திங்கள், ஜனவரி 03, 2022

தினம் ஒரு வரலாறு. ஜனவரி 3 – வீரபாண்டிய கட்டப்பொம்மன் பிறந்த தினம்.

 


ஜனவரி 3 – வீரபாண்டிய கட்டப்பொம்மன் பிறந்த தினம்.

மதுரையை தலைநகராக கொண்டு தமிழகத்தின் பெரும்பான்மை பகுதிகளை நாயக்கர்கள் அரசாண்டனர். ஜெயவீரபாண்டியன் என்கிற மன்னரின் அரசவையில் கெட்டிபொம்மு என்கிற அமைச்சர் பதவி வகித்து வந்தார். கெட்டிபொம்மு என்கிற தெலுங்கு பெயரே தமிழில் கட்டபொம்மன் என உருமாறியது. ஜெகவீரபாண்டியன் மறைவுக்கு பின் தந்திரமாக கெட்டிபொம்மு நாயக்க மன்னரானார். இவர் தனது பெயரை ஜெகவீரகட்டபொம்மன் என அழைக்கவைத்தார்.

அந்த ஜெகவீரகட்டபொம்மன் – ஆறுமுகத்தம்மாள் தம்பதியரின் மகனாக 1760 ஜனவரி 3ந்தேதி பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தார் கருத்தையா. அவரது மற்றொரு பெயரே வீரபாண்டிய கட்டபொம்மன். இவருடன் பிறந்தவர்கள் குமாரசாமி என்கிற ஊமைத்துதுரை, துரைச்சிங்கம், ஈஸ்வரவடிவு, துரைக்கண்ணு என இரண்டு சகோதரர்கள், இரண்டு சகோதரிகள் இருந்தனர்.

வீரபாண்டியன் மூத்தவர் என்பதால் அவரது 30வது வயதில் 1790 பிப்ரவரி 2ந்தேதி பாஞ்சாலங்குறிச்சியில் 47வது பாளையக்காரராக பதவியில் அமர்த்தப்பட்டார். கட்டபொம்மனின் மனைவி ஜக்கம்மாள். வீரஜக்கம்மாள் என அழைக்கப்பட்டார். இந்த தம்பதியருக்கு குழந்தை இல்லை.

அப்போது இந்தியாவின் பெரும்பகுதி ஆங்கிலேயர்களான கிழக்கிந்தியர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுக்கொண்டு இருந்தது. தமிழகத்தின் பெரும்பகுதியை அவர்கள் ஆக்ரமித்துக்கொண்டு இருந்தனர். தங்களுக்கு கட்டுப்பட்ட பகுதியினர் வரி வழங்க வேண்டும், கட்டுப்படாத பகுதி மீது போர் தொடுத்து ஆட்சியில் உள்ளவர்களை அகற்றிவிட்டு தனக்கு தோதான எடுபிடிகளை ஆட்சியில் உட்கார வைப்பதை வழக்கமாக வைத்திருந்தது ஆங்கிலேய கம்பெனி.

நெல்லை சீமையில் வரி வசூரிக்கும் பணியை கிழக்கிந்திய கம்பெனியின் தளபதி மாக்ஸ்வெல் செய்து வந்தார். இவர் கட்டபொம்மனிடம் வரிக்கேட்க முடியாது என கட்டபொம்மன் சொன்னார். சொன்னதோடு நிற்காமல் துணைக்கு மற்ற பாளையக்காரர்களை கூட்டு சேர்த்தார். இதில் அதிருப்தியான ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி, வீரபாண்டிய கட்டபொம்மனை போருக்கு அழைத்தது.

1797ல் ஆலன்துரை என்கிற தளபதி பாஞ்சாலக்குறிச்சி மீது போர் தொடுத்தார். டச்சுக்காரர்கள் உதவி பெற்ற கட்டப்பொம்மன் ஆலன்துரையை எதிர்க்கொண்டதால் ஆங்கிலேயப்படை போரில் தோல்வி அடைந்ததால் நெல்லை மாவட்ட ஆட்சியராக இருந்த ஜாக்சன்துரை கட்டப்பொம்மனை தனது அலுவலகத்துக்கு அழைத்தார். அங்கு வந்த கட்டபொம்மனிடம் டச்சுக்காரர்களுடனான உறவை துண்டித்துக்கொள்ள வேண்டும்மென ஆங்கிலேய கலெக்டர் சொல்ல கட்டப்பொம்மன் மறுத்தார். இதில் கோபமான ஜாக்சன்துரை, கட்டபொம்மனை கைது செய்ய முயல அங்கிருந்து தப்பிய கட்டபொம்மன் தனது பாளையத்துக்கு வந்தார். பாளையத்தின் கோட்டை மீது 1799 செப்டம்பர் மாதம் போர் தொடுத்தனர் ஆங்கிலேயர்கள். டச்சுப்படை, கட்டபொம்மன் ஒரு கூட்டணியாகவும், ஆற்காடு நவாபு மற்றும் ஆங்கிலேயப்படை ஒரு தரப்பாக இருந்து மோதியது. அதில் கட்டபொம்மன் தோல்வியை எதிர்க்கொள்ள கைதில் இருந்து தப்பித்து ஓடி புதுக்கோட்டை மன்னரிடம் அடைக்கலம் புகுந்தார்.

புதுக்கோட்டை மன்னரிடம் ஆங்கிலேயர்கள் ரகசிய ஒப்பந்தம் போட்டுக்கொண்டனர். இதனால் அதே ஆண்டு அக்டோபர் மாதம் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாதன், கட்டபொம்மனை கைது செய்து ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தார். பதவியேற்றது முதல் கைதானது வரை 9 ஆண்டுகள் 8 மாதங்கள் மட்டும்மே பாளையக்காரராக இருந்தார் கட்டபொம்மன்.

அக்டோபர் 16ந்தேதி ஆங்கிலேய தளபதி பேனர்மேன் உத்தரவுப்படி கட்டபொம்மனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 39 வயதில் கயத்தாறு என்ற இடத்தில் இருந்த ஒரு புளியமரத்தில் தூக்குதண்டனையை நிறைவேற்றி கட்டபொம்மன் உயிரை ஆங்கிலேயர்கள் பறித்தனர். அதன்பின் அவரது தம்பிகள் கைது செய்யப்பட்டு தூக்குதண்டனை விதித்து நிறைவேற்றப்பட்டது. அதோடு, பாஞ்சாலங்குறிச்சி கோட்டை தரைமாட்டமாக்கி தங்களது கோபத்தை ஆங்கிலேயப்படை தீர்ததுக்கொண்டது. கட்டபொம்மன் புகழ்பாட கலைஞர் முதல்வராக இருந்த 1971ல் பஞ்சாலக்குறிச்சி கோட்டை மீண்டும் உருவாக்கம் செய்யப்பட்டது.

வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்றது. சுதந்திரத்துக்காக பாடுப்பட்டவர் வரிசையில் தமிழகத்தில் அவரை வைத்து கொண்டாடுகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக