விடுதலை சிறுத்தைகள் கட்சி தலித் சாதிக்கான கட்சியாக பார்க்கப்பட்டாலும் அதன் தலைவர் திருமாவளவன் தமிழ்நாட்டின் பொதுவான தலைவராகவே முன்னிறுத்தப்படுகிறார். விசிகவில் பிறசாதியினருக்கு, இஸ்லாமிய, கிருஸ்த்துவ மதத்தினக்கு முக்கியத்துவம் தந்து கட்சியின் பொறுப்புகள் தந்துள்ளார். தேர்தல் களத்தில் தனி தொகுதிகளோடு பொதுத்தொகுதிகளையும் வாங்கி விசிக சார்பில் மற்ற சாதியினரையும் வேட்பாளராக்க வெற்றியும் பெற்றுள்ளார்கள். பட்டியல் சமூகத்தவர் மீதான அடக்குமுறையை பொதுசமூகத்தில் மாற்றியதற்கு பெரும்பங்கு திருமாவை சாரும். ஆனாலும் அவர் பட்டியலின குறிப்பாக பறையர் சமுதாய தலைவராகவே அவர் அடையாளப்படுத்தப்பட்டு வருகிறார்.
திருமாவளவின் அரசியல், சமூக செயல்பாடுகளால் தலித் சமூகத்தினர் அவர் பின்னால் அணி திரள துவங்கினர். குறிப்பாக இளைஞர்களை தன் பக்கம் இழுப்பதில் பெரும் வெற்றி பெற்றுயிருந்தார். திருமா பின்னால் இருந்த இளைஞர் பட்டாளத்தை பார்த்து திமுக, அதிமுக போன்ற கட்சிகள் அச்சமடைந்தன, அதனாலயே கூட்டணியில் அவருக்கான முக்கியத்துவத்தை தந்துவந்தது.
நடிகர் விஜய் கட்சி தொடங்கியபின் திருமா தன் சமுதாய மக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் தோல்வி அடைந்துவிட்டார். விசிகவினர் இதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள், ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் அதுதான் உண்மை. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் வாக்குகளை அதிகளவு திமுக எப்படி பெறவில்லையோ அதேபோல் தன் கட்சி மற்றும் பட்டியல் சமூக மக்களின் வாக்குகளை அதிலும் இளைஞர்களின் வாக்குகளை திருமா இழந்துவிட்டார் என்பதே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. பட்டியல் சமூக வாக்குகள் மொத்தமாக விஜய் கட்சிக்கு போய்விட்டன. திமுக கூட்டணியில் விசிக இருந்தாலும் தேர்தல் களத்தில் பெரும்பான்மையாக விஜய்க்கு மறைமுகமாக விசில் ஊதினார்கள் விசிகவினர். இப்போதும் ஊதிக்கொண்டே இருக்கிறார்கள்.
தோல்விக்கான காரணத்தை இதுவரை திருமா ஆய்வு செய்ததாக தெரியவில்லை. திமுகவுடன் கூட்டணி வைத்ததால் தான் இந்த தோல்வி என விசிக கடக்கமுயன்றால் ஏமாற்றம் அவர்களுக்கு தான். தன்பின்னால் திரண்ட இளைஞர்களை திருமா அரசியல்படுத்தவில்லை என்பது இந்த தோல்வி மூலம் தெரிகிறது. விஜய் கட்சி தொடங்கியபோது, காலணி பகுதிகளில் விஜய்க்கு பெரும் செல்வாக்கு உள்ளது என பலரும் சொன்னார்கள் அதனை யாரும் கவனிக்கவில்லை.
2004ல் நடிகர் விஜயகாந்த் கட்சி தொடங்கியபோது வடமாவட்டங்களை குறிவைத்து களம்மிறங்கி பாமக, விசிக வாக்குகளை பிரித்தார். அதுவரை பாமக – விசிக அரசியல் களத்தில் இணைந்திருந்தது. விஜய்காந்த் வருகை வடமாவட்டங்களில் பெரும் ஆதிக்கம் செலுத்தியது. தங்களது சமூக இளைஞர்களை தக்கவைத்துக்கொள்ள வேண்டும், தங்கள் கட்சி வளர்ச்சிக்காக இரண்டு கட்சிகளும் தனித்தனி ரூட் எடுத்தது. பாமக வெற்றி பெறவில்லை என்றாலும் தனது செயல்பாடுகளால் கட்சியின் வாக்கு வங்கியை தக்கவைத்துக்கொண்டது.
20 வருடத்துக்கு பின்னர் நடிகர் விஜய் வருகையால், தலித் சமூக வாக்குகளை மட்டும்மல்ல விசிகவில் உள்ள இளைஞர்களையும் இழந்துள்ளது. ஆதவ்அர்ஜினா சொன்னதுப்போல விசிகவில் தலைவர்கள் இருக்கிறார்கள், தொண்டர்கள் இல்லை என்பது உண்மையாகியுள்ளது. பட்டியல் சமூக இளைஞர்களை மீண்டும் தன் பக்கம் இழுப்பதில் திருமாவுக்கு பெரும் சவால் காத்திருக்கிறது.
தமிழ்நாட்டு ஆட்சிக்கட்டிலில் பாஜக அமர்ந்துவிடக்கூடாது என்பதால் விஜய் முதலமைச்சராக ஆதரவு தருகிறேன் எனச்சொன்னார் திருமா. அதோடு நின்றிருந்தால் பரவாயில்லை. அடுத்தடுத்து விஜய்க்கு முட்டுக்கொடுத்து பேச தொடங்கியபின்புதான் திருமா மீது சந்தேக நிழல்கள் படிய தொடங்கின. விசிக அலுவலகத்துக்கு விஜய் வரும் முன்பு சோபா வந்தது. அது பொதுசமூகத்தில் திருமா மீதான மொத்த நம்பிக்கையையும் இழக்கச்செய்தது. சோபா கடையில் ஆர்டர் தந்து எங்களுக்காக வாங்கினோம் என திருமா சொன்னது இன்னும் சந்தேகத்தை அதிகப்படுத்தியது. கொள்கை அரசியல்வாதியான திருமாவே சினிமா பிம்ப அரசியலைப்பார்த்து மயங்குகிறாரென்றால் அவரின் தொண்டர்களும், இக்கால இளைஞர்களும் மயங்கியதில் ஆச்சர்யம்மில்லை.
அதேபோல் திருமா பிம்பத்தை தொடர்ந்து நீலசங்கிகள் உடைத்துவந்தார்கள். அதன்பின்பு பல காரணங்கள் இருந்தாலும் அதனை திருமா கண்டும் காணாமல் இருந்ததோடு வாய்ப்பு கிடைக்கும்போதுயெல்லாம் அவர்களை ஆரத்தழுவினார். இப்போது விஜய் வாரியர்ஸ்சும் சேர்ந்து திருமா பிம்பத்தை உடைக்கிறார்கள். அதை திருமா உணர்ந்ததாக தெரியவில்லை. தற்போது காலி பெருங்காய டப்பாவாக எப்படி கம்யூனிஸ்ட் கட்சிகள் இருக்கிறதோ அந்த பட்டியலில் வருங்காலத்தில் விசிகவும் இணைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. திருமா விழித்துக்கொண்டால் கட்சியை காப்பாற்றலாம். இல்லையேல் அவரையே ட்ரோல் சமூகத்தில் அவரின் பிம்பத்தை இழக்கவேண்டிவரும்.

