வெள்ளி, மார்ச் 27, 2015

கிரிக்கெட் நாசமாக்கும் ஜாக்கிரதை.
2015 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக்கொண்டுயிருக்கிறது. அரையிறுதியில் இந்திய சார்பில் சென்ற கிரிக்கெட் அணி தோல்வியை தழுவியதால் வெளியேற்றப்பட்டது. தொடக்கத்தில் வெற்றி பெற்றபோது ஆஹா ஓஹோ என புகழ்ந்த இந்திய ரசிகர்கள் தோற்றதும் ஏய் ஏய் என ஏலனம் செய்துக்கொண்டுயிருக்கிறார்கள். இணையம், மொபைல் வழியாக வீரர்கள் மீது வைக்கப்படும் ஏலனத்தை கண்டு பலர், நீங்கள் இந்தியானாக இருந்தால் இந்திய வீரர்களை ஏலனம் செய்யாதீர்கள் என கேட்டுக்கொண்டு தங்களது தேசபக்தியை காட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

அது அவர்களுடைய கருத்து என அதை கடந்து போக எனக்கு விருப்பம்மில்லை. கிரிக்கெட்டில் எங்கிருந்து வந்தது தேசபக்தி. விளையாடுகிறான் வென்றால் பரிசு வாங்கி வரப்போகிறான், தோற்றால் மீண்டும் முயற்சி செய்யப்போகிறான். இந்தியா ஜெயித்தால் கைதட்டி மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொள்ளலாம், தோற்றால் அடுத்த போட்டியில் ஜெயிக்க வேண்டும் என ஊக்கு விப்பு செய்யலாம் இதற்கு மேல் இதில் என்ன இருக்கிறது. இந்தியா ஜெயிக்க வேண்டும் என கத்துபவன் தான் தேசபக்தன் என்றால் அது என்னமாதிரியான தேசபக்தி ?.

மைதானத்தில் விளையாடும் வீரர்கள் இந்தியா என பெயர் பொறிக்கப்பட்ட டிசர்ட் போட்டுக்கொண்டு விளையாடினால் அவர்கள் இந்திய அரசு அங்கீகரித்த வீரர்களாகி விடுவார்களா ?. இந்தியா சார்பில் அவர்கள் விளையாடவில்லை. இந்தியாவில் இருந்து செல்லும் அணி அவ்வளவு தான். இந்த அணி வீரர்கள் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பது ஊரறிந்த விஷயம்.

பி.சி.சி.ஐ எனப்படும் போர்டு ஆப் கன்ட்ரோல் ஃபார் கிரிக்கெட் இன் இந்தியா என்ற அமைப்பால் தான் வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த அமைப்பு அரசு பதிவு பெற்ற அமைப்பே தவிர அரசாங்க அமைப்பல்ல. இன்று வரை அது ஒரு தனியார் அமைப்பு. முழுக்க முழுக்க மேட்டு குடி வர்க்கத்தினர் அங்கத்தினராக உள்ள அமைப்பு. இன்று சில லட்சம் கோடிகள் சொத்துவுள்ள அமைப்புயிது. இந்த பணம் எங்கிருந்து வந்தது கிரிக்கெட் ரசிகர்களிடம் இருந்து பெறப்பட்டது, மக்களின் வரிப்பணத்தில் இருந்து சலுகைகள் பெற்றது. இதற்கு இந்திய அரசு உரிமை கொண்டாட முடியாது. அந்த அமைப்பு மட்டுமே உரிமை கொண்டாட முடியும். 


இந்த அமைப்பின் தலைவர், செயலாளர் பதவிகள் பிடிக்க நடக்கும் தேர்தல்களில் கோடிகளில் பணம் தந்து உறுப்பினர்களிடம் வாக்குகளை பெற்று பதவிக்கு வருகிறார்கள். இந்த அமைப்பின் நிர்வாகிகள் பட்டியலை எடுத்து பார்த்தால் மலைத்து போவீர்கள் அத்தனை பேரும் பெரும் பெரும் கோட்டீஸ்வரர்கள்.  

கிரிக்கெட் தான் தேசிய விளையாட்டு என்பது போல மற்ற விளையாட்டுகளுக்கு கிடைக்காத முக்கியத்துவத்தை நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் வழியாக மக்களிடம் திணிக்கப்பட்டது. கிரிக்கெட் வீரர்களை கடவுளாக கொண்டாடும் அளவுக்கு மக்களை அடிமையாக்கி வைத்துள்ளார்கள். அடிமையாக்கி கோடி, கோடியாய் மக்களிடம் இருந்து மறைமுகமாக சுரண்டுகிறார்கள். அரச அதிகாரத்தில் இருப்பவர்களும் ஊக்குவிக்கிறார்கள். இந்த ஊக்குவிப்புக்கு பின்னால் அவர்களுக்கு கோடிகளில் லாபம் உள்ளது என்பது பலரும் அறியாதது. இந்த விளையாட்டு ஒரு சூதாட்டம், மேட்ச் பிக்சிங் நடக்கிறது என தெரிந்தபின்பும் நாட்டுக்காக விளையாடுகிறார்கள் என நம்மபும் முட்டாள் ரசிக மக்கள் இருப்பதால் தான் இந்த அமைப்பு கொழுக்கிறது.

கிரிக்கெட் மக்களிடம் தேசபக்தி என்ற பெயரில் பாகிஸ்தான் மீதான வெறியை மறைமுகமாக இந்திய மக்களிடம் வளர்த்தார்கள். வெறுப்பை ஊக்குவித்து பின்பக்கமாக கோடிகோடியாய் மக்களிடம்மிருந்து கொள்ளையடித்து வருகிறார்கள்.

இந்தியா கடந்த முறை நடந்த உலககோப்பை போட்டியின் போது கோப்பையை வென்றது. இதன் மூலம் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் குறைந்துவிட்டதா?, வறுமை குறைந்துவிட்டதா?, விவசாயிகளின் தற்கொலைகள் நின்றுவிட்டனவா?, உலக சுகாதார நிறுவனம் சத்துயில்லாத குழந்தைகள் பிறக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது அந்த நிலை மாறிவிட்டதா?, அமெரிக்க டாலருக்கு சமமாக இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துவிட்டதா?, உலக வங்கி இந்தியாவுக்கு தந்த கடனை தள்ளுபடி செய்துவிட்டதா?, அட அதுயெல்லாம் வேணாம்ய்யா டீ ஒரு ரூபாய் குறைந்தாவுது உள்ளதா சொல்லுங்கள் பார்க்கலாம். எந்த மசுரும் கிடையாது. விளையாட்டை விளையாட்டாக பார்க்காமல் வெறிக்கொண்டு அலைவதை அவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார்கள்.

எவனோ விளையாடுகிறான், எவனோ வெற்றி பெறுகிறான், எவனோ சம்பாதிக்கிறான்? இதனால் உனக்கென்ன லாபம். உன் சந்தோஷத்துக்காக விளையாட்டை பார்த்தாயா அதோடு நின்றுவிடு வெறியாகி கிடக்காதே......... கிடந்தால் நாசமாய் தான் போவாய் நண்பா.

சனி, மார்ச் 07, 2015

பகுத்தறிவாதி செய்யும் செயலா தோழியிது??????ஆச்சர்யத்தை தந்தது ஒரு இணைய தளம். சேலத்தை சேர்ந்த தற்போது பெங்களுரூவில் கணிப்பொறி பொறியாளராக பணியாற்றும் இந்துஜாவுக்கு திருமணம் செய்துவைக்க மாப்பிள்ளை தேடுகிறார்கள். அதற்காக தன்னுடைய விருப்பத்தை அதற்காக ஒரு இணைய தளம் தொடங்கி அதில் தன் கருத்தை வெளிப்படுத்தி இப்படிப்பட்டவர் தான் வேண்டும் என கேட்டுள்ளார்.

இந்துஜா இயற்கை விரும்பி, புகைப்பட எடுப்பதில் விருப்பம் உள்ளவராகவும், தன் மனதில் தோன்றியதை எழுத்தில் பதியவைக்க இணையத்தில் பிளாக், முகநூலில் தனக்கென பக்கம் தொடங்கி பலவற்றை எழுதி வருகிறார். தனக்கு துணையாக வரப்போகும் கணவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதை வெளிப்படையாக, வித்தியாசமான முறையில் சொன்னதை மிகவும் பாராட்ட வேண்டிய விஷயம். தான் ஒரு பகுத்தறிவாதி எனவும் பறைசாற்றியுள்ளார்.

ஒரு இளைஞனுக்கு பெண் பார்க்க போகும் போது, பையனுக்கு மேட்ச் சாக இருக்கிறளா, படித்திருக்கிறளா, வேலை பார்க்கிறாளா, அந்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் பற்றி, குடும்பம் பற்றி, சொத்து, சமூக அந்தஸ்த்து போன்றவற்றை இன்னும் இன்னும் பலவற்றை பார்க்கிறார்கள்.

பெண் குடும்பத்தாரும், மாப்பிள்ளை எப்படி, படிப்புயென்ன, வேலையென்ன, வருமானம் என்ன, குடும்பத்தில் சொத்து, உடன்பிறந்தவர்கள், பையனின் பழக்கவழக்கங்கள் எக்ஸட்ரா  எக்ஸட்ராக்களை விசாரிக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் வாழ்க்கையில் அவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக தான். இரு தரப்புக்கும் “தகுதிகள்“ இருக்கிறது என தெரிந்தபின் படித்த நகரத்து வர்க்கம்மோ, படித்தும் படிக்காத கிராமத்து வர்க்கம்மோ பெரும்பாலும் பெண்ணின் சம்மதத்தை ஒப்புக்கு கேட்பது தான் நடைமுறையாக உள்ளது.

இந்த பெண் வெளிப்படையாக பொது வெளியில் எனக்கு இப்படிப்பட்டவன் தான் துணையாக வேணும் என கேட்டதை பல சமூக அமைப்புகள், பெண்ணிய அமைப்புகள், படித்த பெண்கள், ஆண்கள் பாராட்டுவதை போல நானும் இரு கைகளை மேலே தூக்கி கைதட்டி ஆதரிக்கிறேன்.

ஆனால்..............

அந்த தோழி வெளிப்படுத்திய மாப்பிள்ளைக்கான தகுதியில் சில இடங்களில் முரண்பாடுகள் உள்ளது.

நான் ஆண்கள் போல் முடிவெட்டிக்கொள்வேன் என்றுள்ளார் அதிலல்ல என் முரண்பாடு.

குடும்பபாங்கான மணமகன் தேவையில்லை எனச்சொல்லியுள்ளார். அதில் கூட எனக்கு முரண்பாடில்லை. ஒழுக்கமானவன் அ ஒழுக்கமானவள் தான் தேவை என துணை தேடும் போது நீங்கள் குடும்பபாங்கானவன் தேவையில்லை என்றுள்ளார் நிச்சயமாக இதில் கூட நான் முரண்படவில்லை.

எனது விருப்படி தான் வாழ்வேன் என கூறியுள்ளீர்கள் எப்படி என்பதை வெளிப்படுத்தவில்லை இருந்தும் சமைப்பது, வேலைக்கு செல்வது, நண்பர்களுடன் பழக்கம், குடிப்பது என இருந்தால் அதில் கூட எனக்கு முரண்பாடில்லை. பசங்க என்னவேண்டுமானாலும் செய்யலாம், கல்யாணத்துக்கு பின் பெண்கள் கட்டுப்பெட்டியாக இருக்க வேண்டும் என்பதை வெறுக்கிறேன்.  

குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் எனக்கூறும் மணமகனுக்கு முன்னுரிமை என்றது தான் முரண்பட்டு நிற்கிறேன். குழந்தை பெறுவது பெண்களின் அடிமையாக்கும் முறை என வாதிடுபவர்கள் பலர் இருக்கின்றனர். இன்னும் கொஞ்சம் முன்னே போய் திருமணம் என்பது அடிமையாக்குவதின் மற்றொரு வடிவம் என பேசும் பெண்ணியவாதிகள், பெண் விடுதலைக்காக குரல் கொடுப்பவர்களும் இருக்கிறார்கள் நம் சமூகத்தில்.


திருமண என்ற பந்தம் பெண்ணை அடிமைப்படுத்துவதல்ல. இரண்டு பாலினம் குறிப்பிட்ட வயதுக்கு மேல் “சேர்ந்து“ வாழ வேண்டும் என்பது இயற்கை விதி. சேர்ந்தல் என்பது யாரிடம் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அது ஒருவருடன் மட்டுமே இருக்க வேண்டும் அதுதான் நாகரிகம், பண்பாடு என வரையறுக்கப்பட்டது. அதனால் தான் ஒருவனுக்கு ஒருத்தி என்ற பந்தத்தை உருவாக்க திருமணம் செய்து வைக்கிறார்கள்.

ஒரு மனிதன் இறுதி காலத்தில் நோய் நொடியில் படுக்கையில் விழும்போது தங்களை பாதுகாக்க, பராமரிக்க, அன்பு செலுத்த தங்களுக்கு ஒரு குழந்தை வேண்டும்மே என்பதற்காக தான் திருமணத்துக்கு பின் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என நினைத்து செயல்படுகிறது. 
கல்யாணம் வேண்டாம் எனச்சொல்லும் பெண்கள் உண்டு. அதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால் திருமணத்துக்கு பின் என் சுதந்திரத்துக்கு இடையூராக இருக்கிறது என குழந்தை வேண்டாம் எனச்சொல்லும் பெண்கள் அரிதனினும் அரிது. ( குறிப்பிட்ட சதவித இன்றைய பெண்கள் குழந்தை பெற்றுக்கொண்டால் அழகு போய்விடும், குழந்தைக்கு தாய்ப்பால் தந்தால் அழகு போய்விடும் எனச்சொல்லி தள்ளிப்போட்டவர்கள் பின்னால் பட்ட துன்பங்கள் பல )

சாதனைக்கு வயதோ, உடலோ, ஆண் - பெண் என்ற பேதம்மோ கிடையாது. நம்பிக்கையும், உறுதியும், உழைப்பும் இருந்தால் போதும். இன்று உலகில், இந்தியாவில் எத்தனையோ பெண்களை உதாரணமாக காட்டலாம். சாதனை பெண்மணிகளாக வலம் வருகிறார்கள். உலகத்தை வலம் வருகிறார்கள். அவர்களுக்கும் குழந்தை, குடும்பம் உள்ளது. அதையும் தன் பராமரிக்கிறார்கள். அவர்கள் யாரும் இப்படியொரு கண்டிஷன் போடவில்லை. 

நீங்கள் மற்றொன்றை புரிந்துக்கொள்ளுங்கள் ஆண்கள் கருவை சுமந்து, குழந்தை பெற்றுக்கொள்ளும் உடல் தன்மையிருந்தால் பெண்களுக்கான முக்கியத்தும் இந்த உலகில் இல்லாமலே போயிருக்கும். 

நீங்கள் விளம்பரத்துக்காக இப்படி அறிவித்துள்ளீர்கள் என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது. நீங்கள் பகுத்தறிவாதி எனக்குறிப்பிட்டுள்ளீர்கள். பகுத்தறிவாதி விளம்பரத்துக்கு ஆசைப்படமாட்டான் என நம்புகிறேன். ஏன் எனில் எந்த பகுத்தறிவாதியும் இப்படி அறிவிக்கமாட்டார்கள் என்பதை உணர்ந்துக்கொள்ளுங்கள்.

வியாழன், மார்ச் 05, 2015

இரண்டாவது முறையாக பாடலை வியாபாரம் செய்கிறார் இளையராஜா.இசைஞானி இளையராஜா ஆயிரம் படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஆயிரக்கணக்கான பாடல்கள் அவரது இசையில் வந்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளன. பாடல்களுக்காக படங்கள் ஓடியது என்றால் அது அவரது இசையால் உருவான பாடல்களுக்கு தான். மனதுக்கு இதம் தரும் இசையென்றால் அது இளையராஜா இசைதான் என உறுதியாக சொல்லலாம். எழுத்தாளர் சாருநிவேதா ஒருமுறை சினிமா விமர்சன பத்திரிக்கை ஒன்றில் எழுதியதாக நினைவு, இளையராஜாவும் ஒரு காப்பி பேஸ்ட் இசையமைப்பாளர் என கிழிகிழியென கிழித்திருந்தார். அதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.

இந்த இசை மேதை தான் இசையமைத்த பாடல்கள் அவரது அனுமதியில்லாமல் சிடி, டிவிடி போட்டு கம்பெனிகள் விற்பனை செய்ய முடியாதபடி நீதிமன்றத்தில் தடையாணை பெற்றுள்ளார். என் அனுமதியில்லாமல் என் பாடல்களை யாரும் பயன்படுத்தக்கூடாது அதாவது விற்பனை செய்யக்கூடாது. மீறினால் சட்ட நடவடிக்கை என அறிவித்துள்ளார்.

இது விவாதத்துக்கு வைக்க வேண்டிய விவகாரம். ஏனோ யாரும் அதுப்பற்றி பேசவில்லை.

எனக்கு ஒரு பேருந்து தேவைப்படுகிறது நான் பேருந்து உற்பத்தியாளரிடம்மிருந்து எனக்கு விருபப்பட்ட மாடலில் வாங்குகிறேன். பயணிகள் பயணத்துக்காக பேருந்து இயக்கி சம்பாதிக்கிறேன். 10 ஆண்டுகளுக்கு பிறகு பேருந்தை நிறுத்திவிடுகிறேன். இப்போது இந்த பேருந்து யாருக்கு சொந்தம்?. உற்பத்தியாளருக்கா ? பணம் போட்டு வாங்கியவருக்கா ?.

இப்போது அறிவிப்பு வெளியிட்டுள்ள இளையராஜாவிடம் இதே கேள்வியை கேட்கவிரும்புகிறேன்.

முதல் படமான அன்னக்கிளியில் இருந்து இப்போது ஆயிரமாவுது படம் எனச்சொல்லப்படும் ஷமிதாப் வரை இசையமைத்தார். இந்த ஆயிரம் படங்களும் யாரோ ஒரு தயாரிப்பாளருடையது. தயாரிப்பளார் இளையராஜாவை படத்துக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்கிறார். இயக்குநர் கேட்டுக்கொண்டபடி கதைக்கு ஏற்றாற்போல் பாடலாசிரியர்கள் பாடல் எழுதி தருகிறார், அந்த பாடலுக்கு இளையராஜா மெட்டமைக்கிறார். ஒரு பாடகர் பாடுகிறார் பாடல் உருவாகிவிட்டது. அந்த பாடலுக்கு ஏற்றாற்போல் நடிகர், நடிகையர், நடனமாடுபவர்கள் ஆடுகிறார்கள் படம் தயாராகி திரைக்கு வருகிறது. ரசிர்கள் பார்க்கிறார்கள் அதை கொண்டாடுகிறார்கள் அல்லது குப்புறதள்ளுகிறார்கள்.

இப்போது அந்த பாடல் யாருக்கு சொந்தம், காசு வாங்கிக்கொண்டு எழுதி தந்த பாடலாசிரியருக்கா?, இசையமைத்த இசையமைப்பாளருக்கா?, பாடியவருக்கா?, நடித்தவருக்கா?, கதை கருவை சொன்ன இயக்குநருக்கா? பாடலாசிரியர், இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர்கள் செய்த வேலைக்கு பணம் தந்த தயாரிப்பாளருக்கா ?. யாருக்கு சொந்தம் ?.


பாடலை நான் எழுதினேன் என பாடலாசிரியரும், இசையமைத்தேன் அதனால் எனக்கே சொன்தம் என இசையமைப்பாளரும், இந்த பாடலை நான் தான் பாடினேன் என பாடகரோ, இந்த பாடலை நான் தான் படமாக்கினேன் என இயக்குநரும், நான் தான் நடித்தேன் என நடிகர்களும் உரிமை கொண்டாடலாம். ஆனால் என்னைப்பொருத்தவரை அந்த பாடல் தயாரிப்பாளருக்கே சொந்தம்.  

பாடலாசிரியரியர், இசையமைப்பாளர், பாடகர் யாராக இருக்கட்டும் தங்களது கற்பனையில் உருவான பாடல் வரிகள், இசைகளை விற்பனை செய்துவிட்டனர். பணம் தந்து வாங்கிய தயாரிப்பாளர் அதை மக்களுக்கு தந்து காசாக்கியுள்ளார். அப்படியிருக்க அந்த பாடல்கள், இசையின் உரிமை தயாரிப்பாளரை தானே சேரும்.

இது படைப்பாளியின் அறிவு சம்மந்தப்பட்டது. அதை பொருளோடு சேர்ப்பது தவறு அறிவை திருடுவது நியாயம்தானா என கேட்கலாம். தயாரிப்பாளர் இசையமைப்பாளர், கவிஞரின் திறமையை திருடவில்லை. காசு கொடுத்து வாங்கிதான் பயன்படுத்துகிறார். படைப்பாளி தன் அறிவை காசுக்கு விற்று விட்டார். அதாவது படைப்பை விற்பனை செய்துவிட்டார். விற்ற பொருள் மீது எப்படி உரிமை கொண்டாட முடியும். ஒரு பொருளை வாங்கியவன் அதை விற்பான் அல்லது அடகு கூட வைப்பான். அது வாங்கியவன் செயல். விற்றபின் எனது படைப்பு என எப்படி உரிமை கொண்டாட  முடியும்.

இளையராஜா இலவசமாக யாருக்காவுது பாடல்கள் இசையமைத்து தந்திருந்து அதை இளையராஜா அனுமதியில்லாமல் தயாரிப்பாளர் விற்றிருந்தால் அது தவறு. அந்த இசை மீது தயாரிப்பாளருக்கு எந்த உரிமையும் கிடையாது. இளையராஜா காசுக்கு தான் இசையமைத்தார். அப்படியிருக்க அந்த பாடல் என்னுடையது என் அனுமதியில்லாமல் கம்பெனிகள் அதை பயன்படுத்தகூடாது என எப்படி சொல்லலாம்.

நீங்கள் என்ன சொன்னாலும் அதை ஒப்புக்கொள்ள முடியாது. படைப்பாளிக்கே படைப்பின் முழு உரிமை என்கிறிர்களா ?. உங்கள் வழிக்கே வருகிறேன். ஆயிரம் படங்கள்……….. ஆராயிரம் பாடல்கள் என கணக்கு வைத்துக்கொள்வோம். இந்த ஆராயிரம் பாடல்களை கண்ணதாசன், வாலி, வைரமுத்து, கங்கைஅமரன், பழனிபாரதி, முத்துக்குமார், விவேகா என ஏதோ ஒரு பாடலாசிரியர் எழுதியிருப்பார். அந்த பாடல் வரிகளுக்கு தான் இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர். அப்படியிருக்க எழுதிய அந்த படைப்பாளிக்கு அந்த பாடலில் உரிமையில்லையா?. அவர்களது படைப்புக்கு தானே இளையராஜா இசையமைத்துள்ளார். அப்போது அந்த வரிகள் அந்த படைப்பாளிக்கும் உரிமைதானே. அவர்களுக்கு இளையராஜா என்ன செய்துள்ளார் ?.


இதில் மிக முக்கியமான கேள்வி, இளையராஜா தான் இசையமைத்து தந்த படங்களின் தயாரிப்பாளர்களிடம் நான் இந்த பாடல்களை ஒரு குறிப்பிட்ட கம்பெனிக்கு விற்கபோகிறேன் என அனுமதி வாங்கியுள்ளரா ? வாங்கியிருந்தால் அவரை பாராட்டுகிறேன். வாங்கவில்லையென்றால் முதலில் அனுமதி வாங்கட்டும். ஏன் எனில் இளையராஜா பிழைப்புக்காக இசையமைப்பாளர் ஆனவர். தன் பிழைப்புக்காக இசையை உருவாக்கி விற்றுவிட்டார். வாங்கியவர் தான் உரிமை கொண்டாட முடியும்…. தயாரிப்பாளருக்கே சொந்தம்.