புதன், அக்டோபர் 01, 2014

தமி்ழனாய் வெட்கி தலைகுனிகிறேன்.தமிழ் இனம் உலக இனங்களுக்கு ஒரு முன்மாதிரியான இனம். வாழ்வில், சமூகவியல், பழங்கால அரசியல், ஆட்சி அதிகாரம் போன்றவற்றில் ஒரு தனித்தன்மையிருந்தது. கடந்த 100 ஆண்டுகளில் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட முற்போக்கு திட்டங்களுக்கு, செயல்களுக்கு தமிழகம் தான் வழிகாட்டி. முதன் முதலில் ஒருவன் சுயமரியாதையோடு வாழ வழி செய்த மாநிலம் தமிழகம்.

காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் என்றாலும், குஜராத் பூகம்பம் என்றாலும், அமர்நாத் யாத்திரை மரணம் என்றாலும், தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டம் என்றாலும், எங்கேயோ ஒருவன் சுதந்திரம் வேண்டி போராடி அதிகார கரங்களால் கொல்லப்பட்டால் அவனுக்காக முதலில் கொடி பிடிப்பவனாக, உதவுபவர்களாக தமிழ்நாட்டு மக்கள் தான் இருந்தார்கள். இதை கண்டு இந்தியாவின் மற்ற மாநிலங்கள் பெருமைப்பட்டது உண்டு.

அப்படிப்பட்ட தமிழக மக்களை இன்று கேலியாக பார்த்து சிரிக்கிறார்கள் பிற மாநில மக்களும், பிற மாநில ஊடகங்களும்.

66 கோடி ரூபாய் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கில் முதல்வர் பதவியை பயன்படுத்தி ஊழல் செய்து சம்பாதித்தது நிரூபனமாகி 4 ஆண்டு சிறை தண்டனையும், முதல்வர் பதவியில் இருந்துக்கொண்டு தவறு செய்ததால் 100 கோடி அபராதமும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இது இறுதியான தீர்ப்பு என்பது போல வன்முறை வெறியாட்டம் நடத்தினார்கள், ஒப்பாரி வைக்கிறார்கள், அர்ப்பாட்டம் நடத்துகிறார்கள், உண்ணாவிரதம் இருக்கிறார்கள், தீர்ப்பையும், தீர்ப்பு தந்த நீதிபதியை விமர்சிக்கிறார்கள், திட்டுகிறார்கள் அதிமுகவினர். அவர்கள் தங்கள் தலைமை சிறையில் இருக்கிறது என்பதற்காக அழுவதாக, கோபப்படுவதாக நியாயப்படுத்தி ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால் கட்சிக்கு அப்பாற்பட்ட பல அமைப்புகள் இந்த தீர்ப்பை எதிர்த்து களம் இறங்கியுள்ளது அதிர்ச்சியாகி இருக்கிறது. தண்டனை தந்ததே தவறு என ஊழல்க்கு ஆதரவாக குரல் கொடுப்பதை தான் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. ஊழலுக்கு எதிரான தீர்ப்புக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் மெத்தப்படித்த சட்ட அறிஞர்கள் அமைப்பு, சினிமாக்காரர்கள், வியாபார பெருமக்கள் ஆகியோர். இதில் மீடியாக்களும் அடக்கம் என்பது உச்சபட்ச அதிர்ச்சி.

தை கண்டு தான் பிற மாநில மக்கள் கைகொட்டி சிரிக்கிறார்கள்.

கொஞ்சம் யோசித்து பாருங்கள். ஜெயலலிதா நாட்டுக்காக, மக்களுக்காக போராடியதாலா சிறையில் இருக்கிறார். மக்களின் பணத்தை முதல்வர் பதவி என்கிற அதிகாரத்தை கொண்டு கொள்ளையடித்து கோடிக்கணக்கில் சம்பாதித்தவர். அப்படி சம்பாதித்த பணத்துக்காக நீதிமன்ற படிக்கட்டு ஏறினார். என்னால் எவனையும், எதையும் விலைக்கு வாங்க முடியும் என்ற நினைப்பு கொண்டு யாரையும் மதிக்காத ஜெயலலிதா நீதித்துறையை கேலிக்கூத்தாக்கி 18 வருடமாக ஒரு வழக்கை முடிக்காமல் இழுத்தடித்தார்.

இது பொய் வழக்காக தான் இருக்கும் என ஒரு சாரார் நம்பினர். ஆனால் தீர்ப்பில் தெளிவாக, உங்களிடம் உள்ள 66 கோடி ரூபாய் சொத்துக்கு 9.5 கோடிக்கு தான் கணக்கு காட்டுகிறீர்கள். மீதி 55 கோடிக்கு என்ன கணக்கு என நீதிபதி கேட்கிறார். பதில் இல்லை. முதல்வர் பதவியில் அமர்ந்து அதிகார துஷ்பிரயோகம் செய்து ஊழல் செய்து சம்பாதித்த பணம் இது என்ற நீதிபதி தவறு செய்தது ஆவணங்கள் அடிப்படையில் ஊர்ஜிதமாகி 4 ஆண்டு சிறை தண்டனை, 100 கோடி அபராதம். கூட்டாளிகளுக்கு 4.6 ஆண்டு தண்டனை, 10 கோடி அபராதம் விதிக்கிறார். 


100 கோடி அபராதம் எப்படி விதிக்கலாம் என ஒரு தரப்பும், தண்டனை தந்ததே தவறு என மற்றொரு தரப்பும் கேள்வி கேட்பதோடு உடனே விடுதலை செய்ய வேண்டும். சட்ட விதிமுறைகள் பற்றி எங்களுக்கு கவலையில்லை. உடனே பெயிலில் விட வேண்டும் என்கிறார்கள் சட்டம் படித்த வழக்கறிஞர் பெருமக்கள் பலர்.

து தான் கொதிப்பை உருவாக்குகிறது. சட்டம் தெரியாத யாரோ ஒரு குப்பனோ, சுப்பனோ சொல்கிறார் என்றால் விட்டுவிடலாம் அறிஞர் பெருமக்கள் சொல்வது நியாயம்மா சட்டம் படித்த அறிஞர்களே ?

சட்டத்தின் படி நீதிபதி குன்ஹா நடந்துக்கொண்டது தவறு என்கிறீர்களா ?. சஹாரா குழும தலைவர் ஜாமினில் வெளிவர இதைவிட அதிக தொகை நீதிமன்றத்தில் செலுத்தினார். அப்போது எங்கே போனீர்கள் ?. முன்னால் பீகார் முதல்வர் லாலு, ஊழல் வழக்கில் தண்டனை தரப்பட்டு சிறைக்கு சென்றார். அபராதம் செலுத்திவிட்டு ஜாமில் வெளிவந்து மேல்முறையீடு செய்துள்ளார். ஆ.ராசா, கனிமொழிகூட விசாரணையை எதிர்க்கொண்டு வருகிறார்கள். பல ஆட்சியாளர்கள், சில முன்னால் முதல்வர்கள் ஊழல் வழக்கில் சிறை சென்றுள்ளார்கள். வழக்கு நடத்துகிறார்கள். அவர்கள் எதிர்பாராத சலுகை ஜெயலலிதாவுக்கு மட்டும் எதிர்பார்ப்பது ஏன் ?.

நாளை திமுக அதிகாரத்தில் இருக்கும்போது இதேபோன்ற தண்டனை அந்த கட்சியை சேர்ந்த விசாரணையை எதிர்க்கொண்டுயிருக்கும் ராசா, கனிமொழி, பாமக அன்புமணிக்கு இதேபோல் தண்டனை தந்தால் தந்தது தவறு, விடுதலை செய்ய வேண்டும் என பொங்குவீர்களா ?. இங்கு சட்டம் அனைவருக்கும் சமம் என்கிறது. அதிகாரத்தில் இருந்தால் அவர்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என நினைப்பது எந்த விதத்தில் நியாயம்?. சட்டத்தை மதிக்கமாட்டேன் என்கிற நடைமுறையை நீங்கள் கையில் எடுத்துள்ளீர்களே இது நியாயம்மா ?.சினிமாக்காரர்கள் மேடை போட்டு தெய்வத்தாயை சிறையில் வைத்தது தவறு என காசு வாங்காமல் நடித்துக்கொண்டு இருக்கிறார்கள். பணத்துக்காக ஆடையில்லாமல் நடிப்பவர்களிடம் நேர்மையை எதிர்பார்க்க முடியாது.

வியாபாரத்துக்கு முக்கியம்மே நாணயமும், நேர்மையும் தான். அப்படிப்பட்ட வியாபார சங்க தலைவர் வெள்ளையன், தாயின் விடுதலைக்கு தமிழகம்மே கடையடைப்பு நடத்த வேண்டும் என ஊழலுக்கு ஆதரவாக கடைகளை அடைக்க சொல்கிறார்.

குற்றவாளியான தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒருவரை தமிழக அரசின் சிறப்பு ஆலோசகர், தமிழக அரசில் பணியாற்றும் மூத்த ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ் அதிகாரிகள் சிறைக்கு சென்று சந்திக்கிறார்கள். இதற்கு எந்த சட்டம் வழி அமைத்து தந்தது என தெரியவில்லை. 

தமிழகத்தில் பல நல்ல மாற்றங்களுக்கு வித்திட்டவங்கள் கல்லூரி மாணவ - மாணவிகள்.  இந்தி திணிப்பு எதிர்ப்பாகட்டும், ஈழ போராட்டமாகட்டும் இவர்களின் பங்களிப்புக்கு பின்பு தான் அதில் பெரிய மாற்றம் வந்தது. ஆனால் இன்று அதே கல்லூரி மாணவர்கள் ஊழலுக்கு ஆதரவாக கல்லூரி புறக்கணிப்பு செய்வது வேதனையிலும் வேதனை.

தமிழகத்தின் சில பெரிய ஊடகங்கள், ஜெயலலிதா கைது செய்யப்பட்டதற்கு துக்கம் அனுசரிக்கிறது. அதோடு, செய்திகளில்  ஊழலுக்கு ஆதரவாக  மறைமுகமாக மக்களை தயார் படுத்தி போராட தூண்டுகிறது.

ஓட்டரசியல் கட்சியான அதிமுகவை சேர்ந்தவர்கள் சாலையில் பந்தல் அமைத்து தங்கள் கட்சி தலைவியை விடுதலை செய்ய வேண்டும் என பட்டவர்தனமாக கேட்கிறார்கள். அவருக்கு தண்டனை தந்ததே தவறு என்கிறார்கள். இவர்கள் நாளை எப்படி மக்களிடம் ஓட்டு கேட்டு வருவார்கள் ?.

மற்ற மாநிலத்துக்கு முன்மாதிரியாய் இருந்த தமிழக மக்கள் இவைகளை கண்டும் காணாமல் தங்கள் இருப்பது ஊழலுக்கு துணை போய் நாங்கள் ஊழலுக்கு ஆதரவானவர்கள் என காட்டியுள்ளது. இதற்கு நிச்சயம் ஒவ்வொரு தமிழக குடிமகனும் வெட்கி தலை குனிய வேண்டும்.

12 கருத்துகள்:

 1. இதற்கு நிச்சயம் ஒவ்வொரு தமிழக குடிமகனும் வெட்கி தலை குனிய வேண்டும். //

  naan ninaiththirunthathai ellam appadiye ninga eluthittinga sir.

  enga manilamtaan naasamaa poochu poorattam ellam senju ippo
  tamilnattilum athu pola poorattam unnaaviratham ellam sevathai paarthal varuthaamaka irukkirathu.

  பதிலளிநீக்கு
 2. வெள்ளைத் தோல் மனிதர்கள் ஊழல் செய்ய மாட்டார்கள்.

  பதிலளிநீக்கு
 3. அருமையான கருத்துக்கள்!

  பதிலளிநீக்கு
 4. நீதி மன்ற அவமதிப்பு என்பது இவர்களுக்கெல்லாம் கிடையாதா? இவர்கள் எல்லாம் நீதிக்கு மேற்பட்டவர்களோ.
  இப்படி ஆர்பாட்டம் பண்ணுபவர்கள் அவர்களுடைய உடமைக்கோ , உரிமைக்கோ எதாவது பிரச்னை வந்தால் பரவாயில்லை என்று பேசாமல் தீங்கு செய்தவனை விட்டு விடுவார்களா?
  அப்படி தவறு செய்தவனை எல்லாம் விட்டு விட வேண்டும் என்றால் போலீஸ்,நீதி மன்றம் எல்லாம் எதற்கு.
  பேசாமல் களைத்து விட்டு போகலாம். படித்தவனும்,மேதாவிகளும் எதோ ஆதாயம் கிடைக்கும் என்று இப்படி செய்வது சமூகத்தை பாதிக்கும் செயல்.

  பதிலளிநீக்கு
 5. நல்ல பகிர்வு. ஊழலுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது மிகவும் வேதனையாக உள்ளது. வருங்கால இளைஞர்களை நினைத்தால் கவலையாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 6. தமிழனனேன்றாலே வெட்கி தலைகுனிய வேண்டியதுதான்....

  பதிலளிநீக்கு
 7. Please read this article there would be an answer for your question.
  http://vimarisanam.wordpress.com/2014/10/01/ஜெயலலிதாவுக்கு-நிகழ்வது/

  பதிலளிநீக்கு
 8. //சினிமாக்காரர்கள் மேடை போட்டு தெய்வத்தாயை சிறையில் வைத்தது தவறு என காசு வாங்காமல் நடித்துக்கொண்டு இருக்கிறார்கள். பணத்துக்காக ஆடையில்லாமல் நடிப்பவர்களிடம் நேர்மையை எதிர்பார்க்க முடியாது.//
  தரங்கெட்ட கூட்டத்துக்குச் சவுக்கடி!

  பதிலளிநீக்கு
 9. சிறந்த திறனாய்வுப் பார்வை
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 10. தமிழன் என்று சொல்லடா.. தலை குனிந்து நில்லடா..

  பதிலளிநீக்கு
 11. மிகவும் சரியா சொன்னீர்கள்.ஊழலுக்கு ஆதரவு என்பது வெட்ககேடானது

  பதிலளிநீக்கு