தி.மு.க ஆட்சி தூக்கியெறிய காரணம்மென்ன ?
2011 தமிழகத்தின் தேர்தல் களம். அரசியல் கட்சிகள், அரசியல் நோக்கர்கள், விமர்சகர்கள் கணிக்க முடியாததாக இருந்துவிட்டது. தமிழக அரசியல் களத்தில் மட்மல்ல இந்திய அரசியல் களத்தில் இந்த வெற்றி ஒரு திருப்பத்தை ஏற்படுத்தவுள்ளது. தமிழகத்தில் பல நல்ல திட்டங்கள் செய்து பல மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்த திமுகவை புறம் தள்ளியள்ளார்கள் மக்கள்.
ஏன், எதனால் இந்த நிலை?. விரிவாகவே ஆராய வேண்டிய தருணம்மிது.
விலைவாசி உயர்வு, திமுகவின் கி.செ முதல் மூத்த அமைச்சர்கள் வரை செய்த அராஜகம், ஊழல், ஆட்சியில், கட்சியில் குடும்ப ஆதிக்கம், தொழில்கள் கபாளிகரம், சினிமா துறை அழிப்பு, ஈழ போராட்டத்தில் துரோகிகளுடன் கை கோர்த்தது, மின்வெட்டு, சட்டம்-ஒழுங்கு சீரழிவு, நிர்வாகத்தில் தடுமாற்றம், கட்சியில் உள்ள நம்பிக்கை துரோகிகள் இவைகளை விட மக்களை மடையர்கள் என எண்ணியது இவைகள் தான் திமுகவை ஆட்சி கட்டிலை விட்டு இறக்க காரணங்கள் என 5 வரியில் சொல்லிவிடலாம். இவை எப்படியெல்லாம் மக்களின் மனங்களை ஆக்ரமித்தன என்பதை காண வேண்டும்.
விலைவாசி உயர்வு :
கால மாற்றத்தில் பொருட்களின் விலைகள் உயர்வது என்பது இயற்கை. ஆனால் தற்போதுயெல்லாம் செயற்கையாக விலைவாசிகள் உயர்த்தப்படுகின்றன. பக்கத்து மாநிலத்தில் சிமெண்ட் 160ருபாய்க்கு விற்கிறது. ஆனால் தமிழகத்தில் 170 ரூபாயாக இருந்தது. 3 மாத இடைவெளியில் 290 ரூபாய்க்கு உயர்ந்தது. இதை முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதியிடம் கொண்டு போனபோது எதிர்பார்த்ததை விட ஏற்றவில்லை என்றார். கிராமத்தில் கூரை வீட்டில் இருந்து கொஞ்சம் மெத்தை வீடு கட்டுபவன் கூட இதனால் அதிர்ந்து போனான் கட்டுமானங்கள் தடைபட்டபோது. தமிழக மக்கள் முகம் சுளித்தபோது சிமெண்ட் முதலாளிகளிடம் குறையுங்களேன் என கெஞ்சினாரே தவிர குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
இதேபோல் தான் அரிசி, பருப்பு முதல் தங்கம், தகரம் வரை எல்லா பொருளும் திட்டமிட்டே விலை ஏற்றப்பட்டன. உள்ளுர் அரசு பேருந்துகளில் 6 ரூபாய் டிக்கட் 7.50 என விலை வைக்கப்பட்டது. கேள்வி கேட்டபோது இது எக்ஸ்பிரஸ் என பதில் வந்தது. நேற்று வந்த அதே டிரைவர், அதே கண்டக்டர், அதே ரூட், அதே பஸ் எப்படி விடிந்ததும் எக்ஸ்பிரஸ் என ஆனது தெரியாமல் முழித்தனர். கேள்வி கேட்டபோது விலை ஏறவேயில்லை என்றார் முதல்வர். இப்படி பல விலை உயர்வுகளை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆளும்கட்சி விலை உயர்ந்து விட்டது என ஒப்புக்கொள்ளாமல் சமாளித்தது வெறுப்பானது.
கட்சியினரின் கிடுகிடு வளர்ச்சி :
கட்சி ஆரம்பித்தபோது டீ குடிக்க கூட காசுயில்லாமல் மாட்டு வண்டியிலும், நடந்தும் 10 மைல், 20 மைல் நடந்துப்போய் மக்களிடம் பிரச்சாரம் செய்தவர்கள் திமுகவினர். மற்ற எந்த கட்சிக்கும் இந்த வரலாறு கிடையாது. படித்தவர்களின் தோழனாக, நடுத்தர மக்களின் நாயகனாக விளங்கிய தி.மு.கழகம் கடந்த 10 ஆண்டுகளாக அந்த இடத்தை விட்டு விலகி வெகு தூரம் போய்விட்டது. இன்றைய காலகட்டத்தில் மாற்று கட்சியினரை கவர்ந்த அளவுக்கு கூட இளைஞர்கள், இளைஞிகளை திராவிட முன்னேற்ற கழகம் கவரவில்லை. தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகம் செய்த சாதனைகளை இன்றைய இளைஞர்களிடம் கொண்டும் போய் சேர்க்காமல் விட்டு விட்டார்கள். 90களோடு திமுகவில் இளைஞர்கள் சேர்க்கை குறைந்து போய்விட்டது.
விஜயகாந்த், விஜய் பின்னால் ஓடுகிறார்கள் இளசுகள். இதற்க்கு காரணம் கடந்த 10 ஆண்டுகளில் திமுகவில் உள்ள கி.செ முதல் மாநில நிர்வாகிகள் வரை உள்ளவர்களின் கிடு கிடு வளர்ச்சி. சைக்கிளில் போய் கட்சி வளர்த்தவர்கள் இன்று தேர்தல் நேரத்தில் கூட காரை விட்டு இறங்குவதில்லை. முன்பு மக்களுக்கு ஒரு பிரச்சனையென்றால் திமுககாரன் ஒடிவந்து நிற்பான் என்ற நிலை போய் இன்று பிரச்சனையே திமுககாரனால் என்ற நிலை வந்துள்ளது. இதை கட்சி தலைமையும் கண்டுக்கொள்ளாமல் வேடிக்கை பார்த்துவிட்டது. அதிலும் குறிப்பாக கடந்த 2006 முதல் 2011 வரை திமுகவினர் வளர்ச்சி பல மடங்கு அதிகம். அது மக்களை முகம் சுளிக்க வைத்துவிட்டது.
மாற்றன் தோட்டத்து மல்லிகைக்கு முக்கியத்துவம் :
உயிரே போகிறது என்றாலும் உண்மையான திமுககாரன் வேறு எந்த கட்சிக்கும் ஒட்டுப்போடமாட்டான் என்பார்கள் பிற கட்சியினர். அந்தளவுக்கு கட்சியின் விசுவாசிகள் அவர்கள். ஆனால் இவர்களுக்கான முக்கியத்துவம் இன்று கட்சியில் சுத்தமாகயில்லை. எம்.ஜீ.ஆர் கட்சி தொடங்கிய போது, ஆட்சி கட்டிலில் அமர்ந்தபோது அவர் பின்னால் போனவர்கள், அவர் மறைவுக்கு பிறகு ஜெ வின் நடவடிக்கை பிடிக்காமல் வனவாசம் போனவர்கள் பலர் மீண்டும் திமுகவுக்கு வந்தார்கள். குறிப்பாக கே.கே.எஸ்.ஆர், ரகுபதி, எ.வ.வேலு, மதிமுகவிற்க்கு போய் பின் வந்த கண்ணப்பன், செஞ்சியார், டி.பி.எம். மைதின்கான், செல்வராஜ் போன்றவர்கள் திமுகவில் அமைச்சராக முடிகிறது. கட்சியை ஆட்டி படைக்க முடிகிறது ஆனால் திமுகவிற்காக தங்களை அர்ப்பணித்துக்கொண்டு கழகத்திலேயே இருப்பவர்கள் நிலை பரிதாபமாகவுள்ளது. மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு வாரி வழங்கப்படும் பதவிகள், முக்கியத்துவம் போன்றவை கழகமே கோயில் என இருப்பவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இதனால் வேதனையில் நொந்துபோய்விட்டார்கள்.
அச்சாணியின் வளைவு :
2000ம் வரை முதல்வராக இருந்த கலைஞர், கடை கோடி கன்னியாகுமரியில் இருந்து ஒரு நிhவாகி வந்தாலும் அவரை பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு கட்சியினரோடு நெருக்கமாக இருந்தார். அதன்பின் கட்சியினரை விட்டு வெகு தூரம் போய்விட்டார். அவரை பார்க்க வேண்டும் என்றால் ஆட்சி பொறுப்பில் இருந்தால் அதிகாரிகள் வட்டம், அதன்பின் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் வட்டம், முதல் கட்ட தலைவர்கள் வட்டத்தை நெருக்கி அவரை தரிசிப்பதற்க்குள் நொந்து போய்விடுகின்றனர். ஆட்சியில் இல்லாத போது இந்த வட்டம் குறுகினாலும் பார்ப்பது சுலபமல்ல என்ற நிலை.
இதனால் மாவட்ட நிர்வாகிகளின் ஆட்டத்தை கட்சி தலைமையிடம் நேரடியாக சொல்ல முடிவதில்லை உ.பிகளால். தலைவரை அவ்வளவு சீக்கிரம் யாரும் சந்திக்க முடியாது என்பதால் நிhவாகிகள் ஆடும் ஆட்டம் பயங்கரம். கடந்த முறை அமைச்சர்களாக இரந்த வீரபாண்டி ஆறுமுகம், என்.கே.கே.பி.ராஜா, சுரேஷ்ராஜன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பூங்கோதை என யார் மீதும் தைரியமாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை. காரணம், தளபதி, அஞ்சநெஞ்சன், கனிமொழி, மாறன் என ஏதாவது ஒரு வாரிசின் ஆதரவாளர்களாக இவர்கள் இருப்பதால் இவர்களுக்கு அவர்கள் சப்போட் செய்வதால் தப்பு செய்தவர்களை தலைவரால் கண்டிக்கவோ, தண்டிக்கவோ முடியவில்லை. இதனால் இவர்கள் செய்த தவறுகள் கட்சியை தான் பாதித்தன.
கட்சியில் அதிகார போட்டி :
1976ல் அதிமுக ஆரம்பிக்கப்பட்டு ஆட்சியை பிடித்த எம்.ஜீ.ஆரால் கடைசி வரை திமுகவை அழிக்க முடியவில்லை. அதற்க்கு காரணம் திமுக மீது இருந்த பற்றும் கலைஞர் பேச்சுக்கும், கடிதத்துக்கும் உ.பிகளிடம் இருந்த ஈர்ப்பு. இப்படிப்பட்ட கருணாநிதி தனக்கு பின் யார் என்பதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அதற்க்கு காரணம் திமுக என்பது ஜனநாயக அமைப்பு என்பதால். அப்படியிருந்தும் கட்சியை அடுத்து வழி நடத்த போகிறவர் தனது மகன் ஸ்டாலின் தான் என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளார். அதற்க்கு ஏற்றாற்போல் கட்சியினர், மக்கள் ஸ்டாலின்னை ஒரு தலைவராக ஏற்றுக்கொண்டனர். ஆனால் குடும்பத்தில் அழகிரி, கனிமொழி, தயாநிதிமாறன் போன்றோர் அடுத்தடுத்து கட்சி பதவி, அமைச்சர் பதவி என வந்து அதிகார மையமாக உருவானதோடு, இவர்களின் வாரிசுகள், அடிப்பொடிகள் செய்த அலப்பரை, அராஜகம் கட்சியினர் மத்தியிலும், பொது மக்கள் மத்தியிலும் ஒரு அதிருப்தியை மெல்ல மெல்ல உருவாக்கி விட்டது. இந்த அதிகார போட்டி தான் ஆட்சியை, கட்சியை அசிங்கப்படுத்தியது.
மாறன்களின் ஆதிக்கம் :
இறக்கும் வரை மாமன் பேச்சை மீறாத மருமகனாக விளங்கி வந்தார் முரசொலிமாறன். கட்சி கொள்கையில் இருந்து தடம் மாறும் போது தலைவனை நோக்கி கேள்வி கேட்டாலும் தலைவனின் விசுவாசமான தளபதியாகவும், மாமன் மெச்சும் மருமகனாகவும் விளங்கினார். அவரின் பிள்ளைகள் கலாநிதிமாறன், தயாநிதிமாறன் இருவரும் தங்கள் தொழில் சாம்ராஜ்யத்தை திமுக என்ற ஆலமரத்தின் கீழிருந்து வளர்த்துக்கொண்டவர்கள், போட்டியாளர்களை திமுக என்ற ஆயுதத்தை கொண்டு நசுக்கியவர்கள் ஒரு கட்டத்தில் கட்சியையே அபகரிக்க பார்த்த புண்ணியவான்கள். மீடியா ஆதிக்கம், சினிமா ஆதிக்கம், தொழில்துறை ஆதிக்கம் போன்றவற்றில் இறங்கி எதிரிகளை உருவாக்கியவர்கள். இந்தியா அளவில் பெரிய பெரிய எதிரிகளை உருவாக்கி அவர்களை திமுக பக்கம் நரித்தனத்தோடு திசை திருப்பி திமுகவை அழிக்க துணை போன சதிகாரர்கள்.
ஸ்பெக்ட்ராம் :
தேன் எடுத்தவன் புறங்கையை நக்காமல் இருக்கமாட்டான். ஆயிரக்கணக்கான கோடி கமிஷனாக கிடைக்கும் துறையில் இருந்துக்கொண்டு ஊழல் செய்யாமல் இருந்தால் அவர் அரசியல்வாதியே அல்ல. ராசா ஊழல் செய்தார். ஆனால் இதில் 60 சதவித பங்கு போய் சேர்ந்தது காங்கிரஸ் கம்பெனியிடம். ஆனால் அவர்கள் ஊழல் என்ற பந்தை திமுக மீது திருப்பி விட்டார்கள். அதை பிடித்ததின் விளைவு. காங்கிரஸ் கம்பெனி தங்களை யோக்கியவான்களாக காட்டிக்கொள்கிறது. அதோடு, இந்த விவகாரம் இந்திய அளவில் பெரியதாக காரணம் காங்கிரஸ் கம்பெனி, தமிழகத்தில் மாறன் கம்பெனி. ஓவ்வொரு எதிர்கட்சி, கூட்டணி கட்சி தலைவர்களின் வீடு தேடி போய் ஆதாரங்களை தந்து திமுகவை அழிக்க துணை போன கனவான்கள். இன்று குடும்பம் ஒன்றினைந்தாலும் காங்கிரஸ் என்ற பந்தத்தை மறைமுகமாக பிடித்துக்கொண்ட மாறன் கம்பெனி திமுகவுக்கு எதிராக மீடியாக்கள் மூலம் சிந்து பாடுகின்றன. கனிமொழியை சிறைக்கு அனுப்பியாகிவிட்டது. கலைஞர் மீடியாவை அபகரிக்க வேண்டும் என்பதே அவர்களின் எண்ணம்.
துரோக காங்கிரஸ்:
துரோகத்தின் மறுபெயர் காங்கிரஸ். அந்த கட்சியுடன் கூட்டணி வைத்தபோதே வரலாறு தெரிந்தவர்கள் அலறினார்கள் மீண்டும் ஒரு துரோகத்தை கருணாநிதி சந்திக்க போகிறார். இதிலிருந்து எழ அவருக்கு நீண்ட காலம் பிடிக்கும் என்றார்கள். அது இன்று நடந்துவிட்டது. தேர்தலில் தனித்து நின்றால் 1 இடத்தில் கூட ஜெயிக்க முடியாத காங்கிரஸ் ஸ்பெக்ட்ராம்மை காரணம் காட்டி 63 சீட் மிரட்டி வாங்கியது. ஆட்சியில் பங்கு என்ற அஸ்திரத்தை அதே ஸ்பெக்ட்ராம் என்ற பூதத்தை காட்டி மிரட்டியது. இறுதியில் இக்கூட்டணி தேர்தலில் தோற்றதும் தானும் தான் தோற்றோம் என்ற எண்ணமேயில்லாமல் ஜெ வுக்கு வாழ்த்து தெரிவித்து கூடி கும்மியடிக்க அழைப்பு தந்தது. அதே ஸ்பெக்ட்ராம்மை காட்டி திமுகவை அவமானப்படுத்தி காயடித்து வெளியனுப்பும் காங்கிரஸ்.
ஈழம்:
2008, 2009களில் தொப்புள் கொடி உறவுகளை கொன்று குவித்தபோது காங்கிரஸ் அரசின் பேச்சை கேட்டு வக்காலத்து வாங்கியதோடு, காங்கிரஸ்சின் துரோகத்துக்கு துணை போனதன் விளைவு இன்று கொள்கையில்லாத விஜயகாந்த் கட்சி 25 இடங்கள் வெல்கிறது. திமுக ஆட்சி பொறுப்பை விட்டே இறங்குகிறது. காங்கிரஸ் சுமக்க வேண்டிய பழி என்ற சிலுவையை இடையில் நின்ற திமுக சுமந்ததன் விளைவு தேர்தல் முடிவு காட்டிவிட்டது.
சலுகையோ சலுகை :
தமிழகத்தில் தினமும் காலை 8 முதல் மாலை 5 வரை உழைத்தாலே 200 ரூபாய் தான் கூலி கிடைக்கிறது. மாதம் 30 நாள் உழைத்தாலும் 6 ஆயிரம் தான். ஆனால் மாதத்தில் 5நாள் அரசின் ரெகுலர் விடுமுறை. மருத்துவலீவு. பாண்டிகை விடுமுறை என சாராசரியாக மாதத்தில் 8நாள் விடுமுறை வந்துவிடுகிறது. மீதி இருப்பதோ 22நாள் தான் இதற்க்கு சாதாரண அரசு ஊழியர் வாங்கும் சம்பளம் மாதம் 20 ஆயிரம். வேலை நேரமோ 8 மணி நேரத்திற்க்கும் குறைவு. அது மட்டுமல்ல ஏதாவது ஒரு வேலை ஆக வேண்டும்மென தாலுக்கா ஆபிஸ் முதல் பள்ளிக்கூடம் வரை எங்கு போனாலும் சம்திங் தரவில்லையென்றால் பணிசெய்ய மாட்டார்கள் இந்த அரசு ஊழியர்கள். அப்படிப்பட்ட அரசு ஊழியர்களுக்கு மேலும் மேலும் வாரி கொடுத்தது எந்த விதத்தில் நியாயம். அது மட்;டுமல்ல ஆயிரக்கணக்கில் சம்பளமும், மக்களிடமும் இருந்து சம்திங் பெறும் அரசு ஊழியர்களை நோக்கி கேள்வி கேட்டால் வழக்கு வேறு பாய்கிறது. மக்களுக்காக உழைக்காத அரசு ஊழியர்களுக்கு சலுகைகள் தொடர்வதை தான் மக்கள் விரும்பவில்லை.
சினிமாத்துறை :
கிளைவுட் நைன், ரைட் ஜெயன்ட், சன் என எத்தனை சினிமா தயாரிப்பு நிறுவனங்கள். அத்தனை நிறுவனங்களும் 10 நிமிடத்துக்கு ஒரு விளம்பரம் என தொலைக்காட்சியில் போட்டு மக்களை நோகடித்துவிட்டார்கள். அது மட்டுமல்ல அவர்கள் சினிமாதுறையினரை மிரட்டியது படு மோசமானது. இதனால் தான் திமுக சார்ப்பானவர் என வர்ணிக்கப்பட்ட சந்திரசேகர் திமுகவின் எதிரியானார். ஊருக்கு 2 ரசிகர்களை கூட வைத்தில்லாத தன் மகன் விஜய்யை வைத்து அரசியல் கட்சி ஆரம்பிக்க பார்த்தார்.
இவைகளே திமுக ஆட்சியை மக்கள் வீட்டுக்கு அனுப்ப காரணம். மற்றப்படி அ.தி.முக தருவதாக சொன்ன இலவசங்களோ, இல்லை ஜெ பிடித்தோ மக்கள் வாக்களிக்கவில்லை என்பதே உண்மை.
திமுக செய்த தவறுகளை சாி செய்வது எப்படி........?