திரிக்கைகளை மிரட்டும்.

கார்ப்பரேட் ஊடகங்கள் செய்திகளை மறைக்காது என சொல்பவர்களா நீங்கள், இதை படியுங்கள்.......... இந்தியாவின் மிகப்பெரிய தனியார் தொழில்துறை ஜாம்பவானாகத் திகழும் லாப வெறிக்கொண்ட ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய டி.வி.18 என்ற தொலைக்காட்சி நிறுவனத்தை மொத்தமாக வாங்கியுள்ளது. டி.வி.18 தொலைக்காட்சி நிறுவனத்தின் கீழ் 18 அலைவரிசைகள் இருக்கின்றன. வானொலி, எப்.எம் போன்றவையும் அதில் அடக்கம். டி.டி.எச்  சிஸ்டம் வைத்துள்ளது. இந்த நிறுவனத்தை சேர்ந்த முதலாளியின் மகன், மும்பையில் குடிபோதையில் கார் ஓட்டி சாலையில் சென்றவர்கள் மீது மோதி ஒருவர் இறந்த செய்தி அப்படியே அமுக்கப்பட்டது. மீடியாவுக்கு மீடியா சப்போட். வேறு எந்த பெரிய மீடியாவிலும் வெளியாகவில்லை. சமூக வளைதளத்தில், கார்ப்பரேட் கம்பெனிகளின் கைகளில் சிக்காத ஏடுகள் தான் அதை வெளியிட்டன.

அதேபோல் அதிகாரத்தில் இருப்பவர்களின் மனம் நோகாமல் செய்தி வெளியிடும் முறையை பிரபல செய்தித்தாள்கள், செய்தி இணைய தளங்கள் செய்கின்றன. மும்பையிலிருந்து வெளியாகும் 'டி.என்.ஏ' நாளேடு தன்னுடைய இணையப் பக்கத்தில் ராணா அயூப் என்பவர், பிரதமர் நரேந்திர மோடியால் பா.ஜ.கவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அமித் ஷா மீது கொலை உட்பட பல்வேறு கிரிமினல் குற்றங்களுக்காக இப்போதும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று எழுதியிருந்தார். அந்த கட்டுரையை நிர்வாகம் நீக்கியுள்ளது. அதேபோல் இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் பெயிட் நியூஸ் சிஸ்டத்தை கொண்டுவந்துள்ளது. பணம் தந்தால் நீங்கள் கூறும் தகவல் செய்தியாக வெளியிடப்படும் என செய்திகளை வெளியிட்டது. இந்த நிலையைப்பற்றி நமது ஜனாதிபதி ஒரு விழாவில் பேசும்போது, இந்த முறை பத்திரிகை சுதந்திரத்திற்கு மட்டுமல்ல, நாட்டின் ஜனநாயகத்திற்கே ஆழமான அச்சுறுத்தல் என்று கூறினார். ஆனால் அதை கண்டுக்கொண்டதாக தெரியவில்லை.

நாட்டில் ஊடகங்களின் சுதந்திரம் மற்றும் பேச்சுரிமை சுதந்திரத்திற்கு கட்டுப்பாடு ஏற்படுத்திடும் முயற்சிகளால் எழுந்துள்ள நிலைமைகள் குறித்து நமது நாடாளமன்றத்தில் கடந்த 8ந்தேதி ஒரு விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பேசிய கம்யூனிஸ்ட் எம்.பி ராஜீவ், இந்திய ஊடகங்கள் கார்ப்பரேட்டுகளின் சொத்துக்களாக மாறியபின்னர் ஜனநாயகத்தின் நான்காவது தூண், வணிகத் தூணாக மாறிவிட்டது என சாடியுள்ளார்.

அதனால், ஊடகங்கள் மக்களுக்காக உழைக்க வந்துயிருக்கிறோம் என்பதை உணர்ந்து மககள் விரோத ஆட்சியை மக்களிடம் அம்பலப்படுத்தி ஆட்சி மன்றத்தில் இருந்து இறக்க மக்களுடன் பயணிக்க வேண்டும், ஊடகங்கள் எப்போதும் மக்கள் பக்கம் நிற்க வேண்டும்.

வியாழன், ஆகஸ்ட் 21, 2014

சினிமாவை அழிப்பது சினிமாக்காரர்கள் தான்.........


கடந்த 10 ஆண்டுகளில் நான் திரையரங்கில் போய் பார்த்த படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். டிவிடி மற்றும் இணைய தளம் வழியாக பார்த்த படங்கள் கொஞ்சம் இருக்கும். 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை பல படங்கள் முதல் ஷோவே பார்த்த அனுபவம் எனக்குண்டு. கடந்த 10 ஆண்டுகளாக தான் சினிமாவுக்கு நண்பர்கள் கெஞ்சி கேட்டால் கூட போவதில்லை. காரணம், மொக்கை படத்துக்கு கூட டிக்கட் விலை 80 ரூபாய் என விற்கிறார்கள் இந்த தியேட்டர்காரர்கள்.

கமல், ரஜினி, விஜய், அஜித் சமீப ஆண்டுகலாக சூர்யா படங்களுக்கு நடுத்தர நகரங்களில் கூட டிக்கட் விலை 100 முதல் 200 வரை விற்கிறார்கள். ஏதோ கிடைக்காத அத்தியாவசிய பொருள் போல தமிழகத்தில் மட்டும் 300, 400 தியேட்டர்களில் ஓரே நேரத்தில் ரிலிஸ் செய்கிறார்கள். பல நகரங்களில் 3 முதல் 5 தியேட்டர்கள் வரை திரையிடப்பட்டுகின்றன. 

அஞ்சான் என்ற படமும் அப்படித்தான். உலகத்தில் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத கதையம்சம் கொண்ட படம் எடுப்பதை போல அத்தனை பில்டப் விளம்பரம். படம் வந்த அன்றே மொக்கையோ மொக்கையென இணைய தள விமர்சனங்கள் படத்தை படுபாதாளத்துக்கு தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. அதைப்பார்த்து அதிர்ச்சியான அப்படத்தின் நாயகர் சூர்யா, படக்குழுவோடு வந்து ரசிர்கள் ஏமாந்து போககூடாது என்பதற்காக 400 தியேட்டர்களுக்கு மேல் ரிலிஸ் செய்தோம். படம் நன்றாக உள்ளது. ஆனால் இணைய  தளங்களில் படம் பார்க்காதவர்கள் கூட படம் நன்றாகயில்லை என்ற விமர்சனத்தை பரப்புகிறார்கள் என வேதனைப்பட்டார். ( படம் நல்லாயிருக்குன்னு விமர்சனம் எழுதி பலர் அதை பரப்பியபோது நல்லாயிருந்ததா சார்……….) அதோடு, தனது சிங்கம்2 படம் 45 லட்சம் திருட்டு டிவிடி விற்கப்பட்டுள்ளது இதை தடுக்க வேண்டும் என்றார். இது ஏதோ சூர்யா மட்டும் சொல்வதில்லை. எனக்கு தெரிந்து கமலை தவிர சினிமா துறையே சொல்வது தான்.

திருட்டி டிவிடியை ஏன் மக்கள் வாங்குகிறார்கள் என யோசித்து பாருங்கள். இன்றைய தேதியில் ஒருவர் சினிமாவுக்கு போனால் டிக்கட் செலவு தவிர்த்து 200 ரூபாய் வரை செலவாகிறது. டூவீலர் பார்க்கிங் கட்டணம், 20 ரூபாய் கூல்ட்ரிங்ஸ் 60 ரூபாய், 10 ரூபாய் பாப்கார்ன் பாக்கெட் 50 ரூபாய், 40 ரூபாய் ஐஸ்கிரிம் 100 ரூபாய் என கொள்ளையோ கொள்ளை. இது மட்டுமல்ல ஏசி தியேட்டர் என டிக்கட் விற்று விட்டு உள்ளே ஏசியையும் போடுவதில்லை. இதை எந்த சினிமாக்காரனும் கேட்பதில்லை. பின் எப்படி மக்கள் தியேட்டருக்கு வருவார்கள்.

40 ரூபாய் தந்து நல்ல பிரிண்ட் கொண்ட ஒரு டிவிடி, 200 ரூபாய்க்கு நொறுக்கு தீனி வாங்கினால் வீட்டில் அமர்ந்து குடும்பம்மே சாப்பிட்டுக்கொண்டு 2 படம் தெளிவாக பார்க்கலாம். பார்த்து முடித்து விட்டு பக்கத்து வீட்டுக்கும் தரலாம். இல்லையேல் தேயும் வரை திரும்ப திரும்ப போட்டு பார்க்கலாம். 250 ரூபாயில் 4 பேர் கொண்ட குடும்பம் ஒரு திரைப்படத்தை பார்த்துவிட முடிகிறது. தியேட்டருக்கு போனால் குறைந்த பட்சம் 1000 ரூபாய் தேவை.

மக்களுக்கு திருட்டி டிவிடியில் படம் பார்க்க வேண்டும் என்பது ஆசையல்ல. சினிமா தியேட்டரில் நடக்கும் கொள்ளையை தடுக்க முடியாததால் தான் மக்கள் விலையை குறையுங்கள் என கேட்கிறார்கள். நீங்கள் முடியாது என்பதால் தான் டிவிடியை நோக்கி போகிறார்கள்.

விலைவாசி உயர்ந்து விட்டது, படத்திள் விலை உயர்ந்து விட்டது, மின்சார கட்டணம், அரசாங்க வரி, வட்டி என பல லொட்டு லொஸ்க்குகளை நீங்கள் கூறி அதனால் விலை குறைப்பு சாத்தியம்மல்ல என கூறலாம். நியாயமான வாதம் ஒப்புக்கொள்கிறேன்.

6 மாதத்தில் ஒரு படம் எடுத்து முடிக்கப்படுகிறது. விஜய், அஜித் போன்றவர்கள் 20 கோடி, கமல் 30 கோடி, ரஜினி 25 கோடி சம்பளம் மற்றும் ஏரியா ரைட்ஸ் வாங்குவதாக தகவல்கள் கூறுகின்றன. வளரும் நடிகர்களான தனுஷ், சிம்பு போன்றவர்கள் கூட 5 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார்களாம். இப்படி கோடிகளில் சம்பளம் வாங்குவதால் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் விநியோகஸ்தர்களிடம் கூடுதல் விலைக்கு படத்தை விற்கிறார். அவர் போட்ட பணத்தை எடுக்க கூடுதலாக தியேட்டர்காரர்களுக்கு விற்பனை செய்கிறார். ஆக குறைக்க வேண்டியது நடிகர், நடிகை, இயக்குநர்களின் சம்பளத்தை தான். 


அதேபோல் தியேட்டர்களில் அநியாயமாக விற்கப்படும் பொருட்களின் விலையை குறையுங்கள் மக்கள் நிச்சயம் திரையரங்கை நோக்கி வருவார்கள். மக்களை திரையரங்கை நோக்கி வராமல் தடுப்பது பலரின் பேராசை தான்.

டெக்னாலஜி, விலைவாசி உயர்வு, சம்பள பிரச்சனை போன்றவற்றை தடுக்க முடியாது, தீர்க்க முடியாது என்பதால் தான் கமல் டிஷ் மூலம் காசு கட்டி வீட்டில் இருந்தபடியே ரிலீஸ் படங்களை பார்க்கும் முறையை கொண்டுவந்தார். இந்த முறை பயன்பாட்டுக்கு வரவிட்டுயிருந்தால் நிச்சயம் 50 சதவிதத்துக்கு மேல் டிவிடியில் படம் பார்ப்பது குறைந்து போயிருக்கும். இதனை எந்த சினிமாக்காரனும் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போது அதை கொஞ்சம் மாற்றி இயக்குநர் சேரன் ஒர்ஜினல் டிவிடி விற்பனை என்பதை தொடங்கியுள்ளார். தரத்தில் இருந்தால் நிச்சயம் இது பெரும் வெற்றி பெரும் என்பது என் நம்பிக்கை.

அதனால் டெக்னாலஜி யுகத்தில் இணையத்தில் புது படங்கள் வருவதையோ, டிவிடி விற்பனையோ தடுக்க முடியாது. அதற்கு ஏற்றாற்போல் மாற்று ஏற்பாடு செய்துக்கொள்ள வேண்டும். அதேபோல் இருக்கும் தியேட்டர்கள் அப்படியே இருக்க வேண்டுமானால், டிக்கட், தின்பண்ட பொருட்கள் விற்பனையில் கொள்ளையடிப்பதை நிறுத்த வேண்டும் இல்லையேல் தியேட்டர்கள் காம்ப்ளஸ்களாக, மண்டபங்களாக மாறுவதை தடுக்க முடியாது.

சினிமாவை அழிப்பது சினிமா துறைக்குள் இருப்பவர்கள் தான் வெளிநபர்களல்ல என்பதை முதலில் சினிமாக்காரர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்................

புதன், ஆகஸ்ட் 20, 2014

அரசியலாக்கப்படும் நீதி.




இந்திராகாந்தி ஆட்சி காலத்துக்கு பி்ன் நீதிக்கு இப்போது நெருக்கடியான காலக்கட்டம். தற்போதைய பிரதமர் மோடி நீதிதுறையில் கை வைத்துள்ளார். அதை முழுமையாக அரசியல் மையப்படுத்த நினைக்கிறார். தன் அரசு செய்யும் தவறுகளுக்கு நீதியை துணைக்கு வைத்துக்கொள்ள நினைக்கிறார். அப்போது தான் தான் நினைத்ததை செய்ய முடியும் என்பதால் அப்படி செய்கிறார். இதற்கான செயல் யார் தந்துயிருப்பார்கள் என்பது வெளிப்படை. 
உயர்நீதி மன்ற, உச்சநீதி மன்ற நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் கொண்ட கெலிஜீயம் உள்ளது. நீதிபதிகள் மட்டுமே உள்ள இந்த குழு தான் நீதிபதிகளை தேர்வுசெய்து பட்டியல் தரும். அந்த பட்டியலை மைய சட்டத்துறை குடியரசு தலைவருக்கு அனுப்பி பதவி தரவைக்கும் இந்த நடைமுறையை தான் மாற்றியுள்ளது பி.ஜே.பி அரசு. அதற்கான சட்ட மசோதாவை பாராளமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இனி கெலிஜியம் அமைப்பு கிடையாது. அதற்கு பதில் 6 பேர் கொண்ட கமிட்டி இருக்கும். அதில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் இரண்டு மூத்த நீதிபதிகள், சட்டதுறை அமைச்சர் மற்றும் சட்டம் பற்றி அறிந்த வெளிநபர்கள் இருவர் என 6 பேர் கொண்ட கமிட்டியது. இனி இந்த கமிட்டி தான் நீதிபதிகளை தேர்வு செய்யும். கமிட்டியில் இரண்டு பேர் நியமனத்தை எதிர்த்தால் அவர் நீதிபதியாக முடியாது என்கிறது புதிய மசோதா. இதனை எதிர்கட்சிகள் அவ்வளவும் “அமைதியாக“ ஏற்றுக்கொண்டன.
இங்கிருந்து தான் சதுரங்க ஆட்டம் நீதித்துறைக்கும் – அரசுக்கும் ஆரம்பமாகிறது. அரசு தரப்பில் உள்ளதை கேட்க வேண்டிய கட்டாயத்தில் நீதித்துறை இருக்கும். தனக்கு வேண்டப்பட்டவர்களை நீதிபதிகளாக நியமிக்கும் படி மறைமுகமாக மிரட்டும் அரசாங்கம். தனக்கு வேண்டப்பட்டவர்கள் நீதிபதிகளாக நியமிக்கும் போது, விரும்பியபடி தீர்ப்புகளை வாங்க முடியும்.

நீதிபதி பதவி பெற உள்ளுக்குள் அரசியல் செய்தவர்கள் இப்போது வெளிப்படையாக அரசியல்வாதிகளுடன் சேர்ந்து அரசியல் செய்வார்கள். அரசாங்கம், எதிர்கட்சிகளை மீறி கொண்டு வரும் அபத்தமான சட்டங்கள் கூட நீதித்துறை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகும்.

உச்சநீதிமன்றத்தில் நாட்டில் பாலும், தேனும் ஒடுகிறது என அரசாங்க வண்டு முருகன்கள் வாதம் வைத்தால் என்னது இப்படி சொல்றிங்க. நம்ம மக்கள் டாடா பிர்லாவா மாறிட்டதா கேள்விப்பட்டோம்மே என சொல்லும் நீதிபதிகள் தான் வேணும் என்பதற்காகவே சட்டத்தில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளன அரசாங்கம்.

நீதித்துறை சிறப்பாக செயல்படவும், அதன்மீதும், உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற பணியில் உள்ள பணியில் இருந்து ஓய்வு பெற்ற, கீழ்நீதிமன்ற நீதிபதிகள் மீதான பிரச்சனைகளை தீர்க்க, அவர்கள் மீது சமீபமாக வரும் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் தண்டனை வழங்க, குற்றச்சாட்டுகள் எழா வண்ணம் அவர்கள் தங்களது பணியை செய்ய வாய்ப்புகள் ஏற்படுத்தி தரும் சட்டம் கொண்டு வர அரசுக்கு எண்ணம்மில்லை. 

அல்லது பழைய சட்டங்கள் மாற்றப்பட்டு நிகழ்காலத்துக்கு ஏற்றாற்போன்ற சட்டங்கள் புகுத்தப்பட்டால் பிரச்சனையில்லை. பழைய பஞ்சாங்கம் போல பல இஸ்லாமிய நாடுகளில் மக்கி மண்ணுக்கு போன சட்டங்களை தோண்டி எடுத்து பெண்கல்வி, பெண்ணுரிமை, சொத்துரிமை, மத உரிமைககளில் வேட்டு வைத்தால் என்ன செய்வது மக்களுக்குள் பிளவுகளும், மோதலும் தான் வரும்.

இந்துத்துவா அமைப்புகள் நீதித்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அதில் ஓரளவு வெற்றியும் பெற்றார்கள். யார் ஆட்சியில் இருந்தாலும் அதில் பிரச்சனையில்லாமல் இருந்தது. இப்போது அவர்களது மிருக பலம் நீதித்துறையை தங்களது கட்டுப்பாட்டுக்குள் முழுமையாக கொண்டு வர தடைகளை உடைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

நீதித்துறை - அரசு - பாராளமன்றம் தனித்தனியாக இயங்க வேண்டும் என்கிறது சட்டம். அதற்கான தனித்தனி அதிகார எல்லைகள் உள்ளன. அதை சிதைக்க வேண்டாம் என மைய சட்ட அமைச்சரை அருகில் வைத்துக்கொண்டே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி லோதா சுதந்திர தின உரையில் குறிப்பிட்டார். நீதித்துறை சுதந்திரத்தில் தலையிடமாட்டோம் என மைய சட்ட அமைச்சர் பதில் கூறினார்.

உண்மை தான் நீதித்துறை சுதந்திரத்தில் அரசு தலையிடவில்லை......... சுதந்திரத்தையே பறிக்க தொடங்கியுள்ளது............

வாழ்க மோடி சர்கார்...........

செவ்வாய், ஆகஸ்ட் 19, 2014

ஆர்.எஸ்.எஸ்சா ? மோடியா ? வெற்றி யாருக்கு ?




கடந்த ஜீலை மாதம் வரை மோடி மோடி என பெரும் கூப்பாடு போட்டது மீடியாக்கள். மீடியாக்களை அப்படி கூப்பாடு போட வைத்தது பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள், இந்துத்துவா அமைப்புகள். மோடிக்காக பலரை பலிக்கொடுத்தது இந்த அமைப்புகள். தங்கள் பேச்சை மீறுவதால் இப்போது மோடியவே பலி கொடுக்க தயாராகிவிட்டது இந்துத்துவா சக்திகள். 

ஆர்.எஸ்.எஸ் வளர்ப்பு மோடி. ஆர்.எஸ்.எஸ் கொள்கைகள் அனைத்தும் அத்துப்படி. இந்துத்துவா வெறி தான் பிரதமர் பதவி வரை மோடியை கொண்டு வந்து நிறுத்தியது. அதனாலயே ஆர்.எஸ்.எஸ் வளர்ப்பில் பிரதமர் கனவில் இருந்த அத்வானியை பலி கொடுத்துவிட்டு மோடி புகழ் பாட தொடங்கியது இந்துத்துவா கும்பல்கள். 

மோடி நின்றால், நடந்தால், உட்கார்ந்தால், யூரின் போனால் கூட அது தலைப்பு செய்திகளாக்கினர். தேர்தலில் மாபெரும் வெற்றிக்கு பின்னர் மோடியின் போக்கு மாறியது. தாங்களே வெற்றியின் நாயகர்கள் என நம்பினார்கள் சிலர். அது பி.ஜே.பி மற்றும் அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்சில் உள்ளே விவகாரமாக வெடித்தது. தலைவர்கள் வருவார்கள், போவார்கள். கொள்கை மாறாதது. வெற்றிக்காக ஒருவரை பலி கொடுக்கலாம்........ வெற்றிக்காக கொள்கையை பலி கொடுக்க முடியாது என விவகாரம் போனது.

அமைச்சரவை அமைப்பு மற்றும் ஆட்சி நடத்துவதில் பிரச்சனை உருவானது. மோடி ஆட்சிக்கு வந்தபின், குஜராத் மாடலில் ( புரியாதவர்களுக்கு தமிழகத்துக்கு “அம்மா“ மாடலில் ) ஆட்சி நடத்த முயல்கிறார் மோடி. இது ஒத்துவராது. மாநில கொள்கை என்பது வேறு, மத்திய கொள்கை என்பது வேறு. மாநிலத்தில் ஆட்சி நடத்தும் போது என்ன வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் செய்துவிடலாம். மத்தியில் ஆட்சி நடத்துவது சுலபமான விஷயமல்ல. அதேபோல் மத்தியில் எல்லா விவகாரத்தையும் எந்திரன் ரஜினி போல் தனி ஒருவரால் செய்து விட முடியாது. அதிகாரிகளை நம்பியும் எல்லா விவகாரத்தையும் செய்ய முடியாது. மத்திய ஆட்சிப்பணி என்பது பெரும் சவாலுக்குரியது. சக அமைச்சர்களை நம்பித்தான் ஆக வேண்டும். இதை செய்ய மோடி தயாராகயில்லை. இங்கு தான் அமைச்சர்களுக்கும் மோடிக்கும் உரசல் உருவாகிறது.

மோடி அமைச்சர்களை கண்காணிப்புக்கு உள்ளாக்குகிறார். அதிகாரிகள் சொல்வதை செய் என்கிறார். துறை அமைச்சர்களிடம் பேசாமல் நேரடியாக அதிகாரிகளிடம் பிரதமரே பேசுகிறார். அல்லது பிரதம அலுவலக உயர் அதிகாரிகள் பேசுகிறார்கள். இதுதான் அமைச்சர்களை அதிக எரிச்சலுக்குள்ளாக்கியது. தங்களை மோடி நம்ப மறுக்கிறார். துறை அதிகாரிகளிடம் பிரதமரே பேசுவதால் அவர்கள் எங்களை மதிப்பதில்லை என கொதித்துக்கொண்டு இருந்தார்கள். அதோடு, சீனியர் அமைச்சர்களை தீவிரமாக உளவு பார்க்க வைக்கிறார். தன்னை விட கட்சியில் சீனியராக, பிரதமர் பதவி போட்டியில் இருந்தவர்களையும் கண்காணிக்க சொல்கிறார். இது வழக்கமானது தான் ஆனால் அதில் தீவிரம் காட்டுவதை தான் அவர்கள் விரும்பவில்லை.

சீனியர் அமைச்சர்களான சுஷ்மா, அருண்ஜெட்லி, வெங்கய்யாநாயுடு போன்ற சிலர் தங்களது தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்சிடம், பள்ளிக்கூடத்து பிள்ளைகள் போல் சார் சார் அந்த பையன் கிள்றான் சார், மோடிஜீ நம்பமாட்டேன்கிறார்.... அதிகாரிகள் மதிக்கமாட்டேன்கிறாங்க ஜீ என புகார் சொல்கிறார்கள்.  

தலைமை பீடம், இதை மறைமுகமாக சுட்டிக்காட்டியும் மோடி தன் பாணியை மாற்றிக்கொள்ளவில்லை. மோடி மட்டுமல்ல அமைச்சரவையில் உள்ள 99 சதவிதம் பேர் ஆர்.எஸ்.எஸ் தேர்வு செய்தது. தன் பேச்சை மோடி மதிக்கவில்லை என்றதும் தான் மோடிக்கு மகுடி ஊதும் வேலையை நிறுத்தபோவதாக பாவ்லா காட்டியுள்ளது ஆர்.எஸ்.எஸ் கும்பல்.

மோடி அமைச்சர்களை நம்பவில்லை என்பது ஒருபுறம்மிருந்தாலும், தனக்காக பணம் செலவு செய்த பெரும் முதலாளிகளுக்காக வேலை பார்க்க நினைக்கிறார். நினைக்கிறார் என்பதை விட வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார். கார்ப்பரேட் கம்பெனிகளின் லீடராக வேலை பார்த்த அதானி குழுமம் கடந்த ஆண்டு நிறுவனத்தின் வருமானத்தை நட்ட கணக்கை காட்டியது. இந்த ஆண்டு பெரும் லாப கணக்கை காட்டுகிறது. இது அதன் அறிக்கை வாயிலாகவே அறியமுடிகிறது. இப்படி தனக்காக பல்லாயிரம் கோடிகளை செலவு செய்த நிறுவனங்களுக்காக வேலை பார்க்கிறார். அதில் யாரும் குறிக்கிட கூடாது என நினைக்கிறார். அதோடு, தனக்கு கட்சியில், ஆட்சியில் எதிர்ப்பே இருக்ககூடாது என்ற முடிவோடு செயல்படுகிறார். 

இதனால் மோடி அன் கோவுக்கும் ஆர்.எஸ்.எஸ்க்கும் யார் பெரிய ஆள் என்ற போட்டி நடக்கிறது. இந்த விவகாரம் நடந்துக்கொண்டு இருக்கும் போதே கடந்த வாரத்தில் விழா ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, இந்த மாபெரும் வெற்றிக்கு கேப்டனாக இருந்தவர் ராஜ்நாத்சிங், ஆட்டநாயகராக இருந்தவர் அமித்ஷா என பெருமைப்படுத்தி பேசினார். இதற்கு எதிர்வினை ஆற்றியுள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன்பகவத், இந்த வெற்றி யாருடைய தனிமனித வெற்றியல்ல. மக்கள் மாற்றம் வேண்டும் என எண்ணியிருந்தார்கள். அந்த மாற்றம் வெற்றி பெற்றுள்ளது இது மக்களுக்கான வெற்றி என பதில் தந்தார். மோடி மேஜிக் என புகழ்ந்த பஜகோவிந்தா வாய்கள் மாபெரும் வெற்றிக்கு பின் இது மக்களின் வெற்றி என்கிறது. அதை அதிகாரபூர்வமாக வெளிப்படையாக பேசுபவர் ஆர்.எஸ்.எஸ் இயக்க தலைவர் மோகன்பகவத். 

இது மோடி அன் கோ வுக்கு பெரும் அதிர்ச்சி. உள்ளுக்குள் விவாதித்த விஷயத்தை வீதிக்கு கொண்டு வந்து மோடியெல்லாம் ஒன்றும்மில்லை என்கிறாறே மோடியை எதிர்ப்பவர்களுக்கு இது அவல் போல் ஆகாதா என விழி புதுங்கி நிற்கின்றனர். 

இந்த சூடு ஆறுவதற்க்குள் சுதந்திரதினத்தன்று, அத்வானி தன் வீட்டில் தேசியகொடியை ஏற்றியவர், இந்த வெற்றி நாங்கள் எதிர்பாராத வெற்றி. இந்த வெற்றிக்கு காரணம் தனி மனிதரல்ல......... காங்கிரஸ்சில் பத்து ஆண்டுகால ஆட்சியே இந்த வெற்றிக்கு காரணம். அதற்காக காங்கிரஸ்க்கு நாங்கள் நன்றி சொல்ல வேண்டும் என இந்த வெற்றி மோடியால் வந்ததல்ல என்றார். 

இதையேத்தான் இப்போது, இந்துத்துவா கும்பல் செய்ய தொடங்கியுள்ளன. காரணம், பிரதமர் மோடி இந்த வெற்றி தனக்கான வெற்றியாக இதை நினைக்கிறார். இது தொடரவும், தனக்கான சக்தி வலிமை பெறவும் கட்சியில் பலரின் மறைமுக எதிர்ப்பை மீறி அமித்ஷாவை தேசிய தலைவராக்க துடித்து வெற்றி கண்டுள்ளார். 

மோடி - அமித்ஷா - ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து கட்சியில் பெரும் மாற்றத்தை செய்துள்ளாாகள். இது வெற்றிக்கானது என்கிறார்கள். இதில் ஆர்.எஸ்.எஸ் தலைமையின் முடிவு ஓரளவு தான் உள்ளது என்பது தெரிகிறது. 

ஆர்.எஸ்.எஸ் என்கிற அமைப்பை பகைத்துக்கொண்டால் எப்படிப்பட்ட கொம்பனையும் சாய்த்து செல்லாக்காசாக்கி விடும். வெற்றிக்காக, கொள்கைக்காக எவ்வளவு பெரிய தனி மனிதரையும் பலிக்கொடுக்க தயங்காத இயக்கம். அதன் பால பாடம்மே அதுதான். இதை நன்றாக அறிந்தவர் மோடி. என்ன செய்ய போகிறார் ? 

தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி குத்துசண்டையில் வெற்றி பெறுவது போல ஒரு கிராபிக்ஸ் வீடியோ உருவாக்கி வெளியிடப்பட்டது. அதில் சூப்பர்மேன் மோடி வெற்றி பெறுவார். இப்போது நிஜ சண்டை தொடங்கியுள்ளது. யார் வெற்றி பெறுவார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்............

( குறிப்பு. ஆர்.எஸ்.எஸ் - மோடி அன் கோ தகராறு கொள்கை்கானதல்ல. அதில் இருவரும் உறுதியாக உள்ளார்கள். இந்துத்துவா வெறியோடு தான் நடப்பார்கள். அதில் ஒற்றுமையாக தான் உள்ளார்கள். இப்போது நடப்பது அதிகாரம், பணத்துக்கான போட்டி என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் )

சனி, ஆகஸ்ட் 16, 2014

போங்கய்யா நீங்களும் உங்க சுதந்திரமும்............



நேற்று ஆகஸ்ட் 15 தேசப்பற்றாளர்கள் குமுறு குமுறு என வாழ்த்து என்ற பெயரில் தேசப்பற்று பற்றி குமுறியவர்கள் வாழ்த்து சொல்லாதவனையும், சுதந்திரம் ஒரு கேடா என கேட்டவர்களையும் வார்த்தைகளால் கடித்து குதறினார்கள்.

நீங்கள் ஏன் வாழ்த்து சொல்லவில்லை என சிலர் என்னிடம் கேட்டார்கள். நான் இந்த தேசத்தில் சுதந்திரமாக வாழ்கிறேன் என உணரவில்லை. அதனால் சொல்லவில்லை.

தேசப்பற்றாளர்களே, நாம் சுதந்திரமாக வாழ்கிறோமா உண்மையை சொல்லுங்கள் பார்க்கலாம். அவர்கள் விதண்டவாத்த்துக்கு வேண்டுமானால் சொல்ல்லாம் வாழ்கிறோம் என்று. அல்லது அவர்கள் வேண்டுமானால் நினைத்துக்கொண்டு இருக்கலாம் சுதந்திரமாக வாழ்கிறோம் என்று. 

சுதந்திரம் தருகிறோம் என்ற பெயரில் ஒரு அடிமையை மற்றொரு அடிமையிடம் கைமாற்றி விட்டுள்ளார்கள் அவ்வளவே. வெளிநாட்டு அடிமையிடமிருந்து உள்நாட்டு அடிமைக்கு கைமாற்றப்பட்டு இப்போது மறைமுகமாக வெளிநாட்டுக்கு அடிமைகளாக விற்கப்படுகிறோம். இல்லையில்லை விற்கப்பட்டுவிட்டோம் என்பதே உண்மை. 

பிரிட்டிஷாரிடம்மிருந்து, இந்த நாட்டுக்கு விடுதலை விடுதலை பெற்று தந்தோம் என ஆட்சியில் அமர்ந்தவர்கள், இப்போது ஆட்சியில் அமர்ந்திருப்பவர்கள், அதிகார வர்க்கம் எல்லோரும் சேர்ந்து நம்மை அடிமையாகத்தான் வைத்திருக்கிறார்கள் என்பதே உண்மை.

நாம் என்ன உணவு உண்ண வேண்டும், என்ன பொருளை பயன்படுத்த வேண்டும், எந்த சேனலை பார்க்க வேண்டும் என்பது வரை எல்லாவற்றையும் தீர்மானிப்பது தனியார் பெரு நிறுவனங்கள் தான். என் உரிமையில் கை வைக்கிறார்கள். பின் எங்கிருக்கிறது சுதந்திரம். 

என் அனுமதியில்லாமல் உலக வங்கியிடம் என்னை அடமானம் வைத்து ஒவ்வொரு தனி மனிதன் பெயரிலும் கடன் வாங்கியுள்ளார்கள் ஆட்சியில் இருப்பவர்கள் இதற்கான அனுமதியை யார் தந்தது. அடிமையின் அனுமதி பெறாமல் அடிமையை அதன் முதலாளி என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். என் பெயரில் என் அனுமதியில்லாமல் கடன் வாங்கியுள்ளார்கள் என்றால் அப்போது நான் அடிமை தானே. 

இரவில் இல்லை பகலிலேயே பெண்கள் நடமாட முடியவில்லை. கொலைகாரன், கொள்ளைக்காரனுக்கு மட்டுமல்ல நம்மை காப்பார்கள் என நினைக்கும் அரசப்படைகளுக்கும் பயப்பட வேண்டிய நிலையில் பெண்கள் மட்டுமல்ல இந்த சமூகம்மே உள்ளது. இதற்கு பெயர் சுதந்திரமா ?.

பாதுகாப்பானது என நினைக்கும் என் வங்கி கணக்கு முதல் செல்போன், மின்னஞ்சல் வரை இந்த அரசாங்கம் கண்காணிக்கிறது அப்பறம் நான் எங்கே சுதந்திரமாக இருப்பதாக உணர்வது.

ஓட்டு பிச்சை கேட்டு வருபவன் ஜெயித்து பதவியில் அமர்ந்தபின் எம்.பி, எம்.எல்.ஏ, தலைவர்கள் என்ற பதவியில் வலம் வருபவர்களிடம் குடிதண்ணீர் வரல என கேட்டால் அடியாள் வைத்து அடிக்கிறார்கள் இதற்கு பெயர் சுதந்திரமா ?.

வாங்கற சம்பளத்துக்கே வேலை செய்யாத 99 சதவித அரசு ஊழியர்கள், வேலை செய்ய என்னிடம் லஞ்சம் கேட்பதை எதிர்த்தால் பணி செய்யும் போது தடுத்தார் என பொய் புகாரை தருகிறார் விசாரணையே நடப்பதில்லை. அந்த அரசு ஊழியனுக்கு நான் அடிமைதானே....

1947க்கு முன்பு இப்படி யாராவது எழுத முடியும்மா, கேள்வி கேட்க முடியும்மா  என தேசபக்தர்கள் குமுறுகிறார்கள். இப்போ மட்டும் என்ன வாழுதாம். ஆட்சியாளர்களை கேள்வி கேட்டால், கிண்டலடித்தால் குண்டர் சட்டம், சைபர் க்ரைம் சட்டம் பாய்கிறது. அப்பறம் எங்கே இருக்கிறது பேச்சு, எழுத்து சுதந்திரம்.

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இந்த லட்சணத்தில் சுதந்திரமாக வாழ்கிறீர்கள் வாழ்த்து சொல்லுங்கள் என எப்படி கேட்கிறீர்கள் தேசபக்தர்களே...........