புதன், ஜனவரி 29, 2014

அழகிரிக்காக அழும் நடுநிலை வேடதாரிகள்.


அழகிரி திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார் இந்த செய்தி திமுகவில் கூட அதிர்வலைகளை ஏற்படுத்தவில்லை. மாற்றுக்கட்சிக்காரர்களை விட நடுநிலை பேசும் மறைமுக அதிமுககாரர்களை ஆனந்த அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. அவரை எப்படி நீக்கலாம் என இணையத்தில், சமூக வளைத்தளங்களில், செய்தித்தாள் மற்றும் மீடியாக்களில் அதுப்பற்றியே பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

திமுகவின் தலைவர், பொதுச்செயலாளர் சொல்வதற்க்கெல்லாம் அழகிரியிடம் கருத்து கேட்டு ஒளிப்பரப்பிக்கொண்டு இருக்கிறது மீடியா.

வெளிப்படையாக சொல்ல வேண்டும்மென்றால் இது குடும்ப தகராறு, கட்சியில் தனக்காக இடத்தை தக்கவைத்துக்கொள்ள நடக்கும் அதிகார மோதல். இதைப்பற்றி அதன் தொண்டர்கள் தான் கவலைப்படவேண்டும். யார் தலைவராக வர வேண்டும் என்பது கட்சி தொண்டர்களின் விருப்பம். ஒருவரை கட்சியில் சேர்ப்பதும், நீக்குவதும் கட்சி தலைமையின் உரிமை. இன்று நீக்கப்பட்ட அழகிரி நாளை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படலாம். இதில் கேள்வி கேட்க அந்த கட்சியின் தொண்டர்களை தவிர வேறு யாருக்கும் உரிமை கிடையாது.

மீடியாக்கள் மக்களிடம் தகவலை கொண்டும்போய் சேர்க்கிறோம் எனச்சொல்லலாம். அதுயென்ன திமுகவின் நெகட்டிவ் செய்திகளை மட்டும் கொண்டும்போய் சேர்க்கிறிர்கள். அவர்கள் மட்டும் தான் தமிழகத்தில் கட்;சி நடத்துகிறார்களா மற்றவர்களெல்லாம் தெருவில் மிட்டாய் விற்கிறார்களா?. எல்லாருமே கட்சி நடத்துகிறார்கள் தானே. பின் ஏன் மற்ற கட்சிகளில் நடக்கும் அதிகார மோதல்களை செய்தியாக்குவதில்லை ?. சின்ன சின்ன கட்சிகளை விடுங்கள்.

கடந்த வாரத்தில் மட்டும் பெரும் கட்சியான அதிமுகவில் இருந்து சிலர் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்கள். ஏன் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் திடீரென கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். இதற்கான காரணத்தை அதிமுகவின் பொதுச்செயலாளரான ஜெ விடம் கேட்க யாருக்காவுது தைரியம் உண்டா ?. நீக்கப்பட்டவர் என்னை ஏன் நீக்கினிர்கள் என கேட்கும் ஜனநாயகம் உண்டா? அட இன்று அழகிரிக்காக ‘குரல்’ கொடுக்கும் மீடியாக்கள் ஜெவிடம் கேட்கும் தைரியம் உண்டா?. ஜெவிடம் கேள்வி கேட்டால் சாதாரணமாக இருந்தால் இது எங்கள் கட்சியின் உட்கட்சிவிஷயம் எனச்சொல்லிவிட்டு போய்விடுவார். மீறி கேள்வி கேட்டால் அதிகாரத்தின் கால்களால் நசுக்கப்படுவார். குறைந்த பட்சம் இணையத்தில், சமூக வளைத்தளத்தில் புழங்குபவர்களுக்கு கூட கேள்வி கேட்கும் தைரியம் கிடையாது.

இங்கு ஒன்றை தெளிவாக தெரிந்துக்கொள்ளுங்கள். அழகிரி கழகத்தில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படவில்லை. தற்காலி நீக்கம் தான். அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் அழகிரியிடம் இருந்து பதில் வரவில்லையென்றால் நிரந்தரமாக நீக்கப்படுவார். பதில் தந்தால் அது பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு பரிசீலித்து பதில் ஏற்புடையதாக இருந்தால் தற்காலிக நீக்கம் நீக்கப்படும். இல்லையேல் நிரந்தரமாக நீக்கப்படுவார். திமுக ஆரம்பித்த காலத்தில் இருந்து கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறையிது. நடைமுறை என்பதை விட கழக சட்டவிதிமுறை. இதை எந்த காலத்திலும் திமுக தலைமை மீறியது கிடையாது என்பதே உண்மை. இந்த நடைமுறை இந்தியாவில் எந்த கட்சியிடமும் கிடையாது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

திமுகவில் கேள்வி கேட்கும் ஜனநாயகம் இன்றளவும் உண்டு. அதனால் தான் தேர்தலில் சீட் கேட்டு கட்டிய பணத்தை சீட் தராததால் அந்த பணத்தை திருப்பி தாருங்கள் என ஒரு முன்னால் எம்.எல்.ஏ நீதிமன்றத்தில் வழக்கு போட்டார். அதை திமுகவும் ஏற்று பதில் தந்தது.

அதனால் திமுகவை கொள்கை ரீதியாக, அதன் பொது முடிவுகள் மீது விமர்சியுங்கள். அற்பத்தனமாக ஈழ மக்களுக்கு செய்த துரோகம், நாடகம் அதுயிதுவென பிதற்றி எழுதி உங்கள் முகத்திரையை கிழித்துக்கொள்ளாதீர்கள். ஏன் எனில் உங்கள் நடுநிலை முகத்திரை கிழிந்து தொங்கிக்கொண்டு இருக்கிறது.

வியாழன், ஜனவரி 16, 2014

கொளத்தூர் மணி கைதை மறந்த ஈழ குத்தகைதாரர்கள்.



2013 நவம்பரில் இலங்கையில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் யாரும் கலந்துக்கொள்ள கூடாது என்ற போராட்டம் பலயிடங்களில் நடந்து வந்தது. அந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக அக்டோபர் 30ந்தேதி இரவு சேலத்தில் உள்ள மத்தியரசின் வருவாய்த்துறை அலுவலகத்தின் மீது நான்கு பேர் கொண்ட கும்பல் தீ வைக்கப்பட்ட கோணிப்பையை அலுவலகத்துக்குள் வீசிவிட்டு சென்றனர். அதில் மின் விளக்குகள் சேதமடைந்துள்ளன. அலுவலகத்துக்குள் பிட் நோட்டீஸ்கள் வீசப்பட்டுயிருந்துள்ளன. அதில், தமிழக அரசின் தீர்மானத்தை கண்டுக்கொள்ளாத இந்திய அரசை வன்மையாக கண்டிக்கிறோம், இலங்கை தூதரை வெளியேற்ற வேண்டும், காமன்வெல்த்தில் கலந்துக்கொள்ளகூடாது என இருந்துள்ளது.

இந்த ‘சதி’ செயலை செய்தவர்கள் என நான்கு பேரை கைது செய்தது போலிஸ். சென்னையில் மூன்று பேர் என 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் திராவிட விடுதலை கழகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணியை கைது செய்தது. பி்ன் தேசிய பாதுகாப்பு சட்ட பிரிவின் கீழ் வழக்கை மாற்றியது போலிஸ். பொய் வழக்கு என ஜெ அரசை சாடினார் கைதான கொளத்தூர்.மணி. பழ.நெடுமாறன், வை.கோ ஆகியோர் கண்டன அறிக்கை வெளியிட்டனர்.

அதற்கடுத்த இரண்டாவது நாள் தஞ்சையில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றம் ஜெ அரசால் இடிக்கப்பட்டது. ‘எதிர்ப்பு’ காட்டிய பழ.நெடுமாறன் கைது செய்யப்பட்டார். தமிழ் உணர்வாளர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். போராடியவர்களை விரட்டி விரட்டி அடித்தது ஜெ போலிஸ். பழ.நெடுமாறனுக்காக பத்திரிக்கைகள் வாயிலாக, அறிக்கைகள் வாயிலாக, பேஸ்புக், இணைய தளங்களில் பொங்கினார்கள் பலரும்.

பழ.நெடுமாறன் ஜாமினில் வெளியே வந்துவிட்டார். அவருடன் கைதானவர்கள் வெளியே வந்துவிட்டார்கள். தங்களை கைது செய்தது ஸ்காட்லாந்து போலிஸ் இதற்கும் தமிழக முதல்வர் அம்மாவுக்கும் எந்த சம்மந்தமும்மில்லை என்ற ரீதியில் அறிக்கை தந்துவிட்டார் பழ.நெடுமாறன். உணர்ச்சி வேகத்தில் பொங்கி ஜெவை வசைப்பாடிய வை.கேவும் அமைதியாகிவிட்டார்.

அவர்களோடு மற்றவர்களும் அடுத்தடுத்த ‘அரசியல்’ வேலைகளை கவனிக்க போய்விட்டார்கள்.

ஆனால் அதே ஈழ தமிழர்களின் நலனுக்காக குரல் கொடுத்த கொளத்தூர் மணி கைதை மறந்துவிட்டார்கள். அவர் கைதாகி தற்போது 75 நாட்களை கடந்து விட்டது. அவரை வெளியே கொண்டு வர என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள் என விசாரித்தால் கொஞ்சம் கஸ்டமாகத்தான் உள்ளது.

தங்களுடன் இணைந்து முள்ளிவாய்க்கால் முற்றத்துக்காக பணியாற்றிய, விடுதலை புலிகளுக்காக உண்மையாக போராடிய, ஈழப்போராட்டம் என்றால் தயங்காமல் முன்னின்ற கொளத்தூர்மணி கைதானதை வாகாக மறந்துவிட்டார்கள். ஈழத்தின் தமிழக குத்தகைதாரர்களான சீமான் வகையறா, நெடுமாறன் வகையறா மற்றும் பிற தமிழ் தேசியம் பேசும் வகையறாக்கள்.


வேடதாரியான சீமானை விட கொளத்தூர்மணி எந்த விதத்தில் குறைந்து போனார் ?.

ஈழத்தை மையமாக வைத்து உங்களுக்குள் ( நெடுமாறன், வை.கோ, மணி, சீமான் மற்றும் பிறர் ) இருக்கும் மோதல் சிலர் அறிந்தது தான். அதற்காக உங்களுடன் தோள் கொடுத்து நின்றவரை முதுகில் எலும்பில்லாமல் விட்டு தந்துவிட்டீர்களே நியாயம்மா?. எதற்காக நீங்கள் முன் எடுக்கும் போராட்ட வழிமுறைகள் தோற்றுப்போய்விடுகின்றன என்பது இப்போது புரிகிறது.

கொளத்தூர் மணியின் திராவிட பேச்சு, திராவிட கொள்கை, சாதிக்கு எதிரான செயல்பாடுகள், பெரியார் மீதான பாசம் போன்றவை தமிழ் தேசியம் பேசுகின்ற நெடுமாறன், சீமான் வகையறாவுக்கு கசக்கத்தான் செய்யும். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் நடத்துகின்ற வை.கோவுக்கும் கசக்குகிறது என்பது இப்போதுதான் புரிகிறது. ஆனாலும் நீங்கள் அனைவரும் எதில் வேறுபட்டாலும் ஈழ அரசியலில் ஒன்றுபடுகிறிர்கள். அதற்காகவாவுது நீங்கள் குரல் கொடுத்துயிருக்கலாம் ஆனால் செய்யவில்லை. ஜெ மீதான பயமும் ஒரு காரணம் எனச்சொல்லலாம்.

கொளத்தூர் மணி கைதை மறந்து அரசியல் செய்யும் அற்பர்களே இதுதான் உங்கள் வீரதீர அரசியலா ?.

புதன், ஜனவரி 15, 2014

சினிமா நடிகர்-நடிகைளும் பொங்கல் வாழ்த்தும் தேவையா ?



இந்த கட்டுரை எழுதிக்கொண்டுயிருந்த நேரம் தமிழகம் முழுவதும் செல்பேசி, தொலைபேசி, மின்னஞ்சல், முகநூல் வழியாக நண்பர்கள், உறவினர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை பறிமாறிக்கொண்டு இருக்கிறார்கள் மக்கள். தொலைக்காட்சி வாயிலாக நடிகர்கள், நடிகைகள் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் மூலம் தங்களது வாழ்த்துக்களை மக்களுக்கு தெரிவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

சேனல்களில் வாழ்த்து தெரிவித்த நடிகர் நடிகைகள் எத்தனை பேருக்கு பொங்கல் விழாவென்றால் என்னவென்று தெரியும்?. பொங்கல் பண்டிகை என்பது விவசாயிகளுக்கான பண்டிகை என்பதாவது தெரியுமா? எதற்காக கொண்டாடுகிறார்கள் என்று தெரியுமா?. விவசாயத்தின், விவசாயிகளின் இன்றைய நிலை தெரியுமா?.

நடிகர் – நடிகைகளை உட்கார வைத்து, ஆடவைத்து நீங்க என்ன படம் நடிக்கறிங்க?, போன படத்தல அப்படி நடிச்சிங்க, அடுத்த படத்தல எப்படி நடிச்சியிருக்கிங்க என கேட்டுவிட்டு கடைசியாக பொங்கல் வாழ்த்து சொல்லுங்க எனச்சொல்லி அவர்களின் வாழ்த்தை வாங்கி ஒளிப்பரப்புவதன் மூலம் விவசாயிகளின் வயிறோ, மனமோ நிரம்பிவிடுமா?. பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி என சேனல்கள் அழைத்தால் இவர்கள் வாழ்த்து தெரிவிக்க வேண்டுமா? ( நடிகர் நாசரிடம் வாழ்த்து கேட்ட சினிமா இணைய தளம் ஒன்றுக்கு பொறித்து தள்ளியுள்ளார். )

மறைந்த நடிகர்களான சிவாஜி, எம்.ஜீ.ஆர், கண்ணதாசன், வாலி, சந்திரபாபு போன்றவர்களின் பிறந்தநாளுக்கு, மறைந்த நாளுக்கு அல்லது சினிமாக்கள் பற்றிய நிகழ்வுகளுக்கு வாழ்த்து சொல்லட்டும் கவலையில்லை. அது அவர்கள் தொழில். அதைப்பற்றி நன்கு அறிந்திருப்பார்கள். அதற்கான நிகழ்வுகளில் அவர்கள் வாழ்த்து, பேட்டி தந்தால் சிறப்பாகயிருக்கும். விவசாயத்தை பற்றியே தெரியாத இன்றைய நடிகர்களிடம் பொங்கல் வாழ்த்து வாங்குவது எந்த விதத்தில் நியாயம். 

வாழ்த்து தெரிவிக்கும் நடிகர்களை விடுங்கள். வாழ்த்து நிகழ்வுகளை வழங்கும் இந்த தொலைக்காட்சிகளுக்கு என்ன அறுகதை இருக்கிறது பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த. பொங்கல் என்பது விவசாயிகளுக்கானது. எந்த தொலைக்காட்சியாவது விவசாயிகளிடம் சென்று வாழ்த்து செய்தியை வாங்கி வெளியிட்டுள்ளதா?. அதற்காக பொங்கல் விழாவில் விவசாயிகளின் அவர்களின் பிரச்சனையை அலச சொல்லவில்லை.

கிராமத்தில் ஒரு விவசாயின் வீட்டிற்க்கு சென்று அவர்கள் எப்படி பொங்கல் கொண்டாடுகிறார்கள் என்பதை பதிவு செய்து ஒளிபரப்பலாமே. ஏன் எந்த தொலைக்காட்சியும் செய்வதில்லை. அப்படி செய்தால் விளம்பர வருமானம் வராது என்ற காரணம் தான் வேறுயென்ன. நகரத்தில் வெங்கள பாத்திரத்தில், சில்வர் குண்டாவில் கேஸ் அடுப்பில் வைக்கப்படும் பொங்கலை காட்டி இதுதான் பொங்கல் விழா என விவசாய மக்களின் உழைப்பை கொச்சைப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்.

நகரத்தில் இன்று வாழும் பெரும்பாலான பிள்ளைகளுக்கு விவசாயம் என்றால் என்னவென்றே தெரியவில்லை. அதற்கு காரணம் நம் சமூகம் மட்டுமல்ல தொலைக்காட்சிகளும் தான். பொங்கலன்று சிறப்பு திரைப்படங்களை ஒளிப்பரப்பி இடைஇடையே விளம்பரங்களை ஒளிப்பரப்பி கோடிகளில் பணத்தை சுரண்டும் தொலைக்காட்சிகள் சம்மந்தப்பட்ட மக்களுக்கு என்ன செய்துயிருக்கிறோம் இந்த நாளில் என யோசித்தது உண்டா?.

பெரும்பாலான நாடுகள் தங்களது பாரம்பரிய விழாக்களைப்பற்றி மக்களிடம் நியாயமான முறையில் தகவல்களை கொண்டு போய் சேர்க்கின்றன. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மட்டும் தான் பொங்கல் விழா கொண்டாட தமிழகத்தை பற்றியே அறியாத நடிகர் – நடிகைகளை வைத்து ஒரு நிகழ்ச்சி நடத்துகிறார்கள். அதனால் தான் பொங்கல் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்க்கிறார்கள் தமிழக நகர குழந்தைகள்.

நடிகர் நடிகைகளுக்கு மட்டும்மல்ல தொலைக்காட்சிகளுக்கும் பொங்கல் வாழ்த்து சொல்ல எந்த தகுதியும் கிடையாது.

ஞாயிறு, ஜனவரி 05, 2014

கோயாபல்ஸ்சான கோபால்சாமி.



வை.கோபால்சாமி எடுக்கும் அரசியல் முடிவுகள் மீது மாற்று கருத்துகள் இருந்தாலும் உலக விஷயங்கள் முதல் உள்ளுர் தகவல்கள் வரை வரலாற்று பினைப்போடு அற்புதமாக பேசுவார். இந்த ஒன்றுக்காக மட்டுமே எனக்கு அவரை பிடிக்கும்.

சுதந்தரா கட்சிக்காரரான வையாபுரி கோபால்சாமி திமுகவில் இணைந்து தன் அரசியல் பணியை தொடர்ந்ததோடு திமுகவின் எம்.பியாக டெல்லியில் இருந்தவர். ஈழ அரசியல் மீது ஈர்ப்பு கொண்டு வன்னி காடுகளுக்கு ரகசிய பயணம் போய் வந்தவர் பின் திமுவில் இருந்து வெளியேறி நாங்கள் தான் உண்மையான திமுக என கொடி பிடித்தவர் பின் மறுமலர்ச்சி திமுக என்ற பெயரில் தனி கட்சி தொடங்கி நடத்தி வருகிறார். எளிதில் உணர்ச்சி வசப்படும் தலைவர். யாரையும் நம்பாதவர். இதனால் தான் கட்சி காலி டப்பாவாகி பெருங்காய வாசம் மட்டும் அடிக்கிறது.

தற்போது பாரதிய ஜனதாவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த தொடங்கியுள்ளார். இது தவறல்ல. இங்கு எல்லா கட்சிகளும்மே அதிகாரத்துக்காக சந்தர்பவாத கூட்டணி அமைக்கின்றன. ஆனால் அதற்காக தன் கட்சி கொள்கையை பெரும்பாலும்  விட்டுக்கொடுப்பதில்லை.

வை.கோ தன் கட்சியின் அடிநாதமான கொள்கைகளை விட்டு தந்தது மட்டுமல்லாமல் முன்னுக்கு பின் முரணாக பொய்களை பேச தொடங்கியுள்ளார். 2014 புத்தாண்டு அன்று செய்தியாளர்களிடம், சேது சமுத்திர திட்டம் என்பது அண்ணாவின் கனவு திட்டம். இந்த திட்டம் அண்ணா இருந்தபோதே திமுகவால் ஏற்றுக்கொள்ளப்பட்டு செயல்படுத்த வேண்டும் என சொன்ன திட்டம். இந்த திட்டம் தென்மாவட்டங்களை வளர்ச்சியை நோக்கி பயணிக்க வைக்கும் என்பது உண்மை. இந்த திட்டம் செயல்படுத்த வேண்டும் என்பது மதிமுகவின் கொள்கைகளில் ஒன்று. இந்த திட்டத்தின் எதிரி பா.ஜ.க. தற்போது பாஜகவுடன் கூட்டணி சேர சுற்றுசுழல் துறையை காரணம் காட்டி எதிர்ப்பது எந்த விதத்திலும் நியாயமல்ல.

மதிமுகவின் உயிர் கொள்கை, தனி ஈழம். அதிலும் காம்பர்மைஸ். காங்கிரஸ் போல் ஈழத்துக்கு பாஜக துரோகம் செய்யாது என்கிறார். 2004 வரை மத்தியில் ஆட்சியில் இருந்தது பா.ஜ.க தான். 2000, 2001ல் சிங்கள இராணுவத்துக்கு இந்திய இராணுவம் செய்த உதவிகளை வை.கோ திட்டமிட்டே மறைப்பது எந்த விதத்தில் நியாயம். 2011ல் இலங்கை சென்ற இந்திய எம்.பிக்கள் குழுவின் தலைவர் பி.ஜே.பி தலைவர்களில் மிக முக்கியமானவரான சுஷ்மா சுவராஜ். ஈழத்தமிழர்களை, போராளிகளை கொன்று குவித்த மகிந்தாவை பாராட்டி பேசினார். இன்று வரை ஈழத்துக்காக பாஜக தலைவர்கள் யாரும் குரல் தரவில்லை. ஆட்சிக்கு வந்தால் ஈழ நலனில் அக்கறை செலுத்துவோம் என்றுக்கூட சொல்லவில்லை. ஆனால் வை.கோ ஈழத்துக்கு பாஜக துரோகம் செய்யாது என்கிறார்.

ஈழத்துக்கு மட்டுமல்ல தமிழனத்துக்கே மிக பெரிய விரோதி சு.சாமி. அவர் இப்போது பி.ஜே.பியில் உள்ளார். அவர் இப்போதும் ஈழத்தை எதிர்த்தே வருகிறார். அவரைப்பற்றி கோபால்சாமியிடம் கேட்டால், அவருக்கு பதில் தமிழருவி மணியன் ஓடிவந்து பதில் சொல்கிறார், சு.சாமி தமிழகத்தில் பிரச்சாரம் செய்யக்கூடாது என கண்டிஷன் போட்டுள்ளோம் என்கிறார்.

பா.ஜ.க பக்கம் போக துடிக்கும் வை.கோவுக்கு துணையாக பேச்சுவார்த்தை நடத்துபவர் தமிழருவிமணியன். அவர், தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக அணி அமைக்கிறேன். மதிமுகவுக்கு 8 சதவித வாக்குகள், பாமகவுக்கு 6 சதவித வாக்குகள், தேமுதிகவுக்கு 10 சதவித வாக்குகள், மோடிக்கு 10 சதவித வாக்குகள் உள்ளது. இவர்கள் தான் ஜெயிப்பார்கள். 2016ல் வை.கோவை முதல்வராக்கியே தீருவேன் என்கிறார்.

நீண்ட அரசியல் அனுபவமும்ள்ள மணியன் தான் கதை அளக்கிறார் என்றால் உலக அரசியல் பேசும் வை.கோவுக்கு நிஜ நிலவரம் தெரியுமல்லவா. சொந்த மாவட்டத்தில் ஒரு நகராட்சி தலைவர் பதவியைக்கூட கைப்பற்ற முடியாத தன் கட்சிக்கு முதல்வர் பதவி என்கிறார் மணியன் கோபால்சாமி இதை நம்பளாமா?. மணியன் சொல்வதை கேட்டுக்கொண்டு கோபால்சாமி உளறளாமா ?. 
கோயாபல்ஸ்.


ஹிட்லர் காலத்தில் அவரின் அமைச்சரவை சகாவாக இருந்தவர் ஜோசப் கோயாபல்ஸ். எழுத்தாளர். பொய்யை உண்மையை போல் பேசுவதில் கெட்டிக்காரர். ஹிட்லர் நினைத்தால் வானம் இருண்டு விடும்,  நாம் ஆகாயத்தில் வாழ்கிறோம் என கோயாபல்ஸ் பேசினால் மக்கள் நம்பிவிடுவார்கள் அந்தளவுக்கு பொய்கள் சொல்வதில் கெட்டிக்காரர். இரண்டாம் உலக போரின் போது பல நாடுகளை ஜெர்மனிக்கு ஆதரவாக திருப்பியதில் முக்கிய பங்கு இவருடையது. உலகம் முழுவதும் கோயாபல்ஸ் போல பொய் சொல்லாதே என்பதாக வரலாறு பதிவு செய்துள்ளது.

இனி வரும் காலம் வை.கோ போல பொய் சொல்லாதே என சொல்ல வைத்துவிடும் போல் இருக்கிறது.

வை.கோ அவர்களே, நீங்கள் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட மோடி அலையில் இழுத்து செல்லப்படுகிறிர்கள். உங்கள் கட்சிக்கு! தற்போது அதிகாரம் தேவைப்படுகிறது. அதனால் பாஜகவுடன் கூட்டணி சேர நினைக்கும் நீங்கள் பொய்களை கட்டவிழுத்து விடாதீர்கள். அது கோயாபல்ஸ்சை விட கேவலமாக்கி விடும். நாங்கள் பி.ஜே.பியுடன் இருக்கிறோம் என அறிவிப்பதோடு நிறுத்திவிடுங்கள்.

சில்வண்டுகளே........

மதிமுகவை சேர்ந்த சிலர் நுணுக்கமாக பேசுவதாக வை.கோவை மிஞ்சு பொய் சொல்வதில், கனவு காண்பதில்.

பி.ஜே.பி மதிமுக பாமக தேமுதிக அணி அமைத்தால். 40க்கு 30ல் வெற்றி என்கிறார்கள். இந்த அணிக்கும் அதிமுக அணிக்கும் தான் போட்டி என்கிறார்கள். வை.கோ புத்தரின் வாரிசு என்கிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவால் போல் வை.கோவை சித்தரிக்கிறார்கள் இன்னும் இன்னும் உள்ளது.............. அய்யா வை.கோவின் வீரன்களே உங்க அளப்பறை தாங்க முடியல. அரசியல கத்துக்கிட்டு வாங்க. இல்லன்னா பெருங்காய டப்பாவும் காணாம போயிடும்.