தருமபுரி மாவட்டம் அரூர்க்கு அருகில் உள்ள மலைவாழ் கிராமம் வாச்சாத்தி. 300 குடும்பங்களை கொண்ட பழங்குடியினர். இவர்களின் தொழில் காடுகளில் உள்ள சின்ன சின்ன மரங்களை வெட்டி அதை டவுன் போன்ற பகுதிகளில் கொண்டு வந்து விற்று ஜீவணம் செய்வது. விவசாய வேலை செய்வது, ஆடமாடுகளை கொண்டு ஜீவனம் செய்வது தான் இந்த கிராம மக்களின் நிலையே.
1990கள் வரை செல்வம் கொட்டி தரும் விலை உயர்ந்த மரங்கள் அதிகம் மேற்கு தொடர்ச்சி மலையில் உண்டு. அப்படித்தான் வாச்சாத்தி மலைவாழ் கிராமத்தின் மேற்கே அமைந்துள்ள சித்தேரி மலையில் அடர்ந்த காட்டில் சந்தனமரங்கள் ஆயிரக்கணக்கில் இருந்தன. இதனை அதிகார வர்க்கத்தின் ஆசி பெற்ற மரக்கடத்தல் கும்பல் சந்தன மரங்களை வெட்டி கடத்தின. இந்த கும்பல் மரங்களை வெட்ட வாச்சாத்தி கிராம மக்களை பயன்படுத்திக்கொண்டன. வுறுமையில் இருந்த மக்கள் மரம் வெட்டி தந்தால் பணம் கிடைக்கிறதே அதுவும் தினக்கூலியை விட அதிகமாக ஒருநாளைக்கு 100 ரூபாய் கிடைக்கிறதே என அம்மக்கள் மரங்களை வெட்டி தந்தனர். அந்த மரங்கள் வனத்துறை அதிகாரிகள் ஆசியோடு செக்போஸ்ட்டுகள் தாண்டி நகரங்களுக்குள் போய்விடும். காவல்துறையும் இதை கண்டுக்கொள்ளாது.
அரசுக்கு கணக்கு காட்ட அடிக்கடி கட்டை கடத்துபவர்களை பிடிக்கிறோம் என்ற போர்வையில் மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு போகும் வனத்துறை காவலர்கள், அதிகாரிகள் வனத்துறை இல்லங்களில் தங்கிக்கொண்டு மது, மான்-உடும்பு கறியை உண்டுவிட்டு தங்களது காம வெறியை தீர்த்துக்கொள்ள மலையில் வாழும் படிப்பறிவில்லாத, உலகம் அறியாத இளம் பெண்களை பலாத்காரமாக இழுத்து வந்து அறையில் வைத்து வேட்டையாட தொடங்கினர். இதை எதிர்த்து கேள்வி கேட்டவர்கள் ஒன்று இறந்து போய் கிடப்பார்கள் அ மரம் கடத்தினான் என சிறையில் இருப்பார்கள். உயிருக்கும், மானத்துக்கும் பயந்து அம்மக்கள் இதனை வெளியே சொல்லாமல் மவுனம் காத்துவந்தனர்.
1990களில் வீரப்பன் விவகாரம் தருமபுரி, கோயம்பத்தூர், ஈரோடு பகுதிகளில் பெரிய விவகாரமாகிறது. சந்தன மரக்கடத்தல் விவகாரம் பெரிய அளவில் மலைவாழ் மக்கள் தான் என்கிறார்கள். அவர்கள் ஆசியோடு மரம் கடத்தப்படுவதால் எங்களால் இதை தடுக்க முடியவில்லை என அரசுக்கு அறிக்கை தருகிறார்கள். இது உண்மையா? பொய்யா என அரசு ஆராயவில்லை. அப்படி ஆராய்ந்திருந்தால் அம்மக்கள் எதனால் அவ்வாறு செய்கிறார்கள் என அரசு யோசித்து அவர்களை திருத்த நடடிவக்கை எடுத்திருக்கும். அப்போதுயிருந்த ஜெ தலைமையிலான அதிமுக அரசு அதிகாரிகள் சொல்வதை அப்படியே நம்பியது.
தாங்கள் தப்பித்துக்கொள்ள இதற்கெல்லாம் காரணம், மலைவாழ் மக்கள் மீது குற்றம் சாட்டிக்கொண்டுயிருந்தார்கள். அப்படிப்பட்ட கிராமங்களுக்கு சென்று ரெய்டு செய்து கைது செய்ய கூட்டுக்குழு அமைக்கப்படுகிறது. அப்போது தான் அரசுக்கு வாச்சாத்தி மலைவாழ் மக்கள் குற்றவாளிகள் எனக்கூறினர். அதிகார வர்க்கத்தின் பார்வையின் கொடூரம் 1992 ஜீன் 20ந்தேதி வெளிக்காட்டினார்கள். வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறையினர். அதன் ரணம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு இருந்தது என்பதை விசாரணையின் போது உணர்ந்தது உலகம்.
அன்றைய தருமபுரி மாவட்ட ஆட்சியரான தசரதன்க்கு வாச்சாத்தி மக்கள் சந்தன மரங்களை வெட்டி தங்களது வீடுகளில் பதுக்கி வைத்துள்ளார்கள் என்ற தகவல் போகிறது. அவர் உடனே அதுப்பற்றி அப்போதைய தருமபுரி காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த ராமானுஜத்திடம் தகவல் தெரிவிக்கிறார். வனத்துறையை சேர்ந்தவர்கள் 155பேர், காவல்துறையை சேர்ந்தவர்கள் 108பேர், வருவாய்த்துறையை சார்ந்த 6பேர் கொண்ட படை என அந்த கிராமத்தை நோக்கி செல்கிறது. இத்தகவல் தெரிந்து ஆண்கள், பெண்கள் என 90 சதவிதம் மக்கள் வீட்டை விட்டு மலைகளில் போய் தஞ்சம் அடைகின்றனர்.
ரெய்டு என்ற பெயரில் வீட்டுக்குள் இருந்த பொருட்கள் தெருவுக்கு வந்தன. வீட்டில் இருந்த இளம் பெண்களை காம வெறி பிடித்த வேட்டை நாய்களான வனத்துறை, காவல்துறையில் இருந்த சிலர் தூக்கிக்கொண்டு போய் ஊரின் குளக்கரையில் வைத்து வைத்து கடித்து குதறினர். அவர்கள் கதறிய கதறல் அந்த மலைகளின் பாறைகளில் பட்டு அங்கிருந்த பறவைகள், மான்கள், புலிகள் கூட தரிக்கெட்டு ஓடியிருக்கும். ஆனால் இந்த வெறி நாய்களின் காதுகள் மட்டும் செவிடாகவேயிருந்தன. குழந்தை முகம் மாறாத, பிஞ்சி மார்புகளை கொண்ட 13, 16 வயது பெண்களை கூட மார்கழி நாய்கள் போல் கூட்டமாக சீரழித்து விட்டு 90 பெண்கள், 15 முதியவர்கள், 28 சிறுவர்களை கைது செய்து இவர்கள் சந்தன கட்டைகளை மறைத்து வைத்திருந்தார்கள், அரசு பணி செய்ய விடாமல் தடுத்தார்கள் என வழக்கு பதிவு செய்து சிறைக்கு அனுப்பியது.
இந்த விவகாரம் மலைவாழ் மக்கள் சங்கம், கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு தெரியவந்து அவர்கள் இந்த விவகாரத்தை கையில் எடுத்தனர். 1992 ஜீன் 22ந்தேதி, அரூர் காவல்நிலையத்தில் புகார் தந்தனர். அவர்கள் அதை வாங்கி குப்பை தொட்டியில் கிழித்து போட்டனர். உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்க்கு இதை கொண்டு சென்றனர். நடந்தது என்ன என அன்றைய ஜெயலலிதா அரசிடம் அறிக்கை கேட்டது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி நல ஆணைய தென்மண்டல தலைவி பாபதியும் விசாரணை செய்து அந்த கொடூரத்தை பதிவு செய்து உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தந்தனர். அறிக்கையை படித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் உடனே வழக்கு பதிவு செய்ய வேண்டும்மென உத்தரவிட்டது.
அதன்படி தமிழ்நாடு காவல்துறை வழக்கு பதிவு செய்து தங்களது சகாக்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மிரட்ட தொடங்கினர். இதனால் வழக்கு 1996ல் சி.பி.ஐ விசாரிக்க தொடங்கியது. தங்களை கற்பழித்த கயவர்களை 18 பெண்கள் அடையாளம் காட்டினர். கயவர்களான காவல்துறை, வனத்துறை, வருவாய்துறையை சார்ந்த 269பேரை குற்றவளியாக்கி வழக்கை தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சி.பி.ஐ நடத்த தொடங்கின. முதல் 155 பேர் வனத்துறையை சார்ந்தவர்கள், 156 முதல் 263 வரை காவல்துறையை சார்ந்தவர்கள், 264 முதல் 269 வரை இருப்பவர்கள் வருவாய்துறையை சார்ந்தவர்கள் என 269 பேர் மீது வழக்கு நடந்தது. விசாரணையில் இருக்கும் போது பல குறுக்கீடுகள், இழுத்தடிப்புகள் எனச்சென்றது. வழக்கு நடக்கும்போதே 53பேர் இறந்துவிட்டதால் 213 பேர் நீதிமன்றத்துக்கு வந்தனர்.
19 வருடங்களாக வாச்சாத்தி மக்கள், பல்வேறு மனித உரிமை ஆர்வலர்கள் காத்திருந்தனர். கடைசியில் 2011 செப்டம்பர் 29ந்தேதியன்று தருமபுரி மாவட்ட நீதிபதி குமரகுரு தீர்ப்பு தந்தார். குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள். அதில் கற்பழிப்பில் ஈடுபட்ட 12 பேருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல்தண்டனை, 3 ஆயிரம் அபராதம், வன்கொடுமையில் ஈடுபட்ட 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. மற்றவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கும் கீழே தண்டனை தரப்பட்டுள்ளது.
நீண்ட ஆண்டுகள் பொருத்து கிடைத்த நீதிதான். ஆனாலும் இதில் பாதிக்கப்பட்ட மக்கள் படும் மனவேதனைக்கு இது ஒத்தடம் தானே தவிர மருந்தல்ல. . . . .