வெள்ளி, செப்டம்பர் 27, 2013

சினிமா விமர்சன விருந்தாளிகள்……



சினிமா பாத்தோம்மா போனோம்மான்னு இல்லாம்மா விமர்சனம்ங்கிற பேர்ல அவ டான்ஸ் நல்லாயிருந்தது, அவனுக்கு நடிப்பே வரல என எழுதுவதை கூட பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் சில படங்கள் வெளிவரும் முன்பே இது போன்ற படம் உலகத்தில் வேறு எந்த மொழியிலும் வரவில்லை. தமிழ் சினிமாவில் இது ஒரு மைல் கல் என வருடத்துக்கு நாலு படத்துக்காவுது விமர்சனத்துக்கு சர்டிப்கெட் தருவதை தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ரிலிசுக்கு முன்பே படத்தை பார்க்கும் சினிமா செய்தியாளர்கள் விமர்சனம் எழுதுவது ஓ.கே படத்தை பார்க்காமலே எழுதும் இணைய தள, முகநூல் விமர்சன விருந்தாளிகளை என்னவென்று சொல்வது.

சமீபத்தில் இயக்குநர் ராம் இயக்கிய தங்கமீன்கள் என்ற படம் வந்தது. படம் வருவதற்கு முன்பே ஆஹா ஓஹோ என ஒரே பாராட்டு விழா நடத்தினார்கள் முகநூல் தோழர்கள். இந்த படத்துக்கு தியேட்டர் கிடைக்கல என கிளிசரின் போடாமலே கண்ணீர் விட்டார்கள். இதனாலே நான் இந்தப்படத்தை காணவில்லை. படம் பார்க்காமல் எதையும் சொல்லக்கூடாது அதனால் படம் பற்றி விமர்சனத்தை தவிர்த்துவிடுகிறேன். படம் வந்து ஒருவாரம் கூட ஓடவில்லை.

ஆனால் படம் மாபெரும் வெற்றி, மக்கள் ஆதரவு பெருகி ஆறாக ஓடுகிறது என தொலைக்காட்சி அரங்கில் உட்கார்ந்துக்கொண்டு அதன் இயக்குநர், நடிகர்கள் பேசுவது அபத்தமாக இருக்கிறது. இந்த படம் மட்டுமல்ல தனுஷ்சின் மரியான், பாரதிராஜாவின் அன்னக்கொடி, ஹரிதாஸ், மிஷ்கினின் நந்தலாலா, விக்ரம் நடித்த ஒரு படம் என சில படங்கள் வந்த வேகத்தில் பெட்டிக்குள் போனது. இந்த படங்கள் பிற தேசத்து படங்களின் தழுவல், நழுவல், வழுவல் என இணையத்தில் சொன்னார்கள். சிலர் பாராட்டினார்கள்.

விமர்சக விருந்தாளிகள் பாராட்டுவதை விட ரசிகன் ரசித்து பாராட்ட வேண்டும். விமர்சக விருந்தாளிகள் பாராட்டும் இலக்கிய படத்தை பணம் தந்து படத்தை பார்க்கும் ரசிகன் பாராட்டுவதில்லை என்பதே எதார்த்தம். தற்போதைய ரசிகனுக்கு நாட்டை காக்கும் படம்மோ, அறிவுரை சொல்கிற, சென்டிமெண்டை பிழிந்து ஊத்துக்கிற படம்மோ, பில்டப் படம்மோ தேவையில்லை. அவனுக்கு தேவை காதல், நண்பர்கள், காமெடி, ஜாலி இதுதான். அவன் கேட்பதை தந்தாலே போதும். அதை விட்டுவிட்டு தங்கள் மேதாவி தனத்தை காட்ட ‘இலக்கிய, கலை தரத்தில்’ படம் எடுப்பது, சோகத்தில் நெஞ்சை நக்கும் திரைப்படங்களை எடுத்து வெளியிடுவதை ரசிகன் தற்போது பார்ப்பதில்லை, ரசிப்பதில்லை. அந்த ரசனைக்கான கூட்டம் குறைந்துவிட்டது. 80களில் பாசத்தை பற்றி படம் எடுத்தார்கள் ஓடியது. 90களுக்கு பின் காதல் படம் தான் ஓடுகிறது. இப்போது காமெடி கலந்த காதல். கண்ணா லட்டு திண்ண ஆசையா, தேசிங்கு ராஜா, யாயா, கேடிபில்லா கில்லாடி ரங்கா, சூதுகவ்வும், எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம்.

அந்த பாதையில் போவதைவிட்டுவிட்டு நான் சினிமாவில் மறுமலர்ச்சி ஏற்படுத்த போகிறேன் என எழுந்தவர்கள் எல்லாம் குப்புற விழுந்துக்கிடக்கிறார்கள். இயக்குநர் ஹரி, சுந்தர்.சி, கே.எஸ்.ரவிக்குமார் போன்ற மசாலா பட இயக்குநர்கள் இன்னும் 10 வருடத்துக்கு சினிமாவில் இருப்பார்கள். ராம், மிஷ்கின், அமீர் போன்றவர்கள் இருப்பார்களா என்பது சந்தேகமே. இவர்களை சினிமா விமர்சகர்கள் வேண்டுமானால் பாராட்டிக்கொண்டே இருக்கலாம். ரசிகன் ??????????????

மாற்று சினிமா, மாற்று கதை வரவேண்டாம் என சொல்லவில்லை. அதற்கான தளம் இன்னும் தமிழகத்தில் உருவாகவில்லை என்பதே எதார்த்தம். இயக்குநர்கள் மாற்று சினிமா, மாற்று கதை என்பதை சிறிய பட்ஜெட்டில் இயக்க முதலில் கற்றுக்கொள்ள வேண்டும். அதையும் தங்களது சொந்த காசில் எடுக்க வேண்டும். அடுத்தவன் காசில் எடுக்ககூடாது. அடுத்தவன் காசில் படத்தை எடுத்து அந்த தயாரிப்பாளரை ஓட்டான்டியாக்கி தெருவில் நிற்க வைத்த இயக்குநர்கள் பலர் சினிமாவில் உள்ளார்கள்.


சேரனின் மாயகண்ணாடி, ஷங்கரின் பாய்ஸ், ரஜினியின் பாபா, தங்கர்பச்சானின் ஒன்பது ரூபாய் நோட்டு, மிஷ்கினின் நந்தலாலா, ஹரிதாஸ், மரியான், ராமின் தங்கமீன்கள் போன்றவை கதை நன்றாக இருந்தாலும் 100 ரூபாய் கொடுத்து டிக்கட் வாங்கி படம் பார்க்கும் ரசிகன் அது தேவையில்லை என ஓரம் கட்டிவிட்டான். ஆனால் இதனை ஆராதிக்கும் இலக்கிய விஞ்ஞானிகள், அவர்களை பாராட்ட கிளம்பிவிடுகிறார்கள். நீங்க இதேமாதிரி படம் எடுக்கனும் என பாராட்டு மழையில் நனைத்து விடுகிறார்கள். அந்த படத்தை எடுத்த தயாரிப்பாளரின் கதி அதோகதி. ஆதை அவர்கள் சொல்வதில்லை. இவர்களின் இலக்கிய பசிக்கு ஏதோ ஒரு தயாரிப்பாளன் சொத்து, சுகங்களை இழக்கிறான் என்பதை இவர்கள் மறந்துவிடுகிறார்கள் அல்லது மறைத்துவிடுகிறார்கள். மாற்று சினிமா பற்றி பேசும் இந்த இலக்கிய விஞ்ஞானிகளும் பணம் போட்டு படம் எடுப்பதில்லை என்பதால் அவர்கள் இயக்குநர்களை ஊக்குவிக்கதான் செய்வார்கள்.

ஜனரஞ்சகமான கதை தான் தேவை. தங்கமீன்கள் படம் எடுத்த தயாரிப்பாளர் துண்டை தலையில் போட்டுக்கொண்டு இருப்பார் என்பது நிஜம். தங்கமீன்கள் மட்டுமல்ல ‘இலக்கிய, மாற்று சிந்தனை’ என விமர்சனம் வைக்கப்பட்ட படங்களின் தயாரிப்பாளருக்கு இதுதான் நிலைமை. அந்த வரிசையில் மிஷ்கினின் ‘ஓநாயும், ஆட்டுக்குட்டியும்’ என்ற தலைப்பில் ஒரு படம் வெளிவந்துள்ளது. இதையும் இலக்கிய விஞ்ஞானிகள் பாராட்டு பத்திரம் படம் வெளிவரும் முன்பே வெளியிட்டுவிட்டார்கள்.

எனக்கு இந்த ‘பொம்மை’ தான் வேணும்……



இந்தியாவில் எத்தனையோ அரசியல்வாதிகள் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்குகள் உள்ளன. அப்படி வழக்கு இல்லாத அரசியல்வாதிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். குறிப்பாக தமிழகத்தில். அப்படியிருக்க ஜெ தன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் நூற்றுக்கணக்கான வாய்தாக்கள் வாங்கியுள்ளார். அதற்காக அவர் சொல்லும் காரணங்கள் அற்பத்தனமானவை, நீதித்துறையை கேலிக்கூத்தாக்கும் வகையில் இருப்பவை. இதை ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிக்கை துறையும் கேட்பதில்லை, முதல் தூணான நீதித்துறையும் கேட்பதில்லை. பத்திரிக்கை துறையினர் தான் பயந்து கிடக்கிறார்கள் என்றால் நீதித்துறையினர்க்கு என்ன வந்தது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜெ மீதான வழக்கென்றால் மயிலிறகால் வருடி தருகிறார்கள்.

1991 – 1996 ஆம் காலகட்டத்தில் அவர் மாதம் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய காலகட்டம். ( அவர் சொன்னது தான் ) ஆட்சியில் இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து வாங்கியதாக பின் வந்த திமுக அரசு வழக்கு பதிவு செய்து நீதிமன்ற உத்தரவுப்படி கைது செய்தது. அந்த வழக்கு தமிழக நீதிமன்றத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார் நடத்தி வந்தனர்.

2001ல் மீண்டும் தமிழக முதல்வரனார் ஜெ. முதல்வர் மீதான வழக்கை அவர் ஆட்சியின் கீழ் இயக்கும் காவல்துறை சரியாக நடத்தாது, நீதித்துறையில் குறுக்கீடு இருக்கும் என திமுக பொதுசெயலாளர் பேரா.அன்பழகன் அவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் வழக்கை கர்நாடகாவுக்கு மாற்றியது. கர்நாடகா மாநிலத்தில் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. பலப்பல வாய்தாக்களுக்கு பின் இறுதி விசாரணை நடைபெற்று வருகிறது. அரசின் சார்பில் வழக்கறிஞராக இருந்த ஆச்சாரியா என்பவருக்கு வந்த பல வித மிரட்டல்களால் மன உளைச்சளாகி வழக்கில் இருந்து விலகி கொள்வதாக பகிரங்கமாக அறிவித்துவிட்டு அப்போது கர்நாடகாவை ஆண்ட பி.ஜே.பி மீது குற்றம் சாட்டிவிட்டு தன் பதவியை ராஜினாமா செய்தார்.

அரசு வழக்கறிஞராக பவானிசிங் என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் ஜெ வழக்கறிஞர்களுடன் சேர்ந்துக்கொண்டு வழக்கை விரைவாக முடிக்க முயல அதற்கு நீதிபதி பாலகிருஷ்ணாவும் ஒப்புக்கொள்கிறார். இதனைத்தான் திமுக தரப்பு தங்கள் கையில் எடுத்துக்கொண்டு உச்சநீதிமன்றம் வரை சென்றது.

உச்சநீதிமன்றத்தில் சின்னப்பிள்ளைகள் மிட்டாய் கேட்டு அடம்பிடிப்பது போல ஜெவும், இப்பயிருக்கற அரசு வழக்கறிஞரே தான் என் தரப்பு வழக்கறிஞர்களை எதிர்த்து வாதாடனும், இப்பயிருக்கற நீதிபதியே தான் வழக்குக்கு தீர்ப்பு தரனும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்கிறார். அந்த மனுவையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு விசாரிக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில், இன்னார் தான் அரசு வழக்கறிஞராக இருக்க வேண்டும், இந்த நீதிபதி தான் தீர்ப்பை எழுத வேண்டும் என கேட்பானாம் அதை நீதித்துறை விசாரிக்குமாம். இதே கோரிக்கையை ஒரு பிட்பாக்ட் திருடன் எழுப்பினால் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளுமா ?.


இதை அரசியல் கட்சிகள் மட்டுமல்ல பெரும்பான்மையான பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள், சட்டத்துறையினர் கூட இதனை எதிர்த்து கேள்வி கேட்கவில்லை. அனைத்து துவாரங்களையும் மூடிக்கொண்டுள்ளனர்.

இங்கு அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு ஒரு நீதி, ஏழைக்கு ஒரு நீதி என்ற நிலையில் தான் நாடு உள்ளது. இந்த சட்டத்தை தான் சாரசரி குடிமக்களை நம்ப சொல்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில் சராசரி குடிமகனும் நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை இழந்து வருகிறான்.

இது நிச்சயம் ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.

புதன், செப்டம்பர் 18, 2013

அன்பே அழகானது. – பகுதி 11.



அறைக்குள் நுழைந்த மதனை பார்த்து என்னப்பா சாப்பிட்டியா என கேட்டாள் கோதை.

சாப்பிட்டம்மா.

பின்னால் சுதா, ரமேஷ், ரம்யா நுழைவதை கண்டு மருமகளை பார்த்து எப்படிம்மா இருக்க என்றாள்.

நல்லாயிருக்கன் அத்தை.

நீங்க ?.

இருக்கேம்மா என்றாள் சலிப்பான குரலில்.

மாமனாரை பார்த்து எப்படி மாமா இருக்கிங்க என கேட்டாள்.

எனக்கென்னம்மா கல்லு மாதிரி இருக்கன் என்றவர் ரமேஷ் பக்கம் திரும்பி நீ எப்படிப்பா இருக்க, பொண்ணு எப்படி இருக்கு ?

நல்லாயிருக்காப்பா என ரம்யா பதில் சொல்ல ரமேஷ் தலையாட்டினான்.

அப்பாவும், அம்மாவும் இருந்தாங்களே எங்க என ரமேஷ் கேட்கவும் தேவராஜ்யும், காவேரியும் அறைக்குள் நுழைந்தனர். தேவராஜ்யை பார்த்து கலிவரதன், சாப்பிட்டிங்களா?.

புள்ள இப்படி இருக்கறப்ப எங்க சாப்பிடறது.

சாப்பிட்டு வாய்யான்னு அனுப்பனா நீ என்னய்யா இப்படி சொல்ற. பெத்தவனே போய் சாப்பிட்டுட்டு வர்றான். அவனை விட உனக்குயென்னவோ அதிக அக்கறை இருக்கற மாதிரி பேசற.

உம்புள்ளயாள தானே இவ்வளவும். ஓன்னுத்துக்கும் உதவாத புள்ளைய பெத்து வச்சிக்கிட்டு பேசற.

நீ என்னய்யா விட்டா பேசிக்கிட்டு போற. அவன் என்னவோ புள்ளய இழுத்தும் போய் வண்டி முன்னாடி நிறுத்தி மோதுன்னு சொன்ன மாதிரி பேசற.

புள்ளய போய் பத்திரமா கூப்ட்டுக்கிட்டு வர்றதில்லயா ?.

தெரியாம நடந்ததுக்கு போய் அவன் மேல குற்றம் சொல்ற.

ஆமாம் அப்படித்தான் சொல்லுவன் என தேவராஜ் குரலை உயர்த்த மதன் தன் அப்பாவிடம் நீங்க அமைதியா இருங்க என்றான்.

பேசிக்கிட்டு இருப்பாரு கேட்டுக்கச்சொல்றியா என கலிவரதன் கோபமாக கேட்டார்.

இது ஆஸ்பிட்டல் மாமா இங்க போய் சத்தம் போடறிங்களே என்றாள் ரம்யா.

நீ சும்மாயிரும்மா. கம்முனு இருக்க இருக்கத்தான் இவுங்களுக்கு திமிரு அதிகமாகுது.

மரியாதையோட பேசு இல்ல நடக்கறதே வேற என கலிவரதன் உட்கார்ந்தயிடத்தில் இருந்து கோபமாக எழுந்திருக்க சண்டை போடாதிங்க என கணவரின் கையை பிடித்தாள் கோதை.

எழுந்தா உன் புள்ளயப்பத்தி சொல்றதுக்கு ஒன்னும்மில்லன்னு ஆகிடும்மா. இப்பவும் சொல்றன் உன் புள்ள ஒன்னுத்துக்கும் உதவாத ஆளு தான் என்றபோது சுதாவின் முகம் கோபத்தில் சிவந்தது.

மதன் கோபமாக, நான் உதவாக்கறை தான். என்னால தான் அடிப்பட்டுச்சி. ஏன் நான் தான் இடிச்சன் போதும்மா இதுக்கு மேல என்ன வேணும் என மதன் தேவராஜ்யை பார்த்து கோபமாக கேட்க மதனை கடுகடு முகத்துடன் பார்த்தபடியிருக்க ஒரு நர்ஸ் வேகமாக அறைக்குள் வந்து இதுயென்ன உங்க வீடுன்னு நினைச்சிங்களா, சண்டை போடறவங்க ஆஸ்பிட்டல விட்டு வெளியில போய் போடுங்க என்றாள் கோபமாக.

அனைவரும் அமைதியாக இருந்தனர். அப்போது மதனின் செல்போன்க்கு ரிங் வந்தது. ஊரில் இருந்து பாக்யராஜ் அழைத்தான். காலை பிக்கப் செய்தவன் சொல்லுடா.

என்ன மாப்ளா பையனுக்கு அடிப்பட்டுச்சின்னு சொல்றாங்க உண்மையா ?.

ம். டூவீலர்க்காரன் மோதிட்டான். சின்ன காயம் தான் ஆஸ்பிட்டல்ல சேர்த்துயிருக்கு.

இப்ப எப்படியிருக்கான் ?.

பரவாயில்ல, இரண்டு நாள் இருந்துட்டு அதுக்கப்பறம் வீட்டுக்கு அழைச்சிம் போகசொல்லியிருக்காரு டாக்டர்.

நான் நாளைக்கு வர்றன் மாப்ள.

ம்.

வச்சிடவா என கேட்டவனிடம் ம் என்றபடி லைனை கட் செய்தான். எப்போது கட் செய்வான் என காத்திருந்த தேவராஜ் டிஸ்சார்ஜ் பண்ணதும் பேரனை நான் என் வீட்டுக்கு அழைச்சிம் போறன் என்றார். என்னய்யா மாத்தி மாத்தி பேசற. அன்னைக்கு பொண்ணு மட்டும் வேணும்ன்னு இழுத்துக்கிட்டு போன இன்னைக்கு என்ன பேரன் மேல பாசம் பொத்துக்கிட்டு வருது என கேட்டார் கலிவரதன்.

ஒழுங்கா பாத்துக்க துப்பிள்ளாத ஆளை நம்பி இனிமே புள்ளய அனுப்ப முடியாது.

நீ சொல்றத கேட்க முடியாது. பேரன் எங்ககூடத்தான் இருப்பான் என சத்தம்மிட்டார். அப்போது உள்ளே வந்த டாக்டர் என்ன மதன் உங்க ரூம் ஒரே சத்தம்மா இருக்கு பையன் ரெஸ்ட் எடுக்கறதா வேணாம்மா.

ஸாரி டாக்டர்.

என்ன பிரச்சனை என டாக்டர் கேட்க அனைவரும் அமைதியாக இருந்தனர். பையனை நாங்க எங்க வீட்டுக்கு அழைச்சிம் போறன்னு சொல்றன், விடமாட்டேன்கிறாங்க என டாக்டரிடம் புகார் சொன்னார் தேவராஜ்.

குழந்தை அவுங்க அப்பா – அம்மாக்கூட இருக்க போறான். பாக்க விரும்பறவங்க போய் பாத்துட்டு போங்க இதல என்னயிருக்கு என குடும்ப விவகாரம் புரியாமல் பேச ரமேஷ் குறுக்கிட்டு குழந்தையோட அப்பா – அம்மா பிரிஞ்சியிருக்காங்க என்றான்.

டாக்டர் கோபமாக இது பைத்தியகாரதனமா தெரியல. ஹஸ்பென்ட் ஒய்ப்புக்குள்ள சண்டைன்னா பேசி தீர்த்துக்கிட்டு ஒன்னாயிருங்க. அதவிட்டுட்டு பிரிஞ்சி உங்க சண்டையில பையனேட லைப்ப ஸ்பாயில் பண்ணிடாதிங்க என்றவர் கொஞ்சம் யோசித்து பெத்தவங்க, தாத்தா, பாட்டி விருப்பத்த விட பையனோட விருப்பம் என்னண்ணு கேளுங்க அவன் முடிவுப்படி இருக்க விடுங்க எனச்சொல்ல மதனும், சுதாவும் அமைதியாக நின்றனர். ரமேஷ் சரி டாக்டர் என்றதும் சத்தம் போடாம இருங்க எனச்சொல்லிவிட்டு கிளம்பினார்.

இது எதுவும்மே தெரியாமல் தூங்கிக்கொண்டு இருந்தான் ரஞ்சித். அவன் எழுந்துருக்கற டைம். எழுந்ததும் பக்குவமா கேளுங்க அவன் முன்னாடியும் சண்டை போடாதிங்க என்றான் ரமேஷ். மதன் எழுந்து ட்ரா அருகே சென்று ஒரு பைலை எடுத்து வந்து ரமேஷ்சிடம் தந்தான். ஹாஸ்பிட்டல் பில் எல்லாம் கட்டியாச்சி. டேப்ளட் எல்லாம் இருக்கு. நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்றன்னு சொல்லியிருக்காங்க. ஒரு வாரம் ஸ்கூல் லீவு சொல்லியிருக்கன். வேணும்ன்னா எக்ஸ்டன் பண்ணிக்குங்க. அவனோட புக்ஸ், ட்ரஸ் தந்து அனுப்பறன் என சொல்லிக்கொண்டு இருக்கும் போதே ஏய் என்னடா பேசற என கோபமாக கேட்டார் கலிவரதன்.

அவன் அவுங்க அம்மாக்கூட இருக்கட்டும்ன்னு தான் இதப்பண்றன்.

புள்ளய வளக்க தெரியலன்னு அந்தாளு சொன்னத உண்மையாக்கறியா?.

உண்மையோ, பொய்யோ. எதுவாயிருந்தாயென்ன அவன் அவுங்க அம்மாக்கூட இருக்கட்டும் என்றவன் மீண்டும் ரமேஷ்சிடம், நான் எங்கன்னு கேட்டான்னா அவசர வேலையா சென்னை போயிருக்கன்னு சொல்லுங்க. வர்றதுக்கு ஒருவாரமாகும் ஊருக்கு வந்ததும் வந்து அழைச்சிம் போறன்னு சொல்லுங்க. அதுக்குள்ள உங்களோட பழகிடுவான் என்றவன் கட்டிலில் படுத்துக்கிடந்த மகனின் முகத்தை பார்க்க கண்ணீர் நீர் தளும்ப நான் கிளம்பறன் எனச்சொல்லிவிட்டு தலை குனிந்தபடியே வேகவேகமாக அறையை விட்டு வெளியே வந்தான்.

அறையை விட்டு சற்று தூரம் சென்றுக்கொண்டுயிருந்த மதனை நோக்கி வேகவேகமாக  ரம்யா சென்றவள் மதனை டூவீலர் பார்க்கிங் ஏரியாவில் மடக்கினால். என்னண்ணா, மாமா தான் கோபத்தல பேசறாருன்னா நீங்களும் இப்படி ஒரு முடிவு எடுத்துட்டு போறிங்க என கேட்டாள்.

அவர் சொன்னாருன்னுயெல்லாம் இப்படி பண்ணல. நான் என்னதான் அவன் கேட்டதையெல்லாம் வாங்கி தந்து அவனை பாத்துக்கிட்டாலும் அவன் மனசு அவுங்க அம்மாக்கிட்ட தான் இருக்கு. அம்மா பாசத்துக்கு ஏங்கறான். ஏங்கப்பாக்கூட புள்ளைய வளக்க தெரியலன்னு பத்து நாளைக்கு முன்னாடி திட்டனாரு. நான் எம்புள்ளய நல்லாத்தான் வளக்கறன்னு திமிறா சொல்லிட்டு வந்தன். இன்னைக்கு காலையில தான் அப்படியில்லன்னு தெரிஞ்சிக்கிட்டன். நான் வலிக்குதாடான்னு கேட்டன். இல்லன்னு சொன்னவன் கொஞ்ச நேரத்தல அவுங்க அம்மா வந்து கேட்டப்ப வலிக்குதுன்னு சொன்னான்.

அப்ப வலிச்சியிருக்கும் அதனால சொல்லியிருப்பான். அதப்போய் தப்பா எடுத்துக்கலாம்மா என ரம்யா கேட்டதும். 


அது மட்டும்மில்ல ரம்யா. அவன் படிக்கற அதே ஸ்கூல்ல தான் அவுங்க அம்மாவும் டீச்சரா வேலைக்கு சேர்ந்துயிருக்கா. இது அவனுக்கு முன்னாடியே தெரிஞ்சியிருக்கு. அத அவன் எங்கிட்ட சொல்லவேயில்ல. இன்னைக்கு எனக்கு தெரியவந்து அவன்க்கிட்ட ஏண்டா எங்கிட்ட சொல்லலன்னு கேட்டப்ப அவன் சைலண்டா இருந்தான். அவன் சொல்லலனாலும் காரணம் என்னன்னு எனக்கு தெரியம். அப்பாவுக்கு தெரிஞ்சா நம்மள வேற ஸ்கூல்க்கு மாத்திடுவாறோன்னு பயந்து சொல்லல. அது மட்டும்மில்ல எனக்கு பயந்துக்கிட்டு அவுங்க அம்மா கண்ணுல படாம இருந்துயிருக்கான் இது எவ்ளோ கொடுமை. அவன் எதுக்கு பயந்து பயந்து அவுங்கம்மாவ பாக்கனும். அவனுக்கு அவுங்கம்மா வேணும் அதான் அவனை அவுங்க அம்மாக்கிட்ட ஒப்படைச்சிட்டு போறன்.

நீங்க பக்கத்தல இல்லன்னா அவன் கஸ்டப்படுவாண்ணே.

அதைகேட்டு அமைதியாக இருந்த மதன் அப்பப்ப வந்து பாக்கறன். ஃபோன்ல பேசறன்.

இப்படி அவனை அல்லாட விடறதுக்கு பதிலா நீங்க சுதாவ வீட்டுக்கு அழைச்சிம் போகலாம்மில்ல.

இன்னமும் அவ மாறல.

அவ மாறிட்டாண்ணா. தினமும் நைட்ல தூங்காம அழுதுக்கிட்டு இருக்கா தெரியுமா. அவள வேலைக்கு அனுப்பறது அவ மனச டைவட் பண்ணத்தான்.

பையன் கூட இருக்கான்யில்ல. இனிமே அழமாட்டா.

பிள்ளைக்காக மட்டும் தான் அவ அழறமாதிரி பேசறிங்க.

மீண்டும் அமைதியாக இருந்த மதன் ரம்யாவின் முகத்தை பார்த்து அவ கண்ல தண்ணி வர்றதால தெரியுது. என் கண்ணுல தண்ணி வரல அவ்ளோ தான் வித்தியாசம்.

எதுக்கு இரண்டு பேரும் கஸ்டப்படனும். அவளை வீட்டுக்கு அழைச்சிங்கன்னா வந்துடுவா.

அவ மாறலன்னு இன்னைக்கும் காட்டனா எனச்சொன்னதும் ரம்யா குழப்பமாக நின்றாள். நான் கிளம்பறன் இதப்பத்தி அவக்கிட்ட எதுவும் பேசாதிங்க எனச்சொல்லிவிட்டு பைக் எடுக்க திரும்ப பின்னால் கலிவரதனும், கோதையும் நின்றிருந்தனர். கோதை முந்தாணியால் வாயை பொத்திக்கொண்டு அழுதுக்கொண்டு இருந்தாள். கலிவரதன் மதனை பார்த்து உன் புள்ளயோட மனச புரிஞ்சிக்கற அளவுக்கு நீ இருக்க என்றவர் உன் பிடிவாதத்த கொஞ்சம் விட்டுட்டு சுதாவ வீட்டுக்கு அழைச்சிம்போனா நல்லாயிருக்கும்.

நான் யாருக்கும் அடிமையா இருக்க விரும்பல என கோபமாக மதன் சொன்னதும் அதை கேட்டு கிளம்பறோம் என ஒற்றை வார்த்தையில் கலிவரதன் வெறுப்பாக சொல்லிவிட்டு நடந்தார். தனியா இருந்து என்ன பண்ணுவ தினமும் ஊருக்கு வந்துடேன்டா கண்ணில் நீரோடு தாய் பாசத்தில் கோதை கேட்டாள்.

நான் பாத்துக்கறன் நீ கவலைப்படாம வீட்டுக்கு கிளம்புமா எனச்சொல்ல தயங்கி தயங்கி கணவரை நோக்கி நடந்தாள்.

கிளம்பு ரம்யா எனச்சொல்ல அவள் மருத்துவமனையை நோக்கி நடக்க மதன் தன் டூவீலரை எடுத்துக்கொண்டு கிளம்பினான். சுதா தூரத்தில் மறைவாக நின்று மதன் போவதை கண்ணில் நீர் தளும்ப பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள்.

தொடரும்……………

வெள்ளி, செப்டம்பர் 13, 2013

தூக்குதண்டனை வியாதிக்காரர்கள்.


ஒரே நேரத்தில் தூக்குதண்டனையை குறைக்க கேட்கும் பல கருணை மனுக்களை நிராகரிப்பதும், அவர்களை வெளியுலகுக்கு தெரியாமல் உடனே தூக்கிலிடுவதும், ஒரே நேரத்தில் பலருக்கு தூக்குதண்டனை தருவதும் இந்தியாவில் மட்டும்மே சாத்தியம். 

எவ்வளவு பெரிய குற்றத்துக்கும் தூக்குதண்டனை தருவது என்பது தெரிந்தே நீதிமன்றமும், அரசாங்கமும் செய்யும் கொலை. இந்திய ஒன்றியத்தின் தலைநகரான டெல்லியில் பேருந்தில் கல்லூரி மாணவியை கூட்டாக கற்பழித்து கொலை செய்தது கொடூரமான செயல் தான். மறுப்பதற்க்கில்லை. இதே போன்ற கற்பழிப்பு, கொலைகள் இந்தியாவில் பலயிடங்களில் நடக்கத்தான் செய்கின்றன. டெல்லி மாணவிக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள், பெண்கள் போராடினார்கள். மற்றவர்களுக்காக போராடுவதற்கு முன் அவர்களுக்கு வேறு ஏதோ வேலை வந்துவிட்டது போல. 

டெல்லி பாலியல் கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனே தூக்கிலிடவேண்டும் என விவகாரம் விசாரணையில் இருக்கும் போதே மீடியாக்கள் தீர்ப்பு எழுதின. அந்த தீர்ப்பை தான் தற்போது நீதிபதி படித்துள்ளார். ஆக இந்த தீர்ப்பு சட்டத்தின் படி கிடைக்கப்பட்ட தீர்ப்பல்ல. மரண தண்டனை தர வேண்டும் என்ற சிலரின் ‘வியாதிக்கு’ தரப்பட்ட ஊக்க மருந்து. 

இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் பாலியல் வல்லுறு நடக்கிறது. அதை தடுக்க தூக்குதண்டனை என்ற தண்டனையை தந்தால் திருந்திவிடமாட்டார்கள். ஏன் ஒரு தவறு நடக்கிறது என்பதை சிந்திக்க வேண்டும் அது தான் பிரச்சனையை தீர்க்கவழி. டெல்லி மாணவி கற்பழிப்பு நடந்த சில தினங்களில் அதே டெல்லியில் இதேபோன்று பாலியல் பிரச்சனை நடந்தது. டெல்லி மட்டுமல்ல இந்தியாவின் பல மாநிலங்களில் பெண்களை வன்புணர்வு கூட்டாகவே, தனியாகவே செய்தார்கள். செய்கிறார்கள். செய்வார்கள். 

ஒருவரை தூக்கிலிடுவதால் இது மாற்றம்மடையாது. தூக்கிடுவது என்பது ஒரு அறிவார்ந்த சமூகத்துக்கு அழகல்ல. 


தூக்கு தண்டனையை ஆதரிப்பவர்கள் அந்த பெண்ணின் நிலையை நினைத்துப்பாருங்கள், அந்த குடும்பத்தின் நிலையை நினைத்துப்பாருங்கள் என கேட்கிறார்கள். கொடூமை, கொடூரம் தான்.

என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள். குஜராத் கலவரம் பற்றி நாம் அனைவரும் அறிந்தது தான். ஆயிரக்கணக்கான அப்பாவி இஸ்லாமிய பெண்கள் அந்த கலவரத்தின் போது தங்களது கற்பை இழந்தார்கள், கற்பழிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்கள். இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப்பட்ட போது சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் எத்தனை எத்தனை சீக்கிய பெண்கள், இளம் பெண்கள் கற்பழித்து கொலை செய்யப்பட்டார்கள். இராஜிவ்காந்தி, இலங்கைக்கு படைகளை அனுப்பினார். ஈழப்பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள். இன்றளவும் காஷ்மீரில் தீவிரவாதிகள் தேடல், உதவி செய்கிறார்கள், பாதுகாப்பு தருகிறோம் என்ற பெயரில் இஸ்லாமிய பெண்களை வன்புணர்வு செய்கிறார்கள், சுட்டுக்கொல்கிறார்கள். வடகிழக்கு மாநிலங்களில் எல்லை பாதுகாப்பு படையினர், துணை இராணுவப்படையினர் தொடர்ந்து கற்பழிப்பில் ஈடுபடுகிறார்கள். 

இதில் பாதிக்கப்பட்டவர்களும் பெண்கள் தான். அவர்களுக்கும் குடும்பம்மிருந்தது, இருக்கிறது. அந்த குடும்பங்கள் உருக்குலைந்துப்போய்வுள்ளன. அவர்கள் நிலையை நினைத்துப்பார்த்து ஏன் அவர்களுக்காக பொங்கவில்லை. 

குஜராத் கலரத்துக்கு காரணமான மோடியை பதவியை விட்டு நீக்கவோ, அவரை குற்றவாளி கூண்டில் நிறுத்தி தூக்குதண்டனை வாங்கி தரவோ யாரும் குரல் கொடுக்கவில்லை. சிக்கீயர்களை கொன்றபோதும், சீக்கிய பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த காங்கிரஸ் தொண்டர்களை தூக்கிலிட வேண்டும் என கேட்கவில்லை. காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் இராணுவத்தினர், பாதுகாப்பு படையினர்க்கு தூக்குதண்டனை தர வேண்டும் என ஏன் போராடவில்லை.

இதுயெல்லாம் தூக்கு தண்டனையை ஆதரிப்பவர்கள், மீடியாக்களுக்கு தெரியாதா?. தெரியும். தெரிந்தும் ஏன் அமைதியாக மவுனியாக இருக்கிறார்கள்.செய்தவர்கள் அதிகாரம் மிக்கவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் வாய்செத்தவர்கள். 

அதிகாரவர்க்கம், நீதித்துறை மட்டுமல்ல பலரும் இங்கு பெரும் நடிகர்களாகவே இருக்கிறார்கள். 

‘வாழ்க ஜனநாயகம்’. 

புதன், செப்டம்பர் 11, 2013

ஆயிரம் ஆயிரம் கோடி. விநாயகர் கேட்டாரா ?.



பெரும் தொழிற்சாலைகளோ, அதிகம் நகர மயமாத மாவட்டங்களில் ஒன்று திருவண்ணாமலை. இந்த மாவட்டத்தில் காவல்துறை கணக்குப்படி நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 1150 பிள்ளையார் சிலைகள் விநாயகர் சதுர்த்திக்காக வைக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் வைக்கப்பட்ட சிலைகள் இந்த கணக்கில் வராது. 

10 அடி உயர சிலையை 15 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியதாக சொன்னார்கள் விநாயகர் சிலையை கரைக்க கொண்டு சென்ற இளைஞர்கள். 1150 சிலை வேண்டாம் 1000 சிலையை கணக்கில் எடுத்துக்கொள்வோம். ஒரு சிலை பத்தாயிரம் என கணக்கிட்டாலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் ஒரு கோடி ரூபாய்க்கு விநாயகர் சிலை வாங்கப்பட்டுள்ளது. ( வீடுகள், கிராமங்கள் நீங்களாக ).

தமிழ்நாட்டில் 32 மாவட்டங்கள் உள்ளன. 32 மாவட்டத்தில் 32 கோடிக்கு விநாயகர் சிலை வாங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 30 மாநிலங்கள் உள்ளன. தென்மாநிலங்களை விட வடமாநிலங்கள் விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாடுவார்கள். இந்தியா முழுமைக்கும் விநாயகர் சிலை வாங்கியதற்கான செலவை கணக்கிட்டால் மலைப்பாக இருக்கிறது. சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு கணக்கு வருகிறது. ஆக இந்த விநாயகர் சதுர்த்துக்கு மட்டும் சுமார் 2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் கோடி வரை செலவாகியிருக்கும் என்பது உறுதி.

மற்ற செலவுகள் ஒருபுறம்மிருந்தாலும் விநாயகர் சிலைகள் வாங்கிய ஆயிரம் கோடி ரூபாய் கடலில், குளங்களில் கரைக்கப்பட்டுள்ளது என்பதே நிதர்சனம். ஆயிரம் கோடி கடலில் கரைவதை கூட ஏற்றுக்கொள்ளலாம் விநாயகர் பெயரில் நடத்தப்படும் மதவாத அரசியல் தான் பயங்கரமாக இருக்கிறது. 


சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கோவை, கன்னியாகுமரி, நெல்லை, வேலூர், முத்துப்பேட்டை பகுதிகளில் மட்டும் இருந்த மத டென்ஷன் தற்போது தமிழகத்தின் பிற பகுதிகளிலும் கடந்த சில ஆண்டுகளில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் காவல்துறைக்கும் டென்ஷன். 3 நாள் கண்விழித்து ஒவ்வொரு விநாயகர் சிலைக்கும் பாதுகாப்பு தந்துக்கொண்டு இருந்தார்கள். 

இது எதனால் வந்தது. விநாயகர் சதுர்த்தி, ஆங்கிலேயனிடம் அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவை மீட்க மக்களை திரட்ட விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை போன்ற பண்டிகைகள் கொண்டாடப்பட்டன. மதத்தின் பெயரை சொல்லி மக்களை திரட்டி அங்கு தங்களது கருத்துக்களை எடுத்து வைத்து சுதந்திர போராட்டத்துக்கு அழைத்தார்கள். 

இது மெல்ல உருமாற்றம் செய்யப்பட்டு இந்துக்களையும் - இஸ்லாமியர்களையும் பிரித்தது. தேச பிரிவினைக்கு பின்னர் அதுவே பெரும் பிரச்சனையாக உருவெடுத்தது. இதன் பின்னால் இருந்த நுண்ணிய அரசியல் இன்று மக்களை பிரித்து வைத்துள்ளது. ஆர்.எஸ்.எஸ், வீ.எச்.பி, சங் பரிவார் அமைப்புகள் நுட்பமாக இதில் விளையாட தொடங்கினர். சுதந்திரத்துக்காக தூக்கி பிடிக்கப்பட்ட இப்படிப்பட்ட விழாக்கள் இன்று கட்சிகளில் பதவிகளை பிடிக்கவும், ஆட்சியை பிடிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.

இது சமூகத்தை மட்டும் அழிவுப்பாதையில் கொண்டு செல்லவில்லை. இயற்கையையும் அழிவுப்பாதைக்கு கொண்டு செல்கின்றன. விநாயகர் சிலைகள் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கில் கடல்களிலும், குளங்களிலும் கரைக்கும் போது அந்த களிமண் அதனை துருக்கின்றன. விநாயகர் சிலைகளில் பூசப்பட்ட இரசாயனங்கள் தண்ணிரீல் கலப்பதால் குடிநீர் மாசடைகின்றன. இவர்கள் வெடிக்கும் வெடிகளும், வெடி மருந்து புகையும் காற்றை மாசடைய வைக்கின்றன. இது உயிர்களை தான் மெல்ல மெல்ல கொல்கின்றன. 

ஆன்மீக நாட்டம் உள்ளவர்களே விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுங்கள். இயற்கையை, சமூகத்தை மாசுப்படுத்தாமல் கொண்டாடுங்கள். ஏன் இனில் கடவுள்கள் சக மனிதனை துன்பப்படுத்தி கொண்டாடப்படும் எதையும் யாரும் விரும்புவதில்லை. கடவுளிடம் சென்று கேட்டுப்பாருங்கள் உண்மை என்பார்.