சனி, பிப்ரவரி 21, 2015

சூப்பர் சிங்கர் - வியாபாரத்துக்காக கூட்டு நாடகம் - ஏமாறுபவன் பார்வையாளன் மட்டுமே.......




விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் 4 நிகழ்ச்சி 20ந்தேதி நேரடி ஒளிப்பரப்போடு ஒரு முடிவுக்கு வந்துள்ளது. அதில் ஜெஸிகா என்ற குழந்தை ஈழத்து மக்களின் துயரம் மற்றும் நம்பிக்கை விதைக்கும் விதமாக ஒரு பாடலை பாடியது. அது இரண்டாம் இடத்துக்கு தேர்வாகி பரிசு பெற்றுள்ளார்.

ஈழத்து சகோதரியே உன்னால் தமிழ் மக்கள் எங்கள் துயரத்தை புரிந்துக்கொண்டார்கள் என ஒரு கும்பல் உருகிறது. மற்றொரு புறம் பூணுல் போட்டவாளுக்கு முதல் பரிசு தந்துள்ளார்கள், தமிழகத்துக்கான குரல் தேடலில் ஒருவரும் தமிழகத்தை சேர்ந்தவர்களில்லை என விமர்சனங்கள் இணையத்தில் கொடிக்கட்டி பறக்கின்றன. அதை காணும் போது சிரிப்பு தான் வந்தது. அந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க பணம் சம்பாதிப்பதற்கான வியாபார நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சி மட்டுமல்ல  எல்லா நிகழ்ச்சியும்மே அப்படித்தான்.

ஈழம் பற்றிய பாடிய அந்த பெண்ணுக்கு ஈழம் பற்றிய புரிதல் எந்தளவுக்கு இருக்கும் என யோசித்து பாருங்கள். அந்தப்பெண் கனடாவில் வாழும் ஈழ அகதியின் மகள். அவளது பெற்றோரும் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். ஈழ மக்களின் துயரத்தை அந்தப்பெண் பாடலாக பாடும்போது தனுஷ், திவ்யதர்சினி, ஜட்ஜஸ், பெற்றோர்களின் முகங்கள் மாறி மாறி அவர்களது முகபாவங்கள் காட்டப்பட்டன. திவ்யதர்சினியின் கண்ணில் நீர் தளும்புகிறது, தனுஷ் சோகமாகிறார், மற்றொரு பாடகி வாய் பொத்தி அழுகையை கட்டுப்படுத்துகிறார் என காட்டுகிறார்கள். அந்த பாடல் வரி உருக்குவதை போன்றுதான் இருந்தது. உண்மையில் அந்த வரிகள் அந்தப்பெண்ணையே உருக்கவில்லை என்பது தான் உண்மை. பாடி முடித்தபின் அந்தப்பெண் புன்னகைக்க தொடங்கினார். அந்த பெண்ணின் தாயின் முகம் கொஞ்சம் வாடியதாக இருந்தது. இது எல்லாம்மே நடிப்பு தான். ஈழ அவலத்தை தன் வெற்றிக்காக அந்த குழந்தை கையில் எடுத்துள்ளது. வியாபாரத்துக்காக, வெற்றிக்காக நடத்தப்படும் கூட்டு நாடகம்மிது.

இதை விஜய் டிவி மட்டும் செய்யவில்லை, எல்லா தொலைக்காட்சிகளும் செய்கின்றன. சன்டிவியின் சன் விருதுகள், விஜய் டிவி தரும் விஜய் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிகளை பாருங்கள் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு முக்கியத்துவம் தந்து விருதுகள் தரும். திறமைக்கான அங்கீகாரமாக இருக்காது, தனது விசுவாசிகளுக்கான விருதாக அதை தருகிறது. தொலைக்காட்சிகள் சினிமாவில், சின்னத்திரையில் தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்த போட்டி போடுகின்றன. 


சினிமா உலகில் நம்பர் ஒன் இடத்துக்கு போட்டி போடும் நடிகர்-நடிகைகளில் ஒருவரை தேர்ந்தெடுத்து தனது வியாபாரத்துக்காக அவர்களை சப்போட் செய்கின்றன. ரஜினி – கமல், அஜித் – விஜய், சிம்பு – தனுஷ், விமல் – சிவகார்த்திகேயன் என்ற வரிசையில் உள்ளவர்களில் இரண்டாம் இடத்தில் இருப்பவர்களை தனது நிரந்தர நண்பராக வைத்துள்ளது விஜய் டிவி. அவர்களது படங்களை கூடுதல் விலைக்கு வாங்குகிறது. அவர்களை புரமோட் செய்கிறது. மறைமுகமாக அவர்களை வைத்து படம் தயாரிக்கிறது. விஜய் டிவியால் நன்மை பெறுபவர்கள் மீண்டும் அந்த டிவிக்கு தங்களது நன்றிக்கடனை எந்த விழாவுக்கு அழைத்தாலும் வந்து கலந்துக்கொள்கிறார்கள்.

ஒரு விவகாரத்தை பார்ப்போம். தமிழில் தனுஷ் இயல்பான நடிகர் அவருக்கு திடீரென பாலிவுட்டில் மவுசு அதிகரிக்கிறது, எப்படி, எதனால் என யாராவது சிந்தித்தது உண்டா?. பெரிய லாபிஸ்ட்  வைத்துள்ள கமலஹாசனால் ஒரு படத்தை அங்கு வெளியிட முடியாமல் முட்டுக்கட்டைகளை சந்திக்கிறார். அப்படியிருக்க பாலிவுட்டில் தனுஷ் அடுத்தடுத்த படங்கள் நடிப்பதன் பின்னணி என்ன ?. திடீரென கமலின் இளைய மகள் அறிமுகப்படத்திலேயே பெரிய ஜாம்பவான்களுடன் நடிக்க முடிகிறது எப்படி ?. யோசித்து பாருங்கள் இதன் பின்னணிணில் உள்ள விளம்பர, வியாபார யுக்தி விளங்கும்.

சினிமா, டிவி என்பது வியாபாரம். இங்கு கண்ணுக்கு தெரியாத ஒப்பந்தங்கள், வியாபார வலைப்பின்னல்கள் உண்டு. ஒவ்வொருவரும் ஒவ்வொருவரை சார்ந்து தங்களது முடிவுகளை எடுப்பார்கள். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை அப்படித்தான் காணவேண்டும்.

கனடாவை சேர்ந்த ஒரு ஈழத்து தமிழ் பெண்ணை இரண்டாம் இடத்துக்கு கொண்டுவரப்பட்டதன் நோக்கம்மே விஜய் டிவி கனடா வாழ் தமிழர்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்பதற்காக தான்.

இன்று உலகம் முழுக்க பரவியிருப்பவர்கள் ஈழத்து மக்கள் தான். 


தமிழ சினிமா தயாரிப்பாளர்கள் வெளிநாட்டு உரிமையை கோடிகளில் விற்க காரணம். அந்த வியாபாரம் பல தயாரிப்பாளர்களை தற்கொலையில் இருந்து காப்பாற்றுகிறது, லாபத்தை வாரி வழங்குகிறது. அதோடு, தமிழ் சினிமா நிகழ்ச்சிகள் கனடா, லண்டன், பிரான்ஸ் போன்ற மேற்கத்திய, ஐரோப்பிய நாடுகளில் நடக்கும்போது பெரும் லாபத்தை சினிமாக்காரர்களுக்கு வாரி வழங்குபவர்கள் ஈழ மக்கள் தான். இதனால் தான் சின்னத்திரை மற்றும் பெரியத்திரை கலைஞர்கள் அங்கு சென்று மஞ்சம்குளிக்கிறார்கள்.

ஈழத்து பெண் ஒருவரை தேர்வு செய்ததன் மூலம் விஜய் டிவிக்கு பாராட்டுகள் குவிகின்றன. இதன் பின்னால் உள்ள வியாபாரத்தை புரிந்துக்கொள்வதில்லை.

ஒன்றை நாம் எப்போதும் தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டும். எந்த சினிமாக்காரனும், சின்னத்திரைக கலைஞனும் மக்களை நல்வழிப்படுத்தவோ, புத்திசொல்லவோ, உன் துயரத்தை மற்ற மக்கள் புரிந்துக்கொள்ளவோ, உனக்கு உதவி செய்யவோ காட்சிப்படுத்துவதில்லை. அந்த காட்சி படுத்தலை வியாபாரம் செய்ய வேண்டும், வருமானம் பார்க்க வேண்டும் என்பதை அவர்களது நோக்கம்.

நாடும் மக்களும் நாசமாய் போகட்டும்........ நாம் மட்டும் நன்றாக இருப்போம் என நினைப்பவர்கள் சினிமாக்காரர்கள், தொலைக்காட்சி நடத்துபவர்கள் அவர்களை நம்பி பார்வையாளன் தான் ஏமாறுகிறான்....... ஏமாந்துக்கொண்டே இருக்கிறான். சிந்தியுங்கள்.........