புதன், ஏப்ரல் 05, 2017

ஏப்ரல் – 4. – கறுப்பு காந்தி படுகொலை நாள்.

அறிந்துக்கொள்வோம்! 
தினம் ஒரு வரலாறு!

ஏப்ரல் – 4. – கறுப்பு காந்தி படுகொலை செய்யப்பட்ட நாள். 

ஐநா சபை இந்த நாளை உலக நிலக்கண்ணிவெடி விழிப்புணர்வு நாளாக அறிவித்துள்ளது. நிலக்கண்ணி வெடிகள் பற்றி நாம் அறியாததல்ல. இலங்கையின் உள்நாட்டுப்போர், இந்தியாவின் காஷ்மீர் போர், வடகிழக்கு மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் உட்பட உலகின் பல நாடுகளில் எதிரிகளை கொல்ல நிலக்கண்ணி வெடிகளை நிலத்தில் புதைத்து வைத்தனர். இதில் எதிரிகளை விட அப்பாவி மக்களே அதிகளவில் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. மக்கள் அமைதியாக வாழ வேண்டும் என்பதற்காக நிலக்கண்ணிவெடிகளை அழிக்க அதுப்பற்றிய விழிப்புணர்வு நாளாக இந்த நாளை அறிவித்துள்ளது ஐநா.  

இதே நாளில் தான், சக மனிதர்களுக்குள் வேறுபாடு எதற்கு, நாங்களும் உரிமையுடன் வாழவேண்டும், எங்கள் மக்களுக்கு அமைதியான வாழ்க்கை வேண்டும் என கேட்டு போராடிய கறுப்பின தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட நாள் இது. 

கறுப்பு காந்தி படுகொலை 

1929 ஜனவரி 15ந்தேதி அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா மாகாண நகரில் பிறந்தவர் மைக்கல் கிங். இவரது தந்தை மைக்கல், தாயார் அல்பெர்டா. இவருக்கு இரண்டு தங்கைகள், ஒரு சகோதரன். இவரது தந்தை படித்தவர், கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றுவதை விரும்பாதவர், அதோடு, வெள்ளை நிறம் கொண்ட மனிதர்களால், கறுப்பின மக்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு, அடிமையை விட மோசமாக நடத்தப்படுவதை எதிர்த்து குரல் கொடுத்து வந்தவர் மைக்கல்.

1934ல் ஜெர்மன் நகரில் உலகளாவிய ஒரு பொது மாநாட்டுக்கு சென்றவர், அங்கு அறிமுகமான சீர்த்திருத்தவாதி மார்டின் லூதர் மீது விருப்பம் கொண்டு, ஊருக்கு வந்ததும் தனது பெயரை மார்டின் லூதர் கிங் என மாற்றிக்கொண்டார். தன் மகன் பெயரையும் மார்டின் லூதர் கிங் 2 என மாற்றி பதிவு செய்தார். இந்த மார்டின் லூதர் கிங் 2 தான் கறுப்பின மக்களின் உரிமைகளை பெற்று தந்த சமூக தலைவராவார். 


படிப்பில் சுட்டியாக விளங்கிய மார்டின் லூதர்கிங் உயர்நிலைப்பள்ளியில் படித்தவர் அங்கிருந்து நேரடியாக கல்லூரி படிப்புக்கு சென்றார். பிறப்பில் கிருஸ்த்துவரான மார்டின் லூதர்கிங், காலப்போக்கில் சமய நம்பிக்கை அதிகரித்து சமய கல்வி கற்று 25 வயதில் பாதிரியாரானார். கொரெட்டா ஸ்காட் கிங் என்கிற இளம்பெண்ணை 1953ல் திருமணம் செய்துக்கொண்டு, 4 குழந்தைகளுடன் தான் வாழ்ந்தார். வாழ்க்கை நமக்கு மட்டும் இனிமையாக இருந்தால் போதாது, நம் இன மக்களுக்கும் இந்த இனிமையான வாழ்க்கை கிடைக்க வேண்டும் என எண்ணினார். 

தனது இன மக்கள் சொந்த நாட்டுக்குள் உள்ள வெள்ளை நிறம் கொண்ட மக்களால் நசுக்கப்படுவதை கண்டு கொதித்துக்கொண்டு இருந்தார். மக்கள் மட்டும்மல்ல அமெரிக்க அரசாங்கமும் நசுக்கியது. கறுப்பின மக்களுக்கு குறைந்த பட்ச உரிமைகள் கூட வழங்கவில்லை. இதனை எதிர்த்து இந்திய விடுதலைக்கு அமைதியான வழியில் காந்தி போராடியதை போல, நம் உரிமைக்காக அமைதி வழியில் போராட வேண்டும் என்கிற முடிவுக்கு வந்தார் மார்டின் லூதர்கிங். இவர் பாதிரியராக இருந்ததால் மக்கள் அவர் சொல்வதை கேட்டனர். காலையில் தேவாலயத்தில் மதக்கோட்பாடுகள் பற்றி பேசும் அதே மார்டின் லூதர்கிங், மாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அரசியல் பேசினார். நம் கைகளில் பூட்டப்பட்ட அடிமைவிலங்கை நம்மால் உடைக்க முடியும். அப்படி செய்தால் அது வன்முறை. நம் கைகளில் அடிமை விலங்கை பூட்டியவர்களே அதை உடைக்க வேண்டும். அதுதான் நிரந்த வெற்றி. அதுவரை நாம் போராட வேண்டும் என்றார்.

உலகத்துக்கே ஜனநாயகத்தை கற்று தருகிறோம் என பீற்றிக்கொள்ளும் அமெரிக்கா மார்டின் லூதர்கிங் மற்றும் மற்ற கறுப்பின தலைவர்களை அடக்கி ஒடுக்க தொடங்கியது. இதில் சற்றும் தளராமல் பின் வாங்காமல் நின்றவர் கிங். அவரை கைது செய்து சிறையிலும் அடைத்தது. ஆனால், அமைதி வழி போராட்டம்மே என் பக்கம் நிற்பவர்களின் போராட்டம் என அறிவித்து போராடினார். உலக அமைதிக்கான நோபல் பரிசு 1964ல் அவருக்கு வழங்கப்பட்டது. 

கறுப்பின மக்களை இனியும் பூட்டி வைக்க முடியாது என்பதை உணர்ந்த அமெரிக்காவின் வெள்ளையர்களின் அரசாங்கம், 1965ல் கறுப்பின மக்களுக்கு தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை வழங்கியது. பின்பு, நிற வேறுபாடு நாட்டில் இருக்ககூடாது என்கிற மனித உரிமை சட்டத்தினை நிறைவேற்றி நாட்டில் அனைவரும் சமம் என்றது. கிங் பேசியது போல, அடிமை விலங்கை பூட்டிய வெள்ளையர்களும், அதன் அதிகாரத்தில் இருந்த அரசாங்கமும் அந்த விலங்கை உடைத்தது. 

அதன்பின், கறுப்பின மக்கள், ஆட்சி, அதிகாரங்களில் மெல்ல மெல்ல வர தொடங்கினர். ( இந்த சட்டம் அமலுக்கு வந்த 45 ஆண்டுகளுக்கு பின்பே அமெரிக்காவின் கறுப்பினத்தை சேர்ந்தவர் நாட்டின் அதிபராக ஒபாமா வர முடிந்தது). இந்த சாதனையை செய்த மார்டின் லூதர்கிங் 2, உன் அருகில் இருப்பவர்களையும், உன்னை சுற்றி இருப்பவர்களையும் உன்னைப்போல் நிறவேறுபாடு பாராமல் அன்பு செலுத்து எனப்பேசுவார். அரசியல் இயக்கத்திலும் அதன்படி செயல்பட, வெள்ளை இனத்தவர்களை இணைத்துக்கொண்டு போராடினார்.


கிங்கின் வெற்றியை சகித்துக்கொள்ள முடியாத வெள்ளை நிறத்தவர்கள் பெரும்பாலானவர்கள் கிங்கை எதிர்த்து வந்தனர். அவரது உயிருக்கு குறிவைத்தது தீவிரவாதம் கொண்ட வெள்ளை நிறத்தவர்கள் குழு.

1968 ஏப்ரல் 4ந்தேதி வாசிங்டன் மாநகரத்தில் நடைபெறவிருந்த பொதுக்கூட்டத்துக்கு தயாராகி கொண்டு இருந்தவர், அவர் தங்கியிருந்த லூரைன் என்கிற தங்கும் விடுதிக்கு வெளியே ஆயிரக்கணக்கான மக்கள் கிங்கை பார்க்க காத்திருந்தனர். அந்த மக்களை பார்க்க பால்கானிக்கு வந்தவர், தன் மக்களை பார்த்து மகிழ்சியாக கையசைத்துக்கொண்டு இருந்தார். அப்போதுதான் அது நடந்தது. கூட்டத்தில் இருந்த வெள்ளைக்காரன் ஒருவன் மார்டின் லூதர்கிங்கை, துப்பாக்கியால் சுட்டான். அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அந்த கறுப்பு வைரம் மறைந்தது. உலகமே கண்ணீர்விட்டது.  

என்னுடைய கனவுகள் என்கிற பெயரில் 1963ல் வாசிங்டன்னில் பெரும் மக்கள் திரளில் மார்டின் லூதர்கிங் பேசிய பேச்சு, மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது. அது பேசப்பட்டு 50 ஆண்டுகளை கடந்த பின்பும் கறுப்பின மக்கள் இப்போதும் அந்த உரையை வாசித்தும், கேட்டும் சிலாகிக்கின்றனர்.
 

ஏப்ரல் 3. – செல்போன் உருவான தினம்

அறிந்துக்கொள்வோம்!
தினம் ஒரு வரலாறு!

 ஏப்ரல் 3. – செல்போன் உருவான தினம்

உலகத்தையே உள்ளங்கைக்குள் கொண்டு வந்த சாதனம் எதுவென்றால் அது செல்போன் என்கிற கைபேசி. சிறுசு முதல் பெருசு வரை நீக்கமற நிறைந்திருக்கிறது அந்த சாதனம். இந்தியர்கள் சாப்பாடு கூட இல்லாமல் இருந்துவிடுவார்கள் செல்போன் இல்லாமல் இருக்கமாட்டார்கள் போல. அந்தளவுக்கு உடலோடு ஒட்டிய உறுப்பு போல் மாறிவிட்டது செல்போன். உலகத்தில் 10 பில்லியன் பேரிடம் செல்போன் உள்ளதாக ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது. 

உலகத்தில் முதன் முதலில் தொலைபேசியை கைப்பிடித்தது கிராகாம்பெல். ஆனால், ஒயர் இல்லாத அலைவரிசை மூலம் இயங்கும் பொதுமக்களுக்கான செல்போன் என்கிற கைபேசியை உருவாக்கி அறிமுகப்படுத்தியவர் மார்டின் கூப்பர். இவர் செல்போனின் தந்தை என டெக்னாலஜி உலகத்தால் அழைக்கப்படுபவர். 

செல்போன் உருவான விதம் ?. 

அமெரிக்காவின் சிக்காக்கோ மாகாணத்தில் 1928 டிசம்பர் 26ந்தேதி பிறந்தவர் மார்டின் கூப்பர் . அந்த காலத்திலேயே மின்னனு பொறியியல் உயர் பட்டம் பெற்று மோட்டரோலா நிறுவனத்தில் பணியாற்றினார். அப்போது அந்த நிறுவனம் இராணுவத்துக்கு பெரிய பெரிய அளவிலான தொலைதொடர்பு சாதனங்களை தயாரித்து தந்துக்கொண்டு இருந்த நிறுவனங்களில் இதுவும் ஒன்று. வேலைக்கு சேர்ந்தபின் தனது நிறுவனத்தில் தயாரிக்கப்படும் அந்த சாதனத்தை பார்த்தவர், அதையே சிறிய அளவில் தயாரித்தால் என்ன என்கிற எண்ணம் உருவாக அதை செயலாக்கும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டார். சில ஆண்டுகள் இடைவெளியில் அதை உருவாக்கியும்விட்டார். அந்த முதல் செல்போனை கைபேசி எனச்சொல்ல கொஞ்சம் தயக்கமாக இருக்கிறது. செங்கல் எனச்சொல்லலாம். காரணம் அது அந்த வடிவத்தில், அந்த எடையில் தான் இருந்தது. 1 கிலோ எடை, செவ்வக வடிவில் இருந்த அந்த செல்போனில் 30 நிமிடம் பேச 10 மணி நேரம் சார்ஜ் போடப்பட்டுள்ளது.



1973 ஏப்ரல் 3ந்தேதி பொறியாளர் மார்டின் கூப்பர் தான் முதன் முதலில் பொதுமக்களுக்கான கைபேசியில் பேசி நன்றாக செயல்படுவதை உறுதி செய்தார். முதலாம் தலைமுறை அலைவரிசையான அந்த செல்போன் ஜப்பான் நாட்டில் டோக்கியோ நகரில் 1979ல் மக்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். 1983ல் அமெரிக்கா அதன்பின் ஆஸ்த்திரேலியா போன்ற நாட்டு மக்கள் பயன்படுத்தினர். அந்த கைபேசி பெரும் பணக்காரர்கள் மட்டும் தான் ஆரம்பத்தில் பயன்படுத்தியுள்ளனர். இப்போது சொல்லவே வேண்டாம் நமக்கே தெரியும். 

அதற்கடுத்து 2ஜி, 3ஜி, 4ஜி என வந்து நிற்கிறது. உலகத்துக்கு முதல் முதலாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கான செல்போனை அறிமுகப்படுத்திய கூப்பர் பிற்காலத்தில் மோட்டரோலா கம்பெனியின் ஆய்வாக தலைமை பொறியாளர், துணை தலைவர் வரை உயர்ந்தவர், பின்னர் சொந்தமாக தொலைதொடர்பு நிறுவனத்தை தொடங்கி அதை நிர்வகித்து வருகிறார்.

-    ராஜ்ப்ரியன்.
 

திங்கள், ஏப்ரல் 03, 2017

ஏப்ரல் 2 - உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்.




1984ல் ராகேஷ் சர்மா என்கிற இந்தியர் விண்கலத்தில் பயணித்து விண்வெளி சென்ற முதல் இந்தியர் என வரலாற்றில் இடம் பிடித்தவர்.

1881ல் வ.வே.சு அய்யர் பிறந்த தினமின்று.

1805 ஏப்ரல் 2ந்தேதி பிறந்த ஆன்சு கிறிஸ்டியன் ஆண்டர்சன் என்னும் குழந்தை சிறுவயதிலேயே குழந்தைகளுக்கான நூலை எழுதினார். அதனால் அவரின் பிறந்த தினத்தை உலக சிறுவர் நூல் தினமாக உலகம் கொண்டாடுகிறது. 

அதேபோல் ஆட்டிசம் விழிப்புணர்வு தினமாக இந்த நாளை கொண்டாடப்பட்டு வருகிறது. 

ஆட்டிசம் என்பது ?. 

மூளை நரம்பு வளர்ச்சி குறைபாடு கொண்ட நோய்யாகும். கர்ப்ப காலத்தில் நோய் தாக்குதலால் வயிற்றில் உள்ள குழந்தையின் மூளை வளர்ச்சி பாதிப்பு, மரபணு மாற்றத்தால் மூளை வளர்ச்சி பாதிப்பு போன்றவற்றால் பிறக்கும் குழந்தைகள் வளரும் போது துறுதுறுவென இருப்பார்கள், காது கேட்கும் யார் அழைத்தாலும் பார்க்கமாட்டார்கள், பேசமாட்டார்கள், சக குழந்தைகளுடன் விளையாடமாட்டார்கள், தனியாகவே இருப்பார்கள், கோபம் அதிகமாக வரும் இத்தகைய குழந்தைகளையே ஆட்டிசம் நோய் பாதிப்பு என்கிறது மருத்துவ உலகம். 

இங்கிலாந்தை சேர்ந்த டாக்டர் லியோ கானீர் என்பவர் 1943ல் குழந்தைகளுக்காக எழுதிய கட்டுரையில் தான் முதன் முதலில் ஆட்டிசம் பற்றி எழுதியாக கூறப்படுகிறது. 

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தை என 2 வயதுக்குள் கண்டறிந்துவிட்டால் அந்த நோயை குணப்படுத்த முடியாது, ஆனால் அந்த குழந்தைகளை 4 முதல் 5 ஆண்டுகளுக்குள் சராசரி குழந்தையாக மாற்றம் செய்வதற்கான வாய்ப்பு 70 சதவிதம் உண்டு என்கிறது மருத்துவ உலகம். 

உலகத்தில் 1 கோடி குழந்தைகள் இந்த நோயால் ஆட்பட்டுயிருப்பதாக தெரியவருகிறது. ஆண்டுக்கு ஆண்டு ஆட்டிசத்தால் பிறக்கும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இந்த நோய்க்கான மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகம் முழுவதும் மருத்துவ ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.  2007ல் ஐக்கிய நாடுகள் சபை, ஆட்டிசம் நோய் தடுப்பதற்கான முறைகளை மருத்துவ உலகம் கண்டறிய வேண்டும் என வேண்டுக்கோள் விடுத்துள்ளது. அதோடு ஏப்ரல் 2ந்தேதி ஆட்டிசம் விழிப்புணர்வு தினமாக கொண்டாட வேண்டும் என அறிவித்துள்ளது. 

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட லண்டனை சேர்ந்த ஸ்டீபன் வில்ட்ஷையர் என்பவர் ஏரியல்வியூவில் ஒரு நகரத்தை பார்த்தால் அடுத்த 30 நிமிடங்களுக்குள் ஓவியமாக வரைந்து விடுவார். இவரது சாதனைகளை பார்த்து இங்கிலாந்து அரசே இவரை கவுரவித்துள்ளது. பெண் எழுத்தாளர் கிராண்டின் என்பவர் கொலராடோ பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறை பேராசிரியராக உள்ளார் என்பது குறிப்பிடதக்கது. 

ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையை அன்பு செலுத்தி வளர்த்தால் பெரும் சாதனைகள் செய்வார்கள் என்பது நிகழ்கால வரலாறு.


ஏப்ரல் 1 ந்தேதி வரலாறு அறிந்துக்கொள்ள.

தினம் ஒரு வரலாறு. - ஏப்ரல் 1 முட்டாள் தினம் உருவானது எப்படி ?


இந்த தளத்தில் கட்டுரைகள் எழுதி சுமார் 3 மாதங்களை கடந்துவிட்டது. பணி பளு காரணமாக எந்த கட்டுரையும் எழுத முடியவில்லை. பல கட்டுரைகள் எழுத நினைத்தும் முடியவில்லை.

இனி தொடர்ந்து தினம் ஒரு கட்டுரை என எழுதலாம் என முடிவு செய்துள்ளேன். அதாவது தினம் ஒரு வரலாறு.

நக்கீரன் இணையதளத்தில் எழுதப்படும் அந்த வரலாற்றை ஒரு நாள் தாமதமாக இங்கு பதிவிடலாம் என முடிவு செய்துள்ளேன். படியுங்கள்........... கருத்து கூறுங்கள்............. தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். 

முதல் கட்டுரை கடந்த ஏப்ரல் 1ந்தேதி எழுதிய முட்டாள்கள் தினம் உருவானது எப்ப ?????????

ஏப்ரல் 1.

ஆண்டின் 91வது நாள். 

அமெரிக்காவை சேர்ந்த செவிலியர் புளோரன்ஸ் பிளான்ஞ்பீல்ட் தான் அமெரிக்க ராணுவத்தின் அதிகாரபூர்வ செவிலியா அதிகாரியாக 1884 ஏப்ரல் 1ந்தேதி நியமிக்கப்பட்டார்.
இதே நாளில், 1878ல் ஈழத்து தமிழறிஞர் கணேசய்யர் பிறந்தார். 1935ல் இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்டது. 1957ல் நம் கொள்ளு தாத்தா காலத்து நாணயமான நயாபைசா அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போதும், எப்போதும் மேற்கண்ட இவைகள் நம் நினைவில் இருக்காது. ஏப்ரல் 1ந்தேதி என்றால் அது முட்டாள் தினம் என்பது நமது பொது புத்தியில் திணிக்கப்பட்டுள்ளது. 

அதுயென்ன முட்டாள் தினம்?. 

1466 ஆம் ஆண்டு பிரான்ஸ் மன்னன் பிலிப்பை அவரது அரசவை கவிஞர் ஏமாற்றி மன்னனை முட்டாளாக்கிய தினம் ஏப்ரல் 1 ந்தேதி என்பதால் அந்த நாளை முட்டாள்கள் தினமாக குறிப்பிடப்படுகிறது என்கிறது ஒரு ஆய்வு. 

மற்றொரு ஆய்வோ, ஐரோப்பிய நாடுகள் ஏப்ரல் 1ந்தேதியை புத்தாண்டு தினமாக கொண்டாடிவந்தது. 1562ல் 13வது போப் கரகரி, ரோமானிய ஆண்டு கணிப்பு முறையை ஒதுக்கி, இப்போது உலகம் முழுவதும் பயன்படுத்தும் கிரோகரியன் ஆண்டு கணிப்பு முறையை புகுத்தினார். அதன்படி ஜனவரி 1ந்தேதி ஆண்டின் தொடக்க நாளாக மாற்றப்பட்டது. இதனை ஐரோப்பிய நாட்டு மக்கள் முதலில் ஏற்றுக்கொள்ளவில்லை. ஜீலியன் ஆண்டுப்படி ஏப்ரல் 1ந்தேதி புத்தாண்டு கொண்டாடி வந்தனர். 

பிரான்ஸ் ஆளுகைக்கு உட்பட்டு இருந்த நாடுகளில் ஏப்ரல் 1ந்தேதி புத்தாண்டு கொண்டாடுபவர்களுக்கு பரிசு பொருட்கள் தருகிறேன் என ஜனவரி 1ந்தேதியை ஏற்றுக்கொண்டவர்கள் வெறும் காகிதம் சுற்றிய காலி பெட்டிகளை தந்து ஏமாற்றினார்கள். ஏமாந்தவர்களை முட்டாள்கள் என கிண்டல் செய்ய தொடங்கி அந்த நாளையே முட்டாள்கள் தினமாக்கிவிட்டார்கள் என்கிறது மேற்கத்திய ஆய்வுகள். அந்த பழக்கம் பின்பு அமெரிக்கா, ஆஸ்திரியா போன்ற நாடுகளுக்கு பரவி நமது இந்தியாவுக்கும் வந்தது முட்டாள் தினம். 

சுருங்கச்சொன்னால் நம் ஊரில், தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடும் தமிழ் உணர்வாளர்களை தீண்ட தகாதவர்களை போல் சித்திரை 1ந்தேதியை தமிழ் புத்தாண்டாக கொண்டாடும் ஆரிய வகையறாக்கள் பார்ப்பதை போல் அங்கு பார்த்தார்கள்.  

வலிந்தவன் எழுதியதே வரலாறு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
 
இதே கட்டுரை நக்கீரன் இணையத்தில்  படிக்க கிளிக் செய்யுங்கள்........