இன்னும் சில தினங்களில் 69வது சுதந்திரதினத்தை
நாம் கொண்டாடவுள்ளோம். சுதந்திரம் பெறும்போது ஜனநாயக நாடகா, மக்களுக்கான நாடாக,
மக்கள் நலன் கொண்ட, நம்மால் தேர்ந்தெடுக்கப்படபோகும் ஆட்சியாளர்களால் நாம்
ஆளப்போகிறோம் என மக்கள் நம்பினார்கள். ஆனால் எவ்வளவு முட்டாள்தனமான நம்பிக்கை
என்பதை ஒவ்வொரு முறையும் ஆட்சி பொறுப்புக்கு வருபவர்கள் கற்று தந்து வருகிறார்கள்.
இங்கு எதுவும்மே மக்களை பாதுகாப்பதற்கான சட்டங்கள் கிடையாது, ஆட்சியார்கள்,
அதிகாரிகள், பணம் படைத்தவர்களை காப்பாற்றும் சட்டமாகவே உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு
வந்தால் மக்கள் நலனே குறிக்கோளாக செயல்படுவோம் எனும் அரசியல்வாதிகள் ஆட்சிக்கு
வந்தபின் மக்கள் விரோத போக்குகளை தான் கையால்கிறார்கள்.
மக்கள் ஒவ்வொரு அரசியல்வாதியிடமும்
நம்பிக்கைவைத்து தோற்று போய்விட்டார்கள். தற்போது இருப்பதில் எந்த பேய் நல்ல பேய்
என பார்த்து ஆட்சி பொறுப்பை தரும் அளவுக்கு வந்துள்ளார்கள். மக்கள் இந்தளவுக்கு
மாற காரணம் அரசியல்வாதிகள் என்றால், அரசியல்வாதிகள் இப்படி மாற காரணம் மக்களும்
தான் காரணம்.
மக்கள் உணர்ச்சி வசப்படுவது, சினிமா
கட்டவுட்களுக்கு பாலபிஷேகம் செய்வது என காலத்தை கடத்துகிறார்கள். தங்கள்
வாழ்வாதாரம் பறிக்கப்படுவது பற்றி எப்போதும் கவலைப்படுவதில்லை.
கூடாங்குளம் அணுமின்நிலையம் திறக்ககூடாதுயென
30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஆண்டுக்கணக்கில் போராட்டம் நடத்தினார்கள். இது
அந்த பகுதி மக்களின் ஆர்ப்பாட்டம் என பக்கத்து மாவட்டத்துக்கு மக்கள் கூட அதற்கு
ஆதரவு தெரிவிக்கவில்லை. டெல்டா மாவட்டத்தில் நியூட்ரேன் எடுக்க விவசாய நிலங்கள்
அழிக்கப்பட மாத கணக்கில் அந்த பகுதி விவசாயிகள் போராடி வருகிறார்கள். இது அவர்கள்
போராட்டம் என பக்கத்தில் உள்ள கடலூர் மாவட்ட மக்களும் ஒதுங்கி நிற்கிறார்கள்.
செம்மரம் வெட்ட சென்று 20 தமிழக கூலி
தொழிலாளர்கள் ஆந்திரா அரச அதிகாரம் சுட்டுக்கொன்றுள்ளது. இது திருவண்ணாமலை மாவட்ட
பிரச்சனை என மற்ற மாவட்டங்கள் மட்டுமல்ல திருவண்ணாமலை மாவட்ட மக்களே ஒதுங்கி
நின்றுவிட்டார்கள்.
காவிரி நீர் பிரச்சனை, முல்லை பெரியார்
பிரச்சனை என இப்படி பல பிரச்சனைகளை பட்டியல் போட்டு சொல்ல முடியும். ஒவ்வொரு
பிரச்சனைக்கும் அங்கு பாதிக்கப்படுபவர்கள் தான் போராடுகிறார்களே தவிர பிற பகுதி
மக்கள் இந்த போராட்டங்களில் இணைவதில்லை. தஞ்சையில் விளையும் அரிசியை அந்த
விவசாயிகள் மட்டும்மா உண்கிறார்கள், கூடங்குளம் பகுதிகளில் பிடிக்கும் மீன்களை
அந்த பகுதி மீனவர்கள் மட்டுமா உண்கிறார்கள். மற்ற பகுதிகளுக்கும் தானே செல்கிறது
மற்றவர்களும் உண்கிறார்கள் தானே. பின் ஏன் அவர்கள் வாழ்வாதார போராட்டத்தில் பிற
பகுதி மக்கள் கலந்துக்கொள்வதில்லை ?.
பயம், அலட்சியம், இது அவன் பிரச்னை என ஒதுங்கி
செல்வதே காரணம்.
இது என் பிரச்சனை கிடையாது என ஒவ்வொருவரும்
ஒதுங்கி செல்கின்றனர். அரசாங்கத்தை எதிர்த்துக்கிட்டு வாழ முடியும்மா என்ற ரெடிமேட்
பதிலை வைத்துக்கொண்டு பேசுவது. ஒரு விபத்து நடந்தால் கூட உதவி செய்யக்கூட தயங்கும்
சமூகமாக நம் சமூகம் மாறியுள்ளது. அரசாங்கத்தை கண்டு அன்று
மக்கள் பயந்திருந்தால் இன்று நாம் சுதந்திர நாட்டில்
வாழ்ந்துக்கொண்டு இருக்கமாட்டோம். ஆனால் இங்கு தொட்டதிற்கெல்லாம்
பயம். அரசாங்க ஆஸ்பத்திரியில் கம்பவுண்டரிடம் கூட பயப்படும் நிலை தான் நம் படித்த,
படிக்காத மக்களிடம் உள்ளது.
மக்களிடம் பயத்தை உருவாக்கிய அரசாங்கம் நம்மை குனிய
வைத்து மட்டுமல்ல படுக்க வைத்தும் மிதிக்கிறது. அரசாங்கத்தை எதிர்த்து மக்கள்
ரோட்டுக்கு வருவதேயில்லை. நமக்கேன் வம்பு என ஒதுங்கி போகின்றனர்.
மக்களுக்காக போராடுபவர்களுக்கு ஒரு தார்மீக ஆதரவை கூட வழங்க தயங்குவது தான்
வேதனையிலும் வேதனை.
சசிபெருமாள் யாருக்காக போராடினார். இந்த
சமூகத்துக்காக வழக்கொழுந்து போன காந்திய கொள்கையை வைத்துக்கொண்டு போராடினார்.
இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாகவே மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்தார்.
இறுதியாக ஜீலை 31ந்தேதி கன்னியாகுமரி உண்ணாமலைக்கடை பகுதி மக்கள்
ஒன்றிணைந்து ஒரு டாஸ்மாக் கடையை மூடு என அரசாங்கத்தை எதிர்த்து போராட்டம்
நடத்தி வருகின்றனர். அந்த போராட்டத்துக்கு அறிவித்துவிட்டே சென்று தொலைபேசி
கோபுரத்தில் ஏறி போராட்டம் செய்துள்ளார் சசிபெருமாள். உச்சி கோபுரத்தில் நின்று போராடிய சசிபெருமாளை அரசு அதிகாரிகள் 5
மணி நேரம் தேமே என நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்துள்ளனர். வயதானர் அவரது உடல் நிலையை கவனத்தில் கொண்டு உடனடி
நடவடிக்கையில் இறங்கியிருக்க வேண்டும் ஆனால் ஈடுபடவில்லை. இந்த சமூகத்துக்காக தான்
அவ்வளவு உயரமான கோபுரத்தில் ஏறி நின்று போராடுகிறார். மக்களுக்காக போராடியவரின்
உயிரை அரசாங்கம் பறித்துள்ளது. இது அரசாங்கம் செய்த படுகொலை தான்.
எந்த மக்கள் நலனுக்காக போராடினாரோ,
அவர் இறந்ததை கண்டும் இந்த மக்களுக்கு இன்னமும் சூடு சொரணை வரவில்லை.
வேடிக்கை பார்க்கும் கூட்டமாக தான் உள்ளது. ஒரு சினிமா நடிகன் வந்தால்
முண்டியடித்து போய் பார்க்கும் கூட்டம் தனக்காக போராடி போராட்டக்களத்தில் உயிர்
விட்டதை கேட்டு உச் கொட்டிவிட்டு தனது செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டு நகர்ந்து சென்றுவிட்டது.
பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் குரூப்களில் மதுவிலக்கு தேவை என மது அருந்திக்கொண்டு சசிபெருமாளுக்கு அய்யோ சசிபெருமாள் போய்விட்டாரே என தங்கள் துக்கத்தை வெளிக்காட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
வாழ்க மக்கள்……………