அனிரூத்
இசையமைப்பில், சிம்பு எழுதி பாடிய அந்த பீப் பாடல் தமிழகத்தின் பட்டி
தொட்டியெங்கும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது. சிம்புவுக்கு எதிராக கடும்
விமர்சனமும், போராட்டமும் நடத்தப்படுகிறது.
பெண்களை போகபொருளாக
பார்ப்பது என்பது சினிமாவில் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே நடந்து வருகிறது.
பெண்களை காக்க வந்த நாயகனாக பொதுவெளியில் தன்னை காட்டிக்கொண்ட அதே எம்.ஜி.ஆர் தான்
சினிமாவில் அரைகுறை ஆடைகளுடன் ஆடி, பாடி மகிழ்ந்தார். இப்போது அரசியலுக்கு வா
தலைவா என அழைக்கும் ரஜினி கூட பெண்களை பெரும்பாலும் எல்லா படத்திலும் வசனங்கள் வழியாக
மட்டம் தட்டும் வேலையை செய்கிறார். இன்றைய குட்டி நாயகர்கள் பற்றி சொல்லவே
வேண்டாம், வில்லன்களிடம் பெண்கள் என் கண்கள் ஆபத்துன்னா பார்த்துக்கிட்டு
இருக்கமாட்டன் என வசனம் பேசுபவர்கள்
கதாநாயகியை டூ பீஸ் ஆடையுடன் ஆடவும், ஓடவும் வைக்கிறார்கள் திரையில்.
அந்த வகையில் தான் நடிகர்
சிம்பு – அனிரூத் ஜோடி. புரியாத வார்த்தைகளை போட்டு பாட்டு
எழுதி குவிக்கின்றனர் தனுஷ்சும், அவரது போட்டியாளரான சிம்புவும். அதற்கு
இசையமைக்கிறேன் பேர்வழி என இம்சை செய்கிறார் அனிரூத். இதையும் கைதட்டி ரசித்து
அவர்களை உச்சானி கொம்பில் சினிமா உலகம் மட்டும்மல்ல இளைஞர்கள் உலகம் உட்கார
வைப்பதால் நாம் என்ன எழுதினாலும் அது இலக்கியம், எப்படி இசையத்தாலும் அது காவியம்
என நினைக்கிறார்கள். அப்படி அவர்கள் நினைத்து எழுதி, வெளியானது தான் சிம்புவின்
பீப் சாங். கேட்டால் நான் பாத்ரூம்மில் பாடுவேன் அது என் உரிமை என்கிறார். எனக்கு
தெரியாது என நழுவுகிறார் அனிரூத்.
இதற்கு பெண்கள்
மட்டும்மல்ல பல தரப்பில் இருந்து கண்டனங்கள் வருகின்றன. இதுப்பற்றி ஒரு
இசையமைப்பாளராக உங்கள் கருத்து என்ன என இசைஞானியிடம் ஒரு செய்தியாளர் கேட்க,
உனக்கு அறிவிருக்கா என செய்தியாளரிடம் கேட்டு தன் இசைஞானத்தை காட்டியுள்ளார்
இசைஞானி.
இசையை பாமர
மக்களிடம் கொண்டு சேர்த்தவர் இளையராஜா. அவர் இசையமைத்த பாடல்களை முனுமுனுக்காத
வாய்கள் இல்லை எனலாம். இசைக்காக பிறந்தவர் எனச்சொல்லும் அளவுக்கு அதோடு
ஒன்றிப்போய்வுள்ளார். அதனால் தான் அவரை இசைஞானி என்கிறோம். அப்படிப்பட்ட இசைஞானியிடம்
சமூகத்தில் எதிர்ப்பு சம்பாதித்துள்ள ஒரு பாடல் பற்றி கேள்வி கேட்ட
செய்தியாளரிடம், உனக்கு அறிவிருக்கா என கேட்பது எந்த விதத்தில் சரி?.
இந்த விவகாரத்தை
செய்தி சேனல்களில் பார்த்த இசைஞானி ரசிகர்கள் செய்தியாளரை சமூக தளங்களில் பாய்ந்து
பிராண்டுகிறார்கள். அவர் எவ்வளவு பெரிய ஆள், அவரிடம் போய் போயும், போயும் பீப்
பாடல் பற்றி கருத்து கேட்கலாமா என்றும், எந்த இடத்தில் எப்படிப்பட்ட கேள்வி
கேட்கிறிர்கள் இது திசை திருப்பும் செயல் என்றும், மீடியாக்காரன்களே உங்களால்
ஜெயலலிதாவிடம் கேள்வி கேட்க முடியுமா என பொங்குகிறார்கள்.
தமிழகத்தில் பீப்
பாடல்க்கு எதிராக போராட்டம், சில தலைவர்களின் கண்டன அறிக்கை என வெளியாகிறது. அந்த
நேரத்தில், மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தவர்களுக்கான
சான்றிதழ் வழங்கும் விழாவுக்கு வந்த இளையராஜா விழா முடிந்தபின் அதுப்பற்றி
காத்திருந்த செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்துவிட்டு கிளம்பும்போது, பீப்சாங்
பற்றி கருத்துகேட்கிறார். உடனே கோபத்தில் அனலாக உனக்கு அறிவிருக்கா?, எங்க வந்து
என்ன கேட்கிற?, உனக்கு அறிவிருக்குன்னு எந்த அறிவ வச்சி கண்டுபிடிச்ச?, எங்கிட்ட
கேள்வி கேட்க உனக்கு என்ன..........( அதாவது அறிவு அல்லது தகுதியிருக்குன்னு சொல்ல
வந்திருக்கலாம் என்பது என் யூகம் ) என கோபத்தை காட்டுகிறார்கள். இதை இளையராஜாவின்
ரசிகர்கள், கலைஞனுக்கேயுள்ள கர்வத்தில் அப்படி கோபத்தை காட்டினார் என்கிறார்கள்.
இசைஞானி பேசியது கர்வம்மல்ல என்பதே என் பார்வை.
அந்த செய்தியாளர்
கேட்ககூடாதா இடத்தில் அந்த கேள்வி கேட்கவில்லை. அதோடு, ஒரு பாடல் ஏற்படுத்தியுள்ள
சர்ச்சை பற்றி அந்த துறையின் மேதையிடம் கருத்து கேட்கிறார். அவர் கருத்து கூறலாம்,
கூறாமல் போகலாம். அது அவருடைய உரிமை. கருத்து கேட்பவர் மீது கோபத்தை காட்டுவது
ஜனநாயகம்மா?. கேள்வி கேட்ட செய்தியாளரை பார்த்து, தூக்கி அடிச்சிருவன் பார்த்துக்க
என சொன்ன விஜயகாந்த்தை காய்ச்சி எடுத்தவர்கள் இளையராஜா என்றதும் இளையராஜா பேசியது
சரி என்கிறார்கள்.
இளையராஜா
புனிதமானவராக அவரது ரசிக பக்தர்கள் சிலும்புகிறார்கள். இளையராஜா பீப் பாடலை விட
கொஞ்சம் குறைவாக பல கொச்சையான பாடல்களுக்கு இசையமைத்தவர் தான். அதை நீங்கள்
கேட்டவர்கள் தான் அதனால் அவரிடம் கருத்து கேட்பது தவறில்லை.
ஜெயலலிதாவிடம்
கேள்வி கேட்க முடியாதவர்கள் இசைஞானியிடம் கேள்வி கேட்கிறார்கள் என கொச்சையாக
மீடியாவை, செய்தியாளர்களை ஏசுகிறார்கள். அதிகாரவர்க்கத்தை பார்த்து மீடியா
மட்டும்மல்ல சமூகத்துக்காக பேசும் சமூகத்தில் ஒருவரான நீங்களும் தான்
பதுங்குகிறீர்கள். வாட்ஸ்அப்பில் ஜெ பேசியது பற்றி பொங்கியது உண்டா?, எங்களை ஏன்
வந்து சந்திக்கவில்லை என போராட்டம் நடத்தியது உண்டா?, என் அடிப்படை பிரச்சனைகளை
ஏன் தீர்க்கவில்லையென ஒரு எம்.எல்.ஏவை முற்றுகையிட முடிந்துள்ளதா?, எம்.எல்.ஏ
வேண்டாம் கவுன்சிலரை நிற்க வைத்து கேள்வி கேட்க முடியாதவர்கள் தான் இப்போது
செய்தியாளர்களை பார்த்து பொங்குகிறார்கள்.
நீங்கள் தான் அரசாங்கத்தை
பற்றி கேள்வி கேட்க வேண்டும் என ஊடகத்தை, செய்தியாளரை பார்த்து சொல்பவர்கள் எத்தனை
பேர் அந்த நிறுவனம் அரசாங்கத்தின் அதிகார கோர கரங்களால் பாதிக்கப்பட்டால் ஓடிவந்து
உதவுகிறீர்கள் என உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் பார்க்கலாம். சாதாரண
பொதுமக்கள் நீங்கள் அதிகாரத்தை கண்டு பயப்படும் போது, ஒரு நிறுவனத்தை
நடத்துபவர்கள், அதிகார குவியலை வைத்துள்ள, அரசின் அதிகாரத்தை தவறாக
பயன்படுத்துபவர்களை கண்டு பயப்படத்தான் செய்வார்கள். பயம்மில்லாத ஒரு சதவித
பத்திரிக்கை குறிப்பாக நக்கீரன் அதிகாரவர்க்கத்தை கேள்வி கேட்கிறது. அதனால் பலப்பல
துன்பங்களை இன்றுவரை அனுபவித்து வருகிறார்கள்.
அதற்காக
அதிகாரவர்க்கத்திடம் பற்றி கேள்வி கேட்ககூடாதுயென்பதல்ல என் வாதம். கேள்வி கேட்க வேண்டும். கேள்வி கேட்கும் முன்
செய்தியாளர் தம்மை தகுதி படுத்திக்கொள்ள வேண்டும். அதை பல செய்தியாளர்கள் செய்வதேயில்லை
என்பதே என் கருத்து. ஒரு பிரபலத்தை சந்திக்க செல்லும்போது அவர்களை பற்றி
அறிந்திருக்க வேண்டும், அவர்களது முந்தைய பேட்டிகளை படித்திருக்க வேண்டும்,
அவர்களிடம் என்ன மாதிரியான கேள்விகளை கேட்டால் சரியாக இருக்கும் என்ற அடிப்படை
கொஞ்சம் கூடயில்லாமல் தான் பெரும்பான்மை செய்தியாளர்கள் இருக்கிறார்கள் என்பது
வருத்தத்துக்குரியது. தொலைக்காட்சிகளில் நேர்காணல் நடத்துபவர்கள் கூட அப்படித்தான்
இருக்கிறார்கள்.
இன்று ஊடகம்
பெருத்துவிட்டது. கட்சிகள், பெரு நிறுவனங்கள், அமைப்புகள் எல்லாம் தொலைக்காட்சி
தொடங்கி நடத்துகின்றன. அவர்களுக்கு செய்திப்பற்றி அக்கறையில்லை. தங்களது ஊடகங்கள்
வழியாக தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறார்கள். இதனால்
செய்தியாளரின் தகுதியை பார்ப்பதில்லை. வேலைக்கு ஆள் வேண்டும் அவ்வளவே.
இன்றைய
செய்தியாளர்களுக்கு மூத்தவர்கள் வழிக்காட்டல் தேவையாகவுள்ளது. ஆனால், வழிகாட்டும்
மூத்தவர்களை மதியாத தன்மை அதிகம் உள்ள துறையும் ஊடகம் தான். ஒருவர் புதியதாக வந்து
பேனா பிடித்ததும், மைக் கையில் வாங்கியதும் ஒவ்வொருவருக்கும் நாம் தான் உலகத்தில்
பெரிய ஆள் என்கிற எண்ணம் வந்துவிடுகிறது. இதனால் கற்க மறந்துவிடுகின்றனர். கற்றது
கை அளவு, கல்லாதது உலகளவு என்பதை மறந்துவிடுகின்றனர்.
ஜெயலலிதாவிடம்
இப்படி கேள்வி கேட்கமுடியும்மா? என பலர் சமூக வலைத்தளத்தில் பொங்கல்
வைக்கிறார்கள். எடக்குமடக்கான கேள்வி கேட்பதிலும் செய்தியாளர்களுக்கு பெரும்
சங்கடங்கள் உள்ளன. ஒரு செய்தியாளரின் சந்திப்பில் மருத்துவர் ராமதாஸ்சிடம், அவர்
மகன் பற்றிய ஊழல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. கோபத்தோடு
எழுந்து போனார். அதன்பின் நடக்கும் செய்தியாளர் சந்திப்புக்கு அந்த செய்தியாளரை
அழைப்பதேயில்லை. இப்படி ஏதாவது கேள்வி கேட்பார்கள், ( கேட்க போறதில்ல அது வேற
விஷயம் ) தம்மால் சரியாக பதில் சொல்ல முடியாது என்பதால் தான் அதிகாரத்தில்
இருந்தாலும், இல்லாவிட்டாலும் செய்தியாளர்களை சந்திப்பதில்லை ஜெ. அதோடு, தன்னை,
தன் உடன்பிறவா சகோதரியை, அவரது தலைமையிலான ஆட்சி அவலங்களை எழுதும் நக்கீரன் படும்
பாட்டை தமிழக ஊடகங்கள் காணாததல்ல, தேசிய ஆங்கில சேனல் நெறியாளர் கரன்தப்பர் கடந்த
கால அதிமுக ஆட்சியின்போது, ஜெவிடம் பல சிக்கலான கேள்விகளை கேட்க, அதன்பின் அந்த
சேனல் தமிழகத்தில் பட்டபாடு பெரியது. இதனால் தான் செய்தியாளர்களும்,
தொலைக்காட்சிகளும் ஜெ என்றால் பம்முவது. அதிகார பலம்மில்லாதவர்களிடம் எடக்கு
மடக்கு கேள்விகள் எகிறும்.
இளையராஜா பக்தர்கள்
மட்டும்மல்ல சமூகத்தில் பலரும் சொல்வது மீடியாவின் போக்கு மாற வேண்டும் என
கூறுவதில் மாற்று கருத்துயில்லை. அதற்காக இளையராஜா பேசசியது சரியென ஆகிவிடாது.