ஞாயிறு, பிப்ரவரி 02, 2014

சிலோன் முதல் ஈழம் வரை ( இலங்கை வரலாறு.)





இந்திய பெருங்கடலில் இந்தியாவிற்கு கீழே உள்ள குட்டி தீவு. நாட்டு கத்தரிக்காய் வடிவில் உள்ள பிரதேசம். லங்கா தீபம், நாகதீபம், தாமதீபம், ஸ்ரீலங்கா என்றும், கிரேக்கர்கள் சின்மோண்டு சேலான், தப்ரபேன் என்றும், அரேபியர்களால் செரெண்டிப் என்றும், ஆங்கிலேயர்களால் சிலோன் என்றும் அழைக்கப்பட்டது. 1947க்கு பின் இலங்கை என அழைக்கப்படும் தீவின் வரலாறு 2500 ஆண்டுகள் பழமையானது. ராவணன் வாழ்ந்தான், சீதையை கடத்தினான், ராமன் பாலம் அமைத்தான் எனக்கூறப்பட்டாலும் கி.மு.6ம் நூற்றாண்டிலிருந்து தான் அந்நாட்டின் வரலாறு ஓரளவு சிங்களர்களால் உருவாக்கப்பட்ட மகாவம்சம் என்ற நூல் மூலம் கிடைக்கிறது.

இலங்கையின் பூர்வகுடிகளாக இயக்கர், நாகர், வெத்தா (வேடன், காட்டுவாசிகள்) வாழ்ந்து வந்துள்ளனர். இந்தியாவின் சில பகுதிகளிலிருந்து குறிப்பாக தமிழகத்திலிருந்து வணிக நோக்குடன் பலர் சிலோன் போய்வந்துள்ளனர். கி.மு.5ஆம் நூற்றாண்டில் தமிழ் வணிகர்கள் இலங்கையின் மாந்தோட்ட துறைமுகத்திற்கு போனவர்கள் பின் குடும்பத்துடன் நிரந்தரமாக குடியேறியுள்ளார்கள். அதே காலகட்டத்தில் வட இந்தியாவிலுள்ள கலிங்க நாட்டை சேர்ந்த 18 வயதே ஆன விஜயன் என்ற இளவரசனின் தவறான நடத்தையால் கடுமையான கோபம்கொண்ட மன்னன் விஜயனை நாடு கடத்தியுள்ளான். கப்பலில் 700  பேரோடு பயணம் செய்தபோது கடல் கொந்தளிப்பால் கப்பல் இலங்கையின் தம்பலகாமத்தில் தரை தட்டியுள்ளது. கப்பலில் இருந்து இறங்கியவர்கள் அங்கேயே குடிசை போட்டு வாழ்ந்து வந்துள்ளனர். அவர்களுக்கு தலைவனாகவும் விஜயனே இருந்துள்ளான். விஜயன் தனக்கு மனைவி வேண்டும் என இலங்கையில் வாழ்ந்த ஆதிவாசியான இயக்கர் தலைவி குவேனியை மணந்துக்கொண்டுள்ளன். இவர்கள் இல்லற வாழ்வில் குவேனி 2 குழந்தைக்கு தாயாகியுள்ளாள்.

சிறு சிறு கூட்டங்களோடு சண்டை போட்டு நான் தான் பெரிய ஆள். இனி நான் தான் உங்களது தலைவன். இப்பகுதிக்கு நான் தான் ராஜா என பிரகடணப்படுத்திக்கொண்டு ஆட்சி செய்து வந்துள்ளான் விஜயன். காலப்போக்கில் இலங்கை மன்னனாக விஜயன் முடிசூடிக்கொள்ள முயன்றபோது பட்டத்துக்கு ராணி தேவைப்படுகிறாள். ராணியாக போகிறவள் அரச குடும்பத்தை சேர்ந்தவளாக இருக்க வேண்டும் என நினைத்த விஜயன் ஆதிவாசி குவேனியை துரத்திவிட்டு பாண்டிய நாட்டு ராஜகுமாரியை மணக்கிறான். மன்னனான விஜயன் தான் இலங்கை வரலாற்றில் முதல் அரசன். இலங்கையின் பூர்வ குடிகளான ஆதிவாசிகளுக்கும் வட இந்தியாவிலிருந்து வந்தவர்கள் கூட்டு சேர்ந்ததின் விளைவாக உருவானது தான் சிங்களர் இனமே. முதல் அரசனான விஜயன் காலத்தில் சைவ கடவுள் தான் இலங்கையை ஆக்ரமித்திருந்தது. விஜயன் கி.மு.513 முதல் 504 வரை ஆண்டபோதும் அதற்கு பின்னும் சேர, சோழ, பாண்டிய படைகள் இலங்கையில் புகுந்து அரசாண்டது.

கி.மு.2 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பௌவுத்தம் இலங்கை தீவுக்குள் மகிந்தா தேரரா என்ற அரசன் மூலம் நுழைகிறது. மன்னன் பின்பற்றும் மதம் என்பதால் அரச அதிகார வர்க்கத்தால் நாட்டு மக்களிடம் பௌத்தம் தீவிரமாக பரப்பப்படுகிறது. கி.மு.4ஆம் நூற்றாண்டில் நேபாளத்திலுள்ள லூம்பினி என்னுமிடத்தில் அரசவம்சத்தில் பிறந்து அரசனாக வாழ்ந்த கவுதம சித்தார்தர் (கி.மு.566-கி.மு.486) தனது 16வது வயதில் யசோதரையை மணந்தார். பின் வாழ்க்கையை வெறுத்து தனது 29வது வயதில் சந்நியாசி ஆனார். அரதகலமா, குத்ரகா என்பவர்களை குருவாக ஏற்று 35வது வயதில் இந்தியாவின் பீகார் மாநிலம் காயை என்னுமிடத்திலுள்ள போதிமரத்தடியில் ஞானம் பெற்றார். அவரின் வாழ்நாள் முழுவதும் இந்தியாவை வலம் வந்து கடவுளுக்கு உருவம் இல்லை என கூறினார். அவர் காணும் மனிதர்களிடம் எல்லாம் அஹிம்சையை போதித்தார். மக்களிடம், நற்காட்சி, நல்லெண்ணம், நன்மொழி, நற்செய்கை, நல்வாழ்க்கை, நன்முயற்சி, நல்ல பழக்க வழக்கங்களை கடைப்பிடி, தியானம் என 8 நெறிமுறைகளை போதித்தார். புத்தர் சந்நியாசியான பின் 3 முறை இலங்கை சென்று வந்தார் என கூறப்படுகிறது. வாழ்நாள் முழுவதும் கடவுளுக்கு உருவம்மில்லை என போதித்தவரை அவர் இறந்தது போன பின் அவரையே கடவுளாக்கி அவரது உருவத்தை வணங்குகிறார்கள் அவரை பின் பற்றுபவர்கள்.

கி.மு 2ஆம் நூற்றாண்டில் இந்தியாவை ஆண்ட அசோக மன்னர் கலிங்க போரில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் தன் ரதத்தில் ஏறி போர்களத்தை சுற்றி பார்த்துக்கொண்டே வந்தார். அவர் சென்ற பாதை முழுவதும் இரண்டு புறத்திலும் லட்சகணக்கான போர் வீரர்கள் இறந்து போயிருந்தார்கள். இதை கண்டு மனம்வெறுத்து போன அசோகர் இனி போர் வேண்டாம் என முடிவு செய்து ஆன்மீகத்தின் மீது நாட்டம் செலுத்தினார். புத்தரின் கொள்கைகளை போதனைகளை அறிந்தவர் பௌத்தத்துக்கு மாறினார். புத்தரின் கொள்கைகள் மீது தீவிர காதல் கொண்டு தன்னை சார்ந்தவர்களையும் பௌத்த மதத்திற்க்கு வரவைத்தார். தன் மகன் மகேந்திரன், மகள் சங்கமித்ரையை பௌத்த மதத்தை பரப்பச்சொல்லி இலங்கைக்கு அனுப்பினார். மகேந்திரன் இலங்கையின் பல பகுதிகளுக்கு சென்று பௌத்த மதத்தை பரப்பினார். அநுராதபுரத்தை அடுத்த மிசாகா என்ற மலை மேல் தங்கி பௌத்த கருத்துக்களை பரப்பிவந்தார். அப்போது அனுராதபுரத்தை தலைநகராக கொண்டு ஆட்சி செய்து வந்த தேவனம்பிட்சா (கி.மு 247-கி.மு207) என்ற மன்னன் தனது படையினரோடு மிசாகா மலைக்கு வந்து மகேந்திரனை சந்தித்தார். மன்னன் உட்பட படை வீரர்களுக்கு பௌத்த கருத்துக்களை எடுத்துச்சொன்னார் மகேந்திரன். கருத்துக்களை கேட்ட மன்னன் தனது படை வீரர்கள் உட்பட 40 ஆயிரம் பேரோடு பௌத்த மதத்திற்க்கு மாறினர். பின் படிப்படியாக இலங்கை தீவில் பௌத்தம் வளர்ச்சி வேகமானது.

பௌத்தம் இலங்கையில் பரவுவதற்க்கு முன் சிங்களர்கள் முருகன், சிவன், பார்வதி போன்ற கடவுள்களை வணங்கி வந்தனர். பௌத்தம் நுழைந்த பின் மற்ற கடவுள்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு புத்தர் முன்னிலைக்கு வந்தார். தற்போது சிங்கள மக்களின் பெரும்பான்மை மதம் பௌத்தம், சிங்கள மக்களில் கொஞ்சம் பேர் முருகனை வணங்குகின்றனர். ஏழ்மையானவர்கள் சிலர் கிருஸ்த்துவ மதத்தையும் பின்பற்றுகின்றனர். ஆட்சியாளர்கள் யாராகயிருந்தாலும் பௌத்தத்தை மதிக்கவில்லை என்றால் பிரச்சனைதான். அதனால் தான் அங்கு ஆட்சி பொறுப்புக்கு வர நினைப்பவர்கள் பௌத்த மதத்துக்கு மாறிவிடுகின்றனர்.


கி.மு.2ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை பலர் அத்தீவை ஆண்டாலும் கி.மு.205 முதல் கி.மு.161 வரை இலங்கை முழுவதையும் அனுராதபுரத்தை தலைநகராக கொண்டு ஆண்ட தமிழ்மன்னன் எல்லாளன் நீதியான, சிறப்பான ஆட்சி அமைத்துள்ளான். எல்லாளன் இந்துவாக இருந்தாலும் பெரும்பான்மை மதமான பௌத்தத்தை மதித்து ஆட்சி செய்துள்ளான். கி.மு.161ல் வயது முதிர்ந்த எல்லாளன் நடக்கமுடியாமல் இருந்தபோது சிங்கள இளவரசனான துட்டகாபினி படை திரட்டி வந்து எல்லாளனை தோற்கடித்து சிம்மாசனம் ஏறினான்.

                இதே காலகட்டத்தில் தீராத நோயை தீர்ப்பதற்காக தமிழகத்திலிருந்து இலங்கையின் வடபகுதிக்கு மாருதப்பிரவை என்ற இளவரசி வந்து தங்கி சிகிச்சை எடுத்தபோது அந்த பகுதியின் குறுநில மன்னனாக இருந்த உக்கிரசிங்கசேனன் மீது காதல் வயப்பட்டு அவனை மணம் புரிந்துக்கொண்டுள்ளாள். அடங்காப்பற்றுப் பகுதியை ஆண்ட உக்கிரசிங்கசேனன்க்கு ஆண் வாரிசு பிறந்தது அவனுக்கு இந்தியாவின் மதுராபுரியில் இருந்து பெண்ணெடுத்த போது மணப்பெண்ணுடன் நிரந்தரமாக தங்க அங்கிருந்து 60 வன்னியர்கள் உடன் வந்துள்ளார்கள்.

                கால ஒட்டத்தில் அடங்காப்பறிலே வாழ்ந்த பூர்வ குடிகளான ஆதிவாசிகலால் மன்னருக்கு பல தொல்லைகள் வர அவர்களை அடக்க மதுராபுரியில் இருந்த வாட்டாசாட்டமான போர் பயிற்சி பெற்ற 24 வீரர்கள் அடங்காப்பற்றுக்கு வந்தனர். வந்தவர்கள் ஆதிவாசிகளை அடக்கினர் பின் வருங்காலத்தில் பிரச்சனை வந்தால் சமாளிப்பதற்க்காக அவர்களை தன்னுடனே குடியமாத்தியுள்ளான் மன்னன்.

கி.மு.200 முதல் கி.பி.1000 வரை இலங்கையின் தலைநகராக அனுராதபுரம் இருந்தபோது உள்நாட்டிலேயே பல மன்னர்கள் தங்களுக்குள் போர் புரிந்துக்கொண்டு வெற்றி பெறுவோர் ஆட்சி செய்வது. தோற்ற மன்னன் படை திரட்டி மீண்டும் போர் புரிந்து ஆட்சியை பிடிப்பது என இருந்துள்ளனர். இந்தியாவின் சேரர், சோழர், பாண்டியர்கள், வட இந்திய மன்னர்களும்  இலங்கை தீவு மீது படையெடுத்து வெற்றி பெற்றபின் போர் வெற்றிக்கு காரணமான தளபதியை மன்னராக்கி அங்கிருந்து வரி வாங்கி வந்துள்ளனர்.

1000 ஆண்டுகளுக்கு முன் அனுராதபுரம் தலைநகராக இருக்கும்போது வாணிபம் செய்ய அரேபியாவிலிருந்து வந்த முஸ்லீம்கள் இலங்கையில் தங்கியிருக்கும்போது தங்களுடன் பர்தா போட்ட பெண்களை அழைத்து வராததால் கவுன் போட்ட தமிழ், சிங்கள பெண்களை மணந்துக் கொள்ள ஆரம்பித்தனர். அதிகமாக சிங்கள பெண்களையே திருமணம் செய்துக்கொண்டனர். இந்த கூட்டு மூலம் உருவான இலங்கை முஸ்லிம் இனத்தை இலங்கையில் சோனகர் என அழைக்கப்படுகிறார்கள். இவர்களின் தற்போதைய முக்கிய தொழில விவசாயம், 93% பேர்க்கு தாய்மொழி தமிழ், வாழ்வு பகுதி கிழக்கிலங்கை. தென் தமிழக முஸ்லிம்கள் சிலோன் போனபோது அவர்களும் கிழக்கிலங்கையில்தான் குடியேறினார்கள் அவர்களும் சோனகர் என்றே அழைக்கப்பட்டனர்.

தமிழகத்தின் தனுஷ்கோடிக்கும் இலங்கையின் தலைமன்னார்க்கும் இடையே 22 கடல் மைல் தான் என்பதால் அடிக்கடி இலங்கை மீது 11 ஆம் நூற்றாண்டில் சோழ மன்னன் ராஜேந்திரனும், 13 ஆம் நூற்றாண்டில் கலிங்க மன்னன் படையெடுத்து வென்றபோது நூற்றுக்கணக்கான தமிழர்கள் தீவில் குடியேறினர். தமிழகத்திலிருந்து பலர் குடியேற ஆரம்பித்தார்கள். இதனால் வடபகுதியான யாழ்பாணம், மன்னார், கிளிநொச்சி, திருகோணமலை, அனுராதபுரம் வரை தமிழர்கள் பரவியதால் சிங்களர் கிழக்கை நோக்கி அவர்களாகவே நகர ஆரம்பித்தார்கள்.

இதுவே காலப்போக்கில் இலங்கை 3 பிரிவாக பிரிந்தது. தமிழரை அதிகமாக கொண்ட வடப்பகுதியான யாழ்ப்பாண ராஜ்ஜித்தை நல்லூரை தலைநகராக கொண்டும், தென்னிலங்கையை கோட்டை ராஜ்ஜியமென்றும் (இங்கு சிங்களர் அதிகம்), தமிழர்-சிங்களர் என சரிசமமாக வாழ்ந்த மத்தியபகுதியை கண்டி ராஜ்ஜியம்மென 3 பிரிவாக பிரித்தது. இந்த மூன்று ராஜ்ஜிய மன்னர்களும் தமிழகத்தின் சேரர்-சோழர்-பாண்டியர் போல சில பிரச்சனைக்காக போர் புரிந்துக்கொண்டனர். 


இந்தியாவை போல, குறிப்பாக தமிழகத்தை போல இலங்கையின் பெண் சமூகம் கிடையாது. தமிழரோ, சிங்களரோ, சோனகரோ எந்த சமூகமாக இருந்தாலும் பெண்கள் தான் குடும்ப தலைவர். ஆண்கள் அவர்களின் பாதுகாவலரே. அதோடு திருமணம் ஆனதும் பெண் வீட்டோடு போய் மாப்பிள்ளை நிரந்தரமாக தங்கிவிடுவார். கல்யாணத்துக்கு பின் அதுதான் அவரின் வீடு. (பொறந்த வீட்டுக்கு போன சட்டுபுட்டுன்னு மனைவி வீட்டுக்கு வந்துடுனுமாம்). சோனகர் இன ஆண்கள் பெண்ணுக்கு வரதட்சணை தந்து திருமணம் செய்துக்கொண்டு மனைவியுடன் போய்விடுவர். சிங்கள பெண்கள் இன்னும் ஒரு படிமேலே. சிங்கள பெண்கள் பல ஆண்களை மணந்துகொள்ளும் வழக்கம் உண்டு. கீழ்மட்ட ஏழை சிங்கள தரப்பில் அப்பழக்கம் குறைந்து வருகிறது.

                கி.பி.1242ல் உருவான யாழ்ப்பான ராஜ்ஜியத்தை கி.பி.1450ல் ஆண்ட கனகசூரிய சிங்கையாரை, அதே ஆண்டில் உருவான தென்னிலங்கையின் கோட்டா ராஜ்ஜியத்தின் மன்னன் செண்பகப்பெருமாளின் தளபதி சப்புமால்குமாராய 1450ல் படையெடுத்து யாழ்ப்பாணத்தை கைப்பற்றிக்கொண்டார். தப்பியோடிய யாழ்ப்பாண மன்னன் 17 ஆண்டுகள் கழித்து இந்தியாவிலிருந்து உதவிபெற்று படையெடுத்து 1467ல் இழந்த நாட்டை மீட்டான்.

                                கி.பி.1505ல் டொன் லொரேன்கோ டி அல்மேதா என்ற தளபதியின் தலைமையிலான போர்த்துகீசிய குழு புதிய நாடுகளை வணிக நோக்கத்தில் தேடிபோன போது புயலில் சிக்கிய கப்பல் கொழும்பு துறைமுக கறையில் ஒதுங்கியுள்ளது. அந்த  பகுதி கோட்டோ மன்னின் கீழ் இருந்தது. வணிகம் செய்ய கோட்டோ மன்னனிடம் அனுமதி பெற்றனர். அனுமதி பெற்ற போர்த்துகீசய குழு தென்னிலங்கையில் வாணிபத்தோடு மதப்பிரச்சாரத்தையும் தீவிரப்படுத்தியது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாண ராச்சியத்துக்குள் புகுந்தும் மதப்பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார்கள். தென்னிந்தியாவில் மதப்பிரச்சார குருவாகயிருந்த பிரான்சிஸ்சேவியர் ஒரு பாதிரியரை யாழ்ப்பாணத்துக்கு ஸ்பெஷலாக அனுப்பிவைத்தார். அந்த பாதிரியரும் யாழ்ப்பாண ராஜ்ஜியத்துக்கு உட்பட்ட மன்னாரில் எதிர்பார்த்ததை விட அதிகமான தமிழர்களை கத்தோலிக்க மதத்திற்கு மதமாற்றம் செய்துவிட்டார். இதை கேள்விப்பட்ட யாழ்ப்பாண ராஜ்ஜிய மன்னன் சங்கிலி 1544ல் மன்னார்க்கு வந்து மதம்மாறிய சுமார் 600 பேருக்கு மரண தண்டனை விதித்தான்.

                இதை கண்டு அதிர்ந்த போர்த்துகீசிய பாதிரிமார்கள் தங்களது தலைமை அமைந்த கோவா கவர்னர்க்கு தகவல் சொல்லி சங்கிலியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டனர். கோவா கவர்னரும் சங்கிலியனிடம் பேச்சுவார்த்தை நடத்த தன் தளபதியை ஒருவரை அனுப்பி வைத்தார். பேச்சுவார்த்தைக்கு வந்த தளபதி சங்கிலியன் தந்த சன்மானத்தை பெற்றுக்கொண்டு போய்விட்டான். இதில் அதிருப்தியான கோவா கவர்னர் சங்கிலியன் படைகள் மீது போர் தொடுக்க உத்தரவிட்டார். 1561ல் கொன்ஸ்டன்டீனோ-டி-பிரகன்ஸ என்ற தளபதி யாழ்பணத்தின் மீது படையெடுக்க சங்கிலியன் போர்த்துகீசியர்கள் இடையே சண்டை நடந்தது. போரின் இறுதியில் யாழ்ப்பாண தலைநகர் நல்லூரை போர்த்துகீசியர்கள் கைப்பற்றினர். தப்பிய சங்கிலி தந்திரம் மூலம் மீண்டும் மன்னனாக முயல போர்த்துகீசியர் சங்கிலிய நம்பவைத்து கொன்றனர். சில கடுமையான நிபந்தனைகளை போட்டு யாழ்ப்பாண மன்னனாக புவிராஜபண்டாரம் என்பவனை அமர்த்தினர்.


        இதன்பின் கோட்டோ ராஜ்ஜியத்தின் மீது பார்வை செலுத்திய போர்த்துகீசியர் ராஜ்ஜிய அரசியலின் புகுந்தவர்கள் 1580ல் கோட்டோ மன்னனுக்கு அடுத்து அரசால வாரிசு இல்லாததால் பணத்தை தந்து கோட்டோ ராஜ்ஜியத்தை போர்த்துகீசிய அரசர் பேரில் உயில் எழுதி வாங்கிக்கொண்டு நிழல் ஆட்சி செய்ய ஆரம்பித்தார்கள். 1597 கோட்டோ மன்னன் இறந்ததும் தென்னிலங்கை போர்த்துகீசயர் வசமானது நிர்வாகமும் செய்ய ஆரம்பித்தார்கள். அதேபோல் 1590ல் யாழ்பாண மன்னரான புவிராஜ் பண்டாரம் போர்த்துகீசியர்களின் பேச்சை மீறீ செயல்பட்டார். 1591ல் புவிராஜ் பண்டாரத்தை அந்தரோ என்ற தளபதி படையெடுத்து வென்றான். புவிராஜ் பண்டாரத்தை வென்று 1620 வரை பேருக்கு சிலரை மன்னனாக வைத்திருந்தனர். அதன்பின் 1620 முதல் யாழ்ப்பாணத்தை நேரடியாக ஆட்சி செய்ய ஆரம்பித்தனர் போர்த்துகீசியர். அப்படியும் மத்திய பகுதியை சேர்ந்த கண்டி ராஜ்ஜியம் போர்த்துகீசியர் கண்ணில் படவேயில்லை (அ) கண்டுக்கொள்ளவில்லை.

ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த நெதர்லாந்தில் அதிகமாக வாழும் ஒல்லாந்து இனத்தவர்கள் 1630களில் வாணிபம் செய்ய புதிய நாடுகளை தேடி கப்பல் பயணத்தின்போது வழியில் எதிர்ப்பட்ட தீவை கண்டு ஒய்வு எடுத்துவிட்டு செல்லலாம் என இலங்கை பக்கம் ஒதுங்கினார்கள். இலங்கையில் கிடைத்த வைரத்தை கண்டு அங்கேயே வியாபாரம் செய்ய முடிவு செய்து பேச்சுவார்த்தை நடத்தினர். நூம் மட்டும் சுரண்டினால் போதாது ஓல்லாந்தர்களும் சுரண்டிக்கொள்ளட்டும் என வியாபாரம் செய்ய அனுமதி தந்தனர். ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டியது போல என கிராமத்தில் சொல்வார்கள். அதைப்போல போர்த்துக்கீசியர்களிடம் வியாபாரம் செய்ய அனுமதி வாங்கியவர்கள் பின் பேசிப்பேசியே போர்த்துக்கீசியர் வசம்மிருந்த இலங்கை 1638ல் ஒரு ஒப்பந்தம் மூலம் இலங்கை ஒல்லாந்தர் வசமானது. 1638 முதல் 1796 வரை என 156 ஆண்டுகள் தனியாக ஆண்டனர். இவர்கள் காலத்திலும் கண்டி ராஜ்ஜியம் மட்டும் தனி ராஜ்ஜியமாக அடிபணியாமல் இருந்தது.

கொள்ளைக்கும் சுரண்டல்க்கும் பேர்போன ஆங்கிலேயர்கள் 1796ல் இந்திய பெருங்கடல் வழியாக கப்பலில் கொச்சிக்கு சென்றுக்கொண்டு இருந்தனர். வழியில் ஒல்லாந்து கவர்னரிடம் திரிகோணமலையில் தங்க அனுமதி கேட்டனர், முதல்ல தங்கறன்னுவான், அப்புறம் வியாபாரம் பண்ணனூம்பான், அப்பறம் எல்லாத்தையும் புடுங்குவான். நாம போர்த்துக்கீசியர்க்கு செய்ததுபோல ஆங்கிலேயர்க்கு இடம் தந்தோம். நாம போர்த்துக்கீசியர்க்கு செய்தத இவன் நமக்கு பண்ணிடுவான் என யோசித்து தரமுடியாது என ஒல்லாந்து ஆளுநர் கூறிவிட்டார்.

என்னை கண்டு பயம்மில்லையா, நான் கேட்டே இடம் தர மறுக்கிறாயா என கோபமாகி இலங்கையை ஆண்ட ஒல்லாந்தர்கள் மீது 1801ல் போர் தொடுத்து ஒல்லாந்தர்களை அடித்து துரத்தி விட்டு இலங்கையை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்ய ஆரம்பித்தனர். தனி ராஜ்ஜியம் செய்துக்கொண்டிருந்த கண்டி ராஜ்ஜியத்தை அடிமைப்படுத்த முயன்றனர். கண்டி ராஜ்ய மன்னர் முரண்டு செய்தார். இதனால் ஆங்கிலேயர் கோபம் அடைந்தனர். எங்கள் அதிகாரத்துக்கு கீழ் வா கண்டி மன்னரிடம் பேசினர். கண்டி மன்னார் மசியவில்லை.

                1637ல் கண்டி ராஜ்ஜியம் ஆரம்பமானது. போர்த்துகீசியர், ஒல்லந்தர் காலங்களிலும் சுதந்திர ராஜ்ஜியமாக இருந்தது. கண்டி வீரர்கள் போர் புரிவதில் வல்லவர்கள். 1707ல் பதவியேற்ற வீரபராக்கிரம நரேந்திரசிங்கன் மதுரை நாயக்கர் வம்ச பெண்ணை மணந்திருந்தவனுக்கு குழந்தை பாக்கியமில்லை. இதனால் தமிழ் சமூகத்திலிருந்த மருமகட்பிள்ளை என்ற வழக்கப்படி மனைவியின் சகோதரன் ஸ்ரீவிஜயராஜசிங்கனை மதுரையிலிருந்து வரவைத்து 1739ல் அரசனாக்கினான். அதன்பின் கண்டி ராஜ்ஜியமென்பது கண்டி நாயக்கர் ராஜ்ஜியமானது. 1803ல் பதவியாசை கொண்ட கண்டி முதலமைச்சர் பிலிமத்தலா ஆங்கியேலருடன் போரிடுமாறு மன்னன் ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கன்னை (கண்ணுசாமி) தூண்டிவிட போர் ஆரம்பமானது. தோல்வி வருகுது என்றென்னி மன்னன் தப்பியோட தளபதிகள் வீரத்துடன் போரிட்டு நாட்டை காத்தனர். மீண்டும் வந்து பதவியேற்றான் ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கன். அடுத்தடுத்து முதலமைச்சர் பிலிமத்தலா மன்னனுக்கு துரோகம் செய்ய அரசனால் கொல்லப்படுகிறான். 

நம்வூரில் அரசியல் தலைவர்கள் பதவியில் இருக்கும் தங்களது மாவட்ட “தலைவர்கள்“கள் இறந்து போனால் அவரின் பிள்ளைக்கு பதவி தருவதை போல. மன்னர் பிலிமத்தா மருமகன் எகலப்பொலைக்கு மாமனார் வகித்த முதலமைச்சர் பதவியை தந்தார். இவனும் மாமனாரைப்போல துரோகியாக செயல்பட்டான். இவனது தூண்டுதலால் விக்கிரம ராஜசிங்கன் ஆங்கிலேயர் இடையே 1815 பிப்ரவரி 10ல் மீண்டும் ஏற்பட்ட போரில் கண்டி நாயக்க மன்னன் தோற்று போனார். கண்டி ராஜ்ஜியத்தை பிடித்த ஆங்கிலேயர் மார்ச் 2ல் மன்னனோடு ஒப்பந்தம் ஒன்றை போட்டுக்கொண்டு மன்னனாகயிருந்த ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கன், அவரது இரண்டு மனைவிகள் உறவினர்கள், உதவிக்கு சிலரை தமிழகத்துக்கு நாடு கடத்தினர். தமிழகத்தில் உள்ள வேலூர் கோட்டையில் சிறை வைத்தனர் ஆங்கிலேயர். இலங்கையின் கடைசி ராஜ்ஜியம்மான கண்டி நாயக்கர் ராஜ்ஜியமும் ஆங்கிலேயர் வசமானது. 1832 ஜனவரி 30 தனது 52வது வயதில் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் இறந்தார். அவரை பாலாற்றங்கரையில் புதைத்தனர். மனைவிகள், பிள்ளைகள் கல்லறையும் அருகருகேவுள்ளது. மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. தற்போதும் அவரின் வாரிசுகள் வேலூரில் உள்ளார்கள்
               
1825ல் இருந்து இலங்கையின் குடுமி முழுவதும் ஆங்கியேலர் வசமானது நிர்வாகம் பண்ண ஆங்கிலேயன் திட்டமிட்டே மதம், மொழி ரீதியாக மக்களை பிரித்தார்கள். அந்த பிரிப்பு தான் இன்றுவரை தொடரும் இனகலவரத்துக்கு காரணம்.

( புகைப்படம் கூகுள் வழியாக இணையத்தில் இருந்து எடுக்கப்பட்து. புகைப்படம் இணையத்தில் பதிவேற்றம் செய்தவர்களுக்கு நன்றி. )

7 கருத்துகள்:

  1. அருமை ராஜா சார், வரலாற்று சம்பவங்களை மிக அருமையாக பதிவிட்டு இருகிறீர்கள். மிகவும் சுருக்கமாக இருக்கிறது, அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது. இன்று இருக்கும் இணைய போராளிகள் மற்றும் தமிழ் போராளிகள் என்று சொல்லிக்கொள்ளும் பல பேருக்கு இந்த செய்திகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, முடிந்தால் இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
  2. நல்ல முயற்சி ,வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. Can you give documentary evidence for your story. The actual history differ from your fabricated
    history. Please do not mislead the people. You do not know anything about the Ceylon history.
    Learn the history from the right person. M.Baraneetharan.

    பதிலளிநீக்கு
  4. மிக அருமையான கட்டுரை
    //1825ல் இருந்து இலங்கையின் குடுமி முழுவதும் ஆங்கியேலர் வசமானது நிர்வாகம் பண்ண ஆங்கிலேயன் திட்டமிட்டே மதம் மொழி ரீதியாக மக்களை பிரித்தார்கள். அந்த பிரிப்பு தான் இன்றுவரை தொடரும் இனகலவரத்துக்கு காரணம்.//
    ஒரே குடும்ப மக்களை அடிபட வைத்து பிரிப்பதில் ஆங்கிலேயன் நிபுணன்.
    ஆங்கில கோமகன் ஆங்கில பிரதமர் சமீபத்தில் இலங்கை சென்று ஒரு நாடகமாடினாரே. இங்கிருந்து அதை பார்த்து சிலர் உருகி கண்ணீர் வடிச்சாங்க! கவனிச்சிங்களா.

    பதிலளிநீக்கு
  5. How can Tamil be mothertongue for Arabs married to a singalese woman?

    பதிலளிநீக்கு
  6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு