வெள்ளி, ஜூலை 24, 2015

சாராயத்தை ஊக்குவித்த எம்.ஜீ.ஆர். வரலாறு முக்கியம்.

தமிழகத்தில் மதுவின் வீச்சு 8 வயது பிள்ளைகள் குடிக்கும் அளவுக்கு வந்து நிற்கிறது. 15 வருடத்துக்கு முன்பு குடி பழக்கம் இருக்கிறது என்றால் பெண் தரமாட்டார்கள். இன்று குடிபழக்கம் இல்லாதவனை விநோதமாக பார்க்கும் மக்கள் நிறைந்த மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது. அந்தளவுக்கு அரசாங்கம்மே மதுக்கூடங்களை திறந்து அது தப்பில்லை என்றாக்கிவிட்டது. 

கள்ளச்சாரயத்தை துரத்தி துரத்தி மாமூலுக்காக பிடித்த அதே காக்கிகள் இன்று வண்டி ஓட்டுபவனை துரத்தி துரத்தி பிடிக்கிறார்கள். மதுவிலக்கு என்றால் போலிஸாரே எதிர்த்து கொடி பிடிக்கும் அளவுக்கு தினம் தினம் அவர்களது பாக்கெட்டை நிரப்புகிறார்கள் குடித்துவிட்டு வண்டி ஓட்டும் குடிமகன்கள். 

குடியை எதிர்க்காத அரசியல் கட்சிகள் தமிழகத்தில் திமுக, அதிமுக மட்டுமே என்ற நிலையில் இருந்தது. காரணம் ரொம்ப வெளிப்படையானது. இரண்டும் தமிழகத்தை ஆண்ட ஆளும் கட்சிகள். முதல்வராக இருந்த கலைஞர், முதல்வராக இருக்கும் ஜெ இருவருக்கும் அரசின் நிதிநிலை பற்றி தெரியும். அதோடு, கட்சி தலைமைக்கு மிக நெருக்கமானவர்கள் மதுபான உற்பத்தி ஆலைகளை வைத்திருப்பதும் மதுவிலக்கை கொண்டு வராமல் இருந்தது ஒருகாரணம். இதனாலே மதுவிலக்கு பற்றி பேசாமல் இருந்தனர்.

காலமாற்றம் மது என்ற அரக்கனால் தமிழகம் சீரழிவதை கண்டு திமுக தலைமையை நாங்கள் ஆட்சிக்கு வரும்போது மதுவிலக்கு அமல்படுத்துவோம் என அறிவிக்கும் நிலைக்கு தள்ளிவிட்டது. இது சாத்தியமா – சத்தியமற்றதா என்ற விவாதம் ஒரு புறம்மிருந்தாலும். இதுவரை மதுவிலக்கு வேண்டும் என போராடிய ராமதாஸ், வை.கோ, தமிழருவிமணியன், பழ.நெடுமாறன், கம்யூனிஸ்ட்டுகள் இதை வரவேற்பதை விட்டுவிட்டு அய்யய்யோ என எகிறி குதிக்கிறார்கள். மதுவிலக்கை ரத்து செய்த கட்சியை சேர்ந்த நீங்கள் மன்னிப்பு கேளுங்கள் என அன்புமணி ஸ்டாலினுக்கு கடிதம் எழுதுகிறார். தமிழருவி மணியன் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்கிறார். பழ.நெடுமாறன், சீமான் போன்றவர்கள் அதெல்லாம் செய்யமாட்டார் என குய்யோ முய்யோ என குதிக்கிறார்கள். 

ஆனால் இதற்கு நேர் எதிராக தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு மறைமுகமாக, தாலுக்காவுக்கு 2 எலைட் டாஸ்மாக் கடையென சுமார் 550 புதிய கடைகள் திறக்க திட்டமிட்டுள்ளதாக செய்தியை கசியவிட்டுள்ளது. மதுவை எதிர்க்கும் கட்சிகள், இயக்கங்கள் நியாயமாக ஆளும் அதிமுக அரசாங்கத்தின் இந்த தகவலை கேட்டு கொதித்திருக்க வேண்டும், ஆனால் சின்ன முனகல்கள் கூட எழவில்லை. ஆனால் பூரண மதுவிலக்கு கொண்டு வருவோம் என்ற திமுக மீது விழுந்து பிராண்டுகள். இது வித்தியாசமாக இருக்கிறது. 


விவாத தளங்களில் திடீர் அரசியல்வாதி சீமான், மதுவிலக்கை தமிழகத்தில் விலக்கி சாராயகாடாக தமிழகத்தை மாற்றியவர் கருணாநிதி தான் என முழங்குகிறார். அதுக்கூட பரவாயில்லை. ராமதாஸ், நெடுமாறன் போன்றவர்கள் அதேதோனியில் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. கீபோர்டு காப்பி பிரியர்களும் அதை வழிமொழிந்துக்கொண்டு இருக்கிறார்கள்.

வரலாறு மிக முக்கியம். தமிழகத்தில் மதுவரலாறு என்பது நீண்ட நெடியது. அதை மறைப்பது பச்சை துரோகம். தமிழகம் குடிகார மாநிலமாக மாறியது அதிமுகவை மட்டும்மே சாரும். எம்.ஜீ.ஆர் ஆட்சி காலத்தில் தொடங்கியது இன்றைய ஜெ தலைமையிலான அதிமுக வரை தொடர்கிறது. 

ஆதிகாலம் தொட்டே மதுப்பழக்கம் நம்மிடையே இருந்து வந்தது. பனங்கல், தென்னங்கல், ஈச்சங்கல்லை நம் மக்கள் பருகி வந்தனர். அது உடல் தெம்புக்காகவும் பயன்பட்டது. காலப்போக்கில் அதில் போதை பொருட்கள் கலந்து விற்கப்பட்டது. அதேகாலக்கட்டத்தில் கஞ்சாவும் தமிழர்கள் பயன்பாட்டில் இருந்தன. பின்னர் கள்ளச்சாராயம் புழக்கத்துக்கு வந்தது. சட்டத்துக்கு புறம்பாக தான் இவைகள் செயல்பட்டு வந்தன.

மதுவிலக்கு தொடர்பாக 1963ல் நடந்த முதலமைச்சர்கள் மாநாட்டில் மதுவிலக்கை அமல்படுத்தும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கொடுத்த வாக்குறுதிகள், அதை குஜராத் தவிர வேறெந்த மாநில அரசும் பின்பற்றவில்லை.  

1970களுக்கு பிறகு தமிழகரசு நிதி நிலமை சீராகயில்லை. மத்தியரசின் பழைய வாக்குறுதி ஒன்றை சுட்டிக்காட்டி, மதுவிலக்கு எங்கள் மாநிலத்தில் அமலில் உள்ளது அதனால் எங்களுக்கு நிதி தாருங்கள் என கேட்டார் அப்போது முதல்வராக இருந்த கலைஞர். அப்போது மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசாங்கம், மது விற்பனை செய்து பின் அதை தடை செய்யும் மாநிலங்களுக்கே நிதி தரப்படும் என்றது. 


அதிகாரிகளுடனான தீவிர ஆலோசனைக்கு பிறகு தமிழகத்தில் உள்ள மதுவிலக்கை ரத்து செய்துவிடலாம் என முடிவு செய்கிறது அப்போதைய திமுக அரசாங்கம். இதை கேள்விப்பட்டதும், முதுபெரும் அரசியல் தலைவரான ராஜாஜி முதல்வராக இருந்த கலைஞரை சந்தித்து மதுவிலக்கை ரத்து செய்யாதீர்கள் என கோரிக்கைவைக்கிறார். மத்தியரசிடம் நிதி கேட்டபோது அதற்கு அவர்கள் இப்படியொரு காரணம் சொல்கிறார்கள். அதனால் தான் மதுவிலக்கை ரத்து செய்கிறோம். மாநிலத்தின் நிதிநிலை சீரானதும் மீண்டும் மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்கிறார். அதில் வெளியே வெளிப்படுத்தாக ரகசியம். இரண்டு ஆண்டுக்கு பின் மதுவிலக்கு ரத்து செய்துவிட்டு மத்தியரசிடம் நிதி கேட்போம், அப்போது தருவார்கள் என்பது. இதை வெளிப்படையாக அறிவிக்க முடியாது என்பதால் இதைப்பற்றி சொல்லவில்லை. 1971 ஆகஸ்டு 30ந்தேதி நெருப்பாற்றில் நிற்கிறோம் என சட்டமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து மதுவிலக்கை ரத்து செய்வதாக முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.

இரண்டு ஆண்டு கடந்தபின் அவர் ராஜாஜியிடம் சொன்னபடி, 1973 ஜூலை 30ந்தேதி கள்ளுக்கடைகளை மூடினார். பின்னர் 1974 செப்டம்பர் 1ந்தேதி அவரே சாராயக்கடைகளையும் மூட உத்தரவிட்டார். அன்று முதல் தமிழகத்தில் மீண்டும் மதுவிலக்கு அமலுக்கு வந்துவிட்டது. 

பின்னர் ஆட்சிக்கு வந்த எம்.ஜீ.ஆர், பர்மிட் வாங்கி குடிக்க சட்டமியற்றினார். 1981ல் மதுவிலக்கை ரத்து செய்தார். கள்ளுக்கடை, சாராயக்கடைகளை திறந்தார். மிதபோதை வகை சாராயத்தை அமல்படுத்தினார். மலிவு விலை சாராயத்தை தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தினார். பாக்கெட் சாராயம் அப்போது முதல் சக்கைபோடு போட துவங்கியது. 1983ல் மதுகொள்முதல் மற்றும் விற்பனைக்காக டாஸ்மாக் நிறுவனத்தைத் அரசாங்கத்தின் சார்பில் தொடங்கியவர் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அதோடு, சாராயக்கடை எனப்படும் ஒயின்ஷாப்களுக்கு அனுமதி தர லட்சங்களில் லஞ்சம் வாங்கி எம்.ஜீ.ஆர் சிக்கினார். அப்போது அது தமிழகத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. 

1991க்கு பின் தான் நிலமை தலைகீழாக மாறியது. டாஸ்மாக்குக்கு அதிக முக்கியத்துவம் தந்தார். டாஸ்மாக்கில் பணம் கொட்ட துவங்கியதால் அடுத்து ஆட்சிக்கு வந்த திமுக அதன்பின் மதுவிலக்கு என்கிற சட்டத்தை பயன்படுத்தவில்லை. 2001ல் ஆட்சி பொறுப்புக்கு வந்த ஜெ 2003ல் தனியார் மது விற்பனை நிலையங்களை தடை செய்தவர் அந்த தொழிலை இனி அரசாங்கம்மே செய்யும் என அறிவித்தார். இன்று வரை டாஸ்மாக் கடைகளை இரண்டு கட்சியும் ஆட்சிக்கு வரும்போது டெவலப் செய்கிறதே ஒழிய அதை மூட முயற்சி எடுக்கவில்லை. 

நீண்ட போராட்டத்துக்கு பின்பே இப்போது ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு கொண்டு வருவோம் என்கிறது திமுக. ஆக இந்த வரலாறு தெரியாமல் திமுகதான் காரணம் என குதறிக்கொண்டு இருக்கிறார்கள் நடுநிலை முகமுடி போட்டுக்கொண்ட அதிமுகவினர். 

அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள் ஆனால் ராமதாஸ், கம்யூனிஸ்ட்டுகள், நெடுமாறன், சீமான் போன்றவர்கள் பேசுவதை காணும்போது இப்போது, தமிழகத்தில் சாதி, மதத்தை வைத்து மட்டும் அரசியல் நடத்தவில்லை பொய்களை வைத்து தலைவர்கள் அரசியல் நடத்துகிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. 

வாழ்க வையகம்….

வியாழன், ஜூலை 16, 2015

எது முடியாதே அதுவே மக்களின் எதிர்பார்ப்பு. இதுவே பலருக்கு பிழைப்பு


காந்தி, பெரியார், காமராஜர், கக்கன், பிரபாகரன் போன்றவர்களின் பிறந்தநாள்கள், இறந்தநாள் வந்துவிட்டால் இணையதளம் முழுக்க ஒரே அலம்பல்கள். காந்தி போன்ற தலைவர் வேண்டும், பெரியார் போன்ற சமூக சீர்த்திருத்தவாதி வேண்டும், காமராஜர் போன்ற நேர்மையாளர் வேண்டும் என கை விரல் தேயும் அளவுக்கு கீ போர்டில் அடித்து தங்களது கருத்தை பதிவு செய்கிறார்கள். 

இப்படி கேட்பவன் எவன் ஒருவனும், நான் காந்திஜியின் பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பேன், பெரியாரின் ஒரு சில கொள்கைகளையாவது என்னளவில் நடைமுறை படுத்துவேன் என சொல்வதில்லை. காமராஜர் போன்ற தலைவர் வேண்டும் என எழுதுபவன், பேசுபவன் அவர்களை பின்பற்ற மாட்டான். ஆனால் அடுத்தவன் பின்பற்ற வேண்டும் அதுவும் அரசியல்வாதிகள் பின்பற்ற வேண்டும் என எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்.

அந்தகாலக்கட்டத்தில் அடக்கி ஆண்ட ஆங்கிலேயேனை எதிர்த்து தெருவுக்கு வந்தபோது காந்தியும், பெரியாரும், பகத்சிங்கும் பதுங்கிவிடவில்லை. தெருவுக்கு வந்து கொடி பிடித்தார்கள், அடிவாங்கினார்கள், சிறை சென்றார்கள், சித்தரவதைகளை அனுபவித்தார்கள். மக்கள் அவர்கள் பின்னால் அணி வகுத்து நின்றார்கள். அன்று மக்கள் 90 சதவிதம் நேர்மையுடன் இருந்தார்கள். அதனால் 90 சதவித தலைவர்கள் நேர்மையுடன் இருந்தார்கள்.

இன்று தெரு குழாயில் தண்ணீர் வரவில்லை என போராடும் போது அங்கு போலிஸ் வந்தால் இவன் தான் மறியலுக்கு வரச்சொன்னான் என முன் நிற்பவனை போட்டுக்கொடுத்துவிட்டு ஓடுவது யார்?. இன்று 10 சதவித மக்கள் தான் நேர்மையுடன் வாழ்கிறார்கள். இதனால் அரசியல்வாதிகள் 99 சதவிதம் கரைபடிந்துப்போய் இருக்கிறார்கள். 

கேள்வி கேட்கும் நாம் நேர்மையாக இருந்தால் அவர்கள் நம்மை கண்டு பயப்படுவார்கள். ஆனால் நாம் அப்படி இருப்பதில்லை. நான் நேர்மையாக இருக்கமாட்டேன், ஆனால் நீ நேர்மையாக இருக்க வேண்டும் என கேட்பது எந்த விதத்தில் நியாயம்??????????.

உலகத்தை புரட்டி போட்டாலும் நேற்றைய காந்தி போல, பெரியார் போல, காமராஜர் போல, கக்கன் போல ஒருவரும் வரப்போவதில்லை. 

மனதுக்குள் சாதிவெறி, மதவெறி கொண்டு அலைந்த கூட்டம் திட்டமிட்டு மோடி வந்தால் நாடு சுபிட்சமாகும், பால் ரோட்டில் ஓடும், தேன் கால்வாயில் ஓடும் வேண்டுமளவுக்கு பிடித்துக்கொள்ளலாம், பேங்க் அக்கவுண்ட்டில் உழைக்காமலே லட்சங்களில் பேலன்ஸ் இருக்கும் என பரப்பி பதவிக்கு கொண்டு வந்தார்கள். ஆனால் நடப்பதுயென்ன என்பதை நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். 

மக்கள் எதார்த்தத்தை புரிந்துக்கொள்ள வேண்டும். பேசுபவர்கள், எழுதுபவர்கள் அதை சொல்ல மாட்டார்கள் ஏன் எனில் காந்தி, பெரியார், காமராஜார் பற்றி எழுதுவது, பேசுவது எல்லாம் அவர்களை போல் நீங்கள் மாற வேண்டும் என்பதற்காகல்ல. அவர்கள் வியாபாரிகள். பெரியார், காமராஜரை வியாபார பிம்பங்களாக்கி உள்ளார்கள். புரிந்துக்கொள்ளுங்கள்.

சமூகத்தில் மாற்றம் வேண்டும் என்றால் உங்களில் இருந்து தான் அது உருவாக வேண்டும். ஒருவரால் எந்த மாற்றத்தையும் இங்கு கொண்டு வந்துவிட முடியாது. ஒவ்வொருவராக மாற வேண்டும் அப்படி மாறினால் மாற்றம் நிச்சயம் வரும்.
முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள்…….