சனி, ஆகஸ்ட் 10, 2013

அன்பே அழகானது. – பகுதி – 8.



கோதை முட்டிக்கொண்டு வந்த கண்ணீருடன் ராகுகாலத்தல போகாதடா. ஆறு மணிக்கு மேல போடா எனச்சொல்ல ரஞ்சித்தை இழுத்துக்கொண்டு டூவீலரை எடுத்துக்கொண்டு கிளம்பினான் மதன்.

அவன்தான் சொல்றத கேட்கறதில்லன்னு தெரியும்மில்ல. சும்மா ஒன்னுக்கிடக்க ஒன்னு பேசி எப்பவாவுது வர்றவனை இப்படி பேசி அனுப்பிட்டிங்களே நியாயமா என கண்ணீர் விட்டாள்.

ஏய் அப்படியே போட்டன்னா போடீ உள்ள எனச்சொல்லிவிட்டு அவர் உள்ளே சென்றார். ராகுகாலத்த போறனே என கோதை புலம்பியபடி உள்ளே வர. அவன் எமனையே எட்டி உதைப்பான் நீ சும்மாயிருடீ என சலிப்பாக சொன்னவரின் மனதில் கொஞ்சம் அச்சம் இருந்தது. கோதை மூக்கை உறிஞ்சியபடி உள்ளே செல்ல. கலிவரதன் விநாயகர் படத்தை பார்த்தார்.

தேசிய நெடுஞ்சாலையில் டூவீலரை ஓட்டிக்கொண்டு இருந்த மதனிடம் ஏம்ப்பா தாத்தாக்கிட்ட சண்டை போட்ட.

ஓன்னும்மில்லடா என்றான் கோபமான குரலில். ரஞ்சித் அமைதியானான்.

ஆறேகால்க்கு வீட்டுக்கு வந்திருந்தான். கதவை திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்து சோபாவில் அமர்ந்த போது செல்போன் அடித்தது. வேண்டா வெறுப்பாக எடுத்தபோது அவனது அப்பா அழைப்பது தெரிந்தது. அருகில் இருந்த ரஞ்சித்திடம் இந்தா பேசு என செல்போனை தந்தான்.

டீஸ்ப்ளே பார்த்தவன் முகத்தில் ஒரு மலர்ச்சி. ஆன் செய்து தாத்தா என்றான்.

ரஞ்சித்து… ஊருக்கு போயாச்சா

இப்பத்தான் தாத்தா வந்தோம்.

சரி நாளைக்கா பேசறன்.

சரி தாத்தா எனச்சொல்லிவிட்டு செல் லைனை கட் செய்தான்.

மறுநாள் எழுந்து ரஞ்சித்தை பள்ளிக்கு அனுப்பிவிட்டு மதன் அலுவலகம் கிளம்பினான். அலுவலகத்தில் அறையில் இருந்த பிரபு நுழைந்ததும் என்னடா நேத்து உன் செல்க்கு ட்ரை பண்ணன் லைன் கிடைக்கல.

ஊருக்கு போயிருந்தன்.

உங்கப்பா என்னச்சொன்னாரு.

எப்பவும் போலத்தான். கடைசியில சண்டை வந்துடுச்சி கிளம்பி வந்துட்டன்.

திருந்தவே மாட்டியாடா நீ.

நீ எதுக்கு கால் பண்ண ?.

சண்டே எங்கயாவது வெளியில போகலாம்ன்னு கால் பண்ணன்.

சண்டேன்னா பொண்டாட்டி, புள்ளயோட போக வேண்டியதானே.

ஆமாம் பெரிய பொண்டாட்டி.

என்ன சண்டை ?.

அவ தம்பிக்கு கல்யாணம். ஐந்து பவுன்ல செயின் போடனம்ன்னு சொல்றா.

சரியா தானே சொல்லியிருக்கு.

மூடூடா.

ஏய்… மச்சானுக்கு கல்யாணம்ன்னா செய்யறதில்லயா.

அதுக்கு அஞ்சி பவுனா.

பின்ன.

டேய், இன்னைக்கு ஒரு பவுன் இருபத்தி ரெண்டாயிரம். கணக்கு போட்டா நகைக்கே ஒரு லட்சத்துக்கு மேலாகுது. அதுக்கப்பறம் செலவு வேறயிருக்கு.

உனக்கு பொண்ணு தந்தப்ப ஐம்பது பவுன் போட்டாங்கயில்ல.

பொண்ண தந்தான் நகை போட்டான். அத அவதான் போட்டுக்கிட்டு இருக்கா. எனக்கு அரை பவுன்ல ஒரு மோதிரம் போட்டானுங்க அவ்ளோ தான்.

மச்சானுக்கு தானே செய்யற செய். பின்னாடி பெருசா செய்வான்.

கிழிச்சான்.

மச்சானை நம்பி கடல்லயே குதிக்கலாம் காப்பாத்துவான்னு சொல்லுவாங்கடா.

அது அப்போ. இப்ப அப்படியே செத்துப்போடன்னு விட்டுடுவானுங்க.

சரி இதுக்கு எதுக்கு என்ன கூப்ட்ட.

கோபத்தல அவள செமயா திட்டிட்டு வந்துட்டன். பயங்கர டென்ஷன் சரக்கு அடிக்க போகலாமேன்னு உன்னை கூப்டன்.

நல்ல சான்ஸ் மிஸ் பண்ணிட்டன் என சொன்னதும் முறைத்தான். முறைக்காத மச்சான் கல்யாணத்துக்கு என்ன செய்யறதா உத்தேசம்.

நீ தான் சொல்லனும்.

நான் ஒரு ஆயிரம் ரூபா வைப்பன் என்றதும் மீண்டும் முறைத்தவன் நீ வைக்கறதப்பத்தி கேட்கல. என்னப்பத்தி கேட்டன்.

அவன் உன் ஒய்ப்போட தம்பி. உன்னோட மச்சான். நீ தான் அதிகமா செய்யனும். என்னை எதுக்கு முறைக்கற. 

அவ அஞ்சு பவுன்ல உறுதியா இருக்கா.

வீட்ல சண்டை வரக்கூடாதுன்னா செய். இல்லன்னா சாகற வரைக்கும் உன் வீட்டுக்காரம்மா சொல்லிக்காட்டும். பிரச்சனை வரும்.

நைட்டே சோபாவுல படுக்க விட்டுட்டா.

என்னடா சொல்ற.

ஆமான்டா. காலையில எழுந்த எதுவும் செய்யாம உம்முன்னு உட்கார்ந்துயிருக்கா. பேசவேயில்ல. நான் கிளம்பி வந்துட்டன்.

இப்ப நீ தான் உதவி செய்யனும்.

நான் என்ன பண்ணனும் என சந்தேகத்தோடு கேட்டதும்

எனக்கு ஒரு லட்சம் வேணும்.

விளையாடறியா இருந்தத கீதாவோட அம்மா ஆப்ரேஷனுக்கு தந்தாச்சி. இந்த மாசம் சம்பளம், ஆபிஸ் செலவுக்கே பென்டிங் ஃபில்ங்க கிளியரானா தான்.

அது தெரியாதா எனக்கு.

அப்பறம்மென்ன.

வெளியில எங்கயாவது வட்டிக்கு வாங்கித்தாடா.

விளையாடறியா.

உனக்கு இது விளையாட்டா தெரியுதா ?.

பின்ன என்னடா. நீயும் சம்பாதிக்கற, அதுவும் வேலைக்கு போகுது. உன் சம்பளத்தலயே செலவு சரியாகிடும். அதோட சம்பளத்த என்ன பண்ற. 

இந்த வருஷம் பெரியவனோட பீஸ் 45 ஆயிரம், சின்னவனுக்கு 42 ஆயிரம். தம்பி வீடு கட்டறன்னு வந்தான் அவனுக்கு நகைய அடகு வச்சி தந்தன். இப்ப இவ என் தம்பிக்கு கல்யாணம்கிறா. அதனால தான் கடன் கேட்கறன். மூனு மாசத்தல தந்துடற மாதிரி வாங்கிதாடா.

மூனு மாசத்தல எப்படி திருப்பி தருவ.

ஆபிஸ் லோன் தான்.

பணம் இல்லாம செலவுகள எப்படிடா சமாளிக்கறதுன்னு தெரியாம நொந்துப்போய் உட்கார்ந்துயிருக்கன். இதல நீ வேற லோன் கேட்டு டென்ஷன் பண்ணாத. நீ நேரா வீட்டுக்கு போ. அம்பது பவுன் வாங்கியாந்தயில்ல. உன் தம்பிக்கு வச்சது போக மீதியிருக்குள்ள அத எடுத்தும்போய் பேங்க்ல வச்சி தேவையானத வாங்கி செலவப்பாரு.

நான் மீதி நகைய கேட்டாதுக்கு நகை எடுத்துக்குங்க நான் எங்க அம்மா வீட்டுக்கு போறன்னு மிரட்டறாடா. அதனால தான் கடன் கேட்கறன் என்றான் பரிதாபமாக. 

கொஞ்சம் யோசித்துவிட்டு இங்க வட்டிக்கு கேட்டா 5 பைசா, 7 பைசாங்கறான். நீ பாக்யராஜ்க்கு போன் பண்ணி நான் சொன்னன்னு கேளு அவன் ஊர்ல ரெடிப்பண்ணி தருவான். மூனு மாசத்துக்கப்பறம் வட்டியோட திருப்பி தந்துடு. அப்பறம் ஆபிஸ நம்பி வாங்காத. நிறைய செலவு இருக்கு. அதனால மூனு மாசத்துக்கப்பறம் நீ கேட்கற லோன் கிடைக்காது.

எவ்ளோ தருவ.

முடிஞ்சா ஐம்பதாயிரம் தர்றதுக்கு பாக்கறன்.

கீதா கேட்டப்ப அதிகமா தந்த. 

அது வேற பிரச்சனை. இது வேற பிரச்சனை. ரெண்டுத்தயும் போட்டு கொழப்பிக்காம அவனுக்கு கால் பண்ணு என்றதும் பாக்யராஜ்க்கு கால் பண்ணான்.

அப்போது சார் என அழைத்தபடி மஞ்சு உள்ளே வர. நான் கூப்பிடறன் என்றதும் திறந்த கதவை சாத்திவிட்டு வெளியே சென்றாள். பாக்யராஜ்யிடம் பேசியவன் ஐந்து நிமிடத்துக்கப்பறம் ரெடி பண்ணிட்டு போன் பண்றன்னு சொன்னான்டா.

கவலைப்படாத தர்றன்னு சொல்லிட்டானா தருவான். எப்ப கல்யாணம்?.

இன்னும் இருபது நாள்யிருக்கு.

இன்டர்காமில் மஞ்சுவிடம் உள்ளே வா என்றதும் உள்ளே வந்தவளிடம் என்ன என கேட்டதும். கணபதி பிரிண்டர்ஸ்சல இருந்து போஸ்டர், நோட்டீஸ் பிரின்ட் செய்ததுக்கான ஃபில் அனுப்பனாங்க சார். அவசரமாம் அமௌண்ட் வேணும்ன்னு கேட்கறாங்க சார்.

மாச கடைசியில தானே தருவோம்.

ஏதோ அவசரமாம்.

எவ்ளோ ?

42 ஆயிரம் சார்.

ஒரு நிமிடம் யோசித்தவன் கணபதி பிரிண்ட்ஸ் ஓனர் துரைக்கு போன் செய்தான். எதிர் முனையில் போன் எடுத்து ஹலோ என்றதும் வணக்கம் சார் மதன் பேசறன்.

சொல்லு மதனு.

பணம் வேணும்ன்னு கேட்டுயிருந்திங்களாம். மாச கடைசியில தானே தருவோம். என்ன திடீர்ன்னு கேட்டுயிருக்கிங்க ?.

ஏண்டா இந்த தொழிலை செய்யறோம்னு வேதனையா இருக்கு மதனு. அம்மாவாசைக்கு அம்மாவாசை அமைச்சரை மாத்தறாங்க. இப்ப புதுசா வந்துயிருக்கற மினிஸ்டர், தேர்தல் வருது நிதி தாங்கன்னு உயிர எடுக்கறாங்க. பிரிண்டர்கள்க்கிட்ட பெருசா எதிர்பாக்கறாறாம். சங்கத்தல கூட்டம் போட்டு சின்ன பிரிண்டர்ங்க 10 ஆயிரமும், பெரிய பிரிண்டர்ங்க 50 ஆயிரம் தரனம்ன்னு பிக்ஸ் பண்ணியிருக்காங்க. தரலன்னா பிரச்சனை செய்வாங்க. பணம் புரட்டனன் அதுக்குள்ள வேலை பாக்கறவனுங்க நாலு பேர் வந்து  பசங்களுக்கு ஸ்கூல் பீஸ் கட்டனும் அட்வான்ஸ் வேணும்ன்னு வந்து நின்னானுங்க தந்துவிட்டுட்டன். அதான் பென்டிங் பில்கள கலெக்ட் பண்றன்.

எங்க ஸ்டாப்போட அம்மாவுக்கு ஆப்ரேஷன். இருந்த அமெண்ட்ட அங்க தந்துட்டோம். எங்களுக்கும் பென்டிங் பில் வரல. அட்மிஷன் முடிஞ்சதும் தர்றன்னு சொல்றாங்க. ரொம்ப டைட் பொசிஷன்ல இருக்கோம் சார்.

ஏதாவது கொஞ்சம் ஏற்பாடு பண்ணேன் மதனு.

சற்று யோசித்த மதன் 25 தர்றன் அட்ஜஸ் பண்ணிக்குங்க. மீதி பில் அடுத்த மாசம் தர்றன் என்றதும் சரி செய்ப்பா என்றார். போனை வைத்த மதன் அக்கவுண்ட்ல எவ்ளோ இருக்கும் மஞ்சு.

இருபதாயிரம் இருக்கு சார்.

ஹேண்ட் கேஸ்.

டூ தவுசன் இருக்கு சார்.

நீ ஸ்ரீதரை லைன்ல புடிச்சி நமக்கு வர வேண்டிய ஃபில்ல ஏதாவது ஒன்ன வாங்கி கலெக்ஷன் போடச்சொல்லு. கணபதி பிரிண்டர்க்கு டூவென்ட்டி பைவ் தவுசன்க்கு செக் தர்றன் அனுப்பிடு. இரண்டு நாளைக்கு அப்பறம் கலெக்ஷனாகற மாதிரி டேட் போட்டு அனுப்பு.

ஓ.கே சார் எனச்சொல்லிவிட்டு மஞ்சு போனதும் என்னடாயிது இந்த மாசம் செலவுங்க லைன் கட்டிக்கிட்டு வருது. வருமானம் ஒன்னயும் காணோம். சம்பளம் எப்படி போடறதுன்னு தெரியல.

அதுக்கு இன்னும் இருபது நாள் இருக்கு விடுடா பாத்துக்கலாம்.

இப்பதாண்டா பாட்னர் மாதிரி பேசற என்றேன் சிரித்தபடி.


லஞ்ச் ஹவரில் ரஞ்சித் தனியாக அமர்ந்து டிபன் பாக்ஸ் திறந்து சாப்பிட தயாரானான்.

மம்மி இவன் தான் ரஞ்சித். என் க்ளோஸ் ப்ரண்ட் என சஞ்சய் அறிமுகப்படுத்தினான்.

ஹலோ ஆன்ட்டி.

எங்கப்பா தனியா சாப்பிடற உங்கம்மா வரலயா?

எங்கம்மா வரமாட்டாங்க என சோகமாக சொன்னான்.

வேலைக்கு போறாங்களா ?.

ரஞ்சித் அமைதியாக இருந்ததும் சஞ்சய் அம்மா ஏதோ புரிந்தவளாக சரிடா குட்டி தள்ளி உட்காரு சஞ்சய்யும் உட்காரட்டும் இரண்டு பேரும் சாப்பிடுங்க என்றார்.

ரஞ்சித் இட்லியை சக்கரையுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட சஞ்சய்யின் அம்மா அவனுக்கு ஊட்டிவிட்டுக்கொண்டுயிருந்தார்கள். அதை ரஞ்சித் கொஞ்சம் ஏக்கமாகவே பார்த்தான். சாப்பாடு ஊட்டிவிட்டுவிட்டு சஞ்சய் அம்மா செல்லும் போது அவன் மனம் கலங்கியது. வகுப்பிலும் உம்மென இருந்தான்.

பள்ளிவிட்டதும் ஆட்டோ டிரைவர் மணி அலுவலக வாசலில் இறக்கிவிட்டார். ரஞ்சித் இறங்கி உள்ளே போனபோது மஞ்சு தான் ஹாய் டார்லிங் கம் கம் என குதுகலமாக அழைத்தாள்.

டாடி எங்க மஞ்சு என்றபடி தோளில் இருந்த ஃபேக்கை கழட்டி டேபிள்க்கு கீழே வைத்தான்.

வெளியில போயிருக்காரு வந்துடுவாரு என்றாள்.

ஸ்ரீதரை பார்த்ததும் ஹாய் அங்கிள் என்றான்.

ஸ்கூல் எப்படிடா இருக்கு

சூப்பர் அங்கிள்.

ஸ்கூல்ல எத்தனை உனக்கு கேர்ள் ப்ரண்ட் உனக்கு ?.

ஏய் சின்னப்பையன்கிட்ட என்ன கேள்வியிது. சார் வரட்டும் சொல்றன் என்றாள் மஞ்சு.

ஹேய் சும்மா கேட்டன்ப்பா என்ற ஸ்ரீதர் ரஞ்சித்திடம் நீ என்னடா டல்லாயிருக்கற ?.

நத்திங் அங்கிள்.

சும்மா சொல்லாதடா.

ஸ்கூல் விட்டு வர்றான்யில்ல அதுவாயிருக்கும்ப்பா என்ற மஞ்சுவிடம் ஸ்கூல் விட்டா பசங்க ஜாலியா தான் வருவாங்க தெரிஞ்சிக்க என்ற ஸ்ரீதர் ரஞ்சித்தையே பார்த்தான். அவன் எதுவும் சொல்லாமல் கம்ப்யூட்டரை பார்த்துக்கொண்டு இருந்தான்.


கேம் விளையாடறியாடா என மஞ்சு தான் கேட்டாள்.

வேணாம் எனச்சொல்லிவிட்டு எழுந்து அவனது அப்பாவின் அறைக்குள் சென்றவன் சேர் மீது படுத்துக்கொண்டான். இதை பார்த்த ஸ்ரீதர் செல்போனை எடுத்துக்கொண்டு வெளியே சென்று பாஸ், ரஞ்சித் டல்லா இருக்கான் உங்க ரூம்ல படுத்துயிருக்கான் என சொல்லும் போதே செல் லைன் கட்டானது.

சிறிது நேரத்தில் மதனும், பிரபுவும் பைக்கில் வந்து இறங்கிய வேகத்தில் வேகவேகமாக அறைக்குள் நுழைந்தனர் இருவரும். ரஞ்சித் அருகே சென்ற மதன் அவனது நெத்தியில் கை வைத்து பார்த்தபோது உடம்பு ஜில்லென இருந்தபின்பே பாதி டென்ஷன் குறைந்தது முகத்தில் தெரிந்தது.

அதை கண்ட பிரபு என்னடா என தலை அசைப்பிலேயே கேட்டான்.

ஒன்னும்மில்ல என்றவன் மெல்ல ரஞ்சித் ரஞ்சித் என குரல் தந்ததும் எழுந்து உட்கார்ந்தான்.

என்னடா படுத்துட்ட. கேம் விளையாட வேண்டியதானே ?.

சும்மா தான் டாடி என்றவன் அருகில் மதன் அமர இன்னோரு நாற்காலியில் பிரபு அமர்ந்தான். ஸ்ரீதர் உள்ளே வர எல்லாருக்கும் காபி சொல்லிட்டு வா.

சரிங்க பாஸ்.

பசங்க ஏதாவது சொன்னானுங்களா ?.

இல்ல டாடி.

மிஸ் அடிச்சாங்களா ?

இல்ல.

அப்பறம் ஏன் டல்லாயிருக்கற.

அமைதியாக இருந்தாவனையே மதனும், பிரபுவும் பார்த்தபடி இருந்தனர். உள்ளே வந்த ஸ்ரீதர் அனைவரும் அமைதியாக இருப்பதை பார்த்து தயங்கி அப்படியே நின்றான். பிரபு அவனை பார்த்ததும் சொல்லிட்டன் என்றான். 

என்னாச்சிடா என மகனின் தலையை பாசத்துடன் தடவியபடி கேட்டதும் ரஞ்சித் அப்படியே தன் அப்பாவின் மடிமேலே படுத்துக்கொண்டான். மதன் முகத்தில் குழப்ப ரேகைகள் பரவியது.

காபி கப்களை எடுத்துக்கொண்டு மஞ்சு உள்ளே வந்து தர அதை வாங்கி டேபிள் மேல் வைத்த மதன், ரஞ்சித் காபி சாப்பிட்டுட்டு படுத்துக்கடா என எழுப்பினான். எழுந்தவன் காபி டம்பளரை கையில் எடுத்தவன் தலை குனிந்தபடி மதியம் என் ப்ரண்ட் சஞ்சய்யோட அம்மா வந்து அவனுக்கு சாப்பாடு ஊட்டனாங்கப்பா. அவுங்க எங்கிட்ட உங்கம்மா வரலியான்னு கேட்டாங்கப்பா என்றான் அழும் குரலில். அவனது குரலில் இருந்த ஏக்கம், பாசம் மதனை நிலை குலைய வைத்தது.


என்ன சுதா மேடம் க்ளாஸ் போகலயா என கேட்டபடி கையில் இருந்த புத்தகத்தை டேபிள் மீது வைத்துவிட்டு அமர்ந்தாள் மாலதி.

சிக்ஸ்த் டூ நயன்த் க்ளாஸ் ஸ்டூடன்டுகள எய்ட்ஸ் வழிப்புணர்வு பேரணிக்கு என்.சி.சி சார் அழைச்சிம் போயிருக்காறாம். அதனால ரெண்டு பீரியட் ப்ரி.

கூட யார் யார் போயிருக்காங்க.

பிரின்ஸ்பால், ஸ்டீபன் சார், ப்ரியா மேடம், பீ.டி சார் எல்லாரும் போயிருக்காங்க.

ஓஹோ.

சரி புதுசா வண்டி வாங்கனதுக்கு ப்ரியா டீச்சரை மட்டும் வீட்டுக்கு அழைச்சிம் போய் ட்ரீட் தந்துயிருக்கிங்க. எனக்கெல்லாம் கிடையாதா?.

ட்ரீட் எல்லாம் தரல. வீட்டுக்கு வந்தாங்க அம்மா சுவீட் தந்தாங்க அவ்ளோ தான்.

என்னை எப்போ அழைச்சிம் போகபோறிங்க.

நீங்க எப்போ வேணும்ன்னாலும் எங்க வீட்டுக்கு வரலாம் மேடம்.

உங்களைப்பத்தி சொல்லவே மாட்டின்கிறிங்க.

என்னை பத்தி சொல்றதுக்கு என்னயிருக்கு. வீட்ல நான், அப்பா, அம்மா, அண்ணன், அண்ணீ, குழந்தை அவ்ளோ தான்.

இதைத்தான் முன்னாடியே சொன்னிங்களே.

வேறயென்ன ?.

உங்களுக்கு என்ன வயசு ?.

35.

மாலதி தயங்கி தயங்கி உங்களுக்கு கல்யாணம்மாகிடுச்சி தானே.

இரண்டு முறை கல்யாணம்மாச்சி என சுதா சாதாரணமாக சொல்ல மாலதி அதிர்ச்சியாகிவிட்டாள்.

தொடரும்…………….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக