சென்ட்ரல் பீரோ ஆப் இன்வஸ்டிகேஷன். தமிழில் மத்திய புலனாய்வு அமைப்பு. தன்னிச்சையான, சுதந்திரமான அமைப்பு. மத்திய உள்துறை கட்டுப்பாட்டில் உள்ள அமைப்பு. சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் எங்களுக்கு யாரும் உத்தரவிடமுடியாது. நாங்கள் முடிவு செய்தது செய்தது தான் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை விசாரிக்கவே முடியாது என கூறியது தான் அதன் மீதான நம்பகதன்மையை சுத்தமாக இழக்க வைத்துவிட்டது.
2ஜி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தன்னை ஒரு வாதியாக இணைத்துக்கொண்ட சுப்பிரமணியசாமி, 2ஜி ஊழலில் உள்துறை அமைச்சர் சிதம்பரத்திற்க்கும் பங்குள்ளது என குற்றம்சாட்டி சில ஆதாரங்களை எடுத்து தந்துள்ளார். இதனை விசாரிக்கச்சொல்லி உச்சநீதிமன்றம் கூறியபோது, அவரை விசாரிக்க எந்த முகாந்திரமும்மில்லை அதனால் அவரை விசாரிக்க முடியாது என ஒரே போடாக போட்டுவிட்டது. உள்துறை கட்டுப்பாட்டில் உள்ள சி.பி.ஐ. இந்த பதில் இந்தியாவில் விவாதத்தை உருவாக்கியுள்ளது. இதில் விவாதம் நடத்த ஒன்றுமேயில்லை.
1941ல் ஸ்பெஷல் போலிஸ் விங் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் செயல்பாட்டில் திருப்தியில்லாததால் சில மாற்றங்கள் செய்து 1963ல் சி.பி.ஐயாக உருமாற்றம் செய்யப்பட்டு செயல்பட தொடங்கியது. இதனை கோஹலி என்ற ஐ.பி.எஸ் ஆபிஸர் நிறுவினார். இவரின் சட்டத்திட்டமே இன்றும் செயல்பாட்டில் உள்ளது. இதன் இயக்குநர்களாக இந்திய காவல் பணியில் உள்ள அதிகாரிகளே இருப்பார்கள். அதுவும் இரண்டு ஆண்டு பணியாக. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் ஊழல், அதிகாரிகள் ஊழல், லஞ்ச அதிகாரிகள், முக்கிய பிரமுகர்களின் கொலை, வங்கி, வணிக நிறுவனங்களின் ஊழல், திருட்டு, கொள்ளை போன்றவற்றை விசாரணை செய்யும் அமைப்பு. வெளிநாடுகளுடன் தொடர்பு கொள்ளும் அரசின் அங்கீகாரம் பெற்ற வெளிப்படையான புலனாய்வு அமைப்பு. இதற்கென தனி அகடாமியும் உள்ளது.
ஆனால் காலங்காலமாக இது ஆளுங்கட்சியின் கை பொம்மை என்ற விமர்சனத்தை மட்டும் துடைக்க பாடுபடவில்லை. காரணம் அந்த கூற்றில் உள்ள உண்மையால். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜிவ்காந்தி பிரதமராக இருந்தபோது, இராணுவத்திற்க்கு போபர்ஸ் பீரங்கி வாங்கியதில் ராஜிவ்காந்தி ஊழல் செய்தார் என்ற குற்றச்சாட்டு பூதாகரமாக எழுந்தது. அதனை சி.பி.ஐ விசாரித்தது. ராஜிவ்காந்தி இறந்தபின்பும் அந்த வழக்கு நடந்தது. தற்போது 1 ஆண்டுக்கு முன் குற்றத்தை நிருபிக்காமல் வழக்கு நடக்கும்போதே ஏஜென்ட் குவரோத்சியை தப்பவிட்டு வழக்கை முடியாது, போபால் விஷவாயு வழக்கை இழுத்து மூடி அதன் முதலாளிகளுக்கு விசுவாசமாக நடந்துக்கொண்டது இதே சி.பி.ஐ.
அதேபோல், பி.ஜே.பி ஆட்சிகாலத்தில் சவப்பெட்டி, ஆயுதம் வாங்கியதில் பி.ஜே.பி தலைவர்கள் லஞ்சம், கமிஷன் வாங்கியதை தெஹல்கா என்ற இணையதள இதழ் வீடியோ பதிவாக வெளிச்சம் போட்டு காட்டின. வழக்கு சி.பி.ஐக்கு போனது. பி.ஜே.பியின் வழிகாட்டலில் அந்த நிறுவனத்தையே சின்னபின்னமாக்கியது சி.பி.ஐ.
நமக்கு ரொம்ப பரிச்சயமான 2ஜி வழக்கை எடுத்துக்கொள்வோம். திமுகவை சேர்ந்த எம்.பிக்களான ராசா, கனிமொழி கைது செய்து சிறையில் தள்ளிவிட்டு அதன்பின் ஆதாரங்களை திரட்டிய சி.பி.ஐ தயாநிதிமாறன், காங்கிரஸ் அமைச்சர் சிதம்பரம், காங்கிரஸ் சார்பு தொழிலதிபர்கள் ரத்தன்டாடா, அம்பானிபிரதர்ஸ், மிட்டல்களை விசாரிக்கவே மாட்டேன் என்கிறது. அவர்களை விசாரிக்க சொல்லி மீடியா, நீதிமன்றம் கூறும்போது கண்ணை மூடிக்கொள்கிறது, காதை அடைத்துக்கொள்கிறது.
காமன்வெல்த் ஊழலில், காங்கிரஸ்சின் பெரிய தலைவரான சுரேஷ்கல்மாடியை, அதற்க்கு துணை போன மத்திய காங்கிரஸ் அரசின் அதிகாரிகளை ஒப்புக்கு விசாரித்தது. கல்மாடி மட்டும் சிறையில் உள்ளார். இப்போது அப்படியொரு வழக்கு இருக்கிறதா என்பதே தெரியாத அளவுக்கு உள்ளது. அதேபோல் ஆதார்ஷ் வீடு கட்டும் திட்ட விசாரணை எப்படி நடக்கிறதா? இல்லையா என்பதே சந்தேகமாக உள்ளது.
இப்படி ஆரம்பம் காலம்தொட்டே வெளிப்படையாக மத்திய ஆளும் கட்சியின் துணை அமைப்பாக கருமமே கண்ணாக இருப்பதால் தான் ஆளும்கட்சியின் கைபொம்மை என்கிறார்கள்.
இதை சி.பி.ஐயால் மறுக்க முடியுமா ?. முடியவே முடியாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக