விஸ்வரூபம் இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்துகிறது என இஸ்லாமிய இயக்கங்கள் வைத்த கோரிக்கையை ஏற்று அதற்கு தடைப்போட அதில் நடந்த ‘யுத்தத்தில்’ தான் இஸ்லாமியர்களின் நண்பன் என காட்டிக்கொண்டார்.
யுத்தம் என ஒன்று நடந்தால் மக்கள் சாகத்தான் செய்வார்கள், பிரபாகரன் தீவிரவாதி, தமிழீழம் என பேசுவது தவறு என வர்ணித்த ஜெ இன்று தமிழீழத்துக்கு ஆதரவாகவும், படுகொலை செய்யப்பட்ட பிரபாகனின் இளைய மகனுக்காக மனம் நொந்தேன் என அறிக்கை விடுகிறார்.
காவிரி நிதிநீர் ஆணைய தீர்ப்பை அரசிதழில் வெளிவந்ததும் தன்னால் மட்டும்மே அது நடைபெற்றது என விளம்பரப்படுத்திக்கொண்டு வருகிறார். 31 மாவட்ட விவசாயிகளுக்கு நஸ்டயீடு அறிவித்துள்ளார்.
தரம் தாழ்ந்து ஜெவை ஆதரித்த வை.கோ வை சட்டமன்ற தேர்தலின் போது கூட்டணியில் இருந்து துரத்தினார். அதே ஜெயலலிதா, மது ஒழிப்புக்காக வை.கோ நடைப்பயணம் வருவதை கண்டு தன் வாகனத்தை நிறுத்தி இறங்கி நலம் விசாரித்தார்.
விலைவாசி உயர்வால் தமிழகம் முழுவதும்மே பாதிக்கப்படுகிறார்கள் மக்கள். விலைவாசியை குறைத்தால் எல்லா தரப்பு மக்களும்மே பயன்பெறுவார்கள். ஆனால் அப்படி செய்யாமல் குறைந்த விலை சாப்பாடு போட்டு அடிதட்டு மக்கள் மனதில் இடம் பிடிக்க முயல்கிறார்.
சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடுகள் மூலம் அமெரிக்க கம்பெனிகளை அனுமதிப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஹிலாரிகிளிண்டனுடனுக்கு வாக்குறுதி தந்தார் ஜெ. வணிகர்கள் பிரச்சனை பெருசானதும் அவர்களுக்கு சாதகமாக இருப்பதாக காட்ட சென்னையில் வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனம் விதிமுறையை மீறி கட்டிடம் கட்டியதாக அதிகாரிகள் மூலம் தடை போட்டுள்ளார்.இப்படி வாய்ப்பு கிடைக்கும் போதுயெல்லாம் தன்னை சேவகியாக நிலை நிறுத்திக்கொள்ள முயல்கிறார் முதல்வராக உள்ள ஜெ.
அதேபோல் ஆட்சியின் குறைகளாக சுட்டிக்காட்டுப்படும் 18 மணி நேர மின்சார வெட்டு, விலைவாசி உயர்வு, அமைச்சர்கள் செய்யும் ஊழல் என எதைப்பற்றி எழுதினாலும், எதிர்கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்வதை வெளியிட்டாலும் வழக்கு போட்டு சம்மந்தப்பட்ட செய்தித்தாள், மீடியா நிர்வாகத்தை மிரட்ட தொடங்கியுள்ளார். குறைகளை சுட்டிக்காட்ட கூடாது என்பதே இதன் நோக்கம்.
இதற்கெல்லாம் காரணம் ?. 2014 பாராளமன்ற தேர்தல்.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதி, பாண்டிச்சேரியில் உள்ள 1 தொகுதி என 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என எண்ணுகிறார். அதற்காக என்னன்ன செய்ய வேண்டும்மோ அதனையெல்லாம் செய்ய நினைக்கிறார். தன் பிடிவாத குணத்தை விட்டு இறங்கி வருகிறார், அவரின் ‘கொள்கைகளை’ மாற்றிக்கொள்கிறார். அவர் எதிரியாக நினைக்கும் அரசு ஊழியர்களுடன் கை குலுக்குகிறார். வலிமையான கூட்டணி அமைக்க முயல்கிறார்.
நாற்பதுக்கும் நாற்பது பெற்றால் பிரதமராகி விடுவாரா ?, பிரதமராகத்தான் ஜெ இதனை செய்கிறாறா ? என கேட்டால் இல்லை என ஒரே வார்த்தையில் சொல்லிவிடலாம்.
பின் எதற்காக ?.
ஜெ தன்னை பாப்பாத்தி என தன்னை பிரகடனப்படுத்தியவராக இருந்தாலும் வடஇந்திய அரசியலில் ஜெ வால் ஜொலிக்க முடியாது. காரணம் அவர் தென்னிந்தியர், தேசிய அரசியலுக்கான தகுதியுடைய தலைவி கிடையாது, யாராலும் சுலபமாக சந்திக்க முடியாத, அவசர கோலத்தில் முடிவு எடுக்கும் விவேகி. தன்னால் பிரதமராக முடியாது என்பது அவருக்கும் தெரியும்.
பின் ஏன் அவர் நாற்பதுக்கும் நாற்பது ஆசைப்படுகிறார்?. என் யூகம் சரியாக இருக்கும் என்றால் ஒன்றே ஒன்றுத்தான் அது பெங்களுரூவில் நடக்கும் சொத்து குவிப்பு வழக்கு. 91-96 ஆட்சி காலத்தில் ஜெ அளவுக்கு அதிகமாக சொத்து குவித்துள்ளார் என்பதை ஆதாரங்களுடன் 1996ல் திமுக ஆட்சியின் போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த வழக்கு அத்தனை வலிமையாக உள்ளது என்பதை நன்கறிந்துள்ளார் ஜெ. அதனால் தான் அந்த வழக்கை முடக்க கோரிக்கை வைக்கப்பட்டு அது எடுபடாமல் போனதால் மத்திய அரசை கவிழ்த்தார். 2001ல் முதல்வாரன பின் எவ்வளவோ முயன்றும் திமுக போட்ட முட்டுக்கட்டைகளால் அவரால் வழக்கை நீர்த்து போக செய்ய முடியவில்லை. அந்த வழக்கு மூன்றாவது முறையாக முதல்வராகியுள்ள ஜெயலலிதாவை மிரட்டுகிறது.
கடந்த 17 ஆண்டுகளாக அந்த வழக்கில் பலப்பலலலலலலலலலலலலல வாய்தாக்கள், இழுத்தடிப்புக்கள், நீதிபதிகள் மீது சந்தேகங்கள், குற்றச்சாட்டுகள் எழுப்புவவது, உச்ச நீதிமன்ற கண்டனங்கள் என வாங்கியும் அசராமல் திரும்ப திரும்ப ‘நீதியின் கதவை உடைக்க உதைக்கிறார்கள்’ ஜெ வின் வழக்கறிஞர்கள். ஆனால் கதவு உடைந்தபாடில்லை. அந்த வழக்கு இறுதி கட்டத்துக்கு வந்துள்ளது. பாராளமன்ற தேர்தல் வரை வழக்கை இழுத்தடிக்க நினைக்கிறார்.
வரும் பாராளமன்ற தேர்தலில் யாருக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காது. 40க்கும் 40 வென்றால் மைனாரிட்டி பாராளமன்றம் அமையும் போது 40 எம்.பிக்களை வைத்துள்ள தான் மத்திய அரசில் அசைக்க முடியாத சக்தியாக மாற முடியும் அதைக்கொண்டு பிரதமரை தேர்வு செய்யும் நபராக இருந்து சொத்து குவிப்பு வழக்கை முடித்துக்கொள்வது. அப்படியில்லை எனில் தன் சகாவான பி.ஜே.பி நரேந்திரமோடி பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் தான் தமிழகத்தில் வெல்லும் எம்.பிக்களை மோடியை ஆதரிக்க வைத்து தன் மீதான வழக்கை ‘நல்லபடியாக’ முடித்துக்கொள்வார்.
அந்த திட்டத்திற்காகத்தான் அவர் எம்.பி தேர்தலில் இத்தனை கவனம் செலுத்துகிறார். இதில் வெல்ல ஜெ எந்த அளவுக்கும் இறங்குவார். முதலில் குறிப்பிட்டதைப்போன்று மக்கள் மனதில் இடம் பிடிக்க முயன்று முடியாமல் போனால் அரசு மீதான அதிருப்தியை போக்கிக்கொள்ள கடைசி கட்ட ஆயுதமாக பூரண மதுவிலக்கு கொண்டு வந்து தாய்மார்கள் வாக்கை பெறவும் முயல்வார்.