செவ்வாய், ஜனவரி 20, 2015

ஆளுக்கு ஏற்றாற்போல் நீதி. - நியாயமா ? நீதிமன்றம்மே நியாயம்மா ?


நீதி தேவதையின் கண்கள் கறுப்பு துணியால் கட்டப்பட்டுயிருக்க காரணம், நீதியின் முன்னால் ஏழை, பணக்காரன், அதிகாரத்தில் இருப்பவன் என்ற பாகுபாடு இருக்ககூடாது. நீதி அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் என்பதாலே நீதி தேவதையின் கண்கள் கறுப்பு துணியால் கட்டப்பட்டுள்ளன என்பார்கள். நீதிதேவதையின் கண்கள் கறுப்பு துணியால் கட்டினால் நீதி சரிசமமாய் வழங்கப்பட்டுவிடுமா என்பதை யாரும் கேட்பதில்லை. நீதியை வழங்குவது நீதிதேவதையல்ல. சட்டம் படித்து தேர்வு எழுதிவிட்டு வந்த நீதிபதிகள். ஆசை, பேராசை, மனஉறுதியில்லாத பல நீதிபதிகள் நீதிமன்றத்தில் உள்ளனர். அவர்களின் கண்களை கட்டினால் நீதி தழைக்கும் என்பது என் போன்ற பலரின் கருத்து.

சரி விவகாரத்துக்கு வருவோம்.

இந்தியாவின் பிரபலமான வழக்குகளில் ஒன்று முன்னால் முதல்வர் ஜெயலலிதா அதிகாரத்தை பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்து குவித்த வழக்கு. அந்த வழக்கு தமிழகத்தில் சரியாக நடக்கவில்லை, சாட்சிகள் மிரட்டப்படுகிறார்கள் என திமுக பொது செயலாளர் அன்பழகன் உச்சநீதிமன்றம் செல்ல வழக்கு கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டு பெங்களுரூவில் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு நீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீண்ட காலம் விசாரிக்கப்பட்டு இறுதியில் நீதிபதி மைக்கல் டி குன்ஹா, ஜெ, சசிகலா உட்பட 4 பேர் ஊழல் செய்தது ஆவணங்கள் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டுள்ளதால் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு, நான்காண்டு சிறை தண்டனை, 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். முதல்வர் பதவியில் இருந்த ஜெவின் பதவி பறிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனு கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நீதிபதி குமாரசாமி முன் நடந்து வருகிறது. இதில் அரசு சார்பில் பவானிசிங், குற்றவாளிகள் சார்பில் பிரபல வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடுகிறார்கள்.

இந்த வழக்கில் தங்களை அரசு தரப்புக்கு உதவியாக இருக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மனுதாக்கல் செய்கிறார். நீ யார் மனு தாக்கல் செய்ய, நீதிமன்றத்தை அரசியல் கூடமாக மாற்றாதீர்கள், பவானிசிங் சட்டம் அறிந்தவர், அவர் குற்றவாளிக்கு ஆதரவாக இருக்கமாட்டார், அவருக்கு தெரியாத சட்டம் அன்பழகனுக்கு தெரியும்மா என பாய்ந்து பிராண்டுகிறார்கள் சட்டம் அறிந்த மாண்புமிகு நீதிபதிகள். அவர்கள் கேட்பது தவறில்லை. கேள்வி கேட்கத்தான் அவர்கள் அமர்ந்துள்ளார்கள்.

ஜெ மீதான சொத்து குவிப்பு பற்றியும், தமிழக அரசியல் பற்றியும், ஜெயலலிதா, சசிகலா பற்றியும் அறியாமல் கேள்வி கேட்கிறார்கள் என்பதாலே இந்த கட்டுரை.

மாண்புமிகு நீதிபதி(கள்) அவர்களே,

ஓன்று, இரண்டல்ல மொத்தமாக 19 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்ட வழக்கு இந்த வழக்கு. 1991-1996 ஆட்சி காலத்தில் ஜெ முதல்வராக இருக்கும்போதே கவர்னரால் ஊழல் வழக்கு பதிவு செய்து விசாரிக்கலாம் என அனுமதி வழங்கப்பட்ட வழக்கு. அதன்பின்பே தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையால் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற வழிகாட்டுதல்படி விசாரிக்கப்பட்டது. 96ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்தது. ஜெ மீதான வழக்கு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தனிநீதிமன்றம் அமைத்து விசாரிக்க தொடங்கினார்கள். 2001ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த ஜெ, இந்த வழக்கை நீர்த்து போக வைக்க முயன்றார். அரசு சாட்சிகள் பல்டியடித்தன, அரசு வழக்கறிஞர் குற்றம்சாட்டப்பட்டவருக்கு சாதகமாக வாதங்களை எடுத்து வைத்தார். தமிழகம்மே வேடிக்கை பார்த்தது. அப்போது சட்டமன்ற எதிர்கட்சி தலைவராக இருந்த திமுக பொதுசெயலாளர் அன்பழகன், உச்சநீதிமன்றம் சென்று மனுதாக்கல் செய்தார். அதில், ஜெயலலிதா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு தனி நீதிமன்றத்தில் தமிழகத்தில் நடந்து வருகிறது. இப்போது தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவிக்கு வந்துள்ளார். இவரின் கீழ்வுள்ள லஞ்ச ஒழிப்புத்துறை சரியாக செயல்படவில்லை. குற்றவாளிக்கு சாதகமாக செயல்படுகிறது, சாட்சிகள் மிரட்டப்படுகிறார்கள் என ஆதாரங்களோடு முறையிட்டார். அதன்பின் இந்த வழக்கு கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டன. உச்சநீதிமன்ற கண்காணிப்பின் கீழ் இந்த வழக்கு இன்று வரை நடக்கிறது.


கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டு தனிநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது பலப்பல பொய்களை ஜெயலலிதா தரப்பிலான வழக்கறிஞர்கள் எடுத்து வைத்தார்கள். உயர்நீதிமன்றமும், கர்நாடகா அரசும் அரசு வழக்கறிஞரை நியமித்தார்கள். அவர்களும் சில நிர்பந்தங்களால் ஜெ தரப்புக்கு சாதகமாக இருந்தார்கள். அதன்பின்பே அன்பழகன் மீண்டும் உச்சநீதிமன்றம் சென்று, அரசு வழக்கறிஞர்க்கு உதவியாக தன்னை நியமிக்க வேண்டும் என உத்தரவு பெற்று தன்னை வழக்கில் இணைத்துக்கொண்டார். சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு வாசித்து முடிக்கப்பட்டது. மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடக்கிறது. இதில் அரசு தரப்புக்கு உதவியாக தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும் என அன்பழகன் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது.

அரசு வழக்கறிஞர் பவானிசிங் தெரியாத சட்டமா என நீதிபதி கேள்வி கேட்கிறார். அவரின் சட்ட அறிவை பற்றி அன்பழகன் தரப்பு புகார் சொல்லவில்லை. அவரின் நியமனம் தவறானது என்கிறது.

கர்நாடகா அரசு தரப்பு, மேல்முறையீட்டில் அரசு வழக்கறிஞராக ஆஜராக பவானிசிங்கை நாங்கள் நியமிக்கவில்லை என்கிறது. என்னை நியமித்தது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை என்கிறார் பவானிசிங். தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அந்த அதிகாரம் இல்லை. அரசு வழக்கறிஞரை கர்நாடகா அரசு தரும் பட்டியல்படி கர்நாடகா உயர்நீதிமன்றம் நியமிக்கும் என்கிறது உச்சநீதிமன்ற உத்தரவு. இதைதான் அன்பழகன் சார்பிலான வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இதை ஏற்க கர்நாடக உயர்நீதிமன்றம் மறுக்கிறது. பவானிசிங்குக்கு ஆதரவாக நிற்கிறது. பவானிசிங் எப்படிப்பட்ட அரசு வழக்கறிஞர் என்பது அவர் கீழ்கோர்ட்டில் அரசு வழக்கறிஞராக ஆஜரானபோதே “தெரிந்துவிட்டது“.


கடந்த காலத்தில் கர்நாடகாவில் பி.ஜே.பி அரசு இருந்தபோது ஜெ வழக்கு எதிராக வாதாடிய அரசு வழக்கறிஞருக்கு எப்படியெல்லம் கர்நாடகா அரசும், தமிழக அதிகார மையம் தொல்லை கொடுத்தது என்பதை முன்னால் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா தனது சமீபத்திய நூலில் விரிவாக பதிவு செய்துள்ளார்.

ஜெ மற்றும் அந்த குரூப்புக்காக வாதாடிய வழக்கறிஞர்கள் பலப்பல பொய்களை நீதிமன்றத்தில் எடுத்து சொன்னபோது அரசு வழக்கறிஞர் பவானிசிங் அதை மறுக்காமல் அமைதிகாத்தபோது அரசு வழக்கறிஞர்க்கு உதவிக்கு சென்ற அன்பழகன் வழக்கறிஞர்கள் தான் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் சொல்வது பொய் என்பதை நீதிமன்றத்தில் அடிக்கடி ஆவணங்களோடு நிருபித்தனர்.

இப்போதும் மேல்முறையிட்டு மனு விசாரணையின் போது குற்றவாளிகள் தரப்பில் இருந்த நீதிமன்றத்துக்கு தவறான தகவல்களை மூத்த வழக்கறிஞர்கள் வாதத்தின் போது வைக்கிறார்கள் அதை மவுனமாக கேட்டுக்கொள்கிறார் அரசு வழக்கறிஞர். இதையெல்லாம் பார்த்துவிட்டு தான், திமுக பொது செயலாளர் அன்பழகன் தன்னை அரசு வழக்கறிஞர்க்கு  உதவியாக இருக்க அனுமதிக்க வேண்டும் என கேட்கிறார். அதற்கு சட்டத்தில் இடமில்லை என்கிறார்கள் அனுமதி தர வேண்டியவர்கள்.

இப்போது குற்றவாளியாகவும், முன்பு குற்றம்சாட்டப்பட்டவராகவும் இருந்த ஜெயலலிதா, எனக்கு இவர்தான் நீதிபதியாக இருக்க வேண்டும், இவர் தான் அரசு வழக்கறிஞராக இருக்க வேண்டும் என கேட்டு வித்தியாசமாக மனுதாக்கல் செய்தபோது அதை ஏற்றுக்கொண்டு செயல்பட்ட உயர்-உச்சநீதிமன்றங்கள் இப்போது அன்பழகன் அரசு வழக்கறிஞருக்கு உதவியாக இருக்க வேண்டும் என்றுதான் கேட்கிறார் இதற்கு ஏன் மறுக்க வேண்டும். அரசு வழக்கறிஞர் சரியாக செயல்படுகிறாறா என்பதை நீதிமன்றம் கண்காணிக்கவில்லை. அரசு வழக்கறிஞர் சரியாக செயல்பட்டால் அன்பழகன் இந்த வழக்குக்குள் மீண்டும் வருவதற்க்கே வாய்ப்பில்லை. அரசு வழக்கறிஞரின் பணியை நீதிமன்றம் கவனிக்காததால் தான் அதனை திமுக தலைமை கையில் எடுத்தது.

இந்த வழக்கை அரசியலாக பார்க்காதீர்கள் என்கிறார்கள் நீதிபதிகள். ஒன்றை மறந்துவிட்டார்கள் என நினைக்கிறேன். இங்கு எல்லாம்மே அரசியல் தான். குடிக்கும் தண்ணீரில் இருந்து சொத்தால் போடப்படும் மாலை வரை அரசியல் தான். நீதிமன்றத்தில் அரசியல் இல்லை என நீதிபதிகள் வேண்டுமானால் நீதிமன்றத்தில் சொல்லிக்கொள்ளலாம். மற்றப்படி யாரும் சொல்லமாட்டார்கள்.

ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற முன்னால் முதல்வர்களான லாலுபிரசாத் யாதவ், சௌத்தாலா போன்றவர்கள் பல மாதங்கள் சிறையில் இருந்தபின்பே வெளியில் வந்தார்கள். ஆனால் அதிகபட்ச அபராதம், நான்காண்டுகள் தண்டனை பெற்ற ஜெ பிணையில் வெகு சுலபமாக பிணையில் வரமுடிந்தது. அதில் அரசியல் இல்லையா?. இல்லையென யாரால் உறுதி தர முடியும். பிணை வழங்கியதில் நீதித்துறையின் பல விதிகள் மீறப்பட்டதாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளன உச்சநீதிமன்றத்தில்.

இந்த வழக்கு நேர்மையாக நடைபெற வேண்டும்மென்றால் மூன்றாம் தரப்பின் கண்காணிப்பு தேவை. அந்த கண்காணிப்பு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சியின் கண்காணிப்பாக இருக்க வேண்டும். அப்போது தான் உண்மையை மக்களும் அறிந்துக்கொள்வார்கள்.

உச்சநீதிமன்ற கண்காணிப்பின் கீழ் இருக்க்கூடாதா என கேட்கலாம். இருக்ககூடாது. உச்சநீதிமன்றம் அதிகாரம் இருப்பவர்கள், அதிகாரம் இல்லாதவர்கள், பண பலம் இருப்பவர்கள், இல்லாதவர்கள் என பட்டியல் தயாரித்து வழக்கை பார்க்கிறதோ என சந்தேகம் வருகிறது. ( ஜெவுக்கு பிணை வழங்கியபோது பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூட வேத்துவிட்டு று மாதிரி கேள்வி கேட்டுயிருந்தார்.) கொலை குற்றம் சாட்டப்பட்ட ஜெயேந்திரர்க்காக இரவில் உச்சநீதிமன்றம் திறக்கப்படுகிறது, எஸ் பேண்ட் ஊழல் வழக்குகள் ஊத்தி மூடப்படுகிறது. வெகு வேகமாக ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஜெவுக்காக பிணை வழங்கப்படுகிறது. இவைகளில் வேகம், அக்கறை காட்டும் உச்சநீதிமன்றம் ஆண்டாண்டு காலமாக சாதி துவேஷத்துடன் கோயில் கருவரைக்குள் தாங்கள் மட்டுமே நுழைய முடியும் என சாதியை காட்டி மக்களை ஒதுக்கி வைத்துள்ளனர் பார்ப்பனர். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியின் போது நிறைவேற்றப்பட்டது. நூற்றுக்கும் அதிகமான பிராமணர் அல்லாத பிற சாதி இளைஞர்கள் வேதம் கற்றுக்கொண்டு கோயில் கருவரைக்குள் நுழைய முயன்றபோது அடித்து துரத்தினர். இந்த சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கிய உச்சந்தலை குடுமி கூட்டம் அந்த வழக்கு விசாரணைக்கு வர விடாமல் கடந்த 7 ஆண்டுகளாக தடுத்து வருகிறது. இதற்காக எத்தனை எத்தனை போராட்டம் நடத்தப்பட்டது. இந்த வழக்குக்காக சிறு துரும்பையாவுது உச்சநீதிமன்றம் கிள்ளிப்போட்டது உண்டா ?.

சாமான்ய மக்களுக்கான இந்த வழக்கில் குப்புற படுத்துக்கிடக்கும் உச்சநீதிமன்றம் ஊழல் வழக்கை விசாரிக்க வேகம் காட்டுவது எதனால் ?. நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான வழக்குகள் நம்பர் கூட ஆகாமல் வரிசையில் உச்சநீதிமன்ற பதிவாளரிடம் காத்துக்கிடக்கும் நிலையில் ஜெ வழக்குக்கு அதிமுக்கியத்துவம் தருவதில் துவங்குகிறது நீதி ஏழைக்கு ஒருமாதிரியாகவும், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு ஒரு மாதிரியாக வழங்கப்படுகிறது என்ற எண்ணம்.

ஏழைகள் நம்புவது நீதியை தான். அதில் பாகுபாடு வருவது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. உயர் பொறுப்பில் இருப்பவர்கள் தவறு செய்யக்கூடாது. அவர்கள் தவறு செய்தால் தனக்கு கீழ் இருப்பவர்களை நிர்வாகம் செய்ய முடியாது என மைக்கல் டி குன்ஹா தன் தீர்ப்பில் ஒரு இடத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். அதையேத்தான் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.


நன்றி வாழ்க ஜனநாயகம்……….

வியாழன், ஜனவரி 15, 2015

உங்களை யாரும் பொங்கல் கொண்டாட சொல்லவில்லை..............




இந்த பதிவு எழுதிய நேரத்தில், தை பொங்கல் பொங்கிக்கொண்டு இருந்தது. செய்தித்தாள்களில் பொங்கல் பற்றிய சிறப்பு கட்டுரைகள், தொலைக்காட்சிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள், திரையரங்களில் புதிய திரைப்படங்கள் என களைக்கட்டியுள்ளது. இந்த ஆண்டு 5 நாள் பொங்கல் விடுமுறைக்காக விடுமுறை என்பதால் சொந்தவூருக்கு தன் பிறந்த மண்ணை விட்டு பிழைப்புக்காக இடம் பெயர்ந்து வாழ்பவர்கள் பிறந்த மண்ணை நோக்கி சென்றுக்கொண்டு இருந்தார்கள்.

விவசாயிகளின் பண்டிகை பொங்கல் என்கிறோம். நிச்சயமாக இது விவசாயிகளின் பண்டிகை மட்டுமல்ல வயிற்றுக்கு சாப்பிடும் ஜீவராசிகளின் பண்டிகை. எந்த ஜீவனும் சாப்பிடாமல் இருப்பதில்லை. உயிர் வாழ உண்டு தான் ஆக வேண்டும். ஆக இந்த பண்டிகை அத்தனை ஜீவராசிகளின் பண்டிகை தான்.

விவசாயிகளின் பண்டிகை என குறிப்பிடுவதன் காரணம், நாம் உண்ணும் உணவை உற்பத்தி செய்து தருபவன் உழவன். அதனால் அவன் பண்டிகை என்கிறோம். அந்த உழவன் இந்த மண்ணில் வாழும் ஜீவராசிகள் பசியோடு இருக்ககூடாது என்பதற்காக உணவு பொருட்களை உற்பத்தி செய்கிறான். அவன் அதில் தனக்கு உதவி செய்யும் இயற்கையான காற்று, சூரியன், மாடு போன்றவற்றை வணங்க பொங்கல் கொண்டாட்டமாக கொண்டாடுகிறான். மற்றவர்களை விட அவனுக்கு தான் சிறப்பு. இந்த உலகத்தில் அவன் தான் போற்றக்கூடியவன்.

ஆனால் நாம் போற்றுகிறோம்மா ?. என கேட்டால் நிச்சயமாக இல்லை.......... இல்லை....... இல்லவேயில்லை.

தீபாவளிக்கு கடைகளில் விற்கப்படும் பட்டாசுகளை விலை கேட்காமல் வாங்கி தருகிறீர்கள்.............

குழந்தைகளுக்கு வேட்டி கட்ட ஆசைப்பட்டு 200 ரூபா மதிப்பு கூட பெறமுடியாத குழந்தைகளுக்கான வேட்டியை 5 ஆயிரம் வரை விலை வைத்து விற்கிறார்கள் ஏன் இவ்வளவு விலை என கேட்காமல் வாங்கி தருகிறீர்கள்........

மால்களுக்கு செல்லும் அழகு பதுமைகள் அங்கு விற்கும் மேக்கப் சாதனங்களை சொன்ன விலைக்கு வாங்கி பூசிக்கொள்கிறீர்கள்...........

கே.எப்.சி சிக்கன் ஷாப்கள், பீட்சா கடைகள், கோக், பெப்சி குளிர்பான கடைகளில் சொன்ன விலைக்கு பேரம் பேசாமல் வாங்கும் கோமகன்கள்...........

பத்து பைசாவுக்கு புரியோஜனம்மில்லாத திரைப்படங்களுக்கு ஐநூறு, ஆயிரம் என தந்து டிக்கட் வாங்கி படம் பார்க்கும் பரதேசிகள்

விவசாயி பொங்கலுக்காக விற்கும் கரும்பு, மஞ்சல் கொம்பு, பழங்களுக்கு  போன்றவற்றுக்கு இன்னா இவ்வளவு விலை என பேரம் பேசினார்கள் இந்த நகரவாசிகள். 


அவன் என்ன அம்பானி போல் வாழவா பொருட்களை விற்கிறான். தன் வயித்து பசியை போக்கவே தான் உற்பத்தி செய்த பொருட்களை அவன் விற்கிறான். அவன் அவன் உற்பத்தி செய்த பொருளுக்கு அந்த முதலாளியே விலை வைக்கும் போது உழவன் உற்பத்தி செய்த பொருள் விற்பனைக்கு வரும்போது மட்டும் எவன் எவனோ விலை வைக்கிறான்.

விவசாயி உழவை நிறுத்திவிட்டால் பேரம் பேசும் நீங்கள் உங்கள் வயிற்று பசிக்கு என்ன செய்வீர்கள் என கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். இன்னா இவ்வளவு ரேட் சொல்றிங்க என பேரம் பேசி உழவன் மனசை காயப்படுத்தாதீர்கள். அவன் கொள்ளை விலை வைக்கவில்லை என புரிந்துக்கொள்ளுங்கள்.

ஆயிரங்களில் அசால்டாக செலவு செய்யும் நீங்கள் உங்களுக்கு சோறு போடும் விவசாயத்தை பெருமைப்படுத்த பொங்கல் பண்டிகையை கொண்டாடுகிறிர்கள். அதற்கு செலவு செய்ய பேரம் பேசுபவர்கள் எதற்காக பொங்கல் கொண்டாட வேண்டும். நீங்கள் கொண்டாட வேண்டாம். அதுவே உழவனுக்கு நீங்கள் செய்யும் மரியாதையாக இருக்கும்.  

புதன், ஜனவரி 07, 2015

துரத்தப்படும் இளைஞர்கள். – வாய் மூடி கிடக்கும் அரசுகள்...........



தொழிற்சங்கங்களை குறை கூறி வருபவர்கள் நாட்டில் அதிகரித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களுக்குள் முதலாளித்துவ கொள்கை மனதில் புகுந்துள்ளது. மேற்கத்திய நாடுகள் வளர்வதற்க்கு காரணம் அங்கு தொழிற்சங்கம் இல்லை என குதிப்பார்கள். அவர்களுக்கு தகவல் தெரியாமல் இருக்கிறார்கள் என புரிந்துக்கொள்ள முடிகிறது. மேற்கத்திய நாடுகளிலும் தொழிற்சங்கங்கள் உண்டு, தொழிற்சங்கங்களை விட தொழிற்சங்க விதிகள் மிகமிக கடுமையானவை. நம்மூரைப்போல காமாசோமாவென்று இல்லை என்பதை புரிந்துக்கொள்ளாதவர்கள்.

முதலாளித்துவ மனநிலையில் உள்ளவர்களுக்கு இனி வலிக்க தொடங்கும். காரணம், அவர்கள் வீட்டில் அல்லது அவர்களது நெருங்கியவர்கள் வீட்டு செல்லங்கள் அதாவது இளைஞரோ இளைஞியோ ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றுவார்கள். அப்படி பணியாற்றும் லட்சக்கணக்கான ஐ.டி ஊழியர்களில் அவர்களும் ஒருவராக இருக்கலாம். லட்ச கணக்கானவர்களில் ஆயிரக்கணக்கானவர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது பெரும் முன்னணி ஐ.டி கம்பெனிகள். யாரும் எந்த கேள்வியும் கேட்க முடியாது ?, வெளியேற்றப்பட்ட ஊழியர்களின் ஆக்சஸ் கார்டு செயலிக்க செய்யப்பட்டால் என்னை ஏன் நீக்கினாய் என கேட்க கூட அந்த ஊழியரால் உள்ளே செல்ல முடியாது.

அதிக சம்பளம் என்ற மாயையை தவிர ஐ.டி நிறுவனங்களில் வேறு எந்த சலுகையும் கிடையாது. இந்த அதிக சம்பளத்தை நினைத்து அவர்கள் நீட்டும் தாள்களில் எல்லாம் கையெழுத்து போட்டுவிட்டு பணியில் சேர்பவர்கள் நினைத்த நேரத்தில் லீவு எடுக்க முடியாது. விசேஷத்துக்கு ஊருக்கு செல்ல முடியாது, இரவு பகல் என மாறி மாறி வரும் பணிச்சுமை என சொல்லிக்கொண்டே செல்லாம். நிர்வாகத்தை எதிர்த்து சின்ன கேள்வி கூட கேட்க முடியாது. கேட்க நினைத்தால் கூட தூக்கி வெளியே வீசிவிடுவார்கள். அங்கு திறமையாளர்களாக இருந்தாலும் வேலையில் மட்டும்மே அந்த திறமையை காட்ட வேண்டும். அதை தவிர்த்து கூட்டு சேர்ப்பேன், சங்கம் அமைப்பேன், கொடி பிடிப்பேன்,  சட்டம் பேசுவேன் என்றால் தூக்கி வீசிவிட்டு தான் மறுவேலை செய்வார்கள். சம்மந்தப்பட்ட நபர் பின் தலைகீழாக நடந்து சென்றாலும் வேறு எந்த ஐ.டி நிறுவனத்திலும் வேலை கிடைக்கதபடி செய்துவிடுவார்கள். இதுதான் முதலாளித்துவம்.

தொழிற்சங்கம் அமைத்தால் வேலை செய்வதில்லை, எதற்கெடுத்தாலும் போராட்டம், எவ்வளவு கூலி தந்தாலும் போதவில்லை என கொடி பிடிக்கிறார்கள், சட்டம் பேசுகிறார்கள் என்பது தொழிற்சங்கத்தை எதிர்க்கும் முதலாளிகளுக்கும், முதலாளித்துவ மனோபாவத்துடன் இருப்பவர்களின் குரல்.

தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு இல்லை என்பதால் தான் சங்கம் அமைக்கிறார்கள். உழைத்த உழைப்புக்கு உரிய கூலி தரவில்லை என்பதால் தான் கொடி பிடிக்கிறார்கள். நிர்வாகம் எதிர்க்கும் போதுதான் சட்டம் பேசுகிறார்கள். உரிய கூலி கொடுத்தால் அவன் ஏன் கேள்வி கேட்க போகிறான், வேலை செய்யும் இடத்தில் பாதுகாப்பு இருந்தால் அவன் ஏன் வேலை நிறுத்தம் செய்யப்போகிறான். எந்த தொழிற்சங்கமும், தொழிலாளியும் திடீரென போராட்டத்தில் குதித்துவிடுவதில்லை. கோரிக்கை, கெஞ்சல் என சென்று கடைசியாக தான் போராட்டத்தில் இறங்குகிறார்கள். இறங்குகிறார்கள் என்பதை விட தள்ளப்படுகிறார்கள் என்பதே எதார்த்தம்.

ஐ.டி நிறுவனங்கள் பெரும்பாலும் வெளிநாட்டை சேர்ந்தது. உள்நாட்டு நிறுவனங்களும் உண்டு. கோடி கோடியாய் லாபம் சம்பாதிக்கும் நிறுவனங்கள் தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியனுக்கு சம்பளத்துக்கு அடுத்தாற்போல் பிச்சை தான் போடுகிறது. நியாயம் கேட்ககூடாது என்பதே ஐ.டி நிறுவனத்தின் விதி. கேட்டால் அடிஉதை கூட கிடைக்கும்.

இந்த ஐ.டி நிறுவனங்கள் மட்டுமல்ல வெளிநாட்டு நிறுவனங்களை அரசாங்கங்கள் கூட கேள்வி கேட்பதில்லை. கேட்ககூடாது என்பதில்லை கேள்வி கேட்கலாம். ஏன் எனில் இந்த நிறுவனங்கள் அரசிடம் இருந்து பெறும் வரி சலுகைகள் உட்பட பிற சலுகைகளை பட்டியலிட்டால் நீங்கள் கூட கந்து வட்டிக்கு கோடிகளில் கடன் வாங்கி ஒரு நிறுவனத்தை தொடங்கிவிடுவீர்கள். அத்தனை அத்தனை சலுகைகள் தரப்படுகின்றன. இத்தனை சலுகைகள் அரசு தருவது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது என்பதால் தான். ஆனால் அதே அரசாங்கங்கள், அதே இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோகிறது என்றால் கண்டுக்கொள்வதேயில்லை. காரணம், நிறுவனங்கள் ஒப்பந்தம் போடும்போதே தொழிற்சங்கம் அமைக்க அனுமதி தரமாட்டோம் என உத்திரவாதம் வாங்கி விடுகிறது தனியார் நிறுவனங்கள். 


இன்று நோக்கியா, பாக்ஸ்கான் நிறுவனங்கள் தமிழகத்தில் மூடப்பட்டு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். பெங்களுரூவில் பல பெரும் ஐ.டி நிறுவனங்கள் ஆட்குறைப்பை செய்ய அறிவிப்பு செய்துள்ளன. சில நிறுவனங்கள் நடைமுறையும் படுத்திவிட்டன. இந்த இரண்டு மாநிலத்தில் மட்டும் சுமார் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளையோர்கள் சமீபத்தில் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இது நேரடி வேலை வாய்ப்பு கணக்காகும். மறைமுக வேலை வாய்ப்பு இந்த கணக்கில் இல்லை. கணக்கிட்டால் இரண்டு மடங்கு அதிகரிக்கும்.

இதில் ஐ.டி நிறுவனங்கள் 30 வயது தாண்டியோரை மட்டும் வேலையில் இருந்து துரத்துகின்றன. துரத்திவிட்டு இப்போது வேலையில்லாமல் உள்ள 25 வயதுக்கு உட்பட்டோரை வேலையில் அமர்த்த திட்டம் தீட்டுகிறது. 30 வயது தாண்டியோர் நிறுவனத்தில் சீனியராக இருப்பர். அவர்களுக்கு அதிக சம்பளம் தர வேண்டும். இதனால் கம்பெனிகளின் லாபம் குறைகிறது. லாபத்தை இன்னும் அதிகரிக்க புதியவர்களை எடுத்தால் குறைந்த சம்பளம் என்பதால் இந்த குறுக்கு வழியை பின்பற்றுகின்றன. இந்த 30 வயது தாண்டியோர் திருமணமாகி, குடும்பம், கடன் என வாழ்பவர்கள். இவர்களது பிள்ளைகள் இரண்டாவது, நான்காவது என படித்து வருகிறார்கள். இந்த நேரத்தில் உனக்கு வேலையில்லை போ என துரத்தினால் அவர்களின் வாழ்க்கை என்னவாவுது. இதுவே ஒரு தொழிற்சங்கம் இருந்தால் இப்படி நடக்குமா ?.

இதில் படித்துவிட்டு ஏதாவது வேலை கிடைத்தால் போதும்மென அவர்கள் நீட்டும் இடத்தில் கையெழுத்துபோட்டுவிட்டு சேர்ந்துவிடுகிறார்கள். எதிர்காலம் என்ன என்பது பற்றி யோசிப்பதேயில்லை. இளைஞர்களை குற்றம் சாட்டவும் முடியாது. குடும்ப சூழ்நிலை ஏதாவது வேலை கிடைத்தால் போதும்மென போய்விடுகிறார்கள். அரசாகங்கள் தான் இதனை முறைப்படுத்த வேண்டும். ஆனால் அதனை செய்வதில்லை.

கேள்வி கேட்டால் கம்பெனிக்காரன் அடிக்கிறான், போராடினால் அரசாங்கம் அடிக்கிறது. இதுதான் இந்திய இளைஞனின் வாழ்க்கையாக உள்ளது. இந்தநிலை இப்போது மாறாது. ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை ஆட்சியாளர்கள் மாறினால் வாழ்க்கை மாறிவிடாது. மன்மோகன் போய் மோடி வந்தார் என்ன மாறிவிட்டது.

அடிப்படையே மாற வேண்டும். அந்த மாற்றம் இருந்தால் மட்டுமே மாற்றமடையும்...............