ஞாயிறு, நவம்பர் 10, 2013

கர்நாடகாவை பாருங்கள் .

தமிழக அரசால் இயக்கப்படும் பேருந்துகளில், அரசால் விற்பனை செய்யப்படும் தண்ணீர் பாட்டிலில் இரட்டை இலை பொறிக்கப்பட்டது. (இரட்டை இலைன்னு சொல்லக்கூடாது பறக்கும் குதிரையின் வால், செடிகொடிகள் என சொல்ல வேண்டும்) அடுத்ததாக சென்னையில் இயக்கப்பட போகும் மெட்ரோ இரயிலில் இரட்டை இலையை வரைய  திட்டமிடுகிறது ஜெ அரசு.

உத்தரபிரதேசத்தில் மாயவதி முதல்வராக இருந்தபோது மக்கள் பணத்தில் ஊருக்கு ஊர் தன் சிலைகளையும், தன் கட்சி சின்னமான யானையை நிறுவியது போன்று தான் இதுவும். இது ஒரு விதமான மன வியாதி. மாயாவதியின் செயலை உச்சநீதிமன்றம் கண்டித்தது. இதேபோல் கண்டிப்பார்கள் என எதிர்பார்த்தே தற்போது திமுக பொருளாளர் ஸ்டாலின் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அம்மாவின் வழக்கறிஞர்கள் வைக்க போகும் வாதத்தை கேட்டு உயர்நீதிமன்ற நீதிபதியென்ன, உச்சநீதிமன்ற நீதிபதியே சாலையில் ஓடுவது பேருந்தல்ல. மாயாஜால கதைகளில் வரும் பறக்கும் ஜமக்காளம் அதில் வரையப்பட்டுயிருப்பது இலைகள் இல்லை பறக்கும் இறக்கைகள் என சொல்லுவார். அந்தளவுக்கு திறமைசாலிகள் ஜெவால் நியமிக்கப்படும் வழக்கறிஞர்கள்.

அதைவிடுவோம், பேருந்துகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என அறிய கர்நாடகாவுக்கு தமிழக ஆளும் வர்கம் ஒரு சுற்றுப்பயணம் சென்று வந்தால் சிறப்பாக இருக்கும். கர்நாடகா மாநிலத்தில் பெரும்பாலான பேருந்துகள், தனியார் இயக்கும் பேருந்துகள் மற்றும் அலட்ரா கோச் பேருந்துகளின் பின்புறம், பக்கவாட்டில் அந்த மாநிலத்தில் உள்ள சுற்றுலா தளங்களை படங்களாக வரைந்து பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்துகின்றனர். பேருந்துகளில் மட்டுமல்ல பேருந்து நிலையங்களிலும் அருகில் உள்ள சுற்றுலா தலங்கள் பற்றிய தகவல்களை பதிவு செய்து வைத்துள்ளார்கள். இதன் மூலம் சுற்றுலா துறை வளர்ச்சியடைகிறது. புதியதாக கர்நாடகாவுக்கு மாநிலத்துக்கு செல்பவர்கள் யாரும் சொல்லாமலே அந்த மாநிலத்தில் உள்ள சுற்றுலா தலங்களை அறிந்துக்கொள்ள முடிகிறது.

அந்த மாநிலத்திலும் அரசியல் கட்சிகள் உள்ளன. அவர்களும் மாறி மாறி ஆட்சி பீடத்தில் அமருகிறார்கள். அங்கும் மக்கள் பணத்தில் இலவச திட்டங்களை செயல்படுத்துகிறார்கள். ஆனால் மக்கள் பணத்தில் செய்யப்படும் திட்டத்தில் கட்சி சின்னங்களை அவர்கள் பயன்படுத்துவதில்லை.

தமிழகத்தில் அம்மா உணவகம், அம்மா மினரல் வாட்டர் கொண்டு வந்ததை போல அம்மா சிறப்பு கழிப்பிடம், அம்மா அழகுநிலையம் ஆரம்பிப்பதோடு அரசு பள்ளியை அம்மா பள்ளி என்றும், டாஸ்மாக் கடையை அம்மா மதுவிற்பனையகம் என்றும் ஃபாரை அம்மா குடிப்பகம் என்றும் பெயர் மாற்றி அங்கும் பறக்கும் குதிரையின் வால், செடிகொடிகளின் படத்தை போட்டுவிட்டால் தேர்தலின் போது விளம்பரம்மே செய்ய தேவையில்லை. வெற்றி உங்களுக்கு தான். என்னது தேர்தல் நேரத்தல எதிர்கட்சிங்க விளம்பரம் செய்யும்மேன்னு யோசிக்கறது கேட்குது தாயீ. நீங்க கவலைப்படாதிங்க. எங்க மக்கள் ஓட்டுக்கு எவ்ளோ தருவீங்கன்னு பார்ப்பானே தவிர நீங்க என்ன பெயர் வச்சிங்கன்னு பாக்கமாட்டான் தாயீ. அப்படி பாத்தான்னா அவன் தமிழனேயில்ல தாயீ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக