புதன், ஜனவரி 05, 2022

தினம் ஒரு வரலாறு - ஜனவரி 5 – விடுதலை வீரர் வெ. துரையனார்

 



இந்தியாவின் சுந்திரத்துக்கு காந்தி மட்டும் தான் தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்து போராடுவாரா, நாங்கள் வந்து போராடமாட்டோம்மா என தமிழகத்துக்கு வந்து இந்தியாவின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து போராடியவர் துரைசாமி.

ஆங்கிலேயர்கள் 17 ஆம் நூற்றாண்டின் தமிழகம், ஆந்திராவின் பல குக்கிராமங்களில் இருந்து நல்ல வாழ்க்கை, ஏகப்பட்ட பணம், கல்வி என ஆசைகளை காட்டி ஏழை கூலி மக்களை இங்கிருந்து தென்னாப்பிரிக்காவுக்கு அழைத்து சென்றனர் ஆங்கிலேயர்கள். அப்படிச்சென்ற லட்சக்கணக்கான குடும்பங்களை சேர்ந்தவர்களில் ஒருவரின் வாரிசு வெங்கடாச்சலம்.

தென்னாப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்த வெங்கடாச்சலம் மொரீசியஸ்சில் வணிகம் செய்து வந்தார். இவரது மனைவி செல்லத்தாச்சி. இந்த தம்பதியரின் மகனாக ரூடிபோர்டு என்ற இடத்தில் 1891 மே 21ந்தேதி பிறந்தார் துரைசாமி.

குத்துச்சண்டை, கராத்தே உட்பட தற்காப்பு கலைகளை நன்கு கற்றுயிருந்தார் துரைசாமி.

தென்னாப்பிரிக்காவில் காந்தி நிறவெறிக்கு எதிராக போராட்டம் செய்தபோது துரைசாமியும் அந்தப்போராட்டத்தில் கலந்துக்கொண்டு சிறைச்சென்றார். அவருடன் காந்தியின் மகன் மணிலால்காந்தியும் சிறையில் இருந்தார். அந்த போராட்டத்தில் கலந்துக்கொண்டு அடையாள அட்டையை தீயிட்டு எரித்ததால் துரைசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை கிடைத்தது.  இது அவரது குடும்பத்தை வெகுவாக பாதித்தது. அதனால் மகனின் எதிர்காலம் கருத்தில் கொண்டு அவரது தாயாருடன் தமிழ் கற்றுக்கொள்ள என காரணம் கூறி தமிழகம் அனுப்பிவைக்கப்பட்டார்.

தமிழகம் வந்தவர் மறைமலை அடிகளாரிடம் தமிழ் கற்க மாணவராக சேர்ந்தார். சில மாதக்காலங்கள் அங்கு இருந்தவர் மறைமலை அடிகளாரிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரிடம்மிருந்து நின்றுவிட்டார். மறைமலை அடிகளாரிடம் மாணவராக சேர்ந்ததும் தனது பெயரை துரைசாமி என்பதை துரையனார் அடிகளார் என மாற்றிக்கொண்டார்.

தஞ்சை மண்டலத்தில் நடந்த பல்வேறு சுதந்தர போராட்டங்களில் கலந்துக்கொண்டார். கிலாபத் இயக்கம், தீண்டாமை, மதுவிலக்கு உட்பட பல போராட்டங்களில் கலந்துக்கொண்டு சிறை சென்றார். 1930ல் வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியகிரகத்தில் இவர் தலைமையில் ஒரு அணி கலந்துக்கொண்டது. ஆங்கிலேய காவல்துறை இவரை கைது செய்து சிறையில் அடைத்தது. இப்படி பலமுறை போராட்டம் நடத்தியதால் சிறைச்சென்ற வகையில் தமிழக சிறைகளில் 6 ஆண்டுகள் இருந்துள்ளார். இவர் சிறையில் இருந்த காலத்தில் 1932ல் இவரது மனைவி துளவியம்மாள் காலமானார். இந்த தம்பதியின் மகன்கள் திருச்சிற்றம்பலம், அருள்நந்திசெல்வம், திருநாவலர் காந்தி. மன்னிப்பு கடிதம் எழுதி தந்தால் சிறையில் இருந்து விடுதலை செய்கிறோம் என்றது ஆங்கிலேய அரசு, துரையனார் அடிகளார் மறுத்துவிட்டார். இதனால் அவரது மனைவிக்கு மகன்கள் தான் இறுதி காரியம் செய்தனர்.  அவர் சிறையில் இருந்து வெளியில் வரும் வரை துரையனாரின் நண்பர்கள் வீட்டில் பிள்ளைகள் தங்கியிருந்தனர்.

1936ல் தஞ்சை மண்டல காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். காங்கிரஸ் பணிகளை செய்த வந்தவர் தேர்தலிலும் போட்டியிட்டார். தான் வாழ்ந்த கும்பகோணம் நகராட்சிக்கு 1939ல் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் நகர மன்ற உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் பணியாற்றினார்.

காந்தியின் சீடராக காங்கிரஸ் கட்சியில் இயங்கியவர், பின்னர் அந்த கட்சியில் இருந்தாலும் சுதந்திரத்துக்கு பின்னர் தனது பணியை வெகுவாக குறைத்துக்கொண்டார். 1960ல் விடுதலைப்போராட்டத்தில் ஈடுப்பட்டு சிறைச்சென்று வந்தவர்களுக்கு மாநியமாக 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. முதலில் அதை வாங்க மறுத்த துரையனார் பின்னர் அதை வாங்கி மன்னார்குடி அடுத்த எடமேலையூர் கிராமத்தில் வசித்த ஏழை விவசாய கூலி மக்கள் 20 பேரை தேர்வு செய்து அவர்களில் 5 பேரை குலுக்கல் முறையில் பொதுவில் வைத்து தேர்வு செய்து தனக்கு தானமாக வழங்கப்பட்ட நிலத்தை ஏழை விவசாயிகளுக்கு தானமாக பத்திர பதிவு செய்து வைத்தார்.

பெரியார், காமராஜர், திரு.வி.க போன்ற தலைவர்களுடன் நெருக்கமாக இருந்தார் துரையரசன் அடிகளார். திருவியன் மதியன் என்கிற நூலை எழுதியுள்ளார், திராவிட தமிழர்களின் பண்டைய கால வரலாறு, தன் வாழ்க்கை வரலாறு நூல்களை எழுதி வெளிவந்துள்ளது. தனது 82வது வயதில் 1973 ஜனவரி 5ந்தேதி மறைந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக