வெள்ளி, பிப்ரவரி 07, 2014

3. மலையக மக்களின் வாழ்வும் துயரமும். ( சிலோன் முதல் ஈழம் வரை தொடர் )

1796இம் இண்டு இலங்கையை தங்களது ஓரே தலைமையின் கீழ் கொண்டு வந்த ஆங்கியேலர் தங்களது வசதிக்காகவும், தாங்கள் நிம்மதியாக ஆட்சி செய்ய மக்களை இனரீதியாக பிரிக்கும் சூழ்ச்சியை சரியாக செய்தார்கள். தங்களது கிருஸ்த்துவ மதத்தை இலங்கையில் விதையாக தூவ ஆரம்பித்தார்கள். பௌத்த மதத்தை ஏற்ற சிங்களர்கள் கிருஸ்த்துவத்தை ஏற்க மறுத்தனர். இனால் தமிழர்களோ யாழ்ப்பாணம், மன்னார், திரிகோணமலை, மலைநாடு பகுதிகளில் இருந்த மக்கள் வர்ணாசிரம கொடுமை, வறுமையால் ஓடிப்போய் சேர்ந்தார்கள். கிருஸ்த்துவ மதத்துக்கு வந்தால் கல்வி, வேலையில் முன்னுரிமை என பாதிரியார்கள் கூறியது மற்றொரு காரணம். பிசாசு வாழறயிடம் எனச்சொல்லி கோயில்களையும் இடிக்க ஆரம்பித்தது பிரிட்டிஷ் ஆரசு.

ஆங்கிலேய மிஷினரிகளில் கல்வி கற்ற தமிழர்களின் பிள்;ளைகள், பிரிட்டிஷார் பேசிய ஆங்கிலத்தையும் கற்றுக்கொண்டு ஆங்கிலேயர்களுடன் நெருக்கமாகவும், அரசு பணி செய்யவும் செய்தனர். இது சிங்கள மக்களிடையே கோபத்தையும், எரிச்சலையும் உண்டாக்கியது. இதனால் ஆங்கிலேயரை அதிகமாக எதிர்த்தனர் சிங்கள மக்கள். அப்படியும் ஆங்கிலேயர்க்கு சிங்கள மக்கள் மீது தான் ஆதிக ஈடுபாடே. காரணம் தீவில் அதிகளவில் வாழ்வோர் சிங்கள மக்கள் தான் என்பதாலும் பிற்காலங்கள் வியாபாரத்தில் பிரச்சனை வந்தால் சிங்கள மக்கள் துணை வேண்டும் என்பதாலே எதிர்த்தவர்களை நண்பர்களாக கையாண்டனர்.

இலங்கையை வாணிப நோக்கில் ஆராய்ந்த ஆங்கிலேயர் யாழ்பாணத்தில் புகையிலை, நெல்பயிரும், குடநாட்டில் யாழ்ப்பாண சுருட்டுக்கு இலங்கையின் மேற்கு-தெற்கு, தென் தமிழக பகுதிகளின் வரவேற்பு அதிகம் என்பதை அறிந்தனர். அதனல் அவைகளை ஏற்றுமதி செய்தனர். போதிய வருமானம் வராததால் இலங்கை மலை பகுதிகளில் குறிப்பாக குடநாட்டில் காபி பயிரிடலாம் என எண்ணிய ஆங்கிலேயே கம்பெனி பயிர் செய்வதற்காக இந்தியாவில் இருந்து தொழிலாளிகளை அடிமைகளாக கொண்டு வர முடிவு செய்தனர்.

1820ல் இந்தியாவில் ஏற்பட்ட கொடிய பஞ்சத்தால் தமிழக பகுதிகளில் மக்கள் பசியால் இறப்பதை கண்டு ஆங்கிலேய கம்பெனி அதிக கூலி, குறைந்த வேலையென மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருச்சி ஜில்லாக்களிலிருந்த மக்களிடம் பிரச்சாரம் பண்ணி ஏழை மக்களை இலங்கைக்கு கொண்டு போயினர். 1824ல் தமிழகத்திலிருந்து அழைத்து வரப்பட்ட 16 குடும்பங்கள் மலையத்தில் தங்க வைத்தது பிரிட்டிஷ் அரசு. எதிர்பார்ப்போடு தமிழகத்திலிருந்து கிளம்பிய மக்களை நடராஜா சர்வீஸ் மூலம் தனுஷ்கோடி அழைத்து வந்து அங்கிருந்து கப்பல் மூலம் தலைமன்னாரில் இறக்கினர். அங்கிருந்து கண்டி பகுதியில் உள்ள மலைபிரதேசங்களுக்கு மீண்டும் நடராஜா சர்வீஸ். 150 மைல் நடந்து போனதில் போகும் வழியிலேயே பசி, காட்டுவிலங்கு, நோய் ஆகியவற்றால் தாக்கப்பட்டு சுமார் 40 ஆயிரம் பேர் இறந்துள்ளார்கள். அதில் தப்பி குடியேற்றப்பட்டவர்கள் தான் மலையக தமிழர்கள் என அழைக்கப்படுகிறார்கள். பூர்வீக தமிழர்களிடம்மிருந்து பிரித்து காட்டவே அந்த பெயரில் அழைக்கப்பட்டார்கள். அழைக்கப்படுகிறார்கள்.

மலையக தமிழர்கள் மலைகளை கழனிகளாக்கி காபி, புகையிலை பயிர் செய்தனர். அதில் கொழுத்த ஆங்கிலேயர்க்கு அதிர்ச்சி பூச்சிகள் மூலம் வந்தது. பூச்சிகளால் காபி தோட்டம் அழிந்தன. கூடவே மலையக தமிழர்களையும் நோய் தாக்கியதால் 1834 முதல் 1843 வரையில் மலையக தமிழர்கள் மலேரியா, பசியால் சுமார் 90 ஆயிரம் பேர் மாண்டனர். அதே காலகட்டத்தில் பிரிட்டிஷ் மகாராணி இலங்கையில் 2,047,128 ஏக்கர் நிலங்களை வாங்கியவர். அதை பின்பு 1 ஏக்கர் 5பைசா என்ற விலையில் நிலங்களை விற்க செய்தார். ஓரே ஓரு பிரிட்டிஷ்காரர் மட்டும் 825 ஏக்கர் வாங்கி உள்ளார்.

1867ல் ஜேம்ஸ் ரெய்லர் என்ற ஆங்கிலேயர் இலங்கையில் தேயிலை பயிரை அறிமுகப்படுத்தினார். இது நல்ல வரவேற்ப்பு பெற்றதால் தேயிலை பயிர் செய்ய தமிழகம், கேரளா பகுதிகளில் இருந்து இந்து, முஸ்லீம் இன தமிழர்களை மீண்டும் மலையகத்துக்கு கொண்டு வந்தனர். அதில் மீண்டும் துயரம் தமிழகத்தில் வறுமையால் வாடிய 120 பேரோடு ஆதிலட்சுமி என்ற கப்பல் இலங்கை நோக்கி பயணமாகும்போது கப்பல் கடலில் மூழ்கி 120 பேரும் இறந்தனர். அதேபோல் 1867ல் தலைமன்னார் டூ கண்டி டூ மலைநாட்டுக்கு அனுராதபுரம், தம்பளை, கண்டி என ஓரு வழியும், ஆரிப்பு, புத்தாளம், கண்டி என மற்றொரு வழியும் ஊண்டு. இரண்டுமே காட்டு வழி. 1867ல் 639 பேர் கொண்ட தமிழக பிழைப்பு குழு முதல் பயணவழியில் மலையகம் புறப்பட்டது. 150 மைல் கடந்ததில் கடைசியாக மலையகத்துக்கு 186 பேர் மட்டுமே போய் சேர்ந்தனர். 453 போர் வழியில் இறந்தனர். இப்படி ஏராளமான செய்திகள் உண்டு மலையக மக்களிடையே. 1877ல் மட்டும் 1,45,000 பேர் மலையகத்தில் இறந்துள்ளனர். கடல் பயணத்தில், காட்டில், நோயால் இறப்பது கணக்கில்லை

அதோடு மலையக மக்கள் நாட்டை விட்டு மக்களை விட்டு, உறவுக்காரனை விட்டு வயித்து பாட்டுக்காக பிழைப்பு தேடி வந்து பிரிட்டிஷ் முதலாளிகள் அமைத்து தந்த லயர்களில் 3 இண் 1 பெண், 5 இண்கள் 2 பெண்கள் என தங்க வைக்கப்பட்டனர், மக்களை மேற்பார்வை செய்யும் கங்காணிகள் (கண்காணிப்பாளர்), தோட்ட துரைகள் பெண்களின் கற்ப்பை களவாடவும், சூறையாடவும் செய்தனர். எதிர்த்த ஆண்களை ஊயிரோடு எரித்தனர் - உயிரோடு புதைக்கப்பட்டனர். இந்த கங்காணிகள் தமிழகத்தில் வரிவசூலும், ஆங்கிலேயரின் எடுபிடிகளாகவும் இருந்தவர்கள். இலங்கைக்கு மலையக தமிழர்களை கண்காணிக்க வந்து கற்பை சூறையாடினார்கள். அதிகமான கூலி, குறைந்த வேலை என அழைத்து வந்து பெண்களை மிரட்டி, அடித்து தங்களது இச்சையை தீர்த்துக்கொள்வது பற்றியோ, எதிர்ப்பவர்களின் உயிரை எடுப்பது பற்றி தொழில் செய்யும் பிரிட்டிஷ் கம்பெனிகள் கவலைப்படவில்லை.

அந்த நிலையில் தான் மலையக இந்திய தொழிலாளர்களின் அவல நிலையை அறிந்து வர தமிழகத்தின் தஞ்சை பகுதியிலிருந்து காங்கிரஸ் கமிட்டியால் அனுப்பப்பட்டார் நடேசய்யர்.  துணி வியாபாரியாக மலையக தோட்டங்களுக்குள் புகுந்து அவர்களின் நிலையை கண்டு தனது இறுதி மூச்சு வரை தோட்ட தொழிலாளர்களுக்காக போராடியவர் 1929ல் தேசபக்தன் என்ற இதழையும் அவர்களுக்காக நடத்தினர்.

1893ல் தஞ்சையில் பிறந்தவர் நடேசய்யர். பெரியார் கருத்துக்களை ஏற்றுக்கொண்டவர். திரு.வி.கவின் தெழிற்சங்க பத்திரிக்கையில் அவருடன் இணைந்து பணியாற்றியபோது  கொழும்பு மாநகரில் இயங்கிய தென்னிந்திய வியாபாரிகள் சங்கத்தின் 1915 ஆம் ஆண்டு நடந்த ஆண்டு விழாவில் கலந்து கொள்ள கொழும்பு வந்தார். விழா முடிந்ததும் ஆங்கிலேயர்கள் தமிழகத்தில் இருந்து வேலைக்காக கொண்டு வந்த தனது மக்களை காண மலையகம் போக எண்ணினார். ஆனால் தோட்ட துரைமார்களாக இருந்த ஆங்கிலேயர்கள் அனுமதியில்லாமல் உள்ளே போக முடியாது என்றார்கள் கொழும்பு தமிழர்கள். மீறி போனால் கிரிமினல் குற்றம் ஆகிவிடும் என எச்சரித்ததால் துணி வியாபாரி வேடம் அணிந்து மலையகம் போனார். ஆங்கு தோட்ட துரைமார்கள், காங்காணிகளால் தன் மக்கள்க்கு நடக்கும் கொடுமைகளை கண்டு கேட்டு கலங்கி போனார். தமிழகம் திரும்பியதும் தான் பார்த்ததை, கேட்டதை அறிக்கையாக்கி தஞ்சை ஜில்லா காங்கிரஸ் கமிட்டியிடம் தந்தார். அந்த அறிக்கை அப்படியே கிடந்ததால் பொறுத்து பார்த்தவர் இனி என் வாழ்க்கை அம்மக்களோடு தான் என முடிவு செய்து விட்டு 1920ல் கொழும்பு வந்தார்.

இலங்கை தேசிய காங்கிரஸ் கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர்களான டாக்டர் ஈ.வி.ரட்சனம், எம்.ஏ.அருளானந்தம் ஆகியோரை வெளியீட்டாளராக கொண்டு தேசநேசன் என்ற பத்திரிக்கையை நடத்திவந்தார். அப்போது இலங்கையில் தொழிலாளர்களுக்காக முறையான அமைப்புயென்று எதுவும்மில்லை. தொழிலாளர்களுக்காக போராடிக்கொண்டிருந்த பதிவு பெறாத தொழிற்சங்க தலைவரான ஏ.ஈ.குணசிங்காவுடன் இணைந்து 1921 ல் பல போராட்டங்களை நடத்தினார். இவரின்; போராட்ட வீரியத்தையும் ஆங்கிலேய எதிர்ப்பையும் கண்ட தொழிலாளர்கள் குணசிங்காவை விட இவரை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். தொழிலாளர்கள் மத்தியில் இவருக்கு நல்ல பெயரும், ஆதரவும் இருந்தது. இந்த ஆதரவு இலங்கை தொழிலாளர் யூனியன் சங்க துணை தலைவராக அவரை உயர்த்தியது. 

1921ல் பிஜி தீவிலிருந்து நாடு கடத்தப்பட்ட டாக்டர்.மணிலால் இலங்கை வந்தார். தீவிர கம்யூனிஸ்ட்டான அவருடன் சேர்ந்து நடேசய்யர் தொழிலாளர்களுக்காக பல போராட்டங்கள் நடத்தினார். நடத்திய போராட்டங்கள் எல்லாம் தீவிரமாக இருந்ததால் மணிலாலை கண்டு பயந்த பிரிட்டிஷார் லாலை நாடு கடத்தினர். போராட்டவாதிகளான ஏ.ஈ.குணசிங்காவுக்கும் நடேசய்யருக்கும் மோதல் அதிகமானது. குணசிங்கா இந்திய தொழிலாளர்களை நாட்டை விட்டு துரத்த வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டார். இந்திய தொழிலாளர்களின் நலனுக்காக போராடினார் நடேசய்யர். இந்த முரண்பாட்டால் இணைந்திருந்த இருவரும் பிரிந்தனர். பிரிந்து போன நடேசய்யர் 1931 சனவரி 13 ல் இலங்கை இந்தியர் சம்மேளனம் என்ற தொழிற்சங்க அமைப்பை தொடங்கினார். அதன் பின் நிறைய அமைப்புகள் தொழிலாளர்களுக்காக என்று தோன்றியது. ஆனால் சட்டப்படி தோன்றிய முதல் அமைப்பு நடேசய்யர் துவங்கிய அமைப்பு தான்.

1936ல் நடந்த தேர்தலில் நிற்க முடிவு செய்தார். ஏற்கனவே 1929 ல் நடந்த தேர்தலில் தோற்றவர். பின் 1936ல் நடந்த பொது தேர்தலில் தொழிலாளர்களை நம்பி களம்மிறங்கினார் வெற்றி பெற்றார். தொழிலாளர்களுக்காக சம்பள உயர்வு வேண்டியும், மருத்துவ வசதி வேண்டியும், உரிமைகள் வேண்டியம் போராட்டம் நடத்தி பெற்றும் தந்தார். அதனால் 6 ஆண்டுகள் சட்ட நிருபன சபையில் உறுப்பினராகவும், 16 ஆண்டுகள் சட்டசபையிலும் உறுப்பினராகயிருந்தார். இலங்கையில் வயது வந்தவர்கள்க்கு வாக்குரிமை உண்டு என ஆங்கிலேய அரசு சொன்னபோது இலங்கையில் வாழ்ந்த தோட்ட தொழிலாளர்கள்களுக்கு சந்தோஷம் நமக்கென்று ஒரு பிரதிநிதியை தேர்ந்தெடுப்போம். அவர் மூலம் நமக்கு ஒரளவு சந்தோஷமான வாழ்க்கையும், பசங்களுக்கு படிப்பும் கிடைத்தால் போதும் என எண்ணினார்கள். அதன்படி 7 இந்திய வம்சாவழி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அது சிங்கள வெறியர்களான ஏ.ஈ.குணசிங்கா, டி.எஸ்.சேனநாயக்கா ஆகியோரை ஆத்திரம் கொள்ள வைத்தது. தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றத்துக்கு சலுகைகளை அப்போதே வாரி வழங்கினார்கள். அதேபோல் மலையக மக்களிடையே இடதுசாரிகள் கோலோச்சினர். 1947ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மலையக பகுதியில் 20 தொகுதியில் இடதுசாரிகள் வெற்றி பெறும் அளவுக்கு இடதுசாரிகளை மக்கள் நம்பினர்.

அதுதான் சிங்கள அரசியல்வாதிகளை குறிப்பாக தொழிலாளர்களுக்காக போராடுகிறோம் என்ற குணசிங்க, சேனநாயக்கா ஆகியோரை ஆத்திரம் கொள்ள வைத்தது. இவர்கள் வளர்ந்தால் உரிமைகளை தந்தால் ஆட்சி அதிகாரத்தில் ஏறி நம்மை கேள்வி கேட்பார்கள் என எண்ணினர். அதன் விளைவு அபாயகரமானதாக இருந்தது. இலங்கை சுதந்திரம் அடைந்த பின் ட்சியமைத்த சிங்கள மூலைகளில் அரசியல் கணக்கும் ஓட்டு கணக்கும் போட்டதின் விளைவு, 1948 முதலே தோட்ட தொழிலாளர்களுக்கு தொல்லை ஆரம்பமானது.

1948 ஆம் ஆண்டு நவம்பர் 15 ந்தேதி பாராளமன்றத்தில் குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதில் வம்சாவழி சட்டம், பதிவு சட்டம் என 2 முறையை வைத்தனர். வம்சாவழி சட்டம் என்பது சிங்களம் பேசுபவர்கள், இலங்கை தமிழர்களுக்கு வம்சாவழியாக பல நூற்றாண்டுகளாக இங்கேயே உள்ளோம் என்பதை தமிழர், சோனகர் ஆதாரங்களுடன் நிருபித்தால் அவர்களுக்கு வம்சாவழி சட்டம் பொருந்தும். பதிவு சட்டம் என்பது இந்தியாவிலிருந்து வந்து தோட்டதொழிலில் ஈடுபட்டுள்ள மக்களுக்கானது. அவர்கள் 1948 நவம்பர் 15 க்குள் இலங்கையில் பிறந்திருக்க வேண்டும், அதற்க்கு முன்பு இரண்டு தலைமுறையினர் இலங்கையில் வாழ்ந்திருக்க வேண்டும் அதற்க்கான சான்றுகளை காட்டி பதிவுக்கு மனு செய்யவேண்டும். அரசாங்கம் முடிவு பண்ணால் மட்டுமே அவர்களுக்கு குடியரிமை வழங்கப்படும் என்ற நிலை. 

இது மறைமுகமாக பல லட்சம் தோட்ட தொழிலாளர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப சிங்கள அரசியல்வாதிகள் கையாண்ட நரி திட்டம். அதற்க்கு அரசியல் காரணமும் உண்டு. பொது தேர்தல்களில் தோட்ட பகுதிகளில் சிங்கள அரசியல்வாதிகளால் அதிகம் வெற்றி பெற முடியவில்லை. தமிழர்களே வென்றார்கள். இது வருங்காலங்களில் பிரச்சனையாகிவிடும் என்பதாலே தான். சட்டதின் மூலம் மலையக மக்களை துரத்த முடிவு செய்தார்கள். இந்த சட்டத்தின் மூலம் சுமார் 7 லட்சம் தோட்ட தொழிலாளர்கள் நாடற்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். அதோடு 1949ல் பாராளமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நாடாளமன்ற சீர்த்திருத்த சட்டத்தின் படி தோட்ட தொழிலாளர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. இதனால் சுமார் 9 லட்சம் தமிழ் மக்கள் நாடற்ற நிலைக்கு ஆளானார்கள். பிரச்சனை பெருசானது.

தோட்டதொழிலாளர்கள் தானே என அப்போதைய இலங்கை தமிழ் அரசியல்தலைவர்கள் இதில் தலையிடாமல் விட்டு விட்டனர். இந்தியாவோ தோட்ட தொழிலாளர்கள் இந்திய குடியுரிமை வேண்டி விண்ணப்பித்தால் மட்டுமே இந்தியா ஏற்றுக்கொள்ளும் என கூறி விட்டது. ஆனால் தோட்ட தொழிலாளர்களில் பெரும்பாலானோர் இலங்கையில் இருக்கவே விருப்பம் தெரிவித்தனர். இறுதியில் 1964 அக்டோபர் 30 ந்தேதி இந்திய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கும் இலங்கை அதிபர் ஸ்ரீமா பண்டாரநாயக்க இடையே சாஸ்திரி-ஸ்ரீமா ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் அரசின் கணக்கெடுப்பின் படி இங்குள்ள 9 லட்த்து 75 ஆயிரம் தோட்டதொழிலாளர்களில் 5,25,000 பேரை இந்தியா ஏற்றுக்கொள்வது என்றும், 3லட்சம் பேருக்கு இலங்கை குடியுரிமை தருவது என்றும் முடிவானது. மீதி நிற்க்கும் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர்க்கு மற்றொரு ஒப்பந்தம் இருநாடுகளும் போட வேண்டும் என்றது. இந்த ஒப்பந்தம் 15 ஆண்டுகளுக்;குள் நிறைவேற்றப்படவேண்டும் என்றது.

ஓப்பந்தம் நிறைவேற காலதாமதமானது. இதனால் சிங்களர்கள் மலையக தமிழர்களுக்கு எதிராக கலவரத்தை தொடங்கினர். பிறந்த மண்ணை விட்டு வந்து இரண்டு நூற்றாண்டாக தங்களது வியர்வையை நீராக்கி, மானத்தை அடகு வைத்து காணிகளின் கொடுமைகளை தாங்கிக்கொண்டு சம்பாதித்து சேமித்து வைத்திருந்த பணத்தினை கலவரங்களின் போது மலையக மக்கள் குடியிருந்த லாயம் எனப்படும் வீடுகளில் புகுந்து கொள்ளையடித்தனர் உழைக்க தெம்பில்லாத சிங்களர்கள். தடுத்த தோட்ட தொழிலாளர்களை லாயங்களோடு வைத்து எரித்தனர். உரிமைக்காக போராடிய தோட்ட தொழிலாளர்கள் யார் என்பதை தோட்ட துரைமார்கள் காட்டி தந்தனர் அவர்களையும் குறிவைத்து கொன்றது சிங்கள படை. பதுளை, மொனராகலை, களத்துறை, கேகாலை, இரத்தினாபுரி, மத்தாளை பகுதிகளில்யிருந்த தோட்ட தொழிலாளர்களே அதிகம் பாதிப்படைந்தனர். இதனால் வெறுத்துபோன பெரும்பாலான மக்கள் உலகின் வேறு நாடுகளான பிரான்ஸ், கனடா, ஆஸ்திரியா, போன்ற நாடுகளில் போய் அகதிகளாக குடியேறினார்கள். அதே காலகட்டத்தில் திரும்பவும் தாயகத்துக்கே திரும்பியவர்களையும் அகதிகள் என்ற அடைமொழியல் சேர்த்துவிட்டது இந்திய அரசு.

அடுத்த 10 ஆண்டுகளுக்கு பின் 1974 ல் இலங்கையின் அதிபர் ஸ்ரீமாவுக்கும் இந்தியாவின் பிரதமர் இந்திராகாந்தி அம்மையார்க்கும் இடையே தோட்ட தொழிலாளர்களுக்கு என்று மீண்டும் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அதில் இந்திய குடியுரிமை வேண்டி 5 லட்சத்து 6 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இலங்கை குடியுரிமை வேண்டி 4 லட்த்து 70 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இந்தியா, குடியுரிமை வழங்க காலதாமதம் செய்தது. 1982 ல் 86 ஆயிரம் விண்ணப்பங்களை நிராகரித்தது, குடியுரிமை வழங்கப்பட்ட 90 ஆயிரம் பேர் இன்னும் இலங்கையில் உள்ளனர். அதனால் இனி ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வராது, ஓப்பந்தம் செல்லாது என அறிவித்தது இந்தியா.

படங்கள் உதவி - http://pictorialrecord.blogspot.in. ( நன்றி )

முந்தைய பாகத்தை படிக்க சுதந்திர தீவான இலங்கை.

3 கருத்துகள்:

 1. மிகவும் அருமையான ஆழமான பதிவு. ஆனால் யாழ்ப்பாணத் தமிழர்கள் ஆங்கில கல்விக்குமான தொடர்புகள் குறித்து விளக்கமாக எழுதி இருக்கலாம்.

  யாழ்ப்பாண குடா நாட்டைச் சேர்ந்தவர்கள் பிரித்தானியர் வருகைக்கு முன்னரே ஐரோப்பியர்களால் ஆளப்பட்டு வந்துள்ளனர். கிட்டத்தட்ட 400 வருடங்கள் போர்த்துகேயர், டச்சு, மற்றும் பிரித்தானியர்களால் ஆளப்பட்டு வந்துள்ளார்கள்.

  பிரித்தானியர் யாழ்ப்பாணத்தை டச்சினரிடம் இருந்து பெற்றுக் கொண்ட போதே அங்குள்ள மீனவர்கள் கத்தோலிக்கத்தில் இணைந்து முன்னேற்றம் அடைந்திருந்தனர்.

  அதனால் வேளாளர்கள் தமது நிலையை உயர்த்திக் கொள்ள ஆங்கிலேயரைச் சார வேண்டியதாயிற்று.

  சொல்லப் போனால் யாழில் கிறித்தவம் மற்றும் ஆங்கில கல்வியை விதைத்தவர்கள் பிரித்தானியர்கள் அல்ல, அமெரிக்கர்கள்.

  அமெரிக்க மிசனரிகளே அங்கு ஆங்கில கல்வியை கொடுத்தனர். விவசாயம் மற்றும் எவ்வித இயற்கை வளமும் இல்லாத யாழ்ப்பாணத்தவருக்கு இக் கல்வியே மூலதனமாக மாறியது.

  அதனால் தான் பிரித்தானியர்கள் யாழ்ப்பாணத்தவரை தமது அலுவலங்களில் பணிக்கு எடுத்துக் கொண்டனர்.

  அமெரிக்க மிசனரிகளோடு சேர்ந்து பிற்காலங்களில் இந்து மிசனரிகளும் ஆங்கிலக் கல்வியை ஊக்குவித்தனர்.

  அதனால் பல யாழ்ப்பாணத்தவர்கள் குறிப்பாக உயர்சாதி வேளாளர்கள் பலரும் மலேசியா, இந்தியா, சிங்கப்பூர், பர்மா போன்ற நாடுகளில் அலுவலக வேலைகளை பெற்றனர்.

  பலரும் கொழும்பு, கண்டியில் கண்காணியாக, நல்ல வேலைகளில் போய் அமர்ந்தனர்.

  தாங்கள் நினைப்பது போல வருணாசிரம கொடுமைக்குள்ளாகிய தாழ்த்தப்பட்டோர் எளிதில் ஆங்கில கல்வியை பெற முடியவில்லை என்பதே அங்கு இருந்த எதார்த்தம். அத்தோடு தலித்கள், தாழ்த்தப்பட்டோரின் தொகையும் யாழ் குடா நாட்டில் குறைவு என்பதால் தொடர்ந்து அவர்கள் கல்வி வாய்ப்புகளில் இருந்து புறக்கணிக்கப்பட்டே வந்தனர்.

  சிலர் கிறித்தவ மதத்துக்கு மாறி கல்வி வாய்ப்பு பெற்ற போதும், அங்கும் திருச்சபைகளை நிர்வாகிப்போராக வேளாளரே ஆதிக்கம் செலுத்தினார்கள்.

  இலங்கை விடுதலைக்கு பின்னரே தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி வாய்ப்பு பெறும் சூழல் ஏற்பட்டது என்பது தான் உண்மையாகும்.

  ஆரம்ப காலங்களில் கொழும்பு செட்டிகள், யாழ்ப்பாணத்தவர்கள் தம்மை தமிழர்கள் என அடையாளப்படுத்திக் கொள்ள தயங்கினார்கள். அதனால் சாதிய அடையாளங்களே அதிகமாக இருந்தன.

  1930-களில் அனைவருக்கும் வாக்குரிமை என்ற நிலை ஏற்பட்ட போது, அருணாச்சலம், பொன்னம்பலம் போன்றோர் சிங்கள ஆதிக்கம் வலுப்பதை உணர்ந்த பின்னரே தமிழர் என்ற அடையாளத்தை ஏற்படுத்தி அனைவரையும் தம் வயம் இழுக்கப் பார்த்தனர்.

  அப்போது கூட மலையகத் தமிழர்கள், முஸ்லிம் தமிழர்கள் போன்றோரை இணைத்துக் கொள்ள மறுத்தனர். அவர்களை அந்நியர்களாகவே பார்த்தனர்.

  தந்தை செல்வா போன்றோரே இதனில் இருந்து மாறுபட்டு ஒன்று பட்ட தமிழர் என்ற கொள்கைக்கு வந்தார் ஆனால் அவரது கட்சி வளரும் தருவாயில் இலங்கை சிங்கள ஏகாதிபத்தியத்துக்குள் சென்றே விட்டது, பத்து லட்சம் மலையக தமிழர்கள் நாட்டை விட்டு விரட்டப்பட்டதும் வரலாறு.

  பதிலளிநீக்கு
 2. ஆங்கிலேயர்கள் இலங்கையில் நடத்திய மதமாற்றம் பற்றி விபரமா பதிவின்மூலம் அறிந்து கொள்ள முடிந்தது. பரதேசி படத்தில் வரும் கொடுமை காட்சிகளை விட கொடுமையா தான் ஆங்கிலேயர்களால் இந்தியாவில் இருந்து தமிழர்கள் கொண்டு செல்லபட்டு இலங்கையில் கொடுமைபடுத்தபட்டிருக்கிறார்கள்.
  //இந்தியாவோ தோட்ட தொழிலாளர்கள் இந்திய குடியுரிமை வேண்டி விண்ணப்பித்தால் மட்டுமே இந்தியா ஏற்றுக்கொள்ளும் என கூறி விட்டது. ஆனால் தோட்ட தொழிலாளர்களில் பெரும்பாலானோர் இலங்கையில் இருக்கவே விருப்பம் தெரிவித்தனர்.//
  ஏன்? இந்தியாவால் இது மாதிரி வாழ்கையை இந்தியாவில் இவர்களுக்கு ஏற்படுத்தி தரயியலாது என்பதே கசப்பான உண்மை. இங்கிருந்து யாழ்பாணத்து செல்வந்த தமிழர்க்கா போராட்டம் நடத்திறார்களாம்!!!
  முன்னேறிய நாடுகள் தங்கள் நாட்டைவிட்டு உலக யுத்தத்தின் போது வெளியேறிய மக்களை திரும்பவும் தங்க நாட்டிற்க்கு அழைத்து நல்ல வாழ்க்கை அமைத்து கொடுப்பது போல் ஆங்கிலேயர்களால் வஞ்சகமாக அழைத்து செல்லபட்ட தனது மக்களுக்கு செய்ய முடியாம இலங்கைகாரன் குடியுரிமை கொடுக்கல்லையே துரத்திட்டானே என்று புலம்பிக் கொண்டிருக்கும் நிலையில் தான் இந்திய பொருளாதாரம் இருப்பது மிகவும் கவலையானது.

  பதிலளிநீக்கு
 3. அருமையான கட்டுரை. இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட மலையக மக்கள் தொடர்பான புள்ளிவிபரங்கள், உசாத்துணைகள் இருப்பின் எனக்கு உதவி செய்யவும். மலையக மக்களுக்காக உருவாக்கப்பட்ட முதலாவது குடியிருப்பு தொகுதி எங்கு அமைந்திருந்தது.

  பதிலளிநீக்கு