செவ்வாய், செப்டம்பர் 06, 2011

தக்க தய்ய தய்ய தய்யா தய்யா. . . ஊட்டி மலை இரயில் முடிவு.



தக்க தய்ய தய்ய தய்யா தய்யா. . . தக்க தய்ய தய்ய தய்யா தய்யா . . . . ஊட்டி போக விருப்பப்படும் ஹனிமுன் ஜோடிகளாகட்டும், பெருசுகளாகட்டும், விட்டில் உள்ள குட்டீஸ்கள் முதல் பெருசுகள் வரை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி போக விருப்பப்படுவது இரயில் பயணத்தில் தான். டிக்கட் கிடைக்கவில்லை என்றாலும் நாள்கணக்கில் காத்திருந்து டிக்கட் பெற்றுக்கொண்டு ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் எத்தனை எத்தனையோ சுற்றுலா பயணிகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உண்டு.

1800களில் பிரிட்டிஸ் அதிகாரிகள் குளு குளு ஊட்டியில் ஓய்வு எடுக்க செல்வதற்காகவும், இயற்கை எழிலை ரசித்துக்கொண்டே மலையேறவும் இந்த இருப்புபாதை அமைக்க முடிவு செய்தனர். பாதை அமைப்பதற்கான ஆய்வை செய்யுமாறு ஆங்கிலேய பொறியாளர் ஜே.எல்.எல். மோரன்ட்டிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் ஆய்வு மேற்க்கொண்டு ரயில்பாதை அமைக்கலாம் என ஒப்புதல் தந்தார். 1854ல் பணிகள் தொடங்கின. ஆனால் மலைப்பாதை என்பதால் சிரமத்தை சந்தித்தனர். இதனால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. பின் மீண்டும் ஆய்வு செய்து 108 வளைவுகள், 250 பாலங்கள் அமைக்கப்பட்டு மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை இருப்புப்பாதை அமைக்கப்பட்டது. இதனை 11 ஆகஸ்ட் 1898ல் சென்னை கவர்னர் தொடங்கிவைத்து பயணம் செய்தார். அதன்பின் இந்த பாதை அதாவது 1909ல் ஊட்டி வரை பாதை நீட்டிக்கப்பட்டு இன்று வரை இந்த பாதையில் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் பிரபலம் வாய்ந்த டார்ஜிலிங், சிம்லா, மாதேரன் மலை ரயில்பாதையை போன்று இதற்க்கும் வரலாற்றில் இடம்முண்டு. அதோடு உலகில் பற்சக்கரத்தில் இயக்கப்படும் ரயில் சேவை இதுமட்டுமே. இந்த ரயில்பாதையைப்பற்றி இந்தியன் இரயில்வே நிர்வாகம் மற்றும் புதுடெல்லியில் உள்ள இரயில்வே அருங்காட்சியகம் பண்பாட்டு ரீதியான, பழமையான சின்னங்களை அங்கீகரிக்கும் ஐ.நாவின் யுனஸ்கோ அமைப்புக்கு தெரியப்படுத்த சிட்னியை சேர்ந்த பேராசிரியர் ராபர்ட் லீ தலைமையில் ஒரு குழு இந்த பாதையில் ஆய்வு மேற்க்கொண்டு உலக பாரம்பரிய சின்னம் என 2004ல் அறிவித்தது.

மேட்டுப்பாளையம் டூ ஊட்டிக்கு 49கி.மீ. இந்த தூரத்தை 4 மணிநேரம் பயணம் செய்து கடக்கிறது இந்த நீராவி எஞ்சின் பொருத்தப்பட்ட இரயில். கரும் புகையை கக்கியபடி இது ஊர்ந்து செல்லும் அழகே தனி. இந்த 43கி.மீ தூர இடைவெளியில் பெருசுகள் கண்டுகளிக்க இயற்கை எழில் கொஞ்சும் மலை மற்றும் வனப்பகுதிகள், வாண்டுகள் குதுகலிக்க மான், குரங்கு, யானை போன்ற விலங்குள், காதல் ஜோடிகளும், ஹனிமூன் தம்பதிகள் கிச் கிச் மூட்டிக்கொள்ள 16 இருட்டானா சுரங்கங்கள் அ குகைகளும் கொண்ட பாதையாக இந்த ரயில்பாதையுள்ளது. பாரம்பரியமான இந்த ரயில் நிலக்கரியில் இயக்கப்படுகிறது. மணிக்கு 13கி.மீ வேகத்தில் மலையேறும் இந்த இரயில் மேட்டுப்பாளையம் முதல் ஊட்டிக்கு இடையே 10 நிறுத்தங்களில் நின்று செல்கிறது.

இந்த பாரம்பரியமான இரயிலை தான் நிறுத்தும் முடிவில் உள்ளது தென்னக இரயில்வே நிர்வாகம். ஏன் ?

தற்போது 3 பெட்டிகளை கொண்டு தினமும் இரண்டு முறை மட்டுமே இயக்கப்படும் இந்த இரயிலால் நிர்வாகத்துக்கு வருமானம் இல்லையாம். அதோடு இப்பாதையில் அடிக்கடி மண் சரிவு ஏற்பட்டு இருப்பு பாதையில் பாறைகள் உருண்டு வந்து விழுந்துவிடுவதால் அடிக்கடி ரயில் சேவை பாதிக்கப்படுகின்றன. இதனை சரி செய்வதற்க்கு நிர்வாகத்திற்க்கு அதிகமான சிரமமும், செலவும் ஏற்படுகிறதாம். அதோடு இரயிலை இயக்க தேவைப்படும் எரிவாயு கிடைப்பதில் சிரமம் ஏற்படுவதால் இதனை நிறுத்தப்போவதாக அறிவிக்கவுள்ளது தென்னக ரயில்வே.

இன்றைய யுகத்தில் இந்திய அதிகார வர்க்கத்திற்க்கு பணம் தானே பிரதானம். கலையும், பண்பாடும், பாரம்பரியமும் எதற்க்கும் உதவாது என எண்ணி உலக பாரம்பரிய சின்னம் என அறிவிக்கப்பட்ட இந்த இரயில் சேவையை நிறுத்த முயல்கின்றனர். அரசியல்வாதிகள் இதை கண்டுக்கொள்ள மாட்டார்கள். மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் குரலே இதை தடுக்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக