புதன், ஏப்ரல் 25, 2012

கடத்திய மாவோயிஸ்ட்டுகள் தீவிரவாதிகளா?.





சத்திஸ்கர் மாநிலத்தில் சுக்மா மாவட்டத்தின் ஆட்சித்தலைவராக பணியாற்றிய அலெக்ஸ்பால்மேனனை நக்சல்கள் கடத்தியுள்ளனர். ஒரிசா மாநில எம்.எல்.ஏ ஜினாஜிகா, இத்தாலி நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இருவர் கடத்தப்பட்டபோது மாவோயிஸ்ட்டுகள் நாங்கள் தான் கடத்தினோம் என அறிவித்தனர். இருந்தும் ஆதிக்க மனப்பான்மை கொண்ட மீடியாக்கள் தீவிரவாதிகள் கடத்தியுள்ளார்கள் என அலறி வருகின்றன. மாவோயிஸ்ட்டுகள் கடத்தியுள்ளார்கள் மறுப்பதற்க்கில்லை. அதிகாரத்தில் உள்ளவர்களை கடத்தியவுடன் எப்படி அவர்கள் எப்படி தீவிரவாதிகளாக மாறினார்கள் என தெரியவில்லை. 

கடத்தல் பற்றி மட்டும் தான் பேசுகிறார்களே ஒழிய எதனால், எதற்காக கடத்தினார்கள் என ஆராய மறுக்கிறார்கள். மாவோயிஸ்ட்டுகள் பணம் சம்பாதித்து கோட்டை, கோபுரம் போன்று மாளிகைகள் கட்டி சொகுசாக வாழ துப்பாக்கி ஏந்தி போராட வந்தவர்களில்லை. ஆண்டாண்டு காலமாக பழங்குடியின மக்களும், ஆதிவாசிகளும் வாழ்ந்து வரும்மிடத்தை கனிம வளங்கள் வெட்டியெடுக்க பன்னாட்டு கம்பெனிகளுக்கும், தரகு முதலாளிகளுக்கும் லட்ச கணக்கான ஏக்கர் காட்டை, நிலத்தை சொற்ப விலைக்கும், குத்தகைக்கும் தந்து வருகிறது அரசு. அதைத்தான் அந்த மக்கள் எதிர்க்கிறார்கள். உண்ண உணவில்லை, உடுத்த உடையில்லை, இருக்க இடம்மில்லை, மருத்துவமனைகள் இல்லை, சாலைகள் இல்லை, மின்சாரம்மில்லை இப்படி பலப்பல இல்லைகள். இதை கேட்கும் அம்மக்களுக்கு கிடைப்பது துப்பாக்கி குண்டுகள் தான். 

தன் சொந்த நாட்டு மக்களை பணத்துக்காக சுட்டுக்கொல்லும் முதலாளித்துவ அரசாங்கத்தை எதிர்த்து போராட தொடங்கியபோது அதில் தங்களது உறவினரை, உடன் பிறந்தவர்களை இழந்தவர்கள் இவர்கள் என்பது வேதனையான ஒன்று. தன் சந்ததியை காக்க இந்த முதலாளித்துவ கொள்ளைக்கார பன்னாட்டு முதலாளிகளுக்கான அரசை எதிர்த்து நடத்தும் போராட்டத்தில் கலந்துக்கொண்டு அம்மக்கள் போராளிகளாக மாறியுள்ளார்கள். அவர்களுக்கு இந்த முதலாளிக்களுக்கான அரசாங்கம் நக்சல், மாவோயிஸ்ட் என்ற முத்திரை குத்துகிறது. ஆதிக்க மீடியாக்கள் தீவிரவாதிகள் என்கின்றன. 

இந்த பன்னாட்டு தரகு முதலாளிகளின் தொழிலை பாதுகாக்கவே அரச படைகள் களம்மிறக்கப்பட்டு போராடும் பழங்குடி, ஆதிவாசி, கிராம பாமர மக்கள் மீது வெறியாட்டம் நடத்துகின்றன. பாலியல் வல்லுறவு செய்வது, தப்பு செய்யாதவனையும் துன்புறுத்தி கொல்வது, வீடுகளுக்கு தீ வைத்து கொளுத்துவது என அடுக்கடுக்கான தவறுகள் செய்கின்றன. மாவோயிஸ்ட்டுகளுக்கு உதவுகிறார்கள் என்ற போர்வையில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள், பெண்கள், இளைஞிகள் சிறையில் சித்ரவதைகளை அனுபவிக்கின்றனர். இதனை கேட்க எந்த நாதியும் இல்லை. இந்த குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை பதில்யில்லை, தண்டனையில்லை. 

இப்போது கூட தங்களது சகாக்களை மீட்கவே எம்.எல்.ஏவை, கலெக்டரை கடத்தியுள்ளார்கள். அவர்கள் கடத்தப்பட்டதும் ஏழைக்காக பேசுகிறோம் என மனித உரிமை பேசிய சிலரின் முகமுடிகள் இந்த விவகாரத்தின் போது கிழிந்தது. சத்திஸ்கர் அரசு மீட்பு குழு அமைத்ததில் சமூக சேவகர் என தன்னை பிரகடனப்படுத்திக்கொண்ட வழக்கறிஞர் பிரஷாந்த்பூஷன் நான் கலெக்டரை விடுதலை செய்தால் தான் பேச்சுவார்த்தைக்கு போவேன் என அறிவித்துள்ளார். அவரை தூதுவராக போகச்சொல்வதே கடத்தப்பட்டவரை மீட், அவர்களின் பிரச்சனைகளை வெளியுலகத்துக்கு அறிவிக்க வேண்டும், அரசாங்கத்திடம் சொல்ல வேண்டும் என்பதற்காக தான். ஆனால் இவர் சொல்கிறார் முதலில் விடுதலை செய் பின் உன்னுடன் பேசுகிறேன் என்று. இதில் இருந்து புரிவது அவரின் எண்ணமும் மாவோயிஸ்ட்டுகள் தீவிரவாதிகள் என்றே உள்ளது. 

அவர் மட்டுமல்ல, இந்திய ஒன்றியத்தில் சிலரை தவிர மற்ற அனைத்து தளத்தில் உள்ளவர்களும் நக்சல் தீவிரவாதிகள் என எண்ணி அவர்கள் பிரச்சனைப்பற்றி பேச மறுக்கின்றனர். நக்சல்கள், மாவேயிஸ்ட்டுகள் என பலப்பெயர்களில் பிரிக்கப்பட்டு நசுக்கப்படும் இப்போராளிகள், இன்றைய ஆதிக்க சக்திகளிடம் உள்ள மீடியாக்கள் கூறுவதுபோல் தீவிரவாதிகள்ள. 


தங்களது வாழ்வாதார பிரச்சனைக்காக பல முறை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு வந்தவர்கள். அப்படி பேச்சு வார்த்தைக்கு வந்தவர்களை நயவஞ்சகமாக சுட்டுக்கொன்றது இந்த முதலாளித்துவ அரசுகள். அவர்களுக்கு ஆதரவு தந்த அவர்களின் உண்மையான பிரச்சனைகளை மக்கள் மன்றத்துக்கு கொண்டு வர போராடிய ஆஸாத், ஷேமச்சந்திரபண்டே போன்றோரை சுட்டுக்கொன்றது பாதுகாப்பு படைகள். அவர்கள் மட்டுமல்ல, மாவோயிஸ்ட் கள தளபதிகளில் ஒருவரான கிஷன்ஜீயை நயவஞ்சகமாக தங்களது இடத்துக்கு வரவைத்து சித்திரவதை செய்து சுட்டுக்கொன்றனர். 

இப்படிப்பட்ட தவறுகளை மறைத்து மாவோயிஸ்ட்டுகள் தீவிரவாதிகள் என முதலாளித்துவ அரசாங்கமும், மீடியாக்களும் அலறினாலும் பாதிக்கப்படும் மக்கள் நக்சல்களாகவோ, மாவோயிஸ்ட்டுகளாகவே மாறிக்கொண்டு தான் இருப்பார்கள். அரசாங்கங்கள் தங்களது நிலைமைய அதாவது கொள்கையை மாற்றிக்கொள்ளாத வரை இது தொடரத்தான் செய்யும். 


1 கருத்து: