புதன், மார்ச் 20, 2013

பால்தாக்கரேவாக மாற கனவு காணும் சீமான்.
மும்பை பால்தாக்கரே போல் தன்னை உருவாக்கிக்கொள்ள கனவு காண்கிறார் இயக்குநர், நடிகர், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். 

சமீபத்தில் தினந்தந்தி, பாலிமர் தொலைக்காட்சியில் சீமானின் பேட்டியை காண நேரிட்டது. தினதந்தி தொலைக்காட்சியில் நேர்காணல் நடத்தியவர் சீமானிடம், இளைஞர்களை ஈழ பிரச்சனையை அறிவு பூர்வமாக அனுகாமல், உணர்வு பூர்வமாக அனுகுவது சரிதானா என கேட்டதும், என்னை எதுக்கு அறிவு பூர்வமா சிந்திக்க சொல்றிங்க. நான் உணர்வு பூர்வமா தான் சிந்திப்பன். என்னையெல்லாம் அறிவு பூர்வமா சிந்திக்க சொல்லாதிங்க என குரலை உயர்த்தினார். ( தினதந்தி நேர்காணலை யூ டியூப்பில் காணுங்கள் ). பாலிமர் தொலைக்காட்சியில் மக்களுக்கான நிகழ்ச்சியில், தனி ஈழம் அமைய எந்த உலக நாடும் உதவாது. தமிழ்நாட்டில் திராவிட ஆட்சிகள் போய் தமிழன் என்று ஆள்கிறானோ அன்று தான் ஈழம் கிடைக்கும் என்றார். 

வரலாற்றில் பல சந்தர்பங்களில் சில அரசியல் தலைவர்கள் முட்டாள்கள் போல் இருந்திருக்கிறார்கள். ஆனால், அரசியல் அறிவு இல்லாத முட்டாள்கள் அரசியல் தலைவர்களானால் எப்படி இருப்பார்கள் என்பதை பல சந்தர்பங்களில் சீமான் நமக்கு தெரிவிக்கிறார். இதைத்தான் காரல்மார்கஸ் பல சந்தர்பங்களில் வேறு மாதிரி சொல்லியிருக்கிறார். அதாவது, அறிவாளிகளும், தளபதிகளும், மாமன்னர்களும் வரலாற்றில் பல சந்தர்பங்களில் குப்பை கூடைக்கு அனுப்பபட்டு இருக்கிறார்கள். அதுபோல் குப்பையில் இருக்க வேண்டிய கோமாளிகளும், அறிவிளிகளும் பல சந்தர்பங்களில் கோட்டைகளில் அமர்ந்திருக்கிறார்கள் என்கிறார். இது ஏதோ காரல்மார்க்சின் கடந்த கால வரலாறு குறித்த ஆய்வு மட்டுமல்ல. நம் சமகாலத்திலும் இதுப்போன்ற கோமளித்தனங்களுக்கு சொந்தக்காரர்களாக வலம் வந்துக்கொண்டு இருக்கிறார்கள். 

அரசியல், சமூக அறிவியலோடு சம்மதப்பட்டது. சமூகத்தையும், சமூக அறிவையும் ஒருவர் எந்த அளவுக்கு அறிவு பூர்வமாக கற்று புரிந்துக்கொள்கிறாறோ அந்தளவுக்கு தான் அவரால் ஒரு சிறந்த அரசியல்வாதியாக, நேர்மையாளனாக சமூகத்துக்கு பங்காற்ற முடியும். அரசியல் என்பது வெறும் உணர்வோடு சம்மந்தப்பட்டதல்ல. சீமானிடம் இருப்பது உணர்ச்சி அரசியல் மட்டும் தான். 

எதை வைத்து இதை சொல்கிறேன் என கேட்கலாம். முதலில் சீமான் பற்றி அறிந்துக்கொள்ளலாம். சீமான், தனது பகுதியில் போலிஸ் நண்பர்கள் குழுவிலும் பின் காங்கிரஸ், திமுக, பாமக என வலம் வந்தார். தமிழ்தேசிய அரசியல் பேசி நெடுமாறனோடு நெருக்கமானார். பகுத்தறிவு பேசி பெரியாரின் பேரனாக பெதிகவுடன் வலம் வந்தார். கடைசியில் தான் ஈழ அரசியல் பேச தொடங்கியுள்ளார். 

தமிழ் சமூகத்தில் நிலவும் சினிமா மோகம், சினிமாக்காரர்களால் எதையும் செய்ய முடியும் என்ற மாயையை இவரும் பயன்படுத்திக்கொண்டார். இயல்பிலேயே உணர்ச்சி மயமான பாத்திரங்கள் மீது அனுதாபத்தையும், ஆதரவையும் செலுத்தும் மக்களின் மனங்களில் தன் கருத்துக்களை சினிமா தொழிலில் கற்றுக்கொண்ட வித்தையை மக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் ரசிக்கதக்க வகையில் உணர்ச்சி ததும்ப பேசி உள்ள கிளர்ச்சியை தட்டி எழுப்பி ஈழ மக்களின் அவலத்தை கண்ணீர் மல்க காட்சிப்படுத்தினார். இது ஒரு அருமையான சினிமா போல் மக்கள் மத்தியில் பதிந்தது. இதற்கு வலு சேர்க்கும் வகையில் அவர் மீதான வழக்குகளும், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர் இருந்த சிறை வாழ்க்கையும் நல்ல மூலதனமாக அமைந்தது. இதன் லாபமாக அவர் செந்தமிழன் என்று அடையாளமாக்கப்பட்டார். உண்மையில் அந்த வகையில் சீமான் வெற்றி பெற்றார். அப்புறம்மென ஈழத்தை பேசுவதற்கான அடையாள குறியீடாக அறியப்பட்டு மற்றவர்களிடம்மிருந்த செயலற்ற தன்மை அவர்களை பின்னுக்கு தள்ளவைத்தது.  


ஈழ விவகாரம் மூலம் இளைஞர்களை போராட தூண்டும் சீமான் இளைஞர்களை அரசியல் படுத்துவதற்க்கு பதில் தன் உணர்ச்சிகரமான பேச்சால் இளைஞர்களுக்கு தப்பும் தவறுமான அரசியலை கற்று தருகிறார். ( ஒரே ஒரு உதாரணத்தை பார்ப்போம், “ ஈராக் அதிபர் சதாம்உசேன், அமெரிக்காவால் தூக்கில் போடப்பட்டான். அதுபோல் இராஜபக்சே உன்னை தூக்கில் போடவேண்டும் என்று பலயிடங்களில் சீமான் பேசியிருக்கிறார். இவரின் அரசியல் அறிவு முன் ஒரே ஒரு கேள்வி, சதாம்மை தூக்கில் போட்டதை இவர் ஆதரிக்கின்றாறா?. அமெரிக்கா பற்றியும், சதாம்உசேன் பற்றியும் இவரின் அரசியல் புரிதல் என்ன ?. என்பதை விவாதிக்க தயாரா ?.”) 

ஈழ விவகாரத்தை இளைஞர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்க்கு முன்னால் அவர்களை முதலில் அரசியல் படுத்த வேண்டும். உலக அரசியல் தேவையில்லை, உள்ளுர் அரசியலாவது ஓரளவு தெரிந்தால் மட்டுமே போராட்டம் வெற்றி பெறும். அதை செய்யாமல் இளைஞர்களை உணர்ச்சிக்கு அடிமையாக்குது தற்காலிக வெற்றியாக அமைந்தாலும் அந்த வெற்றிகள் அவர்களை வன்முறை கும்பலாக பரிணாமம் அடைய வைக்கும்.  

இப்படிப்பட்ட உணர்ச்சி அரசியலைத்தான் 45 ஆண்டுகளுக்கு முன்பு மகாராஷ்டிராவில் பால்தாக்கரே செய்தார். மராட்டியம் மராட்டியர்களுக்கே என பேசி மராட்டிய இளைஞர்களை உணர்ச்சிக்கு அடிமையாக்கி பிற மதத்தவரையும், பிற மொழி பேசுபவர்களையும், மதத்தின், மாநிலத்தின், மொழியின் பெயரில் மராட்டியத்தை கலவர பூமியாக்கினார். இன்றளவும் நிம்மதியில்லாத மாநிலமாக மராட்டிய மண் மாறிப்போனது. அதைத்தான் தமிழகத்தில் சீமான் அரங்கேறற்ற கனவு காண்கிறார். 

மராட்டிய மண் மராட்டியருக்கே என்ற கோஷத்தோடு பால்தாக்கரே வலம் வந்ததைபோல  தமிழ்நாடு தமிழருக்கே என்ற கோஷத்தோடு சீமான் வலம் வருகிறார். தமிழக அரசியல் களத்தில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள தமிழ்தேசிய அரசியல்வாதியாக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள தொடங்கியுள்ளார் சீமான். இதற்காக ஈழத்துக்கு எதிரி திராவிடம் தான் என அதிமுகவை தவிர்த்து பிற திராவிட கட்சிகளை, இயக்கங்களை, தந்தை பெரியாரை தாக்க தொடங்கி உள்ளார். கர்நாடாகா, கேரளாவோடு நதிநீர் பிரச்சனை வந்தபோது அம்மொழி பேசும் மக்களை தாக்க சொன்னார். ஈழம் உருவாக வேண்டும்மென்றால் தமிழன் முதல்வராக வேண்டும் என்கிறார். இதற்காக தமிழ் தவிர பிற மொழி பேசுபவர்களை வெறுக்க வைக்கும் அரசியல் செய்கிறார். இந்த வித்தையெல்லாம் பால்தாக்கரேவுடையது. 

குழப்பமான சந்தர்ப்ப அரசியல்வாதி, ஈழத்தை ஆதரிக்கிறார்கள் என்பதற்காக தீவிர இந்துத்துவாவாதியான பால்தாக்கரேவின் கட்சிக்கு மும்பை சென்று தமிழர்கள் மத்தியில் வாக்கு சேகரித்தார். மொழி பற்றிய வரலாறு தெரியாமல் தனது அரசியல் கட்சியை நடத்துகிறார். அதன்பின்னால் இளைஞர்களை திரட்டுகிறார். 

மொழி, இனம் பற்றி இயக்கம் நடத்துபவர்கள் அதுகுறித்த அரசியல் வகுப்புகள், ஊழியர் கூட்டங்கள், கலந்துரையாடல்கள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள், அரசியல் நடவடிக்கைகள் மூலம் கட்சி தனது ஊழியர்களை அரசியல் ரீதியாக வளர்த்துயெடுக்கும். ஊழியர்கள் மக்கள் மத்தியில் அரசியல் பணியாற்றுவார்கள் இதுதான் தேசிய இன விடுதலை மற்றும் புரட்சிகர அரசியல் இயக்கங்களின் பொதுவான நடைமுறை. ஆனால் நாம் தமிழர் இயக்கம் தோன்றியது முதல் இப்படிப்பட்ட எதுவும் நடந்ததாக நமக்கு தெரியவில்லை. ஆங்காங்கு நடத்தப்பட்ட நாம் தமிழர்களின் செயல்வீரர்கள் கூட்டம் கூட கோஷ்டி சண்டை, கணக்கு வழக்கு பிரச்சனையாக கலைகட்டியதே தவிர கொள்கை ரீதியான விஷயம் நடந்ததாக தெரியவில்லை. 

நாம் தமிழர் கட்சியையோ அல்லது தனிப்பட்ட முறையில் சீமானையோ தாக்க வேண்டும், விமர்சிக்க வேண்டும் என்பது நமது நோக்கமல்ல. சீமான் பேசுவதற்க்கும், ஆசைப்படுவதற்க்கும் தகுதியான நபர் இல்லை என்பதை சுட்டிக்காட்டவே இந்த கட்டுரை. மற்றப்படி அவர் கனவுக்கு நாம் குறுக்கே நிற்கவில்லை. அவரது கனவு அவரது உரிமை. ஆனால் அதை மக்களை முன் வைத்து கான்பது தான் தவறு என்கிறோம். 

6 கருத்துகள்:

 1. ஈழத்தை வைத்து நன்றாக தான் வாழ எலோரும் கற்றுகொண்டிருக்கிரார்கள்....... வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. மிகச் சரியான பதிவு சகோ. சீமான் போன்ற இனவெறி அரசியல்வாதிகளை வளர்த்தெடுத்தால் நாடும், வீடும் விளங்காமல் போகும்.. இவருக்கு தமிழ் பால் தாக்கரே ஆகணும்னு ஆசை .. என்னத்தை எல்லா ஊரிலும் ஒரு களவாணிப் பயல்கள் வந்து ஆட்டம் ஆடி ஊரைக் கெடுத்து உலையில் போடுவாங்க. பால்தாக்கரே, வட்டால் ராஜூ, சிங்கள ராஜ பக்ஷா.. ஆந்திராவில் ஒரு உவைசி, குஜராத்தில் ஒரு மோடி இப்பட்டியல் நீளும் ஒசாமா பின் லேடன் வரைக்கும். சமூக நச்சுக்கிருமிகள்... இவைகள்

  பதிலளிநீக்கு
 3. மிகவும் அவசியமான பதிவு நண்பரே,
  மிக அருமை
  சரியான சாட்டை அடி சீமானுக்கு.

  பதிலளிநீக்கு
 4. avargal eelam pesi pizhaikkirargal neeengal avargalai easi pizhaikkirirgal

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. “நீங்கள் அவர்களை ஏசி பிழைக்கிறிர்கள்.“ உண்மைகளை சொன்னால் ஏசுவது போல் உள்ளது. நல்லது. நான் அரசியல்வாதியல்ல. அதனால் அவர்களை ஏசி பிழைக்க வேண்டிய அவசியம் எப்போது வராது. இந்த கட்டுரையும் தமிழன் தமிழன் என்று சொல்லி எப்படி ஏமாற்று தன்னை வளர்த்துக்கொள்கிறார் என்பதை அறிந்துக்கொள்ளவே. இன்று சீமான் பேசுவது உணர்ச்சியாக இருக்கும். நாளை அது பெரும் பிரச்சனையாக உருவெடுக்கும். அதற்காகவே இந்த கட்டுரை எழுதப்பட்டது.

   நீக்கு