வியாழன், அக்டோபர் 08, 2015

நடிகர் சங்க தேர்தல். காரசாரமாக மாறுது – கட்டிப்புடி வைத்தியம் வராதா ?.


தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தில் தேர்தலே நடக்ககூடாது என்கிறார்கள் இப்போது பதவியில் உள்ள சரத்-ராதாரவி தரப்பினர். சிவாஜி காலத்தில் உருவாக்கப்பட்டது தென்னிந்திய நடிகர் சங்கம். அவர் காலத்தில் இடம் வாங்கி கட்டிடமும் கட்டப்பட்டது. பல தலைவர்களை கண்ட சங்கம் கோடிகளில் சம்பளம் வாங்கும் உறுப்பினர்கள் இருந்தும் கடன்கார சங்கமாக இருந்தது. விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது நட்சத்திர கலை இரவு நடத்தி நடிகர் சங்கத்துக்கு என இருந்த கடன்களை அடைத்தவர் லாபகரமான சங்கமாக விட்டுவிட்டு சென்றார். அடுத்து தலைவர் பதவிக்கு வந்தவர் நடிகர் சரத்குமார். அதன் செயலாளராக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பவர் நடிகர் ராதாரவி. இந்த டீம் பொறுப்புக்கு வந்த பின் நடிகர் சங்க இடத்தை சத்யம் சினிமாஸ் நிறுவனத்துக்கு 99 வருட குத்தகைக்கு பெரும் தொகையை வாங்கிக்கொண்டு விட்டவர்கள், அதில் ஒரு பகுதியை மட்டும் கணக்கு காட்டினார்கள். அப்போது நிர்வாக குழுவில் இருந்த நடிகர் குமரிமுத்து, கேள்வி எழுப்ப அவரை ஒருமையில் திட்டி அவரது பதவியை பறித்துக்கொண்டு அனுப்பினார் செயலாளர் ராதாரவி. அடுத்து நாடக நடிகரான பூச்சிமுருகன் என்பவர் பிரச்சனையை கிளப்பி உயர்நீதிமன்றம் சென்றபின் விவகாரம் பெரியதாக வெடித்தது.

இதே பிரச்சனையை நடிகர் நாசர் எழுப்பியபோது, அவரையும் சரத்-ராதாரவி டீம் அசிங்கப்படுத்தியது. நாசர் இந்த பிரச்சனையை பெரும் நடிகர்களான ரஜினி, கமலிடம் கொண்டு சென்றார். பிரச்சனையை கேட்டுக்கொண்டவர்கள் இதில் அமைதி காத்தனர். இந்த விவகாரம் பற்றி அடிக்கடி சின்ன சின்னதாக கேள்வி கேட்டு வந்தார் இளம் நடிகர் விஷால். ஒருக்கட்டத்தில் நாசர் – விஷால் இணைந்த பின் பெரும் பிரச்சனையாக உருவானது. நடிகர், நடிகைகளை சந்தித்து விவகாரத்தை விளக்கினர். அதோடு, குமரிமுத்து, பூச்சிமுருகன் விவகாரம் பற்றி நடிகர் சங்க கூட்டத்தில் கலந்துக்கொண்டவர்களுக்கு தெரியும் என்பதாலும், சரத்- ராதாரவி கூட்டணி செய்வது அயோக்கியத்தனம் என்பதை அறிந்துக்கொண்டு விஷால் –நாசர் உருவாக்கிய பஞ்ச பாண்டவர் அணி பக்கம் சாய ஆரம்பித்தார்கள். இதுவரை எத்தனை உறுப்பினர்கள் நடிகர் சங்கத்தில் என தெரியாத நிலையில், அதை பஞ்சபாண்டவர் அணி நீதிமன்ற அறிவிறுத்தல் பெயரில் தேர்தலை நடத்தும் ஒய்வு பெற்ற நீதிபதி மூலம் அறிவிக்க வைத்தது. இருதரப்பும் தேர்தலில் குதித்து வேட்புமனுதாக்கல் செய்துவிட்டார்கள்.

இருதரப்பும் மீடியாவை சந்தித்து வந்த நிலையில், திடீரென நடிகை ராதிகாசரத்குமார் தன்னுடன் சிலரை உட்காரவைத்துக்கொண்டு மீடியாவை சந்தித்தார். நடிகர் சங்கத்தை உடைக்க பார்க்கிறார்கள். இது ஒரு குடும்பம். இந்த குடும்ப விவகாரம் எதுக்கு பொதுமக்களுக்கு தெரியவேண்டும், விஷால்ரெட்டிக்கு என்ன தெரியும் என சோகத்தை புழிந்து ஒரு நடிப்பு நடித்தார். இதே கூட்டணியில் உள்ள நடிகர் சிம்பு, விஷால்ன்னா பெரிய இவனா, அவனுக்கெல்லாம் நாங்க எதுக்கு பதில் சொல்லனும் என எகிறினார்.

தயாரிப்பாளர் சங்கம், ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பவர்கள் இங்கு கூத்தாடி இரண்டு பட்டதால் ஊர் பார்க்கிறது. அதனால் சமாதானம் செய்ய முயற்சிக்கிறோம் என கலைப்புலிதாணு அறிக்கை வெளியிட்டார்.

பஞ்சபாண்டவர் அணி, சினிமா துறையில் உள்ள தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர் சங்கம் உட்பட 23 சங்கத்தில் முறையாக 3 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுகிறது. அப்படியிருக்க 10 ஆண்டுகளாக தேர்தலே நடைபெறாத நடிகர் சங்கத்தில் ஏன் தேர்தல் நடைபெற ஒத்தொழைப்பு அளிக்கமறுக்கிறீர்கள். வெற்றி, தோல்வி எது வந்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்ள தயார். நாங்கள் குடும்பத்தை உடைக்கவில்லை என அறிவித்துவிட்டு பிரச்சாரத்துக்கு போய்விட்டார்கள்.

நீ ஏன் இந்த பிரச்சனையை மக்களிடம் கொண்டு செல்கிறீர்கள் என ராதிகா மீடியாக்கள் முன் போட்டி குழுவிடம் கேள்வி எழுப்பி நியாயம் கேட்டார். நமக்கு இங்கு சில கேள்விகள் எழுகின்றன. தென்னிந்திய நடிகர் சங்கம் நடிகர்களுக்கானது மாற்று கருத்துயில்லை. அவர்களின் நலனுக்காக உருவானது சரி. எத்தனை நடிகர்-நடிகைகளுக்கு நல்லது செய்துள்ளது சங்கம். லட்சங்களில், கோடிகளில் சம்பாதிக்கும் அந்த ஆயிரம் பேரை விட்டு விடுங்கள் மீதியுள்ள இரண்டாயிரம் சொச்சம் பேருக்கு என்ன செய்துள்ளது நடிகர் சங்கம் ?.


சக நடிகர்கள் சங்கத்தில் நடந்துள்ள, நடந்து வரும் ஊழல் பற்றி கேள்வி கேட்கிறார்கள் எதுவும் நடைபெறவில்லையென்றால் விளக்கமாக எல்லா உறுப்பினர்களுக்கும் அதுப்பற்றி வெள்ளை அறிக்கை தரலாம்மே ?. அவர்கள் வரமறுக்கிறார்கள் என நீங்கள் சொல்கிறீர்கள். அவர்கள் தான் வரவில்லையே நீங்கள் குற்றமற்றவர்கள் என நிரூபிக்க இப்போது சங்கத்தை உடைக்க பார்க்கிறார்கள் என கதறுவதை விட்டுவிட்டு வெள்ளை அறிக்கையாக மீடியாக்களிடம் அதை தரலாம்மே ?.

விஷால்ரெட்டி என சாதி பெயரை உள் புகுத்துகிறீர்கள். நீங்கள் சொன்னதுக்கு பின் தான் அவர் ரெட்டி என தெரிகிறது. நல்லது. நீங்கள் என்ன சாதி என வெளிப்படையாக அறிவித்தால் நன்றாக இருக்கும். சாதி, மதம் கடந்தது தான் நடிகர் சங்கம். இங்கு சாதியை இழுப்பது ஏன் ?. 1980 நடிகர் – நடிகைகள் அமைப்பை உருவாக்கி ஆண்டுதோறும் பார்ட்டி வைத்து கொண்டாடுகிறிர்கள். அதில் எத்தனை பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என பட்டியல் தர தயாரா ?.

தமிழர்கள் தான் சங்க பதவிக்கு வரவேண்டும், தேர்தலில் போட்டிபோட வேண்டும் என விரும்புகிறிர்களா நல்லது சங்க பெயரை நீங்கள் ஏன் தமிழக நடிகர்கள் சங்கம் என பெயர் மாற்றம் செய்யக்கூடாது ?.

நடிகர் சங்க பிரச்சனை பற்றி எதுக்கு பொதுமக்களிடம் சொல்லனும் என ராதிகா மீடியா முன் கேட்டார். நாங்கள் காசு கொடுத்து டிக்கட் வாங்கி படம் பார்ப்பதால் தான் நிங்கள் படம் எடுக்கிறீர்கள், அந்த படத்தின் விற்பனையால் தான் உங்களுக்கு சம்பளம் கிடைக்கிறது. மக்களின் வரிப்பணத்தில் இருந்து வரிவிலக்கு பெறுகிறீர்கள், அப்படியிருக்க உங்கள் சங்கம் பற்றி பொதுமக்கள் தெரிந்துக்கொள்ளவதில் உங்களுக்கு என்ன தயக்கம் ?.

தேர்தலில் தோற்ககூடாது என சரத்-ராதாரவி தரப்பினர் களத்தில் குதித்துள்ளனர். கணவர் சரத், அண்ணன் ராதாரவிக்கு ஆதரவாக நடிகை ராதிகா இப்போது படை திரட்டுகிறார். சரத்-ராதாரவி டீம் சாதி பலம், பண பலம், அதிகார பலம் காட்டுவதன் நோக்கம் இதில் வரும் வருமானம், அதோடு ஊழல் வெளிப்பட்டுவிடும்மோ என்ற பயம் தான் காரணம்.

பஞ்சபாண்டவர் அணி வெற்றி பெறுகிறதோ? தோற்கிறதோ அது அக்டோபர் 18ந்தேதிக்கு மேல் தெரியப்போகிறது. சரத்-ராதாரவி வெற்றி பெற்றாலும் அவர்களை எதிர்க்க ஒரு குழு உள்ளது என்பதை காட்டியுள்ளார் விஷால்.


நடிகர் சங்கம் உடைந்து விடும் என காதில் ஜிகினா சுத்த வேண்டாம். ஒரு இரவு நேர பார்ட்டி வைத்தால் இவர்கள் அனைவரும் கட்டிப்பிடித்துக்கொள்வார்கள். கமல் படத்தின் கட்டிப்பிடி வைத்தியம் போல. 

3 கருத்துகள்: