வெள்ளி, நவம்பர் 29, 2013

ஜெயேந்திரர் அபிமன்யூவல்ல...... துரியோதனன்........தினமணி ஏட்டில் 28ந்தேதி 'சங்கராச்சாரியார் வழக்கு ஒரு மீள்பார்வை' என்ற தலைப்பில் ஆடிட்டர் குருமூர்த்தி எழுதிய ஒரு கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. அரை பக்கத்துக்கான கட்டுரை.

வாழும் சங்கராச்சாரியார்கள் நல்லவர், வல்லவர், இந்து மத்தின் மிகப்பெரிய தலைவர், ஆன்மீக நிறுவனத்தின் தலைவர். (சங்கரமடத்த இப்பவாவுது கம்பெனின்னு சொன்னீங்களே) அவர் மீது பொய்யாக குற்றம்சாட்டி அவரை சிக்க வைத்தள்ளார்கள். இதற்காக கடவுள் மறுப்பாளர்கள், திராடவிட இயக்கத்தவர்கள் என்னன்ன போராட்டங்கள் செய்துயிருப்பார்கள். இதனால் அவர் மனம் மட்டுமல்ல அவரது பக்தர்கள் மனம் எந்தளவுக்கு பாடுபட்டுயிருக்கும், வேதனைப்படுத்தியிருக்கும் என எண்ணினார்களா. புத்திரிக்கைகள் மட்டும் சும்மாவா வழக்குக்கு அப்பாற்பட்டு இல்லாததும், பொல்லததுமான விஷயங்களை எடுத்து எழுதினார்கள் என கேட்கிறார்.

குருமூர்த்தி அவர்களே, உங்களைப்போல நான் நாலும் தெரிந்தவனல்ல. என் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் சில கேள்விகள், சங்கரமடம் சிஷ்யரே,

ஜெயேந்திரர்க்கும் ரவுடி அப்புக்கும் என்ன தொடர்பு ?

கொலை செய்த ரவுடி கதிரவன்க்கு பணம் தந்த ரவிசுப்பிரமணியன்க்கும் ஜெயேந்திரர்க்கும் என்ன தொடர்பு ?

கொலை செய்தவர்களுக்கு தரப்பட்ட பணம் எங்கிருந்து தரப்பட்டது ?

கொலை செய்யப்பட்ட சங்கரராமன் மனைவி பத்மா, அவரது மகன், மகளை ஜெயேந்திரர் தரப்பு மிரட்டனார்கள் என செய்தி வந்ததே எதனால் அவர்கள் மிரட்டினார்கள் ?

புதுச்சேரியில் வழக்கை விசாரித்த நீதிபதியிடம் பண பேரம் நடத்தியது யாருக்காக ?.

நீதிபதியிடம் ஜெயேந்திரர் பேசியது எதனால் ?

பத்திரிக்கைள் இல்லாததும் பொல்லாததும் எழுதினார்கள் என குமுறுகிறீர்களே ?

அனுராதாரமணன் என்ற பிரபல எழுத்தாளர் பெண்மணி தனக்கு சங்கரமடத்தில் உங்களால் வர்ணிக்கப்படும் இந்து மதத்தின் மிகப்பெரிய தலைவர் ஜெயேந்திரர் செய்த பாலியல் சீண்டல் பற்றி எழுதியுள்ளாறே இதற்கு ஏன் இன்னும் அவா மட்டுமல்ல நீரூம் பதில் சொல்லவில்லை ?.

நடிகை சொர்ணமால்யா விஜயேந்திரரின் அந்தரங்க காரியதரிசி என தகவல் வந்ததே அதுப்பற்றி என்ன பதில் சொல்ல போகிறீர்கள் ?. இது அபத்தம் என்கிறிர்களா?

தண்டத்தை போட்டுவிட்டு நேபாளத்துக்கு ஒரு பெண்ணோடு ஓடிப்போனவரை பின் தலைகாவேரியில் இருந்து அழைத்து வந்ததே பார்ப்பண கூட்டம் அதை பொய் என்கிறிர்களா ? இவையெல்லாம் ஆதாரத்தோடு எழுதப்பட்டது தானே ?.

இப்படி என்னற்ற கேள்விகள் உள்ளது குரூமூர்த்தி அவர்களே.

போதிய சாட்சியம்மில்லை போதிய சாட்சியம்மில்லை பல இடத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சாட்சி சொன்னவர்களில் பின் புதுச்சேரி நீதிமன்றத்தில் சாட்சி சொன்ன போது 83 பேர் பிறழ்சாட்சியாகி போனார்கள். அவர்கள் எப்படி பிறழ்சாட்சியானார்கள் என்பது அவா வகையாறவுக்கு நிச்சயம் வெளிச்சம்.

அவர்கள் தற்போது உண்மையை சொன்னார்கள் எனச்சொல்கிறிர்கள். என்னோட கேள்வி, உங்கள் லோக குரு மீது பொய்யாக வழக்கு பதிவு செய்த காவல்துறை மீதும், பொய்யாக சாட்சி சொன்னவர்கள் மீதும் நீங்கள் ஏன் நடவடிக்கை எடுக்க வழக்கு தொடுக்ககூடாது?

அதுயென்ன 2500 ஆண்டு பாரம்பரியமிக்க ஒரு ஆன்மீக அமைப்பின் மரியாதைக்கும், புகழுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் ஊடகங்கள் பரபரப்பு ஏற்படுத்துவது கண்டிக்க தக்கது என ஆந்திரா உச்சநீதிமன்றம் உத்தரவை காட்டுகிறீர்கள். சங்கரமடம் என பொய்யை உதிர்த்துக்கொண்டு திரியும் பார்ப்பண கூட்டம்மே சங்கரர் இந்தியாவில் நான்கு மடங்களை நிறுவினார் என உங்கள் சங்கர புராணமே கூறுகிறது. அதில் எந்த இடத்திலும் காஞ்சி ‘சங்கரமடம்’ கிடையாது. இதை ஆதாரபூர்வமாக விளக்கிவிட்டார்கள் உங்கள் பிராமண சமூகத்தை சார்ந்தவர்களே. ஆனால் இன்னமும் 2500 ஆண்டு காலம் என காதில் பூ சுற்றும் புண்ணாக்கு வியாபாரத்தை விடாமல் நடத்தாதீர்கள்.

அதோடு, தனிநபர்கள், சில இயக்கங்கள், அரசு இயந்திரங்கள் புகழ்பெற்ற பாராம்பரியமிக்க நிறுவனத்தை சிறுமைப்படுத்துவதை மனித உரிமை, நீதி, நேர்மை, சுயமரியாதை என பேசும் நபர்களும், அமைப்புகளும் பார்த்துக்கொண்டு மவுனமாக இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது என எழுதியதாக குறிப்பிட்டுள்ளீர்கள்.

நாடு மக்களும் நாசமாய் போகட்டும் என்ற வசனத்தை பழைய படம் ஒன்றில் வில்லன் பாத்திரம் ஏற்றுக்கொண்டவர் சொல்வார். அது போன்று தானே உங்கள் அவா சமூகம் மற்றும் உங்கள் சங்கராச்சாரியர்கள் நடந்துக்கொண்டர்கள். அவர்களுக்காக அவர்கள் ஏன் போராட வேண்டும் என கேட்கிறிர்கள் ?.

போர்களத்தில் அபிமன்யூவை போல நிராதரவாக நிற்கவில்லை. துரியோதனைப்போல நண்பர்களோடு தான் போனார். நீதிமன்றம் என்ற போர்களத்தில் துரியோதனன் வென்றுள்ளார். அபிமன்யூவை போல நீதியை அனைவரும் அதிகாரத்தையும், பணத்தையும், மிரட்டலையும் கொண்டு கொலை செய்துள்ளார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கடைசியாக ஒன்றே ஒன்று, தவறு செய்பவனுக்கு கடவுளின் நீதிமன்றத்தில் தண்டனை உண்டு என்கிறது இந்து மதம். அதை குற்றம் செய்தவர்கள் நினைத்து பார்க்கட்டும். மீளாய்வு செய்யட்டும்.

சங்கரமடத்துக்கான நீதி - அதிகாரத்துக்கான நீதி.......


காஞ்சி பீடத்தின் சங்கராச்சாரியார்களான ஜெயேந்திரர், விஜயேந்திரர் இருவரும் கடந்த 2004 ஆம் ஆண்டு தங்களுக்கு குடைச்சல் தந்த வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமனை கூலி படையை ஏவி படு கோரமாக கோயிலுக்குள் படுகொலை செய்ததாக வழக்கு பதிவு செய்து 2004ல் ஜெ அரசால் கைது செய்யப்பட்டார்.

1873 பக்க குற்றப்பத்திரிக்கை, 712 ஆவணங்கள், 371 சாட்சிகள். 23 குற்றவாளிகள்.

அந்த வழக்கு தமிழகத்தில் நடந்தது பின்னர் புதுச்சேரிக்கு மாற்றப்பட்டது. தமிழகத்தில் வழக்கு விசாரணை நடைபெற்ற போது, அரசு சாட்சியாக அப்ரூவராக மாறியிருந்த கூலிப்படையை ஏற்பாடு செய்த ரவிசுப்பிரமணியம், கொல்லபட்ட சங்கரராமன் மனைவி, மகன், மகள் உட்பட அனைவரும் சங்கராச்சாரியார்களுக்கு எதிராகவே சாட்சி சொன்னார்கள். வழக்கு புதுவைக்கு மாற்றப்பட்டபின் அரசு சாட்சியாக இருந்த சங்கரராமன் மனைவி, மகன், மகள், ரவிசுப்பிரமணியம் உட்பட 83 பேர் முன்பு தாங்கள் தந்த வாக்குமூலத்தை மாற்றி பிறழ்சாட்சியாகி போனார்கள்.

வழக்கு விசாரணையின் போது, வழக்கை விசாரித்த நீதிபதியுடன் போனில் ஜெயேந்திரர் பேரம் பேசுகிறார். அந்த சி.டியை மையமாக வைத்து தமிழக போலிஸ் விசாரணை நடத்துகிறது. அந்த சி.டி கரப்ட்டாகிவிட்டது. அதனால் அதில் உள்ளதை ஆராய முடியவில்லை என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்கிறது. அந்த வழக்கு ஊத்தி மூடப்படுகிறது.

9 ஆண்டுகளுக்கு பின் நவம்பர் 27ந்தேதி புதுவை நீதிமன்ற நீதிபதி முருகன், அரசு எதையும் நிரூபிக்கவில்லை, 83 சாட்சிகளும் பிறழ்சாட்சியாகி போனார்கள். அதனால் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்கிறேன் என தீர்ப்பு எழுதி 23 பேரை விடுதலை செய்துவிட்டார். அவர் சட்ட புத்தகம் சொல்வதை கூறிவிட்டு சென்றுவிட்டார்.

சரி சங்கரராமனை கொலை செய்தது யார் ?.

நீதிமன்றம், காவல்துறை, அரசாங்கத்திடம் கேள்வி கேட்க யாரும் தயாராகயில்லை. கேட்டாலும் பதில் சொல்ல தயாராகயில்லை. சங்கரராமன் மட்டுமல்ல, தா.கிருஷ்ணன் போன்றவர்கள் கொடூரமாக கொலை செய்யபட்டார்கள். கொலையாளிகள் என சிலரை பிடித்து சிறையில் அடைக்கப்பட்டு வழக்கு நடத்தினார்கள். நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்துவிட்டது. அப்படியாயின் அவரை கொன்றது யார்?. இந்த கேள்விக்கு சில ஆண்டுகளாக இன்னும் பதில் கிடைக்கவில்லை.

இவைகள் பற்றி கேள்வி கேட்கவேண்டியது ஜனநாயகத்தின் நான்காவது தூணாண பத்திரிக்கை, மீடியாக்கள் தான்.

நக்கீரன் செய்தியாளர் பிரகாஷ் அவர்கள், ஜெயேந்திரர் முன் பவ்யமாக அமர்ந்து பேட்டி எடுத்தார். நக்கீரன் வெளியிட்டது ஜெயேந்திரரின் அந்த திமிர் பேட்டி தான் குற்றவாளி யார் என்பதை அடையாளம் காட்டியது. அவரை சிறைக்கு அனுப்பிவைத்தது. ஜெயந்திரரின் பேட்டியை நக்கீரன் வெளியிடவில்லையெனில் சங்கராச்சாரியார் தப்பியிருப்பார்.

பத்து ரூபாய் திருடியவனை தேச துரோகம் செய்தது போல் சித்தரிக்கம் மீடியாக்கள் ஜனாதிபதியை தன் காலில் விழ வைத்த சங்கர மடத்தில் ஒரு கொலை நடந்துள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலையாகி போனார்கள், அப்போது குற்றவாளி யார் என்ற கேள்வி கேட்க தயக்கம். தமிழகத்தில் எந்;த மீடியாவுக்கும் தைரியம்மில்லை. இது ‘அவா’ பிரச்சனை என்பதால் ஆங்கில, வட இந்திய மீடியாக்கள் கேள்வி கேட்காது. கேள்வி கேட்டால்?, எழுதினால் என்ன செய்துவிடுவார்கள். உயிர் போய்விடுமா ?.

பிட்பாக்கெட் அடித்து மாட்டிக்கொண்டவனைப்பற்றி மணி கணக்காக தொண்டை தண்ணீர் வத்த நேரலையில் எகிறி குதிக்கும் ஜனநாயகவாதிகள், மனித உரிமை போராளிகள் யாரும், ஊத்தி மூடப்படும் வழக்குகளில் கொலை குற்றவாளி யார் என்ற கேள்வியை கேட்பதில்லை. எல்லா ஓட்டைகளையும் மூடிக்கொள்கிறார்கள்.

இங்கு நீதி விலைக்கு வாங்கப்படுகிறது. இந்த உலகில் பணக்காரன், அதிகாரத்தில் உள்ளவன், அதிகார பீடத்துக்கு மிக நெருக்கமானவர்கள் கொலை, கொள்ளை, ஊழல் என என்ன வேண்டுமானாலும் செய்யலாம். வழக்கு நடக்கும் பின் அதன் மேல் நீர் ஊற்றி அழிக்கப்படும். இதற்கு எல்லா தரப்பும்மே உடந்தையாக இருக்கும்.

இதை மாற்ற மீண்டும் காந்தி, பெரியார், காமராஜர் யார் பிறந்து வந்து போராடினாலும் இந்த சமூகத்தை திருத்த முடியாது. அவர்களையும் கொலை செய்துவிட்டு தடுக்கி விழுந்து செத்தார்கள் என்பார்கள். அதையும் நீதி தலையாட்டி ஏற்றுக்கொள்ளும்.

இந்தியாவில் சட்டம் அனைவருக்கும் சமம் என்கிறார்கள் நிச்சயம் கிடையாது என்பதை அடுத்தடுத்த வழக்குகள் நிரூபித்து வருகின்றன. மக்கள் மந்தை கூட்டமாய் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

போங்காடா நீங்களும் உங்க நீதியும்……….

வெள்ளி, நவம்பர் 15, 2013

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டது யாருக்காக ?.இலங்கையில் உள்ள ஈழப்பகுதியில் 2009ல் தீவிரவாதத்தை ஒழிக்கிறோம் என்ற பெயரில் நடந்த இன சுத்திகரிப்பில் விடுதலைப்புலிகள், பொதுமக்கள் என சுமார் 1 லட்சம் பேர் முள்ளிவாய்க்கால் பகுதியில் கொலை செய்யப்பட்டனர். இந்த கொலையை செய்தது இலங்கை சிங்கள இராணுவ இனவாத அரசாங்கம். போர் முடிவுக்கு பின் கம்பி வேலிக்குள் தமிழ் மக்களின் வாழ்வு முள் கம்பிகளுக்குள் சிக்கி நிர்முலமாக்கப்பட்டது. இனி ஒரு போராட்டம் இந்த மண்ணில் எழக்கூடாது என்ற அச்சத்தில் மக்கள் கூடும், மக்களை ஒண்றிணைக்கும் மாவீரர் துயிலும் இல்லங்களை சுவடில்லாமல் அழித்தனர் இராணுவத்தினர். 

ஈழத்தில் அனைத்தும் அடக்கப்பட்டது. ஈழ அரசியல் தான் தமிழக அரசியலில் பலரை வாழ வைத்து வருகிறது. அதனால் ஈழ துயரத்தை தமிழகத்தில் நிறுவ முயன்றார்கள் தமிழ் தேசியவாதிகள். முள்ளிவாய்க்கால் துயரம் வரலாற்றில் பதிய வேண்டும். தமிழகத்தில் அதற்காக ஒரு நினைவு சின்னம் தமிழர்களின் உதவியோடு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என அறிவித்தார் நெடுமாறன். 

முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு தமிழகத்தில் நினைவு சின்னம் எழுப்பி தமிழக அரசியல் களத்தை அங்கிருந்து சுற்ற வைக்க வேண்டும், அரசியல் செய்ய வேண்டும் என ஆசைப்பட்ட பெரியவர் தஞ்சையில் நடராஜன் ஊருக்கு அருகே அந்த முற்றத்தை கட்டினார். ஜெவின் உற்ற தோழி சசிகலாவின் கணவர் நடராஜனால் தரப்பட்ட நிலத்தில், பணத்தில் கட்டப்பட்ட முற்றத்தை திறந்து வைக்க கொள்ளை புறம் வழியாக ஜெவிடம் தூதுவிட்டு, நீங்கத்தான் வந்து முற்றத்தை திறந்து வைக்கனும் என கேட்டுள்ளார் இந்த பெரியவர். 

ஈழ எதிர்ப்பு என்ற கொள்கையில் உறுதிக்கொண்ட கொண்டைக்காரி எந்த பதிலும் சொல்லவில்லை. காத்திருந்து காத்திருந்து கால் வலித்தபோது முட்டிபோட்டுக்கொண்டு காத்திருந்துள்ளார் இந்த பெரியவர். முட்டி போட்டும் பதில் வரவில்லை. இந்த முற்றத்தை திறந்தால் ஒரு பெரிய அரசியல் விளையாட நினைத்தார் பெரியவர். ஆனால் கொண்டைக்காரி எந்த பதிலும் சொல்லவில்லை. முற்றத்தை திறக்கவும் அனுமதிக்கவில்லை. நீதிமன்றம் உத்தரவால் முற்றத்தை அவரச கோலத்தில் யாருக்கும் தெரியாமல் திறந்தார் பெரியவர். தடை ஏற்படுத்திய கொண்டைக்காரி பற்றி எதுவும் பேசவில்லை. 

நீதிமன்றம் அனுமதித்ததால் நான் அனுமதித்துவிடுவேனா என பாய்ந்துள்ளார் கொண்டைக்காரி. ஆக்ரமிப்பு என்ற காரணத்தை சொல்லி விடிந்தும் விடியாத காலை பொழுதில் அதிகாரத்தின் கால்களை கொண்டு இடித்து தள்ளி முற்றத்தை  மூலிக்கியுள்ளார். நினைக்க நினைக்க கோபம் வரத்தான் செய்கிறது. அப்படி செய்யவில்லையென்றால் தான் நாம் ஜெவை பாராட்ட வேண்டும். 

ஆக்ரமிப்பை அகற்ற வேண்டுமென தேசிய நெடுஞ்சாலை துறை புகார் தந்தது. அதனால் மாநில காவல்துறை பாதுகாப்போடு மாவட்ட நிர்வாகம் இடித்தது. இதற்கும் ஈழத்தாய்க்கும் சம்மந்தம்மில்லை என இப்போதும் கூஜா தூக்கிக்கொண்டு பிரச்சாரம் செய்கிறார்கள் விசுவாசிகள். ஜெ எந்த காலத்திலும் ஈழ நலனுக்காக பேசியதுயில்லை என்பதை அறிந்தும் தங்களது சுய அரசியல் லாபத்துக்hக அவரின் காலடியில் மண்டியிட்டன பெரியவர் உட்பட பல தமிழ் தேசியம் இயக்கத்தினர். எந்த இடத்திலும், எந்த காலத்திலும் தனி ஈழம் ஆதரவு என்ற நிலைப்பாட்டை ஜெ எடுத்ததில்லை. விடுதலைப்புலிகளை அவர் எப்போதும் ஏற்றுக்கொண்டதும்மில்லை. எல்லா காலத்திலும் வன்மத்தை கக்கிதான் உள்ளார். ஈழத்தை ஏற்றுக்கொள்ளாத ஒரு முரட்டு பிடிவாத கொள்கையில் உள்ளார். ஆனால் அவரது ஆஸ்தான தளபதிகளான பழ.நெடுமாறன், வை.கோ, சீமான், தமிழருவி மணியன், தா.பாண்டியன் போன்றோர் கொண்டைக்காரி ஈழத்தை பற்றி காறி துப்பி பேசினாலும் அவர்கள் அனைவரும் கருணாநிதி அன்று அதை செய்யவில்லையா என ஜெ செய்வதை மழுங்கடிக்கும் அரசியல் செய்து ஜெவை ஈழ கடவுளாக சித்தரிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். 

ஈழத்தில் நடந்த படுகொலைக்கு தமிழகத்தில் நினைவு சின்னம் ஏன் அமைக்க வேண்டும் என கேட்டவர்களிடம், ஈழத்தில் அமைக்க முடியாது அதனால் இங்கு அமைக்கப்படுகிறது என பதில் சொல்லப்பட்டது. 


உண்மையில் அது காரணமா என்றால் இல்லை. தமிழகத்தில் முற்றம் அமைப்பதற்க்கு பின்னால் நுணுக்கமான அரசியல் உள்ளது. முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு காரணமான ராஜபக்சேவை விட தமிழகத்தில் உள்ள திமுக மீதும், மத்தியில் காங்கிரஸ் அரசாங்கம் மீதும் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர். குற்றச்சாட்டுகளை மறுப்பதற்க்கில்லை. ஆனால் அதில் பல அபத்தமான குற்றச்சாட்டுகள் உள்ளன. மக்கள் மனதில் ஈழ தோல்விக்கு காரணம், திமுக, கருணாநிதி குடும்பம், காங்கிரஸ், சோனியாகாந்தி என குற்றம் சாட்டி அதில் கலைஞர் கருணாநிதியை ஈழத்துக்கு எதிரானவராக சித்தரித்து வெற்றி பெற்றுள்ளார்கள் பெரியவர் நெடுமாறன், வை.கோ, சீமான், தமிழ்தேசியவாதிகள் உட்பட பலர். அதை தக்க வைக்க வேண்டும் என்ன செய்யலாம். தமிழகத்தில் முற்றம் என்ற ஒன்றை அமைத்து ஆண்டுக்கு ஒருமுறை மக்களை அங்கு திரட்டி ஈழ துரோகி கருணாநிதி என முழங்க வேண்டும் என்ற ஆசையே தமிழகத்தில் முற்றம் அமைக்க காரணம். 

இதன்பின்னால் மற்றொரு மறைமுக அரசியலும் உள்ளது. அது சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு முக்கியத்துவம் தருவது. எதனால் அவருக்கு முக்கியத்துவம்?. ஜெ வுக்கு பின் அதிமுகவின் நிலை கேள்விக்குறி. அதிமுகவை வழி நடத்தப்போவது யார் என்ற கேள்வி எழுந்து நீண்ட காலமாகிவிட்டது. அந்த கேள்விக்கு பதில் நாங்கள் இருக்கிறோம் என்பதை தொண்டர்களுக்கு உணர்த்த விரும்பினாhர் நடராஜன். இதனை மோப்பம் பிடித்ததால் நடராஜனை டம்மியாக்குகிறார் ஜெ. நடராஜனின் ஈழ அரசியல் எதற்கு என்பதை அறிந்தே அதனை தடுக்க ஆரம்பத்தில் இருந்து முயற்சி செய்கிறார். இது நடராஜனுக்கும் தெரியும், நெடுமாறன் அவர்களுக்கும் தெரியும். தடைகளை தாண்டுவதில் விக்ரமாதித்தனாக உள்ளார் நடராஜன். 


ஜெ வுக்கு பின் யார் அதிமுகவை வழி நடத்துவது என்ற பிரச்சனை வரும் போது தனக்கு பக்கபலமாக பலர் இருக்க வேண்டும் என எண்ணுகிறார் நடராஜன். அதனால் தான் ஈழத்துக்கு ஓடி வந்து உதவுகிறார். உதவிக்கு காரணம் நடராஜனிடம் உள்ள ஈழ பாசம் என்றால் அது நகைப்புக்குரியது. 

முற்றம் அமைக்கப்பட்டது நடராஜனின் சொந்த ஊரான விளாரில். முற்றம் கட்டுவதற்க்கு 90 சதவித பணத்தை நடராஜன் தந்துள்ளார். 

முற்றத்தில் ஆண்டுக்கு ஒருமுறை தமிழ் உணர்வாளர்களை அழைத்து கூட்டம் போட்டு கருணாநிதியை வசைப்பாடி நடராஜனை புரமோட் செய்வதே நெடுமாறன் உட்பட பலரின் எண்ணம். இதன் வழியாக நடராஜனுக்கு ஒரு பெரிய அரசியல் அங்கீகாரம் தர வைப்பது. அதிமுகவை தங்கள் வசப்படுத்துவது. இதை நோக்கி காய் நகர்த்துகிறார். இதற்க்கு நெடுமாறன் உதவுகிறார். 

நடராஜன் வளர்ச்சி ஈழ பினத்தை வைத்து வளர்க்கப்படுகிறது. வாழ்க உங்கள் ஈழ பாசம். 

ஞாயிறு, நவம்பர் 10, 2013

முற்றம் அரசியல். ஈழத்தாயை காக்கும் ‘ஈழ’ தளபதிகள்.அம்மா ஆட்சியில் அமர்ந்தால் ஈழத்தை தான் முதலில் பெற்று தருவார் என ஊரெல்லாம் பிரச்சாரம் செய்தனர் பழ.நெடுமாறன், சீமான், வை.கோ, தமிழருவிமணியன் உட்பட பலர். முதல்வாரன ஜெ இன்று முள்ளிவாய்க்கால் நினைவாக தஞ்சை அருகே அமைக்கப்பட்ட முற்றத்தை திறக்க தடை விதிக்க நீதிமன்றத்தை நாடி தோல்வியை தழுவினார். ஈழ துயத்தின் வரலாறு என பிரச்சாரம் செய்யப்பட்ட முற்றத்தை திறக்க தடை விதிக்க முயலும் ஜெவை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேச துணிவில்லாமல் உள்ளார்கள் ஈழத்துக்காக துடிக்கும் இந்த தமிழ்தேசியவாதிகள். 
இன்றும் ஈழத்தாய் என போற்றி புகழ்கிறார்கள். உண்மையில் ஈழ நலனுக்காக சிறிதளவாவுது உழைத்துள்ளாரா என கேட்டால் இல்லை என வார்த்தைகளில் சொல்வதை விட ஜெ வின் கடந்த கால, நிகழ்கால நடவடிக்கைகளை பார்த்தால் புரியும். 

எம்.ஜீ.ஆர் இறப்பதற்க்கு சில ஆண்டுகளுக்கு முன்பு தீவிர அரசியலுக்கு வந்த ஜெவுக்கு ஆரம்பம் முதலே விடுதலைப்புலிகளை பிடிக்காது. ஏன் பிடிக்காது?. இராஜிவ்காந்திக்கு பிடிக்காது, சோ, இந்து ராம், சுப்பிரமணியசாமி போன்ற அவா வகையறாக்களுக்கு பிடிக்காது. அதிமுகவை புரமோட் பண்ணிய உளவு அமைப்புகள், ஆங்கில பத்திரிக்கைகளுக்கு பிடிக்காது. அதனால் அவரது மனதில் விடுதலை புலிகள், ஈழம் பற்றிய நெகட்டிவ் தகவல்களே அவரது மனதில் பதிவாகின. இதனால் புலிகளை கண்டால் பிடிக்காது. 

1989 தமிழகத்தை ஆண்ட திமுக ஆட்சியை கலைக்க விரும்பினார் ராஜிவ்காந்தி. காங்கிரஸ் ஆதரவில் ஆட்சி நடத்திய சந்திரசேகர், அப்போது அமைச்சராக இருந்த தரகர் சுப்பிரமணியசாமி போன்றோர் பெரும் பங்காற்றினர். தமிழகத்தில் திமுகவுக்கு எதிராக விடுதலைபுலிகளின் நண்பர் கருணாநிதி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட காரணம் விடுதலைபுலிகளுக்கு கருணாநிதி செய்யும் உதவிகள் தான் என ஜெ அறிக்கைகளாக விட்டார். 

ஆட்சி பொறுப்புக்கே வராத எதிர்கட்சி வரிசையில் இருந்த ஜெ, தன்னை விடுதலைப்புலிகள் கொல்ல பார்க்கிறார்கள் என பீதியை கிளப்பினார். தன் கட்சி தொண்டனையே விடுதலைபுலிகள் என காவல்துறையினரிடம் பிடித்து தந்தார். ஜெ ஆட்சி பொறுப்பில் இல்லாத போதும், முதல்வராக இருந்தபோது விடுதலை புலிகள் மீது அவதூறு பரப்பிய தகவல்களை தொகுத்தால் தனி புத்தகமே போடலாம் அந்தளவுக்கு தகவல்கள் உள்ளது. அதில் சில……

திமுக ஆட்சியை கலைப்பதில் வெற்றி பெற்ற காங்கிரஸ் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது. தமிழகத்திற்க்கு பிரச்சாரத்துக்கு வந்த ராஜிவ்காந்தி கொல்லப்பட்டவுடன் தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழர்களை நாடு கடத்த வேண்டும் என குரல் கொடுத்தார் ஜெ. 

இராஜிவ்காந்தி கொலையால் அனுதாப அலையில் வெற்றி பெற்ற ஜெ ஆட்சி பொறுப்புக்கு வந்தபின், தமிழகத்தில் ஈழ ஆதரவு மாநாடு, கூட்டம், நோட்டீஸ் அடிச்சடிப்பது உட்பட அனைத்துக்கும் தடை போட்டார். ஈழ பகுதி மீது பொருளாதார தடையை சிங்கள அரசு விதித்த போது பசி பட்டினியால் வாடிய மக்களுக்கு தமிழகத்தில் இருந்து மறைமுகமாக பொருட்கள் செல்ல தடை ஏற்படுத்தினார். ஈழ அகதிகளின் பிள்ளைகளுக்கு தரப்பட்ட இட ஒதுக்கீட்டை ரத்து செய்தார். அவர்கள் படிக்க முடியாமல் செய்தார். ஈழ அகதிகள் அனைவரையும் காவல்நிலையத்தில் கையெழுத்திட வைத்து அவர்களை குற்றவாளிகளாக்கினார். ஈழ அகதிகளை வலுகட்டாயமாக தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு திருப்பி கப்பலில் அனுப்பி வைத்தார். 

இதனை கண்டித்தும், ஈழ மக்களுக்கு ஆதரவாக மாணவர் அமைப்புகள் தமிழகத்தின் சில பகுதிகளில் ஈழ ஆதரவு மாநாடு, கூட்டங்கள் நடத்த முயன்ற போது அவர்களை கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தார் ஜெ. 

முதல்வாரன என்னை புலிகள் கொல்லப்பார்க்கிறார்கள், தற்கொலை படை வீரர்கள் தமிழகத்தில் புகுந்துள்ளார்கள் என சட்டமன்றத்தில் கூறினார் ஜெ. விடுதலை புலிகள் அமைப்பு மீது தடை விதிக்க வேண்டும்மென மத்திய டெல்லி காங்கிரஸ் அரசை நிர்பதித்து வெற்றி பெற்றவர் ஜெ. ( இந்த தடையை நீக்கத்தான் அம்மா விசுவாசிகள் நீதிமன்றத்தில் 21 ஆண்டுகளாக போராடுகிறார்களாம் ). 


திமுக ஆட்சி கலைக்க காரணமாக இருந்த பத்மநாபா கொலை வழக்கை விசாரிக்கிறோம் என கிளம்பிய ஜெ அரசு, திமுக ஆட்சியின் போது உள்துறை செயலாளராக இருந்தவர், விடுதலைபுலிகளுக்கு ஆதரவாக திமுக செயல்பட்டது. பத்மநாபாவை கொன்ற புலிகளை திமுக அரசுதான் கைது செய்ய வேண்டாம் என்றது என அரசு சாட்சியாக இருந்து பதிவு செய்ததால் திமுக முக்கிய பிரமுகர் சுப்புலட்சுமி அவரது கணவர் ஜெகதீசன், திக வழக்கறிஞர் ஒருவர் என 3 பேரை தடா சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தார்.

அவர்கள் மட்டுமல்ல நெடுமாறன், ராமதாஸ், கொளத்தூர்மணி, ராமகிருஷ்ணன், பெருஞ்சித்தனார், சுப.வீரபாண்டியன், மணியரசன், தியாகு போன்றவர்கள் கைது செய்யப்பட்டனர். பலர் தடா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். 

இரண்டாவது முறையாக ஆட்சி பொறுப்புக்கு ஜெ வந்தபோது, விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை இந்தியா கொண்டு வந்து தூக்கில் போட வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்து பாஸ் செய்தார். சென்னையில் சிகிச்சை பெற விரும்பிய ஆன்டன்பாலசிங்கத்துக்கு அனுமதி தரக்கூடாது என அதிமுக மத்தியரசுக்கு கடிதம் எழுதி வெற்றி பெற்றது. 

வை.கோ, நெடுமாறன், சுப.வீரபாண்டியன் உட்பட பலர் ஈழத்தை, விடுதலை புலிகளை ஆதரித்து பேசினார்கள் என பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒராண்டுக்கு மேல் சிறை வைக்கப்பட்டார்கள். 


விடுதலைபுலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து துரோகியாகி இன்றைய அவலத்துக்கு காரணமான கருணாவை கேரளாவில் தங்க வைத்துள்ளது பாதுகாத்த மத்திய புலனாய்வு பிரிவு. கருணா தமிழகம் மறைமுகமாக வந்தபோது ஆதரித்தார் ஜெ என்றும் கூறப்படுகிறது. 

திமுக ஆட்சியின் போது விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர்களில் ஒருவரான தமிழ்செல்வன் விமான தாக்குதலில் பலியான போது, கலைஞர் இரங்கற்பா எழுதினார். ஒரு முதல்வர் எப்படி எழுதலாம் ஆட்சியை கலைத்து கருணாநிதியை கைது செய்ய வேண்டும் என்றார். 

2008ல் ஈழ போரை தடுக்க வேண்டும்மென வை.கோ, நெடுமாறன், சினிமா அமைப்பில் சீமான், அமீர் போன்றோர் ரோட்டில் இறங்கி மறியல், போராட்டம் என போராடிய போது, தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக, ஒரு நாட்டின் இளையான்மைக்கு எதிராக போராயடிவர்களை ஏன் கைது செய்யவில்லை என ஜெ விட்ட தொடர் அறிக்கையால் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தார் கலைஞர். அதே ஜெ, 2009ல் ஈழம் பற்றிய செய்தியாளரின் கேள்விக்கு போர் நடந்தால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என தன் ஈழ பாசத்தை காட்டியவா தான் ஜெ. 

2011ல் மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு வந்த ஜெ முன் நின்றது ராஜிவ்கொலை வழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை தூக்கிலிட வேண்டும் என்ற ஆணையை அனுப்பியது மத்திய காங்கிரஸ் அரசு. முதல்வாரன ஜெவும் தலையசைத்தார். எல்லா தரப்பும் போராடியது. சுட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் ஒரு அறிக்கை படித்தார். அதில் உச்சநீதி மன்ற தீர்ப்பு, மத்திய உள்துறை உத்தரவு, ஜனாதிபதி கருணை நிரகாரிப்பு போன்றவற்றால் இந்த முடிவு எனச்சொல்லி தன் ஈழ பாசத்தை காட்டினார் இந்த ஈழத்தாய். பின் காஞ்சிபுரம் செங்கொடி தீ குளிப்பு வேண்டா வெறுப்பாக தூக்கு எதிரான கருத்தை சொன்னார். இதன்பின் தான் ‘அம்மா’வுக்கு ஈழத்தாய் என்ற பட்டத்தை சீமான் தந்து நாடு போற்ற ஈழத்தாய் என்ற பதத்தை தமிழகம் முழுவதும் பரப்ப தொடங்கினார். 

அந்த ஈழத்தாய் தான் தற்போது தஞ்சை அருகே அமைக்கப்படும் முள்ளிவாய்க்கால் முற்றம் நிகழ்ச்சியை நீதிமன்றம் மூலம் தடுக்கிறார். இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துக்கொள்ளகூடாது என தமிழக இயக்கங்கள் போராட்டத்தை முன்னெடுக்க பலர் அதில் கைது செய்யப்பட்டனர். அதில் முக்கியமானவர் கொளத்தூர் மணி. தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

தமிழகத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் படம் போட்ட பேனர் வைக்க தடை, நோட்டீஸ் தர தடை, பேச தடை மீறினால் வழக்கு பாய்கிறது.

ஆனால் இதனை ‘ஈழத்தாய்’ பட்டம் தந்த சீமான் அவரது தம்பிகள், உள்நாட்டு -  வெளிநாட்டு தமிழர்களின் ‘தலைவராக’ புரமோட் செய்யப்படும் நெடுமாறன், பேச்சுப்புலி வை.கோ போன்ற பலர் இதனை கண்டிக்காமல் செலக்ட்டிவ் அம்னிஷியா தாக்கியவர்களாக ஆட்சி பொறுப்பிலே இல்லாத திமுக தலைவரை திட்டிக்கொண்டு இருக்கிறார்கள். 

ஈழ நலனுக்கு எதிராக ஜெ அப்போதும் செயல்பட்டார். இப்போதும் செயல்படுகிறார். எப்போதும் செயல்படுவார். அது அவரது சுபாவம்.

இதை ‘ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசிகள் மறக்கலாம். வரலாற்றின் பக்கத்தில் பதிவானதை மறைக்க பார்க்கலாமா ? 

கர்நாடகாவை பாருங்கள் .

தமிழக அரசால் இயக்கப்படும் பேருந்துகளில், அரசால் விற்பனை செய்யப்படும் தண்ணீர் பாட்டிலில் இரட்டை இலை பொறிக்கப்பட்டது. (இரட்டை இலைன்னு சொல்லக்கூடாது பறக்கும் குதிரையின் வால், செடிகொடிகள் என சொல்ல வேண்டும்) அடுத்ததாக சென்னையில் இயக்கப்பட போகும் மெட்ரோ இரயிலில் இரட்டை இலையை வரைய  திட்டமிடுகிறது ஜெ அரசு.

உத்தரபிரதேசத்தில் மாயவதி முதல்வராக இருந்தபோது மக்கள் பணத்தில் ஊருக்கு ஊர் தன் சிலைகளையும், தன் கட்சி சின்னமான யானையை நிறுவியது போன்று தான் இதுவும். இது ஒரு விதமான மன வியாதி. மாயாவதியின் செயலை உச்சநீதிமன்றம் கண்டித்தது. இதேபோல் கண்டிப்பார்கள் என எதிர்பார்த்தே தற்போது திமுக பொருளாளர் ஸ்டாலின் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அம்மாவின் வழக்கறிஞர்கள் வைக்க போகும் வாதத்தை கேட்டு உயர்நீதிமன்ற நீதிபதியென்ன, உச்சநீதிமன்ற நீதிபதியே சாலையில் ஓடுவது பேருந்தல்ல. மாயாஜால கதைகளில் வரும் பறக்கும் ஜமக்காளம் அதில் வரையப்பட்டுயிருப்பது இலைகள் இல்லை பறக்கும் இறக்கைகள் என சொல்லுவார். அந்தளவுக்கு திறமைசாலிகள் ஜெவால் நியமிக்கப்படும் வழக்கறிஞர்கள்.

அதைவிடுவோம், பேருந்துகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என அறிய கர்நாடகாவுக்கு தமிழக ஆளும் வர்கம் ஒரு சுற்றுப்பயணம் சென்று வந்தால் சிறப்பாக இருக்கும். கர்நாடகா மாநிலத்தில் பெரும்பாலான பேருந்துகள், தனியார் இயக்கும் பேருந்துகள் மற்றும் அலட்ரா கோச் பேருந்துகளின் பின்புறம், பக்கவாட்டில் அந்த மாநிலத்தில் உள்ள சுற்றுலா தளங்களை படங்களாக வரைந்து பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்துகின்றனர். பேருந்துகளில் மட்டுமல்ல பேருந்து நிலையங்களிலும் அருகில் உள்ள சுற்றுலா தலங்கள் பற்றிய தகவல்களை பதிவு செய்து வைத்துள்ளார்கள். இதன் மூலம் சுற்றுலா துறை வளர்ச்சியடைகிறது. புதியதாக கர்நாடகாவுக்கு மாநிலத்துக்கு செல்பவர்கள் யாரும் சொல்லாமலே அந்த மாநிலத்தில் உள்ள சுற்றுலா தலங்களை அறிந்துக்கொள்ள முடிகிறது.

அந்த மாநிலத்திலும் அரசியல் கட்சிகள் உள்ளன. அவர்களும் மாறி மாறி ஆட்சி பீடத்தில் அமருகிறார்கள். அங்கும் மக்கள் பணத்தில் இலவச திட்டங்களை செயல்படுத்துகிறார்கள். ஆனால் மக்கள் பணத்தில் செய்யப்படும் திட்டத்தில் கட்சி சின்னங்களை அவர்கள் பயன்படுத்துவதில்லை.

தமிழகத்தில் அம்மா உணவகம், அம்மா மினரல் வாட்டர் கொண்டு வந்ததை போல அம்மா சிறப்பு கழிப்பிடம், அம்மா அழகுநிலையம் ஆரம்பிப்பதோடு அரசு பள்ளியை அம்மா பள்ளி என்றும், டாஸ்மாக் கடையை அம்மா மதுவிற்பனையகம் என்றும் ஃபாரை அம்மா குடிப்பகம் என்றும் பெயர் மாற்றி அங்கும் பறக்கும் குதிரையின் வால், செடிகொடிகளின் படத்தை போட்டுவிட்டால் தேர்தலின் போது விளம்பரம்மே செய்ய தேவையில்லை. வெற்றி உங்களுக்கு தான். என்னது தேர்தல் நேரத்தல எதிர்கட்சிங்க விளம்பரம் செய்யும்மேன்னு யோசிக்கறது கேட்குது தாயீ. நீங்க கவலைப்படாதிங்க. எங்க மக்கள் ஓட்டுக்கு எவ்ளோ தருவீங்கன்னு பார்ப்பானே தவிர நீங்க என்ன பெயர் வச்சிங்கன்னு பாக்கமாட்டான் தாயீ. அப்படி பாத்தான்னா அவன் தமிழனேயில்ல தாயீ.

சனி, நவம்பர் 09, 2013

இலை மலர்ந்தால் ஈழம் மலரும்……மீண்டும் வருவார்கள் ஈழ வியாபாரிகள்.நம்புங்கள் இலை மலர்ந்தால் நிச்சயம் ஈழம் மலரும். இது தான் தமிழ்தேசியவாதிகள் வரும் பாராளமன்ற தேர்தலின் போது வைக்கப்போகும் பிரச்சார வாக்கியம்.

சட்டமன்ற தேர்தலின் போது ‘தமிழர்களின் ஒட்டுமொத்த பிரதிநிதி பழ.நெடுமாறன், விடுதலைப்புலிகளின் புதிய செயல்தளபதி சீமான்’, ( தேர்தலை புறக்கணித்து வை.கோவும் மறைமுகமாக அதிமுகவுக்கு சாதகமாகவே செயல்பட்டார் ) போன்றோர் இலையை மலர வையுங்கள் ஈழம் நிச்சயம் மலரும் எனச்சொல்லி வாக்கு கேட்டார்கள். தமிழ்தேசியவாதிகள் உருவாக்கிய வாக்கியம் தான் அது. இலை மலர்ந்தது. மகிழ்ந்தார்கள் தமிழ் தேசியவாதிகள். சட்டமன்றத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை திட்டியபோது ஈழம் கிடைத்துவிட்டது என பூரித்து போன தலைவர், தளபதிகள் ஜெவுக்கு ‘ஈழத்தாய்’ என பட்டம் தந்து பாராட்டினார்கள்.

இரண்டு ஆண்டுக்கு முன் நெடுமாறன், ஈழத்தாயின் தோழியான சசிகலாவின் கணவர் நடராஜன் மூலம் இலங்கையில் நடந்த ஈழ போருக்கு தமிழகத்தில் நினைவகம் அமைத்தார். அதற்கு பெயர் முற்றம். அதை அமைக்காமல் தடுத்தார் ஈழத்தாய். நெடுமாறன் வாய் திறக்கவில்லை. அமைதியாக இருந்தார். பின் மறைமுக தூதுவிட்டு எங்கள் அரசியல் இதில் தான் உள்ளது என சொல்லி மீண்டும் தடங்கல் வராமல் பணியை தொடங்கினார். இதற்கு செலவான தொகை நடராஜன் பணம் என்பது நாடறிந்த ரகசியம்.

கட்டி முடிக்கப்பட்ட முற்றம் 2013 நவம்பர் 8, 9, 10 தேதிகளில் திறக்கப்பட்டு நிகழ்வுகள் நடத்தப்படும் துரோகிகளுக்கு அழைப்பில்லை என்றார் நெடுமாறன். ஆனால் யாருக்கும் தெரியாமல் கடந்த 6ந்தேதியே முற்றத்தை திறந்துவிட்டார் நெடுமாறன். முற்றம் திறக்கவிடாமல் சிலர் முயற்சிக்கிறார்கள் அதனால் முன்கூட்டியே திறந்தோம் என அறிவித்தார். தடைபோடும் அந்த சிலர் யார் என்பதை அவர் மூச்சுவிடவில்லை. நெடுமாறன் அடிப்பொடிகளோ, மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு என சொல்லிவருகிறது. அவர்கள் திட்டமிட்டு மறைப்பது அந்த சிலரில் ஜெ அரசும் உள்ளது என்பதை. ஜெ அரசு தான் நீதிமன்றம் மூலம் தடுக்க நினைத்தது. கொளத்தூர் மணி அவர்களை கைது செய்து மறைமுகமாக அதனை வெளிப்படுத்தி தங்களது நிலைப்பாட்டை காட்டியது. தமிழகத்தை ஆளும் ஈழத்தாய் நெருக்கடி தருவதால் தான் முன்கூட்டியே திறக்கப்பட்டது என்ற உண்மையை சொல்லாமல் காங்கிரஸ் அரசு பக்கம் கல்லை எறிகிறார்கள். அது தப்பல்ல. காங்கிரஸ்க்கு ஈழ படுகொலையில் மாபெரும் பங்குண்டு. அதேபோல் மத்திய காங்கிரஸ் சொல்வதை செயல்படுத்தும் ஜெ அரசுக்கும் பங்கு உண்டு தானே. அப்படியிருக்க ஜெ பெயரை சொல்லாமல் போவது ஏன் ?.

காரணம், பாராளமன்ற தேர்தல்.

பாராளமன்ற தேர்தலில் ஈழத்தாயை செங்கோட்டையை ஆள வைக்க துடிக்கிறார்கள் இந்த தமிழ்தேசியவாதிகள். தேர்தலில் தாயின் ஈழத்தாய் பிம்பம் உடைந்துவிடக்கூடாது. அதனால் தான் தடை போடும் தாயின் மறுப்பக்கத்தை மறைக்கிறார்கள்.

பிரச்சாரத்துக்கு வரும் அவர்களிடம் சட்டமன்ற தேர்தலின் போது, சட்டமன்ற தேர்தலின்போது இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்றீர்கள். இலை தான் மலர்ந்ததே என நீங்கள் கேட்டால் அவர்கள் பதில், பிரச்சாரத்தை நீங்கள் முழுமையாக உள்வாங்கவில்லை. இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று சொன்னோம். தமிழகத்தில் தானே இலை மலர்ந்துள்ளது. இந்த இலை டெல்லியில் மலர வேண்டும். அப்போது தான் ஈழம் மலரும் அதனால் அம்மாவை பல்லக்கில் உட்கார வைத்து நாம் டெல்லிக்கு அனுப்பினால் அவர் பிரதமராகி இலங்கையை உடைத்து ஈழ நாட்டை பெற்று தருவார் என சொல்வார்கள். நெடுமாறன், வை.கோவுக்கும், சீமானுக்கும் பேச கற்று தர வேண்டுமாயென்ன ?. பொய்யை உண்மையாக பேசுவதில் வல்லவர்கள் அவர்கள்.

நீங்கள் அதை நம்பி வாக்களிக்க வேண்டும். அப்போது தான் நீங்கள் தமிழன் இல்லையேல் நீங்கள் துரோகிகள். இந்த தமிழ்தேசியவாதிகள் பாம்பு கொத்தாது என்றால் நீங்கள் நம்ப வேண்டும். மீறி கேள்வி கேட்டால் உங்களை துரோகிகளாக்கிவிடுவார்கள்.

2009ல் ஈழத்தில் போர் நடந்தபோது உலகநாடுகள் ஈழ தமிழனத்துக்கு துரோகம் செய்தபோல தமிழகத்தில் நடமாடும் இன்றளவும் நாங்களே பிரதிநிதிகள் என அறைகூவல் விடுக்கும் பழ.நெடுமாறன், வை.கோ போன்றவர்களுக்கு பெரும் பங்குண்டு. ஆனால் அதை தங்களது வாய்பேச்சு, ஊடகங்கள் மூலமாக திசை திருப்பினார்கள். திமுக அதற்காக காப்பாற்ற போராடியது என அர்த்தமல்ல. மாநில கட்சிகளால் எந்தளவுக்கு இந்த விவகாரத்தில் செயல்பட முடியும் என்பது அரசியலில் கொட்டை போட்ட நெடுமாறன், வை.கோ போன்றவர்களுக்கு தெரியாததல்ல. ஆனாலும் திமுகவை குற்றம் சாட்டினார்கள்.

அவர்களின் நோக்கம் நியாயமாக, ஈழ மக்களுக்காக சிந்திப்பதல்ல. ஈழ பினங்களின் மீது அரசியல் செய்து தங்களுக்கு தோதான அதிமுக மலர வேண்டும் திமுகவை அரசியல் களத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற வேட்கை தான் காரணம். அதை செய்தார்கள். வென்றார்கள். அதனால் தான் ஜெ அரசு தற்போது நுணுக்கமாக ஈழ தமிழனத்துக்கு எதிராக பல பிரச்சனைகள் செய்தாலும் அதை கண்டும் காணாமல் இருக்கிறார்கள் தமிழ்தேசியவாதிகள்.


அவர்கள் தான் மக்களை சந்திக்க மீண்டும் வரப்போகிறார்கள். இலை மலர்ந்தால் ஈழம் மலரும். அந்த இலை டெல்லியில் மலர வேண்டும். அம்மா பிரதமராக வேண்டும் என கேட்கபோகிறார்கள்.

ஒருவேளை அம்மா பிரதமாராகி ஈழத்தாயை பாரததாய் என வர்ணிக்கும் இந்த நெடுமாறன், வை.கோ, சீமான் வகையறாக்களிடம் ஏன் இன்னும் ஈழம் மலரவில்லையென நீங்கள் கேட்டீர்கள் என்றால், அதற்கு உலக நாடுகளின் ஆதரவு தேவை அதனால் ஐ.நா சபை செயலாளராக பாரத தாயின் போர் படை தளபதி அண்ணன் ஓ.பி.எஸ் சை ஐ.நா சபை செயலாளராக்க அம்மா முடிவு செய்துள்ளார். அவர் ஐ.நா சபை செயலாளரானதும் ஈழம் மலர்ந்துவிடும் என்பார்கள் நாம் கை தட்டி வரவேற்க வேண்டும். இல்லையேல் நீங்கள் தமிழன துரோகிகள் என முத்திரை குத்தப்படுவீர்கள்.

சனி, நவம்பர் 02, 2013

பார்வையாளனை கடித்து குதறிய ஓநாய் ........

மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்கு தரப்பட்ட அதீத விமர்சனம்மே அந்த படத்தை பார்க்கும் ஆசையை அடக்கிவிட்டது. இன்று  விஜய் டிவியில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு படத்தை லாஜிக்கே  இல்லாமல் அறிமுக இயக்குநர்கள் கூட தற்போது எடுப்பதில்லை என்பதே என் கருத்து. 

மிஷ்கின் கல்லறையில் குழந்தைக்கு கதை சொல்லுவது படத்தின் மாஸ்டர் பீஸ் என வர்ணித்திருந்தார்கள். அந்த கதை நன்றாக இருந்ததே தவிர கதை சொல்லப்படும் போது பார்வையாளன் மனதில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அந்த காட்சியில் உணர்ச்சியும்மில்லை. கண் தெரியாமல் நடித்தவர்கள் இயந்திரம் போலவே நடித்தார்கள் என்பதே உண்மை. எந்த இடத்திலும் படத்தோடு ஒன்ற முடியவில்லை. 

படத்தில் இளையராஜாவின் இசையை ஆஹோ ஓஹோ என புகழ்ந்தார்கள். இந்த படத்தில் எதற்காக இப்படியொரு பின்னணி இசை என்பதை படத்தை பார்த்த என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. இளையராஜா மிஷ்கினை பழிவாங்கினாரா? இல்லை இசையை பழிவாங்கினாரா? என்பதை அவருக்கே வெளிச்சம்.

இதே படத்தை வேறு யாராவது எடுத்திருந்தால் துவைத்து தொங்கவிட்டுயிருப்பார்கள் சில விமர்சகர்கள். வேறு சிலர் முகநூலில், பிளாக்கில் எழுதிய விமர்சனம் நிச்சயம் படத்துக்கானதில்லை. அவர்களின் நண்பன் மிஷ்கினுக்கானது என்பதை இப்போது உணரமுடிந்தது. நண்பனுக்காக ஆஹா ஓஹோ என புகழ்ந்துவிட்டார்கள். 

இதை கேட்டு நாம் உலகளாவிய படத்தை எடுத்துவிட்டோம் என நம்பியே என்னவோ மிஷ்கினும் தான் சினிமாவை காக்க வந்த ரட்சகர் போல் பேச தொடங்கிவிட்டார். அவர் மட்டுமல்ல பல இயக்குநர்கள் அப்படித்தான் பேசுகிறார்கள். இதுபோன்ற புகழ்ச்சிக்கு பலியானவர்கள் தான் மணிரத்னம், சேரன், ராம் போன்றவர்கள். சினிமாவை யாரும் காப்பாற்ற தேவையில்லை. சினிமா மூலம் உங்களை காப்பாற்றிக்கொள்ளுங்கள். 


மிஷ்கின் இலக்கியம், சினிமா இரண்டு தளத்தில் இயங்க ஆசைப்படுகிறார். அதில் தப்பில்லை. ஆனால் இரண்டையும் போட்டு குழப்பிக்கொண்டு படம் எடுப்பது தான் தவறு. 

இலக்கியம் என்பது பாமர ரசிகனுக்கு என்றும் புரிந்ததில்லை. இலக்கியவாதிகள் புரியவைப்பதும்மில்லை. புரியாமல் படத்தையும் எடுத்தால் எப்படி சரியாக இருக்கும். சினிமா பார்க்க வரும் ரசிகனுக்கு குழப்பமான இலக்கிய கதை தேவையில்லை. ஜாலியான ரசிக்கும் தன்மையுடைய சினிமாவே தேவை. 

மாற்று சினிமா என பேசி அவன் கழுத்தை அறுக்காமல் இருந்தால் போதுமானது. மாற்று சினிமாவுக்கான களம் தமிழகம் இல்லை என்பதை முதலில் உணர்ந்துக்கொள்ள வேண்டும். அதற்கு ஏற்றாற்போல் படம் எடுத்தால் ரசிகர்கள் ரசிப்பார்கள். 

மிஷ்கின் சரியாக தான் படத்துக்கு தலைப்பு வைத்திருந்தார். ஓநாயிடம் சிக்கிய ஆட்டுக்குட்டியாகி போயிருப்பார்கள் ரசிகர்கள். 
விஜய் டிவிக்கு நன்றி. (அடிக்கடி விளம்பரம் போட்டு ஓநாயிடம் இருந்து தப்ப வைத்ததற்க்கு)

கொள்ளையடிக்கும் ஹோட்டல்கள் .........


நீண்ட நாட்களாக மனதில் இருந்த விஷயம் திருவண்ணாமலை ஹோட்டல்கள் பற்றி எழுத வேண்டும் என்பது. ஆனால் அது தள்ளி தள்ளி போய்க்கொண்டேயிருந்தது. முகநூலில் இயங்கும் திருவண்ணாமலையை சேர்ந்த ரவீந்திரன் என்பவர் கிருஷ்ணகிரியில் உள்ள ஷீபா ரெஸ்டாரென்ட்டோடு திருவண்ணாமலையில் உள்ள ஸ்டார் பிரியாணி ஹோட்டலை ஒப்பிட்டு எழுதி நீண்ட நாட்களாக என் மனதில் உள்ள விஷயத்தை எழுத வைத்துவிட்டார்.

நான் ஊர் சுற்றும் புறா. வாரத்தில் நான்கு நாள் வேலை நிமித்தமாக பயணித்துக்கொண்டே இருப்பேன். கடந்த 10 வருடங்களாக பயணம் செய்துக்கொண்டே இருக்கிறேன். அதில், மதிய உணவு வீட்டில் உண்ட நாட்களை எண்ணிவிடலாம். பல நாட்கள் காலை அ இரவு உணவு கூட ஹோட்டல் தான். திருவண்ணாமலை, வேலூர் மாவட்டத்தில் நான் சாப்பிடாத ஹோட்டல் மிக மிக குறைவு. பெரிய ஹோட்டல் முதல் கையேந்திபவன் வரை எதுவாக இருந்தாலும் உணவு ருசியாக இருந்தால் அந்த ஹோட்டலை பற்றி ‘மார்க்கெட்டிங்’ செய்ய தொடங்கிவிடுவேன். மாதத்தின் முதல் வாரம் ஸ்பார்சா என்றால் மாத கடைசியில் கையேந்திபவன். ஸ்பார்சா முதல் சில கையேந்திபவன் வரை நானும் சில நண்பர்களும் வாடிக்கையாளர்கள்.

நீண்ட ஆண்டுகளாக ஹோட்டல்கள் வளர்ச்சி, உணவின் தரம், விலை உயர்வு எப்படி என்பதை அறிந்து வருகிறேன். தற்போது திருவண்ணாமலையில் உள்ள ஹோட்டல்களில் சாப்பிட உட்கார்ந்தால் அய்யோ பட்டினியாக இருந்து விடலாம் என நினைக்கும் அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. உயர்ந்துள்ளது என்பதை விட உயர்த்தியுள்ளார்கள்.

நடுத்தர வசதிகள் கொண்ட திருவண்ணாமலையில் பெரு நகரங்களைவிட அதிகமாக உணவுகளின் விலையை உயர்த்தியது. ஹோட்டல் கண்ணா குழுமம். சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த ஹோட்டலில் விதவிதமான உணவுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதோடு, உணவு ருசியாக இருந்தது என நிறைய வாடிக்கையாளர்கள் வாடிக்கையாக சென்றனர். ஹோட்டலை அலங்காரம் செய்த முதலாளிகள் அலங்காரத்தை காட்டி உணவு பொருட்களின் விலையை உயர்த்தினர். விலை ஏற்றம் பின் படிப்படியாக உயர்ந்தது. இந்த ஹோட்டலை பார்த்துவிட்டு நளா, அபிராமி, ஆகாஷ், தீபம், பாலாஜிபவன் போன்ற மற்ற ஹோட்டல்களும் விலையை உயர்த்தின. இதற்கு அடுத்த நிலையில் உள்ள ஹோட்டல்களும் விலையை உயர்த்தின. உணவின் தரத்தை உயர்த்தாமல் விலையை மட்டும் உயர்த்தினார்கள் என்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும்.

தற்போது திருவண்ணாமலை நகரத்தில் உள்ள ஹோட்டல்களில் உள்ள விலை பட்டியலோடு வேலூர் மாநகரத்தில் உள்ள ஹோட்டல்களின் விலையுடனோ அல்லது விழுப்புரம், பாண்டிச்சேரி, பெங்களுரூவில் உள்ள நடுத்தர ஹோட்டல்களின் விலையோடு ஒப்பிட்டால் பஸ் ஏறிப்போய் இதில் ஏதாவது ஒரு ஊரில் குடும்பத்தோடு சாப்பிட்டுவிட்டு வந்துவிடலாம் என்ற அளவில் உள்ளது. மேலே குறிப்பிட்ட சைவ உணவு ஹோட்டல்களில் மட்டுமல்ல அசைவ உணவு ஹோட்டல்களிலும் இதே நிலை தான்.


திருவண்ணாமலை அசைவ பிரியர்கள் ஸ்டார் ஹோட்டல் பிரியாணியை ஆஹா, ஓஹோ என புகழ்வார்கள். (வாணியம்பாடி காஜா ரெஸ்டாரென்ட், ஆம்பூர் ஸ்டார் ஹோட்டல், வேலூர் அம்மா பிரியாணி, பாண்டிச்சேரி காமாட்சி குழுமம், செட்டிநாடு, விழுப்புரம் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட்டவர்கள் திருவண்ணாமலை ஸ்டார் பிரியாணியை புளி சாதம் என்பார்கள்). ஸ்டார் ஹோட்டலில் சொல்லப்படும் விலையை கேட்டால் பிர்லாவுக்கே பேதியாகிவிடும். ஸ்டாரை போலத்தான் நளாவிலும். இவர்கள் பணத்தை புடுங்குவதில் குறியாக உள்ளார்களே தவிர வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் எண்ணம்மேயில்லை.

மேலே குறிப்பிட்ட சைவ, அசைவ ஹோட்டல்கள் மட்டுமல்ல பெரிய ஹோட்டல்களாக உள்ள ராமகிருஷ்ணா, திரிசூல், ஸ்பார்சா, அபர்ணா, (இப்போதைக்கு பெரிய ஹோட்டல்) உட்பட இவர்கள் யாருக்கும் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம்மில்லை. பணம் சம்பாதிக்க வேண்டும் அவ்வளவே. விருப்பத்துக்கு ஏற்றாற்போல் விலை. பௌர்ணமி நாட்களில் இவர்கள் வைப்பது தான் விலை. விலை பட்டியல் ஒன்றிரண்டு ஹோட்டல்களை தவிர வேறு எந்த ஹோட்டலிலும் கிடையாது. வெளியூர்க்காரர்கள் கோயிலுக்கு வந்தால் அவன் இனிமேல் ஹோட்டலில் சாப்பிடவே கூடாது என நினைக்கும் அளவுக்கு பர்சை காலியாக்கும் வித்தை தெரிந்தவர்கள் திருவண்ணாமலை ஹோட்டல்காரர்கள்.

ஏமாற்றுபவர்கள், கொள்ளைக்காரர்கள், மக்களை முட்டாளாக நடத்தியவர்களை திருவண்ணாமலை மக்கள் எப்படி புறக்கணித்துள்ளார்கள் என்பதற்கு சாட்சியங்கள் உருவாகியுள்ளன. திருவண்ணாமலையில் கோலோச்சிய நகை கடைகள், துணிக்கடைகள் எல்லாம் இப்போது காற்றாட துவங்கிவிட்டன. காரணம், மக்களின் ரசனை, அவர்கள் மீதான வெறுப்பு போன்றவை மனதில் இருந்தன. இந்தியா முழுக்க கிளை வைத்திருக்கும் ஜிவல்லரிகள், தமிழகம் முழுக்க கிளை வைத்திருக்கும் துணி கடைகள் திருவண்ணாமலைக்கு வந்ததும் மக்கள் அப்படியே அங்கு செல்ல துவங்கிவிட்டனர். தரத்துக்கு ஏற்ற விலை என்பதை அறிந்தனர். வாடிக்கையாளர்களின் நலனில் அக்கறை கொள்ளும் பிரபல ஹோட்டல்கள் திருவண்ணாமலையில் கிளை வைத்தால் நிச்சயம் உணவின் தரத்திலும், விலையிலும் ஒரு மாற்றம் வரும். மக்களை ஏமாற்றும் இது போன்ற ஹோட்டல்கள் புறக்கணிக்கப்படும்.