செவ்வாய், பிப்ரவரி 08, 2022

வருங்கால மதவெறி கயவர்கள்.

 



கர்நாடகா மாநிலத்தில் உடுப்பி அரசு ஜீனியர் கல்லூரி, குந்தப்புரா அரசு கல்லூரி என சில கல்லூரி நிர்வாகங்கள் இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்குள் பர்தா அணிந்துவரக்கூடாது என தடுத்தது. இதனை எதிர்த்த மாணவிகளை கல்லூரிக்குள் வரவிடாமல் விரட்டியது. இதற்காக நாடு முழுவதும் கண்டன குரல்கள் எழுந்தபோது, இதை தொடக்கத்திலேயே தடுத்துயிருக்கவேண்டிய கர்நாடகாவை ஆட்சி செய்யும் பாரதிய ஜனதா அரசாங்கம் வேடிக்கை பார்த்ததோடு சப்பைக்கட்டு கட்டியது. அதுமட்டும்மில்லாமல் இந்து மாணவர்களின் கழுத்தில் காவி துண்டு அணிந்துக்கொண்டு இஸ்லாமிய மாணவிகளுக்கு எதிராக ஊர்வலம் நடத்த வைத்ததோடு, கல்லூரிக்குள் செல்ல அனுமதித்தது.

இன்று கல்லூரிக்குள் புர்கா அணிந்து வந்த மாணவியை நோக்கி பாய்ந்த நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவர்கள் ஜெய்ஸ்ரீராம் என கூக்குரல் எழுப்பி அந்த ஒற்றை மாணவியை துரத்தினர். பதிலுக்கு அந்த மாணவி அல்லாஹீஅக்பர் என பதிலடி தந்தார். இஸ்லாமிய மாணவிகளுக்கு தனிவகுப்பறைகள் தந்து மத ரீதியாக மாணவ தரப்பை பிரித்தாலுவதை ஊக்குவித்துள்ளது பாஜக அரசாங்கம். தனிவகுப்பறையில் உள்பக்கமாக பூட்டப்பட்ட வகுப்பறையின் கதவை எட்டி உதைப்பதும், தட்டுவதும் அதை வகுப்பாசிரியை உள்ளிருந்து கதவை திறந்துவிட்டதும் வகுப்பறைக்குள் புகுந்து இஸ்லாமிய மாணவிகளிடம் தங்கள் மதவன்மத்தை காட்டியுள்ளார்கள் காவி துண்டு அணிந்த இந்து மத இளைஞர்கள்.

அந்த இரண்டு வீடியோக்கள் மற்றும் ஊர்வலம் வந்த வீடியோவை உற்று கவனித்தபோது, அந்த மாணவர்களிடம் தெரிந்த மதவெறி அச்சம் கொள்ளச்செய்தது.

15 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடகாவுக்கு அடிக்கடி பயணமாவேன். எனது தோழியுடன் உரையாடும்போது பாஜகவை கொண்டாடுவார், தோழியின் தோழிகளும், அவரின் சகோதரர்களும், ஆண் நண்பர்களும் அப்படியே இருந்தார்கள். அப்போது கர்நாடகாவில் பாஜக ஆட்சியை பிடிக்காத காலக்கட்டம். அப்போதே பாஜக கர்நாடக இளைஞர்களிடம் வளர தொடங்கியிருந்தது. அது இன்று பெரியளவில் வளர்ந்துள்ளது என்பதைத்தான் கடந்த மாதத்தில் சில கர்நாடகாவில் படிக்கும் இளையோர்களிடம் பேசும்போது தெரிந்தது. ஆனால் நான் யூகித்ததைவிட பெரியளவில் வளர்ந்துள்ளது என்பதை இன்றைய காவி துண்டு அணிந்த மாணவர்களை காணும்போது தெரியவந்தது.

பாஜகவின் இலக்கு என்பது எந்த மாநிலத்திலும் ஒரேநாளில் ஆட்சியை பிடித்துவிடவேண்டும் என்பதல்ல. மக்களிடம் சாதி ரீதியாக, மத ரீதியாக மெல்ல மெல்ல ஊடுருவ வேண்டும், அதிலும் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்கிற பாகுபாடு இல்லாமல் இளைஞர்களை குறிவைத்து இயங்கியது. அதாவது,  நம்மில் ஒருவருக்கு இட்லி பிடிக்கும், அடுத்தவருக்கு உப்புமா, மற்றொருவருக்கு பழங்கஞ்சி பிடிக்கும். இதேபோன்று அரசியலில் யாருக்கு எப்படி பேசினால் பிடிக்குமோ அப்படி பேசவும், இயங்கவும் செய்கிறது பாஜக. சாதியை விரும்புகிறவர்களிடம் சாதிவெறியோடு பேசியது, மத விரும்பிகளுக்கு மதப்பற்றோடு, பெண் அடிமையாக நினைக்கும் மனோபாவம் கொண்டவர்களுக்கு ஆணாதிக்கத்தோடு பேசியது. அப்படிப்பட்ட கருத்துக்களை உருவாக்க, ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி போன்றவற்றில் முழு நேர ஊழியர்களை வைத்துள்ளார்கள். இவர்கள் அந்தந்த ஊரில் சின்னசின்ன இந்து அமைப்புகளை உருவாக்கி அடிதட்டு மக்களிடமும் இதை கொண்டும்போய் சேர்க்கிறார்கள்.  முன்பு பத்திரிக்கை வாயிலாக தங்கள் விஷக்கருத்துக்களை நாசுக்காக மக்கள் மனதில் ஏற்றியவர்கள், தற்போது சமூக ஊடகங்கள் டெக்னாலஜி வளர்ச்சியால் மிக வேகமாக தங்களுக்கு ஆதரவான கருத்துக்களை நெஞ்சை வருடும் அளவுக்கு பரப்புகிறார்கள், அதில் வெற்றியும் பெற்றுவருகிறார்கள்.



கல்லூரி படிக்கும் இளைஞர்கள் தங்கள் கல்லூரியில் படிக்கும் சகமாணவியிடம் தங்கள் மத வக்கிரத்தை காட்டுகிறோம்மே என கொஞ்சம் கூட வெட்கம்மே படாமல் தன்னந்தனியாக பர்தா அணிந்து வரும் தங்கள் சகவகுப்பு தோழியை காவி துண்டை அணிந்துக்கொண்டு வேட்டை நாய்களைப்போல் துரத்துகிறார்கள். மீடியா கேமராக்கள் இருக்கிறது என்பதற்காக பேராசிரியர்கள் தடுக்கிறார்கள், அவர்கள் தடுக்கவில்லையென்றாலோ அல்லது கேமரா இல்லையென்றால் குஜராத்தில் மோடி ஆட்சியில் இஸ்லாமிய பெண்களை வேட்டையாடியதைப்போல் பாலியல் வேட்டையாடியிருப்பார்கள்.

கர்நாடகாவில் ஏதோ ஒன்றிரண்டு கல்லூரியில் தானே இது நடந்தது என நினைத்து நாம் கடந்து செல்ல முயன்றால் நம்மைவிட முட்டாள் யாரும்மில்லை. அந்த ஒன்றிரண்டு கல்லூரி மூலம் வெறிக்கொண்ட மாணவர்கள் எவ்வளவுப்பேர் உள்ளார்கள் என்பது தெரியத்தொடங்கியுள்ளது. கர்நாடகாவில் ஆட்சியில் உள்ள பாஜக கல்லூரி மாணவர்களிடம் எந்தளவுக்கு ஊடுருவியிருக்கும் என்பதை நினைத்துப்பாருங்கள், மற்ற கல்லூரிகளில் எவ்வளவுப்பேர் இருப்பார்கள் என்பதை யூகித்தால் பெரும் அச்சம்தான் வருகிறது.

தென்னிந்தியாவில் மதவெறிக்கு பாலியான முதல் மாநிலமாக கர்நாடகா மாறிவிட்டது என்பது நிதர்சணமான உண்மை. இந்த மதவெறி எப்போது வேண்டுமானாலும் பெரும் மதக்கலவரமாக மாறலாம், அப்போது காவி துண்டு அணிந்த இந்த கல்லூரி இளைஞர்கள் தான், முன்கள கயவர்களாக இருப்பார்கள் என்பதை அவர்களின் இன்றைய செயல்கள் உறுதி செய்கின்றன.