ரஞ்சித் படிக்கும் பள்ளியின் அலுவலகத்துக்கு சென்ற மதன். அங்கிருந்த அலுவலக உதவியாளரிடம் பிரின்ஸ்பால் மேடத்தை பாக்கனும்ங்க என்றான்.
மேடம் உள்ள பேசிக்கிட்டு இருக்காங்க கொஞ்சம் லேட்டாகும் உட்காருங்க சார்.
மதன் அங்கிருந்த சேரில் அமர்ந்து டேபிளில் இருந்த செய்தித்தாளை எடுத்து புரட்ட தொடங்கினான். ஏய் நீ வாத்தியாராச்சேன்னு பாக்கறன் இல்லன்னா அவ்ளோ தான் என்ற தடித்த கோபமான ஆண் குரல் பிரின்ஸ்பால் அறையில் இருந்து கேட்டது. குழப்பத்தோடு மதன் அறையை பார்க்க உள்ளே யார் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. குரல்கள் மட்டும் விட்டு விட்டு கேட்டது.
நீ பணக்காரன்னா நான் பயந்துடனும்மா. என்னை எவனும் ஒன்னும் பண்ண முடியாது. யார்க்கிட்ட வேண்ணா என்னப்பத்தி சொல்லு போய்யா என்றது மற்றொரு குரல்.
பியூன்னிடம் கேட்கலாமா என மதன் யோசிக்கும் போதே ஃபாதர் சப்போட் இருக்குதுன்னு இப்படி பண்றான் இந்தாளு என கம்ப்யூட்டர் முன் அமர்ந்திருந்த பெண்ணிடம் ப்யூன் சொல்ல நமக்கேன் வம்பு விடுங்க சார் என்றது அந்தப்பெண்.
உம்பொண்ணு ஒழுக்கம்ன்னா எதுக்கு ரெண்டு கல்யாணம் பண்றா என கேட்டார்
ஸ்டீபன் சார், பசங்களுக்கு ஒழுக்கத்த போதிக்கற நீங்களே ஒரு சக லேடி டீச்சர இப்படி பேசலாமா என சிஸ்டர் சில்வியாவின் குரல் ஒலித்தது.
நீங்க சும்மாயிருங்க மேடம். ஒழுக்கம் இல்லாதவங்களப்பத்தி தான் பேசறன்.
மேடம் ரொம்ப தப்பா பேசறாரு. நான் போலிஸ்க்கு போக வேண்டியிருக்கும் என்றது தடித்த குரல்.
போய்யா என்ன ஒன்னும் புடுங்க முடியாது என்றார் ஸ்டீபன்.
அலுவலகத்தில் இருந்த அதே பெண்ணிடம் மீண்டும் ப்யூன், புதுசா வந்த அந்த டீச்சர்க்கிட்ட அசிங்கமா இவரு பேசனத அந்த பொண்ணு அவுங்கப்பாக்கிட்ட சொல்லி நியாயம் கேட்க கூட்டி வந்துயிருக்கு. எவ்ளோ கொச்சையா பேசறான் பாரும்மா. இவன்யெல்லாம் வாத்தியாரு எனச்சொல்ல அந்த பெண் தலையாட்டி கேட்டது. இன்னோன்னு தெரியுமா நேத்து போதையில நம்ம ஸ்கூல்ல ஆறாவது படிக்கற பையனை இவர் ஓட்டிம் போன ஸ்கூட்டி தான் இடிச்சி தள்ளிட்டு நிக்காம போச்சின்னு வாட்ச்மேன் வந்து சொன்னதும் மேடம் அதிர்ச்சியாகிட்டாங்க. அந்த பையனோட அப்பா நம்பர்க்கு போன் பண்ணாங்க. பெருசா அடியில்லன்னு சொன்னப்பிறகு தான் நிம்மதியானாங்க எனச்சொன்னபோது மதன் சடாரென எழுந்தவன் ப்யூனிடம், நேத்து பையனை இடிச்சிட்டு போனது இந்த ஸ்கூல் வாத்தியாரா ?.
ப்யூன் தயங்கி ஆமாம் சார்.
யாரு அது ?.
உள்ளயிருக்காரு சார் என கதவில் பொறுத்தப்பட்டயிருந்த சின்ன கண்ணாடி வழியாக அதோ நிக்கறாரு பாருங்க அவர் தான் என காட்டினார் ப்யூன்.
தடாலென மதன் கதவை திறந்துக்கொண்டு உள்ளே செல்ல, யாரு என ஸ்டீபன் திரும்பி பார்க்கம்போதே பளார் பளார் என ஸ்டீபன் கன்னத்தில் அடி விழுந்தது. நிறுத்துங்க நிறுத்துங்க என சிஸ்டர் சில்வியா சத்தம் போட சிஸ்டரின் குரல் கேட்டு டேவிட் உள்ளே ஓடிவந்தார். டேவிட்டை பார்த்து அவரை தடுங்கயென சிஸ்டர் அலற டேவிட் மதனின் கையை பிடித்து இழுத்தார். அவரை உதறி விட்டு கையை மடக்கி ஸ்டீபன் வாய் மீது இன்னும் இரண்டு குத்து சேர்த்துவிட்டான். டேவிட் மதனை இழுத்து கெட்டியாக பிடித்துக்கொள்ள பீரோ பக்கத்தில் ஒடுங்கி உட்கார்ந்தார் ஸ்டீபன்.
ஸ்கூல்ல வந்து ரவுடித்தனம் பண்றிங்களா என சில்வியா குரலை உயர்த்தினார்.
நான் ரவுடித்தனம் பண்ணல. குடிச்சிட்டு வண்டிய ஓட்டிக்கிட்டு போய் என் பையன் மேல மோதி அவன் ஆஸ்பத்திரியில இருக்கான். இவனை எப்படி சும்மா விடச்சொல்றிங்க.
அய்யோ என்ற குரல் அந்த அறையே அதிரும்படி கேட்க அனைவரும் குரல் வந்த பக்கம் திரும்பினர். சுதா மயங்கி ஃசேர் மீது தடுமாறி விழ அவளது அப்பா பதறி போனார். சுதா என முனகியபடி ஓடிப்போய் சுதாவை த}ங்கினான் மதன். ஸ்டீபன், சில்வியா, டேவிட் உட்பட சத்தம் கேட்டு வந்த பிற ஆசிரியர்கள், அலுவலர்கள் என்ன நடக்கிறது என தெரியாமல் சில நொடிகள் ஸ்தம்பித்து நின்றனர். சில்வியா சிஸ்டர் சுதகரித்துக்கொண்டு தண்ணீ கொண்டு வாங்க என்றபடி சுதா அருகில் கலவரத்தோடு வந்தார்.
சுதா சுதா என கன்னத்தை தட்டியபடி இருந்தான் மதன். டம்பளரில் எடுத்து வந்த தண்ணீரை வாங்கி சில்வியா சுதாவின் முகத்தில் தெளித்தார். இரண்டு நிமிடத்துக்கு பின் கண்ணை திறந்த சுதா தன் எதிரே அப்பா பதட்டமாக நின்றிருப்பதும் தன்னை மதன் தாங்கிக்கொண்டு இருப்பதை பார்த்தவள் என்னாச்சி என் பையனுக்கு என்னாச்சி என மதனிடம் கேட்டு அழுதாள்.
ஒன்னும்மில்ல. சின்ன அடி தான் என்றான் தயங்கியபடி.
பொய் சொல்லாதிங்க என்னாச்சி என் பையனுக்கு என பெருங்குரலெடுத்து அழ. அசோக் ஆஸ்பிட்டல்ல தான் சேர்த்துயிருக்கு என மதன் சொல்லும்போதே நான் என் பையனை பாக்கனும் என அழுதாள்.
நீ அழுவாத போகலாம் வா என மதன் எழுந்தபடி சுதாவை தூக்கியபோது நீ என்கூட வாம்மா என மதனை முறைத்தபடி சொல்லிவிட்டு சுதாவின் இடது கையை பிடித்து இழுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியே சென்றார். மதன் கையை விட்டுவிட்டு ஏக்கமாக பார்த்துவிட்டு அழுதபடி சென்றாள். அனைவரும் அதை அமைதியாக பார்த்தபடி நின்றனர். மதன் மனதில் கோபம் வந்தது. அப்படியே ஸ்டீபன் பக்கம் திரும்பியவன் ஸ்டீபனை பார்த்து முறைத்தபடியே நீ பேசனத கேட்டன். இவளைத்தான் நீ பேசனன்னு தெரிஞ்சியிருந்தா அப்பவே உள்ள வந்து அடிச்சியிருப்பன். உன்ன ஒன்னும் பண்ண முடியாதா?. நாய கை, காலை உடைச்சிடுவன் ஜாக்கிரதை. நான் அவளோட புருஷன். அவ ஒழுக்கமானவளா கேட்டயில்ல அவ ஒழுக்கமா இருக்கறதால தான் அவுங்க அப்பாவ கூப்ட்டு வந்துயிருக்கா. கெட்டவளா இருந்தா அடியாளத்தான் கூப்ட்டு வந்துயிருப்பா. நீ இன்னைக்கு தப்பிச்சிட்டா அவ உன்னப்பத்தி எங்கிட்ட ஏதாவது சொன்னா இத விட இரண்டு மடங்கு அடிப்பன் ஜாக்கிரதை என்றதும் ஸ்டீபன் அமைதியாக முறைத்தபடி நின்றார்.
கொஞ்சம் அமைதியா இருங்க சார் என்றார் சில்வியா.
ஸாரி மேடம்.
பையனுக்கு எப்படியிருக்கு ?
பரவாயில்ல மேடம். உடம்பு சரியாக லேட்டாகும் போலயிருக்கு 15 நாளைக்கு லீவு கேட்க வந்தன்.
பரவாயில்ல உடம்பு சரியானதும் அனுப்புங்க.
தேங்ஸ் மேடம்.
நீங்க உட்காருங்க என மதனை பார்த்து சொன்னவர் டேவிட் காபி எடுத்து வாங்க. நீங்க கிளம்புங்க சார் என ஸ்டீபனை பார்த்து சொல்ல ஸ்டீபன் தலை கவிழ்ந்தபடி வெளியே சென்றதும் நான் உங்கள பாக்கலாம்ன்னு வெளியில உட்கார்ந்துயிருந்தப்ப இவர் பேசனத கேட்டன். இவ்வளவு மோசமான ஆள எப்படி நிர்வாகத்தல வச்சியிருக்கிங்க ?.
சர்ச்ல, ஆளும்கட்சியில செல்வாக்கான ஆளு. அவரோட மனைவி நல்லவங்க அதுக்காக இவர் பண்றத பொருத்துக்கிட்டு இருக்க வேண்டியதாச்சி என்றவர் சுதா தான் உங்க மனைவியா ?
ம் என தலையாட்டினான்.
பிரிஞ்சி இருக்கிங்களா ?.
தயக்கத்துடன் எஸ் மேடம்.
எப்பத்தலயிருந்து
மூனு வருஷமா.
மூனு வருஷம்மா என அதிர்ச்சியானவர் இரண்டு பேரும் பிரிஞ்சி இருந்து பையன் லைப்ப வேஸ்ட் பண்றிங்களே நியாயமா ?.
மதன் அமைதியாக அமர்ந்திருந்தான்.
உங்களோட பர்சனல் லைப்ல நான் தலையிடகூடாது. ஆனா இதல உங்க பையன் லைப் இருக்கறதால சொல்றன். பிரச்சனைய பேசி தீர்த்துக்குங்க.
பிரச்சனைக்கு அவதான் காரணம். இப்பக்கூட பாருங்க அவுங்க அப்பா இழுத்துக்கிட்டு போனதும் பின்னாடியே போறா. பையன் மேல அவளுக்கு அக்கறையிருக்கா…
அக்கறையில்லாமலா மயங்கி விழுந்தாங்க என கேட்டதும் மதன் அமைதியாக இருந்தான்.
தாய்க்கு பாசம் இருக்காதா. நீங்க கொஞ்சம் விட்டு கொடுத்து போங்க அதான் லைப்க்கு நல்லது. இதுக்கு மேல நான் தலையிட விரும்பல நல்லது கெட்டது உங்களுக்கும் தெரியும் கொஞ்சம் யோசிச்சி பாருங்க. ஏதாவது ஹெல்ப் வேணும்ன்னா தயங்காம கேளுங்க.
நீங்க கேட்டதே போதும் மேடம்.
நீங்க போய் பையனை பாருங்க. நான் ஈவ்னிங் வந்து பாக்கறன்.
சரி மேடம் வர்றன் எனச்சொல்லிவிட்டு கிளம்பினான். பள்ளி கேட் அருகே வரும்போது பாண்டியனும், பிரபுவும் எதிரே டூவீலரில் வந்தனர். எதிரே நான் வருவதை பார்த்ததும் வண்டியை நிறுத்திவிட்டு என்னடா ஏதோ சண்டையாம் என்னாச்சி என கேட்டான் பிரபு.
யார் சொன்னது ?
பாண்டியன் ப்ரண்ட் இங்க வேலை பாக்கறாப்பல அவர்தான் போன் பண்ணாரு.
என்ன சண்டை ?
நடந்ததை முழுவதும் சொன்னதும் அவனை சும்மாவா விட்ட என கேட்டான் பிரபு.
நாலு வாங்கு வாங்கியிருக்கன்.
அதிருக்கட்டும் சுதா இங்க வேலை பாக்குதா என ஆச்சர்யப்பட்டவன் அது வேலை பாக்கறது உனக்கு முன்னாடியே தெரியுமா ?
இல்லடா.
ரஞ்சித்க்கு தெரியுமா ?.
தெரியல.
என்னடா ஸ்கூல் திறந்து இரண்டு மாசம்மாச்சி அவன் எப்படியும் பாத்துயிருப்பானே.
எதுவும் சொல்லல என்றேன் சில நொடிகள் அமைதி நிலவியது. சரி கிளம்பலாம் என்றபடி வண்டியை ஸ்டார்ட் செய்ய ஆஸ்பிட்டல் போய்ட்டு போகலாம் பாண்டியன் என்றதும் வண்டிகள் ஆஸ்பிட்டலை நோக்கி சென்றது.
வார்டுக்குள் நுழையும் போது வெளியே கீதா, ரேகா, மஞ்சு, ஸ்ரீதர் நின்றிருந்தனர். அவர்களை நெருங்கியதும் உள்ளப்போய் பாக்க வேண்டியதானே ?.
டாக்டர் செக்கப் பண்ணிக்கிட்டு இருக்காரு சார் என்றான் ஸ்ரீதர்.
டாக்டர் வெளியே வந்தார். மதனை பார்த்ததும் ஒன்னும் பிரச்சனையில்ல. ரெஸ்ட்ல இருக்கட்டும், அதிகம் தொந்தரவு பண்ணாதிங்க எனச்சொல்லிவிட்டு சென்றார். அனைவரும் அந்த அறைக்குள் நுழைந்தனர். கட்டிலில் படுத்திருந்த ரஞ்சித்தை ஆளாளுக்கு தடவி பார்த்தனர். ரேவதி வலிக்குதா குட்டி என கேட்க அவன் ஆமாம் என லேசாக தலையாட்டினான். சரியாகிடும் செல்லம் என ஆறுதல்படுத்தினாள்.
சாப்பிட்டியா குட்டி என கேட்டாள் மஞ்சு.
ம்.
என்ன சாப்பிட்ட ?
இட்லி.
மதன் தன் அப்பாவை பார்த்து நீங்க வீட்டுக்கு போய் குளிச்சிட்டு சாப்பிட்டுட்டு வாங்க. நான் இருந்து பாத்துக்கறன் என்றான். அவர் அமைதியாக இருந்தார். நீ ஆட்டோ புடிச்சி அனுப்பிட்டு வாடா என மதன் பிரபுவிடம் சொல்ல வாங்கம்மா போகலாம் என்றதும் இருவரும் கிளம்ப சாவி இந்தாம்மா என தந்தான்.
நீ சாப்பிட்டியா ?.
நான் இங்கயே சாப்ட்டுக்கறன்.
மதியத்துக்கு
வேணாம்மா.
இங்க வா என மதனை அறைக்கு வெளியே அழைத்த கலிவரதன் கத்தையாக பணத்தை அவன் கையில் திணித்தவர் செலவப்பாரு என்றவர் வா போகலாம் எனச்சொல்லியபடி மனைவியுடன் நடந்தார். பணத்தோடு அமைதியாக அறைக்குள் வந்தான். கொஞ்ச நேரத்தில் பிரபுவும் உள்ளே வந்தவன் மதியம் எங்கயும் வெளியில போய் சாப்பிட வேணாம்ன்னு சொன்னாங்க. அம்மா சமைச்சி எடுத்து வர்றாங்களாம் சொல்ல சொன்னாங்கடா.
ம்.
சரி கிளம்பலாமா என பாண்டியன் கேட்க அனைவரும் கிளம்பறோம் சார் என விடைபெற்றுக்கொண்டு கிளம்பினர். பிரபு மட்டும் நின்றிருந்தான். ஸ்ரீதர்க்கிட்ட சொல்லி பென்டிங் பில்கள வாங்கி வரச்சொல்லு. முக்கியமான பில்கள க்ளியர் பண்ணி அனுப்புடா என்றதும் தலையாட்டிவிட்டு ஏதாவது வேணும்ன்னா கால் பண்ணு எனச்சொல்லிவிட்டு கிளம்பினான். அவன் போனதும் ரஞ்சித் பக்கம் திரும்பினேன். அவன் தலையை தடவியபடி வலிக்குதா?.
மெல்லிய குரலில் இல்லப்பா என்றான்.
மாத்திரை போட்டுக்கிட்டியா
ம். தாத்தாவும் பாட்டியும் எங்கப்பா ?.
வீட்டுக்கு போயிருக்காங்க வருவாங்க.
நம்ம வீட்டுக்கா ?
உம் என்றதும் அமைதியானான். ரஞ்சித் என அழைத்ததும் என்னப்பா என கேட்டபடி என் முகத்தை பார்த்தான்.
உங்கம்மா உங்க ஸ்கூல்ல வேலை பாக்கறாங்களா ?.
அவன் முகம் இறுக்கமானது பதில் சொல்லாமல் பார்வையை கீழிறக்கி கொண்டான்.
என்ன வேலை பாக்கறாங்க.
டீச்சரா இருக்காங்கப்பா.
எங்கிட்ட சொல்லவேயில்ல என கேட்டதும் அமைதியாக இருந்தான். அப்போது குட்டிம்மா என அழுதபடி அறைக்குள் தன் அம்மாவுடன் வந்த சுதா தன் ஆசை மகன் கட்டுக்களோடு படுத்திருப்பதை பார்த்து எம்புள்ளய இப்படி பன்னிட்டானே பாவி என கட்டில் மேல் உட்கார்ந்து அழுதாள். தன் அம்மாவை கண்டதும் ரஞ்சித் அழ என் கண்ணுயில்ல அழாதடா என தலையில், கன்னத்தில் முத்தமிட்டாள். அவன் தலையை தூக்கி தன் மடியில் வைத்துக்கொண்டு அழ அணையை திறந்தது போல் கண்ணில் இருந்து நீர் கொட்டியது. சுதாவின் அம்மா காவேரியும் பேரன் நிலையை கண்டு அழ தொடங்கியவர் கொஞ்ச நேரத்தில் அழாதம்மா என தன் மகளிடம் சொல்லிவிட்டு பேரனின் கை, கால்களை மெல்ல தூக்கி வலிக்குதா செல்லம் என கேட்டார். தேவராஜ் கண்ணில் தேங்கிய நீரை யாருக்கும் தெரியாமல் துடைத்தபடி நின்றிருந்தார்.
மதன் அவர்களுக்கு வழிவிட்டு கட்டிலை விட்டு ஓரமாக நின்றிருக்க காவேரி மதன் அருகே சென்று நல்லாயிருக்கிங்களா மாப்ளா?. அங்க என்ன குசலம் விசாரிக்கற. புள்ளய வளக்க துப்புயில்ல அங்கப்போய் நல்லாயிருக்கியாங்கறா என கோபப்பட அமைதியாக இருந்தான் மதன். என்ன செய்வது என தெரியாமல் தயங்கி நின்றாள் காவேரி. தண்ணிம்மா என ரஞ்சித் கேட்டதும் தண்ணீ கேட்கறான் பாருங்க அத்தை என்றதும் காவேரி கட்டிலை நோக்கி நகர்ந்தார்.
தண்ணி குடித்து முடித்தவன் மம்மி என அழைத்தான்.
என்ன குட்டிம்மா ?.
தலையெல்லாம் வலிக்குது மம்மி என அழுதான் அந்த வார்த்தையை கேட்டு மனதளவில் நொறுங்கி போனான் மதன். சற்று நேரத்துக்கு முன் கேட்டபோது வலிக்கலப்பா என்றவன் தற்போது அவன் அம்மாவிடம் வலிக்குது என்றதை கேட்டு கலங்கிய கண்களோடு அறைக்கு வெளியே வந்து அங்கிருந்த சோபாவில் அமர்ந்தவன் மனம் நிலையில்லாமல் இருந்தது. அவன் மேல எவ்வளவு அன்பு வச்சியிருந்தன். எங்கிட்;ட எதையும் மறைக்கமாட்டான்னு நினைச்சனே என எண்ணியபடி அமர்ந்திருந்தான்.
அப்போது ரமேஷ்சும், ரம்யாவும் ரஞ்சித் இருக்கும் அறையை தேடி வந்தனர். வெளியே மதன் அமர்ந்திருப்பதை பார்த்து வேகவேகமாக அருகில் வந்து நின்றனர். தன் அருகில் நிழலாடுவதை கண்டு தலையை உயர்த்தி வாங்க எனச்சொல்லியபடி எழுந்த மதனிடம் என்னாச்சி என கேட்டான் ரமேஷ்.
மதன் அனைத்தையும் சொல்லி முடித்தான்.
இப்ப எப்படிண்ணா இருக்கான் ?.
பரவாயில்லன்னு டாக்டர் சொன்னாரு. இந்த ரூம்ல தான் இருக்கான். உள்ள மாமாவும், அத்தை, சுதா எல்லாம் இருக்காங்க போய் பாருங்க என்றதும் உள்ளே சென்றனர். வெளியவே அமர்ந்தான் மதன்.
மதியம் ஒரு மணியானது நர்ஸ் வந்து இந்த கஞ்சிய தாங்க என தந்துவிட்டு சென்றார். சுதா ஸ்பூனில் கஞ்சியை ரஞ்சித்க்கு ஊட்டிவிட்டாள். கொஞ்ச நேரத்துக்கு பின் மீண்டும் அறைக்கு வந்த நர்ஸ், சாப்பிட்டானா என கேட்டதும் சாப்பிட்டான் என்றாள் சுதா. அவனுக்கான டானிக்கும், மாத்திரையும் தந்துவிட்டு மாத்திரை சாப்பிட்டதும் பையன் தூங்குவான் டிஸ்டப் பண்ணாதிங்க எனச்சொல்லிவிட்டு சென்றார். ரஞ்சித்க்கு மாத்திரை தந்ததும் கொஞ்ச நேரத்தில் தூங்க தொடங்கினான். சுதா அவன் முகத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
சுதா என தேவராஜ் அழைத்ததும் என்ன என்பதை போல் பார்த்தாள். நீ அண்ணன், அண்ணியோட போய் சாப்பிட்டுட்டு வாம்மா ?.
எனக்கு வேணாம்ப்பா. நீங்கயெல்லாம் போய் சாப்பிட்டுட்டு வாங்க.
சாப்பிடாம பட்டினியா இருந்து உடம்ப கெடுத்துக்காத என்ற காவேரியிடம் பசியில்ல வேணாம்மா என சுதா சொல்ல. அடம்பிடிக்காத அண்ணனோட போய் சாப்பிட்டுட்டு வா அதுவரைக்கும் நானும் அப்பாவும் பாத்துக்கறோம் என கட்டாயப்படுத்தினாள் காவேரி. ஒரு ஜீஸ்சாவது சாப்பிடு சுதா என ரம்யாவும் அழைக்க தன் மகனின் கட்டில் மேலிருந்து எழுந்தாள். தேவராஜ் எழுந்து பாத்ரூம்க்குள் சென்றார். உடனே காவேரி தன் மகன் அருகில் வந்து பாத்ரூம் கதவை பார்த்தபடி மெல்லிய குரலில் மாப்பிளையையும் அழைச்சிம்போ.
சரிம்மா என்ற ரமேஷ் வெளியே வர சுதாவும், ரம்யாவும் உடன் வந்தனர். வெளியே கைகட்டிக்கொண்டு அமர்ந்திருந்த மதன் அருகில் வந்த ரமேஷ்சிடம், மதிய சாப்பாடு சாப்ட்டானா, மாத்திரை தந்தாச்சா?.
அதெல்லாம் தந்தாச்சி. நீங்க சாப்பிட்டங்களா ?.
ம்.
எங்கண்ணா நீங்க இந்த இடத்தலயிருந்து நகரவேயில்ல. சும்மா சாப்பிட்டன்னு பொய் சொல்லாதிங்க. அவனை நினைச்சி ஃபீல் பண்ணாதிங்க அவனுக்கு ஒன்னும்மில்ல சரியாகிடும்.
இல்ல நீங்க போய் சாப்பிட்டுட்டு வாங்க. அப்பாவும், அம்மா வந்துயிருக்காங்க. காலையில தான் வீட்டுக்கு அனுப்பிவச்சன். அம்மா மதிய சாப்பாடு எடுத்து வர்றன்னு சொல்லியிருக்காங்க. இப்ப வந்துடுவாங்க நீங்க போய் சாப்பிட்டுட்டு வாங்க என்றான்.
டைம் ரெண்டாகுது. அவுங்க எப்ப வந்து நீங்க எப்ப சாப்பிடறது. வாங்க போகலம் என ரமேஷ் வற்புறுத்த சுதா அமைதியாக தன் கணவனை ஓரக்கண்ணால் பார்த்தபடி ரம்யா பின்னால் நின்றிருந்தாள்.
தொடரும்…………