வெள்ளி, செப்டம்பர் 26, 2014

போட்டோக்களில் நவீன தீண்டாமை. எங்கய்யா கத்துக்கிட்டிங்க......



நண்பரின் போட்டோ ஸ்டூடியோவில் நான் அடிக்கடி பார்க்கும் நிகழ்வு தான் அது. அதை பார்க்கும் போது பல கேள்விகள் மனதில் எழும்பும். எனக்கு எழுவது போல அவருக்கும் எழுந்திருக்கும். அந்த தர்ம சங்கடமான கேள்விகளை நெருக்கமான நண்பர்கள் செலக்ட் செய்ய வரும்போது சிரித்துக்கொண்டே நாசுக்காக கேட்டுவிடுவார்............

அந்த கேள்வி என்ன என்பதை பிறகு பார்க்கலாம். கேள்வி ஏன் உருவாகிறது என விவகாரத்துக்கு போவோம்............

வீட்டில் ஏதாவது விசேஷம் (பிறந்தநாள்விழா, காதுகுத்து, மஞ்சள்நீராட்டு விழா, கல்யாணம்) என்றால் பத்திரிக்கை அடித்து உறவினர்கள், நண்பர்கள், அக்கம்பக்கம் உள்ளவர்களுக்கு தந்து விழாவில் வந்து கலந்துக்கொள்ளுங்கள் என அழைக்கிறார்கள். குடும்பத்தோடு கலந்துக்கொள்ள வேண்டுமென அழைப்பிதழில் அச்சடிப்பதோடு, பத்திரிக்கை தரும்போது குடும்பத்தோடு வரவேண்டும் என்கிறார்கள். விசேஷத்தில் கலந்துக்கொள்பவர்கள் தரும் பரிசு பொருட்களை வாங்கிக்கொண்டு புகைப்படம் எடுக்க வைப்பவர்கள் சாப்பிட்டுவிட்டு தான் போகனும் என உபசரித்து அனுப்புகிறார்கள். நம்மை இப்படி மதிக்கறாறே என புலங்காகிதம் அடைந்து திரும்பிவிடுகிறோம். இதுயெல்லாம் வெளி வேஷம் என்பது அவர்கள் விசேஷத்தில் எடுத்த போட்டோக்களை ஆல்பம் போட தேர்வு செய்யும் போது தெரிந்துக்கொள்ள முடிகிறது. 


இவர் முக்கியமானவர் இவர் போட்டோ இருக்கட்டும், இவர், இவுங்க யார்ன்னே தெரியல அதனால டெலிட் பண்ணிடுங்க என்கிறார்கள். உறவுக்காரர்கள் போட்டோக்களில் மிக முக்கியமானவர்கள் போட்டோக்களை மட்டும் வைத்துக்கொள்கிறார்கள். மற்றவை டெலிட்.

அதிலும் இந்த படித்த லூசுக்கள், நவீன தீண்டாமையை கடைப்பிடிக்கிறார்கள். அதாவது, நன்றாக உடை உடுத்தி அதாவது பேன்ட் சர்ட் போட்டுக்கொண்டு டிப்டாப்பாக போஸ் தருபவர்களின் புகைப்படத்துக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். கிராமத்தில் இருந்து வருபவர்கள், உடையில் வறுமை தெரியும் நகரவாசிகள் புகைப்படத்தில் இருந்தால் அதை டெலிட் செய்ய சொல்கிறார்கள். ஆல்பத்தில் இடம் பெற தகுதியற்றவர்கள் என ஒதுக்கப்படும் இவர்களின் மொழி கவரும், கிப்ட்டும் இனிக்கிறது. ஆனால் அவர்கள் இருக்கும் புகைப்படம் கசக்கிறது.

இவர்களது அப்பனும், ஆத்தாளும், அப்பத்தாலும், பாட்டனும் கிராமத்தில் உழவு ஓட்டிக்கொண்டு இருந்தவர்கள் என்பதை மறந்து விடுகிறார்கள்.

தெரியாதவர்கள், முக்கியம்மில்லாதவர்கள், கிராமத்தான்கள் என ஆல்பத்தில் இடம் ஒதுக்காமல் ஒதுக்கப்படும் நபர்கள் அவர்களாக வரவில்லை. நீங்கள் போய் அழைப்பிதழ் தந்து அழைப்பதால் தான் வருகிறார்கள். வருகிறவர்கள் சும்மா செல்வதில்லை. அவர்களால் முடிந்த அன்பளிப்பை தந்துவிட்டு தான் செல்கிறார்கள். ஆல்பத்தில் கூட இடம் பெற தகுதியற்றவர் என நீங்கள் நினைத்தால் அவர்களுக்கு அழைப்பிதழ் தராமல் விட்டுவிடலாம்மே?. எதற்கு அழைப்பிதழ் தந்து அவர்களை வரவைத்து ஆல்பத்தில் இடம்பெற வைக்காமல்விடுவது. அவர்களது முதுகில் குத்துவது போலாகாதா ?.

போட்டோ எடுத்தபின் தான் இவர் முக்கியமற்றவர் என தெரிகிறது என்றால் அந்த முக்கியமற்றவர் தந்த அன்பளிப்பை திருப்பி தந்துவிடுவது தானே முறை. அதையேன் நீங்கள் செய்வதில்லை. விசேஷத்துக்கு வந்து சாப்பிட்டாங்களே என நியாயம் பேசுபவரா? நீங்கள் போட்ட சாப்பாட்டுக்கு கணக்கு பார்த்து கழித்துக்கொண்டு அன்பளிப்பின் மீதி தொகையை தந்துவிடலாம்மே அதுதானே நியாயம்?.

அப்படி எதுவும் செய்வதில்லை. விசேஷத்துக்கு வந்தவர்கள் அந்த ஆல்பத்தை பார்க்கும் போது தன் புகைப்படம் இல்லாததை கண்டு கேட்கும் போது இவர்கள் தெரிந்தே செய்யும் தவறை மறைத்து போட்டோகிராபர் படம் சரியா எடுக்கல என அவர்களை குற்றவாளியாக்கி இவர்கள் தப்பி விடுகிறார்கள். இந்த வெட்கம்கெட்ட வேலை எதனால் செய்ய வேண்டும். 


படித்தவர்கள் மட்டுமல்ல இதுப்போன்ற ஈனத்தனமான காரியங்களில் அதிகம் ஈடுபடுபவர்கள் அரசு ஊழியர்கள். குறிப்பாக ஆசிரியர் பெருமக்கள் தான் என்பது வெட்ககேடு. அதிலும் இந்த ஆசிரியர் பெருமக்கள், ஏதாவது விசேஷத்துக்கு சென்றால் மேடையில் உள்ளவர்களை மற்றவர்களைப்போல் லைனில் சென்று சந்திக்க வேண்டும், காத்திருக்க வேண்டும் என்ற எண்ணம்மே இருப்பதில்லை. குறுக்காக, விரைவாக சென்று விடவேண்டும் என்பதில் குறியாக இருப்பார்கள். ஒழுக்கத்தை, நேர்மையை போதிக்க வேண்டிய இவர்களே இப்படி இருந்தால் இவர்கள் தங்களிடம் பயிலும் பிள்ளைகளுக்கு எந்தளவுக்கு ஒழுக்கத்தை, நேர்மையை கற்று தருவார்கள் என எண்ணும்போது வேதனையாக இருக்கிறது.

இப்படி பட்டவர்களிடம் போட்டோகிராபர் நண்பர் கேட்கும் கேள்வி தான் நானும் இங்கு கேட்க விரும்புகிறேன். யார்ன்னே தெரியாதுன்னு சொல்றிங்க, முக்கியமில்லாதவங்கன்னு சொல்லி அவுங்க இருக்கற போட்டோவை தூக்கி கடாசிடறிங்க........ அவுங்க தந்த “மொழிகவரையும்“ தூக்கி கடாசிட்டிங்களாண்ணே ??????????

2 கருத்துகள்: