வியாழன், ஜனவரி 14, 2016

சல்லிக்கட்டுக்கு தடை. புலியை அடக்குவோம்...

சல்லிக்கட்டு நடத்தகூடாதுயென உச்சநீதிமன்றம் தடை விதித்ததுக்கு எதிராக பொங்கோ பொங்கு என பொங்கிக்கொண்டு இருக்கிறார்கள் தமிழ் மக்களின் ஓரு சாரார்.

சல்லிக்கட்டு தமிழனின் பாரம்பரிய விளையாட்டு என்பதில் மாற்று கருத்துயில்லை. 50 ஆண்டுக்கு முன்புவரை நமது வாழ்க்கை முறையென்பது வேறு. அன்றைய இளைஞர்கள் நல்ல உணவை உண்டு திடக்காத்திரமான உடலோடு பலசாலியாக இருந்தார்கள். இன்று நம் இளைஞர்களின் உடல் கொழுப்பு ஏறிய உடலாக தான் உள்ளது. அந்தளவுக்கு நமது உணவு பழக்க வழக்கம் மாறிப்போய்வுள்ளது. சல்லிக்கட்டு காளைகள் உரசினாலே நம்மால் தாங்க முடியாது.

சல்லிக்கட்டு காளைகளை அடக்குகிறேன் பார் என நீங்களோ, நானோ உடனே களத்தில் இறங்கிவிட முடியாது. அது ஓடி வரும் வேகத்தில் நம்மை தூக்கி கடாசிவிடும். குடல் சரிந்து செத்துப்போக வேண்டியது தான். தென்மாவட்டங்களில் சல்லிக்கட்டு காளைகளை அடக்குவதற்கென்றே உடலை தயார் செய்யும் இளைஞர் பட்டாளம் உள்ளது. அதிலும் இதில் எல்லா சாதியினரும் இறங்கி காளையை அடக்கிவிட முடியாது. குறிப்பிட்ட சாதியினர் மட்டும் தான் பெயர் பதிவு செய்துக்கொண்டு களத்தில் இறங்கி காளைகளை அடக்குகிறார்கள். அப்படி அடக்க போய் கை, கால் முறிந்து முடமாகிக்கிடக்கும் வீரர்களும் இருக்கிறார்கள்.

காளையை அடக்கினால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு பணம்மோ, பொருளோ கிடைத்துவிடாது. காளையை அடக்கிய வீரன் என்ற பெயர் கிடைக்கும் அவ்வளவு தான். பெயரை வைத்துக்கொண்டு என்ன செய்ய, மூன்று வேளை அடுப்பு பொங்கிவிடும்மா என்ன ?. கை, கால்களை இழந்தவரின் குடும்பம் அடுத்த வேளை சோத்துக்கு வழியில்லாமல் தான் உள்ளது. இன்று சல்லிக்கட்டு வேண்டும் என போராடுபவர்கள் சல்லிக்கட்டில் கலந்துக்கொண்டு முடமாகிப்போனவர்களுக்காக இதுவரை என்ன செய்துள்ளார்கள் என்பதை பட்டியலிட முடியும்மா ?.

இது என் தமிழ் இனத்தின் வீர அடையாளம் என்கிறார்கள். மது என்கிற அரக்கனை அரசாங்கம்மே மக்களுக்கு விற்பனை செய்து சாகடிப்பதை எதிர்க்க துப்பில்லாமல் வீட்டில் பதுங்கிக்கொண்டு வாய் இல்லா ஜீவனை வதைப்பதற்க்கு பெயர் தான் வீரம்மா ?.

தூத்துக்குடி கடல் பகுதியில் 55 திம்மிங்களங்கள் செத்து கரை ஒதுங்கின. 40க்கும் மேற்பட்ட திமிங்களங்கள் உயிருக்கு போராடிக்கொண்டு கடற்கரையில் கிடக்க மீனவர்கள் கடலுக்குள் கொண்டு போய் அவைகளை விட்டு உயிர் பிழைக்க வைத்துள்ளார்கள். இந்த திமிங்களங்கள் எதனால் இறந்தது என்பது வெளிப்படையானது. வீரத்தை காட்ட நினைப்பவர்கள் அதை எதிர்த்து போராடுங்களேன் பார்ப்போம். அங்கெல்லாம் உங்கள் வீரம் பீறிட்டுக்கொண்டு வராது?. வந்தால் சுட்டு தள்ளிவிடுவான் என்கிற பயம்.

இன்று சல்லிக்கட்டு வேண்டும் என பொங்குபவர்கள் யாரும் களத்தில் இறங்கி விளையாடப்போகிறவர்கள் கிடையாது. விடுமுறை தினம் என்பதால் நேரடியாகவும், நேரலையிலும் பார்த்து கைதட்டி ரசிக்கப்போகிறவர்கள் அவ்வளவே. அது முடிந்ததும் அவர்கள் மறுநாள் தங்கள் வேலையை பார்க்க போய்விடுவார்கள். சல்லிக்கட்டின் மறுப்பக்கம், சல்லிக்கட்டு வீரர்களின் வேதனை, இதனால் ஏற்படும் பிரச்சனைகள் அவர்களுக்கு தெரியாது, தெரியப்போவதில்லை.

நமது பாரம்பரியம், பண்பாட்டுக்கு எதிராய் பேசுகிறாய் என கேட்கலாம். பண்பாடு, கலச்சாரம், பாரம்பரியம் காக்கப்பட வேண்டியது தான். ஆனால் அதே நேரத்தில் சாதியத்தையும் காக்கப்பட வேண்டியதாய் இருக்கிறதே. சல்லிக்கட்டு அனைத்து சாதி மக்களுக்குமானதாக இருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். குறிப்பிட்ட சாதிக்களுக்கானதாக இந்த விளையாட்டு உள்ளதை தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

மருது சகோதரர்கள் புலியை அடக்கியவர்கள் என வரலாற்று பாடப்புத்தகத்தில் படித்ததாக ஞாபகம்? மருது பாண்டியர்களை தங்களின் மூதாதையர்கள் என செப்பும் சாதி அமைப்பினர் ஏன் புலியை அடக்கும் போட்டிகளை நடத்தி தங்களது வீரத்தை வெளிப்படுத்தக்கூடாது ?.அப்படி நடத்துவதாக இருந்தால் சல்லிக்கட்டு போட்டிக்கு என் ஆதரவை வழங்குகிறேன்.