புதன், ஜனவரி 07, 2015

துரத்தப்படும் இளைஞர்கள். – வாய் மூடி கிடக்கும் அரசுகள்...........



தொழிற்சங்கங்களை குறை கூறி வருபவர்கள் நாட்டில் அதிகரித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களுக்குள் முதலாளித்துவ கொள்கை மனதில் புகுந்துள்ளது. மேற்கத்திய நாடுகள் வளர்வதற்க்கு காரணம் அங்கு தொழிற்சங்கம் இல்லை என குதிப்பார்கள். அவர்களுக்கு தகவல் தெரியாமல் இருக்கிறார்கள் என புரிந்துக்கொள்ள முடிகிறது. மேற்கத்திய நாடுகளிலும் தொழிற்சங்கங்கள் உண்டு, தொழிற்சங்கங்களை விட தொழிற்சங்க விதிகள் மிகமிக கடுமையானவை. நம்மூரைப்போல காமாசோமாவென்று இல்லை என்பதை புரிந்துக்கொள்ளாதவர்கள்.

முதலாளித்துவ மனநிலையில் உள்ளவர்களுக்கு இனி வலிக்க தொடங்கும். காரணம், அவர்கள் வீட்டில் அல்லது அவர்களது நெருங்கியவர்கள் வீட்டு செல்லங்கள் அதாவது இளைஞரோ இளைஞியோ ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றுவார்கள். அப்படி பணியாற்றும் லட்சக்கணக்கான ஐ.டி ஊழியர்களில் அவர்களும் ஒருவராக இருக்கலாம். லட்ச கணக்கானவர்களில் ஆயிரக்கணக்கானவர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது பெரும் முன்னணி ஐ.டி கம்பெனிகள். யாரும் எந்த கேள்வியும் கேட்க முடியாது ?, வெளியேற்றப்பட்ட ஊழியர்களின் ஆக்சஸ் கார்டு செயலிக்க செய்யப்பட்டால் என்னை ஏன் நீக்கினாய் என கேட்க கூட அந்த ஊழியரால் உள்ளே செல்ல முடியாது.

அதிக சம்பளம் என்ற மாயையை தவிர ஐ.டி நிறுவனங்களில் வேறு எந்த சலுகையும் கிடையாது. இந்த அதிக சம்பளத்தை நினைத்து அவர்கள் நீட்டும் தாள்களில் எல்லாம் கையெழுத்து போட்டுவிட்டு பணியில் சேர்பவர்கள் நினைத்த நேரத்தில் லீவு எடுக்க முடியாது. விசேஷத்துக்கு ஊருக்கு செல்ல முடியாது, இரவு பகல் என மாறி மாறி வரும் பணிச்சுமை என சொல்லிக்கொண்டே செல்லாம். நிர்வாகத்தை எதிர்த்து சின்ன கேள்வி கூட கேட்க முடியாது. கேட்க நினைத்தால் கூட தூக்கி வெளியே வீசிவிடுவார்கள். அங்கு திறமையாளர்களாக இருந்தாலும் வேலையில் மட்டும்மே அந்த திறமையை காட்ட வேண்டும். அதை தவிர்த்து கூட்டு சேர்ப்பேன், சங்கம் அமைப்பேன், கொடி பிடிப்பேன்,  சட்டம் பேசுவேன் என்றால் தூக்கி வீசிவிட்டு தான் மறுவேலை செய்வார்கள். சம்மந்தப்பட்ட நபர் பின் தலைகீழாக நடந்து சென்றாலும் வேறு எந்த ஐ.டி நிறுவனத்திலும் வேலை கிடைக்கதபடி செய்துவிடுவார்கள். இதுதான் முதலாளித்துவம்.

தொழிற்சங்கம் அமைத்தால் வேலை செய்வதில்லை, எதற்கெடுத்தாலும் போராட்டம், எவ்வளவு கூலி தந்தாலும் போதவில்லை என கொடி பிடிக்கிறார்கள், சட்டம் பேசுகிறார்கள் என்பது தொழிற்சங்கத்தை எதிர்க்கும் முதலாளிகளுக்கும், முதலாளித்துவ மனோபாவத்துடன் இருப்பவர்களின் குரல்.

தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு இல்லை என்பதால் தான் சங்கம் அமைக்கிறார்கள். உழைத்த உழைப்புக்கு உரிய கூலி தரவில்லை என்பதால் தான் கொடி பிடிக்கிறார்கள். நிர்வாகம் எதிர்க்கும் போதுதான் சட்டம் பேசுகிறார்கள். உரிய கூலி கொடுத்தால் அவன் ஏன் கேள்வி கேட்க போகிறான், வேலை செய்யும் இடத்தில் பாதுகாப்பு இருந்தால் அவன் ஏன் வேலை நிறுத்தம் செய்யப்போகிறான். எந்த தொழிற்சங்கமும், தொழிலாளியும் திடீரென போராட்டத்தில் குதித்துவிடுவதில்லை. கோரிக்கை, கெஞ்சல் என சென்று கடைசியாக தான் போராட்டத்தில் இறங்குகிறார்கள். இறங்குகிறார்கள் என்பதை விட தள்ளப்படுகிறார்கள் என்பதே எதார்த்தம்.

ஐ.டி நிறுவனங்கள் பெரும்பாலும் வெளிநாட்டை சேர்ந்தது. உள்நாட்டு நிறுவனங்களும் உண்டு. கோடி கோடியாய் லாபம் சம்பாதிக்கும் நிறுவனங்கள் தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியனுக்கு சம்பளத்துக்கு அடுத்தாற்போல் பிச்சை தான் போடுகிறது. நியாயம் கேட்ககூடாது என்பதே ஐ.டி நிறுவனத்தின் விதி. கேட்டால் அடிஉதை கூட கிடைக்கும்.

இந்த ஐ.டி நிறுவனங்கள் மட்டுமல்ல வெளிநாட்டு நிறுவனங்களை அரசாங்கங்கள் கூட கேள்வி கேட்பதில்லை. கேட்ககூடாது என்பதில்லை கேள்வி கேட்கலாம். ஏன் எனில் இந்த நிறுவனங்கள் அரசிடம் இருந்து பெறும் வரி சலுகைகள் உட்பட பிற சலுகைகளை பட்டியலிட்டால் நீங்கள் கூட கந்து வட்டிக்கு கோடிகளில் கடன் வாங்கி ஒரு நிறுவனத்தை தொடங்கிவிடுவீர்கள். அத்தனை அத்தனை சலுகைகள் தரப்படுகின்றன. இத்தனை சலுகைகள் அரசு தருவது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது என்பதால் தான். ஆனால் அதே அரசாங்கங்கள், அதே இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோகிறது என்றால் கண்டுக்கொள்வதேயில்லை. காரணம், நிறுவனங்கள் ஒப்பந்தம் போடும்போதே தொழிற்சங்கம் அமைக்க அனுமதி தரமாட்டோம் என உத்திரவாதம் வாங்கி விடுகிறது தனியார் நிறுவனங்கள். 


இன்று நோக்கியா, பாக்ஸ்கான் நிறுவனங்கள் தமிழகத்தில் மூடப்பட்டு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். பெங்களுரூவில் பல பெரும் ஐ.டி நிறுவனங்கள் ஆட்குறைப்பை செய்ய அறிவிப்பு செய்துள்ளன. சில நிறுவனங்கள் நடைமுறையும் படுத்திவிட்டன. இந்த இரண்டு மாநிலத்தில் மட்டும் சுமார் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளையோர்கள் சமீபத்தில் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இது நேரடி வேலை வாய்ப்பு கணக்காகும். மறைமுக வேலை வாய்ப்பு இந்த கணக்கில் இல்லை. கணக்கிட்டால் இரண்டு மடங்கு அதிகரிக்கும்.

இதில் ஐ.டி நிறுவனங்கள் 30 வயது தாண்டியோரை மட்டும் வேலையில் இருந்து துரத்துகின்றன. துரத்திவிட்டு இப்போது வேலையில்லாமல் உள்ள 25 வயதுக்கு உட்பட்டோரை வேலையில் அமர்த்த திட்டம் தீட்டுகிறது. 30 வயது தாண்டியோர் நிறுவனத்தில் சீனியராக இருப்பர். அவர்களுக்கு அதிக சம்பளம் தர வேண்டும். இதனால் கம்பெனிகளின் லாபம் குறைகிறது. லாபத்தை இன்னும் அதிகரிக்க புதியவர்களை எடுத்தால் குறைந்த சம்பளம் என்பதால் இந்த குறுக்கு வழியை பின்பற்றுகின்றன. இந்த 30 வயது தாண்டியோர் திருமணமாகி, குடும்பம், கடன் என வாழ்பவர்கள். இவர்களது பிள்ளைகள் இரண்டாவது, நான்காவது என படித்து வருகிறார்கள். இந்த நேரத்தில் உனக்கு வேலையில்லை போ என துரத்தினால் அவர்களின் வாழ்க்கை என்னவாவுது. இதுவே ஒரு தொழிற்சங்கம் இருந்தால் இப்படி நடக்குமா ?.

இதில் படித்துவிட்டு ஏதாவது வேலை கிடைத்தால் போதும்மென அவர்கள் நீட்டும் இடத்தில் கையெழுத்துபோட்டுவிட்டு சேர்ந்துவிடுகிறார்கள். எதிர்காலம் என்ன என்பது பற்றி யோசிப்பதேயில்லை. இளைஞர்களை குற்றம் சாட்டவும் முடியாது. குடும்ப சூழ்நிலை ஏதாவது வேலை கிடைத்தால் போதும்மென போய்விடுகிறார்கள். அரசாகங்கள் தான் இதனை முறைப்படுத்த வேண்டும். ஆனால் அதனை செய்வதில்லை.

கேள்வி கேட்டால் கம்பெனிக்காரன் அடிக்கிறான், போராடினால் அரசாங்கம் அடிக்கிறது. இதுதான் இந்திய இளைஞனின் வாழ்க்கையாக உள்ளது. இந்தநிலை இப்போது மாறாது. ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை ஆட்சியாளர்கள் மாறினால் வாழ்க்கை மாறிவிடாது. மன்மோகன் போய் மோடி வந்தார் என்ன மாறிவிட்டது.

அடிப்படையே மாற வேண்டும். அந்த மாற்றம் இருந்தால் மட்டுமே மாற்றமடையும்...............

1 கருத்து: