வெள்ளி, நவம்பர் 29, 2013

சங்கரமடத்துக்கான நீதி - அதிகாரத்துக்கான நீதி.......


காஞ்சி பீடத்தின் சங்கராச்சாரியார்களான ஜெயேந்திரர், விஜயேந்திரர் இருவரும் கடந்த 2004 ஆம் ஆண்டு தங்களுக்கு குடைச்சல் தந்த வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமனை கூலி படையை ஏவி படு கோரமாக கோயிலுக்குள் படுகொலை செய்ததாக வழக்கு பதிவு செய்து 2004ல் ஜெ அரசால் கைது செய்யப்பட்டார்.

1873 பக்க குற்றப்பத்திரிக்கை, 712 ஆவணங்கள், 371 சாட்சிகள். 23 குற்றவாளிகள்.

அந்த வழக்கு தமிழகத்தில் நடந்தது பின்னர் புதுச்சேரிக்கு மாற்றப்பட்டது. தமிழகத்தில் வழக்கு விசாரணை நடைபெற்ற போது, அரசு சாட்சியாக அப்ரூவராக மாறியிருந்த கூலிப்படையை ஏற்பாடு செய்த ரவிசுப்பிரமணியம், கொல்லபட்ட சங்கரராமன் மனைவி, மகன், மகள் உட்பட அனைவரும் சங்கராச்சாரியார்களுக்கு எதிராகவே சாட்சி சொன்னார்கள். வழக்கு புதுவைக்கு மாற்றப்பட்டபின் அரசு சாட்சியாக இருந்த சங்கரராமன் மனைவி, மகன், மகள், ரவிசுப்பிரமணியம் உட்பட 83 பேர் முன்பு தாங்கள் தந்த வாக்குமூலத்தை மாற்றி பிறழ்சாட்சியாகி போனார்கள்.

வழக்கு விசாரணையின் போது, வழக்கை விசாரித்த நீதிபதியுடன் போனில் ஜெயேந்திரர் பேரம் பேசுகிறார். அந்த சி.டியை மையமாக வைத்து தமிழக போலிஸ் விசாரணை நடத்துகிறது. அந்த சி.டி கரப்ட்டாகிவிட்டது. அதனால் அதில் உள்ளதை ஆராய முடியவில்லை என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்கிறது. அந்த வழக்கு ஊத்தி மூடப்படுகிறது.

9 ஆண்டுகளுக்கு பின் நவம்பர் 27ந்தேதி புதுவை நீதிமன்ற நீதிபதி முருகன், அரசு எதையும் நிரூபிக்கவில்லை, 83 சாட்சிகளும் பிறழ்சாட்சியாகி போனார்கள். அதனால் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்கிறேன் என தீர்ப்பு எழுதி 23 பேரை விடுதலை செய்துவிட்டார். அவர் சட்ட புத்தகம் சொல்வதை கூறிவிட்டு சென்றுவிட்டார்.

சரி சங்கரராமனை கொலை செய்தது யார் ?.

நீதிமன்றம், காவல்துறை, அரசாங்கத்திடம் கேள்வி கேட்க யாரும் தயாராகயில்லை. கேட்டாலும் பதில் சொல்ல தயாராகயில்லை. சங்கரராமன் மட்டுமல்ல, தா.கிருஷ்ணன் போன்றவர்கள் கொடூரமாக கொலை செய்யபட்டார்கள். கொலையாளிகள் என சிலரை பிடித்து சிறையில் அடைக்கப்பட்டு வழக்கு நடத்தினார்கள். நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்துவிட்டது. அப்படியாயின் அவரை கொன்றது யார்?. இந்த கேள்விக்கு சில ஆண்டுகளாக இன்னும் பதில் கிடைக்கவில்லை.

இவைகள் பற்றி கேள்வி கேட்கவேண்டியது ஜனநாயகத்தின் நான்காவது தூணாண பத்திரிக்கை, மீடியாக்கள் தான்.

நக்கீரன் செய்தியாளர் பிரகாஷ் அவர்கள், ஜெயேந்திரர் முன் பவ்யமாக அமர்ந்து பேட்டி எடுத்தார். நக்கீரன் வெளியிட்டது ஜெயேந்திரரின் அந்த திமிர் பேட்டி தான் குற்றவாளி யார் என்பதை அடையாளம் காட்டியது. அவரை சிறைக்கு அனுப்பிவைத்தது. ஜெயந்திரரின் பேட்டியை நக்கீரன் வெளியிடவில்லையெனில் சங்கராச்சாரியார் தப்பியிருப்பார்.

பத்து ரூபாய் திருடியவனை தேச துரோகம் செய்தது போல் சித்தரிக்கம் மீடியாக்கள் ஜனாதிபதியை தன் காலில் விழ வைத்த சங்கர மடத்தில் ஒரு கொலை நடந்துள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலையாகி போனார்கள், அப்போது குற்றவாளி யார் என்ற கேள்வி கேட்க தயக்கம். தமிழகத்தில் எந்;த மீடியாவுக்கும் தைரியம்மில்லை. இது ‘அவா’ பிரச்சனை என்பதால் ஆங்கில, வட இந்திய மீடியாக்கள் கேள்வி கேட்காது. கேள்வி கேட்டால்?, எழுதினால் என்ன செய்துவிடுவார்கள். உயிர் போய்விடுமா ?.

பிட்பாக்கெட் அடித்து மாட்டிக்கொண்டவனைப்பற்றி மணி கணக்காக தொண்டை தண்ணீர் வத்த நேரலையில் எகிறி குதிக்கும் ஜனநாயகவாதிகள், மனித உரிமை போராளிகள் யாரும், ஊத்தி மூடப்படும் வழக்குகளில் கொலை குற்றவாளி யார் என்ற கேள்வியை கேட்பதில்லை. எல்லா ஓட்டைகளையும் மூடிக்கொள்கிறார்கள்.

இங்கு நீதி விலைக்கு வாங்கப்படுகிறது. இந்த உலகில் பணக்காரன், அதிகாரத்தில் உள்ளவன், அதிகார பீடத்துக்கு மிக நெருக்கமானவர்கள் கொலை, கொள்ளை, ஊழல் என என்ன வேண்டுமானாலும் செய்யலாம். வழக்கு நடக்கும் பின் அதன் மேல் நீர் ஊற்றி அழிக்கப்படும். இதற்கு எல்லா தரப்பும்மே உடந்தையாக இருக்கும்.

இதை மாற்ற மீண்டும் காந்தி, பெரியார், காமராஜர் யார் பிறந்து வந்து போராடினாலும் இந்த சமூகத்தை திருத்த முடியாது. அவர்களையும் கொலை செய்துவிட்டு தடுக்கி விழுந்து செத்தார்கள் என்பார்கள். அதையும் நீதி தலையாட்டி ஏற்றுக்கொள்ளும்.

இந்தியாவில் சட்டம் அனைவருக்கும் சமம் என்கிறார்கள் நிச்சயம் கிடையாது என்பதை அடுத்தடுத்த வழக்குகள் நிரூபித்து வருகின்றன. மக்கள் மந்தை கூட்டமாய் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

போங்காடா நீங்களும் உங்க நீதியும்……….

2 கருத்துகள்: