இருள் படிந்த மாலை நேரம் லேசாக மழை பெய்துக்கொண்டு இருந்தது. மதன் வீட்டுக்கு வெளியே பீர் பாட்டில், பிராந்தி, டம்பளர், சோடா, மிக்சர் என டேபிளில் பரப்பி வைத்தபடி ஒரு டம்பளரில் சரக்கு ஊற்றி குடித்துக்கொண்டு இருந்தான். பிரபு டூவீலரை வேகமாக கொண்டு வந்து ஹாலில் நிறுத்தினான். வண்டியை விட்டு இறங்கியபடி மதன் குடிப்பதை ஆச்சர்யமாக பார்த்தபடி அவனை நோக்கி நடந்தபடி குடிக்கறத விட்டுட்டன்னு சொன்ன ?.
தோணுச்சி குடிக்கறன்.
ஹாஸ்பிட்டல் போனன் அங்க சுதாவும், அவுங்க அம்மாவும் இருந்தாங்க. நீ எங்கன்னு கேட்டதும் நேத்து பேசிட்டு வந்தத சொல்லுச்சி. அங்கயே நான் உன் செல்க்கு ட்ரை பண்ணன் சுச் ஆப்ன்னு வந்தது. என்னவோ ஏதோன்னு பயந்துக்கிட்டு வந்தா நீ ஜாலியா உட்கார்ந்து தண்ணியாடிச்சிக்கிட்டு இருக்கற.
லேசான மழை தூரும் போது தண்ணியடிக்கனம்ன்னு ஆசை அதான் செய்துக்கிட்டு இருக்கன் என்றான் மிதமான குரலில்.
விளையாடாத. அங்க உன் பையன் அழுதுக்கிட்டு இருக்கான்ட என்றான் கோபமாக.
இப்ப அதுக்கு என்ன பண்ணச்சொல்ற என மதன் வெறுப்பாக கேட்டதும் பிரபு அமைதியானான்.
அவன் அவுங்க அம்மாக்கூட இருக்க ஆசைப்படறான் அதான் விட்டுட்டு வந்தன்.
அவன் உங்கிட்ட வந்து நான் அம்மாக்கூட தான் இருப்பன்னு சொன்னானா?
சொல்லலனாலும் புரிஞ்சிக்கனும். நான் புரிஞ்சிக்கிட்டன் என நேற்று அவன் போன பின் நடந்ததை சொன்னதும் அமைதியானான். ஃபீர் சாப்பிடறியா ?
இல்ல வேணாம்.
பாக்யராஜ் வந்துயிருக்கான். ஆஸ்பிட்டல்க்கு போயிட்டு வீட்டுக்கு வர்றன்னான். பணம் எடுத்துக்கிட்டு வர்றானாம். இருந்து வாங்கிக்கிட்டு போ.
வர எவ்ளோ நேரமாகும்.
ஒன்னவராகிடும்.
நான் வீட்டுக்கு போய்ட்டு வந்துடறன்.
என்ன ?
குட்டிமாவுக்கு உடம்பு சரியில்ல. ஆஸ்பிட்டல்க்கு அழைச்சிம் போகனும். 7 மணிக்கு அப்பாய்மென்ட். டாக்டரை பாத்துட்டு அவுங்கள வீட்ல விட்டுட்டு வந்துடறன்.
சரி.
வரும்போது இரண்டு ஃபீரும், மூனு பேர் சாப்பிடறதுக்கு ஏதாவது பார்சல் வாங்கிட்டு வா என்றதும் பிரபு தலையாட்டியபடி கிளம்பினான். வண்டி அருகே போனவனிடம் காசுயிருக்காடா? இருக்கு எனச்சொல்லியபடி ஜெர்கினால் உடலை மூடிக்கொண்டு வண்டி எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
நீ எங்கன்னு கேட்டு ரஞ்சித் அழறான்டா என பிரபு சொல்லிவிட்டு போனது மதனின் இதயத்தை யாரோ ஊசியால் குத்துவதை போல உணர்ந்தான். க்ளாசில் ஊற்றிய சரக்கு அப்படியே இருக்க பாக்யராஜ் வந்து டேய் என உலுக்கிய போது தான் நிகழ்காலத்துக்கு வந்தான்.
உட்கார்றா என்றதும் எதிரே இருந்த ஃசேரில் அமர்ந்த பாக்யராஜ், என்னடா குடிக்கறத விட்டுட்டன்னு சொன்ன இப்பயென்ன திடீர்ன்னு குடிக்கற?.
சும்மாதான்.
யாரும் இல்லாம தனியா இருக்கறது கஸ்டமாத்தான் இருக்கும் மச்சான். அதுக்கு என்னப்பண்றத்து எல்லாம் நீ எடுக்கற தப்பு தப்பான முடிவு தான் காரணம்.
நான் என்னடா தப்பு பண்ணன் ?.
பின்ன அந்தாளு ஏதாவது பேசிட்டு போறான்னு விட்டுட்டு போகாம நீ ஏன் அந்தாளுக்கிட்ட சண்டை போடற.
நானா சண்டைக்கு போறன். பாக்கறப்பயெல்லாம் அந்தாள் ஏதாவது சொல்லி எரிச்சல கிளப்பனா கோபம் வராம என்னச்செய்யும். மாமனாராச்சேன்னு சும்மாயிருக்கறன். வேற யாராவதுயிருந்தா நடக்கறதே வேறாயாயிருக்கும்.
ஆஸ்பிட்டல்ல தங்கச்சியும், அவுங்க அம்மாவும் இருந்தாங்க. உன் பையன் அப்பா எங்க, தாத்தா – பாட்டி எங்கன்னு கேட்டு அழுதான் ஏதோ சொல்லி சமாளிச்சிட்டு வந்தன். நீ தான் கோபத்தல வந்துட்டன்னா. உங்கப்பனும், ஆத்தாளும் எதுக்கு கிளம்பி ஊருக்கு வந்தாங்க.
அவர் கிளம்பனதும் அம்மாவும் கூடவே கிளம்பிட்டாங்க.
ஆமாம் இளம் ஜோடிங்க பிரியவே மாட்டாங்க.
அவரைப்பத்தி தான் தெரியும்மில்ல.
உங்கப்பனை நீங்க தாண்டா மெச்சிக்கனும் என வெறுப்பாக பேசியவனிடம் அதவிட்டுத்தள்ளு இந்தா நீ ஓரு பெக் சாப்பிடு என மதன் ஒரு டம்பளரை தந்ததும் வாங்கி டேபிள் மேல் வைத்தான்.
பிரபு எங்க?
குழந்தைய ஆஸ்பிட்டல்க்கு அழைச்சிம் போயிருக்கான் வந்துடுவான் என்றபடி இன்னோரு டம்பளரில் சரக்கை கையில் எடுத்தபடி அத எடுத்து குடிடா என்றபடி குடிக்க தொடங்கினான். பிரவும் தன் எதிரே இருந்த டம்பளரில் இருந்த சரக்கை எடுத்து குடித்தான் கொஞ்ச நேரத்தில் பிரபுவின் ஃபைக் உள்ளே வந்தது. சரக்கையும், இரவு டிபனையும் எடுத்து வந்து டேபிள் மேல் வைத்தான். பிரபுவும், பாக்யராஜ்யும் நலம் விசாரித்துக்கொண்டனர். பாக்யராஜ் பனியன்க்குள் இருந்து மஞ்சள் பை சுத்திய பணக்கட்டை எடுத்து பிரபுவிடம் தந்தான். பணத்தை வாங்கிக்கொண்டு தேங்ஸ் சொன்ன பிரபு அதை பத்திரப்படுத்துக்கொண்டான்.
மூவரும் சரக்கை முடித்துக்கொண்டு சாப்பிட தொடங்க பாக்யராஜ் மதனிடம், மாப்ள தங்கச்சி பாவம்டா. ஆஸ்பிட்டல்ல என்ன பாத்ததும் அழுதுடுச்சி. அத பார்த்தா பாவம்மாயிருக்கு. உன் மாமனாரை விட்டுத்தள்ளு. நீ அத வீட்டுக்கு அழைச்சிக்கிட்டு வந்து சந்தோஷமா இருடா. பொண்டாட்டி வீட்லயிருந்தா அது பெரிய சந்தோஷம் மச்சான்.
நானும் தினமும் அதைத்தான் சொல்றன் கேட்கமாட்டேன்கிறான் என பிரபு சொல்ல சாப்பிட்டுக்கொண்டு இருந்த மதன் அப்படியே நிறுத்திவிட்டு அவர்களை பார்க்க இருவரும் அவனை பார்த்தனர். என்னடா என்னவோ நான் தான் அவளை வர வேணாம்ன்னு சொல்றமாதிரி பேசறிங்க. இது அவ வீடு, அவ என் மனைவி எப்ப வேண்ணாலும் வரலாம்.
நீ போய் ஒரு வார்த்தை கூப்பிட்டா வந்துடும் மச்சான் என பாக்யராஜ் தயங்கி தயங்கி சொல்ல.
என்ன மயிருக்கு நான் போய் வான்னு கூப்பிடனும் என கோபமானவன் நானா அவளை வீட்டை விட்டு போன்னு சொன்னன். அவளா போனா. எத்தனை பேர் அவக்கிட்ட உன் வீட்டுக்கு போன்னு சொன்னாங்க. ஆனா அவ எங்கப்பா சொன்னாத்தான் போவன்னு இன்னைய வரைக்கும் இருக்கறா. இப்பவும் அவுங்கப்பன் சொல்றதையே கேட்கறா என கோபத்தில் வெடித்தான் மதன்.
நீ அதுங்கிட்ட வீட்டுக்கு வான்னு கூப்பிடறதுல என்ன உன் கவுரவம் குறைஞ்சி போச்சி. பொண்டாட்டி – புருஷன்க்குள்ள கவுரவம் பாத்தா வேலைக்கு ஆகாது. விட்டுக்கொடுத்து போனாத்தான் குடும்பம் ஓழுங்கா நடக்கும் இல்லன்னா அவ்ளோ தான் என பதிலுக்;கு கோபமாக சொன்னான் பிரபு.
இந்த வெங்காயம் எனக்கும் தெரியும்.
அப்பறம் என்ன மயிருக்கு புடிவாதம்மாயிருக்கற.
இப்பவும் அந்தாளு என்ன சொல்றானோ அதையேத்தான் கேட்கறா. அவ மாறிட்டான்னு தெரிஞ்சா அவளே வந்துடுவா.
அந்தாளு சாகற வரைக்கும் அழுகாச்சி சீனை போட்டு தடுப்பான்.
அவ மனசு மாறி வரவரைக்கும் நான் காத்துக்கிட்டு இருக்கன்.
நீ அந்தாளைப்பத்தி யோசிக்காம அத வீட்டுக்கு வான்னு அழைச்சன்னா வந்துடும். வந்தப்பிறகு பேசி அத மாத்திடு என பாக்யராஜ் சொன்னதும்.
அவ மாறமாட்டாடா.
மாறாதுன்னு நீயா சொல்லாத. எனக்கென்னவோ உம்மேல தான் சந்தேகமாயிருக்கு என லேசாக வார்த்தையில் கோபத்தை காட்டினான்.
என்ன சந்தேகம் ?.
நீ வேற எதையோ சைடுல ஓட்டறன்னு நினைக்கறன் அதனால தான் முதல்ல பொண்டாட்டிய கழட்டி விட்டவன் இப்ப உன் பையனை கழட்டி விட்டுட்டு வந்துயிருக்க என பாக்யராஜ் சொல்ல மதன் கோபமாக அவனை பார்த்தான்.
அவனை எதுக்கு முறைக்கற. அவன் சொல்றதுல என்ன தப்பு.
எல்லாம் தெரிஞ்ச நீங்களே இப்படி பேசனா என்னடா அர்த்தம்.
நீ இப்ப பண்ணிட்டு வந்துயிருக்கறத வேற எப்படி எடுத்துக்கறதாம்.
அவ என் உயிர்ங்கறது உங்களுக்கு தெரியாதா ?
இன்னும் எவ்ளோ நாளைக்கு இப்படியே சொல்லிக்கிட்டு இருப்ப என கேட்ட போதும் அமைதியாக இருந்தான்.
மருத்துவமனையில் சுதா ரஞ்சித்தின் அருகே அமர்ந்திருந்தாள். எதிரே பிளாஸ்டிக் சேரில் அமர்ந்திருந்தார் தேவராஜ். ஜீஸ் ரெடி செய்துக்கொண்டுருந்தார் காவேரி. நீ எதுக்கும்மா கன்னத்தல கை வச்சிக்கிட்டு உட்கார்ந்துயிருக்கற. இவ்ளோ நாளா புள்ள இல்லாம கஸ்டப்பட்டுக்கிட்டு இருந்த. இப்ப அவனே விட்டுட்டு போய்ட்டான். நீ இனிமே சந்தோஷமா இரும்மா எனச்சொல்ல சுதா பதிலேதும் சொல்லாமல் ரஞ்சித்தை பார்த்துக்கொண்டு இருந்தாள். ரஞ்சித்தும் தன் அம்மாவை பார்த்தபடி படுத்திருந்தான்.
அறையின் கதவை இரண்டு முறை தட்ட உள்ள வாங்க என காவேரி குரல் தர ப்ரியா உள்ளே வந்தாள். எப்படிம்மா இருக்க என காவேரி கேட்டதும் நல்லாயிருக்கம்மா என்றாள். காவேரி தன் கணவரிடம் ப்ரியாவை காட்டி சுதா வேலை பாக்கற ஸ்கூல்ல டீச்சரா இருக்காங்க என்றாள். தலையாட்டியவர் நல்லா இருக்கியம்மா என கேட்டார்.
நல்லாயிருக்கன் சார் என்றாள் ப்ரியா.
வாங்க மேடம் என சுதா அழைக்க ப்ரியா அவள் அருகில் போய் நின்றவள் ரஞ்சித்திடம் வலிக்குதாப்பா என கேட்க ? எஸ் மிஸ் என்றான் மெல்லிய குரலில்.
தேவராஜ்யின் செல்போன் ரிங்கானது. எடுத்து பேசியவர் நான் ஆபிஸ் வந்துடறன் வந்துடுங்க எனச்சொல்லிவிட்டு போனை கட் செய்தார். சுதாம்மா கொஞ்சம் வேலையிருக்கு நான் போய் பாத்துட்டு வந்துடறன். ஏதாவது வேணும்னா போன் பண்ணும்மா என்றவர். நான் மதிய சாப்பாட்டுக்கு வர்ற மாட்டன். நீயும் பாப்பாவும் சாப்பிடுங்க நான் சாயந்தரம் வர்றன் என காவேரியிடம் சொன்னவர் ரஞ்சித்தின் படுத்திருந்த கட்டில் அருகே எழுந்து வந்தவர் தாத்தா ஆபிஸ் வரைக்கும் போய்ட்டு வர்றட்டுமா என கேட்க அவன் தலையாட்ட குனிந்து அவன் கன்னத்தில் முத்தம் ஒன்றை தந்துவிட்டு வர்றம்மா என ப்ரியாவிடமும் சொல்லிவிட்டு கிளம்பினார்.
அவர் வெளியே போனதும் காவேரி ஜீஸ் இருந்த ஒரு டம்பளரை ப்ரியாவிடம் தர வேணாம்மா குட்டி பையனுக்கு தாங்க என்றாள். அவனுக்கு இருக்கும்மா நீ சாப்பிடு என ஒரு டம்பளரை தந்துவிட்டு இன்னோரு டம்பளரில் ஜீஸ் எடுத்து வந்து சுதாவிடம் தந்து அவனை எழுப்பி உட்காரவச்சி தாம்மா என்றாள்.
அப்போது கதவை திறந்துக்கொண்டு உள்ளே வந்த நர்ஸ் ஒருவர் டேபிளட் வாங்கிக்கிட்டு அப்படியே கவுண்டர்ல இந்த ஃபில்ல செட்டில் பண்ணிட்டு வந்துடுங்க என்றார். அதை வாங்கியதும் நர்ஸ் வெளியே சென்றுவிட காவேரி அந்த ஃபில்லை டேபிள் மீது வைத்துவிட்டு பாத்ரூம் சென்று கைகழுவிக்கொண்டு வெளியே வந்தவள் சுதாவிடம் நான் போய் ஃபில் கட்டிட்டு வர்றன் நீங்க பேசிக்கிட்டு இருங்க எனச்சொல்லிவிட்டு ஹேண்ட் பேக்கை எடுத்துக்கொண்டு வெளியே சென்றார்.
ஸ்டீபன் சாரை பிரின்ஸ்பால் மேடம் 15 நாள் லீவுல அனுப்பிட்டாங்க. மாலதி தான் உங்களுக்கு இரண்டு கல்யாணம்மானத மத்தவங்கக்கிட்ட சொல்லியிருக்காங்க. ஸ்டீபன் சார் உங்ககிட்ட அன்டீசன்டா பேசனது பிரச்சனையாகி மேடத்தோட ரூம்ல அடிதடி நடந்தது ஃபாதர்க்கு தெரிஞ்சி சிஸ்டர்க்கிட்ட விசாரிச்சிட்டு ஸ்டீபனை 15 நாள் லீவுல அனுப்பிட்டாரு என்றாள் சுதா அமைதியாக கேட்டுக்கொண்டு இருந்தாள். கேட்கறன்னு தப்பா எடுத்துக்காதிங்க சுதா. எதுக்காக அவர் ஸ்டீபனை அடிச்சாரு. அவர் யார் ?.
அவர் தான் என்னோட ஹஸ்பென்ட். என்னைப்பத்தி தப்பா பேசனது கேட்டு அடிச்சிட்டாரு என்றாள் தலையை குனிந்தபடி.
ரஞ்சித் அங்க படிச்சது உங்களுக்கு முன்கூட்டியே தெரியும்மா ?.
இல்ல அவர் அங்க வந்தப்ப தான் தெரிஞ்சிக்கிட்டன்.
எத்தனை வருஷமா பிரிஞ்சி இருக்கிங்க ?.
நாலு வருஷமா.
நாலு வருஷமா என அதிர்ச்சியான ப்ரியா நான் கேட்கறன்னு தப்பா எடுத்துக்காதிங்க. என்ன பிரச்சனை உங்களுக்குள்ள எதுக்காக பிரிஞ்சி வாழறிங்க என டம்பளரை டேபிள் மேல் வைத்தபடி ப்ரியா கேட்டதும் சுதா கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தாள். அவளின் மனம் பத்து ஆண்டுகாலம் பின்னோக்கி சென்றது.
தொடரும்………………..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக