சனி, நவம்பர் 02, 2013

கொள்ளையடிக்கும் ஹோட்டல்கள் .........


நீண்ட நாட்களாக மனதில் இருந்த விஷயம் திருவண்ணாமலை ஹோட்டல்கள் பற்றி எழுத வேண்டும் என்பது. ஆனால் அது தள்ளி தள்ளி போய்க்கொண்டேயிருந்தது. முகநூலில் இயங்கும் திருவண்ணாமலையை சேர்ந்த ரவீந்திரன் என்பவர் கிருஷ்ணகிரியில் உள்ள ஷீபா ரெஸ்டாரென்ட்டோடு திருவண்ணாமலையில் உள்ள ஸ்டார் பிரியாணி ஹோட்டலை ஒப்பிட்டு எழுதி நீண்ட நாட்களாக என் மனதில் உள்ள விஷயத்தை எழுத வைத்துவிட்டார்.

நான் ஊர் சுற்றும் புறா. வாரத்தில் நான்கு நாள் வேலை நிமித்தமாக பயணித்துக்கொண்டே இருப்பேன். கடந்த 10 வருடங்களாக பயணம் செய்துக்கொண்டே இருக்கிறேன். அதில், மதிய உணவு வீட்டில் உண்ட நாட்களை எண்ணிவிடலாம். பல நாட்கள் காலை அ இரவு உணவு கூட ஹோட்டல் தான். திருவண்ணாமலை, வேலூர் மாவட்டத்தில் நான் சாப்பிடாத ஹோட்டல் மிக மிக குறைவு. பெரிய ஹோட்டல் முதல் கையேந்திபவன் வரை எதுவாக இருந்தாலும் உணவு ருசியாக இருந்தால் அந்த ஹோட்டலை பற்றி ‘மார்க்கெட்டிங்’ செய்ய தொடங்கிவிடுவேன். மாதத்தின் முதல் வாரம் ஸ்பார்சா என்றால் மாத கடைசியில் கையேந்திபவன். ஸ்பார்சா முதல் சில கையேந்திபவன் வரை நானும் சில நண்பர்களும் வாடிக்கையாளர்கள்.

நீண்ட ஆண்டுகளாக ஹோட்டல்கள் வளர்ச்சி, உணவின் தரம், விலை உயர்வு எப்படி என்பதை அறிந்து வருகிறேன். தற்போது திருவண்ணாமலையில் உள்ள ஹோட்டல்களில் சாப்பிட உட்கார்ந்தால் அய்யோ பட்டினியாக இருந்து விடலாம் என நினைக்கும் அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. உயர்ந்துள்ளது என்பதை விட உயர்த்தியுள்ளார்கள்.

நடுத்தர வசதிகள் கொண்ட திருவண்ணாமலையில் பெரு நகரங்களைவிட அதிகமாக உணவுகளின் விலையை உயர்த்தியது. ஹோட்டல் கண்ணா குழுமம். சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த ஹோட்டலில் விதவிதமான உணவுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதோடு, உணவு ருசியாக இருந்தது என நிறைய வாடிக்கையாளர்கள் வாடிக்கையாக சென்றனர். ஹோட்டலை அலங்காரம் செய்த முதலாளிகள் அலங்காரத்தை காட்டி உணவு பொருட்களின் விலையை உயர்த்தினர். விலை ஏற்றம் பின் படிப்படியாக உயர்ந்தது. இந்த ஹோட்டலை பார்த்துவிட்டு நளா, அபிராமி, ஆகாஷ், தீபம், பாலாஜிபவன் போன்ற மற்ற ஹோட்டல்களும் விலையை உயர்த்தின. இதற்கு அடுத்த நிலையில் உள்ள ஹோட்டல்களும் விலையை உயர்த்தின. உணவின் தரத்தை உயர்த்தாமல் விலையை மட்டும் உயர்த்தினார்கள் என்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும்.

தற்போது திருவண்ணாமலை நகரத்தில் உள்ள ஹோட்டல்களில் உள்ள விலை பட்டியலோடு வேலூர் மாநகரத்தில் உள்ள ஹோட்டல்களின் விலையுடனோ அல்லது விழுப்புரம், பாண்டிச்சேரி, பெங்களுரூவில் உள்ள நடுத்தர ஹோட்டல்களின் விலையோடு ஒப்பிட்டால் பஸ் ஏறிப்போய் இதில் ஏதாவது ஒரு ஊரில் குடும்பத்தோடு சாப்பிட்டுவிட்டு வந்துவிடலாம் என்ற அளவில் உள்ளது. மேலே குறிப்பிட்ட சைவ உணவு ஹோட்டல்களில் மட்டுமல்ல அசைவ உணவு ஹோட்டல்களிலும் இதே நிலை தான்.


திருவண்ணாமலை அசைவ பிரியர்கள் ஸ்டார் ஹோட்டல் பிரியாணியை ஆஹா, ஓஹோ என புகழ்வார்கள். (வாணியம்பாடி காஜா ரெஸ்டாரென்ட், ஆம்பூர் ஸ்டார் ஹோட்டல், வேலூர் அம்மா பிரியாணி, பாண்டிச்சேரி காமாட்சி குழுமம், செட்டிநாடு, விழுப்புரம் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட்டவர்கள் திருவண்ணாமலை ஸ்டார் பிரியாணியை புளி சாதம் என்பார்கள்). ஸ்டார் ஹோட்டலில் சொல்லப்படும் விலையை கேட்டால் பிர்லாவுக்கே பேதியாகிவிடும். ஸ்டாரை போலத்தான் நளாவிலும். இவர்கள் பணத்தை புடுங்குவதில் குறியாக உள்ளார்களே தவிர வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் எண்ணம்மேயில்லை.

மேலே குறிப்பிட்ட சைவ, அசைவ ஹோட்டல்கள் மட்டுமல்ல பெரிய ஹோட்டல்களாக உள்ள ராமகிருஷ்ணா, திரிசூல், ஸ்பார்சா, அபர்ணா, (இப்போதைக்கு பெரிய ஹோட்டல்) உட்பட இவர்கள் யாருக்கும் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம்மில்லை. பணம் சம்பாதிக்க வேண்டும் அவ்வளவே. விருப்பத்துக்கு ஏற்றாற்போல் விலை. பௌர்ணமி நாட்களில் இவர்கள் வைப்பது தான் விலை. விலை பட்டியல் ஒன்றிரண்டு ஹோட்டல்களை தவிர வேறு எந்த ஹோட்டலிலும் கிடையாது. வெளியூர்க்காரர்கள் கோயிலுக்கு வந்தால் அவன் இனிமேல் ஹோட்டலில் சாப்பிடவே கூடாது என நினைக்கும் அளவுக்கு பர்சை காலியாக்கும் வித்தை தெரிந்தவர்கள் திருவண்ணாமலை ஹோட்டல்காரர்கள்.

ஏமாற்றுபவர்கள், கொள்ளைக்காரர்கள், மக்களை முட்டாளாக நடத்தியவர்களை திருவண்ணாமலை மக்கள் எப்படி புறக்கணித்துள்ளார்கள் என்பதற்கு சாட்சியங்கள் உருவாகியுள்ளன. திருவண்ணாமலையில் கோலோச்சிய நகை கடைகள், துணிக்கடைகள் எல்லாம் இப்போது காற்றாட துவங்கிவிட்டன. காரணம், மக்களின் ரசனை, அவர்கள் மீதான வெறுப்பு போன்றவை மனதில் இருந்தன. இந்தியா முழுக்க கிளை வைத்திருக்கும் ஜிவல்லரிகள், தமிழகம் முழுக்க கிளை வைத்திருக்கும் துணி கடைகள் திருவண்ணாமலைக்கு வந்ததும் மக்கள் அப்படியே அங்கு செல்ல துவங்கிவிட்டனர். தரத்துக்கு ஏற்ற விலை என்பதை அறிந்தனர். வாடிக்கையாளர்களின் நலனில் அக்கறை கொள்ளும் பிரபல ஹோட்டல்கள் திருவண்ணாமலையில் கிளை வைத்தால் நிச்சயம் உணவின் தரத்திலும், விலையிலும் ஒரு மாற்றம் வரும். மக்களை ஏமாற்றும் இது போன்ற ஹோட்டல்கள் புறக்கணிக்கப்படும்.

1 கருத்து:

  1. ஒருமுறை காட்பாடி ஓடை பிள்ளையார் கோவில் அருகே உள்ள எஸ்.பி.ஆர். பிரியாணி ஓட்டலுக்கு சென்று சாப்பிடு தோழா. திருவண்ணாமலையில் உள்ள அசைவ கடைகளின் மொள்ளமாரித் தனம் மொத்தம் தெரியும். இந்த ஓட்டல்களில் சாப்பிடப் பிடிக்காமல், சாப்பிட்டு விட்டு வயிற்றுப் போக்கில் அவதி படாமல் இருக்க பல நாள் பட்டினிக் கிடந்த அனுபவம் எனக்குண்டு. நல்லவேளையாக ஓரிரு மெஸ்கள் உயிர் பிழைத்து வாழ உதவின.

    பல நகரங்களில் தொடர் சங்கிலி ஓட்டல்கள் நடத்தி வரும் சில பிரபலமான, தரமான உணவக நிர்வாகங்களை இங்கு கிளை திறக்குமாறு கேட்டபோது அலறியடித்து ஓடினார்கள். நல்ல அசைவ உணவகம் தொடங்கிய நபர்களை ( உதாரணம் ஆறு ஓட்டல் ) இவர்கள் உள்குத்து செய்து விரட்டியடிப்பதாகவும் தகவல்.

    பதிலளிநீக்கு