செவ்வாய், ஏப்ரல் 19, 2016

ஜெவின் ஆணவபுத்தி............


ஜெ வின் பிரச்சார மேடை அமைப்பை பிரபலமான கருத்து கந்தசாமிகள் ( அரசியல்விமர்சகர்கள், சமூகநீதி பேசுபவர்கள், மனித உரிமை போராளிகள், நடுநிலை தவறாத தமிழக தொலைக்காட்சிகள் மற்றும் செய்தித்தாள்கள் ) யாராவது விமர்சிப்பார்கள், கருத்து சொல்வார்கள் என நானும் பார்த்து பார்த்து ஏங்கியதே மிச்சம். காத்திருந்தது போதும் நாமளாவது மனதில் உள்ளதை சொல்லிவிடுவோம் என்பதாலே இந்த கட்டுரை.......

ஒவ்வொரு முறையும் தேர்தல் களம் சில கட்சிகளுக்கு வித்தியாசப்படுத்தி காட்டிக்கொண்டே வருகிறது. ஒருக்காலத்தில் ஆட்சிக்கட்டில் அமர்ந்திருக்கும் போதே ஏழை மக்களை பார்த்தால் ஓடிப்போய் கட்டிப்பிடித்து போட்டோ பிடித்து பப்ளிசிட்டி தேடிய அதிமுகவை தொடங்கி ஆட்சியை பிடித்தார் நடிகர் எம்.ஜி.ஆர். அதன்பின் அந்த கட்சியை வழிநடத்தும் ஜெ தான் இப்போது மேடையில் தன் கட்சி நிர்வாகிகளையே அருகில் உட்கார வைக்காமல் ஓரு ஸ்டெப் கீழே இறக்கி உட்கார வைத்துள்ளார்.

இளம் வயதில் சாதி தெரியாது, 40 வயதுக்கு பின் சாதி பாசம் வரும், 50 வயதுக்கு பின் சாதிவெறியாக அது மாறிவிடும் என கிராமத்தில் சொல்வார்கள். அது நிகழ்காலத்தில் நாம் கண்டு வரும் நிஜம். ( இப்போது 15 வயதிலேயே சாதி வெறியை ஊட்டுகிறார்கள் ). ஜெ வுக்கு சாதி வெறி உச்சத்தில் உள்ளது. மக்கள் முன் அது இல்லாதது போல் காட்டுகிறார்.

கடந்த காலங்களில் அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக ஜெயலலிதா இருந்தபோது, கட்சியினருடன் சரிசமமாக தான் மேடையில் உட்கார்ந்திருந்தார். ஏன் மிகவும் கொடுங்கோல் ஆட்சியை நடத்திய 91-96 காலக்கட்டத்தில் கூட தனது அடிமைக்கூட்டத்தை மேடையில் உட்கார வைத்து படம் காட்டினார். அதன்பிறகான காலக்கட்டத்தில் தன் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களை மேடையில் கொஞ்சம் தள்ளி உட்காரவைத்தார், பின்பு அந்த இடைவெளி அதிகரித்து அதிகரித்து இப்போது 2016 தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஒருபடி இறக்கி கீழே உட்கார வைத்துள்ளார்.

இது ஆணவபுத்தி மட்டும்மல்ல, குறிப்பிட்ட சாதிக்கே உள்ள ஆணவம். இதைத்தான் இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு வெட்ட வெளிச்சமாக ஜெயலலிதா காட்டியுள்ளார். கடந்த காலத்திலும் மக்கள் உட்பட அனைவரும் என் காலுக்கு கீழே என்பதை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நிரூபித்து வருகிறார் ஜெ.

கீழ்சாதிக்காரன் என ஒதுக்கிவைக்கப்பட்டவர்களின் இடுப்பில் இருந்த துண்டை தோளுக்கு வரவைத்து நீயும், நானும் சமம் தான் என சொல்ல வைத்த பெரியார் வாழ்ந்த இந்த மண்ணில் இப்படியொரு அசிங்கம். பணத்துக்காகவும், பதவிக்காகவும் சுயமரியாதை இழந்து வாடலாம் என்பதை அரசியல்வாதிகள் அதிலும் அதிமுகவினர் மக்களுக்கு காட்டுகிறார்கள். 

ஜெவின் அடிமைகள் தான் அப்படி உள்ளார்கள் என்றால், அவர்கள் தரும் 200 ரூபாய் பணத்துக்காகவும், ஒரு குவாட்டர்க்காக 100 டிகிரியை தாண்டி சுட்டெரிக்கும் வெயிலில் மக்களும் உட்காருகிறார்கள். ஒத்த தலைவியை சுற்றி 9 ஏசிகள் ஓட, இந்த நாட்டின் எஜமானர்கள் எனச்சொல்லப்படும் மக்கள் வெளியில் காய்கிறார்கள். இந்த அநியாயம் வேறு எந்த மாநிலத்திலும் நிச்சயம் நடந்ததில்லை, இனி நடக்கவும் நடக்காது.

ஆனால் இதற்கும் தமிழ் சமூகத்தில் வக்காலத்து வாங்கவும் பலர் நடுநிலை வேடம் போட்டுக்கொண்டு உள்ளார்கள் பல அடிமைகள். அந்த பொம்பளை அப்படித்தான்பா என சகஜமாக புறம்தள்ளிவிட்டு அவரை புனிதராக்க முயல்கிறார்கள். இதையே ஒரு கருணாநிதியோ, ராமதாஸ்சோ செய்திருந்தால் இந்த அடிமை புத்தியுள்ளவர்கள் சும்மா விட்டுயிருப்பார்களா ?.

திங்கள், ஏப்ரல் 11, 2016

புரட்சிபுயல் தொண்டர்களை மிஞ்சிய காம்ரேட்டுகள்………..முகநூல், டுவிட்டர் போன்றவற்றறில் சில ஆண்டுகளாக இயங்கி வருகிறேன். தேர்தல் காலங்களில் இணையத்தில் இயங்கும் மதிமுக தொண்டர்களை பார்த்தால் பாவமாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கும். இப்போது மதிமுகவோடு மக்கள் நலக்கூட்டணியில் உள்ள பிற கட்சிகளின் தொண்டர்களை பார்க்கும் போது அதிலும் குறிப்பாக இடதுசாரிகளுக்காக எழுதுபவர்களை காணும்போது அதிர்ச்சியாகவே இருக்கிறது.

மதிமுகவின் வளர்ச்சி என்பது 2000த்திலேயே முடிந்துவிட்டது. அதன்பின் அது தேய்பிறையாகிவிட்டது என்பது அக்கட்சி தலைவரான வைகோவுக்கே நன்கு தெரியும். அதிலும் 2006க்கு பின் வைகோ தேர்தல் களத்தில் செல்லாக்காசு என்ற நிலைக்கு போனதோடு, அந்த கட்சியில் தமிழகத்தில் உள்ள ஆயிரத்துக்கும் அதிகமான பேரூராட்சிகளில் ஒருயிடத்தில் கூட வெற்றி பெற முடியாது. பேரூராட்சி தலைவர்க்கே அந்த நிலை என்றால் நகராட்சி, மாநகராட்சி பதவிகளுக்குள் நான் போகவில்லை. அதுதான் மதிமுகவின் நிலை. இருந்தும் அவர் பின்னால் இப்போதும் இருக்கும் தொண்டர்கள் மட்டும், புரட்சிபுயல் தான் அடுத்த முதல்வர் என்கிற ரீதியிலேயே இணையத்தில் வம்பளக்கிறார்கள், அளந்துக்கொண்டே இருப்பதை கண்டு ஆச்சர்யமாக இருக்கும். தொடர் அவதானிப்புக்கு பின் தான் புரிந்தது அவர்கள் தொண்டர்களல்ல, அடிமைகள் என்று.  

கடந்த 2014 நாடாளமன்ற தேர்தலின் போது பாஜக தலைமையில் தேமுதிக, பாமக, தேமுதிக, புதியதலைமுறை தொலைக்காட்சி பாரிவேந்தர், முதலியார் கட்சி ஏ.சி.சண்முகம் உட்பட இன்னும் சிலர் இணைந்து அமைத்த கூட்டணி, தமிழகத்தில் பெரும் மாற்றத்தை கொண்டு வரப்போகிறது என பிரச்சாரம் செய்தார்கள். அதிலும் வை.கோ ஒன்னரை லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறப்போகிறார், அவர் தான் அடுத்த அமைச்சர் என்றெல்லாம் எழுதினார்கள் இணையத்தில் இயங்கும் மதிமுக தொண்டர்கள். அதோடு, 25 தொகுதிகளை பிடிக்க போகிறோம் என எழுதினார்கள். அதை படிக்கும்போதுயெல்லாம் சிரிப்பதா, அழுவதா என தெரியாமல் இருந்தேன். அப்போது நண்பர்களிடம் நான் சொன்னது இதுதான் இரண்டு இடங்களில் ஜெயித்தால் பெரிய விஷயம்மென்று.

அந்த தேர்தல் முடிவு வருவதற்க்குள் மதிமுகவுக்காக இணையத்தில் இயங்குபவர்கள் எழுதிய எழுத்தை கண்டபோது, மக்களை சந்திக்கிறார்கள், அப்படியும் கள நிலவரம் தெரியாமல் எப்படி இவர்களால் வெற்றி, வெற்றி, மாபெரும் வெற்றி என எழுத முடிகிறது என நினைப்பதுண்டு. அதிலும் நீண்ட பழுத்த அனுபவம் கொண்ட பத்திரிக்கையாளர்கள் அப்போது இனி தமிழ்நாட்டில் வை.கோ தான் என எழுதினார்கள். நாடு முழுவதும் மோடி அலை வீசியபோதும் நாடாளமன்ற தேர்தல் முடிவு, தமிழகத்தில் பாஜக கூட்டணி தமிழகத்தில் புஸ்வானம் என காட்டியது. தமிழகத்தில் இரண்டு இடங்களில் அதுவும் மதமும், சாதி பற்றும் இருந்ததால் பொன்னரும், அன்புமணியும் ஜெயித்தார்கள், அவ்வளவு தான் அந்த கூட்டணியால் செய்ய முடிந்தது.

இதோ இப்போது நடைபெறுவுள்ள 2016 சட்டமன்ற தேர்தலில் முதலில் மதிமுக, விசிக, சி.பி.எம், சி.பி.ஐ இணைந்து ஏற்படுத்திய மக்கள் நலக்கூட்டணி தான் தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்று அணி, நாங்கள் ஆட்சியை பிடிப்போம் என மீண்டும் இணையத்தில் இறங்கி அலம்பல் செய்தார்கள் மதிமுகவினர். அந்த கூட்டணியில் தேமுதிகவும், இப்போது தமாக வாசனும் இணைந்தபின், மதிமுகவினரை விட இடதுசாரிகள் பூரித்து கொண்டாடுவதை காணும்போது, க்யூபாவை மீட்ட பிடல்காஸ்ட்ரோ கூட இப்படி கொண்டாடியிருக்கமாட்டாரே என எண்ண தோன்றுகிறது.

தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில் இப்போதே ஆட்சி கட்டிலில் அமர்ந்ததுபோலவே பூரிக்கிறார்கள் தமிழக கம்யூனிஸ்ட்கள். அதிலும் ஏப்ரல் 10ந்தேதி மாமண்டூரில் நடந்த தேமுதிக – மநகூ மாநாட்டை பிரமிப்பாக பேசுகிறார்கள். அந்த மாநாட்டுக்கு வந்ததே 15 ஆயிரம் பேர் தான் என்கிறார்கள் விசிக்கள். அப்படிப்பட்ட மாநாட்டை பிரமாண்டம் என்கிறார்கள். இடதுசாரிகளுக்கு 500 பேரும், வை.கோவுக்கு 1000 பேரும், விசிகாவுக்கு 2000 பேர் வந்தாலே அது பிரமாண்ட தான். அதனால் அவர்கள் பூரிப்பதில் அர்த்தம்மிருக்கிறது. பத்திரிக்கையாளர்கள் சிலர் சிலாகிப்பதை தான் எப்படி என புரிந்துக்கொள்ள முடியவில்லை. பத்திரிக்கை நண்பர்களே, நாடாளமன்ற தேர்தலில் தேமுதிக, பாமக, பாஜக, மதிமுக, சின்ன சின்ன இயக்கங்கள் நடத்தும் பெரும் கோட்டீஸ்வரர்கள் இருந்தபோதே அந்த கூட்டணியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்போது தேமுதிக, மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட்கள், தமாக உள்ள கூட்டணியை பெரிய வெற்றி கூட்டணி என சிலாகிக்கிறிர்களே எந்த அடிப்படையில் அப்படி புகழ்கிறிர்கள் என விளக்கினால் நன்றாக இருக்கும்.

மதிமுக தலைவர் மற்றும் தொண்டர்களை மிஞ்சி இணையத்தில் சலம்பும் இடதுசாரிகளே, நன்றாக புரிந்துக்கொள்ளுங்கள், மேடையில் உட்கார இடம்மில்லாமல் தவித்தோம் என நீங்கள் பெருமையாக சொல்லிக்கொள்ளலாம், ஆனால் உங்கள் கூட்டணியிடம் பூத்தில் உட்கார தொண்டர்கள் கிடையாது என்பதே எதார்த்தம். அதை தேமுதிக, விசிக தொண்டர்கள் நன்றாக உணர்ந்து வைத்துள்ளார்கள். அவர்களை போல் இருக்க பழகிக்கொள்ளுங்கள். எதார்த்தத்தை பேசுங்கள், ஏன் எனில் மக்கள் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

சனி, ஏப்ரல் 09, 2016

ஆளும்கட்சி மோசடியை எழுதினால் பணம் வாங்குவதாக பாய்ச்சல்.


இப்போது, இணையத்தில் பரபரப்பாக எழுதப்படும் விவகாரமாக இருப்பது, பணம் கொடுத்து எழுத வைப்பது என்கிற விவகாரம் தான். இந்தியன் எக்ஸ்பிரஸ் என்கிற ஆங்கில நாளேட்டில் முதலில் வெளியாகி பின்னர் அதை காப்பி பேஸ்ட் செய்து தமிழ் செய்தித்தாள்கள் சிலவற்றில் வந்துள்ள அந்த செய்தியில் அந்த தனியார் நிறுவனம் ஒரு கட்டுரை தருமாம். அந்த கட்டுரையை ஒருவர் காப்பி செய்து தனது பக்கத்தில் வெளியிட்டால் 200 ரூபாய் பணம் தருவோம், இதை திமுகவுக்காக செய்வதாக அந்த நிறுவன பிரதிநிதி பதிவரிடம் சொன்னதாக சொல்கிறது செய்தி. ஒரு நாளைக்கு 3 கட்டுரைகள் தருவார்களாம். எத்தனை பேர் பதிவிடுகிறார்களோ அத்தனை பேருக்கும் பணமாம். இதை கேட்டு சிரிப்பாய் இருக்கிறது.

இன்று ஒரு தகவல் போட்டால் அது பிடித்திருந்தால் ஷேரிங் ஆகிறது. இப்படி ஒரு கட்டுரை சில நேரங்களில் 100, 200 ஷேரிங் ஆகிறது. அப்படியாயின் எவ்வளவு தருவார்கள். ஒரே கட்டுரையை 100 பிரபல பதிவர்கள் ஷேரிங் செய்தால் படிப்பவன் காப்பி பேஸ்ட் என தெரிந்து சிரிக்கமாட்டானா ?. அதோடு, ஒரு நிறுவனம் மூன்று விதமாக தினமும் 3 கட்டுரை?. அந்த மூன்று கட்டுரைகளையும் அரசியல் சாராத பிரபல பதிவர்கள் பதிவிட்டால், அதை மற்ற பிரபல பதிவர்கள் காப்பி பேஸ்ட் செய்தால் அது தெரிந்துவிடாதா ?. தொடர்ந்து பதிவிட்டால் அவர்கள் மீது இரண்டாவது நாளே கட்சி முத்திரை குத்தப்படும் பின் எப்படி அவன் பதிவை ஏற்றுக்கொள்வார்கள் ?. அதோடு, நிறுவனங்கள் கட்டுரை எழுதும் லட்சணம் தெரியாதா?.

திமுகவில் பேச, எழுத ஆட்களாயில்லை. திமுகவை விடுங்கள் திமுகவை ஆதரித்து எழுதுபவர்களின் கட்டுரைகளை தொகுத்து 100 பக்கம் கொண்ட புத்தகமாக தினமும் ஒரு புத்தகம் என வெளியிட தொடங்கினால் தேர்தல் முடிந்து ரிசல்ட் வரும் வரை வெளியிடலாம். அத்தனை கட்டுரைகள் உள்ளன. அவையெல்லாம்மே ஆதாரத்தோடு எழுதப்பட்டவை. இந்த லட்சணத்தில் அந்த கட்சி ஒரு நிறுவனத்திடம் பணம் தந்து பதிவர்களிடம் கட்டுரையை தந்து பிரச்சுரிக்க சொல்கிறதாம்.

அந்த தனியார் நிறுவனம் பேசியதாக ஒரு ஆடியோவை முதலில் வெளியிட்டார்கள், பின்னர் அதே நிறுவனம் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டதாக இப்போது செய்தி எழுதுகிறது. இன்னும் எத்தனை புளுகு வேண்டுமானாலும் சொல்லட்டும். எட்டு நாளைக்கு கூட அந்த புளுகு தாங்காது.

அந்த செய்தியில் குறிப்பிடுவது போல அப்படி ஒரு விவகாரத்தை திமுக தலைமை கையில் எடுப்பதற்கான அவசியம் அந்த கட்சிக்கு இன்றுவரையில்லை. அதற்கான காரணங்களை கீழே பார்க்கலாம். அதற்கு முன் இந்த கட்டுரை அதிமுகவை சார்ந்தவர்களுக்கோ, பிற கட்சியை சார்ந்தவர்களுக்கோ, பொதுமக்களுக்கானதல்ல. நடுநிலை வேடம் தரித்த அதிமுகவினருக்காக. யார் நடுநிலை அதிமுகவினர் என்கிறிர்களா?. எழுத்தாளர் மாலன், ஞானி, கோயல், பத்ரி, வெங்கட்ராமன் போன்று தமிழகம் முழுவதும் மனதுக்குள் ஜெ விசுவாசிகளாகவும், வெளியே ஜெவையும், கருணாநிதியையும் எதிர்ப்பது போல் நடுநிலை வேடம் போடுபவர்களுக்காக எழுதப்படும் கட்டுரை.

இதை படிக்கும்போதே எவ்வளவு வாங்கினாய் என கேட்கலாம், இனி இணையத்தில் யாரைப்பற்றி எழுதினாலும் காசுக்காக எழுதியிருப்பான் என நீங்கள் பேசினால் அதுதான் இந்த விவகாரத்தை கிளப்பி விட்டவர்களின் வெற்றி. சரி விவகாரத்துக்கு வருவோம்.

2008 காலக்கட்டம், முகநூல் பிரபலமாகாத காலத்தில் ஆர்குட், ஹாய்5 போன்ற சில சமூக தளங்கள் இருந்தபோதிலிருந்தே இணையத்தின் வளர்ச்சியை நன்கு பயன்படுத்திக்கொண்டவர்கள் திமுகவின் ஆதரவாளர்கள் மற்றும் மதிமுக ஆதரவாளர்கள். கொள்கை ரீதியானவர்கள் திமுக பற்றி எழுதிக்கொண்டு இருந்தார்கள். மதிமுகவினருக்கு வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழரும், அதன் ஆதரவாளர்கள் ஆதரவு தந்து எழுதிக்கொண்டு இருந்தார்கள்.

காலப்போக்கில் பிளாக், வோல்ட்பிரஸ், முகநூல் வளர்ச்சி பெற்ற பின், பலரும் அதில் இணைந்தார்கள். 2009ல் ஈழப்போராட்டமும், 2ஜி விவகாரம் உச்சத்தில் இருந்தபோது, 2ஜியில் கொள்ளையடித்துவிட்டார்கள், அதனால் ஈழவிவகாரத்தில் திமுக தலையிடவில்லை என கோயாபல்ஸ் பிரச்சாரத்தின் மூலம் உலகத்தை நம்ப வைத்தார்கள். அப்போது, திமுகவில் உறுப்பினராகயில்லாத கொள்கை ரீதியிலான ஆதரவாளர்கள், ஈழப்பிரச்சனையில் திமுக எந்தளவுக்கு இறங்கி உதவ முடியும் என்பதையும், அதேபோல் 2ஜி விவகாரத்தில் 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி கொள்ளையடிக்க முடியாது, இழப்பு ஏற்படுத்தவும் முடியாது என்பதை ஆதாரபூர்வமாக விளக்கினார்கள். 2009ல் திமுக ஆதரவாளர்கள் எழுதி விளக்கியதை தான், பிற்காலத்தில் இந்த பிரச்சனையை பற்ற வைத்த ட்ராய் தலைவரும், சிபிஐயும் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டு அவ்வளவு நஷ்டம் கிடையாது எனச்சொன்னார்கள். இப்படி திமுக மீது இந்த நிமிடம் வரை வாரி இறைக்கப்படும் சேற்றை, வீசியவர்களே துடைப்பவர்களாக மாற்றுவது திமுகவுக்காக இணையத்தில் செயல்படும் அந்த கட்சியின் கட்சி உறுப்பினர் அல்லாத ஆதரவாளர்கள் தான்.

தமிழகத்தில் தற்போது ஆளும்கட்சியாக உள்ள ஜெயலலிதாவின் ஊழல்களை, தவறுகளை, நிர்வாக திறமையில்லாதவற்றை எழுத பத்திரிக்கைகள், செய்தியாக ஒளிப்பரப்ப தொலைகட்சிகள் மறுக்கின்றபோதிலும் படித்தவர்கள் மத்தியில் கொண்டும் போய் சேர்ப்பவர்களாக இருப்பவர்கள் திமுகவின் இந்த இணைய ஆதரவாளர்கள் தான். இதுதான் ஜெவை காக்கும் கரங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. அதிகாரம் இருந்தால், சாதியுணர்வு இருந்தால் எதை வேண்டுமானாலும் தடுக்கலாம் என நினைத்தார்கள் அதன்படியே ஜெவுக்கு ஒரு பிம்பத்தை உருவாக்கி அவரை காக்கிறர்கள் பதறுகிறார்கள். அது பொய்யான கட்டப்பட்ட பிம்பம் என்பதை இணையத்தில் இயங்குபவர்கள் சுட்டிக்காட்டும் போது அவர்களால் அதை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. 


கடந்த 2014 பாராளமன்ற தேர்தல் முடிவுக்கு பின், நாடாளமன்ற தேர்தலில் தமிழகத்தில் 50 லட்சம் போலி வாக்காளர்கள் நுழைத்தது, அந்த 50 லட்சம் வாக்குகளை அதிமுகவுக்கு ஓட்டாக மாற்ற தேர்தல் ஆணையம் செய்த சிறப்பு ஏற்பாடுகள் பற்றி தேர்தல் முடிந்தபின், திமுகவுக்காக செயல்படும் கட்சி சாராத வழக்கறிஞர் ஒருவர், தேர்தல் ஆணைய ஆவணங்களின் அடிப்படையில் ஆதாரத்துடன் புட்டு புட்டு வைத்தார். அதை தேர்தல் ஆணையத்துக்கும் புகாராக அனுப்பினார். அது தாமதமாக தான் திமுக தலைவரின் பார்வைக்கு சென்று சில மாதங்களுக்கு முன்பு மாவட்டந்தோறும் போலியாக உள்ள வாக்காளர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு திமுகவினர் ஆணையத்திடம் புகார் சொல்ல அதன்பின்பே ஆணையம் அவர்களை நீக்கியது. அப்படி அவர்கள் இதுவரை நீக்கியுள்ளது மட்டும் 20 லட்சம் சொச்சம். இன்னமும் இருப்பது 30 லட்சம். இதுவரை இதுப்பற்றி கேள்வி கேட்க நடுநிலை வேடம் போடும் செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள், மாற்று அணி எனச்சொல்லும் கட்சிகள் உட்பட யாருக்கும் துப்பில்லை. அதை வெட்ட வெளிச்சமாக்கியது திமுக ஆதரவாளர் என இணையத்தின் இயங்கும் செயல்பாட்டாளர் தான்.

கடந்த வாரத்தில் அதிமுக வெற்றி என்கிற கருத்துகணிப்பு மோசடியை துகிலுறுத்தியது இணையத்தில் இயங்குபவர்கள் தான். கடந்த காலங்களில் இந்தியா டுடே, டைம்ஸ் நவ் தொலைக்காட்சி உட்பட பல பிரபல நிறுவனங்கள் சி வேட்டர் என்ற கருத்து கணிப்பு நிறுவனத்துடன் இணைந்து பல கருத்து கணிப்புகளை நடத்தியது. கடந்த பாராளமன்ற தேர்தலில் ஒரு இந்தி தொலைக்காட்சி, ஒரு அரசியல் கட்சி பிரதிநிதிபோல் கருத்து கணிப்பு நடத்தும் 11 நிறுவனங்களிடம் பேசியபோது, பணம் தந்தால் இரண்டு விதமான கருத்து கணிப்பு தருவோம். ஒன்று ஜெயிக்கும் என இருக்கும், மற்றொன்றில் தோல்வி என இருக்கும் என்றது. இந்த மோசடியை வீடியோ பதிவோடு வெளியிட்டது அந்த நிறுவனம். இதனால் பல பிரபல செய்தி நிறுவனங்களுக்கு கருத்து கணிப்பு எடுத்து தந்த அந்த நிறுவனத்தோடு இனி தொடர்பில்லை என இந்தியா டுடே, டைம்ஸ் நவ் உட்பட பல செய்தி நிறுவனங்கள் அறிவித்தன. இதோ இப்போது, 2016 தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என அதே சி வோட்டர் என்ற நிறுவனத்தின் கருத்து கணிப்பை டைம்ஸ் நவ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இதுப்பற்றி இங்கு பேச எந்த நடுநிலை வேடதாரிகளுக்கும் துணிவில்லை. இதை அம்பலப்படுத்தியது இணையத்தில் இயங்கும் செயல்பாட்டாளர்கள் தான்.

இப்படி அதிமுக தலைவி ஜெ வின் மோசடியை முகமுடியை கிழிப்பதால் தான் கருத்தை கருத்தால் எதிர்க்கொள்ள முடியாமல் குறுக்கு வழி தேடுகிறார்கள். குறுக்கு வழி தேடுபவன் பிராமணன் என்பது காலம் காலமாக நிரூபிக்கப்பட்ட உண்மை. பொய்யை உண்மை போன்று கூறி மக்களை நம்ப வைக்க வேண்டும் என்கிற வித்தையை கற்று வைத்திருக்கும் அவர்கள் தான் இப்போது ஜெவை காக்க பணம் வாங்கிக்கொண்டு ஜெயலலிதா பற்றி தவறாக எழுதுகிறார்கள் என்கிற விஷத்தை தூவுகிறார்கள். தவறாக எழுதினால், உண்மை இதுதான் என ஆதாரபூர்வமாக எழுத வேண்டாம்மா. எழுதமாட்டார்கள். ஏன் எனில் அவர்களால் எழுத முடியாத அளவுக்கு சொல்லப்படுவதெல்லாம் உண்மை. அதனால் தான் எழுதுபவர்களை தடுக்க பணம் வாங்கிக்கொண்டு எழுதுகிறார்கள் என புது யுக்தியை கையாள்கிறார்கள்.

குரு படத்தில் இயக்குநர் மணிரத்தினம் ஒரு வசனம் வைத்திருப்பார், ஏஜென்ட் என்கிற வார்த்தை நாட்ல கெட்ட வார்த்தையா மாறனும், என்ன வேண்ணா செய்ங்க, எவ்வளவு வேணும்ன்னாலும் செலவு செய்ங்க என்பார். அதேபோல் தான் இன்று, இணையத்தில் எழுதுபவர்கள் பணம் வாங்கிக்கொண்டு எழுதுகிறார்கள் என்பது.

திமுகவுக்காக இன்று அந்த கட்சியை சேர்ந்த பலர் இணையத்தில் எழுதுகிறார்கள். அவர்கள் மீது இவர்கள் குற்றம்சாட்டவில்லை. ஏன் எனில் திமுககாரர்கள் எழுதுவது பற்றி கவலையில்ல, கட்சிக்காரர்கள் அப்படித்தான் செயல்படுவர்கள் அதனால் மக்களிடத்தில் மாற்றம் ஏற்படாது. ஆனால், கட்சியில் எந்த பிரிதிபலனும் இல்லாமல் இன்றளவும் தர்க்க ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் எழுத திமுக ஆதரவார்கள் என்கிற வெளிப்படை பிம்பத்தில் நூற்றுக்கணக்கில் உள்ளனர். அவர்களின் பெயரை என்னால் நிச்சயம் பட்டியலிட முடியும். அவர்கள் மீது தான் இவர்கள் தாக்குதல் தொடுக்க தொடங்கியுள்ளார்கள். ஏன் எனில் அவர்களின் கருத்துகள் படித்தவர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதால் தான். பணம் தந்து எழுத வைக்கிறார்கள் என்கிற தாக்குதல் இதனால் அவர்கள் பயந்து ஓடிவிடுவார்கள் என்கிற நப்பாசை. ஒன்றை தெரிந்துக்கொள்ளுங்கள்...........

திமுக பணம் தரும் அளவுக்கு வளர்ந்திருக்கலாம்................ பணம் வாங்கிக்கொண்டு எழுதும் அளவுக்கு தன்மானமும், கொள்கையும் இல்லாதவர்கள்யில்லை அதை ஆதரிப்பவர்கள் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்.

கட்சியை உடைத்து விஜயகாந்தை 'வெளுக்கும்' ரசிக தொண்டர்கள்.தேமுதிக உடைந்துவிட்டதே என ஆச்சர்யப்படுகிறார்கள். இதில் ஆச்சர்யப்பட ஒன்றும்மில்லை. கொள்கையை அடித்தளமாக கொண்டு அமைக்கப்பட்ட திமுகவே பலமுறை உடைப்புக்கு உள்ளாகியுள்ளது. கொள்கையே இல்லாத கட்சிகள் உடையாமல் இருந்தால் தான் ஆச்சர்யப்பட வேண்டும்.

தேமுதிக கொள்கையோடு உருவாக்கப்பட்ட கட்சியல்ல. அதற்கு என்ன கொள்கையிருக்கிறது. சினிமா கதநாயகன் என்கிற கவர்ச்சி அவரை கட்சி தொடங்க வைத்து எதிர்கட்சி தலைவர் என்கிற அதிகாரம் வரை கொண்டு வந்து நிறுத்தியுள்ளனர் மக்கள். 2006ல் அவர் கட்சி தொடங்கியபோது, அவரது நீண்ட கால ரசிகர்கள் தொண்டர்களாக மாறினார்கள். பிற கட்சிகளில் பதவி கிடைக்காத, அங்கீகாரம் கிடைக்காத துக்கடாக்கள் அந்த கட்சியில் போய் இணைந்தார்கள். அப்படிப்பட்டவர்கள் கொண்டது தான் அந்த கட்சி.

சட்டமன்ற, நாடாளமன்ற தேர்தலில் தனித்து நின்று தன் பலத்தை பார்த்துக்கொண்டவர் 2006ல் தனியாக சட்டமன்றம் சென்றார், 2011ல் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு 29 எம்.எல்.ஏக்களுடன் எதிர்கட்சி தலைவர் என்கிற அந்தஸ்தோடு சட்டமன்றம் சென்றார். இதற்கு மேல் அவர் உயரம் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் மிகமிக குறைவு. 29ல் 8 எம்.எல்.ஏக்கள் அதிமுகவின் வலையில் விழுந்தார்கள்.

சரி இவர்கள் ஏன் கட்சியை விட்டு போனார்கள்?, போகிறார்கள். (போன பெரும்பாலானவர்கள் விஜயகாந்த் மன்றமாக இருந்தபோதே மாநில நிர்வாகியாக இருந்தவர்கள், கட்சியாக மாறியபின் கட்சியின் மாநில நிர்வாகிகளாக இருந்தவர்கள்). ஏன் எனில் கொள்கையில்லாத விஜயாந்த், தொண்டர்கள் விருப்பத்துக்கு மாறாக போனதால் வந்த பிரச்சனை. சிறு கட்சிகள் எப்போதும் தங்களை வளர்த்துக்கொள்ள, மக்களிடத்தில் தங்களை தக்கவைத்துக்கொள்ள பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைப்பார்கள். தங்களது கட்சி பலம் அறிந்து சீட் பெறுவார்கள், செலவுக்கு பணம் பெறுவார்கள்.

முதல்வர் நாற்காலி தனக்கு இனி கிடைக்காது என்றதும் விஜயகாந்த்தும் 2011ல் அப்படித்தான் முடிவு எடுத்தார். 2014 நாடாளமன்ற தேர்தலில் விஜயகாந்த் எடுத்தது கண் திறந்துக்கொண்டே போய் கிணற்றில் விழுந்தது போல. பொருந்தா கட்சிகள் மற்றும் தமிழகத்தில் தன் கட்சிக்கு இருக்கும் பலத்தில் 10 சதவிதம் கூடயில்லாத பாஜக கூட்டணியில் தன் கட்சியை ஐக்கியப்படுத்திக்கொண்டார்.

அப்போதே தேமுதிக நிர்வாகிகளை, தொண்டர்களை சோர்வடைய வைத்தது. 2016லும் அப்படி ஒரு முடிவு எடுத்ததால் தான் பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 2016 சட்டமன்ற தேர்தலுக்காக திமுக, பாஜகவுடன் பெரும் பேரம் பேசினார். திமுகவுடன் போகிறோம் என கட்சி தொண்டர்களை நம்ப வைத்தபடி பேரம் பேசிக்கொண்டு இருந்துள்ளது விஜயகாந்த் குடும்ப குழு. அதற்கான பேச்சு வார்த்தை போய்க்கொண்டு இருந்தபோது தான் மநகூ அணி கேப்டன் அணியாக மாறியது. விஜயகாந்த் கண்ணை திறந்துக்கொண்டு கிணற்றில் விழும் முட்டாளல்ல. அப்படியும் விழுந்தார் என்றால் லாபம்மில்லாமல் இல்லை.

விஜயகாந்த் முன்பு கட்சியை வளர்த்து முதல்வராக ஆசைப்பட்டார். அது முடியாது என தெரிந்ததும் இப்போது கட்சியை வைத்து பணம் பார்க்க தொடங்கியுள்ளார். அவருக்கு அந்த ஆசையில்லை எனச்சொல்லலாம், கட்சியை கட்டுப்படுத்தும் விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மச்சான் சுதிஷ் நடவடிக்கைகளை பார்க்கிறபோது விஜயகாந்த்தை வைத்து பணம் சம்பாதிக்க நினைக்கிறார்கள் என்பது அப்பட்டமாக தெரிகிறது.

லாபத்தோடு அவர் போய் கிணற்றில் விழுவதால் தான், எங்களுக்கு பதில் சொல்லுங்கள் என இரண்டாம் கட்ட தலைவர்கள் கேட்கிறார்கள். பதில்யில்லை என்றதும் வெதும்புபவர்களை குறி வைக்கின்றன பெரும் கட்சிகள். பணம், பதவி ஆசைக்காட்ட கட்சியில் இருந்து விலகுகிறார்கள் அல்லது பெரும் கட்சிகளால் உடைக்கப்படுகிறார்கள். தேமுதிகவை நேற்று அதிமுக உடைத்தது, இன்று திமுக உடைக்கிறது அவ்வளவு தான். 


திமுக, அதிமுக, தேமுதிக, பாமக, காங்கிரஸ், மதிமுக கட்சிகளில் பெரும்பாலானவரிடம் பதவி மோகமும், பண ஆசையும் நீக்க மற நிறைந்துள்ளது. கொள்கை என்பது அவர்களின் மனதில் வெகு ஆழத்தில் உள்ளது. அதனால் தான் அதிகாரத்துக்கு வர முடியாது என தெரிந்ததும் அதுவரை சுகம் அனுபவித்த கட்சிகளில் இருந்து அடுத்து அதிகாரத்துக்கு வரும் என நினைக்கும் கட்சிக்கு ஓடுகிறார்கள். இது இன்று நேற்றல்ல மனித சமூகம் தோன்றியது முதலே அதிகார ஆசை கொண்டவர்கள் ஓடுவது நடந்துக்கொண்டு தான் இருக்கிறது.

இன்று கட்சியை விட்டு ஓடுபவர்களுக்கு மக்களிடம் வாக்குயில்லை. கட்சிகளுக்கே வாக்கு என்கிற நிலை உள்ளது. அதை எப்போதே உணர்ந்தவர் ஜெயலலிதா. அதிமுக என்பது, திமுக எதிர்ப்பு என்கிற ஒத்தை கொள்கையோடு தொடங்கப்பட்ட கட்சி, நடிகர் என்கிற பிம்பத்தில் நிலை நிறுத்தப்பட்டது. எம்.ஜி.ராமச்சந்திரன் இறந்தபின்பு நடிகர் என்கிற பிம்பம் உதவாது என்பதால் தான் பதவி ஆசை என்கிற பார்முலாவை ஜெயலலிதா கொண்டு வந்தார். தமிழகத்தில் 80 சதவிதம் தனக்கு அதிகாரம் வேண்டும் என்கிற ஆசை கொண்ட நிர்வாகிகள், தொண்டர்கள். அவர்களுக்கு பதவி ஆசையை காட்டிவிட்டால் எவனும் கட்சியை விட்டு போகமாட்டான் என அறிந்தே யாருக்கு வேண்டுமானாலும் அதிகாரம் தருவேன், பதவியில் தருவேன், எப்போது வேண்டுமானாலும் புடுங்குவேன் என்கிற பார்முலாவை செயல்படுத்துகிறார். நமக்கு அதிஷ்டம் அடிக்கும் என்கிற கனவுலயே அதிமுகவுக்கு ஓடுகிறார்கள். அதனால் தான் பலமுறை அதிமுக உடைந்த பின்பும் அந்த கட்சி வலிமையாக இயங்குகிறது.

திமுகவுக்கு நிரந்தர கொள்கையும், அதிமுகவுக்கு திமுக எதிர்ப்பு என்கிற கொள்கையும், பாமகவுக்கு தன் சாதி மக்கள் வளர்ச்சி என்கிற கொள்கையும் உள்ளது. தேமுதிகவுக்கு அப்படி எந்த நிரந்தர கொள்கையும் கிடையாது என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். லாபத்துக்காக கட்சி ஆரம்பித்தார். அதில் பங்கு பார்த்தவர்கள் இப்போது இல்லை என்றதும் பிரிகிறார்கள். கொள்கையில்லாத கட்சிகளில் அது இயல்பானதே.............

புதன், ஏப்ரல் 06, 2016

சாதி வெறி பிடித்த வை.கோ.சாதி வெறியாளராக பலமுறை அம்மணமாக தன்னை காட்டிக்கொண்ட வை.கோவுக்கு இப்போது முட்டுகொடுப்பவர்கள் சாதி மறுப்பாளர்கள் என தங்களை பிரகடனப்படுத்திக்கொண்ட திருமாவளவன், இடதுசாரி தலைவர்கள் மேடையில் அமர்ந்திருந்தார்கள். அதை பார்த்தபடியே.

வை.கோ திமுகவில் இருந்தபோதிலிருந்தே அவரது மனதின் அடி ஆழத்தில், சாதி வெறி என்பது ஊறிப்போய் இருந்தது. சாதி வெறி மட்டும்மல்ல, மதவெறியும் அவர் மனதில் உண்டு. திராவிட இயக்கத்தில் வளர்ந்ததால் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், தன்னை சாதி மறுப்பாளனாக காட்டிக்கொண்டார். தனி கட்சி கண்டபின்பும், தன்னை சாதி மறுப்பாளனாக காட்டிக்கொண்ட வை.கோவால் அதை நீண்ட நாட்களுக்கு தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. அவர் வெகு சுலபத்தில் உணர்ச்சி வசப்படுபவர் மட்டும்மல்ல. வெகு சீக்கிரம்மே தான் சாதி வெறியை காட்டுபவரும் கூட.

இப்போது வை.கோ உணர்ச்சி கொந்தளிப்பில் உள்ளார். திமுக ஆட்சிக்கு வருவதை தடுக்க அதிமுக போட்டு தந்த பாதையில் தனியாக ஒரு அணி அமைத்து பயணிக்கும் வை.கோ வாங்கிய காசுக்கு மேல் கூவ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். தனது பேச்சின் மூலம்மே மக்கள் மத்தியில் தான் அம்பலப்பட்டு போனதும், அதை மறைக்க என்ன என்னவோ பேசுகிறார்.

தேமுதிகவில் இருந்து பலர் மாற்று கட்சிக்கு போவது என்பது அவர்களது உட்கட்சி பிரச்சனை. தேமுதிக சந்திரகுமார் அணி, அவரது கட்சி தலைவரிடம் நியாயம் கேட்கிறது. அதற்கு பதில் சொல்ல வேண்டியது விஜயகாந்தின் கடமை. ஆனால் அவர் பதில் சொல்லாமல் கட்சியை விட்டு நீக்குகிறார். இதில் பிற கட்சிகள் கருத்து தெரிவிக்கும் போது நாசுக்காக கூற வேண்டும். ஏன் எனில் இது அவர்கள் வீட்டு பிரச்சனை. கூட்டணியில் இருந்தாலும் அதற்காக ஒரு கட்சியின் கொபசெ வாக மாறி பேசக்கூடாது. அந்த இங்கிதம் வை.கோவுக்கு தெரிந்திருந்தால், அவர் கட்சி காலி டப்பாவாக மாறியிருக்காது. தேமுதிகவின் உட்கட்சி பிரச்சனைக்குள் புகுந்து கருத்து சொல்கிறேன் என்கிற பெயரில் கருத்து கந்தசாமியாக வை.கோ மாறி பொங்கி தீர்த்துவிட்டார். தேமுதிக தலைமையோ அல்லது தலைமை உத்தரவு பெற்று பேசிய மூன்றாம் கட்ட தலைவர்கள் கூட அப்படி பொங்கவில்லை. ஆனால் அதற்கு மேல் வை.கோ கூவி முடித்தார்.

அவர் 6ந்தேதி தாயகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, அருகில் திருமா, ஜீ.ரா, முத்தரசனை வைத்துக்கொண்டு பேசியபோது, வை.கோ பேச்சை நேரலையில் ஒளிப்பரப்பிய கேப்டன் தொலைக்காட்சி, ஸ்டாலின் மீது குற்றச்சாட்டுகளை வீசும்போது, கட் செய்து விளம்பரம் போட்டார்கள். தேமுதிக சந்திரகுமார் தேமுதிகவில் இருந்து பிரிந்துக்கொண்டு பலரை அழைத்துக்கொண்டு போனதுக்கு பதில் ஆதித்தொழிலை ( பாலியல் தொழில் ) செய்ய போகலாம் என வார்த்தைகளால் விளாசினார். தேமுதிகாவை உடைப்பதற்கு பதில், கலைஞரும் அந்த தொழிலை செய்ய போகலாம் என்றவர், நான் நாதஸ்வரம் ஊதற தொழிலை சொன்னன் அதுவும் ஆதித்தொழில் தான், அவருக்கு அந்த தொழில் தெரியும் என சாதி வன்மத்தை வார்த்தைகளால் கொட்டினார். இதனை நாங்க சாதிக்கு எதிரானவங்க, ஓடுக்கப்படும் சாதிக்கு ஆதரவானங்க என அரசியல் செய்யும் தலைவர்கள் அருகில் அமர்ந்து அதை வேடிக்கை மட்டும்மே பார்த்துக்கொண்டு இருந்தார்கள். வை.கோ இதை விட கேவலமாக கலைஞர் குடும்பத்தை வசைமாரி பொழிந்துள்ளார். ஆனால், இப்போது அவர் கக்கியது சாதி என்கிற விஷம்.

கருணாநிதியின் அப்பா நாதஸ்வர கலைஞர். அவர் சின்ன மேளக்காரர் என்கிற மக்கள் தொகையில் பிராமணர்களை விட குறைவான மக்கள் தொகை கொண்ட சாதியை சேர்ந்தவர் என்பது உலகறிந்தது. இது மறைக்கப்பட்டதல்ல. நாதஸ்வரம் ஊதும் தொழில் ஒன்றும் இழி தொழிலும் அல்ல. நாதஸ்வரம் ஊதும் தொழிலை அல்லது சாதியை இழிவாக பார்க்கும் வை.கோ தான் இழிவானவர். 


நாங்கள் ஆண்ட சாதி என கொக்கறிக்கும் தேவர், வன்னியர், கொங்கு கவுண்ட தலைவர்களுக்கு நான் சலைத்தவனில்லை என அப்பட்டமாக காட்டிவிட்டார் வை.கோ. இதற்கு முன்பு, மதுவுக்கு எதிராக வை.கோவின் சொந்தவூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது, அதற்கு ஆதரவு தெரிவிக்கபோன, திருமாவை நீயெல்லாம் என் ஊரில் பேசக்கூடாது, போ அப்படி என தன் சாதி வெறியை காட்டியவர் தான் வை.கோ. அதே வை.கோவாகட்டும், இடதுசாரி தலைவர்களான ஜீ.ரா, முத்தரசனாகட்டும். மநகூவில், முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்தபோது, நல்லக்கண்ணு, திருமா பெயரை முன் வைத்து அவரது தரப்பினர் கோரிக்கை விடுத்தபோது, முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை தேர்தலுக்கு முன்பே அறிவிப்பது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என கூவினார்கள். அவர்களே, தேமுதிக அலுவலகம் போய், கேப்டன் நலக்கூட்டணி, கேப்டன் முதலமைச்சர் வேட்பாளர் என அறிவித்தபோது, தமிழ்தேசியம் பேசியவர்கள் ஒரு கேள்வி கேட்டார்கள். ஆதித்தமிழர் சாதியை சேர்ந்த திருமா, நல்லக்கண்ணுவை முதலமைச்சராக முன் நிறுத்துங்கள் என்றபோது கோபமாக மறுத்து கத்திய வை.கோ, இப்போது விஜயகாந்த்தை ஏற்றுக்கொண்டது, இருவரும் நாயுடு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் தானே என கேட்டார்கள். இன்று வரை அதற்கு வை.கோவிடம் பதில்யில்லை.

அவர்களுக்கு அன்று அவர் பதில் சொல்லவில்லை. ஆனால் அதே வை.கோ இன்று சொல்லாமல் சொல்லிவிட்டார். ஆம் என் மனதில் உள்ள சாதிவெறி தான் திருமாவை, நல்லக்கண்ணுவை முதலமைச்சராக ஏற்றுக்கொள்ளாமல் போனது என்று.

சாதியை முன்னிறுத்தி அரசியல் செய்பவர்களை நம்பிவிடலாம், முற்போக்கு முகமுடி போட்ட இந்த சாதிவெறியனை தான் முதலில் அரசியல் களத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.

மக்கள் விருப்பத்துக்கு எதிராக மாறினால் கட்சிகள் காணாமல்போகும்.சமீபத்தில் அரசியல் ஆய்வாளர்களுடனான கலந்துரையாடலில் நான் சொன்னது தான். மக்களின் எதிர்பார்ப்புக்கு, அவர்கள் விரும்பியதற்க்கு எதிராக எது நடந்தாலும் அதை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். மக்கள் நினைப்பது போல் நடந்தால் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள், இல்லையேல் தூக்கி போட்டு அழித்துவிடுவார்கள். கடந்த கால தேர்தல்களின் போது மதிமுக, பாமகவை இப்படி காலி செய்த மக்கள் இந்த தேர்தலில் தேமுதிகவை காலி செய்யவுள்ளார்கள்.

பொடா சட்டத்தின் கீழ் ஜெவால் சட்டத்துக்கு புறம்பாக சிறையில் அடைக்கப்பட்ட வை.கோ, கலைஞர் அழைக்கிறார் வருகிறேன் என ஓராண்டுக்கு பின் பிணையில் வெளியே வந்தார். 2004 நாடாளமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து நான்கு இடங்களில் நின்று வெற்றி பெற்றது மதிமுக. 2006 சட்டமன்ற தேர்தல், திமுகவுடன் கூட்டணியில் இருந்தவர் அதிக சீட்க்கும் 40 கோடிக்கு ஆசைப்பட்டு அதிமுகவுக்கு செல்கிறார் என தமிழக ஏடுகள் கிசுகிசுத்தபோது, மக்கள் நம்பவில்லை. மக்கள் மட்டும்மல்ல வை.கோவின் தாயாரே, என் மகன் அப்படி செய்யமாட்டான் என்றார். அவர் பேட்டி அச்சாகி வந்த பேப்பர் மை காய்வதற்க்குள் வை.கோ அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தார். நான் அறிந்தவரையில் மக்கள் மனதில் இருந்து வை.கோ நீங்கியது அப்போதுதான். காரணம், மக்கள் வை.கோவை நம்பினார்கள், வை.கோ ஏமாற்றினார். மக்களை ஏமாற்றிய வை.கோவை மக்கள் புறக்கணித்தார்கள். அதனால் தான் இன்று அவர் கட்சி ஒரு வார்டு கவுன்சிலராக கூட ஜெயிக்க முடியாத அளவுக்கு பலமிழந்து போனது.

இன்று பாமக தனித்து நிற்கும் முடிவை அன்புமணி எடுக்க காரணம், முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக அல்ல. தன் கட்சியின் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார், வன்னிய மக்களே அந்த கட்சியை புறக்கணித்ததால் மக்கள் மனதில் மீண்டும் இடம்பிடிக்க நினைக்கிறார். அதனால் தான் தனித்து நிற்கிறேன் என்கிறார். மக்கள் மனதில் இருந்து பாமக விலக காரணம், 2004 நாடாளமன்ற தேர்தல், 2006 சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணியில் இருந்தது பாமக. 2004ல் பாமக 6 தொகுதிகளில் நின்றதாக நினைவு. ராமதாஸ் – நடிகர் ரஜினியின் தனிப்பட்ட மோதலில் அந்த தேர்தலில் பாமக தோற்க வேண்டும் என ரஜினி வாய்ஸ் தந்தார். ஆனால் அந்த வாய்ஸ் எடுபடாமல் பாமக வெற்றி பெற்றது. அதே பாமக, 2009 நாடாளமன்ற தேர்தலில் 7 சீட் தருகிறார்கள் என அதிமுக கூட்டணிக்கு போக முடிவு செய்துள்ளது என்ற செய்தி வெளியானபோது, கூட்டணி மாறினால் ராமதாஸ்க்கு, மக்கள் மத்தியில் பெரும் சரிவு ஏற்படும் என்றார்கள், அதை அவரும் ஏற்றுக்கொள்ளவில்லை, அவரது கட்சியினரும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதிமுகவுடன் கூட்டணி வைத்தது பாமக. அது நின்ற 7 இடங்களிலும் தோல்வி. அதே ராமதாஸ் 2011ல் மீண்டும் திமுக கூட்டணிக்கு போகிறார் என தகவல் பரவியது. ராமதாஸ் போனால் மக்கள் மத்தியில் இன்னும் இமேஜ் காலியாகிவிடும் என்றார்கள். அதை அவர் ஏற்றுக்கொள்ளாமல் திமுகவோடு கூட்டணி வைத்தார் சரிவை சந்தித்தார்.


மதிமுக, பாமக என்றில்லை திமுகவும் மக்கள் நினைத்ததுக்கு மாறாக ஒரு முடிவு எடுக்க அதற்கும் தண்டனை தந்தார்கள். 2011 சட்டமன்ற தேர்தலில், திமுக தோற்கும் என மக்கள் நம்பினார்கள். ஆனால் பெரிய அளவிலான சரிவை கொடுத்ததுக்கு முக்கிய காரணம், 2ஜியோ, குறுநில மன்னர்களோ காரணமல்ல. காங்கிரஸ்க்கு 63 இடங்களை தந்ததை தான் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கட்சி தலைவர்களை விட தொண்டர்கள் குறைவான காங்கிரஸ் கட்சிக்கு இத்தனை இடங்களா என மக்கள் அதிர்ந்தார்கள் அதனால் தான் பெரும் தோல்வியை திமுகவுக்கு தந்தார்கள்.

பத்திரிக்கையாளர்களிடமும், மீடியா மைக் முன்பும் வந்து யார் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என மக்கள் தங்களது கருத்துக்களை கூற மாட்டார்கள். ஆனால், யாருடன் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும் என அவர்கள் முடிவு செய்து வைத்துக்கொண்டு இருப்பார்கள். அதை கட்சிகள் தான் உள் வாங்கிக்கொள்ள வேண்டும். மக்கள் நினைப்பதற்கு மாறாக கட்சி தலைமை முடிவு எடுக்கும் போது, தங்கள் மனதில் இருந்து அந்த கட்சியை தூக்கி வீசிவிடுவார்கள்.

இந்த 2016 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக அப்படி ஒரு தப்பை செய்துவிட்டது.  

திமுகவுடன் தான் தேமுதிக கூட்டணி அமைக்கும் என பலமுறை வாக்களித்த 80 வயது பெருசு முதல் முதல் முறை வாக்களிக்க போகும் 18 வயது சிறுசு வரை நம்பினார்கள். அந்த நம்பிக்கையை தேமுதிக ஏமாற்றியது. ஏமாற்றியது மட்டும்மல்லாமல், நான் தான் கிங் என்றதை மக்கள் காமெடியாக தான் பார்த்தார்கள். திமுக, அதிமுகவுக்கு மாற்றாக வேறு யாராலும் இப்போதைக்கு தமிழகத்தில் முதல்வராக முடியாது என்பது சின்ன குழந்தைக்கு கூட தெரியும். திமுகவுக்கு மாற்று அதிமுக, அதிமுகவுக்கு மாற்று திமுக. இதை நான் தான் அடுத்த கிங் என்பவரும், கிங் மேக்கர்களுக்கு புரியாமல் இருக்கலாம், மக்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால் தான் கிங் என்பரை கேலியாக பார்க்கிறார்கள்.

கடந்த 5 ஆண்டு காலத்தில் ஆளும்கட்சியாகவுள்ள அதிமுக மீது மக்களுக்கு பெரும் அதிருப்தி உருவாகியுள்ளது. அதிமுகவை எதிர்க்கும் சக்தி இப்போதுக்கு திமுகவுக்கு மட்டும்மே உள்ளது என்பதாலே திமுக கூட்டணி பலம் பெற வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். அதோடு, அதிமுகவால் பாதிக்கப்பட்ட தேமுதிக திமுகவோடு சேர்ந்தால் மட்டும்மே ஆளும்கட்சியான அதிமுகவை வீழ்த்த முடியும் என மக்கள் நம்பினார்கள்.

ஆனால், அந்த நம்பிக்கைக்கு மாறாக, மக்கள் நலக்கூட்டணியோடு தேமுதிக கூட்டு என்றதை கம்யூனிஸ்ட்டுகளும், மதிமுகவினர் வேண்டுமானால் கொண்டாடியிருக்கலாம். தேமுதிக தொண்டர்கள் அதை விரும்பவில்லை. அதைவிட முக்கியம் மக்கள் விரும்பவில்லை. மநகூவையே விரும்பாத மக்கள் தேமுதிக அந்த கூட்டணியில் இணைந்ததை பரிதாபமாக தான் பார்க்கிறார்கள். விஜயகாந்த் கட்சி காலி என்பதை பிற கட்சிகள் பேசவில்லை. மக்கள் பேசினார்கள். அவர்கள் பேச காரணம், கள எதார்த்தம் அவர்களுக்கு தான் தெரியும்.

விஜயகாந்த்துடன் கூட்டணி வைக்க திமுக பண பேரம் பேசியது என வை.கோ வெளிப்படையாக குற்றம்சாட்டினார். கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலத்தில் அமைக்கும் கூட்டணிக்கு பின்னால் உள்ள பேரம் மக்களுக்கும் நன்றாக தெரியும். பேரம் பற்றி மக்களுக்கு கவலையில்லை. அவர்களுக்கு தேவை தாங்கள் நினைப்பது நடக்க வேண்டும். அதுவே அவர்களது கவலை. அது நடக்காதபோது அவர்கள் யாராகயிருந்தாலும் தூக்கிவீசிவிடுவார்கள்.

மதிமுக, பாமக வரிசையில் தேமுதிக இணைந்துள்ளது.................