ஞாயிறு, ஜனவரி 21, 2018

காவி முன்னேற்ற கழகமாக மாறும் திராவிட முன்னேற்ற கழகம்……….



கவிஞர் வைரமுத்துக்குவுக்கு ஆதரவாக இந்துத்துவ ஆட்களுடன் இணையத்தில், பொதுவெளியில் மல்லுக்கட்டிய உடன்பிறப்புகள் திமுகவின் முன்னால் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் வெளியிட்ட அறிக்கைக்கு பின் இனி என்ன பேசுவது எனத்தெரியாமல் தவிக்கிறார்கள். திமுக செயல்தலைவரை விளாசிக்கொண்டு இருக்கிறார்கள். துர்காஸ்டாலின் எப்படி கட்சியில் முடிவு எடுக்கலாம் எனக்கேட்கிறார்கள். அதை படித்தபோது எங்கோ ஒரு குக்கிராமத்தில் படிக்காத பாமரனுக்கு உள்ள அறிவுக்கூட இணையத்தில் புழங்கும் அறிவார்ந்த சமூகமாக தன்னை காட்டிக்கொள்பவருக்கு இல்லை என்பது தெரிகிறது.

ஒன்றை இங்கு தெளிவாக உணர்ந்துக்கொள்ள வேண்டும். திராவிட முன்னேற்ற கழகம் என்பது முதலில் குடும்ப கட்சி. கலைஞர் குடும்பத்தின் குற்றச்சாட்டாக வைக்கப்படும் குடும்ப கட்சியல்ல. இயற்கையாகவே அது குடும்ப கட்சி. திமுக தொடங்கிய காலத்தில் இருந்து இப்போது வரை அதன் மாநாடுகள் பற்றிய தகவல்களை எடுத்துப்பாருங்கள். திமுக உடன்பிறப்புகள் மாநாட்டுக்கு குடும்பத்துடன் வருவார்கள். அது தற்காலத்தில் குறைந்தாலும் இன்றளவும் குடும்பத்தோடு வருகிறவர்கள் ஓரளவு இருக்கத்தான் செய்கிறார்கள்.

அதேப்போல் திமுகவில் யார் வேண்டுமானாலும் கருத்துக்களை சொல்லலாம் என்கிற சுதந்திரத்தை கட்சியை உருவாக்கிய அண்ணா உருவாக்கினார். தன்னுடன் இருந்த கட்சியின் தூண்களின் கருத்துக்கு மட்டும்மல்ல கடைக்கோடி தொண்டனின் கருத்துக்கும் அவர் மதிப்பளித்தார். அடுத்ததாக திமுக என்பது திராவிடர் கழகம்மல்ல. அது கட்சி. தேர்தலில் போட்டியிடாத அமைப்புகள் என்ன வேண்டுமானாலும் பேசலாம், செய்யலாம். தேர்தல் களத்தில் மக்களை சந்திக்க போகும் கட்சிகள் நெகிழ்வு தன்மையுடன் தான் இருக்க வேண்டும். அதை உணர்ந்ததால் தான் அண்ணா, ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றார். அவர் எந்த இடத்திலும் கடவுள் இல்லை என நேரடியாக சொல்லவில்லை. பெரியார் தன் தொண்டர்களிடம் சொன்னதை தன் தம்பிகளிடமும், மக்களிடமும், யார் என்ன சொன்னாலும் நம்பிவிடாதே உன் பகுத்தறிவை கொண்டு அலசி ஆராய்ந்து பார் என்றார்.

அவர் சொன்னதை அவர் இருக்கும் போதே பலரும் கேட்கவில்லை. அவர் காலத்திலேயே இரண்டாம் கட்ட தலைவர்களாக இருந்த பலர் தீவிர பக்திமானாக இருந்தார்கள் என்பது வரலாற்றின் பக்கங்களில் பதிவாகியுள்ளது. அவர்களையும் தான் அண்ணா அரவணைத்தார். கட்சியின் கொள்கையைப்போல் நீ இரு என எவரையும் அவர் வலியுறுத்தவில்லை. கடவுளை கும்பிடாதவன் தான் திமுகவில் இருக்க வேண்டும், ஓட்டுப்போட வேண்டும் எனச்சொல்லவில்லை. அப்படி சொல்லியிருந்தால் இன்று வரை எதிர்கட்சியாக தான் இருந்திருக்க வேண்டும். சொல்ல முடியாது எதிர்கட்சியாககூட இருந்திருக்க முடியாது.


அண்ணாவைப்போல் இந்துத்துவாவாதிகளின் கருத்து உயரும்போது கலைஞர் கட்சியின் பகுத்தறிவு கருத்துக்களை எதிர்கருத்தாக வெளிப்படுத்தினார். ராமன் என்ன இன்ஜினியரா என்றார், அம்பாள் எப்போதடா பேசினார் எனக்கேட்டார். அவர் அண்ணாவைப்போல் பெரியார் பாசறையில் வளர்ந்தவர். அவர் பகுத்தறிவாதி அதனால் இந்துத்துவ குரல்கள் உயரும் போது தனது நாத்திக குரல்களால் அவற்றை எதிர்ப்பார். அதற்காக அவர் ஆட்சியில் இருக்கும் போது இந்து மதத்துக்கு எதுவும் செய்யாமல் விட்டதில்லை. இந்து சமய அறநிலையத்துறைக்கு அவர் செய்தது போல் வேறு யாரும் செய்துயிருக்க முடியாது. அதேப்போல் தனது தனிப்பட்ட கொள்கைகளை, கட்சி கொள்கைகளை பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையின் மீதோ, ஏன் கட்சியினர் மீதோ அவர் திணித்ததில்லை. அப்படி திணித்திருந்தால் தை மாதம் தான் தமிழ் பிறப்பு என்பதை அதிகாரத்தை கொண்டு ஆணித்தரமாக அவரால் நிலை நிறுத்தியிருக்க முடியும். அப்படி அவர் செய்யவில்லை. அதனால் தான் அவரால் ராமனை திட்டவும் முடிந்தது, ராமனை வணங்குபவனிடம் இருந்து ஓட்டு வாங்கவும் முடிந்தது. தனது கட்சியின் சுயமரியாதையை எவனிடமும் அவர் விட்டுக்கொடுக்கவில்லை. அதனால் தான் நினைவிழந்த நிலையிலும் அவர் நினை கூறப்படுகிறார்.
அண்ணாவைப்போல், கலைஞரைப்போல் திமுக செயல்தலைவராக உள்ள ஸ்டாலின் இருப்பார் என எதிர்பார்ப்பது முட்டாள்தனம். முன்னிருவரும் பெரியாரிடம் பாடம் படித்தவர்கள். ஸ்டாலின் கலைஞரிடமும், எம்.ஜி.ஆரை பார்த்தும், ஜெவை பார்த்தும் அரசியல் பாடம் படித்தார். அதனால் அவரால் கலைஞரைப்போல் பகடி செய்து இந்துத்துவாவை பகடி செய்து காயடிக்க முடியாது.

அதற்கு மற்றொரு காரணம் என் பார்வையில் இரண்டு. அவர் வடநாட்டு அரசியலை இங்கு புகுத்த நினைக்கிறார். இரண்டாவது மனைவி போடும் பாதையில் நடக்கிறார்.

வடநாட்டு அரசியல்  

ஸ்டாலின் செயல்தலைவராக ஆகுவதற்க்கு முன்பிருந்தே வடநாட்டு அரசியல் தன்மையை தமிழக அரசியல் களத்தில் புகுத்த நினைக்கிறார். வடக்கே பாராளமன்றத்தில் சட்டமன்றத்தில் அடித்துக்கொள்வார்கள். வெளியே வரும்போது ஜாலியாக பேசிக்கொண்டு வருவார்கள், அனைத்து விழாக்களிலும், நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கொள்வார்கள். இதைத்தான் ஸ்டாலின் செய்ய நினைக்கிறார். அதனால் தான் அவர் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அவரை சந்தித்து நிதி தந்தார். உடல்நிலை சரியில்லாதபோது மருத்துவமனையில் போய் சந்தித்தார், ராமதாஸ்சை தன் இல்ல திருமணத்துக்கு அழைத்தார், மோடி வீட்டுக்கு வந்தபோது அவரை வரவேற்றார். இப்போதும் வை.கோ உட்பட அனைவரையும் அரவணைக்கிறார்.

ரம்ஜானுக்கும், கிருஸ்மஸ்க்கும் மட்டும் தான் வாழ்த்து சொல்லனும்மா விநாயகர் சதுர்த்திக்கும் வாழ்த்து சொல்கிறேன் என வாழ்த்து சொல்கிறார். அதோடு, இந்துத்துவாவை எதிர்க்க வேண்டாம் என முடிவு செய்துள்ளார். அதன் வெளிப்பாடு தான் ஆண்டாள் குறித்து தவறாக பேசினார் என வைரமுத்து மீது பாப்பான்கள், பாஜக எச்.ராஜா போன்றவர்கள் பாய்ந்தபோது ஸ்டாலின் வெண்டைக்காய் தன்மைப்போல் ஒரு அறிக்கை விட்டார். அதற்கு காரணம் அவர்களை பகைத்துக்கொள்ளகூடாது என்கிற முன்னெச்சரிக்கை தான். இதற்கு முன்பு முன்னால் நடிகரான பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் ஒரு விவகாரத்தில் நான் ஸ்டாலினிடம்மே பேசிவிட்டேன் என இருமாப்பாக பேசவைத்தது. அந்த வெண்டைக்காய் அறிக்கையை பார்த்தபின் தான் பாப்பான்களுக்கு தைரியம் வந்து திருவில்லிப்புத்தூர் ஜீயர் உண்ணாவிரதம் இருப்பேன், வைரமுத்து மன்னிப்பு கேட்கவில்லையெனில் சாகுவேன் என்றார். அவரிடம் சமாதானம் பேசி உண்ணாவிரதத்தை கைவிட வைத்தார் துர்க்காஸ்டாலின் என ஆழ்வார்கள் மையம் வைத்துள்ள திமுக பிரமுகர் ஜெகத்ரட்சகன் அறிக்கை வெளியிட்டதை பார்த்து திமுகவின் பகுத்தறிவாதிகள் அதிர்ந்து போனார்கள். துர்காஸ்டாலின் சமாதானம் செய்தார், அதனால் ஜீயர் அதை கைவிட்டார் சரி. ரகசியமாக நடந்ததை போட்டு உடைத்துள்ளார் ஜெகத். நிச்சயமாக ஸ்டாலின் அனுமதியில்லாமல் அதை சொல்லயிருக்க முடியாது.

அப்படியெதற்கு திமுக செயல்தலைவர் இந்துத்துவாவுடன் பணிந்து போக வேண்டும். அப்படி பணிந்து போவது என முடிவு செய்துவிட்டால் திராவிட முன்னேற்ற கழகம் என்பதற்கு பதில் இந்துத்துவா முன்னேற்ற கழகம் என பெயர் வைத்துக்கொண்டு செய்யலாம்.

மனைவி பேச்சை கேட்டு ஸ்டாலின் செயல்படுகிறார் என்றால் ஏன் கேட்ககூடாது என்றுத்தான் நான் முதலில் கேட்பேன். கலைஞம் தனது துணைவிகளின் பேச்சை கேட்டு கட்சியில் சில முடிவுகள் எடுத்தவர் தான். அரசல் புரசலாக வெளியே வந்துள்ளது. வெளியே வராமல் எவ்வளவு இருக்கும். மனைவி பேச்சை கேட்க வேண்டாம் எனச்சொல்லவில்லை. மனைவி பேச்சை கேட்டு தொண்டனை தலைகுனிய வைக்காதீர்கள், அவன் தான் கட்சியின் உயிர்நாடி. உங்களை சுற்றியுள்ள பணக்காரர்களும், ஜால்ராக்களுமல்ல கட்சி. அண்ணாவோ, கலைஞரோ அதை என்றும் செய்ததில்லை என்பதே யாம் அறிந்த வரலாறு.


தேர்தலில் ஓட்டுப்போட மக்கள் எப்படி வேண்டும்மோ, அப்படித்தான் கட்சி என ஒன்றுயிருக்க தொண்டர்கள் இருக்க வேண்டும். தலைவர் சொல்லிவிட்டார் என்பதற்காக அப்படியே கேட்டுக்கொள்ள திமுக ஒன்றும் அடிமைகளால் நிறைந்த கட்சியல்ல. கட்சியில் பதவிக்காக எதையும் விட்டுக்கொடுக்கும் பச்சோந்திகள் மட்டும்மல்ல, சுயமரியாதையை விட்டுத்தராத தொண்டனும் கட்சியில் உள்ளான் என்பதை மறந்துவிடாதீர்கள். 

இந்துத்துவாவாதிகளின் முட்டாள்தனமாக கருத்துக்கு கலைஞர் பகுத்தறிவு கருத்துக்களை எதிர் கருத்து வைத்தபோதும் புண்பட்ட ஆன்மீக தலைவர்கள் அவர் வீட்டுக்கு வந்தால் வரவேண்டாம் என தடுத்ததில்லை. ஆந்திராவில் இருந்து அந்த சாமியார் வந்தபோது வீட்டுக்கு வரவைத்தார். அவர் துணைவியார் காலில் விழுந்து ஆசி வழங்கியபோது அதை தடுக்கவில்லை. அப்படியொரு சுதந்திரத்தை துணைவிக்கு தாருங்கள். துணைவியார் பேச்சை கேளுங்கள். அதற்காக கட்சியின் சுயமரியாதையும், தொண்டனின் சுயமரியாதையை புடவையில் வைத்து முடித்து வைத்துவிடாதீர்கள். திமுகவின் நிரந்தர தலைவர் என்று யாரும் கிடையாது. நேற்று அண்ணா இருந்தார், இன்று கலைஞர் இருக்கிறார், நாளை நீங்கள் இருக்கபோகிறீர்கள். நாளை மறுநாள் உங்கள் குடும்பத்தில் இருந்தோ அல்லது வேறு யார் வேண்டுமானாலும் அந்த இடத்திற்கு வரலாம். அதற்கு கழகம் இருக்க வேண்டும். அதனால் தொண்டனை சுயமரியாதை இழக்க வைக்காதீர்கள்.
அதையும் மீறி நீங்கள் இந்துத்துவாவாதிகளின் காலில் விழுவேன் என்றால் பிறகு எதற்கு திமுக. கடவுளுக்கும் பக்தனுக்கும் இடையே தட்டேந்தும் பாப்பான்கள் போல்……


யோசியுங்கள் செயல்தலைவரே…. யோசிக்க வையுங்கள் ஆலோசகர்களே……….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக