செவ்வாய், ஏப்ரல் 17, 2012

பிராமணீயத்துக்கு கூஜா தூக்கும் தமிழ் தேசியவாதிகள்.

தமிழ் தேசியவாதிகள் திராவிடம் என்பது மாயை இது எந்த பிரச்சனையையும் தீர்க்கவில்லை. திராவிடத்துக்கு வக்காலத்து வாங்குபவர்கள் யாரும் தமிழர்கள் இல்லை. தமிழகத்தில் இருந்து திராவிடம் பேசுபவர்களை துரத்த வேண்டும் என குதிக்கிறார்கள். இவர்கள் திராவிடம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள். 

சுதந்திரத்திற்க்கு முன்னால் இந்தியா ஆங்கிலேயனிடம் அடிமைப்பட்டு இருந்தபோது முதலில் நமக்கு விடுதலை தேவை, அது வெள்ளையனிடமிருந்துயில்லை. பார்ப்பனனிடம்மிருந்து தான் தேவை என மற்ற எல்லா சாதியினர் முடிவு செய்தனர். அதற்கு காரணம், மிக குறைவான பிரமாணர்கள் ஆங்கில அரசாங்கம், பத்திரிக்கை துறை என பலவற்றிலும் மொய்த்துக்கொண்டு மற்ற சாதியினரை ஏய்த்து வாழ்ந்தனர். இதனை எதிர்த்தே திராவிடர்கள் சங்கம் உருவானது. 

அதாவது வடமாநிலத்தில் இருந்து வந்த பிராமணர்கள் ஆரியர்கள், தென்னிந்தியாவை அதாவது ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாட்டை சார்ந்தவர்கள் திராவிடர்கள் என பிரிக்கப்பட்டனர். திராவிடர்கள் பிராமணர்களிடம் இருந்து விடுதலை வேண்டும் என தென்னிந்திய நலச்சங்கம் என்ற பெயரில் அமைப்பு தொடங்கி அது ஜஸ்டீஸ் கட்சி,: திராவிடர் கழகம் வரை உருமாற்றம் பெற்றாலும் அவர்களின் ஒட்டுமொத்த நோக்கம் பார்ப்பனியத்தை எதிர்ப்பது. அனைத்து சாதியினரும் படிப்பது, வேலைக்கு போவது போன்றவைக்காக தான்.  

நாடு விடுதலையடைந்தும் திராவிட இயக்கங்களின் போராட்டம் பிராமணியத்துக்கு எதிர்ப்பாக தொடர்ந்தது. மொழிவாரி மாநிலங்களாக நாடு பிரியும் போது அதுவரை சென்னை மாகாணத்தோடு இருந்த ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்றவை பிரிந்து தனி மாநிலங்களாயின. அம்மாநில தலைவர்கள் திராவிட கோஷத்தை மறந்து மாநில பற்றுதலோடு இயங்க தொடங்கினர். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் எல்லாமே திராவிட கொள்கைப்படியே நடந்தன. 

திராவிட இயக்க போராட்டங்களுக்கு பின் தான் தமிழகத்தில் பிராமணீயத்தின் எழுச்சி சுத்தமாக நொறுக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் வளர்ச்சிக்காக திராவிட இயக்கங்கள் இயங்கின. திராவிடத்தை அடிக்கல்லாக கொண்டு கட்டப்பட்ட திமுக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தன. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், ஒரே கல்வி முறை, சம போஜனம், கோயிலில் அனைத்து சாதியினரும் நுழையலாம், தமிழுக்கு முக்கியத்துவம் என சொல்லிக்கொண்டு போகலாம். அவைகள் சட்டமாக்கவும்பட்டன இதெல்லாம் திராவிடம் தந்தது. 

மக்களுக்காக உழைத்த திராவிட இயக்கங்களின் நூற்றாண்டு விழா தற்போது தொடங்கியுள்ளது. இதைத்தான் மீண்டும் கொச்சைப்படுத்த துவங்கியுள்ளனர் திராவிட கொள்கையை அழிக்க கடந்த 80 ஆண்டுகளாக போராடி வரும் பிராமணீயம். இவர்களோடு கைகோர்த்துக்கொண்டுள்ளார்கள் தமிழ்தேசியம் பேசுபவர்கள். 

தமிழகத்தில் ஆட்சியில் அமரும் தலைவர்கள் யாரும் தமிழர்களில்லை. கலைஞர் தெலுங்கர், ஜெ கன்னடர் என முத்திரை குத்துகிறார்கள். அவர்கள் மட்டுமல்ல வை.கோ தெலுங்கர் என்ற அடைப்புக்குறிக்குள் அடைக்கின்றனர். இவர்களால் தான் தமிழகம் முன்னேற்றம் அடையவில்லை. தமிழனின் கருத்துக்கள் பிரிதிபலிக்கவில்லை என வசனம் பேசுகிறார்கள். அதிலும் ஜெவை அதிகமாக அட்டாக் செய்வதில்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். 

மொழி வாயிலாக நாடு துண்டாடப்பட்ட பின் தந்தை பெரியாராகட்டும், அறிஞர் அண்ணாவகட்டும் அவர்கள் குறிப்பிட்டது நாம் மொழியால் தமிழர்கள், இனத்தால் திராவிடர்கள் என்றார்கள். திராவிடர்களுக்காக ஆரியக்கூட்டத்தோடு போராடுகிறோம். திராவிட குடும்பத்தில் மற்ற மொழி பேசும் தெலுங்கனோ, கன்னடனோ, மலையாளியோ மோதுவதில்லை. தமிழகத்தில் மோதுகிறோம். காரணம், அவனோடு சமரசமானால் அவன் நம் உச்சந்தலையில் ஏறி உட்கார்ந்துக்கொண்டு ஆட்டம் போடுவான் அதனாலே. 

திராவிட கொள்கையால் மக்கள் மேம்பாடு அடையவில்லை, அதன் தலைவர்கள் தான் மேம்பட்டார்கள் என்கிறார்கள். சாதிகள் ஒழியவில்லை என வியாக்கியானம் பேசுகிறார்கள். இந்தியாவில் எங்கு தான் சாதிகள் ஒழிந்துள்ளது. தமிழகத்தை விட மற்ற மாநிலங்கள் இன்னும் சாதியை வைத்து தான் அரசியல் செய்கிறார்கள். தமிழகத்தை தவிர்த்து பிற மாநிலங்களில் அதிகாரிகள் கூட சாதியை கொண்டு தான் அதிகாரம் செலுத்துகிறார்கள். புpற மாநிலங்களில் மக்களிடமும் சாதி வேரூன்றி போய்வுள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் தான் இலைமறை காயாக சாதி பேசப்படுகிறது. ஆந்திராவில், கர்நாடகாவில் சாதியை தான் உயர்த்தி பிடிக்கிறார்கள். ஆட்சிக்கு வருகிறார்கள். அங்கு இன்னும் கீழ் சாதியினர் என அடையாளம் காட்டப்படுபவர்கள் மேலே வர முடியவில்லை. ஆனால் தமிழகம் அப்படியல்ல. இங்கு சாதி மோதல்கள், சாதி அடக்குமுறைகள் இருந்தாலும் அம்மக்களால் மேலே வரமுடிகிறது.

தமிழகத்தில் மட்டும் தான் ஒவ்வொரு தனி மனிதனின் மனதில் சாதி இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்வதில்லை. சாதி பார்த்து பழகுவதில்லை, சாதி பார்த்து பேசுவதில்லை. சாதி பெயரில் அரசியல் கட்சி வைத்திருப்பவர்கள் கூட தங்களது பெயருக்கு பின்னால் சாதியை சேர்ப்பதில்லை. இது திராவிட கொள்கையை கொண்டு அரசியல் செய்வதால் தான் சாத்தியமானது. 

அடுத்து திராவிடம் பேசுவதால் தான், தமிழகத்தின் நீர் ஆதார பிரச்சனையான காவேரி, பாலாறு, முல்லை பிரச்சனைகளில் தமிழகத்தின் நலனை விட்டு தருகிறார்கள் காரணம் இவர்கள் தமிழர்களில்லை தமிழனாக இருந்தால் விட்டு தரமாட்டார்கள் என குற்றம் சாட்டுகிறார்கள். அவர்கள் தண்ணீர் விடவில்லை என்பதற்காக என்ன செய்ய முடியும். பேசித்தான் தீர்க்க வேண்டுமே தவிர. அவர்களை அடித்து உதைத்து வாங்க முடியாது. 

அடுத்து இலங்கையில் வாழும் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணம், திராவிட இயக்கம் தான் என்கிறார்கள். அதாவது திமுக. திராவிடம் பேசுபவர்கள் கையில் துப்பாக்கியை தூக்கி தந்து போய் சுட்டு விட்டு வா என்றார்களா என்ன?. ஈழத்தமிழர் பிரச்சனையை உலக அரங்கம் வரை கொன்டு சென்று முதன் முதலில் குரல் கொடுத்தது திமுக தான். ஈழத்தமிழர் பிரச்சனையை பட்டி தொட்டியெங்கும் கொண்டு போய் சேர்த்து மக்களிடம் ஆதரவு வட்டத்தை உருவாக்கி தந்தது திராவிட இயக்கங்களும், திராவிட அரசியல் பேசியவர்களும் தான். ( அன்றைய அதிமுக, இன்றைய அதிமுக அதில் கிடையாது). ஐ.நா சபையில் ஈழத்தமிழுக்காக 1980களிலேயே திமுகவின் சார்பில் உரையாற்றப்பட்டது. 

ஈழப்பிரச்சனையில் எம்.ஜீ.அரை தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள் தமிழ் தேசியவாதிகள். ஈழப்போராட்டத்தை தன் சுயநலத்துக்காக பயன்படுத்தியவர், முல்லை பெரியாரை தான் பிறந்த கேரளா மாநிலத்துக்காக தமிழனின் உரிமையை தமிழக முதல்வராக இருந்தபோது விட்டு தந்தவர். அந்த எம்.ஜீ.ஆரை தூக்கி வைத்து கொண்டாடும் தமிழ் தேசியம் பேசுபவர்களே எம்.ஜீ.ஆர் என்ன தமிழரா?. அவர் மலையாள பிராமணர். 

அவரை மட்டும் ஏற்றுக்கொள்ளும் போது ஒன்று மட்டும் புரிகிறது. நீங்கள் திராவிடத்தை எதிர்க்கும் போர்வையில் பிராமணீயத்துக்கு கூஜா தூக்குகிறிறர்கள். தூக்கிக்கொள்ளுங்கள் அதற்காக திராவிட கொள்கையை கொச்சைப்படுத்தாதீர்கள். 

7 கருத்துகள்:

 1. தமிழ்த் தேசியம் பேசுபவர்கள். திராவிடம் பேசுபவர்கள். தமிழின உஅணர்வுள்ளவர்கள் என அனைவரும் இணைந்து செயல்பட்டால்கூட, தமிழ் உணர்வும் தமிழ் இன உணர்வும் இந்தியாவை ஆளுபவர்களால் அழிக்கப்படுவதைத் தடுக்க முடியாது போலிருக்கிறதே?
  உண்மையில் கலங்கிச் சோர்ந்து போயிருக்கிறது நம் போன்றவர்களின் நெஞ்சம்.

  பதிலளிநீக்கு
 2. பச்சை தமிழன் காமராஜை தோற்கடிக்க குல்லுகபட்டர் ராஜாஜியுடன் 1967 -இல் அண்ணாதுரை முதலியார் கூட்டு சேர்ந்தார்,1971 -இல் காமராஜை தோற்கடிக்க வடநாட்டு பிராமண பெண்மணி இந்திராவுடன் முத்துவேல் நாயனக்காரர் கருணாநிதி கூட்டுசேர்ந்தார்,அதுமட்டுமல்லாமல் சூத்திரன் சஞ்சிவ ரெட்டி யை தோற்கடித்து பிராமண கிரி ஜெயிப்பதற்கு இந்திராவிற்கு தோள்ல்கொடுத்தார்.என்னே இவர்களின் தமிழின பற்று.

  பதிலளிநீக்கு
 3. //அவரை மட்டும் ஏற்றுக்கொள்ளும் போது ஒன்று மட்டும் புரிகிறது. நீங்கள் திராவிடத்தை எதிர்க்கும் போர்வையில் பிராமணீயத்துக்கு கூஜா தூக்குகிறிறர்கள். தூக்கிக்கொள்ளுங்கள் அதற்காக திராவிட கொள்கையை கொச்சைப்படுத்தாதீர்கள். //

  பதிவில் சொல்லி இருப்பவையை ஓரளவு ஏற்றுக் கொண்டாலும் இன்றைய திராவிடத் தலைமை யார், யாரை திராவிட நம்பிக்கையாளர்கல் பின்பற்றவேண்டும் ? பிஜேபி தீண்டத்தகாத கட்சி இல்லை என்று கூட்டணி வைத்தக் திமுகவையா அல்லது காங்கிரசுக்கு சேவகம் செய்யும் திமுகவையா - அட ரெண்டும் ஒண்ணு தானா ?
  :)

  பதிலளிநீக்கு
 4. எமக்கு தமிழ் உணர்வு மட்டும் போதும். திராவிட உணர்வு தேவை இல்லை. திராவிட உணர்வு இல்லாத ஏனைய தென் இந்திய மாநிலங்கள் தத்தம் மொழி உணர்வை மட்டும் கொண்டு தமிழர்களை விட - தம் மாநில உணர்வில் வல்லமை கொண்டவர்களாக இருக்கிறார்கள். என்றைக்கு தமிழன் திராவிட என்கிற வார்த்தையை கைவிடுறானோ அன்றைக்கு தான் சிறப்படைவான்.

  பதிலளிநீக்கு
 5. வண்க்கம் நண்பரே

  /தமிழகத்தில் மட்டும் தான் ஒவ்வொரு தனி மனிதனின் மனதில் சாதி இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்வதில்லை. சாதி பார்த்து பழகுவதில்லை, சாதி பார்த்து பேசுவதில்லை. சாதி பெயரில் அரசியல் கட்சி வைத்திருப்பவர்கள் கூட தங்களது பெயருக்கு பின்னால் சாதியை சேர்ப்பதில்லை. இது திராவிட கொள்கையை கொண்டு அரசியல் செய்வதால் தான் சாத்தியமானது.
  மிகச் சரி!

  நாம் பெரியாரை இன்னும் நேசிக்கிறோம்.அவர் கருத்துகளுடன் உடன்படுகிறோம்.


  ஆனால் அவர் வழி வந்ததாக் சொல்பவர்களுக்கும்
  பிற அரசியல் இயக்கத்தினருக்கும் என்ன வித்தியாசம் இபோது இருக்கிறது?

  திராவிட இயக்கம் என்பது இபோதைய கால்கட்டத்தில் எது? என்ன பகுத்தறிவு கொள்கைகள் கடைப்பிடிக்கப் படுகிறது?

  திரு வைகோ அவ்ர்கள் தமிழரே.இலங்கைத் தமிழருக்காக தன் அரசியல் வாழ்வையே பண்யம் வைத்தவர்.அவரை குறை சொல்ல எவருக்கும் தகுதியில்லை

  ஆனால் பிறர் அப்ப்டி அல்ல!

  பிராமணீயத்திற்கு ஆதரவாகி விடும் என்பதால் மட்டும் தி.முக & கலைஞர் குடும்ப ஆட்சி பற்றி விமர்சிக்க கூடாது என்பது சரியில்லை.

  விமர்சனங்களை சீர் தூக்கி பார்த்து பதில் சொல்லி தவறு இருந்தால் திருத்த முயல்வதுதான் பகுத்தறிவு!

  நன்றி

  பதிலளிநீக்கு
 6. //திரு வைகோ அவ்ர்கள் தமிழரே.இலங்கைத் தமிழருக்காக தன் அரசியல் வாழ்வையே பண்யம் வைத்தவர்.அவரை குறை சொல்ல எவருக்கும் தகுதியில்லை// எந்த அரசியல்வாதியும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல.

  பதிலளிநீக்கு
 7. திராவிடம் மாயை -உண்மை !........அதன் தலைவர்கள் துரோகம் இளைத்து விட்டார்கள் -உண்மை!........ இவ்வாறு பேசுபவர்கள் -சொல்பவர்கள் முன் வைக்கும் அரசியல்திட்டம் என்ன ?தமிழ்தேசிய அரசியல் என்றால் என்ன அந்த அரசியலின் எதிரி யார்? என்பதை பற்றிய தெளிவான பார்வை உண்டா?........... தமிழர்களம் என்ற ஏகாதிபத்திய கைகூலிதொண்டு நிறுவனம் கற்று தந்த இனவாத அரசியலை பின்பற்றி கொண்டு அவன் தெலுங்கன் இவன் மலையாளி, கன்னடன் என்று இனவாதம் பேசுவதால் பயன் என்ன ? அப்படி என்றல் தமிழ்நாட்டில் வாழும் பிற மொழி பேசுபவர்களை இனபடுகொலை செய்ய வேண்டுமா ?இங்கு இருக்கும பிறமொழி பேசுபவர்களுக்கும் அந்த மாநிலங்களுக்கும் எதாவது தொடர்பு உண்டா ? தமிழர்களாய் இருக்கும் ராமதாசும் திருமாவும் செய்யாத துரோகதிய வைகோ செய்து விட்டார் ? பெரியாரை விமர்சிபவர்கள் அவருடைய பணியை அரசியலை விமர்சியுங்கள் அதை விட்டு விட்டு அவரை தெலுங்கன் என்று விமர்சிப்பது என்ன நியாயம்? தமிழ்நாட்டில் வாழ்ந்த அணைத்து ஒட்டு பொருக்கி அரசியல் தலைவர்களும் தாங்கள் சார்திருந்த அரசியல் கட்சி நிலைபாடுகளுகே விசுவாசமாய் இருந்தார்களே தவிர தமிழ்நாட்டுக்கு இல்லை உதாரணம் மொழி வழிமாநில பிரிவினையில் காமராஜின் நிலைப்பாடு இந்தியசிறைக்கூடத்தில் உள்ள அணைத்து தேசிய இனங்களுக்கும் பொதுவான எதிரி என்பது இந்திய தரகு முதலாளி களும் அவர்களின் ததுதுவமான பார்பனியம் என்பதை உணர்வோம் !

  பதிலளிநீக்கு