புதன், ஏப்ரல் 18, 2012

தப்பை தப்பாக செய்யும் தனியார் பள்ளிகள்.வருங்கால தலைமுறையை உருவாக்க வேண்டிய ஆசிரியர்கள் மோசமான தலைமுறையை உருவாக்க தொடங்கிவிட்டார்கள். பள்ளிகளில் நடத்தப்படும் பத்தாம் வகுப்பு, பனிரென்டாம் வகுப்பு பொதுதேர்வுகளின் போது, படிக்காத சிலப்பல பிள்ளைகள் தேர்ச்சி பெற்றுவிட வேண்டும் என்பதற்காக பிட் அடிப்பது இயல்பு. அதையும் தடுக்க பலப்பல ஸ்கோடு டீம் அமைக்கப்பட்டு பிட் அடிக்கும் மாணவர்கள் பிடிக்கப்படுகிறார்கள். தண்டிக்கப்படுகிறார்கள்.

இந்த பிடிப்பு என்பது அரசு பள்ளி மாணவ-மாணவிகள் தேர்வு எழுதும் இடத்தில் மட்டும் தான் நடைபெறுகிறது. தனியார் பள்ளிகளில் இந்த பிடிப்பு நடைபெறுவதில்லை என்பது நீண்ட நாள் குற்றச்சாட்டு. தனியார் பள்ளிகள் தங்களது பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் அனைவரும் தேர்ச்சி பெற்று விடவேண்டும், அதுவும் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றால் 100 சதவிதம் தேர்ச்சி பெற்ற பள்ளி என விளம்பரப்படுத்தி அந்த ஆண்டு புதியதாக பள்ளியில் சேர வரும் பிள்ளைகளிடம் அதீத கட்டணம் வசூலிக்கலாம் என்ற எண்ணத்தில் தனியார் பள்ளிகள் தங்களது பள்ளியில் தேர்வு எழுதும் பிள்ளைகளுக்கு பிட் தருகிறார்கள். புக் வைத்து எழுத அனுமதிக்கிறார்கள், சொல்லி தருகிறார்கள்.

சமீபத்தில், அரசியல்வாதிகள், அதிகாரிகள் என பலப்பல வி.ஐ.பிகளின் பிள்ளைகள் படிக்கும் திருவண்ணாமலை மவுண்ட் செயின்ட் ஜோசப் பள்ளியில், தேர்வு எழுதும் பிள்ளைகளுக்கு பிட் தந்து உதவ தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் 7 பேர் பாக்கெட்டில் பிட் வைத்திருந்துள்ளனர். கலெக்டர் அமைத்த ஸ்பெஷல் டீம் அதை கண்டறிந்துள்ளது. அதோடு, பள்ளி அலுவலகத்தில் அன்றைய தேர்வுக்கான கேள்வி தாளில் இருந்த கேள்விக்கு பதில் எழுதி தேர்வு எழுதும் சில பிள்ளைகளுக்கு தர பள்ளியிலேயே ஜெராக்ஸ் எடுத்துள்ளார்கள் எவ்வளவு அயோக்கியத்தனம். இதனை தேர்வு மைய கண்காணிப்பாளர், தேர்வு அறை கண்காணிப்பாளர், பறக்கும் படை, சிறப்பு பறக்கும் படையினர் கண்டுக்கொள்ளக்கூடாது என்பதற்காக பணம், பொருள், மது விருந்து மூலம் சிறப்பாக கவனிக்கப்பட்டுள்ளன.

இப்படித்தான் தனியார் பள்ளிகள் பல ஆண்டுகளாக செயல்படுத்தி வருகின்றன. கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிந்தே நடைபெறுவதை அவர்கள் கண்டும் காணாமல் இருந்துள்ளார்கள். அதற்கு காரணம், அங்கு அவர்களது பிள்ளைகள் படிக்கிறார்கள், அதற்கடுத்து பணம், அதற்கடுத்து அரசியல் தாதாக்கள் தான் தற்போது கல்வி நிலையத்தை நடத்துவதால் இயல்பான பயம். இதனால் எதையம் கண்டுக்கொள்வதில்லை இந்த ஆசிரியர்கள்.

இதனால் தான் பொது தேர்வு முடிவுகள் வெளிவரும்போது அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகள் 100 சதவிதம் தேர்ச்சி பெற்றுயிருக்கும். அதுபெற்ற வழி நன்றாக படிக்க கற்று தந்ததால் அல்ல. நன்றாக பிட் அடிக்க கற்று தந்தார்கள் என்பதாலே.

இப்படி பள்ளியில் பிட்டடித்து தேர்ச்சி பெற்று மேல் படிப்புக்கு மருத்துவம், இன்ஜினியரிங் என போகும்போது கல்லூரியில் டெக்னாலஜி வளர்ச்சியை பயன்படுத்தி ‘பிட்’ அடிக்க முயற்சி செய்கிறார்கள். அப்படித்தான் மக்களின் உயிர் காக்கும் மருத்துவம் படித்துவிட்டு உயர் படிப்பான எம்.எஸ், எம்.டி தேர்வு எழுதிய இளம் டாக்டர்கள் செல்போன் மூலம் பிட் அடித்து மாட்டியுள்ளார்கள்.

கல்வி என்பது ஒருமனிதனை ஒழுக்கமானவனாக, சமூகத்தில் சிறந்தவனாக, சிந்தனையாளனாக உருவாக்க வேண்டுமே தவிர அவனை மோசமானவனாக உருவாக்ககூடாது. இன்றயை தனியார் பள்ளிகள் அதைத்தான் செய்கின்றன. நான் கேட்கும் பணத்தை நன்கொடையாக, கட்டணமாக மாதாமாதம் தா அது போதும் உன் பிள்ளை தேர்ச்சி பெறுவான். அவன் எதை செய்தாலும் எங்களுக்கு கவலையில்லை எனச்சொல்லும் பள்ளி நிர்வாகங்கள் தான் அதிகமாக உள்ளன. பெற்றோர்களும் தனியார் பள்ளிகள் தான் சிறந்த பள்ளிகள் என அதில் போய் பணத்தை கட்டி தங்களது பிள்ளைகளை பாழும் கிணற்றில் தள்ளுகிறார்கள். உண்மையில் இந்த மாதிரியான தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகள் சிறந்த பள்ளிகள். அங்கு படிப்பவன் தன் சுய முயற்சியால் படித்து தேர்ச்சி பெறுகிறான். மோசடி தனத்தில் ஈடுபடாத சிறந்த ஆசிரியர்கள் ஓரளவு அரசு பள்ளியில் உள்ளனர்.

அதனால் தனியார் பள்ளி மோகம் கண்டு ஓடாதீர்கள் சிறந்த தலைமுறையை உருவாக்க அரசு பள்ளியை நாடுங்கள். அவன் வாழ்க்கையில் போராட கற்றுக்கொள்வான். வாழ்க்கையை சிறப்பாக அமைக்க கற்றுக்கொள்வான்.

2 கருத்துகள்:

  1. இப்போது http://tamil.hotlinksin.com/ இணையதளத்தில் தமிழ் செய்திகளை இணைத்து ஏராளமான வாசகர்களைப் பெறலாம்.
    அதே போல ஆங்கிலத்தில் செய்திகளை http://www.hotlinksin.com இணையதளத்திலும் இணைத்து ஏராளமான வாசகர்களைப் பெற்றிடுங்கள்.

    பதிலளிநீக்கு
  2. //இதனை தேர்வு மைய கண்காணிப்பாளர், தேர்வு அறை கண்காணிப்பாளர், பறக்கும் படை, சிறப்பு பறக்கும் படையினர் கண்டுக்கொள்ளக்கூடாது என்பதற்காக பணம், பொருள், மது விருந்து மூலம் சிறப்பாக கவனிக்கப்பட்டுள்ளன.//

    நல்லவேளை, மாணவிகளை கண்காணிப்பாளர்களுக்கு விருந்தாக்காமல் விட்டான்களே!

    பதிலளிநீக்கு