சனி, அக்டோபர் 24, 2015

கணிப்பொறி, கைபேசியில் நடக்கும் கழகபணி. களத்தில் ?????????????????தமிழகத்தில் அதிமுக, திமுக போன்ற பெரிய கட்சிகள் முதல் நேற்று முளைத்த லட்டர் பேட் கட்சி வரை இணையத்தில், சமூக வளைத்தளங்களில் இயங்குகிறார்கள். தங்களது கட்சியின் ஒவ்வொரு நடவடிக்கை மற்றும் கட்சி தலைவர் முதல் ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் வரை என்ன செய்கிறோம் செல்பி படம்மெடுத்து வாட்ஸ்அப்பில் பரப்புகிறார்கள். தமிழகத்தில் உள்ள கட்சிகளில் இணையத்தில் இப்போது தீவிரமாக இருப்பது திமுகவின் இணைய தள அணி என்றால் மிகையில்லை. ஒருகாலத்தில் சோம்பிபோயிருந்த இந்த அணி இன்று இணையத்தில் வேகமாக இயங்குகிறது. திமுகவை தாக்குபவர்களை எதிர்தாக்குதல் நடத்திவருகிறது. 

சில ஆண்டுகளுக்கு முன்பு 2ஜி ஊழல்யில்லை என விளக்கமாக பதிவிட்டார்கள், பிற கட்சியினர் திமுகவின் குடும்ப அரசியல் பற்றி பேச முடியாத படி செய்தார்கள் எந்த பிரதிபலனும் பாராமல் உழைத்தார்கள். ( அப்படி உழைத்த பலர் இன்று அமைதியாக வேறு வேலைகளை செய்துக்கொண்டு உள்ளார்கள். காரணம், இணைய தள திமுகவை தங்களது ஆதிக்கத்தில் கொண்டு வர சிலர் செய்த வேலைகளால் அவர்கள் ஒதுங்கிக்கொண்டார்கள். )

ஸ்டாலின், கலைஞர் போன்ற கட்சியின் தலைவர்கள் பேஸ்புக், டுவிட்டர் தளத்துக்குள் வந்தபின் கட்சியின் பெரும்பாலான மேல்மட்ட, கீழ்மட்ட, மாவட்ட ஒன்றிய, நகர நிர்வாகிகள் முகநூல் மற்றும் டுவிட்டர் தளத்துக்கு வந்து கணக்கு தொடங்கினார்கள். கட்சி தலைமையை கவர வேண்டும் என்பதற்காக போராட்டங்கள், கட்சி நிர்வாகிகள் கலந்துக்கொள்ளும் நிகழ்சிகளை புகைப்படங்களாக எடுத்து முகநூல், டுவிட்டர், வாட்ஸ்அப்பில் போட்டு நாங்கள் வேகமாக கட்சி பணியாற்றுகிறோம் என காட்ட முயல்கிறார்கள். உண்மையில் இவர்கள் கட்சி பணியை கணிப்பொறி முன்பும், கைபேசி வைத்துக்கொண்டு செய்கிறார்களே தவிர களத்தில் செய்கிறார்களா என கேட்டால் இல்லையென உறுதியாக சொல்லலாம்.


முகநூல், டுவிட்டர், வாட்ஸ்அப்பில் செயல்படும் இணைய தள புலிகளுக்கு கிடைக்கும் மரியாதை களத்தில் கில்லியாக செயல்படும் நிர்வாகிகளுக்கோ, தொண்டர்களுக்கோ கிடைக்காததால் நொந்துப்போய்வுள்ளார்கள். முகநூலில் செயல்படுபவர்களுக்கு கிடைக்கும் மரியாதையில் பாதிக்கூட களத்தில் வேலை செய்யும் நிர்வாகிக்கோ, தொண்டனுக்கோ கிடைப்பதில்லை, அதை மாவட்ட நிர்வாகிகள் தருவதில்லை என பலயிடங்களில் குறைப்பட்டுக்கொள்கிறார்கள். முகநூலில் செயல்படுவதன் மூலம் கட்சி மீதான கறைகளை துடைக்க முடியும்மே தவிர ஓட்டுக்களை வாங்க முடியாது. நான் சொல்வதை நம்ப முடியவில்லையென்றால் மதிமுகவினரிடம் கேட்டுப்பாருங்கள்.

இணையத்தில் வை.கோவுக்கு அதிகமான ஆதரவாளர்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள். அவர்கள் செயல்பாட்டை காணும்போது அவர் தான் அடுத்த முதல்வராக வருவார் என நம்பும் படியிருக்கும். ஆனால் கள நிலவரம் என்ன என்பது எல்லோருக்கும் தெரியும். போற்றி பாட இணையத்தில் ஏகப்பட்ட பேர் வை.கோவுக்கு உண்டு ஆனால் ஓட்டுப்போட அவர்களில் ஒருவரும் வரப்போவதில்லை. அந்த உண்மையை எல்லா கட்சியினரும் உணர்ந்துக்கொள்ள வேண்டும். 

இளைய தலைமுறையை ஈர்க்க இணையத்தில் செயல்படுவது ஒரு புறம்மிருந்தாலும் களத்தில் தீவிரமாக செயல்பட வேண்டும். நான் அறிந்த வரையில் வடமாவட்டங்களில் அந்த பணியை கச்சிதமாக செய்வது பாமக தான். இணையத்தில் ஆண்டசாதி என சொல்லிக்கொண்டு திமிர் பேசினாலும் களத்தில் கிராமந்தோறும் பிரச்சாரம், திண்ணை பிரச்சாரம், சாதிக்காரர்களை ஒன்று திரட்டல் பணிகளை கச்சிதமாக செய்கிறார்கள். இந்த சாதி கட்சிக்கு உள்ள திட்டமிடல் தேர்தல் பணியில் கரைகண்ட திமுகவுக்குயில்லை.

மோடி வளைத்தளத்தை பயன்படுத்தி தான் ஆட்சி பொறுப்புக்கு வந்தார் அதனால் அந்த வழியை நாங்களும் பயன்படுத்துகிறோம் என்பவர்கள் கவனத்துக்கு. மோடி இணைய தளங்களை மட்டும் பயன்படுத்திக்கொள்ளவில்லை. பத்திரிக்கை, தொலைக்காட்சி என ஊடகங்களை செமையாக கவனித்து பயன்படுத்திக்கொண்டார். மக்கள் மத்தியில் ஒரு பெரும் கதாநாயாகனாக தன்னை உருவாக்க வைத்தார். அந்த பிம்பம் தான் அவருக்கு பிரதமர் நாற்காலியை மக்களால் தரவைத்தது. 


ஒரு கட்சி இன்றைய காலக்கட்டத்தில் இணையத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல் அந்த கட்சி தலைமை ஊடகங்களிலும் தங்கள் கவனத்தை செலுத்த வேண்டும். அதை கட்சி தலைமை செய்கிறது என்றால் கட்சி நிர்வாகிகள் கார்களை விட்டு இறங்கி தொண்டர்களிடம், மக்களிடம் நெருங்கி செல்ல வேண்டும். பத்தாண்டுகளுக்கு முன்பு ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு திமுக கரை வேட்டி கட்டிய தொண்டர் தெருவில் லைட் எரியவில்லையா பஞ்சாயத்து அலுவலகத்துக்கு போய் கேள்வி கேட்பார், ரேஷன் கார்டுயில்லையா வாங்கி தருவார், வாக்காளர் அடையாள அட்டையில்லையா வாங்கி தருவார், சர்டிப்கெட் வேண்டுமா வாங்கி தருவார். அந்த நபர் சொல்வதை அவரால் பலன் பெற்றவர்கள் செய்வார்கள். இப்படித்தான் ஓட்டுக்களை தக்க வைத்துக்கொண்டு இருந்தனர் திமுகவினர். கட்சியினரை கண்டால் இறங்கி நலம் விசாரித்த நிர்வாகிகள் இருந்தார்கள். இன்று அப்படியா இருக்கிறார்கள் திமுகவினர்?.

திமுகவினரின் அந்தயிடத்தை அதிமுகவினர் பிடித்துக்கொண்டனர். இன்று ஒவ்வொரு கிராமத்திலும் இரண்டு, மூன்று அதிமுக தொண்டர் அந்த பணியை செய்கிறார் அதிலிருந்து தனக்கான கூலியை சம்பாதித்துக்கொள்கிறார். திமுக தொண்டர்கள் ஏன் அதை கைவிட்டார்கள் என்பதை அந்தந்த பகுதி நிர்வாகிகள் ஆராய வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளாக மாவட்ட ஒன்றிய, நகர நிர்வாகிகள் தொண்டர்களை மதிப்பதில்லை. அதிலும் பணவசதியில்லாத கழகத்தினரை சுத்தமாக மதிப்பதில்லை. இன்றைய நிர்வாகிகளுக்கு யார் தேவைப்படுகிறார்கள் என்றால் செல்போன், முகநூலில் கணக்கு, வாட்ஸ்அப்பில் குழு உருவாக்கி வைத்துள்ள தொண்டன் தேவை என நினைக்கிறார்கள். முகநூல் கணக்கு எந்த காலத்திலும் வந்து ஓட்டு போடப்போவதில்லை, முகநூல், வாட்ஸ் அப் பற்றி தெரியாத லட்ச கணக்கான ஏன் கோடிக்கணக்கான வாக்காளர்கள் தமிழகத்தில் உள்ளார்கள் என்பதை திமுகவினர் நினைவில் கொள்ள வேண்டும். அந்த வாக்காளர்களை அழைத்து வந்து ஓட்டுப்போட வைக்க போகிறவன் கிராம தெருக்களிலும், நகர தெருக்களிலும் உள்ளான். அவனை மதிக்காமல் முகநூல், வாட்ஸ் அப்பை மட்டும் மதிக்ககூடாது. 

அந்த கோடிக்கணக்கான வாக்காளர்களையும் மனதில் வைத்து களத்தில் வேலை செய்ய வேண்டும், வாக்குசாவடியில் நின்றுக்கொண்டு படம் எடுத்து போடுவதை விட, வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்ய வேண்டும். ஆளும்கட்சி செய்துள்ள தவறுகளை, ஊழல்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும், கடந்த காலத்தில் திமுக நிர்வாகிகள் செய்த தவறுகளை கலைய வேண்டும், மக்களிடம் நம்பிக்கை வரும் அளவுக்கு நடந்துக்கொள்ள வேண்டும். இதை செய்யாமல் மாற்றம் வராது. களப்பணி மட்டும்மே வெற்றியை தரும் என்பதை திமுக நிர்வாகிகள் உணர வேண்டும். உணர்ந்தால் நல்லது.

புதன், அக்டோபர் 14, 2015

நெல்சன் மண்டேலாவை அவமானப்படுத்திய மோடி. சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு.

தென்னாப்பிரிக்காவின் தந்தை நெல்சன் மண்டேலா சிறை வாழ்க்கையோடு ஊழல் புகார் கூறப்பட்டு சிறையில் இருந்த பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங்பாதலை ஒப்பிட்டு அரசியல் காரணங்களுக்காக இருவரும் சிறையில் இருந்தார்கள் என தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட சர்வதேச நீதிமன்றதில் வழக்கு தாக்கல் செய்துள்ளது தென் ஆப்பிரிக்க அரசு.

டெல்லியில் கடந்த 11ந்தேதி ஜெயபிரகாஷ் நாராயணனின் 113வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்வில் பிரதமர் மோடி, பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங்பாதல் போன்றோர் கலந்துக்கொண்டனர். ( பி.ஜே.பியுடன் பஞ்சாப் அகாலி தளம் கூட்டணியாக உள்ளது. இரு கட்சியின் சார்பில் தான் நாடாளமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் எதிர்கொள்ளப்பட்டன. ) அங்கு பேசிய நமது பிரதமர் மோடி அரசியல் காரணங்களுக்கான தென்னப்பிரிக்கா அதிபர் நெல்சன் மண்டேலாவும், பஞ்சாப் அரசியல் தலைவர் பிரகாஷ் சிங் பதலும் சிறையில் இருந்தவர்கள், நெருக்கடி நிலையின் போது சிறையில் பாதல் இருந்தார் என பேசியவர் அதை தனது டுவிட்டர் தளத்திலும் பதிவு செய்திருந்தார்.

உடனே பஞ்சாப் காங்கிரஸ்சின் பாராளமன்ற எதிர்கட்சி துணை தலைவருமான கேப்டன் அமரிந்தர்சிங், இது நெல்சன் மண்டேலாவை அவமதிக்கும் செயல் என கடுமையாக தனது கண்டனத்தை பதிவு செய்தார். பலரும் பதிவு செய்துள்ளார்கள்.

பிற நாட்டு அதிபர்கள், பிரதமர்களின் பேச்சுகளை மற்ற நாடுகள் உன்னிப்பாக கவனிக்கும். இந்திய பிரதமர் மோடியின் பேச்சை தென்னாப்பிரிக்கா தூதரகமும் கவனித்து உடனடியாக இதுப்பற்றி தன் நாட்டுக்கு தெரியப்படுத்தியது. இதில் அதிருப்தியான தென்னாப்பிரிக்கா தன் தேச தந்தையை அவமானப்படுத்திய மோடி மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் வெள்ளை நிற தோல் தொண்டவர்கள் கறுப்பின மக்களை அடிமையை விட மிக மோசமாக நடத்தினார்கள். ஏறக்குறைய இந்தியாவில் ஆரியர்கள் திராவிடர்களை நடத்தியதை போல. இப்போதும் மேல் சாதியென சொல்லிக்கொண்டு கீழ்சாதியினர் என வரைமுறைப்படுத்தி அடிமைப்படுத்தியதை போல. வெள்ளை நிற தோல் கொண்டவர்கள் செயல்பட்டார்கள். தன் கறுப்பின மக்களின் விடுதலைக்காக, உரிமைக்காக நீண்ட போராட்டம் நடத்திய மாமனிதர் நெல்சன் மண்டேலா. இந்த அறவழி போராட்டத்துக்காக தனது வாழ்நாளில் தொடர்ச்சியாக 27 ஆண்டுகள் சிறையில் கிடந்தவர். ஆர்.எஸ்.எஸ் பிதாமகர் போல ஆங்கிலேய அரசாங்கத்திடம் மன்னிப்பு கடிதம் எழுதி தந்து காலில் விழுந்தவரல்ல, காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காவி கும்பல்கள் மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதி சிறையில் இருந்து வெளிவந்தவரல்ல மண்டேலா. இரும்பு மனிதராக மக்களின் போராட்டத்துக்காக உள்ளே இருந்தபடியே 27 ஆண்டுகள் போராடினார். அந்த மக்களுக்கு நிறவெறியில் இருந்து விடுதலை வாங்கி தந்தார், அரசியல் உரிமைகள் பெற்று தந்தார். அதனால் தான் அவரை தென்னாப்பிரிக்காவின் தந்தை என அந்த மக்கள் அன்புடன் அழைக்கிறார்கள்.


பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் யார் என்பது இந்தியாவே அறியும். அவரது ஆட்சி எப்படி என்பதை அந்த மாநில எதிர்கட்சிகள் விமர்சனமாக அடிக்கடி வைக்கின்றன. விவசாயிகள் தற்கொலை, இளைஞர்கள் போதைபொருட்களுக்கு அடிமையாகி உள்ளது போன்றவற்றோடு, சர்வதேச அரங்கில் சிக்கும் போதை பொருள் கடத்தல்காரர்கள் 30 சதவிதம் பேர் போதை பொருளை பஞ்சாப்பில் தான் வாங்கினோம் என ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு மாநில முதல்வருடன் தென்னாப்பிரிக்காவின் தேச தந்தையுடன் ஒப்பீட்டு பேச எப்படி மோடியால் முடிந்தது என தெரியவில்லை. மோடி வரலாறு தெரியாமல் இருக்கறார் என்பது அனைவரும் அறிந்தது தான். அதற்காக ஒரு நாட்டின், கோடிக்கணக்கான மக்களின் நாயகனை அவமானப்படுத்துவது தேவைதானா?.

தேர்தலின்போது எப்படி வேண்டுமானாலும் மோடி பேசியிருக்கலாம். அது நம்மோடு போய்விட்டது. இப்போது இந்தியாவின் பிரதமர், நீங்கள் பேசும் பேச்சு 130 கோடி மக்களின் குரல். அப்படிப்பட்டவர் எவ்வளவு தெளிவாக, உண்மையாக பேச வேண்டும். அனைத்தும் அறிந்த அதிமேதவி என்கிற கணக்கில் பிரதமரானபின்பும் உளற உலக அரங்கில் வெட்கி தலைகுனிய வேண்டிய விதமாக இந்தியாவின் மானத்தை சர்வதேச கூண்டில் ஏற்றியுள்ளது தென்னாப்பிரிக்கா அரசாங்கம்.


மோடி என்கிற நபர் மீது மட்டுமே வழக்கு தாக்கல் செய்துள்ளோம். இந்தியா மீதல்ல என்கிறது தென்னாப்பிரிக்காவின் அதிகாரபூர்வமற்ற ஒரு செய்தி. மோடி இப்போது தனி மனிதரல்ல இந்தியாவின் பிரதமர். பிரைம் மினிஸ்டர் ஆப் இந்தியா என்கிற பெயரில் தான் பதிவு செய்கிறார். ஆக அவர்கள் மோடி என்கிற தனி நபர் எனச்சொன்னலும் அது இந்தியாவை சர்வதேச அரங்கில் தலை குனிவை ஏற்படுத்தியுள்ளது என்பது மட்டும் உண்மை.

வியாழன், அக்டோபர் 08, 2015

நடிகர் சங்க தேர்தல். காரசாரமாக மாறுது – கட்டிப்புடி வைத்தியம் வராதா ?.


தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தில் தேர்தலே நடக்ககூடாது என்கிறார்கள் இப்போது பதவியில் உள்ள சரத்-ராதாரவி தரப்பினர். சிவாஜி காலத்தில் உருவாக்கப்பட்டது தென்னிந்திய நடிகர் சங்கம். அவர் காலத்தில் இடம் வாங்கி கட்டிடமும் கட்டப்பட்டது. பல தலைவர்களை கண்ட சங்கம் கோடிகளில் சம்பளம் வாங்கும் உறுப்பினர்கள் இருந்தும் கடன்கார சங்கமாக இருந்தது. விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது நட்சத்திர கலை இரவு நடத்தி நடிகர் சங்கத்துக்கு என இருந்த கடன்களை அடைத்தவர் லாபகரமான சங்கமாக விட்டுவிட்டு சென்றார். அடுத்து தலைவர் பதவிக்கு வந்தவர் நடிகர் சரத்குமார். அதன் செயலாளராக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பவர் நடிகர் ராதாரவி. இந்த டீம் பொறுப்புக்கு வந்த பின் நடிகர் சங்க இடத்தை சத்யம் சினிமாஸ் நிறுவனத்துக்கு 99 வருட குத்தகைக்கு பெரும் தொகையை வாங்கிக்கொண்டு விட்டவர்கள், அதில் ஒரு பகுதியை மட்டும் கணக்கு காட்டினார்கள். அப்போது நிர்வாக குழுவில் இருந்த நடிகர் குமரிமுத்து, கேள்வி எழுப்ப அவரை ஒருமையில் திட்டி அவரது பதவியை பறித்துக்கொண்டு அனுப்பினார் செயலாளர் ராதாரவி. அடுத்து நாடக நடிகரான பூச்சிமுருகன் என்பவர் பிரச்சனையை கிளப்பி உயர்நீதிமன்றம் சென்றபின் விவகாரம் பெரியதாக வெடித்தது.

இதே பிரச்சனையை நடிகர் நாசர் எழுப்பியபோது, அவரையும் சரத்-ராதாரவி டீம் அசிங்கப்படுத்தியது. நாசர் இந்த பிரச்சனையை பெரும் நடிகர்களான ரஜினி, கமலிடம் கொண்டு சென்றார். பிரச்சனையை கேட்டுக்கொண்டவர்கள் இதில் அமைதி காத்தனர். இந்த விவகாரம் பற்றி அடிக்கடி சின்ன சின்னதாக கேள்வி கேட்டு வந்தார் இளம் நடிகர் விஷால். ஒருக்கட்டத்தில் நாசர் – விஷால் இணைந்த பின் பெரும் பிரச்சனையாக உருவானது. நடிகர், நடிகைகளை சந்தித்து விவகாரத்தை விளக்கினர். அதோடு, குமரிமுத்து, பூச்சிமுருகன் விவகாரம் பற்றி நடிகர் சங்க கூட்டத்தில் கலந்துக்கொண்டவர்களுக்கு தெரியும் என்பதாலும், சரத்- ராதாரவி கூட்டணி செய்வது அயோக்கியத்தனம் என்பதை அறிந்துக்கொண்டு விஷால் –நாசர் உருவாக்கிய பஞ்ச பாண்டவர் அணி பக்கம் சாய ஆரம்பித்தார்கள். இதுவரை எத்தனை உறுப்பினர்கள் நடிகர் சங்கத்தில் என தெரியாத நிலையில், அதை பஞ்சபாண்டவர் அணி நீதிமன்ற அறிவிறுத்தல் பெயரில் தேர்தலை நடத்தும் ஒய்வு பெற்ற நீதிபதி மூலம் அறிவிக்க வைத்தது. இருதரப்பும் தேர்தலில் குதித்து வேட்புமனுதாக்கல் செய்துவிட்டார்கள்.

இருதரப்பும் மீடியாவை சந்தித்து வந்த நிலையில், திடீரென நடிகை ராதிகாசரத்குமார் தன்னுடன் சிலரை உட்காரவைத்துக்கொண்டு மீடியாவை சந்தித்தார். நடிகர் சங்கத்தை உடைக்க பார்க்கிறார்கள். இது ஒரு குடும்பம். இந்த குடும்ப விவகாரம் எதுக்கு பொதுமக்களுக்கு தெரியவேண்டும், விஷால்ரெட்டிக்கு என்ன தெரியும் என சோகத்தை புழிந்து ஒரு நடிப்பு நடித்தார். இதே கூட்டணியில் உள்ள நடிகர் சிம்பு, விஷால்ன்னா பெரிய இவனா, அவனுக்கெல்லாம் நாங்க எதுக்கு பதில் சொல்லனும் என எகிறினார்.

தயாரிப்பாளர் சங்கம், ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பவர்கள் இங்கு கூத்தாடி இரண்டு பட்டதால் ஊர் பார்க்கிறது. அதனால் சமாதானம் செய்ய முயற்சிக்கிறோம் என கலைப்புலிதாணு அறிக்கை வெளியிட்டார்.

பஞ்சபாண்டவர் அணி, சினிமா துறையில் உள்ள தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர் சங்கம் உட்பட 23 சங்கத்தில் முறையாக 3 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுகிறது. அப்படியிருக்க 10 ஆண்டுகளாக தேர்தலே நடைபெறாத நடிகர் சங்கத்தில் ஏன் தேர்தல் நடைபெற ஒத்தொழைப்பு அளிக்கமறுக்கிறீர்கள். வெற்றி, தோல்வி எது வந்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்ள தயார். நாங்கள் குடும்பத்தை உடைக்கவில்லை என அறிவித்துவிட்டு பிரச்சாரத்துக்கு போய்விட்டார்கள்.

நீ ஏன் இந்த பிரச்சனையை மக்களிடம் கொண்டு செல்கிறீர்கள் என ராதிகா மீடியாக்கள் முன் போட்டி குழுவிடம் கேள்வி எழுப்பி நியாயம் கேட்டார். நமக்கு இங்கு சில கேள்விகள் எழுகின்றன. தென்னிந்திய நடிகர் சங்கம் நடிகர்களுக்கானது மாற்று கருத்துயில்லை. அவர்களின் நலனுக்காக உருவானது சரி. எத்தனை நடிகர்-நடிகைகளுக்கு நல்லது செய்துள்ளது சங்கம். லட்சங்களில், கோடிகளில் சம்பாதிக்கும் அந்த ஆயிரம் பேரை விட்டு விடுங்கள் மீதியுள்ள இரண்டாயிரம் சொச்சம் பேருக்கு என்ன செய்துள்ளது நடிகர் சங்கம் ?.


சக நடிகர்கள் சங்கத்தில் நடந்துள்ள, நடந்து வரும் ஊழல் பற்றி கேள்வி கேட்கிறார்கள் எதுவும் நடைபெறவில்லையென்றால் விளக்கமாக எல்லா உறுப்பினர்களுக்கும் அதுப்பற்றி வெள்ளை அறிக்கை தரலாம்மே ?. அவர்கள் வரமறுக்கிறார்கள் என நீங்கள் சொல்கிறீர்கள். அவர்கள் தான் வரவில்லையே நீங்கள் குற்றமற்றவர்கள் என நிரூபிக்க இப்போது சங்கத்தை உடைக்க பார்க்கிறார்கள் என கதறுவதை விட்டுவிட்டு வெள்ளை அறிக்கையாக மீடியாக்களிடம் அதை தரலாம்மே ?.

விஷால்ரெட்டி என சாதி பெயரை உள் புகுத்துகிறீர்கள். நீங்கள் சொன்னதுக்கு பின் தான் அவர் ரெட்டி என தெரிகிறது. நல்லது. நீங்கள் என்ன சாதி என வெளிப்படையாக அறிவித்தால் நன்றாக இருக்கும். சாதி, மதம் கடந்தது தான் நடிகர் சங்கம். இங்கு சாதியை இழுப்பது ஏன் ?. 1980 நடிகர் – நடிகைகள் அமைப்பை உருவாக்கி ஆண்டுதோறும் பார்ட்டி வைத்து கொண்டாடுகிறிர்கள். அதில் எத்தனை பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என பட்டியல் தர தயாரா ?.

தமிழர்கள் தான் சங்க பதவிக்கு வரவேண்டும், தேர்தலில் போட்டிபோட வேண்டும் என விரும்புகிறிர்களா நல்லது சங்க பெயரை நீங்கள் ஏன் தமிழக நடிகர்கள் சங்கம் என பெயர் மாற்றம் செய்யக்கூடாது ?.

நடிகர் சங்க பிரச்சனை பற்றி எதுக்கு பொதுமக்களிடம் சொல்லனும் என ராதிகா மீடியா முன் கேட்டார். நாங்கள் காசு கொடுத்து டிக்கட் வாங்கி படம் பார்ப்பதால் தான் நிங்கள் படம் எடுக்கிறீர்கள், அந்த படத்தின் விற்பனையால் தான் உங்களுக்கு சம்பளம் கிடைக்கிறது. மக்களின் வரிப்பணத்தில் இருந்து வரிவிலக்கு பெறுகிறீர்கள், அப்படியிருக்க உங்கள் சங்கம் பற்றி பொதுமக்கள் தெரிந்துக்கொள்ளவதில் உங்களுக்கு என்ன தயக்கம் ?.

தேர்தலில் தோற்ககூடாது என சரத்-ராதாரவி தரப்பினர் களத்தில் குதித்துள்ளனர். கணவர் சரத், அண்ணன் ராதாரவிக்கு ஆதரவாக நடிகை ராதிகா இப்போது படை திரட்டுகிறார். சரத்-ராதாரவி டீம் சாதி பலம், பண பலம், அதிகார பலம் காட்டுவதன் நோக்கம் இதில் வரும் வருமானம், அதோடு ஊழல் வெளிப்பட்டுவிடும்மோ என்ற பயம் தான் காரணம்.

பஞ்சபாண்டவர் அணி வெற்றி பெறுகிறதோ? தோற்கிறதோ அது அக்டோபர் 18ந்தேதிக்கு மேல் தெரியப்போகிறது. சரத்-ராதாரவி வெற்றி பெற்றாலும் அவர்களை எதிர்க்க ஒரு குழு உள்ளது என்பதை காட்டியுள்ளார் விஷால்.


நடிகர் சங்கம் உடைந்து விடும் என காதில் ஜிகினா சுத்த வேண்டாம். ஒரு இரவு நேர பார்ட்டி வைத்தால் இவர்கள் அனைவரும் கட்டிப்பிடித்துக்கொள்வார்கள். கமல் படத்தின் கட்டிப்பிடி வைத்தியம் போல.