வெள்ளி, ஜனவரி 14, 2022

கேரளாவில் மனைவிகள் பரிமாற்றமும், எதார்த்தமும்.

 


கேரளாவில் சமூக வளைத்தளத்தில் தம்பதிகள் தங்களது இணையை மற்றொருவருடன் பரிமாறிக்கொள்ளும் வெய்ப் எக்ஸ்சேஞ்ச் என்கிற குழுவை தொடங்கி பரிமாறிக்கொண்டுள்ளார்கள் என்கிற தகவல் ஒரு இளம் பெண்ணின் புகாரால் வெளிவந்துள்ளது. இந்த விவகாரத்தை காரசாரமாக விவாதித்துக்கொண்டு இருக்கிறது கேரளா மீடியாக்கள்.

இந்த விவகாரம் குறித்து நியாயப்படுத்துவதோ, குற்றம்சாட்டவோ இந்த கட்டுரையை எழுதவில்லை. எதார்த்தத்தை சொல்லவே இந்த கட்டுரை.

தமிழ்நாட்டில் 15 ஆண்டுகளுக்கு முன்பு இதேப்போன்று எக்ஸ்சேஞ்ச் விவகாரம் சென்னை கிழக்கு கடற்கரை சாலைகளில் சக்கைப்போடு போட்டது. அலுவலகத்தில், அடுக்குமாடி குடியிருப்புகளில், சமூக வளைத்தளங்களில் ( அப்போது ஆர்குட் என்கிற தளம் முகநூல் போல் மிகப்பிரபலம் ) நண்பர்களாகிறவர்கள் தங்களது அந்தரங்க விவகாரத்தை பகிர்ந்துக்கொண்டு பின்னர் குழு உருவாக்கி கிழக்கு கடற்கரை சாலைகளில் உள்ள வில்லாக்கள், பங்களாக்களில் வார இறுதிநாட்களில் கூடுவார்கள். அங்கு தங்களது கார் சாவியை ஒரு குடுவையில் போடுவார்கள். விளக்கு அணைக்கப்படும் அந்த குடுவைக்குள் உள்ள சாவிகளை கணவரோடு வந்துள்ள பெண்கள் ஒவ்வொருவராக எடுக்கவேண்டும், அந்த சாவிக்கு உரியவர் அன்றைய இரவு அந்த பெண்ணோடு இரவு இருப்பார். 

அதற்கு முன்பு பெண்களின் உள்ளாடை கழட்டி டேபிள் மீது போடப்படும், ஆண்கள் உள்ளாடையை எடுக்கவேண்டும் உள்ளாடைக்கு உரியர் அவரோடு இருப்பர். இப்படி ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்றாற்போல் செலக்ட் டைப் மாறுகிறதே தவிர விவகாரம் மாறியதில்லை. 

இதுப்போன்ற ரகசிய நிகழ்வுகளுக்கு துணைவி ஒப்புக்கொள்ளாதபோது கால்கேள்ஸ்களை அழைத்துச்சென்று பிற்காலத்தில் அந்த குழுவில் உள்ள மற்றவர்களுக்கு தெரிந்து பிரச்சனையானது, பணம் பறிக்கொடுத்ததுயெல்லாம் 10 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு.

இப்படியொரு எக்ஸ்சேஞ்ச் எப்போது உருவாகியிருக்கும் எனக்கேட்டால் நிச்சயம் யாருக்கும் தெரியாது. நான் கல்லூரி படிக்கும்போது, பக்திமானான எங்கள் வரலாற்று பேராசிரியர் பாடம் நடத்தும்போது, கடவுளாக பூஜிக்கப்படும் மனிதர் குறித்து பாடம் நடத்தப்பட்டது. அக்கால நடைமுறையில் ஆண் குழந்தைக்காக அப்போது வெளிப்படையாக இருந்த வழக்கம் குறித்து சொல்லும்போது, கிட்டதட்ட இன்றைய மனைவி மாற்றும் முறைக்கு ஒப்பானது. இதை இங்கு குறிப்பிடக்காரணம் இந்த மாற்றுமுறை இப்போது அப்போது வந்ததல்ல, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு உலகத்தில் பலயிடங்களில் நடந்துள்ளது என்பதை தெரிவிக்கவே.

நம்நாட்டில் காமம் என்பது வரையறை செய்யப்பட்டது. எத்தனை வயதில் அதுக்குறித்து பேச வேண்டும், தெரிந்துக்கொள்ள வேண்டும், யாரிடம் பேசவேண்டும், எதற்காக பேசவேண்டும் என்பதெல்லாம் கலாச்சாரம் என்கிற பெயரில் வரையறை செய்யப்பட்டுள்ளது. அதிலும் இளைஞர்களை விட இளைஞிகளுக்கு அதிக கட்டுப்பாடு. இதை தெரிஞ்சிக்ககூடாது என அடக்கிவைப்பதால் தான் தண்ணீருக்கும் அமுக்கப்பட்ட பந்துப்போல் அது வெளியே வருகிறது. மேற்கத்திய நாடுகள் அதனை உணர்ந்ததால்தான் செக்ஸ் கல்வியை பாடத்திட்டமாக வைத்தார்கள். நாம் இன்னமும் ஒருமனிதனை அளவிடும் எடைக்கருவியாகவே காமத்தை வைத்துள்ளோம்.

உலகில் பிரபலமான செக்ஸாலஜிட்கள் முதல் டுபாகூர் லேகியம் விற்கும் எழுதும் தொடர்களை, வீடியோ பேட்டிகளை படித்துப்பாருங்கள் அனைவரும் ஒரு விஷயத்தை தெளிவாக கூறுவார்கள். காம உணர்வு என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபடும். ஒரு ஆணுக்கு ஒருப்பெண்ணை பார்த்ததுமே உணர்வு வரும், சிலருக்கு பெண்களின் அங்கங்களை காணும்போது வரும், சிலருக்கு துணையுடன் ரொமான்டிக்காக பேசும்போது வரும், சிலருக்கு நடிகைகளை நினைக்கும்போது வரும், இளைஞர்களுக்கு ஆன்டிகள் மீது மோகம் வரும். பெருசுகளுக்கு சிறார்களை காணும்போது ஆசைவரும், சில ஆண்களுக்கு பெண்களை பார்த்தால் உணர்வு வராது, ஆண்களை கண்டால்தான் உணர்வு பீறிட்டு கிளம்பும், சிலருக்கு செக்ஸ் வீடியோக்கள் பார்த்தால்தான் உணர்வு வரும். பெண்களுக்கும் ஆசைகள் வர சில வகைகள் உண்டு என்பதை குறிப்பிடுவார்கள்.

அப்படி துணையை மாற்றிக்கொண்டு ஆசையை பூர்த்தி செய்துக்கொள்பவர்களும் இருக்கிறார்கள். இது எலைட் பீப்புள்ஸ், எலைட் பீப்புள்ஸ் ஃலைப் வாழ நினைப்பவர்கள், காமத்தை விதவிதமாக அனுபவிக்க விரும்புகிறவர்களிடம் துணையை மாற்றிக்கொள்ளும் போக்கு உண்டு. இதுப்போன்ற தம்பதிகள் சிலர் கேரளா, தமிழ்நாடு மட்டும்மல்ல உலகம் முழுக்கவே உண்டு. இந்தியா போன்ற நாடுகளில் இவர்களால் நாங்கள் இப்படித்தான் என வெளிப்படையாக சொல்லமுடியாது என்பதால் ரகசியமாக கூடி தங்கள் இச்சையை தீர்த்துக்கொள்கிறார்கள்.

இந்தியாவில் பிரபலமான இந்தியா டுடே இதழ் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் முக்கிய நகரங்கள், சிறுநகர மக்களிடம் செக்ஸ் சர்வே நடத்தும். பலதரப்பட்ட மனிதர்களிடம் நடத்தப்பட்டு மனிதரின் செக்ஸ் எண்ணங்கள் எப்படியுள்ளது, தேவைகள், ஆசைகள், எண்ணங்கள், விருப்பங்கள், வடிகால்கள் குறித்து என விளாவரியாக செய்திக்கட்டுரை வெளியிடும். ( அப்படியொரு கட்டுரை அது வெளியிட வேண்டிய அவசியம்மென்ன என்பது இங்கு குறிப்பிட தேவையில்லை என நினைக்கிறேன்) சர்வேயில் கலந்துக்கொள்ளும் மக்களிடம் செக்ஸ் குறித்து விதவிதமான கேள்விகளை எழுப்பியிருக்கும். என்னய்யா இப்படியெல்லாமா கேள்வி கேட்பிங்க என்பதுப்போல் அப்போது இருந்தது. இன்றைய காலக்கட்டத்தில் அது சர்வசாதாரண கேள்வியாக மாறிவிட்டது. அப்படியொரு சர்வேயில் நடிகை குஷ்பு, கற்பு குறித்து கருத்துச்சொல்லிதான் தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையாகி வழக்குகள் தொடுக்கப்பட்டதால் தன்னை பாதுகாத்துக்கொள்ள அரசியலுக்குள் வந்தார்.

மனிதர்களின் மனங்கள் என்பது குரங்கு போன்றது. குரங்குகள் நிமிடத்துக்கு நிமிடம் இடம் விட்டு இடம் தாவுவதுப்போல மனிதர்களின் மனங்களும் மாறிக்கொண்டே இருக்கும். ஒரு செல்போன் வாங்கியபின் அடுத்து வரும் மாடலை பார்த்து ஏங்கும் குரங்கு மனது மனிதர்களுடையது.

இதுப்போன்று துணையை மாற்றிக்கொள்ளும் போக்கு உடையவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்புகள் மிககுறைவு. எப்படி வாழ வேண்டும் என்பது அவர்களின் தனிமனித சுதந்திரம். மற்றொரு துணையுடன் இருப்பது என்பது சொந்த விருப்பப்படி, விரும்பியபடி, துணையின் வற்புறுத்தல்படி நடப்பதுதான். அதனால்தான் கடந்த காலத்தில் இதுப்போன்ற பிரச்சனைகள் வந்தபோது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியவில்லை. கேரளாவில் அந்தபெண் புகார் தந்ததுப்போல் பாதிக்கப்படுபவர்கள் தங்கள் துணை மீது புகார் தந்தால் மட்டும்மே நடவடிக்கை எடுக்கப்படும்.

இங்கு புகார் தருவதில்தான் சிக்கலே. காரணம் கட்டில் அறையில் தன் துணையின் மனவோட்டத்தை அறிந்துக்கொள்ளும் துணைகள் மட்டுமே பரிமாற்றத்துக்கு ஒப்புக்கொள்கிறார்கள். புகார் தந்தால் பல அந்தரங்க கேள்விகள் எழுப்பப்படும், அதாவது தனது காம ஆசைகளை கிளறுவார்கள் என்பதாலே இதில் சிக்கியவர்களும் தயங்குகிறார்கள்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் காமம் என்பது இயற்கையாகவே உருவாகும். அதை ரகசியமாக்காதீர்கள், அது இயல்பானது. பருவ வயதில் பிள்ளைகளோடு பெற்றோர்கள் விவாதியுங்கள். கட்டில் அறையில் தம்பதிகள் தங்கள் ஆசையை தங்களுக்குள் பகிர்ந்துக்கொண்டு துணையின் உணர்வுகளை புரிந்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுங்கள்.

ஞாயிறு, ஜனவரி 09, 2022

தினம் ஒரு வரலாறு - ஜனவரி 9 – வெளிநாடுவாழ் இந்தியருக்கான நாள்.

 இந்தியாவில் இருந்து பிழைக்க, தொழில் செய்ய இந்திய எல்லைக்கு அப்பால் சென்று அந்நாட்டில் குடியுரிமை பெற்று வாழும் ஒவ்வொருவரும் வெளிநாடு வாழ் இந்தியராக அங்கீகரிக்கிறது இந்திய சட்டம்.

இப்படி இந்தியாவை சேர்ந்த, இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கோடிக்கணக்கான மக்கள் அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து, இங்கிலாந்து, மியான்மர், சிங்கப்பூர், இலங்கை, மலேசியா, தென்னாப்பிரிக்கா, பிரான்ஸ் என உலகின் பல நாடுகளில் வாழ்கின்றனர். பெரும்பான்மையினோர் செல்வ செழிப்போடும், பெரும் தொழிலதிபர்களாகவும் உள்ளனர்.

அவர்களை கவுரவிக்கும் பொருட்டு இந்திய அரசு சில சலுகைகளை அறிவித்துள்ளது. அவர்களுக்கு சலுகை வழங்ககாரணம், ஒவ்வொரு ஆண்டும் சில ஆயிரம் கோடிகள் இந்தியாவுக்கு அவர்களால் வருவாய் கிடைக்கிறது, அதை அதிகப்படுத்தவும், வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் தொழில் தொடங்கி தொழில் புரட்சியில் தான் பிறந்த நாட்டை முன்னேற்றம் அடைய வைக்க வேண்டும் என்று விருதுகள் வழங்கிறது.

இதற்காக வெளிநாடு வாழ் இந்தியர் என்கிற ஒரு நாளை உருவாக்கி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9ந்தேதி இந்தியாவின் ஏதாவது ஒரு முக்கிய நகரத்தை தேர்வு செய்து வெளிநாடு வாழ் இந்தியர்களின் பிரதிநிதிகளை அழைத்து வந்து கொண்டாடுகிறது.

வெளிநாடு வாழ் இந்தியர் நாள் ஜனவரி 9ந்தேதி கொண்டாடக்காரணம், இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித்தந்த காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியாவில் மும்பையில் உள்ள அப்போல்லோ பந்தர் துறைமுகத்தில் காலடி எடுத்து வைத்த நாள் 1915 ஜனவரி 9ந்தேதி. காந்தியடிகள் இந்தியா திரும்பியநாளை வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான நாளாக இந்திய அரசு 2002ல் அறிவித்து கடந்த 2003 ஆம் ஆண்டில் இருந்து அதிகாரபூர்வமாக இந்த நாளை இந்தியரசு கொண்டாடுகிறது.

சனி, ஜனவரி 08, 2022

தினம் ஒரு வரலாறு - ஜனவரி 8 – தட்டச்சு நாள்.

 


ஜனவரி 8 – தட்டச்சு நாள்.

இன்றைய கணிப்பொறி கீ போர்டுகளுக்கு முன்னோடி டைப்ரைட்டர் என்கிற தட்டச்சு இயந்திரம். தட்டச்சு இயந்திரத்தின் தந்தை எனப்படுபவர் கிறிஸ்டோபர் லதாம் சோல்ஸ். அமெரிக்காவை சேர்ந்தயிவர் தி கனோசா டெலிகிராப் என்கிற பத்திரிக்கையின் உரிமையாளராகவும், சட்டமன்ற மக்கள் பிரதிநிதியாகவும் இருந்தார். அவர் தான் முதன்முதலாக தனது நண்பருடன் சேர்ந்த தட்டச்சு இயந்திரத்தை கண்டுபிடித்தார்.

தட்டச்சு இயந்திரம் கண்டுபிடிப்பதற்கு முன்புவரை பத்திரம் எழுதுவது, ஆவணங்கள் எழுதுவது, அரசு குறிப்புகள், அரசு மற்றும் தனியார் அமைப்புகள் கடிதம் அனுப்ப வெள்ளை தாளில் சொல்ல வந்த கருத்தை கைகளால் எழுதி அனுப்பினர். தட்டச்சு இயந்திரம் கண்டறியப்படிபட்டது முஐதல் அந்த போக்கு மாறியது.

ஆங்கில எழுத்துக்களை கொண்டு தான் முதன் முதலில் தட்டச்சு இயந்திரம் கண்டறியப்பட்டது. அதில் பலமுறை மாற்றங்கள் நடைபெற்று தற்பொழுது உள்ள வடிவம் உருவானது. மொழிகளுக்கு ஏற்றாற்போல் தட்டச்சு இயந்திரம் தயார் செய்யப்பட்டது.

தட்டச்சு இயந்திரம் வந்தபின் பெரும் மாற்றம் ஏற்பட்டது. கைகளால் எழுதுவது என்பது வெகுவாக குறைந்தது. காலமாற்றத்தில், தொழில் நுட்ப வளர்ச்சியால் தட்டச்சு இயந்திரத்துக்கான இடத்தை கணிப்பொறி இடம் பிடித்துக்கொண்டது. ஆனாலும், இன்றளவும் தட்டச்சு இயந்திரத்துக்கான பயன்பாடு உள்ளது. ரஷ்யாவில் இன்றும் அரசின் ரகசிய ஆவணங்களை தட்டாச்சு செய்தே அனுப்பி வைக்கின்றனர் என்கிறது ஒருத்தகவல்.

கணிப்பொறி மற்றும் மொபைல், ஐபேடு பேன்றவற்றின் வருகை, டச் ஸ்கரீனில் எழுதுவது போன்றவற்றால் தட்டச்சு கற்றுக்கொள்வது என்பது தற்போது உலகம் முழுவதும்மே வெகுவாக குறைந்துவிட்டது. இதனை கருத்தில் கொண்டே தட்டச்சு நாள் என்கிற ஒருநாளை உருவாக்க முடிவு செய்துள்ளனர் அத்துறையை சேர்ந்தவர்கள்.

2011 ஆம் ஆண்டு முதல் மலேசியாவில் தான் தட்டச்சுக்கான நாள் உருவாக்கப்பட்டது. இப்படியொரு நாளை டி.ஏ.சி ( டைப் ஆட்டோ கரைக்ட் ) என்கிற அமைப்பு சர்வதேச ஜீனியர் சேம்பர் என்கிற பொதுநல அமைப்போடு சேர்ந்து உருவாக்கியது. இந்த நாளை ஐநா அமைப்பு மூலம் சர்வதேச நாளாக உருவாக்க முயற்சி எடுத்துவருகிறது.

வெள்ளி, ஜனவரி 07, 2022

தினம் ஒரு வரலாறு - ஜனவரி 7 - கலீலியோ கலிலியை அறிவோம்.

 


வானத்தில் நட்சத்திரங்கள் நடத்தும் அதிசயத்தை மக்களுக்கு விளக்கி, அதை பார்க்க செய்தவர் கலிலியோ. ஆராய்ச்சியளரான அவரை மதவாதிகள் வீட்டுச்சிறை வைத்து கொன்றனர்.

1564 பிப்ரவரி 15ந்தேதி இத்தாலியின் பைசா நகரில் பிறந்தார் கலீலியோ கலிலி. இசையமைப்பாளர் வின்சென்சோ கலீலி – கியுலியா தம்பதியரின் தலைமகனாக பிறந்தார். இவருக்கு அடுத்து 5 குழந்தைகள் இந்த தம்பதிகள் பெற்றெடுத்தனர். இந்த குடும்பம் கலிலிக்கு 8 வயதாகும் போது பைசா நகரில் இருந்து புளோரன்சிஸ்க்கு இடம் பெயர்ந்தது.

ஆனால் கலிலியை மட்டும் சொந்தவூரில் நண்பர் ஒருவரின் பாதுகாப்பில் விட்டுச்சென்றனர். அவர் வீட்டில் இருந்தபடியே மத குருமார் ஒருவரிடம் கல்வி பயின்றார். பைசா பல்கலைகழகத்தில் மருத்துவம் பயிலத்தான் சேர்க்கப்பட்டார். பல்கலைகழக விதிப்படி அவர் சீருடை அணியாததால் மாதந்தோறும் அபராதம் கட்டியதால் பெற்றோரின் எதிர்ப்பை சம்பாதித்தார். அதோடு, பெற்றோர் சேர்த்த மருத்துவம் பயிலாமல் கணிதம், வானவியல் எனப்போனதால் ஆசிரியர்களும் கலிலியோ மீது வெறுப்புக்கொண்டனர். ஆனால் அவர் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை.

1586ல் நீரியல் துலவியப்பற்றி ஒரு புத்தகம் வெளியிட்டார். இதுதான் அவரை அறிவியல் உலகுக்கு அவரை அறிமுகப்படுத்தியது. 1589ல் இவர் சிறுவயதில் வெறுத்த கணித துறையின் பேராசிரியராக பைசா பல்கலைகழகத்தில் பணிக்கு சேர்ந்தார். 1592 ல் கலிலியோ படுவா பல்கலைழகத்தில் பேராசிரியராக பணியில் சேர்ந்து வானவியல், இயக்கவியல் தொடர்பான பாடங்களை நடத்தினார்.

மரீனா என்கிற பெண்ணோடு திருமணம் செய்துக்கொள்ளாமல் குடும்பம் நடத்தி 3 குழந்தைகளுக்கு தந்தையானார் கலிலி. அதில் இரண்டு பெண் குழந்தைகள். அவர்கள் இருவரும் வளர்ந்து கன்னியாஸ்தீரியாகினர்.

தொலைநோக்கி, வெப்பமாணி, கோள்கள் செயல்பாடுகள் போன்றவற்றை கண்டறிந்து உலகுக்கு அறிவித்தார். வான்கோள்களை முதன்முதலாக தான் கண்டறிந்த நீண்ட தொலைவு பார்க்க கூடிய தொலைநோக்கி மூலம் வானத்தில் மின்னிய நட்சத்திரங்களை ஆய்வு செய்து பல அறிய தகவல்களை பதிவு செய்தார். அரிஸ்டாட்டில் ஒரு கோட்பாட்டை முன்வைத்திருந்தார், அதை உலகம் நம்பிக்கொண்டுயிருந்தது. அதாவது மேலிருந்து ஒரு வெவ்வேறு அளவு, எடைக்கொண்ட பொருளை மேலிருந்து கீழே போட்டால் அவை ஒரு நேரத்தில் வராது என்பது அரிஸ்டாட்டில் கருத்து, அது பொய் என நிரூபித்தார் கலிலியோ.

இராணுவத்தில் பயன்படுத்தப்படும் பீரங்கி குண்டுகள் வெவ்வேறு வடிவங்களில் இருந்தன. அதற்கு ஒரு கணிதப்பயன்பாடு உருவாக்கி தந்தார். அது இராணுவத்தில் பெரும் வெற்றி பெற்றதால் அவருக்கு மரியாதையும், பணமும் குவிந்தது. இதன்பின்பே அவரது வறுமை நீங்கியது. 1609ல் தான் கண்டுபிடித்த தொலைநோக்கியை வெனிஸ் நகரத்தின் அருகேயிருந்த குன்றின் மீது நிறுவி பொதுமக்கள் அந்த தொலைநோக்கி வழியாக வானியல் அதிசயங்களை காண ஏற்பாடு செய்தார். இதை நாட்டுக்கே அர்பணித்தார். இதனால் பேராசிரியர் பணியும், பணமும் கிடைத்தன.

1621 தி அசேஸியர் என்கிற நூலை எழுதினார் இதனை வெளியிட மதகுருமார்கள் அனுமதிக்காமல் நீண்ட போராட்டத்துக்கு பின் 1623ல் தான் அனுமதிகிடைத்தது. அதன்பின் புதிய அறிவியல் மீதான உரையாடல், உலகின் இரு முக்கிய கோட்பாடுகள் என இரண்டு நூல்களை எழுதினார் கலிலியோ. அதுவே பிற்காலத்தில் வந்த பல அறிஞர்களுக்கு வழிக்காட்டியாக விளங்கியது.

பைசா நகரத்தின் அரசவை கணிதவியல் அறிஞராக இருந்தார் கலிலியோ. 1641ல் சூரியனை மையமாக கொண்டே இந்த பூமி உட்பட அனைத்தும் இயங்குகின்றன என்கிற கோட்பாட்டை முன்வைத்தார் கலிலியோ. இது கத்தோலிக்க திருச்சபை பாதிரியார்கள் மக்களிடம் கட்டமைத்திருந்த மூடநம்பிக்கையை உடைத்தது. இதில் வெறுப்புற்ற மதகுருமார்கள் தங்கள் மத அதிகாரத்தை பயன்படுத்தி, ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் மூலம் கலிலியோவை வீட்டுச்சிறையில் வைத்தனர். 1642 ஜனவரி 8ந்தேதி இறக்கும்போதும் வீட்டுச்சிறையிலேயே இருந்தார் என்பது குறிப்பிடதக்கது. இறந்தபின்பு அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் செய்ய மறுத்ததோடு, அவர் இறப்பை கேள்விக்கு உட்படுத்த முயன்றனர். இதனை கலிலியோவின் நண்பர்கள் அறிந்து அவரது உடலை ரகசியமாக கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.

வியாழன், ஜனவரி 06, 2022

தினம் ஒரு வரலாறு - ஜனவரி 6 – புதுவை விடுதலை வீரர் அரங்கசாமி நாயக்கர்.இந்தியாவுக்கு இங்கிலாந்திடம்மிருந்து விடுதலை வேண்டும்மென இந்தியர்கள் போராடியபோது, பிரெஞ்ச் நாட்டிடம்மிருந்து புதுவைக்கு விடுதலை வேண்டும்மென புதுவை மாநிலத்தை சேர்ந்தவர்கள் பல தலைவர்கள் போராடினார்கள். அதில் முக்கியமானவர் அரங்கசாமி.

புதுவை மாநிலத்தில் உள்ள திருநள்ளாறு அருகிலுள்ள இளையான்குடியில் 1884 பிப்ரவரி 6ந்தேதி பிறந்து வாழ்ந்தவர் அரங்கசாமி. இவரது பூர்வீகம் காஞ்சிபுரம் என கூறப்படுகிறது. அங்கிருந்து இடம் பெயர்ந்து இவரது முன்னோர்கள் புதுவை மாநிலத்தில் தற்போதுள்ள காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் குடியேறியுள்ளார்கள். அந்த பகுதியின் பெரும் நிலக்கிழாராக இருந்துள்ளார். பெரும் நிலக்கிழாராக இருந்தாலும் கூலி விவசாய தொழிலாளர்களுக்கு வேலைக்கு ஏற்ற சரியான கூலி கிடைக்க வேண்டும்மென உழவரங்கம் என்கிற அமைப்பினை தொடங்கி நடத்தினார்.

சுயமரியாதை இயக்கங்களோடு இணைந்து செயலாற்றினார். அனைத்து சாதியினரும் சமம் என்பதில் குறியாக இருந்தவர் தன் வீட்டில் சமபந்தி உணவு என்பதை கடைப்பிடித்தார். 1937ல் உருவாக்கப்பட்ட மகாஜனசபையின் காரைக்கால் தலைவராக செயல்பட்டார். ஆலயங்களில் தலித் மக்கள் நுழைவதற்கு இருந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து ஆலய பிரவேச போராட்டங்கள் நடத்தி கைதானார். திருநள்ளாறு நகரமன்ற தலைவராக மக்களால் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியில் இருந்தார். 1934ல் காந்தி தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்தார், அப்படியே பிரெஞ்ச் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த காரைக்கால்க்கு ஜனவரி 16ந்தேதி வந்தார். தனது ஹரிஜன இயக்கத்தின் மூலம் சுற்றுப்பணம் வந்தவருக்கு காரைக்கால் ஹரிஜன் சங்கத்தின் சார்பில் ஆயிரம் ரூபாய் நன்கொடை தந்தார் அரங்கசாமி.

பொதுவுடமை இயக்க தலைவராக இருந்த ஜீவாவை விடுதலைப்போராட்ட காலத்தில் தமிழகத்தில் ஆங்கிலேய காவல்துறை தேடியபோது பிரெஞ்ச் கட்டுப்பாட்டில் இருந்த காரைக்காலில் ரகசியமாக தங்கவைத்து அடைக்கலம் தந்துள்ளார் அரங்கசாமி. பிரெஞ்ச் இந்திய குடியரசு பத்திரிக்கை என்கிற தலைப்பில் ஒரு செய்தி இதழை நண்பர்களோடு இணைந்து நடத்தினார் அரங்கசாமி. அவர் அந்த இதழில் எழுதிய கட்டுரைகள் பிற்காலத்தில் அவரது நண்பர்கள் தொகுத்து குடியரசு தமிழ் ஆரம்ப இலக்கணம் என்கிற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டுள்ளனர்.

60வது வயது நெருங்கிய சமயத்தில் 1943 ஜனவரி 6ந்தேதி மறைந்தார். அரங்கசாமி இறந்து 10 ஆண்டுகளுக்கு பின் 1954 நவம்பர் 1ந்தேதி புதுவை விடுதலைப்பெற்று இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைந்தது.

புதன், ஜனவரி 05, 2022

தினம் ஒரு வரலாறு - ஜனவரி 5 – விடுதலை வீரர் வெ. துரையனார்

 இந்தியாவின் சுந்திரத்துக்கு காந்தி மட்டும் தான் தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்து போராடுவாரா, நாங்கள் வந்து போராடமாட்டோம்மா என தமிழகத்துக்கு வந்து இந்தியாவின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து போராடியவர் துரைசாமி.

ஆங்கிலேயர்கள் 17 ஆம் நூற்றாண்டின் தமிழகம், ஆந்திராவின் பல குக்கிராமங்களில் இருந்து நல்ல வாழ்க்கை, ஏகப்பட்ட பணம், கல்வி என ஆசைகளை காட்டி ஏழை கூலி மக்களை இங்கிருந்து தென்னாப்பிரிக்காவுக்கு அழைத்து சென்றனர் ஆங்கிலேயர்கள். அப்படிச்சென்ற லட்சக்கணக்கான குடும்பங்களை சேர்ந்தவர்களில் ஒருவரின் வாரிசு வெங்கடாச்சலம்.

தென்னாப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்த வெங்கடாச்சலம் மொரீசியஸ்சில் வணிகம் செய்து வந்தார். இவரது மனைவி செல்லத்தாச்சி. இந்த தம்பதியரின் மகனாக ரூடிபோர்டு என்ற இடத்தில் 1891 மே 21ந்தேதி பிறந்தார் துரைசாமி.

குத்துச்சண்டை, கராத்தே உட்பட தற்காப்பு கலைகளை நன்கு கற்றுயிருந்தார் துரைசாமி.

தென்னாப்பிரிக்காவில் காந்தி நிறவெறிக்கு எதிராக போராட்டம் செய்தபோது துரைசாமியும் அந்தப்போராட்டத்தில் கலந்துக்கொண்டு சிறைச்சென்றார். அவருடன் காந்தியின் மகன் மணிலால்காந்தியும் சிறையில் இருந்தார். அந்த போராட்டத்தில் கலந்துக்கொண்டு அடையாள அட்டையை தீயிட்டு எரித்ததால் துரைசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை கிடைத்தது.  இது அவரது குடும்பத்தை வெகுவாக பாதித்தது. அதனால் மகனின் எதிர்காலம் கருத்தில் கொண்டு அவரது தாயாருடன் தமிழ் கற்றுக்கொள்ள என காரணம் கூறி தமிழகம் அனுப்பிவைக்கப்பட்டார்.

தமிழகம் வந்தவர் மறைமலை அடிகளாரிடம் தமிழ் கற்க மாணவராக சேர்ந்தார். சில மாதக்காலங்கள் அங்கு இருந்தவர் மறைமலை அடிகளாரிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரிடம்மிருந்து நின்றுவிட்டார். மறைமலை அடிகளாரிடம் மாணவராக சேர்ந்ததும் தனது பெயரை துரைசாமி என்பதை துரையனார் அடிகளார் என மாற்றிக்கொண்டார்.

தஞ்சை மண்டலத்தில் நடந்த பல்வேறு சுதந்தர போராட்டங்களில் கலந்துக்கொண்டார். கிலாபத் இயக்கம், தீண்டாமை, மதுவிலக்கு உட்பட பல போராட்டங்களில் கலந்துக்கொண்டு சிறை சென்றார். 1930ல் வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியகிரகத்தில் இவர் தலைமையில் ஒரு அணி கலந்துக்கொண்டது. ஆங்கிலேய காவல்துறை இவரை கைது செய்து சிறையில் அடைத்தது. இப்படி பலமுறை போராட்டம் நடத்தியதால் சிறைச்சென்ற வகையில் தமிழக சிறைகளில் 6 ஆண்டுகள் இருந்துள்ளார். இவர் சிறையில் இருந்த காலத்தில் 1932ல் இவரது மனைவி துளவியம்மாள் காலமானார். இந்த தம்பதியின் மகன்கள் திருச்சிற்றம்பலம், அருள்நந்திசெல்வம், திருநாவலர் காந்தி. மன்னிப்பு கடிதம் எழுதி தந்தால் சிறையில் இருந்து விடுதலை செய்கிறோம் என்றது ஆங்கிலேய அரசு, துரையனார் அடிகளார் மறுத்துவிட்டார். இதனால் அவரது மனைவிக்கு மகன்கள் தான் இறுதி காரியம் செய்தனர்.  அவர் சிறையில் இருந்து வெளியில் வரும் வரை துரையனாரின் நண்பர்கள் வீட்டில் பிள்ளைகள் தங்கியிருந்தனர்.

1936ல் தஞ்சை மண்டல காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். காங்கிரஸ் பணிகளை செய்த வந்தவர் தேர்தலிலும் போட்டியிட்டார். தான் வாழ்ந்த கும்பகோணம் நகராட்சிக்கு 1939ல் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் நகர மன்ற உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் பணியாற்றினார்.

காந்தியின் சீடராக காங்கிரஸ் கட்சியில் இயங்கியவர், பின்னர் அந்த கட்சியில் இருந்தாலும் சுதந்திரத்துக்கு பின்னர் தனது பணியை வெகுவாக குறைத்துக்கொண்டார். 1960ல் விடுதலைப்போராட்டத்தில் ஈடுப்பட்டு சிறைச்சென்று வந்தவர்களுக்கு மாநியமாக 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. முதலில் அதை வாங்க மறுத்த துரையனார் பின்னர் அதை வாங்கி மன்னார்குடி அடுத்த எடமேலையூர் கிராமத்தில் வசித்த ஏழை விவசாய கூலி மக்கள் 20 பேரை தேர்வு செய்து அவர்களில் 5 பேரை குலுக்கல் முறையில் பொதுவில் வைத்து தேர்வு செய்து தனக்கு தானமாக வழங்கப்பட்ட நிலத்தை ஏழை விவசாயிகளுக்கு தானமாக பத்திர பதிவு செய்து வைத்தார்.

பெரியார், காமராஜர், திரு.வி.க போன்ற தலைவர்களுடன் நெருக்கமாக இருந்தார் துரையரசன் அடிகளார். திருவியன் மதியன் என்கிற நூலை எழுதியுள்ளார், திராவிட தமிழர்களின் பண்டைய கால வரலாறு, தன் வாழ்க்கை வரலாறு நூல்களை எழுதி வெளிவந்துள்ளது. தனது 82வது வயதில் 1973 ஜனவரி 5ந்தேதி மறைந்தார்.

செவ்வாய், ஜனவரி 04, 2022

தினம் ஒரு வரலாறு - ஜனவரி 4 - பதஞ்சலி சாஸ்திரியை அறிவோம்.


 ஜனவரி 4 - பதஞ்சலி சாஸ்திரியை அறிவோம்.

இந்தியாவின் இரண்டாவது உச்சநீதிமன்ற நீதிபதி யார் என்றால் பலருக்கு தெரியாது. அவர் பதஞ்சலி சாஸ்திரி. தமிழகத்தை சேர்ந்த ஒருவர் முதன்முதலாக உச்சநீதிமன்ற நீதிபதியானவர் அவர் தான். அவரது பிறந்தநாள் இன்று. அந்நாளில் அவரைப்பற்றி அறிவோம்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்பட் அடுத்த மண்டைக்கொளத்தூர் கிராமத்தில் 1889 ஜனவரி 4ந்தேதி பிறந்தவர் பதஞ்சலி. காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் முதன்மை சமஸ்கிருத பேராசிரியராக பணியாற்றிய கிருஷ்ணன் சாஸ்திரியின் மகன் தான் பதஞ்சலி.

சென்னை பல்கலைகழகத்தில் பி.ஏ படித்தவர் பின்னர் சட்டம் படித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியை தொடங்கினார். வரி தொடர்பான சட்டத்தில் புலியாக இருந்தார். அந்த காலத்திலும் பெரும் பணக்காரர்களாக திகழும் நாட்டுக்கோட்டை செட்டியார்களின் வழக்குகளை இவர் தான் கவனித்துவந்தார்.

1922ல் வருமானவரித்துறை குழு ஒன்றின் சேர்மனாக நியமிக்கப்பட்டு அந்த பணியை செய்தார். உயர்நீதிமன்ற நீதிபதியாக 1939 மார்ச் 15ந்தேதி பணியில் சேர்ந்தார். பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதியாக 1947ல் பதவி உயர்வு பெற்று சென்று டெல்லியில் பணியாற்றினார்.

ஹரிலால் கண்ணையா என்கிற உச்சநீதிமன்ற நீதிபதி இறந்ததால் அப்போது சீனியர் நீதிபதியாக இருந்த பதஞ்சலி அந்த பதவியில் அமர்த்தப்பட்டார். 1951 நவம்பர் 7ந்தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார். 1954 ஜனவரி 3ந்தேதி வரை பணியாற்றினார். 1953ல் டெல்லி பல்கலைகழகத்தின் இணைவேந்தராக நியமிக்கப்பட்டார் பதஞ்சலி. அதேபோல் பல பல்கலைகழகங்களின் ஆலோசகராக, விமான போக்குவரத்து துறையின் சட்டப்பிரிவிலும் பணியாற்றினார்.

இவரது மனைவி காமாட்சி. வேதகிரி, நாகராஜன், கிருஷ்ணமூர்த்தி, சுந்தரேசன், சங்கரன், மகள்கள் ராஜம், ஜெயலட்சுமி, சரஸ்வதி என பிள்ளைகள் இருந்தனர். பதஞ்சலியின் குடும்பத்தார் பலர் நீதித்துறையில் உள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது.

மத்தியபிரதேச மாநிலம் போபாலில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டபோது தனது 74வது வயதில் 1963 மார்ச் 16ந்தேதி பதஞ்சலி மறைந்தார். அவரது உடல் சென்னையில் வைத்து எரியூட்டப்பட்டது.

திங்கள், ஜனவரி 03, 2022

தினம் ஒரு வரலாறு. ஜனவரி 3 – வீரபாண்டிய கட்டப்பொம்மன் பிறந்த தினம்.

 


ஜனவரி 3 – வீரபாண்டிய கட்டப்பொம்மன் பிறந்த தினம்.

மதுரையை தலைநகராக கொண்டு தமிழகத்தின் பெரும்பான்மை பகுதிகளை நாயக்கர்கள் அரசாண்டனர். ஜெயவீரபாண்டியன் என்கிற மன்னரின் அரசவையில் கெட்டிபொம்மு என்கிற அமைச்சர் பதவி வகித்து வந்தார். கெட்டிபொம்மு என்கிற தெலுங்கு பெயரே தமிழில் கட்டபொம்மன் என உருமாறியது. ஜெகவீரபாண்டியன் மறைவுக்கு பின் தந்திரமாக கெட்டிபொம்மு நாயக்க மன்னரானார். இவர் தனது பெயரை ஜெகவீரகட்டபொம்மன் என அழைக்கவைத்தார்.

அந்த ஜெகவீரகட்டபொம்மன் – ஆறுமுகத்தம்மாள் தம்பதியரின் மகனாக 1760 ஜனவரி 3ந்தேதி பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தார் கருத்தையா. அவரது மற்றொரு பெயரே வீரபாண்டிய கட்டபொம்மன். இவருடன் பிறந்தவர்கள் குமாரசாமி என்கிற ஊமைத்துதுரை, துரைச்சிங்கம், ஈஸ்வரவடிவு, துரைக்கண்ணு என இரண்டு சகோதரர்கள், இரண்டு சகோதரிகள் இருந்தனர்.

வீரபாண்டியன் மூத்தவர் என்பதால் அவரது 30வது வயதில் 1790 பிப்ரவரி 2ந்தேதி பாஞ்சாலங்குறிச்சியில் 47வது பாளையக்காரராக பதவியில் அமர்த்தப்பட்டார். கட்டபொம்மனின் மனைவி ஜக்கம்மாள். வீரஜக்கம்மாள் என அழைக்கப்பட்டார். இந்த தம்பதியருக்கு குழந்தை இல்லை.

அப்போது இந்தியாவின் பெரும்பகுதி ஆங்கிலேயர்களான கிழக்கிந்தியர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுக்கொண்டு இருந்தது. தமிழகத்தின் பெரும்பகுதியை அவர்கள் ஆக்ரமித்துக்கொண்டு இருந்தனர். தங்களுக்கு கட்டுப்பட்ட பகுதியினர் வரி வழங்க வேண்டும், கட்டுப்படாத பகுதி மீது போர் தொடுத்து ஆட்சியில் உள்ளவர்களை அகற்றிவிட்டு தனக்கு தோதான எடுபிடிகளை ஆட்சியில் உட்கார வைப்பதை வழக்கமாக வைத்திருந்தது ஆங்கிலேய கம்பெனி.

நெல்லை சீமையில் வரி வசூரிக்கும் பணியை கிழக்கிந்திய கம்பெனியின் தளபதி மாக்ஸ்வெல் செய்து வந்தார். இவர் கட்டபொம்மனிடம் வரிக்கேட்க முடியாது என கட்டபொம்மன் சொன்னார். சொன்னதோடு நிற்காமல் துணைக்கு மற்ற பாளையக்காரர்களை கூட்டு சேர்த்தார். இதில் அதிருப்தியான ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி, வீரபாண்டிய கட்டபொம்மனை போருக்கு அழைத்தது.

1797ல் ஆலன்துரை என்கிற தளபதி பாஞ்சாலக்குறிச்சி மீது போர் தொடுத்தார். டச்சுக்காரர்கள் உதவி பெற்ற கட்டப்பொம்மன் ஆலன்துரையை எதிர்க்கொண்டதால் ஆங்கிலேயப்படை போரில் தோல்வி அடைந்ததால் நெல்லை மாவட்ட ஆட்சியராக இருந்த ஜாக்சன்துரை கட்டப்பொம்மனை தனது அலுவலகத்துக்கு அழைத்தார். அங்கு வந்த கட்டபொம்மனிடம் டச்சுக்காரர்களுடனான உறவை துண்டித்துக்கொள்ள வேண்டும்மென ஆங்கிலேய கலெக்டர் சொல்ல கட்டப்பொம்மன் மறுத்தார். இதில் கோபமான ஜாக்சன்துரை, கட்டபொம்மனை கைது செய்ய முயல அங்கிருந்து தப்பிய கட்டபொம்மன் தனது பாளையத்துக்கு வந்தார். பாளையத்தின் கோட்டை மீது 1799 செப்டம்பர் மாதம் போர் தொடுத்தனர் ஆங்கிலேயர்கள். டச்சுப்படை, கட்டபொம்மன் ஒரு கூட்டணியாகவும், ஆற்காடு நவாபு மற்றும் ஆங்கிலேயப்படை ஒரு தரப்பாக இருந்து மோதியது. அதில் கட்டபொம்மன் தோல்வியை எதிர்க்கொள்ள கைதில் இருந்து தப்பித்து ஓடி புதுக்கோட்டை மன்னரிடம் அடைக்கலம் புகுந்தார்.

புதுக்கோட்டை மன்னரிடம் ஆங்கிலேயர்கள் ரகசிய ஒப்பந்தம் போட்டுக்கொண்டனர். இதனால் அதே ஆண்டு அக்டோபர் மாதம் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாதன், கட்டபொம்மனை கைது செய்து ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தார். பதவியேற்றது முதல் கைதானது வரை 9 ஆண்டுகள் 8 மாதங்கள் மட்டும்மே பாளையக்காரராக இருந்தார் கட்டபொம்மன்.

அக்டோபர் 16ந்தேதி ஆங்கிலேய தளபதி பேனர்மேன் உத்தரவுப்படி கட்டபொம்மனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 39 வயதில் கயத்தாறு என்ற இடத்தில் இருந்த ஒரு புளியமரத்தில் தூக்குதண்டனையை நிறைவேற்றி கட்டபொம்மன் உயிரை ஆங்கிலேயர்கள் பறித்தனர். அதன்பின் அவரது தம்பிகள் கைது செய்யப்பட்டு தூக்குதண்டனை விதித்து நிறைவேற்றப்பட்டது. அதோடு, பாஞ்சாலங்குறிச்சி கோட்டை தரைமாட்டமாக்கி தங்களது கோபத்தை ஆங்கிலேயப்படை தீர்ததுக்கொண்டது. கட்டபொம்மன் புகழ்பாட கலைஞர் முதல்வராக இருந்த 1971ல் பஞ்சாலக்குறிச்சி கோட்டை மீண்டும் உருவாக்கம் செய்யப்பட்டது.

வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்றது. சுதந்திரத்துக்காக பாடுப்பட்டவர் வரிசையில் தமிழகத்தில் அவரை வைத்து கொண்டாடுகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

தினம் ஒரு வரலாறு - ஜனவரி 1 – ஆங்கில புத்தாண்டு உருவான வரலாறு.

 

ஜனவரி 1 – ஆங்கில புத்தாண்டு உருவான வரலாறு.

ஆதிமனிதன் சூரியன், சந்திரனை கொண்டுத்தான் நாட்களை கணக்கிட்டான். பின்னர் அந்த நாளை அடிப்படையாக கொண்டு காலண்டர் என்கிற நாட்காட்டியை வடிவமைத்துள்ளார்கள். அது இஸ்லாம், கிருஸ்த்துவம், இந்து என ஒவ்வொரு மதத்தினரும் தங்களுக்கென சிறப்பு நாட்காட்டியை வைத்துள்ளார்கள். இவர்கள் அனைவரும் தனித்தனியாக நாட்காட்டி வைத்திருந்தாலும் இந்த நாட்காட்டிகள் அனைத்தும் சூரியன், சந்திரனை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.

அப்படி சூரியன், சந்திரனை அடிப்படையாக கொண்டு நாளை கணக்கிட்டுக்கொண்டாலும் காலப்போக்கில் குறிப்புகள் எழுத தங்களுக்கு ஆண்டுகள் தேவை என்பதை உணர்ந்து ஆண்டை முன்வைத்து நாட்காட்டியை உருவாக்க முடிவு செய்தார்கள். அப்போதுான் ஒருநாள் என்பது எத்தனை மணி நேரம் என்பதையும், கிழமைகள் என்பதையும், மாதத்துக்கு எத்தனை நாள் என்பதை வரையறை செய்ய முடிவு செய்தார்கள். கிழக்கு திசையில் சூரியன் உதிக்கும் நேரம் அது மறையும் நேரம், மறைந்தபின் மீண்டும் உதிக்கும் நேரத்தை கணக்கிட்டு ஒரு நாள் என்பது 24 மணி நேரம் என்பதை முதலில் கணக்கிட்டனர். அதன்பின் இளவேனிற்காலம், மழைக்காலம், பனிக்காலம், கோடைக்காலம் என உருவாக்கினர்.

சூரியனை பூமி ஒருமுறை சுற்றிவர 8765 மணி, 48 நிமிடம் 46 விநாடி காலத்தினை எடுத்துக்கொள்கிறது. 24 மணி நேரம் கொண்டது ஒரு நாள். அப்படியாயின் முழு 365 நாள் 5 மணி, 48 நிமிடம் 46 விநாடியை எடுத்துக்கொள்கிறது பூமி. இதில் 5 மணி 48 நிமிடம் 46 விநாடியை ஒதுக்கி வைத்துவிட்டு 365 நாளை ஒரு ஆண்டாக கணக்கிடப்படதொடங்கினர். மீதியுள்ள 5 மணி 48 நிமிடம் 46 விநாடியை சேர்த்துவைத்து 4 ஆண்டுக்கு ஒருமுறை லீப் வருடமாக கணக்கிடுகிறது. அந்த லீப் வருடம் என்பது 366 நாட்கள் என்றனர்.

நேரம், ஆண்டு போன்றவையை அனைத்து நாடுகளுக்கும் பொதுவாக இருந்தாலும் ஒவ்வொரு நாடும் தங்களது நாட்டுக்கும், மொழிக்கும், கலாச்சாரத்துக்கு ஏற்றாற்போல் மாதங்களை பிரித்து வைத்திருந்தது. இப்போது இருப்பது போல் மாதங்கள் சீராக இருந்ததில்லை. கி.மு 44ல் ரோமபேரசராக இருந்த ஜீலியஸ் சீசரால் ஒரு நாட்காட்டி உருவாக்கப்பட்டது. அந்த நாட்காட்டி ஜீலை, ஆகஸ்ட் மாதங்களை தவிர்த்து 10 மாதங்களை கொண்டதாக இருந்தது. ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான இந்த மாதங்கள் லத்தின் மொழி பெயர்களாகும். அந்த பெயர்கள் அனைத்தும் ரோமபுரி மக்கள் வணங்கிய கடவுள்களின் பெயர்களாகும். ஜனவரி என்பது ஜனுஷ் என்பது ரோமபுரி மக்களின் முழு முதற் கடவுளின் பெயர். ( நம்மவூர் விநாயகர்ன்னு வச்சிக்குங்க ). அந்த பெயரை மாதங்களில் முதல் மாதமாக வைக்கப்பட்டது. இப்படி அடுத்தடுத்தடுத்த மாதங்கள் வரிசைப்படுத்தப்பட்டன. இந்த நாட்காட்டி தான் வழக்கத்தில் இருந்தன.

பின்னர் இத்தாலியை சேர்ந்த மருத்துவர் அலோயிசிஸ் என்பவரால் கிரிஜோரியன் நாட்காட்டி உருவாக்கப்பட்டது. அந்த நாட்காட்டியில் கிருஸ்த்து பிறந்த வருடத்தை அடிப்படையாக வைத்து கி.மு, கி.பி என பிரித்தனர். பின்னர் ஜீலியஸ் நினைவாக ஜீலை மாதமும், அகஸ்டஸ் நினைவாக ஆகஸ்ட் மாதம் என இரண்டு மாதங்கள் உருவாக்கப்பட்டு மாதந்திர பட்டியலில் புகுத்தப்பட்டு 10ல் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டு ஆண்டின் 365 நாட்கள் இதில் பங்கு பிரித்து வைக்கப்பட்டன. அதோடு வேறு சில திருத்தங்கள் செய்து தந்தார். அந்த நாட்காட்டியை 15 ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்க கிருஸ்த்துவ பாதிரியாக இருந்த 13 ஆம் கிரிஜோரியன் ஏற்றுக்கொண்டு, கத்தோலிக்க கிருஸ்த்துவ மக்கள் இனிமேல் நான் வெளியிடும் இந்த நாட்காட்டியை தான் பயன்படுத்த வேண்டும் என ஆணையிட்டார். அந்த நாட்காட்டி அந்த மதகுருவின் பெயரிலேயே கிரிஜோரியன் நாட்காட்டி என அழைக்கப்பட்டது.

அந்த நாட்காட்டி 17 ஆம் நூற்றாண்டில் செப்டம்பர் மாதத்தில் 10 நாட்கள் குறைக்கப்பட்டு திருத்தப்பட்டது, இறுதியாக திருத்தப்பட்டது அதுவே. தொடக்கத்தில் கரிஜோரியன் நாட்காட்டியை நாடும், நாட்டு மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. 1582களில் ஸ்பெயின் தான் முதன்முதலாக ஏற்றுக்கொண்டது. அதன்பின் ஒவ்வொரு நாடாக ஏற்றுக்கொண்டன. 1752ல் தான் இங்கிலாந்தும், அமெரிக்காவும் கரிஜோரியன் நாட்காட்டியை ஏற்றுக்கொண்டன. இங்கிலாந்து ஏற்றுக்கொண்ட பின் அது தனது காலணி ஆதிக்க நாடுகள் மீது திணித்தது. அப்படித்தான் இந்தியாவில் அது பயன்பாட்டுக்கு வந்தது. இறுதியாக 1923 பிப்ரவரி மாதம் தான் கிரீஸ் நாடு இந்த நாட்காட்டியை ஏற்றுக்கொண்ட நாடாகும்.

பூமி பந்தின் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு நாளையே ஆண்டின் தொடக்க நாளாக கடைப்பிடித்து வந்தார்கள். அதன்பின் வலிமையானவர்கள் ஏற்படுத்துவது வரலாறானது. அந்த வகையில் உலகளவில் அனைத்து நாடுகளுக்கும் பொதுவான நாட்காட்டி கிரிஜோரியன் நாட்காட்டியாக புகுத்தப்பட்டது. இந்த நாட்காட்டியை கரிகோரிநாட்காட்டி எனவும், கிருஸ்த்துவ நாட்காட்டி எனவும் மேற்கத்திய நாட்காட்டி என அழைக்கப்படுகிறது. சர்வதேச தபால் ஒன்றியம் இந்த நாட்காட்டியை ஏற்றுக்கொண்டுள்ளது குறிப்பிடதக்கது. அதோடு, அனைத்து நாடுகள் அங்கம் வகிக்கும் ஐக்கிய நாடுகள் சபை இந்த நாட்காட்டியை ஏற்றுக்கொண்டு சர்வதேச நாட்காட்டி என அங்கீகரித்ததால் தற்போது உலகம் முழுவதும் இந்த கிரிஜோரியன் என்கிற கரிகோரிநாட்காட்டி பயன்படுத்தப்படுகிறது.

அந்த நாட்காட்டியின் கணக்குப்படி ஆண்டின் முதல் நாள் ஜனவரி 1 புத்தாண்டு தினமாக கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.

தினம் ஒரு வரலாறு. - ஜனவரி 2 – வரலாற்று ஆசிரியர் சதாசிவ பண்டாரத்தார்.

 தமிழகத்தில் மாபெரும் வாசக ரசிகர்களை பெற்றுள்ள கல்கியின் பொன்னியின் செல்வன், குந்தவை நாச்சியார் என பல வராற்று புதின நூல்கள் வரலாற்று குறிப்புகள் அடங்கிய நூல்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. சோழர்களின் வரலாற்றை கல்வெட்டுகளை ஆய்வு செய்து அதன்படி தொகுத்து எழுதியவர் வரலாற்று ஆசிரியர் சதாசிவ பண்டாரத்தார்.  

கும்பகோணம் அருகிலுள்ள திரும்பியபுரத்தில் வசித்த வைத்தியலிங்கம் மீனாட்சி தம்பதியரின் மகனாக 1892 ஆகஸ்ட் 15ந்தேதி பிறந்தார். பண்டாரம் என்கிற பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால் தமது பெயரின் பின்னால் பண்டாரம் என்பதையும் சேர்த்துக்கொண்டார். தனது பெயருக்கு முன்னால் திரும்பியபுறம் என்கிற ஊர் பெயரையும், தந்தை பெயரையும் தலைப்பெழுத்தாக வைத்துக்கொண்டார். திரும்பியம்புறத்தில் திண்ணைப்பள்ளியில் தொடக்ககல்வியும், புளியஞ்சேரியில் நடுநிலைக்கல்வியும், உயர்நிலைக்கல்வியை கும்பகோணத்திலும் கற்றார்.

நற்றிணைக்கு உரை எழுதிய பிரபல தமிழறிஞர் பின்னத்தூர் நாராயணசாமி, பாலசுப்பிரமணியப்பிள்ளை ஆகியோரிடம் இலக்கண தமிழை, இலக்கிய தமிழை கற்றார்.

1910ல் கல்வியை முடித்திருந்தாலும் வேலை எதுவும் கிடைக்காமல் தமிழ் கற்றல் என வலம் வந்துக்கொண்டுயிருந்தார். 1914ல் பண்டாரத்தார் திருத்துறைப்பூண்டியை அடுத்துள்ள குறுக்கை என்ற ஊரைச் சேர்ந்த ஆத்மலிங்கராயரின் மகள் தையல்முத்து என்கிற பெண்ணை மணந்தார். திருமணம் நடந்த பின்னர் வாழ்க்கைக்கு ஒரு வேலை தேட வேண்டும் என்ற நிலை பண்டாரத்தார்க்கு ஏற்பட்டது. சிபாரிசு மூலும் பண்டாரத்தார் முதன் முதலாகத் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகததில் எழுத்தராக ஒன்றரை ஆண்டுகாலம் பணியாற்றினார்.

அந்த பணி அவருக்கு சரி வராததால் கும்பகோணம் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தார். 1917முதல் 1942-ஆம் ஆண்டு வரையில் 25 ஆண்டுகாலம் குடந்தையிலுள்ள வாணதுறை உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகவும் தலைமைத் தமிழாசிரியராகவும் இவர் பணியாற்றினார்.
பண்டாரத்தார் குடந்தையில் பணியாற்றிக் கொண்டிருக்கும்பொழுது 1921 ஆம் ஆண்டில் அவரது மனைவி காலமானார். இளம் வயதில் மனைவியை இழந்ததால் 1922ஆம் ஆண்டில் எலத்தூரில் வாழ்ந்த சைவப்பெரியார் சதாசிவக் குருக்கள் மகள் சின்னம்மாவை இரண்டாம் திருமணம் செய்து வைத்தனர் பெரியவர்கள்.

செந்தமிழ் என்கிற இதழில் கட்டுரைகள் எழுதி வந்தார். 1914 ல் செந்தமிழில் எழுதிய சோழன் கரிகாலன் என்னும் கட்டுரையே இவரது முதல் கட்டுரையாகும். செந்தமிழ்ச்செல்வி என்கிற இதழிலும் கட்டுரைகள் எழுதினார். வசனி என்கிற இலக்கிய இதழின் துணை ஆசிரியராகவும் இருந்து வந்தார். 1930ல் முதலாம் குலோத்துங்க சோழன் என்கிற வரலாற்று புத்தகம் வெளியானது. 1940ல் பாண்டியர் வரலாறு என்ற நூலை எழுதி வெளியிட்டார். இவ்விரு நூல்களும் தமிழ்ப்பொழில் இதழில் வெளிவந்து பின்னர் நூல் வடிவம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

1942 வரை உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக பணியாற்றினார். 1942 ஆம் ஆண்டில் சர். கே. வி. ரெட்டிநாயுடு என்பவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்தபொழுது அப்பல்கலைக் கழகத்தின் தமிழாராய்ச்சித் துறையானது விரிவுபடுத்தப்பட்டது. பண்டாரத்தார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழாராய்ச்சித் துறையில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். அப்போது அவர் பிற்கால சோழர்கள் வரலாற்றை தேடி, ஆய்வு செய்து எழுதும் பணியில் இருந்தார். இது நூலக்கப்படும்போது அண்ணாமலைப்பல்கலை கழகம் வெளியிடும் என அறிவித்தது அண்ணாமலை பல்கலைகழக நிர்வாகம். பிற்காலச் சோழர் சரித்திரத்தின் முதல் பாகம் 1949 ஆம் ஆண்டிலும், இரண்டாம் பாகம் 1951 லும் பல்கலைக்கழக வெளியீடுகளாக வெளிவந்தன.

1955ல் அண்ணாமலை பல்கலைகழக பணியில் இருந்து நின்றுவிட்டார். ஆனால் இவரது பணி தேவையென மீண்டும் இவரை அழைத்துக்கொண்டார்கள். அறிஞர் பண்டாரத்தார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மீண்டும் பணியில் சேர்ந்தபொழுது சோழர் சரித்திரத்தின் மூன்றாம் பாகம் எழுதப்பெற்று 1961 ஆம் ஆண்டில் பல்கலைக்கழக வெளியீடாக வெளிவந்தது. அறிஞரின் பிற்காலச் சோழர் வரலாறு தமிழில் முறையாக எழுதப்பட்ட முதல்நூல் என்ற சிறப்பிற்குரியதாகும். இந்நூல் வெளிவந்த பின்னர்தான் பிற்காலச் சோழர்களின் பெருமைகளைத் தமிழுலகம் அறியத் தொடங்கியது.

தமிழ் இலக்கிய வரலாறு (கி.பி.250-600), தமிழ் இலக்கிய வரலாறு (13,14,15-ஆம் நூற்றாண்டுகள்) ஆகிய நூல்கள் 1955 -ஆம் ஆண்டு பல்கலைக்கழக வெளியீடுகளாக வெளிவந்தன. நம்பகத் தன்மையோடு அறிஞர் பண்டாரத்தார் தமது நூல்களை எழுதிய காரணத்தாலேயே அவரது பிற்காலச் சோழர் சரித்திரம் என்னும் நூலை அடிப்படையாகக் கொண்டு கல்கி, சாண்டில்யன், போன்றோர் தங்களது வரலாற்று நாவல்களைப் படைத்தனர். பண்டாரத்தார் திருப்புறம்பயம் தல வரலாறு, செம்பியன் மாதேவி தலவரலாறு, காவிரிப்பூம்பட்டினம், திருக்கோவலூர் புராணம், தொல்காப்பியப் பாயிரவுரை ஆகிய பல நூல்களையும் எழுதியுள்ளார். இன்றளவும் கலைக்கல்லூரி வரலாற்று பிரிவு மாணவர்களின் பாடத்திட்டத்தில் இவை உள்ளன. அந்தளவுக்கு வரலாற்று கல்வெட்டு தகவல்களோடு மிக நேர்த்தியாக தொகுத்துள்ளார். பிற்காலகத்தில் இவரது நூல்களை தமிழகரசு நாட்டுடமையாக்கின.

பண்டாரத்தார் நீதிக்கட்சியின் கருத்துக்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அக்கட்சி நடத்திய ஒவ்வொரு மாநாட்டிலும் தவறாமல் கலந்து கொண்டார். தந்தைப் பெரியார் அவர்கள் கும்பகோணத்திற்கு வரும்போதுயெல்லாம் சந்திப்பார். இன்னும் நிறைய ஆய்வுகள் செய்யுமாறு ஊக்கப்படுத்தினார். பெரியார் மீது பற்றுக்கொண்டுயிருந்தாலும் சிவபக்தி உடையவராகவும் பண்டாரத்தார் விளங்கினார். தமது பிறந்த ஊரான திருப்புறம்பயத்திலுள்ள கோயிலில் சைவ சமய நால்வருக்கும் ஆண்டுதோறும் குருபூசை நடத்தி வந்துள்ளார். 1953-ஆம் ஆண்டில் திருப்புறம்பயக் கோயில் குடமுழுக்கு நடந்தபொழுது பண்டாரத்தார் தமது சொந்தச் செலவில் சைவ சமயக் குரவர்கள் நல்வருக்கு மண்டபம் கட்டித் தந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

1959 ஆம் ஆண்டு ஜுலை மாதம் பண்டாரத்தார் நோய்வாய்ப்பட்டார். தமது உடல் நோயுற்ற காலத்திலும் கல்வெட்டுத் துறையில் மிகுந்த ஈடுபாடும் நினைவாற்றலும் கொண்டவராக இருந்தார். இறுதிக் காலத்திலும் தொடர்ந்து ஆய்வுப்பணி செய்துவந்தார். 1960 ஜனவரி 2 ஆம் தேதி உடல்நலக் குறைவின் காரணமாக மறைந்தார்.