செவ்வாய், மே 20, 2014

பயில்வான் மோடியும் - பதவிக்கு வர உழைத்த நண்பர்களும்.


இந்தியாவை காக்க வந்த நவயுக நாயகன் என கார்ப்பரேட் கம்பெனிகளால் வர்ணிக்கப்பட்ட ஊதி பெரிதாக்கப்பட்ட பி.ஜே.பியை சேர்ந்த குஜராத்தின் முதல்வர் நரேந்திரமோடியால் குஜராத் வளர்ந்தது என்ற வளர்ச்சி விளம்பரங்கள் பலூனாக உள்ளது. அந்த பலூன்கள் பலமுறை உடைக்கப்பட்டும் கமர்சியல் ஹீரோவாக வடிவமைக்கப்பட்ட மோடியின் புகழ் இந்தியாவின் அனைத்து தர மக்களிடம் போய் சேர்ந்தது. பேரன்லவ்லி விளம்பரம் போல. வெற்றி பெற்றுவிட்டார். இந்தியாவின் பிரதமராக்கப்பட்டுள்ளார். கார்ப்பரேட் கம்பெனிகளும், ஊடகங்களும் கோயாபல்ஸ் பிரச்சாரத்தில் ஒருவரை உச்சாணிக்கொம்பில் உட்கார வைத்துவிட்டது. இனிதான் மோடிக்கு பிரச்சனையே. இரண்டு தரப்புமே தங்களுக்கான தேவை தீர்ந்ததும் தூக்கி எரிந்துவிடும் மாற்று நபரை தேடத்தொடங்கிவிடும். இருக்கட்டும் அதை பிறகு பார்க்கலாம்.

மோடியின் வெற்றிக்கு பின்னால் பல்லாயிரம் கோடி பணம், வர்த்தகம் இருந்தாலும் அவரது வெற்றிக்கு கடுமையாக உழைத்தவர்கள் மோடியை செதுக்கியது இந்துத்துவா அமைப்புகள், அரசியல், கார்ப்பரேட் நண்பர்கள். மீடியா.

மோடி ஆர்.எஸ்.எஸ்சின் வளர்ப்பு பிள்ளை. ஆர்.எஸ்.எஸ் ?.

இந்தியாவில் நடந்த பிரிட்டிஷாரின் காலணி ஆட்சியை எதிர்த்து சுதந்திரத்துக்காக காங்கிரஸ் போராட தொடங்கியபோது இந்து – முஸ்லிம் தலைவர்கள் காங்கிரஸ் என்ற இயக்கத்தில் இருந்தனர். பிரிட்டிஷ் ஏகாதியபத்தியம் மத ரீதியாக மக்களை பிரித்தால் தான் இந்தியாவை ஆள முடியும் என்ற திட்டத்தில் சுதந்திரத்துக்காக போராடிய காங்கிரஸ்சில் குழப்பத்தை உருவாக்கினர்.

காங்கிரஸ்சில் பிராமணர்களின் ஆதிக்கம் அதிகம். தலைமை பொறுப்பில் அவர்கள் தான் இருந்தனர். இவர்கள் பாரதத்தை இந்து தேசமாக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தனர். இதனை முஸ்லிம்கள் எதிர்த்தனர். இது தேவையற்ற பிரச்சனை என சில பிராமண தலைவர்கள் சமாதானம் செய்தனர். அதாவது மிதவாத, தீவிர இந்துத்துவாவாதிகள் காங்கிரஸ்சில் இரு பிரிவு இருந்தது. தீவிர இந்துத்துவாவாதிகள் ஆதிக்கம் அதிகரித்தது காங்கிரஸ்சில் பிரச்சனையானது.

1910ல் இந்து மகா சபை ஆரம்பிக்கப்படுகிறது. இந்து தேசியம் என முதலில் பேசியவர்கள் இவர்கள் தான். அதன்பின் தான் முஸ்லிம் தலைவர்கள் தனி நாடு கோரினர். 1925ல் ஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்பு கேசவ பலிராம் ஹெட்கேவார் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில் அவர் இறந்ததால் இரண்டாவது தலைவர் கோல்வால்கர். மதுகர் தேவராஸ் மூன்றாவது தலைவர். மராட்டிய பிராமண உள்சாதியான சித்பவன் பிரிவை சார்ந்தவர்கள் தான் இந்த அமைப்புகளை தொடங்கி நடத்தியவர்கள். மராட்டிய மண்ணில் தொடங்கப்பட்டாலும் ஆலமர வேர்களை போல தேசமெங்கும் பரபப்பட்டது இந்த இயக்கங்கள்.

அந்த இயக்கத்தின் ஒரு விழுது தான் நரேந்திரமோடி.

குஜராத்தின் மேஹ்சானா மாவட்டத்திலுள்ள வட்நகர் கிராமத்தில் 1950ல் பிறந்தவர் நரேந்திரமோடி. மோடியின் அப்பா தாமோதர்தாஸ் முல்சந்த் இரயில்வே ஸ்டேஷனில் டீ கடை வைத்திருந்தார். மேல்நிலைப்பள்ளி படிப்பு முடிந்து குஜராத் பல்கலைகழகத்தில் அரசியல் அறிவியல் பட்ட படிப்பில் சேருவதற்க்கு முன்பே ஆர்.எஸ்.எஸ்சின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி (அகிலபாரத வித்யார்த்தி பரிஷத்) அமைப்பில் இணைந்திருந்தார். அந்த அமைப்பின் தலைவர் பொறுப்பு மோடிக்கு தரப்பட்டது. தங்களது டீ கடையில் வேலை பார்த்தவருக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறது. மனைவியை துரத்திவிட்டுவிட்டு “தனியாக“ வாழ தொடங்கினார்.

தீவிர ஆர்.எஸ்.எஸ் ஊழியராக மாறியப்பின் பலப்பல போராட்டங்களில் கலந்துக்கொள்கிறார். ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம், செயல்திட்டம் முழுவதும் அவர் மூளைக்குள் தற்போது 92 வயதாகும் ஆர்.எஸ்.எஸ் சிந்தனையாளர் எம்.ஜீ.வைத்யா போன்றவர்களால் ஏற்றப்படுகிறது. தீவிர இந்துத்துவாதியாக உருவானபின் தங்களது அரசியல் கிளையான பி.ஜே.பிக்கு அனுப்பி வைக்கிறது ஆர்.எஸ்.எஸ். அரசியல் பணி ஆரம்பமாகிறது. பி.ஜே.பியில் சேர்ந்த ஒரு வருடத்தில் குஜராத் மாநிலத்தின் பொது செயலாளராக நியமிக்கப்படுகிறார். அத்வானியின் அதிதீவிர விசுவாசி என்பதால் 1998ல் இமாச்சல்பிரதேசம், சண்டிகர், பஞ்சாப், ஹரியானா என 5 மாநிலங்களுக்கான பொறுப்பாளராகவும், தேசிய செயலாளர் பதவியும் தரப்படுகிறது.

2001 அக்டோபரில் குஜராத்தின் முதல்வராக இருந்த பி.ஜே.பியின் கேசுபாய் பட்டேல் பதவியில் இருந்து துரத்தப்பட்டு அந்த பதவியை மோடிக்கு தருகிறார்கள் வாஜ்பாய், அத்வானி இருவரும். 2002ல் மாபெரும் குஜராத் கலவரம். இஸ்லாமியர்களை தேடித்தடி அழிக்கும் திட்டத்தை தீட்டி  தந்தவர் முதல்வர் நாற்காலியில் இருந்த மோடி. இதில் மோடிக்கு எதிர்ப்பு 60 சதவிதம் என்றால் ஆதரவு 40 சதவிதம். ஆதரவு கரம் நீட்டியவர்களில் முக்கியமானவர்கள் தொழில் சாம்ராஜ்ஜிய சாம்ராட்டுகள். இவர்கள் தான் குஜராத் தொழில்துறைக்கு சிறந்த மாநிலம், மோடியால் வளர்ச்சி பெற்ற மாநிலம் என விளம்பரப்படுத்துகிறார்கள்.

விளம்பரத்துக்கும் நிஜத்துக்கும் சம்மந்தமில்லை. உண்மையோ வேறு மாதிரி உள்ளது. குஜராத்தில் நாளொன்றுக்கு 11 ரூபாய்க்கு குறைவாக சம்பாதிப்பவர்கள் ஏழைகள் என்கிறது குஜராத் சமூக நலத்துறை. ( மத்தியரசு 37 பிக்ஸ் பண்ணாங்கன்னு நினைக்கறன் )

குஜராத்தில் 70 சதவித வீடுகளுக்கு குறிப்பாக பொருளாதாரத்தில் அடிமட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு மின்வசதி கிடையாது. சரியான சாலை வசதி கிடையாது. குஜராத்தின் பல்லாயிரம் கிராம மக்கள் குடிதண்ணீர்க்காக பல மைல்கள் நடக்கின்றனர்.

பொருளாதாரத்தில், 8 லட்சம் கோடி டாலர் அந்நிய முதலீடு குஜராத்துக்கு வந்துள்ளதாக தகவல் வெளியிடுகிறது குஜராத் தொழில்துறை. இந்திய ரிசர்வ் வங்கி  இந்தியாவுக்குள் வந்த மொத்த அந்நிய முதலீடே 7 ஆயிரம் கோடி டாலர் தாண்டா என்கிறது. 2013 – 2014 அரசின் புள்ளிவிவரப்படி அந்நிய முதலீட்டை ஈர்ப்பதில் குஜராத் ஆறாவதுயிடத்தில் உள்ளது. முதலிடம் மகாராஸ்ட்டிரா, தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது.

ஆனால் இவைகள் மறைக்கப்பட்டன. கார்ப்பரேட் கம்பெனிகளால் மறைக்க வைக்கப்பட்டன. 2009ல் குஜராத்தின் முதல்வராக மோடி பதவியேற்ற பின், குஜராத்தில் நடந்த தொழில்துறை மாநாட்டில் உலகின் கோட்டீஸ்வரர்களில் ஒருவரான கார்ப்பரேட் முதலாளி அனில் அம்பானி மோடி பிரதமர்க்கு தகுதியானவர் என குரல் கொடுத்தார். இவருக்கு பின் மிட்டல் அதற்கடுத்து வரிசையில் டாட்டா என லைன் கட்டி கோட்டீஸ்வர கார்ப்பரேட் கம்பெனிகளின் முதலாளிகள் ஆதரவு தந்தனர். குஜராத்தின் வளர்ச்சி கார்ப்பரேட் முதலாளிகளால் பலூனாக ஊதப்பட்டது. தொழில் தொடங்க இரண்டே நாளில் அனுமதி என்ற முத்தை உதிர்த்தவர் டாட்டா தான். முகேஷ் அம்பானி, மோடியை பிரதமராக்க வேண்டும் என பிட்டை போட்டார். அதற்கடுத்து மகேந்திரா கம்பெனி ஓனர் ஆனந்த்மகேந்திரா. இவர்களை பேச வைத்தது யார் என்றால் அதானி குழும தலைவர் அதானி. இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரத்தின் போது மோடி நல்லவர் என சான்றிதழ் தந்தவர். மோடிக்கு ஸ்பான்ஷர் செய்யும் அதிகாரபூர்வ கோட்டீஸ்வரர். இவர் தலைமையில் தான் மற்ற கோட்டீஸ்வரர்கள் மோடியை புரமோட் செய்கிறார்கள்.

மோடியை பிரதமராக முன்னிறுத்தியதும் அவர் முன் குஜராத் கலவரம் என்ற கத்தி தலைக்கு மேல் தொங்கியது.

குஜராத்தின் கோத்ரா சம்பவத்துக்கு மறுநாள் இஸ்லாமியர்கள் மீதான நரோதா பாட்டியாவின் படுகொலையில் 97 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டார்கள். அதில் 36 குழந்தைகள். 35 பெண்கள். ஒரு இஸ்லாமிய பெண்ணின் வயிற்றை கிழித்து சிசுவை எடுத்து எரித்தனர். இஸ்லாமிய பெண்களை வன்புணர்ச்சி செய்து கொன்றனர். அதை முன்னின்று செய்தவர்களில் முக்கியமானவர்கள் மோடி அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள் பாபுஜீ, டாக்டர் மாயா கோத்னானி. அதை திமிறாகவும் பேட்டி தந்தனர்.

அதேபோல் முஸ்லிம்களுக்கு எதிராக இந்துத்துவாவாதிகள் கலவரம் செய்தனர். கலவரத்ததை கட்டுப்படுத்த வேண்டாம், நடக்கட்டும் என முதல்வர் மோடி உத்தரவு போட்டார் என குஜராத் அரசின் அகமதாபாத் நகரின் உளவுத்துறை இணை ஆணையராக இருந்த சஞ்சிவ் பட்  உறுதியான தகவல்களை தந்தார். அவர் மீது மோடி அரசாங்கம் பொய் வழக்கை போட்டது. சிறை சென்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்.

கலவரத்தில் ஈடுபட்ட குஜராத்தின் வருவாய்த்துறை இணையமைச்சர் ஹரேன் பாண்டியா. மோடி தான் திட்டங்களை தீட்டி தந்தார் என கலவரம்  அதற்கான திட்டம் உருவாக்கம் பற்றி உள்விவகாரங்களை டெஹல்கா இணைய இதழ்க்கு பேட்டி தந்தார். இவர் மர்மமான முறையில் 2003ல் படுகொலை செய்யப்பட்டார். பாண்டியாவை சுட்டு கொன்றது கொலை கும்பல் தலைவனான சோராபுதின் கும்பலை சேர்ந்த துளசிராம். 2005ல் சோரபுதின் அவன் மனைவி கவுசர் பீவியும் ஐ.பி.எஸ் அதிகாரி வன்சராவால் என்கௌண்டர் செய்யப்பட்டனர். துளசிராம் 2006ல் மர்மமாக கொல்லப்பட்டான். நரோதா பாட்டியா வழக்கில் பாபுஜீ சாகும்வரை சிறை. மாயாவுக்கு 28 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ளனர். ஆனால் பாண்டியா, செராபுதின் டீம் கொலைகளை குஜராத் சி.ஐ.டி சரியாக விசாணை செய்யவில்லையென குஜராத்தின் முன்னால் டி.ஜி.பி ஸ்ரீகுமார். விவேக்ஸ்ரீவத்ஸவா, ஹிமாண்ஷீீபட், ரஜனீஷ்ராய் போன்ற காவல்துறை அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர். முன்னால் சி.பி.ஐ இயக்குநர் ராகவன், இந்த கொலை வழக்குகளை விசாரிக்க உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டார். அவர் மோடி நல்லவர் என உச்சநீதிமன்றத்தில் சான்றிதழ் தந்தார். இந்த நேர்மையான அதிகாரி விசாரணை பற்றிய அறிக்கையை நீதிமன்றத்துக்கு அளிக்கும் முன் குஜராத் அரசின் வழக்கறிஞரிடம் கூறியுள்ளார். குஜராத் அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் துஷார்மேத்தாவின் மின்னஞ்சல் முகவரியில் இருந்து 17.10.2010ல் அந்த தகவலை நம்மவூர் பூணுல்வாதிகள் இந்து ராம், ஆடிட்டர் குரூமூர்த்திக்கு வந்துள்ளது. அவர் துக்ளக் சோ வுக்கு தெரிவிக்கிறார். மோடியை நல்லவர் என அறிக்கை தந்த ராகவனை பாராட்டியுள்ளார்கள்.

நர மாமிசம் உண்ட மோடி நல்லவராக்கப்பட்டார் அடுத்துயென்ன அதிகாரபூர்வமாக பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும் முயற்சிகள் நடந்தன. மோடிக்கு பிரதமர் பதவியா என எதிர்ப்புகாட்டினார்கள் மோடியின் அரசியல் குரு அத்வானி, சுஷ்மா, ஐஸ்வந்த்சிங், பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலாணி, அருண்ஜெட்லி போன்றவர்கள். அவர்கள் டம்மியாக்கப்பட்டார்கள். ஆர்.எஸ்.எஸ்சின் அதிதீவிர செல்லப்பிள்ளை ராஜ்நாத் சிங் பி.ஜே.பி தலைவராக்கப்பட்டார். மோடியை எதிர்ப்பவர்கள் கட்சியில் இருக்க தேவையில்லை. கூட்டணி கட்சிகளும் மோடியை ஏற்றுக்கொண்டால் கூட்டணி இல்லையேல் தேவையில்லை என அதிரடியாக அறிவித்தார். காட்சிகள் கொஞ்சம் மாறின.

பிரதமர் வேட்பாளராக அதிகாரபூர்வமாக இந்துத்துவா கூடாரம் மோடியை அறிவிக்கவைத்தது. ஆர்.எஸ்.எஸ்சின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி, மோடிக்கு 272 தொகுதிகளில் வெற்றி தேவை என்ற பிரச்சார வாசகத்தை உருவாக்கி தந்தது. 2013 செப்டம்பர் மாதம் ஹரியானாவில் மோடி தொடங்கிய எக்ஸ் ஆர்மி சோல்ஜர்ஸ் ஊர்வலத்தில் கலந்துக்கொண்டார். இறுதியாக 2014 மே 10ந்தேதி இறுதிகட்ட பிரச்சாரமாக உ.பியில் அவர் முடித்தார். இந்த இடைப்பட்ட 8 மாதத்தில் 3 லட்சம் கி.மீ பயணம், 437 பொதுக்கூட்டம். 1350 பேரணியில் 3 டி தொழில் நுட்ப உதவியுடன் ஜெராக்ஸ் கலந்துக்கொண்டது. வீடியோ கான்பரன்சிங்கில் டீக்கடைகளில் அரசியல் விமர்சகர்களுடன் விவாதித்தது, மீடியா பேட்டிகள் என 6 ஆயிரம் நிகழ்வுகளில் கலந்துக்கொண்டுள்ளார். மோடி டீ குடிப்பதை டீ கடை பெஞ்ச் ( சாய் பே சர்ச்சா ) என்ற தலைப்பில் நேரடி தொலைக்காட்சி ஒளிப்பரப்புக்கு நிகழ்சிக்கு செலவிடப்பட்ட தொகை 250 கோடியாம்.

பொருளாதார வாக்குறுதிகளாக 1. 100 புதிய நகரங்களை உருவாக்குவேன், 2. நதிகளை இணைப்பேன், 3. தொழில்நுட்ப வளர்ச்சி, 4 சுற்றுலா, 5. பாரம்பரியம் வளர்ப்பேன். நாடு பொருளாதாரத்தில் வளர வேண்டும் என்பதே என் குறிக்கோள் அதை செய்வேன் என வாக்குறுதி தந்தார்.

ஆர்.எஸ்.எஸ்சின் செயல்திட்டம், மோடியின் உழைப்பு, கார்ப்பரேட் கம்பெனிகளின் விளம்பரம், மீடியாவின் சப்போட் போன்றவை மோடியை  பிரதமர் நாற்காலியில் அமரவைத்தது. இதற்கு பின்னால் பலரின் உழைப்பு இருந்தாலும் சிலர் மிக முக்கியமானவர்கள். அது மோடியின் பிரச்சார படை.

கைலாஷ்நாதன். – குஜராத்தின் முதல்வர் மோடி அலுவலகத்தில் பணியாற்றியவர். மோடியின் விசுவாசி, திறமையான அதிகாரி  என்பதால் இவரை விட மனம்மில்லாமல் ரிட்டையர்டு ஆனவரை தலைமை முதன்மை செயலாளர் என்ற சிறப்பு பதவி தந்து தன்னுடன் வைத்தள்ளார். தமிழர்.

இணைய தளமும், சமூக வளைத்தளமும் தான் நடுத்தர, மேல்தட்டு வர்க்க மக்களிடம் தன்னை கொண்டு போய் சேர்க்கும் என முடிவு செய்து அதற்காக மூன்று தளபதிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அவர்கள் ஹிரேன் ஜோஷி, ராஜேஷ்ஜெயின், மகேஷ்.

மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் நெட்கோர் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையார் ராஜேஷ் ஜெயின் மோடிக்காக பரத்விஜய் என்ற ஒரு இணையத்தளத்தை உருவாக்கி 200 ஊழியர்களை வைத்துக்கொண்டு மோடிக்காக பிரச்சாரம் செய்தார். நாட்டில் உள்ள மொத்த தொகுதிகளின் டேட்டாஸ் இந்த நிறுவனத்தின் கம்யூட்டரில் உள்ளது. லிங்க் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திற்கும் தரப்பட்டுள்ளது.

3டி டெக்னாலஜியில் வீடியோக்களை உருவாக்குவது, எதிர்கட்சிகளை கிண்டலடிக்கும் வீடியோக்களை உருவாக்கி வெளியிடுவது, பேஸ்புக், டுவிட்டர் உட்பட சமூக வளைத்தளங்களில் மோடிக்கு ஆதரவான கருத்துக்களை உருவாக்குவது இவர்கள் பணி.

அரவிந்த் ஷர்மா – குஜராத் கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர் தான் மோடி மீது ஏவப்படும் அம்புகளுக்கு பதில் அம்பு ஏவும் மிஷின். பரத்லால். ஐ.எப்.எஸ் அதிகாரி. கூட்டணி கட்சி அரசியல்வாதிகள், மீடியாக்களை கவனித்துக்கொள்வர், பிரச்சார கூட்டங்களின் மறைமுக தலைவர்.

மோடியின் தளபதி அமித்ஷா. யாரிந்த அமித்ஷா ?.

பழைய மகராஷ்ட்டிரா மாநிலம் பம்பாய்யில் 1964ல் அனில்சந்திரா ஷாவுக்கு மகனாக பிறந்தவர் அமித்ஷா. மார்வாடி குடும்பம். அவரது அப்பா பெரிய தொழிலதிபர். ஆர்.எஸ்.எஸ் அனுதாபி. சின்ன வயதிலேயே ஆர்.எஸ்.எஸ்சின் அகில பாரத வித்யாத்ரி பரிஷத் என்கிற இளைஞர் அமைப்பில் தன்னை அமித் ஷா இணைத்துக்கொண்டார். அதன் தலைவராகவும் இருந்தார். உயிர் வேதியியல் பட்டப்படிப்பு படித்தவர். பங்கு சந்தையில் தற்போது கோலோச்சுகிறார். மனைவி சோனால், மகன் ஜெய்.

அத்வானி குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் எம்.பி வேட்பாளராக நிற்கும் போது பிரச்சார ஊழியராக அத்வானிக்கு நெருக்கமானார். அத்வானி வெற்றி பெற்றதற்க்கு பரிசாக குஜராத் நிதி கழகத்தின் தலைவராக அமித் ஷாவை நியமிக்க வைத்தார். பின் அகமதாபாத் கூட்டுறவு வங்கியின் மாவட்ட சேர்மனாக நியமிக்கப்பட்டார். 2002ல் சார்கேஜீ தொகுதியில் நின்று எம்.எல்.ஏவானார். அந்த தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ இவர் தான். 2003ல் மோடி அமைச்சரவையில் உள்துறை இணையமைச்சராக நியமிக்கப்பட்டார். அன்று முதல் மோடியின் வலதுகரமாக மாறினார். இருவரும் அத்வானியின் சிஷ்யர்கள்.

செராபுதீன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு உள்துறை இணை அமைச்சராக இருக்கும் போதே தலைமறைவாகி பதவியை ராஜினாமா செய்தார். பின் நீதிமன்றத்தில் சரணடைந்தார். சிறையில் அடைக்கப்பட்டார். சேராபுதின் ஷேக், துளசிபிரஜாபதி கொலை வழக்கு, இஷ்ரத்ஜகான் என்கௌர்ண்டர் வழக்குகளில் இருந்து சி.பி.ஐ விசாணை அறிக்கை இவர் குற்றம்செய்யவில்லை என விடுவிக்கப்படவைக்கப்பட்டார். மோடிக்காக ஒரு இளம்பெண்ணை வேவு பார்த்தது இவர் தான்.

மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும் திட்டம் தயாரானதும் அமித் ஷா நாட்டின் பெரிய மாநிலமும், அதிக எம்.பி தொகுதிகள் கொண்ட மாநிலமான உ.பியின் பி.ஜே.பியின் பொது செயலாளராக நியமிக்கப்பட்டார். தேர்தல் பொறுப்பாளராகவும் அமித் ஷா நியமிக்கப்பட்டார்.

உத்தரபிரதேச தேர்தல் ஒருங்கிணைப்பாளர் பதவி ஆதித்யா நாத்க்கு வழங்கப்பட்டது. யார் ஆதித்யா நாத் ? உ.பியின் கோரக்பூர் நகரத்தின் எம்.பி யோகிஆதித்யா நாத். 1999 முதல் கோரக்பூர் தொகுதியின் பி.ஜே.பி எம்.பி. ஹிந்து யுவா வாகினி என்ற ஒரு அமைப்பை வைத்தள்ளார். முழுக்க முழுக்க இளைஞர்கள் உள்ள அமைப்பு. சேவை முதல் அடிதடி வரை இவ்வமைப்பில் உள்ளவர்களை வைத்து தான் செய்வார். இந்தியா இந்துத்துவா நாடாக வேண்டும் என்ற கனவில் வாழ்பவர். இந்துக்களின் தலைவராக தன்னை காட்டிக்கொள்ள முஸ்லீம் கலவரங்களை உருவாக்கி வெற்றி பெற்று தலைவராகவும் ஆகிவிட்டார்.

அமித்ஷா ஆதித்யா நாத் போன்றவர்கள் மூலம் இந்து முஸ்லிம் கலவரங்களை உருவாக்கினார். முசாபர்பாத் கலவரம் இவர்கள் உருவாக்கியது தான். கலவரத்துக்கு பின் இந்துக்களிடம் ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி போன்ற இந்துத்துவா அமைப்புகள் மோடியை பற்றி பிரச்சாரம் செய்தன. மோடியை கதாநாயகனாக சித்தரித்து உ.பிகளில் பிரச்சாரம் செய்தார் அமித்ஷா. மாநிலம் முழுவதும் பயணம் செய்து 80 ஆயிரம் கிராமங்களில் யாதவர், ஜாட் இனத்தவர், தலித், பிராமின்களை சந்தித்தார். மோடியை அவதாரமாக சித்தரித்தார். டெக்னாலஜி படை அவருக்கு கை கொடுத்தது. உ.பியின் இருண்ட பகுதிகள் என வர்ணிக்கப்படும் கிராமப்புறங்களில் மோடியை பிரபலப்படுத்த 450 வித்தியாசமான ரதங்கள் (கார்கள், இருசக்கர வாகனம்)  உருவாக்கினார். அதில் எல்.இ.டி டிவிகள் வழியாக மோடியை கதாநாயகனாக சித்தரிக்கும் வீடியோக்களை ஒளிப்பரப்பினார். குஜராத்தில் பாலும் தேனும் ஓடுகிறது என்றது அந்த வீடியோ.

ராஜ்நாத் சிங், மோடி, அமித் ஷா உட்பட 5 பேர் கொண்ட கமிட்டி தான் வேட்பாளர்களை தேர்வு செய்து உ.பியில் நிறுத்தியது. 80 தொகுதிகளில் 72ல் வெற்றி. மாநில கட்சிகள் வலுவாக உள்ள இந்த மாநிலத்தில் பி.ஜே.பி என்ற கட்சிக்கு இங்கு மாபெரும் வெற்றி கிடைத்தது மிகப்பெரிய விஷயம். அதை சாத்தியமாக்கியவர் அமித் ஷா. இவரை 2லட்சத்து 91 ஆயிரத்து 490 பேர் முகநூல் பின்தொடர்கிறார்கள். தற்போது குஜராத் மாநில சதுரங்க சங்கத்தின் தலைவர். குஜராத் கிரிக்கெட் அசோசியேஷனின் துணை தலைவராக உள்ள அமித் ஷாவுக்கு பணம் கொழிக்கும் பி.சி.சி.ஐயின் தலைவராக வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அதற்கான காய் நகர்த்தல் தொடங்கிவிட்டது. நண்பருக்கு நிச்சயம் அதை பிரதமர் மோடி செய்து தருவார் என நம்பலாம்.

பிரதமர் நாற்காலியில் அமரும் மோடி முன் பொருளாதார வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, விவசாய புரட்சி என மக்கள் நல திட்டங்களும், வேறு சில பெரும் சவால்களும் உள்ளன. அந்த சவால்களை இந்துத்துவா அமைப்புகள், உள்கட்சி, மோடியை பிரதமராக்கிய கார்ப்பரேட் கம்பெனிகள், மீடியாக்கள் உருவாக்கும். நவயுக நாயகராக சித்தரிக்கப்பட்ட மோடி தங்களது வீடுகளில் பாலும், தேனும் ஓட வைக்கபோகிறார் என எண்ணி காத்துள்ளார்கள். என்ன செய்ய போகிறார் மோடி என்பது கேள்விக்குறிதான். 

இருந்தாலும் பிரதமராக அமரும் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள்.........

திங்கள், மே 19, 2014

திமுகவில் மாற்றம் தேவை. மக்களை நோக்கி பயணப்படுங்கள்.
2014 நாடாளமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் திமுக தோல்வியை சந்தித்துள்ளது. தனித்து நின்ற ஆளும் அதிமுக கட்சி 37 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. சாதி கட்சியாக உள்ள பாமக கூட ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. வாக்கு வங்கியே இல்லாத பி.ஜே.பி ஒரு கூட்டணியை உருவாக்கி ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் தமிழகத்தை பல முறை ஆண்ட திமுக ஓரே ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. திமுகவுக்கு இது புதியது ஒன்றுமல்ல. கடந்த காலங்களில் பலமுறை இதே நிலையை திமுக சந்தித்துள்ளது. அப்போது தார்மீக பொறுப்பேற்று திமுக தலைவரோ, பொதுச்செயலாளரோ, பொருளாளரோ பதவி விலகவில்லை. ஆனால் இந்த தேர்தல் தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று திமுக பொருளாளரும், கட்சியின் அடுத்த தலைவருமான மு.க.ஸ்டாலின், திமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்து திமுக தலைவர் கலைஞரிடம் கடிதம் தந்துள்ளதாக கூறப்படுகிறது. வேட்பாளர் தேர்வு, பிரச்சார யுக்தி போன்றவற்றை முன்னின்று செய்ததால் தன் ராஜினாமா முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஸ்டாலின் முடிவை தலைவர் ஏற்கட்டும், ஏற்காமல் போகட்டும்.

எனக்கு தெரிந்து இந்த முடிவை எடுக்க வேண்டியது திமுகவின் மாவட்ட நிர்வாகிகள் தான். திமுக மாவட்ட செயலாளர்கள் தங்களது பணியை இந்த தேர்தலில் ஒழுங்காக செய்தார்களா என கேட்டால் நிச்சயமாக கிடையாது. ஆளும் கட்சியை கண்டு பயந்தனர் என்பதே உண்மை. மாவட்ட செயலாளர்கள் மட்டுமல்ல நகர, ஒ.செ கூட பயந்து தேர்தல் பணியை செய்யவில்லை. இதற்கு காரணம் அவர்கள் சேர்த்துவைத்துள்ள சொத்துகளை காப்பாற்றிக்கொள்ள, தங்கள் மீதுள்ள பல்வேறு வழக்குகளில் இருந்து தப்பித்துக்கொள்ள, தங்களது தொழில்கள் பிரச்சனை இல்லாமல் நடக்க ஆளும் அதிமுகவை கண்டு பம்மினார்கள்.

திமுக ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களுக்கான பணிகளை ஆளும்கட்சியை எதிர்த்து தொண்டர்கள், நிர்வாகிகள் ஒரு காலத்தில் செய்தார்கள், கட்சியை வளர்த்தார்கள். ஆனால் தற்போதைய நிர்வாகிகள் ஆட்சியில் இருந்தபோதும் மக்கள் நலனில் கவனம் செலுத்தவில்லை, கட்சி பணிகளையும் செய்யவில்லை. ஆட்சியில் இல்லாத போதும் அதேநிலை தான். ரியல் எஸ்டேட், கட்டப்பஞ்சாயத்து, பைனான்ஸ், கல்வி வியாபாரம் என தங்களது தொழில்களில் கவனம் செலுத்துகின்றனர். இதில் வரும் பிரச்சனைகளில் இருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ளவே கட்சியில் இருக்கிறார்களே தவிர கட்சி வளர்ச்சி பெற வேண்டும் என்றோ, மக்களிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என தற்போதைய திமுக நிர்வாகிகள் செயல்படவில்லை.

தற்போது பொறுப்பில் உள்ள கீழ்மட்ட நிர்வாகிகள் மேல்மட்ட நிர்வாகிகளை மிரட்டுகிறார்கள் அந்தளவுக்கு கட்சி நிர்வாகம் உள்ளது. கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் கூட தலைமையின் பேச்சை கேட்பதில்லை. தான்தோன்றி தனமாக நடந்துக்கொள்கிறார்கள். நாங்களே கட்சி என்கிறார்கள். மாவட்ட செயலாளர்கள் குறுநில மன்னர்களாகிவிட்டார்கள். ந.செ, ஓ.செ குறுநில மன்னர்களின் தளபதிகளாக உள்ளார்கள். திமுகவின் நிர்வாகிகள் யாரும் மக்களுடன் நெருக்கமாகயில்லை. ஏசி கார்கள், ஏசி அறைகள் என சொகுசாக கட்சி அலுவலகங்களில் அமர்ந்துக்கொண்டு கட்சியை நடத்துகிறார்கள். கட்சி தொண்டனே இவர்களை காண வேண்டும்மென்றால் 2 அடுக்கு ஜால்ராக்களை தாண்டி செல்ல வேண்டும் என்ற நிலையில் தான் பெரும்பாலான கட்சி நிர்வாகிகளின் அலுவலகங்கள், இல்லங்கள் உள்ளது. கட்சிக்காரனுக்கே அந்த நிலை என்றால் பொதுமக்களின் நிலையை நினைத்துபாருங்கள்.

2011 சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பின் இளைஞர் அணிக்கு நிர்வாகிகள் தேர்வு செய்தார் ஸ்டாலின். அவர்கள் யார்? தற்போதும் கட்சியில் கோலோச்சும் பிரமுகர்களின் பிள்ளைகள். புதிய இளம் பெண்கள், இளைஞர்கள் கட்சிக்குள் வரவில்லை. கொஞ்ச நஞ்ச புதிய முகங்கள் 95 சதவிதம் பேரை பதவிக்கு கொண்டுவரவில்லை. இளைஞர் அணி பதவிகளிலும் வாரிசு நடைமுறையே மாவட்டம், நகரம், ஒன்றிய பகுதிகளில் அதிகமாக உள்ளது. இவைகளை மாற்ற வேண்டும். கட்சியில் புது ரத்தம் பாய்ச்ச வேண்டும், பணத்துக்கு, வாரிசுகளுக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல் களத்தில் இறங்கி உழைப்பவனுக்கு பதவி தர வேண்டும். நிர்வாகிகள் மக்களோடு நெருங்கி உறவாட வேண்டும்.

திமுகவின் சட்ட திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். மா.செ அதிகாரத்தை பரவலாக்க வேண்டும். துணை செயலாளர் பதவிகளை அதிகரிக்க வேண்டும். மாவட்டங்களை பிரித்து புதிய மா.செகளை நியமிக்க வேண்டும். புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படும் போது பணத்துக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல் மக்கள் செல்வாக்கு உள்ளவர்களாக இருக்க வேண்டும், மக்களுடன் நெருங்கி பழகும் நபராக இருக்க வேண்டும். மக்களிடம் நல்ல பெயர் உள்ளவர்களுக்கு தேர்தல் களத்தில் சீட் தரும் நடைமுறையை கொண்டு வர வேண்டும். நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்னை ஒன்றும் செய்ய முடியாது என திமிறாக திரியும் நிர்வாகிகளின் கொட்டத்தை அடக்க வேண்டும். பிரச்சனையில் சிக்கும் நிர்வாகிகள் உண்மையில் தவறு செய்திருந்தால் அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும். எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டால் அவர்கள் செல்லாக்காசுகள் என்பதை உணர்த்த வேண்டும். கட்சி தான் அவர்களுக்கு பாதுகாப்பே தவிர அவர்கள் கட்சிக்கு பாதுகாப்பல்ல.

மாவட்ட அளவில் உள்ள கட்சியின் தொண்டரணி, இளைஞரணி, மகளிரணி, ஆதிதிராவிடர் நலக்குழு, நெசவாளர் அணி, தொ.மு.ச, விவசாய அணி, விவசாய தொழிலாளர் அணியில் இருப்பவர்கள் கட்சி வரலாற்றை, தியாகத்தை அறிந்திருக்கவில்லை. தங்கள் அணி எப்போது உருவாக்கப்பட்டது என்ற தகவல் கூட தெரியாமல் உள்ளார்கள். இதுப்பற்றி முதலில் நிர்வாகிகள் தெரிந்திருக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள கட்சிகளில் கொள்கையுள்ள கட்சியென்றால் அது திமுக தான். ஆனால், திராவிட இயக்க கொள்கை பற்றி நிர்வாகிகளே அறிந்திருக்கவில்லை. இடஒதுக்கீட்டால் பயன்பெற்றவர்கள் தான் தற்போது இடஒதுக்கீட்டை எதிர்க்கிறார்கள். இன்றைய படித்த இளைஞர்களுக்கு, படிக்கும் இளைஞர்கள் 80 சதவிதம் பேர் இடஒதுக்கீட்டால் பயன்பெற்றவர்கள். ஆனால் அவர்கள் தான் இடஒதுக்கீடு வேண்டாம் என்கிறார்கள். திமுகவில் உள்ள இன்றைய இளைஞரணியினருக்கு இட ஒதுக்கீட்டுக்காக போராடும் இயக்கம், தமிழத்தில் இடஒதுக்கீடு தந்த இயக்கம் என்பது கூட தெரிந்திருக்கவில்லை.

செய்திதாள்களை படித்துவிட்டு திமுக மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளை நம்புகிறார்கள் தொண்டர்கள். மீடியா திமுக மீது காட்டும் செய்தி வன்முறை பற்றி அறியாமல் இருக்கிறார்கள். திமுக மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கு பதிலடி தர முடியாமல் உள்ளார்கள். இதற்கு காரணம் திமுக வரலாறு, தியாகம், செயல்திட்டம் தெரியாமல் இருப்பதே.

இன்று இளைஞர்கள், பெண்களிடம் அதிகம் வெறுப்பை சம்பாதிக்கும் கட்சியாக திமுக உள்ளது. அந்த நிலை மாற வேண்டும். அப்போது தான் திமுக சரிவில் இருந்து மீள முடியும். ஜெவின் தவறுகளால் ஆட்சியை பிடிக்கும் நிலையை எப்போதும் எதிர்பார்த்துக்கொண்டு கூட்டணிக்கு அலையக்கூடாது. இன்றைய இளைய சமுதாயத்தினரிடத்தில் பெரும் சக்தியாக வளர வேண்டும். அதை செய்யவில்லை என்றால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வந்த நிலை திமுகவுக்கு எதிர்காலத்தில் வந்துவிடும் ஜாக்கிரதை.

திங்கள், மே 12, 2014

அரசியல்வாதியை திட்டும் முன் யோசி………
ஊடகங்கள் மட்டுமல்ல நாமும் அரசியல்வாதிகளை பற்றி மோசமாக கமெண்ட் செய்வது என்பது சர்வசாதாரணமாகிவிட்டது. ஊரில் நடக்கும் எல்லா தப்புக்கும் அரசியல்வாதிகளே காரணம் என்ற குற்றம்சாட்டுகிறோம். என்னிடம் அரசியல்வாதிகள் தப்பானவர்களா எனக்கேட்டால் இருக்கலாம், இல்லாமல் போகலாம் என பாலமன் சாப்பையா பட்டிமன்ற தீர்ப்பு போல் நழுவிக்கொள்ள விரும்பவில்லை. நேரடியாகவே பதில் சொல்கிறேன். தப்பானவர்கள் தான்.

அவர்கள் தப்பானவர்கள் எனச்சொன்னப்பின் எதற்காக அதன்பின் பேச வேண்டும் என நீங்கள் கேட்கலாம். பொறுமையா படியுங்கள். தப்பு செய்தவனை விட தப்பு செய்ய தூண்டியவனை தான் முதல் குற்றவாளி என்கிறது சட்டம். அப்படி பார்த்தால் அரசியல்வாதியை தப்பு செய்ய தூண்டிய, தூண்டும் இந்த சமூகமும், மக்களும் தான் முதல் குற்றவாளி.

சமூகமும், நானும் எப்படி குற்றவாளியாவோம் என கேட்கலாம். 

ஒரு வார்டு கவுன்சிலர்க்கு நிற்கும் வேட்பாளர் நல்லவரா, கெட்டவரா என பார்ப்பதில்லை. எவ்வளவு காசு தருவார், அவர் எந்த சாதி, எந்த மதம் என்று தான் பார்த்து வாக்களிக்க பழகிவிட்டார் இந்த சமூகத்தில் வாழும் மக்கள். வாக்காளன் வேட்பாளரிடம் என் வார்டுக்கு, என் ஊருக்கு, என் தொகுதிக்கு இது வேண்டும் என கேட்பதில்லை. எனக்கு என்ன செய்வாய், உனக்கு ஓட்டு போடுவதால் எனக்கு என்ன லாபம் என கேட்கும் குறுகிய மனநிலைக்கு வந்துவிட்டது இந்த சமூகம்.

அரசியலுக்கு வரும் ஒரு நேர்மையான நபரை மக்கள் ஊக்குவிப்பதில்லை. சமீபத்திய நாடாளமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகளில் உள்ள பணக்கார, பெரும் முதலாளிகளின் பினாமிகள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளார்கள். இவர்களோடு ஒவ்வொரு தொகுதியிலும் கட்சிகள் சாராத பொதுமக்களில் இருந்து ஒருவர் சுயேட்சை வேட்பாளராக நின்றுள்ளார். அரசியல்வாதிகளை திட்டும் எத்தனை பேர் இந்த சுயேட்சைகளுக்கு வாக்களித்துள்ளார்கள் என பார்த்தால் ஏமாற்றம் தான் மிஞ்சும். இப்போது மட்டுமல்ல கடந்தகால வரலாறும் அப்படித்தான். மக்களுக்காக உழைத்த காமராஜர் உட்பட பலர் தோற்கடிக்கப்பட்டுள்ளார்கள் என்பதே எதார்த்தம்.

வாக்கு கேட்டு வரும் வேட்பாளரிடம், காசு வாங்காமல் ஆரத்தி எடுப்பதில்லை, காசு வாங்காமல் ஓட்டு போடுவதில்லை ?.

பக்கத்து தெருவில், பக்கத்து வீட்டில் காசு தந்துவிட்டு இவன் வீட்டை தாண்டி சென்றுவிட்டாலே ஏன் எனக்கு காசு தரவில்லை என அரசியல்வாதியின் வீட்டுக்கு சென்று சண்டைப்போடும் நிலைக்கு தான் இன்றைய சமூக மக்கள் உள்ளார்கள். ஆனால் இவர்கள் தான் அரசியல்வாதிகள் ஊழல் செய்கிறான், கொள்ளையடிக்கிறான் என பேசுகிறார்கள்.

ஏன் அரசியல்வாதிகள் ஊழல் செய்கிறார்கள் ?, லஞ்சம் வாங்குகிறார்கள் ?.

ஒரு அரசியல்வாதி ஒரு ஓட்டுக்கு 100 ரூபாய் தருகிறார். ஒரு வாக்காளனுக்கு வேண்டுமானால் அது ஒரு சாதாரண தொகையாக இருக்கலாம். வேட்பாளர்க்கு அது பெரிய தொகை. காரணம் அவர் ஒரு வேட்பாளர்க்கு மட்டும் காசு தரவில்லை. அவரது வார்டு அ நரகம் அ தொகுதிக்கு தருகிறார். ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 2 லட்சம் வாக்குகள் உள்ளது என்றால் அனைவருக்கும் பணம் தர வேண்டும். ஒரு ஓட்டுக்கு 100 ரூபாய் என்றால் 2 லட்சம் ஓட்டுக்கு 2 கோடி செலவாகிறது. அதன்பின் செலவுகள் இருக்கிறது. இன்று ஒருவர் எம்.எல்.ஏ தேர்தலில் நிற்க வேண்டும் என்றால் மிக மிக குறைந்த பட்சம் 5 கோடி தேவை. இப்படி செலவு செய்யப்படும் தொகையை வட்டியுடன் திருப்பி எடுத்துதான் ஆக வேண்டும். அதற்காக தான் அந்த அரசியல்வாதி பொறுப்புக்கு வந்தவுடன் ஊழல் செய்கிறார், கமிஷன் வாங்கிறார்.

வருவாய்த்துறை, காவல்துறை, கல்வித்துறை, மின்சார வாரியம் என அனைத்து அரசு துறை ஊழியர்களும் தங்கள் இடமாறுதலுக்கு அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகளிடம் மன்றாடுகள் அவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு இடம்மாறுதல் செய்து தருகிறார்கள். பணம் செலவு செய்து போஸ்டிங்க்கு வந்த அதிகாரி அந்த பணத்தை எடுக்க பொதுமக்களிடம் லஞ்சம் வாங்குகிறார், வேலைகளில் ஊழல் செய்கிறார். ஒரு அதிகாரி என்னிடம் லஞ்சம் எப்படி வாங்கலாம், நான் ஓட்டு போட்டு பதவிக்கு வந்த எம்.எல்.ஏ, எம்.பி, சேர்மன், தலைவர் என்ன செய்யறாங்க. இதை தடுக்ககூடாதா என கேட்கிறார்கள்.

எப்படி தடுக்க முடியும். எந்த அரசியல்வாதியும் இங்கு சேவை செய்ய வரவில்லை என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். நீங்கள் ஓட்டுக்கு பணம் வாங்கினீர்கள். பணம் தந்த அரசியல்வாதி சம்பாதிக்க அனைத்திலும் பணம் பார்க்கிறார். லஞ்சம் தந்துவிட்டு இடமாறுதலில் வந்த அதிகாரி செலவு செய்த பணத்தை எடுக்க செய்ய வேண்டிய வேலைக்கு லஞ்சம் பெறுகிறார்கள். இது ஒரு சக்கரம். இந்த சக்கரத்தில் சிக்கி சீரழிவது மக்கள் தான். ஊழல் என்கிற சக்கரத்தை நிறுத்த வேண்டும்மென்றால் முதலில் மக்கள் மாற்றத்தை நோக்கி நகர வேண்டும்.

நியாயமான, ஒழுக்கமான அரசியல்வாதியை நீங்கள் தேர்வு செய்ய தேவையில்லை. ஏதோ ஒரு குப்பன், சுப்பனுக்கு காசு வாங்காமல் நீங்கள் வாக்களியுங்கள். அவர் வெற்றி பெறட்டும். அதன்பின் நீங்கள், ஏதோ ஒரு சான்றிதழ் வாங்க அரசு அலுவலகத்துக்கு செல்லுங்கள். ஒரு சான்றிதழ்க்காக மனு அளிக்கிறிர்கள் அவர் செய்து தராமல் காலம் தாழ்த்துகிறாறா ? அரசு அலுவலகங்களில் மற்றவரை முந்திக்கொண்டு, பொய்யான தகவல்களை தந்து சான்றிதழ் பெறுவதை முதலில் தவிறுங்கள். முந்தி வாங்கி செல்ல முயலும் போது தான் ஊழல் உருவாகிறது.

குறிப்பிட்ட நாட்களுக்கு பின் சம்மந்தப்பட்ட அதிகாரியிடம் மனு என்னவானது என கேள்வி கேளுங்கள், முறையான பதில் இல்லையா மேல் அதிகாரியிடம் முறையிடுங்கள். நடவடிக்கையில்லையா? லஞ்சம் கேட்கிறாறா நீங்கள் தேர்வு செய்த பிரதிநிதியிடம் முறையிடுங்கள். அப்போது அந்த பிரதிநிதி உங்கள் குமுறலை கேட்டுதானே ஆக வேண்டும். மக்களுக்காக களம்மிறங்கி வந்துதானே ஆகவேண்டும். வரவில்லையெனில் அவரை முற்றுகையிடுங்கள். தப்பு செய்த அதிகாரியை முற்றுகையிடுங்கள்.

இப்படி செய்ய எத்தனை பேருக்கு தைரியம்மிருக்கிறது. எனக்கு புள்ளை குட்டி இருக்கிறது?, நான் ஏன் எனக்கு சம்மந்தமில்லாத விவகாரத்தில் தலையிட வேண்டும் என கேட்பவர்களா நீங்கள்?.

இன்று உனக்காக எதற்கு இடதுசாரியினரும், மனித உரிமை அமைப்பினர், சில தனிமனிதர்கள் போராடிக்கொண்டு இருக்க வேண்டும். ஏன் அவர்களுக்கு குடும்பம்மில்லையா?. ஆங்கிலேயனிடம் இந்தியா அடிமைப்பட்டு கிடந்தபோது, சிவில் தேர்வில் வெற்றி பெற்று உயர் அதிகாரியாக பணியாற்றிய சுபாஷ்சந்திர போஸ் இந்திய மக்கள் துயரப்படுவதை கண்டு எனக்கென்ன என ஒதுங்கி போகவில்லை. காந்தி வழக்கறிஞராக இருந்திருக்கலாம் களத்திற்க்கு வந்து எதற்காக போராடினார்? மக்களுக்காக தூக்கு கயிற்றை முத்தமிட்டவன் பகத்சிங்கும் அவனது தோழர்களும். தனக்கு தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டவன் வாஞ்சிநாதன். பகுத்தறிவு பெற வேண்டும் என தன் மக்களுக்காக சாகும் வரை மூத்திர பையுடன் அலைந்தவன் வெண்தாடி கிழவன் பெரியார். மருத்துவர்களே தொட தயங்கும் தொழு நோயாளிகளை அரவணைத்தவர் அன்னை தெரஸா. இவர்கள் எனக்கேன் வந்தது என ஓதுங்கி சென்றிருந்தால் இந்தியா சுதந்திரம் அடைந்திருக்காது. இன்று நாம் பேசிக்கொண்டு இருக்கமாட்டோம்.

அநீதியை கண்டு நீ பொங்கினால் தான் தவறுகள் குறையும். நீ என்றால் நீ மட்டுமல்ல இந்த சமூகம். உன்னிடம் எழுச்சி வராத வரையில் எதையும் மாற்ற முடியாது.

உன் வாக்கை 50க்கும் 100க்கும் விற்ற பின் அந்த அரசியல்வாதியை விமர்சிக்க என்ன தகுதியிருக்கிறது. மற்றவர்களை விமர்சிக்கும் முன் முதலில் அதற்கு நாம் தகுதியானவர் தானா என யோசித்து விமர்சியுங்கள்.

ஞாயிறு, மே 11, 2014

யாருக்கும் பொறுப்பில்லை........... தேர்வில் கடைசி இடம்.12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவந்துவிட்டது. 2013 – 2014 கல்வியாண்டில் தேர்வு எழுதிய மாணவ – மாணவிகளில் 8,21,671 எழுதியுள்ளனர். இதில் 7,44,698 பேர் தேர்வாகியுள்ளனர். 90.6 சதவிதமாக உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் தேர்வு எழுதிய 25,367 பேரில் 18,874 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 74.4 சதவிதம் பெற்று தமிழகத்தில் உள்ள 32 மாவட்டத்தில் கடைசி மாவட்டம் என்ற பெயரை தக்க வைத்துக்கொண்டுள்ளது.

இந்த முறை மட்டுமல்ல கடந்த காலங்களிலும் இதே நிலையில் தான் இந்த மாவட்டம் உள்ளது.

2010 – 2011ல் தேர்வு எழுதியவர்கள் 24,424 பேர், தேர்ச்சி பெற்றவர்கள் 18,692 பேர். தேர்ச்சி பெறாதவர்கள் 5,732 பேர். 76.53 சதவிதம்.

2011 – 2012ல் தேர்வு எழுதியவர்கள் 25,252 பேர், தேர்ச்சி பெற்றவர்கள் 19,591 பேர். தேர்ச்சி பெறாதவர்கள் 5,661 பேர். 77.58 சதவிதம்.

2012 – 2013ல் தேர்வு எழுதியவர்கள் 26,425 பேர், தேர்ச்சி பெற்றவர்கள் 18,474 பேர். தேர்ச்சி பெறாதவர்கள் 7,951 பேர். 69.91 சதவிதம்.

இதில் இன்னேன்றையும் கவனிக்க வேண்டியுள்ளது. கடந்த 2012 – 2013ல் தேர்வு எழுதியவர்களை விட இந்த ஆண்டு தேர்வு எழுதியவர்கள் குறைவு. கடந்த ஆண்டு 26,425 பேர் தேர்வு எழுதினர். இந்த ஆண்டு 25,367 பேர் தான் தேர்வு எழுதியுள்ளார்கள். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 1058 பேர் குறைவு என்பதை கவனிக்க வேண்டும்.

என்ன பிரச்சனை ?, யாரால் தேர்வு சதவிதம் குறைகிறது ?.

ஆசிரியர்  ஆசிரியைகள்.

திருவண்ணாமலை மாவட்டம் முழுக்க முழுக்க கிராமங்களை உள்ளடக்கிய மாவட்டம். திருவண்ணாமலை, ஆரணி, வந்தவாசி, செய்யார் போன்ற நகர பகுதிகள் இருந்தாலும் இவைகள் அளவில் வெகு சிறியது. இதுதான் இந்த ஆசிரியர்களுக்கு சவுகரியமாக உள்ளது.

கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளுக்கு இவர்கள் பணியாற்ற செல்வதேயில்லை. அது தங்களுக்கு இழுக்கு என நினைக்கிறார்கள். அதனால் இடமாறுதல் வாங்கிக்கொண்டு நகரம் அல்லது அதன் அருகில் உள்ள பகுதிகளில் வேலை பார்க்கவே விரும்புகின்றனர். அதற்கு ஏற்றாற்போல் ஆயிரங்களை செலவ செய்து இடமாறுதல் பெறுகிறார்கள்.
அதையும் மீறி ஜவ்வாதுமலை, மேல்செங்கம், தானிப்பாடி, மாவட்டத்தின் எல்லையில் உள்ள வந்தவாசி, செய்யார் பகுதிகளுக்கு பணி நியம் செய்யப்பட்டால் ஆசிரியர் ஆசிரியைகள் செல்வதேயில்லை. தங்களுக்கு பதில் அந்த பகுதியில் ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு வேலையில்லாமல் இருப்பவர்களை தங்களுக்கு பதில் நியமித்து 5 ஆயிரம் தந்துவிடுகின்றனர். வாரத்துக்கு ஒருமுறை சென்று வருகை பதிவேட்டில் மொத்தமாக கையெழுத்துவிட்டு வந்துவிடுகிறார்கள். அப்படியும் இல்லையா. தலைமை ஆசிரியருடன் அல்லது அங்குள்ள பிற ஆசிரியருடன் ஒப்பந்தம். நீ ஒரு வாரம், நான் ஒரு வாரம் என லீவு எடுத்துக்கொள்வது ஆனால் வருகை பதிவு முழுவதும் கையெழுத்துடுவது என வாழ்கின்றனர். இவர்களை சி.இ.ஒ, டி.இ.இ.ஓ கேட்டால் அவர்கள் மீது ஏதாவது குற்றம் சொல்லி கொடி பிடிப்பது, போராட்டம் நடத்துவது.

இதுப்பற்றி ஆசிரியர் தரப்பினரிடம் பேசினால், பல பள்ளிகளில் கணக்கு, இயற்பியல் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை. அதனால் அந்தப்பாடத்தை நடத்தாததால் பசங்க பெயிலாகறாங்க என்கிறார்கள். அப்படியென்றால் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என போராட்டம் நடத்த வேண்டியதுதானே. 6 மாதத்துக்கு ஒருமுறை சம்பளம் பற்றவில்லை, டி.ஏ வரவில்லை, அரியர் போடவில்லை என போராட்டம் நடத்தும் ஆசிரியர் அமைப்புகள் பள்ளிகளில் தேவையான ஆசிரியர்களை நியமியுங்கள் என போராட்டம் நடத்துங்களேன் ஏன் நடத்துவதில்லை. காரணம் சுயநலம். படிச்சா என்கென்ன படிக்காட்டி எனக்கென்ன எனக்கு சம்பளம் வருது என அரசு பள்ளி ஆசிரியர்கள் சென்று விடுகிறார்கள். பாதிக்கப்படுவது என்னவோ மாணவ மாணவிகள் தான்.

ஆசிரியர்கள் திருந்த வழி. முதலில் அவர்களுக்கான சம்பளத்தில் கை வைக்க வேண்டும். நிச்சயமாக இப்போது ஆசிரியர்கள் வாங்கும் சம்பளம் வெகு அதிகம். தனியார் பள்ளி ஆசிரியர்களை பாருங்கள் 5 ஆயிரத்துக்கும் 10 ஆயிரத்துக்கும் ஸ்பெஷல் க்ளாஸ் வரை எடுக்கிறார்கள். அவர்களும் தான் உழைக்கிறார்கள். மாணவன் தேர்ச்சி பெறவில்லையெனில் சம்மந்தப்பட்ட ஆசிரியரை உண்டு இல்லையென செய்துவிடுகிறார்கள். இதை அரசு அதிகாரிகளால் செய்ய முடிவதில்லை அதனால் வரும் பிரச்சனை.


ஆசிரியர்கள் மட்டும் தான் காரணம்மா என்றால் இல்லை பெற்றோர்களும் அவர்களின் பிள்ளைகளுக்கும் பங்கு உண்டு.

15 வருடத்துக்கு முன்பு தன் மகளை பள்ளியில் ஆசிரியரிடம் ஒப்படைக்கும் போது, படிக்கல எதிர்த்து பேசறான்னா கண்ணு ரெண்டையும் விட்டுட்டு தோலை உறிச்சி எடுத்துடுங்க சார் எனச்சொல்லி ஒப்படைத்துவிட்டு வருவார்கள். இன்றோ பள்ளியில் இருந்து வரும் பையன் அப்பா சார் திட்டினார்ப்பா எனச்சொன்னால் ஏன் திட்டனாரு என விசாரிப்பதில்லை உடனே வாத்தியாருடன் சண்டை போட படை பரிவாரங்களுடன் கிளம்பிவிடுகிறார்கள்.

அரசாங்கமும் அதற்கு ஏற்றாற்போல் பையனை திட்டினால், அடித்தால் தண்டனை என சட்டம் இயற்றி வைத்துள்ளது. இதை சில மாணவர்கள் எந்தளவுக்கு தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்றால் ஆசிரியர் ஆசிரியைகளை சாதி ரீதியாக, பாலியல் ரீதியாக மிரட்டுவது. எதிர்த்தால் அடிச்சார், திட்டினார் என புகார் தருவதில் போய் நிற்கிறது. இதனால் பையனை அடிக்கவோ, திட்டவோ பயந்துக்கொண்டு எப்படியாவது கெட்டுப்போ என விட்டுவிடுகின்றனர் ஆசிரியர்கள்.

அதோடு, படிக்கும் காலத்தில் சினிமா நடிகர் நடிகைக்கு பேனர் வைப்பது, தீபாவளி, பொங்கல், புத்தாண்டு தினங்களுக்கு போஸ்டர் அடிப்பது, டாஸ்மாக் பக்கம் ஒதுங்குவது, இரவு 12 மணி வரை ஊர் சுற்றுவது, செல்போனில் எந்த நேரமும் பேசிக்கொண்டு இருப்பது என பள்ளி படிக்கும் காலத்திலேயே தடம் மாறுகின்றனர். இதை தன் பிள்ளைகளிடம் பெற்றோர்கள் கேட்பதில்லை.

வீட்டுக்கு அடங்காத பையன் ஊருக்கு அடங்குவான் என்பார்கள் கிராமங்களில். ஆனால் ஊருக்கும் அடங்குவதில்லை. ஊர் பெரியவர்கள் யாராவது கேட்டால் வயது வித்தியாசம்மில்லாமல் வீட்டுக்கே சென்று திட்டுவது, மிரட்டுவது என சினிமாவை பார்த்து சீரழிந்துள்ளார்கள். அதையும் மீறி தப்பு செய்யும் மாணவர்களை படிக்கற வயசுல என்னடாயிது என யாராவது நாலு அடிப்போட்டடால் என் பையனை அடிக்க நீ யாரு என அப்பன், ஆத்தாவில் இருந்து வெளியூரில் உள்ள சொந்தக்காரன் வரை கட்டையை தூக்கிக்கொண்டு வந்து விடுகிறார்கள். இதனால் ஊரில் இருப்பவர்களும் எக்கேடு கெட்டு போகட்டும் என தான் உண்டு, தன் வேலை உண்டு என போய்விடுகிறார்கள். 

இப்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் யாரும்மே பொறுப்புயில்லாமல் உள்ளார்கள் என்பதே என் குற்றச்சாட்டு. 

மாவட்டத்தை முதல் 5 இடங்களுக்குள் கொண்டு வர வேண்டும்மென்றால் ஆசிரியர்கள் மட்டுமல்ல பெற்றோர்கள், பிள்ளைகள் ஒத்தொழைக்க வேண்டும். தனியார் பள்ளிகள் குறைந்த அரசு பள்ளிகள் நிறைந்த தென்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் வெகுவாய் தேர்ச்சி பெறுகின்றன. அங்கு இருப்பவர்களும் ஆசிரியர்கள் தான், இதே போன்ற மக்கள் தான் வாழ்கிறார்கள். அவர்கள் தங்களது பொறுப்பு உணர்ந்து நடப்பதை போல நாமும் இங்கு நடந்துக்கொண்டு சுயநலத்தை தூக்கி போட்டுவிட்டு பொது நலத்தோடு உழைத்தால் வெற்றி பெற முடியும்.........

வியாழன், மே 08, 2014

கொண்டையை மறைங்க வை.கோ...........
வையாபுரி கோபால்சாமி அவர்களே, உங்கள் “ஈழத்தாய்க்கு“ நீங்கள் சமரசம் வீசுங்கள், கால் பிடித்துவிடுங்கள். ஆனால் பொய்யை பரப்பாதிர்கள். முல்லை பெரியார் அணைக்காக நீங்கள் மட்டும் தான் ஏதோ குரல் கொடுத்தது போல் அறிக்கை விடாதீர்கள். ஓரு புல்லும் புடுங்காத மாவீரன் தான் நீங்கள். இந்தியன் படத்தில் வருவதை போல, அஞ்சல் நிலையத்துக்கு யாரோ குண்டு வைக்க தாமரை பட்டயம் சம்மந்தமேயில்லாத நபர் வாங்குவதைப்போன்றது உங்கள் அறிக்கை.

2006ல் உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அளித்த தீர்ப்புக்கு எதிராக கேரளா உச்சநீதிமன்றம் மேல் முறையீடு செய்தது. திமுக அரசாங்கம் சட்டப்படி அதை சந்திப்போம் என நீதிமன்றத்தில் கேரளா அரசாங்கத்தின் வாதத்துக்கு தமிழகம் சார்பாக எதிர்ப்புகள் வைத்தது. கேரளாவின் பொய்கள் அப்போது தமிழக அரசின் சார்பில் முறியடிக்கப்பட்டன. திமுக ஆட்சிக்கு பின் 2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்தது. முல்லை பெரியார் அணை பிரச்சனை வெடித்தபோது தென்மாவட்ட மக்கள் எல்லைக்கு சென்று பெரும் போராட்டம் செய்தனர். உங்கள் ஈழத்தாய் கேரளா போலிஸ் உயர் அதிகாரி தலைமையில் காவலர்களை இறக்கி மக்களை துரத்தி துரத்தி அடித்து மண்டைகளை உடைத்தது, வழக்குகளை பாய்ச்சியது அது இன்னமும் கண் முன் உள்ளது.

திமுக அரசு நீதிமன்றம் வாயிலாக வழக்கை சட்டப்படி எதிர்க்கொண்டதால் தான் இன்று சரியான தீர்ப்பு வந்துள்ளது. திமுக அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது 33 வாய்தாக்கள் வாங்கினார்கள் என குறிப்பிட்டுள்ளீர்கள். நீங்கள் வழக்கறிஞர். உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு போனால் உடனே விசாரித்து தீர்ப்பு வழங்கிவிடுவார்களா என்ன ?. வழக்கு ஆராயப்படும். இது இரண்டு தனி நபர்கள் சம்மந்தப்பட்டதல்ல. இரண்டு மாநிலங்கள் சம்மந்தப்பட்டது. இரண்டு மாநில மக்கள் பிரச்சனை. அதனை கவனத்தில் கொண்டு தான் விசாரணை நடத்துவார்கள். இது அரசியல் வழக்கு. அதனால் தான் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச்க்கு வழக்கை மாற்ற வேண்டும் என கேரளா கேட்டபோது அன்றைய திமுக அரசு ஒப்புக்கொண்டது. அதன்படியே வழக்கு மாற்றப்பட்டது. இது ஏதோ சதி என குதிக்கிறிர்கள். ஈழத்தாய்க்கு பாராட்டு பத்திரம் வாசித்துள்ளீர்கள் ?.

நீங்கள் ஈழத்தாயை எதிர்ப்பதை போல் ஒரு பந்தா பாவ்லா காட்டுகிறிர்கள். ஆனால் ஜெவின் மறைமுகமான நுணுக்கமான உள்ளடிகளை அறிந்தும் எதிர்க்காமல் அவரை பாராட்டுகிறிர்கள். திமுகவுக்கு எந்த நற்பெயரும் சென்று விடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளீர்கள். இந்த விவகாரம் மட்டுமல்ல. பல விவகாரங்களில் அப்படித்தான் நடந்துக்கொள்கிறிர்கள். மூவர் தூக்கு விவகாரம் உட்பட எல்லாவற்றிலும்.

சமீபத்திய உதாரணம் எழுத்து வாயிலாகவே நீங்கள் பதிவிட்டுள்ளீர்கள். கடந்த 6ந்தேதி மதிமுக தொடங்கிய 21 ஆண்டு விழாவினை நடத்தியுள்ளீர்கள். அதற்காக உங்களது அதிகார பூர்வ நாளேடான சங்கொலியில் தொண்டர்களுக்கு நீங்கள் எழுதிய முன்னோக்கி செல்கிறோம் என்ற கடிதத்தை படிக்க நேர்ந்தது. நீண்ட கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டுயிருந்தது, மகாபாரதத்தில் உங்களை சேனாதிபதியாக வர்ணித்துள்ளீர்கள். நிச்சயமாக மதிமுகவின் சேனாதிபதி தான். மகாபாரதம் போர் தந்திரம் போன்றது என் தந்திரம் என்கிறிர்கள். அந்த போர் தந்திரம் உங்களிடம் கிடையாது என்பதே என் கருத்து.

காங்கிரஸ்சை எதிர்ப்பதே என் வாழ்நாள் குறிக்கோள் என அறிஞர் அண்ணா சொன்னார். அதை கருணாநிதி மீறிவிட்டார் என்கிறிர்கள். காங்கிரஸ் தமிழகத்தில் வலிமையாக இருந்தவரை திமுக எதிர்த்தே அரசியல் செய்து வந்தது. அந்த கொள்கையை கடைபிடித்து வந்தது. காங்கிரஸ் வலிமை குன்றி நீங்கள் மறைமுகமாக வணங்கும் எம்.ஜீ.ஆர் என்ற நடிகர் திமுகவில் இருந்து பிரிந்துப்போய் அதிமுக என்ற கட்சியை உருவாக்கிய பின் தமிழகத்தில் திமுக – அதிமுக என்ற போட்டி உருவானது. வலிமையில்லாத காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணிக்கு வைத்தது.

காங்கிரஸ்சுடன் கூட்டணியில் இருந்தபோது நீங்கள் எந்த கட்சியில் இருந்தீர்கள். அண்ணா உருவாக்கிய கொள்கைக்கு எதிர்ப்பாக திமுக நடக்கிறது என்பதற்காக நீங்கள் கட்சியை விட்டு ஓடிவிட்டீர்களா?, இல்லை பதவி வேண்டாம் என பதுங்கிவிட்டீர்களா? இல்லையே.  1977 ஆண்டு முதன் முதலாக மாநிலங்கள் அவைக்கு திமுக தலைவர் கலைஞரால் அனுப்பிவைக்கப்பட்டீர்கள். மூன்று முறை மாநிலங்கள் அவை எம்.பியாக திமுக சார்பில் இருந்தீர்கள். திமுகவுன் காங்கிரஸ் கூட்டணி வைத்திருந்தபோது நீங்கள் எம்.பியாக இருந்தீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். கொள்கைக்கு விரோதமாக கட்சி செயல்படுகிறது என ஓடிவிடவில்லை. 

இன்று தமிழ்நாட்டில் காங்கிரஸ்சை இல்லாமல் ஆக்கியதில் திமுகவுக்கு தான் பெரும்பங்கு. இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் தமிழகத்தில் திமுக – அதிமுகவுக்கு மாற்று என்பது கிடையாது என்பதே எதார்த்தம். கலைஞர் இறப்பார், ஜெ இறப்பார் அப்போது ஆட்சி கட்டிலில் ஏறுவோம் என கனவு காண்கிறீர்கள். உங்கள் கனவு எப்போதும் பகல் கனவு தான். திமுகவுக்கு ஸ்டாலின், அதிமுகவுக்கு சசிகலா என பட்டியல் உள்ளது. எம்.எல்.ஏ தேர்தலில் வெற்றி பெற முடியாத நீங்கள் முதல்வர் கனவு காண்கிறீர்கள் இது நியாயமா?.

எம்.பியானது முதல் 1993 வரை உங்களை திமுக கழகம் எப்படி கவுரவித்தது என்பதை சங்கொலியில் எழுத மறந்தீர்கள். அதை மட்டும் மறக்கவில்லை. மதிமுக என்ற கட்சி ஆரம்பித்தது முதல் 2014 மார்ச் மாதம் வரையிலான காலக்கட்டத்தை அப்படியே கறுப்பு துண்டு போட்டு மூடி வைத்துவிட்டீர்களே நியாயமா?. அதை எழுதியிருந்தால் நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை தமிழகம் உணர்ந்திருக்கும்.

அதுமட்டுமல்ல 1980ல் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை சந்தித்தேன் அது முதல் அவர் மீது எல்லையற்ற பாசமும், எல்லையற்ற மதிப்பும் கொண்டுள்ளேன் எனக்குறிப்பிட்டுள்ளீர்கள். உங்களை நம்பிய பாவத்துக்காக நீங்கள் அந்த இயக்கத்தையே சுடுகாட்டுக்கு அனுப்பிவிட்டீர்களே அது போதாதா?.

தற்போது 7 இடங்களில் தமிழக மக்கள் எனக்கு வெற்றி தருவார்கள் என இலக்கியம், இதிகாசம், திருத்தலங்கள், கடவுள்கள் என 7 வருவதை போல பட்டியலிட்டு 7 இடங்களில் நிற்கும் நாம் வெற்றி பெறுவோம் புதிய மறுமலர்ச்சி தருவோம் எனக்குறிப்பிட்டுள்ளீர்கள். உங்கள் தொகுதியில் நீங்கள் வெற்றி பெறுகிறீர்களா என யோசியுங்கள் வை.கோ.

ஈழ ஆதரவாளன், ஈழம் பெறாமல் ஓயமாட்டேன், இந்துத்துவாவுக்கு எதிரானவன், பதவி ஆசையில்லாதவன், ஜெவை எதிர்ப்பவன் என அறிக்கை விடுகிறிர்கள். ஆனால் தலையில் உள்ள கொண்டையை மறைக்காமல் விட்டுவிடுகிறிர்கள்.