செவ்வாய், டிசம்பர் 26, 2017

ஆர்.கே. நகர் - திமுக தோல்வியை உள்ளிருந்து அலசுவோம்.ஆர்.கே. நகரில் திமுக டெப்பாசிட் போனதும் திமுக அவ்வளவு தான் என பேசவும், எழுதவும் தொடங்கிவிட்டார்கள் இணையத்தில் இயங்கும் அரசியல் விமர்சகர்களும், நடுநிலைவாதிகளும். இந்த இடைத்தேர்தல் களத்தில் அதிமுகவின் இரு அணிகளுக்கும் இடையே தான் போட்டி, வெற்றி யாருக்கு என்பது களத்தில் இருந்த செய்தியாளர்கள் அறிந்தேயிருந்தனர். ஆனால், அதை வெளிப்படுத்தாமல் மறைத்தனர்.

வெளி மாவட்டங்களில் இருந்து ஆர்.கே.நகர் சென்ற திமுகவின் உண்மை தொண்டர்கள் பலர் முதல் நாளே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியை சுற்றி வந்தவுடனே தினகரன் தான் வெற்றி பெறுவார் என ஆணித்தரமாக சொன்னார்கள். அவர்கள் இதே சமூக வளைத்தளத்தில் உள்ளார்கள். அவர்கள் அதற்கான காரணத்தையும் விளக்கினார்கள். அது பின்பு தேர்தல் முடிவில் அப்பட்டமாக தெரிந்தது.

தினகரன் வெற்றிக்கான முழு முதல் காரணம் கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நிறுத்தப்பட்ட மறுநாள், எனக்கு ஓட்டுக்கு பணம் வரவில்லை என தினகரன் அணிக்கு போன் செய்த வாக்காளர்களுக்கு வீடு தேடி 6 ஆயிரம் ரூபாய் பணம் சென்றுள்ளது. இது தொகுதியில் நன்றாக பரவிவிட்டது. அதனால் தான் 20 ரூபாய் நோட் தந்து எனக்கு ஓட்டுப்போட்டால் 10 ஆயிரம் தருவேன் எனச்சொன்னது பெரும் நம்பிக்கை ஏற்படுத்தியது. அடுத்ததாக, கட்சிகள் எப்போதும் தேர்தல் பணிக்கு சம்மந்தப்பட்ட தொகுதி மக்களை அழைத்து செல்வார்கள். காலை அதிமுகவுக்கு சென்று வாக்குகேட்டால் மாலை திமுகவுக்கு இரவு வேறு கட்சிகளுக்கு என சென்று ஷிப்ட் போட்டு கல்லா கட்டுவார்கள் மக்கள். இதில் மாற்றம் செய்தது தினகரன் டீம். மாதச்சம்பளம் போல் புக் செய்துள்ளார். குறிப்பாக பெண்களை மட்டும்மே புக் செய்தார்கள். தினமும் 300 குக்கர் தரப்படும். பிரச்சாரத்துக்கு வருபவர்களுக்கு தரப்படும் குக்கர் அப்படியே எடுத்தும்போய் தொகுதியில் தரவேண்டும். இப்படி வித்தியாசமான பார்முலாக்களை வகுத்துள்ளார். இப்படி சில பல திட்டங்களை பயன்படுத்தியுள்ளார்.

இவைகள் எதையும் திமுக தடுக்கவில்லை. அதோடு, ஓட்டுக்கு பணம் தருவதில்லை என்பதை ஸ்டாலின் முன்பே முடிவு செய்துவிட்டார். அதற்கு முக்கிய காரணம் தோல்வி என்பது மட்டும்மல்ல. இந்த இடைத்தேர்தலில் தோற்றால், ஆட்சி மாற்றம் ஏற்படுத்த முடியாது, 89 உடன் ஒன்று சேர்ந்து 90 ஆகும் அவ்வளவு தான் என்பதை உணர்ந்தே இருந்தார். அதனால் கடும் போட்டியில் இறங்க அவர் தயாரில்லை. அதோடு, தினரகன் வெற்றி பெற்றால் அதிமுகவில் இன்னும் குழப்பம் ஏற்படும், ஆட்சிக்கு சிக்கல் வரும், சட்டசபைக்குள் சலசலப்பு ஏற்படும் அது ஆட்சிக்கு ஆபத்தை உருவாக்கும் என அவரை இயக்குபவர்கள் கூற அதை அவரும் புறந்தள்ளவில்லை. இப்படிப்பட்ட காரணங்களோடு, ஆர்.கே.நகரில் கவனம் செலுத்தாமல் ஸ்டாலின் போனதுக்கு பின்னால் உள்கட்சி ரீதியாக வேறு சில காரணங்களும் உள்ளன. அது இங்கு தேவையில்லை.

தேர்தல் முடிவு ஸ்டாலின் மட்டும்மல்ல திமுக முன்னணி தலைவர்களே எதிர்பார்க்காதது, அதிமுக அணிகள் பிரிந்து நின்ற நிலையில் தனக்கு டெப்பாசிட் பறிபோகும் என்பதை அறியவில்லை. திமுக இதற்கு முன்பு பல முறை டெப்பாசிட் இழந்துள்ளது. கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 தொகுதிகளில் ஆளும்கட்சியான அதிமுக டெப்பாசிட் இழந்துள்ளது. ஆனால் ஆர்.கே.நகரில் திமுக டெப்பாசிட் இழந்ததற்கு காரணம் கட்சி நிர்வாகிகள் தான். கட்சி ஓட்டு எங்கே சென்றது என்பது தான் மிக முக்கிய கேள்வி. திமுக உறுப்பினர்களை சேர்க்க வாக்காளர் அடையாள அட்டை, செல்போன் எண் என வாங்கி இணைத்து, கையெழுத்து பெற்று உறுப்பினராக சேர்க்கிறார்கள். அந்த உறுப்பினர்கள் என்னவானார்கள்?. துரைமுருகன் சொன்னது போல திமுக உறுப்பினர்கள் வாக்கும் விலை போய்விட்டதா அல்லது சேர்க்கப்பட்ட உறுப்பினர்கள் போலியா?. இது ஆய்வுக்கு உட்பட்டது.

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிகள் எங்களை இணைத்துக்கொண்டு களப்பணியாற்றவில்லை என்கிற குற்றச்சாட்டை அதன் தலைமைகள் வைக்கின்றன ?. அவர்களை வேலை செய்யவில்லை, இதில் கூட்டணி கட்சியை எப்படி இணைத்துக்கொண்டு வேலை செய்வார்கள்.

தோல்வியே என்றாலும் மோதியிருக்க வேண்டாமா என்பதே பலரின் கேள்வி ?.

நிச்சயமாக மரியாதைக்குரிய தோல்விக்காகவாவுது மோதியிருக்க வேண்டும். அப்படி மோதாமல் விட்டதற்கான காரணம், ஓட்டுக்கு பணம் தருவதில்லை என தலைமை முடிவெடுத்து கீழே தெரியப்படுத்தியதும் கீழ்மட்ட நிர்வாகிகள் சோர்ந்து போனது மிக முக்கிய காரணம். பணம் தந்தால் தான் வெற்றி பெற முடியும் என்கிற மாயை கட்சி நிர்வாகிகளிடம்மே உருவாகியுள்ளது. அவன் பணம் தர்றான், நீ பணம் தரலயா என மக்களிடம்மிருந்து வரும் கேள்வியை எதிர்க்கொள்வது களத்தில் உள்ள நிர்வாகியும், தொண்டனும் தான். எங்களிடம் பணம்மில்லை எனச்சொல்ல முடியாது. நீங்கயென்ன சம்பாதிக்காமலா இருந்திங்க என கேள்வியை வீசுவார்கள். இதற்கு பதில் சொல்ல முடியாமல் தவிப்பார்கள் தொண்டர்கள்.

அதற்காக தேர்தல் என்றால் பணம் தான் பிரதானம் என்பதல்ல ஒருக்காலத்தில் அடிமட்ட மக்களோடு மக்களாக இருந்த திமுக நிர்வாகிகள், மக்கள் தரும் சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு களப்பணியாற்றினார்கள். இன்று மேட்டுக்குடிகளாக தங்களை நினைத்துக்கொண்டு கட்சி பணி செய்வது, மக்களிடம்மிருந்து அந்நியப்பட்டு நிற்பது, அடிதட்டு மக்களிடம் நெருக்கம்மில்லாதது, பணம் தந்தால் ஓட்டுப்போடுவான் என்கிற மமதை போன்றவையால் மக்கள் திமுகவை விட்டு விலகி நிற்கிறார்கள். மக்களும் நீ பணம் தந்தால் ஓட்டுப்போடறன் என திமுகவை ஒதுக்கிவைத்துள்ளார்கள். திமுக பணம் தரவில்லை. அதனால் அதிகமாக பணம் தந்த மக்களும் பணம் வாங்கியவர்களுக்கு விசுவாசமாக ஒட்டை போட்டுவிட்டு போய்விட்டார்கள்.

இந்த தேர்தலில் ஆளும்கட்சியான அதிமுகவும் பணம் தந்தது. அப்படியிருக்க தினகரன் மட்டும் எப்படி வெற்றி பெற்றார் ?.

மக்களிடம் ஆளும்கட்சி மீதான எதிர்ப்பலை இயல்பாகவே உள்ளது. அதை நியாயமாக எதிர்கட்சி தான் அறுவடை செய்துயிருக்க வேண்டும். அதற்கான பணிகளில் திமுக இறங்கவேயில்லை. அதோடு, திமுகவின் பலகீனம். அந்த தொகுதி முழுக்க முழுக்க அதிமுக விசுவாச தொண்டர்களால் நிரம்பிய தொகுதி, தேர்தல் நேரத்தில் பலகீனமாக திமுக வேலை செய்தது. பணம் தந்தது. எனக்கு ஓட்டுப்போட்டால் இன்னும் பணம் தருவேன் என தினரகன் ஏற்படுத்திய நம்பிக்கை இதுதான் அங்கு வெற்றி பெற்றது. இந்த இடத்தில் சாமானிய மக்கள் இடத்தில் இருந்து யோசிக்க வேண்டும். ஒரு ஓட்டுக்கு 10 ஆயிரம் வருகிறது. சாமானிய ஏழை மக்களுக்கு பத்தாயிரம் எவ்வளவு பெரிய தொகை என்பது 250 ரூபாய் கூலி வேலைக்கு செல்லும் மக்களுக்கு தான் தெரியும். அதனால் தான், வாங்கிய பணத்துக்கு வஞ்சகம் செய்யாமல் குத்திவிட்டார்கள்.

ஜெவை கொலை செய்த குடும்பத்தை எப்படி அதிமுக தொண்டர்கள், மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் ?.

மக்களிடம் மறதி என்பது இயல்பானது. இதுதான் அரசியல்கட்சிகளின் பெரும் பலம். ஜெ இறந்தபோது சசிகலா மீது மக்களுக்கு இருந்த கோபம், சிறைக்கு சென்றபின் அது மெல்ல குறைய தொடங்கியுள்ளது. அதிமுக அமைச்சர்களின் அந்தர்பல்டி பேச்சுகளால் முதலமைச்சர், அமைச்சர்கள் மீதான எண்ணம் தவிடுபொடியானது. சசிகலாவுக்கு இ.பி.எஸ் செய்த நம்பிக்கை துரோகம் பெரிய அளவில் மக்கள் மத்தியில் சென்று சேர்ந்துள்ளது. இதை பத்திரிக்கைகள், சமூக வளைத்தளங்கள் உணர்வதில்லை. நாம் எழுதுவதே எழுத்து, மக்கள் மடையர்கள் என நினைக்கின்றனர். அதேபோல் மத்தியில் அதிகாரத்தில் உள்ள பாஜக மோடி, தமிழக அரசையும், அதிமுகவை சின்னாபின்னமாக்குவது மக்களுக்கு அப்பட்டமாக தெரிகிறது. தமிழக அரசை பாஜக தான் இயக்குகிறது என்பது மக்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல. சசிகலா குடும்பத்தை மோடி வகையற ரெய்டு பாய்ச்சி நசுக்குவது தினகரன் அதை எதிர்த்து நிற்பதால் பாமர மக்களிடம் தினகரனை ஹீரோவாக சித்தரித்துள்ளது. ( இதையே 2011 சட்டமன்ற தேர்தலின்போது சிபிஐ வைத்து காங்கிரஸ் திமுகவை நசுக்கியபோது திமுக எதிர்த்து அடித்துயிருந்தால் அப்போது வலிமையான எதிர்கட்சியாக இருந்துயிருக்கும் அப்போது அது கோட்டைவிட்டது. 2011லும் காங்கிரஸ்சை சுமந்தது பம்மியதை மக்கள் ரசிக்கவில்லை அதனால் தான் எதிர்கட்சியாக ஆட்சியில் உட்கார்ந்தது ). மக்களின் மனநிலையை உள்வாங்கி அதற்கு தகுந்தார்போல் அரசியல் செய்கிறார் தினகரன். ( 2011ல் இருந்து மக்கள் மனநிலைக்கு தகுந்தார்போல் அரசியல் செய்ய துவங்கினார் ஜெ. அதற்கு முன்பே மருத்துவர் ராமதாஸ் தை கையில் எடுத்தார். ஜெ மறைவுக்குகு பின் தினகரன் ஜெ பார்முலாவை கையில் எடுத்துள்ளார். )

அதனால் இந்த வெற்றி திமுகவை பலகீனப்படுத்தாது. ஆட்சிக்கட்டிலில் உடனடியாக ஏறி சம்பாதிக்க வேண்டும் என நினைப்பவர்கள் தான் ஆட்சியை கலைக்க வேண்டும் என துடிக்கிறார்கள்.

முதல்வராக இருந்த அதிமுக நிறுவனர் ராமச்சந்திரன் இறந்தபின்பு சுமார் ஒன்னரை ஆண்டுகள் அந்த கட்சி ஆட்சியில் இருந்தது, அப்போது எதிர்கட்சி தலைவராக கலைஞர் இருந்தார் என்பதை ஏனோ மறந்துவிடுகிறார்கள். ஒரு கட்சியின் தலைவர், முதல்வர் இறந்தவிட்டால் எல்லாம் உடனடியாக ஆட்சியை கலைக்க முடியாது. அதோடு, அப்போது முதல்வரான ஜானகிக்கு ஆதரவாக மத்தியரசு இல்லை. அந்த ஆட்சியை கலைக்கவே 1 ஆண்டுகள் ஆனது. இப்போதைய எடப்பாடி ஆட்சிக்கு மத்தியில் உள்ள பாஜகவும் – மோடியும் தாங்கி பிடிக்கிறார்கள். கட்சிக்குள் பெரிய பிளவு கிடையாது. மத்தியில் ஆளும் பாஜக மாநிலத்தை ஆளும் அதிமுக இரண்டும் கூட்டணியில் பலமாக உள்ளார்கள். இந்த கூட்டணி உடையாமல் ஆட்சியை கலைக்க முடியாது என்பதை மறந்துவிடுகிறார்கள்.

ஜெயலலிதா போல் ஸ்டாலினால் கட்சியை நடத்த முடியவில்லை என்கிறார்கள். அரசியல் அறியா தற்குறிகளே………… அதிமுக அடிமைகளை உருவாக்கியது. அதன் வரலாறை எடுத்துப்பாருங்கள் புரியும். திமுக தொண்டர்கள் அடிமைகள் கிடையாது. சுயமரியாதை உள்ளவர்கள். தொண்டனே அப்படியிருந்தால் தலைவர்கள் எப்படி இருப்பார்கள். அதை உணர்ந்தே அனைவரையும் அரவணைத்து கட்சியை நடத்தினார் கலைஞர். அந்த பக்குவம் நிச்சயம் ஸ்டாலினிடம் இல்லை அதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

பத்திரிக்கைகள் சொல்வதும், கட்சியினர் சொல்வதும், அதிகாரிகள் சொல்வதும், குடும்பத்தினர் சொல்வதும், கருத்தாளர்கள் சொல்வதும், அறிவுஜீவிகள் சொல்வதும் சரியாகவே படும். அந்த பரந்துப்பட்ட கருத்துக்களை ஸ்டாலின் உள்வாங்க வேண்டும். ஒவ்வொருவருர் சொல்வதும் சரியென்பது போல் தோன்றும். அதை அவர் மட்டும்மே ஆய்வு செய்ய வேண்டும். தனக்கு, கட்சிக்கு, தமிழகத்துக்கு நீண்ட கால பயணத்துக்கு எது சரி வரும் என்பதை அவரே முடிவெடுக்க வேண்டும். இதைத்தான் கலைஞர் செய்தார்………

வெள்ளி, டிசம்பர் 15, 2017

சாதி வெறியனே……இந்த கட்டுரையை படித்துவிட்டு தலைப்பில் உள்ள வார்த்தையை எனக்கு பட்டமாக தருவீர்கள் என தெரிந்தே தான் நானே அந்த பட்டத்தை எனக்கு தந்தபின் எழுதுகிறேன். அதனால் இன்னும் வேறு பட்டம் தர விரும்புகிறவர்கள் மட்டும் இதை படிக்கவும். மற்றவர்கள் கடந்து போகவும்.

காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்துக்கொண்ட சங்கர் – கௌசல்யா இளம் ஜோடியை கௌசல்யா குடும்பத்தினர் சாதி கவுரவத்துக்காக சங்கரை கொடூரமாக வெட்டி படுகொலை செய்தனர், கௌசல்யாவையும் வெட்டிவிட்டே சென்றது அந்த கொலை கும்பல். கௌசல்யா குடும்பம், சாதி வெறிக்கொண்ட கூலிப்படைக்கு மரணதண்டனை வழங்கியுள்ளது நீதிமன்றம். இந்த தண்டனையை பெரும்பான்மை முகநூல் சமூகம் கொண்டாடுகிறது. மரணதண்டனையை எப்போதும் எல்லா சமயங்களிலும் எதிர்ப்பவர்கள், இந்த விவகாரத்திலும் எதிர்த்தபோது சாதிவெறி என முகநூல் சமூகம் முத்திரை குத்துவதை காண முடிகிறது.

ஒருக்கருத்தை முன்வைத்தால் அவர் மீது சாதிவெறியன் என முத்திரை குத்துவது என்பது அருவறுக்கதக்கது. இங்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்துயிருக்கும். அது சரியா தவறா என்பதை பகுத்தாய்வு செய்ய வேண்டும். ( முழுக்க முழுக்க சாதிவெறி பதிவு கருத்துக்களை இதில் கணக்கில் எடுத்துக்கொள்ளகூடாது ) ஒன்றை நாம் இங்கு சுலபமாக மறத்தைவிடுகிறோம். இங்கு ஒவ்வொருவர் பின்னாலும் ஒரு சாதி முத்திரையிருக்கிறது. சாதியை உண்மையாகவே எதிர்ப்பவராக இருந்தாலும் அவர்களை சாதி அடையாளத்துக்குள் அடைக்க ஒரு பெரும் கூட்டம்மே சுற்றியுள்ளது. அதனால் கருத்தை வாங்கிக்கொள்ள வேண்டும்.

இங்கு சாதிகளை, உயர்சாதி, இடைச்சாதி, கீழ்சாதி என பிரித்துவைத்துள்ளார்கள். கீழ்சாதியென்பது ஒடுக்கப்பட்ட சாதி. பலப்பல விவகாரங்களில் உயர்சாதி, இடைச்சாதி ஒன்றாகவேயிருக்கும். அந்த இரு தரப்பு சாதியினர்கள் காதலிப்பார்கள், திருமணம் செய்துக்கொண்டு உயர்சாதி பிம்பத்தை இடைச்சாதியும் கடைப்பிடிக்கும் பெரியளவில் பிரச்சனையில்லாமல் கூடி கும்மியடிப்பார்கள். இந்த இரண்டு தரப்பும்மே ஒன்றில் உறுதியாக இருக்கும், அது கீழ்சாதி என்கிற ஒடுக்கப்பட்ட சாதியை எட்டி உதைப்பார்கள், பொருளாதாரம் தவிர்த்து வேறு எந்த விதத்திலும் உறவு வைத்துக்கொள்ளகூடாது என அறுவாலோடு திரிவார்கள். அதற்கு காரணம் அந்த இரண்டு தரப்பினருக்கும் தனக்கு கீழ் ஒருசாதியிருக்க வேண்டும் என்கிற ஆண்ட பரம்பரை என்கிற திமிர்.

இந்த திமிர் ஏதோ உயர்சாதியாக காட்டிக்கொள்பவர்களுக்கும், இடைநிலை சாதியினருக்கு மட்டும் கிடையாது. ஒடுக்கப்பட்ட சாதியினர்களுக்குள்ளும் உள்ளது. அதாவது, ஆண்கள் தனக்கு கீழ் பெண் ஒருவள் அடிமையாக இருக்க வேண்டும் என விரும்புகிறானோ அப்படித்தான் இதுவும். தன் சாதிக்கு கீழ் ஒரு சாதி இருக்க வேண்டும் என விரும்புவது.

பாப்பான் என் சாதியே உயர்ந்த சாதி என்பான். முதலியார் எனக்கு கீழ் சாதிகள் உள்ளது என்பான். இப்படி வன்னியர், செட்டியார், நாயுடு, கள்ளர், மறவர், கவுண்டர் என ஒவ்வொரு சாதியும் தனக்கு கீழ் ஒரு சாதி இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். மேற்கண்ட சாதிகள் தலித்தை கீழ்சாதியென ஒதுக்கி ஊருக்கு வெளியே வைத்துள்ளன. அந்த சாதியினர் பாதிக்கப்படும்போது அவர்களுக்காக இந்த சமூகத்தில் பெரும் குரல்கள் எழுகின்றன, போராடுகின்றன. ஆனால், அந்த தலித் சாதியினரே தனக்கு கீழ் அருந்ததியர் என ஒரு சாதியிருக்கிறது என பெருமை பேசுகிறார்கள் என்பது இங்கு புரட்சி பேசும் எத்தனை பேருக்கு தெரியும்.

ஒடுக்கப்பட்ட சாதியாகவுள்ள தலித்கள், அருந்ததியர் சாதியினரை தன் சாதியை விட கீழ் சாதியாக நினைக்கிறார்கள். அருந்ததி மக்கள், நரிக்குறவ சாதியினரை தன் சாதிக்கு கீழாக நினைக்கிறார்கள். உயர்சாதி, இடைநிலை சாதியினர் தலித் சாதியினரை நடத்துவதை போல, இவர்கள் அருந்ததியினரை, நரிக்குறவர்களையும் நடத்துகிறார்கள். தலித் சாதியினர் தன்னைவிட உயர்ந்த சாதியில் அல்லது தன் சாதியில் தான் பெண் எடுக்க வேண்டும், மாப்பிள்ளை வேண்டும், காதலிக்க வேண்டும் என விரும்புகிறார்களே தவிர கீழ்சாதியில் இருந்து பெண் எடுப்பதோ, கொடுப்பதோ, காதலை ஏற்றுக்கொள்வதோ கிடையாது. உயர்நிலை, இடைநிலை சாதி பெண்கள், தலித் சாதியினரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டால் எப்படி கொலை செய்யப்படுகிறார்களோ, அதற்கு குறைவில்லாமல் தலித் – அருந்ததியர் – நரிக்குறவர் சாதிகளுக்குள்ளும் நடக்கிறது. முற்போக்கு பேசுபவர்கள், சாதிக்கு எதிராக பேசுபவர்கள் யாரும் இதை தீர்க்க முன்வரவில்லை, ஏன் பேசக்கூட மறுக்கின்றனர். தலித்தால் பாதிக்கப்படும் அருந்ததியர், நரிக்குறவர் பிரச்சனைகள் பெரும் கவனம் பெருவதில்லை. அதற்கு காரணம் எண்ணிக்கையில் அவர்கள் குறைவானவர்கள், கல்வியறிவற்றவர்கள், பெரும் அரசியல் பலம்மில்லாதவர்கள்.

மற்றொரு காரணம், சுயசாதி பற்று. இங்கு சாதிக்கு எதிராக பேசுபவர்களுக்கும் அந்த பற்று உண்டு. சாதி அடையாளத்துக்குள் சிக்காதவர்கள் சுயசாதிக்கு ஒரு பிரச்சனையென வரும்போது இதயத்தின் ஓரத்தில் தன்சாதி மீது ஒரு பற்று வந்துவிடுகிறது. இங்கு நேர்மையான முதலமைச்சராக ஆட்சி நடத்தியவர் என புகழப்படும் காமராஜராக்கே தன் நாடார் சாதி மீது பாசம்மிருந்தது. அவர் மட்டும்மல்ல இன்றைய ராமதாஸ், திருமாவளன், கொங்கு ஈஸ்வரன், தேவர் கருணாஸ் உட்பட எல்லா தலைவர்களுக்கும் பொருந்தும்.

உயர்சாதி, இடைநிலை சாதியினரால் பாதிக்கப்படும் மக்களும், அவர்களுக்காக குரல் கொடுக்கும் முற்போக்காளர்கள் அருந்ததி சமூகத்தினருக்காகவும், நரிக்குறவ சாதியினருக்காக குரல் கொடுப்பதில்லை. சாதி பிரச்சனையென வரும்போது நான் தலித் பக்கம்மிருந்து மட்டும் தான் பேசுவேன் என்பது சாதிக்கு எதிரானதல்ல…. அது சாதிக்கானது. சாதிக்கு எதிரானது என்றால் பாதிக்கப்படும் ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு சாதிக்காகவும் பேச வேண்டும். அதே வேகம் அருந்ததி மக்களுக்காகவும், நரிக்குறவ சாதியினருக்காகவும் இருக்க வேண்டும்.

நீ என்னை எந்த சாதியாக வேண்டுமானாலும் முத்திரை குத்திக்கொள், ஆனால் நான் எல்லோரும் சகோதரர்கள் என்கிற மனப்பாங்கில் இருப்பேன் என யாரும் முடிவு செய்து இருப்பதில்லை. தலித் சாதிக்காக குரல் கொடுக்கும் முற்போக்காளர்கள், சாதியற்றவர்களாக காட்டிக்கொள்பவர்கள் அனைவரும் நாம் அனைவரும் சகோதரர்கள் என முடிவு பிரச்சனையை அனுகினால் சாதி பிரச்சனையில் வருங்காலத்தில் நிச்சயம் மாற்றம் வரும். இல்லையேல் காலம் முழுக்க சாதிக்கு எதிராக போராடிக்கொண்டு இருக்க வேண்டியது தான்.


சனி, செப்டம்பர் 30, 2017

புதிய கவர்னர் உள்ளும் – புறமும்………..

ஓராண்டுக்கு பின் தமிழகத்துக்கு புதிய கவர்னர் நியமிக்கப்பட்டுள்ளார். பெரும் சர்ச்சைகளுக்குள் சிக்கிய தமிழகத்தின் பொறுப்பு கவர்னரான வித்யாசாகர்ராவ் விடுவிக்கப்பட்டு புதிய கவர்னராக பன்வாரி லால் புரோகித் நியமிக்கப்பட்டுள்ளார். 

1940 ஏப்ரல் மாதம் 16ந்தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜின்ஜின் என்கிற கிராமத்தில் பகவான்தாஸ்க்கு மகனாக பிறந்தார் பன்வாரிலால் புரோகித். புரோகித் என்பது சாதிப்பெயர். வட இந்திய பார்ப்பனர் சாதியை சேர்ந்தவர். இவர் பிறந்தது கிராமமாகயிருந்தாலும் படித்தது, வளர்ந்ததுயெல்லாம் மகாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரில்.

நாக்பூரில் உள்ள ஜீ.எஸ் கல்லூரில் பி.காம் படித்தவர் ஆரம்பத்தில் பார்வார்டு பிளாக் கட்சியில் இருந்தார். அதன்பின்பே காங்கிரஸ் கட்சிக்கு வந்தார். முதல் முறையாக அதாவது 1978ல் கிழக்கு நாக்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக தேர்வானார். 1980ல் தெற்கு நாக்பூர் தொகுதியில் போட்டியிட்டவர் இந்த முறை ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 1984ல் வந்த பாராளமன்ற தேர்தலில் நாக்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.பியாக வெற்றி பெற்றார். 1989லும் அதே தொகுதியில் இருந்து எம்.பியாக தேர்வானார். அதன்பின் இவருக்கும் முன்னால் பிரதமர் ராஜிவ்காந்திக்கும் முட்டள் மோதல் வந்தது. இதனால் கட்சியில் இருந்து ஒதுங்கி வைக்கப்பட்டு இருந்தார். 

இந்த நேரத்தில் தான் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ஆர்.எஸ்.எஸ் தீவிரமாக இருந்தபோது, அதற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்ததோடு பண உதவியும் பெருமளவில் செய்தார். இதனால் காங்கிரஸ் கட்சியில் இவருக்கு எதிர்ப்புகள் அதிகரித்தால் கட்சியில் இருந்து விலகினார். பாஜகவில் இணைந்து 1996ல் பாஜக சார்பில் எம்.பி தேர்தலில் நின்று மூன்றாவது முறையாக எம்.பியாக தேர்வானார். பாஜகவின் முன்னால் பிரதமர் வாஜ்பாயின் நம்பிக்கைக்குரிய மத்திய அமைச்சராகவும், பாஜகவின் நிதி பாதுகாவலராகவும் இருந்த பிரமோத்மகாஜனுடன் மோதல் வந்து பாஜகவில் இருந்து விலகி 2003ல் விதர்பா ராஜ்ய கட்சி என்கிற கட்சியை சொந்தமாக தொடங்கி நடத்த துவங்கினார் பன்சாரிலால். 

விதர்பா பெயரில் கட்சி தொடங்கினாலும் அந்த விதர்பா பகுதியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துக்கொண்டு மடிந்துப்போனதுக்கு பெரியதாக எந்த உதவியும் செய்யாதவர் இவர். 2009ல் தனது கட்சியை மீண்டும் பாஜகவிலேயே இணைந்துவிட்டு 2009 எம்.பி தேர்தலில் சீட் வாங்கி நின்று தோல்வியை சந்திக்க அமைதியாகிவிட்டார். 2014ல் அதே நாக்பூர் தொகுதி வேண்டும்மென கேட்டார் தரப்படவில்லை.  பாஜக மீண்டும் பதவிக்கு வர ஆர்.எஸ்.எஸ் ஆதரவுடன் 2016 ஆகஸ்ட் 17ந்தேதி அசாம் கவர்னராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். கடந்த ஆண்டு மேகாலயா கவர்னராக இருந்த சண்முகநாதன் பாலியல் சர்ச்சையில் சிக்கி பதவியை விட்டு விலகியதால் மேகாலயா கவர்னர் பதவியையும் கூடுதலாக பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் தான் தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.  

1959 ஜீலை 14ந்தேதி புஷ்பாதேவி என்கிறவரை திருமணம் செய்துக்கொண்ட பன்சாரிலால்க்கு இரண்டு மகள்கள், ஒரு மகள். பெரும் தொழிலதிபர். கண்ணாடி தொழிற்சாலை, சிமெண்ட் தொழிற்சாலை, ஆட்டோமொபைல்ஸ், கல்லூரிகள் என பல தொழில்கள் நடக்கின்றன. இந்துத்துவாதியும், காங்கிரஸ்காரராக இருந்து நாட்டு விடுதலைக்காக போராடிய கோபால கிருஷ்ணா கோகலே தொடங்கிய தி ஹிட்டவாடா பத்திரிக்கை இவர் கட்டுப்பாட்டில் இருந்தது, இப்போது இவரது மகன் ராகேஷ் நடத்துகிறார். 

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்சின், இந்திய பார்வார்டு பிளாக் கட்சியில் தனது அரசியல் வாழ்வை தொடங்கி, காங்கிரஸ் கட்சிக்கு வந்து கலந்தாலும், அவரது ரத்தத்தில் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் தான் ஓடிக்கொண்டு இருந்தது. இதை எப்போதும் அவர் மறைத்துக்கொண்டதில்லை. அதனால் தான் காங்கிரஸ்சில் இருந்து விலகி பாஜகவில் அடைக்கலமானபோதும், அடைக்கலமாகி பின்பு தனி கட்சி நடத்தியபின்பு அதுவும் போணியாகாமல் மீண்டும் பாஜக கதவை தட்டியபோது, மீண்டும் இணைத்துக்கொண்டு கவர்னர் பதவி வரை தந்துள்ளது பாஜக.

அரசியல் விளையாட்டில் தேர்ந்தapயிவர். பின்னணி பேரம் நடத்துவதில் கைதேர்ந்த பிஸ்னஸ்மேன். 1989ல் ஆர்.எஸ்.எஸ் கரசேவை தொடங்கும் முன்பு பல கட்சிகளிடம் ஆதரவு கேட்டது. அப்போது முன்னால் பிரதமராக இருந்த இராஜிவ்காந்தியை ஆர்.எஸ்.எஸ் தலைவர் பாலாசாகோப் ரகசியமாக சந்தித்து ஆதரவு கேட்டார். இரு தலைவர்களை ரகசியமாக சந்திக்க வைத்ததை பின்னாளில் பெருமையாக அரசியல் அரங்கில் வெளிப்படுத்தியவர், ஆர்.எஸ்.எஸ்க்கு மறைமுகமாக ராஜிவ்காந்தி ஆதரவு தந்தார் என்றார். இன்று தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு குழப்பத்தின் உச்சத்தில் உள்ளது. மத்தியில் ஆளும் பாஜக தன் விரும்படியெல்லாம் அதை ஆட்டிவைத்துக்கொண்டுள்ள சூழ்நிலையில் தமிழக கவர்னராக வந்துள்ளார் பன்வாரிலால் புரோகித்.

புரோகித் என்கிற புரோகிதர் வகுப்பை சேர்ந்த கவர்னர், தமிழகரசு நடக்க அதிமுக அரசுக்கு சுபகாரியம் செய்ய போகிறாறா அல்லது காரியம் செய்து வைத்து சுத்தமாக முடிக்கபோகிறாறா என்பது இனிதான் தெரியவரும்.

திங்கள், செப்டம்பர் 04, 2017

ராஜாவின் கிறுக்கல்கள்........சாதி எரிந்துக்கொண்டு இருக்கும்….

நீங்கள் எங்களை கல்வியில் ஏறி மிதிக்கிறிர்கள், ஆனால், நாங்கள் அதையும் மீறி ஏறிக்கொண்டே இருக்கிறோம்...
 
நீங்கள் எங்களை வேலைவாய்ப்பில்  புறக்கணிக்கிறீர்கள். ஆனால், நாங்கள் பறந்துக்கொண்டு இருக்கிறோம்...
 
 நீங்கள் எங்களின் காதலை கசக்கி எரிந்துக்கொண்டே இருக்கிறீர்கள்... ஆனால், நாங்கள் பூத்துக்கொண்டே இருக்கிறோம்...
 
 ஒருநாள் நாங்கள் வாழ்ந்துக்கொண்டு இருப்போம்... ஆனால், உங்கள் சாதி எரிந்துக்கொண்டு இருக்கும்...

சண்டை………….

பகல் சண்டையில் உன்னை வெல்ல விடுவதே... இரவுச்சண்டையில் நான் வெல்லத்தான் என்பதை அறிந்தவள் நீதானேடீ...

கோவைப்பழம்……..

நித்தம் நித்தம் கோபப்படும் மனைவியை அன்பாய் பார்த்தால் கோபமும் கோவைப்பழமாய் தித்திக்கும்...

உணர்வுகள்………..

உன் பெயரோடு என் பெயர் மட்டும் இணையவில்லை.... என் உணர்வுகளும் இணைந்தே வந்ததடீ....

மழை கவிதைகள்……….
 1.

மரகத வீணையின் ஒலியை மயக்கும் மழை துளியே...
என்னவளின் மனதை மயக்க வழிச்சொல்லேன்...

2.
 
அவள் கண்கள் காதல் கணை வீசீயது...
கன்னங்கள் கன்னம் வைக்க துடித்தன...
இதழ்கள் இதழ் பேச இம்சித்தன...
விரல்கள் விளையாட துடித்தன... அவனோ வீதியில் விளையாடிக்கொண்டு இருந்தான் மழையோடு.....

3.
 
முரண்பட்ட நெஞ்சை, முட்ட வைக்கும் மந்திரம்... - மழை.காதல் கலவி……….
 1.

முன்னழகில் முரணாகி...
பின்னழகில் பித்தாகி...
கலவியில் முத்தெடுக்க முயல்வதே காதல்...

2.
 
கலவியில், உன் இதழ்கள் பேசாமல்  என் இதழ்களை, பேச வைக்கும் தந்திரத்தை அறிந்தவள்  நீ மட்டுமே...

 3.

உன் தனங்கள் என்னை தள்ளாட வைக்கிறது...
உன் தவில்களால் என் விரல்கள் தவிக்கிறது... நீயோ என்னை தவிர்க்கிறாய்... 
 -' ஆடி' யே எங்களை ஆடவிடு.