புதன், ஆகஸ்ட் 24, 2016

ஒலிம்பிக் பதக்கம்- நாம் வெட்கப்பட வேண்டும்……



2016 ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் வெண்கலபதக்கம் வாங்கிய சாக்ஷி மாலிக்குக்கும், இறகு பந்து விளையாட்டில் வெள்ளி பதக்கம் வாங்கிய சிந்துவுக்கும் வாழ்த்துக்கள். இது அவர்களுக்கான பதிவல்ல. பதக்கம் வாங்கினார்கள் என்றதும் கொண்டாடி தீர்க்கும் இந்தியர்களுக்கான பதிவு.
2016 ஒலிம்பிக் போட்டியில் கலந்துக்கொள்ள 120 கோடி இந்தியர்களின் சார்பில் மல்யுத்தம், இறகுபந்து ஒட்டப்பந்தயம், நீச்சல், ஜிம்னாஸ்டிக் போன்ற பல விளையாட்டுகளில் கலந்துக்கொள்ள 118 வீரர்கள் பிரேசில் சென்றனர். ஆகஸ்ட் 5ந்தேதி தொடங்கிய போட்டியில் இந்தியா பதக்கம் வாங்கியதா எனக்கேட்டால் கிரவுண்ட்க்கு போகும்போதே அவுட்டாகி வந்துவிடுகிறார்கள் நமது வீரர்கள்.

விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம் தான். விளையாடாமலே தோல்வியை சந்திக்கும் நாடு எதுவென்றால் அது இந்தியா தான். ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாய் விளையாட்டு துறைக்கு ஒதுக்குகிறது இந்தியா. அந்த தொகையில் இருந்து ஒரு சதவிதத்தை ஒதுக்கி முருகேசன் பாத்திரகடையில் பதக்கங்களை வாங்கியிருந்தால் கூட வீட்டுக்கு நாலு தங்க பதக்கங்களை தந்துயிருக்கலாம். அப்படி தந்துயிருந்தால் வெள்ளி பதக்கம் வாங்கியதையும், வெண்கலப்பதக்கம் வாங்கியதை நினைத்து நாடே கொண்டாடி கொண்டுயிருக்காது.

இரண்டு பதக்கம் வாங்கியதை நினைத்து ஆஹா, ஓஹோ என கொண்டாடி தீர்க்கும்  இந்தியர்கள், நம்மை விட குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடான அமெரிக்கா 120க்கும் மேற்பட்ட பதக்கங்களை வாங்கி சதம் அடித்து முதல் இடத்தில் உள்ளது. நம் அளவுக்கு மக்கள் தொகை கொண்ட சீனா கூட பதக்க பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. நம்மை விட குறைந்த மக்கள் தொகை நாடும் அதிக பதக்கம் வாங்குகிறது, நம்மை விட அதிக மக்கள் தொகை கொண்ட நாடும் அதிகமாக பதக்கம் வாங்கிறது நாமே அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறோம். பதக்க பட்டியலில் 64 இடத்தில் இருந்த்தை நினைத்து நாம் முதலில் நாம் வெட்கப்பட வேண்டும்.

இது ஏதோ இந்த ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் மட்டும்மல்ல ஒலிம்பிக் விளையாட்டு தொடங்கிய காலத்தில் இருந்தே இதுதான் நடக்கிறது. பதக்க பட்டியலில் இந்தியாவின் பெயரை பூத கண்ணாடி வைத்து தேட வேண்டியதாக இருக்கிறது.

எங்கே இதன் வீழ்ச்சி என்றால், வீரர்கள் தேர்விலேயே தோல்வியை சந்தித்து விடுகிறது. திறமையான வீரன் மேலே வரமுடிவதில்லை. காரணம், அவன் மேல்சாதிக்காரனாக இருப்பதில்லை. திறமையானவனாக இருந்தாலும் கீழ்சாதிக்காரன் கீழே கிடக்கவேண்டும், திறமையில்லாத மேல்சாதி தற்குறிகள் எல்லாம் மேலே வரவேண்டும் என நினைத்து வீரர்களை தேர்வு செய்வதால் தொடக்கத்திலேயே தொடங்கிவிடுகிறது தோல்வி.

அதுமட்டும்மல்ல, இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு தரப்படும் முக்கியத்துவம் வேறு எந்த விளையாட்டுக்கும் தரப்படுவதில்லை. இந்தியாவின் தேசிய விளையாட்டு எதுவென கல்லூரியில் படிப்பவனிடம்மே கேட்டுப்பாருங்கள் கிரிக்கெட் என்பான். இது அவர்கள் மீது மட்டும் குற்றம்மல்ல. ஊடகம், சமூகமும், அரசு மீது தான் குற்றம்சாட்ட வேண்டும்.  

கிரிக்கெட் விளையாட்டுக்கு பக்கம் பக்கமாய் செய்தி போடும் செய்தித்தாள்கள், நேரடி ஒளிப்பரப்பு செய்யும் தொலைக்காட்சிகள் மற்ற விளையாட்டுக்களை கண்டுக்கொள்வதில்லை. மக்கள் பார்க்கும் விளையாட்டுக்கு மட்டும்மே நாங்கள் ஸ்பான்சர் செய்வோம் எனச்சொல்லும் கார்ப்பரேட் நிறுவனங்கள், கிரிக்கெட் வீரர்களுக்கு வரி சலுகை, பொருள் சலுகை, இடச்சலுகை என வாரி வழங்கும் இந்திய ஒன்றிய அரசுகளும் அவைகளை நோக்கும் சமூகமும் கிரிக்கெட் மீது பைத்தியமாய் திரிகிறார்கள். விளையாடும் போது தேசப்பற்று வேறு பொங்கி வழிகிறது. கிரிக்கெட்க்கு இந்த சமூகமும், அரசும், கார்ப்பரேட் நிறுவனங்கள் தரும் முக்கியத்தவத்தில் 10 சதவிதம் மற்ற விளையாட்டுகளுக்கு தந்தால் போதும் கோப்பை வெல்லவில்லை என்றாலும் இத்தனை விளையாட்டுகள் உள்ளது என்பதாவுது மக்களுக்கு தெரியும்.

இத்தனை விளையாட்டில் கலந்துக்கொண்ட நமது வீரர்கள் ஒரு தங்க பதக்கம் கூட வாங்காமல் வருகிறார்களே, திறமையற்ற அவர்களை ஏன் அனுப்பினீர்கள் என மக்களாவுது அரசை நோக்கி கேள்வி கேட்கிறார்களா என்றால் கிடையாது. நமக்கேன் வம்பு என ஒதுங்கி செல்கிறார்கள். பதக்க பட்டியலில் உள்ள ஏதாவது ஒரு நாட்டை எடுத்துக்கொள்ளுங்கள் இந்த நாடு அடுத்த ஆண்டு பதக்க பட்டியலில் பெயர் வரவில்லை என்றால் அந்த நாட்டு விளையாட்டு துறை அமைச்சரின் பதவி பறிக்கப்படும். அது சர்வாதிகார நாடாக இருந்தாலும், ஜனநாயாக நாடாக இருந்தாலும் இதுதான் நடக்கும். ஏன் எனில் அங்குயெல்லாம் ஆட்சியதிகாரத்தில் உள்ளவர்களை பார்த்து மக்கள் கேள்வி கேட்பார்கள். இங்கு மக்கள் மட்டும்மல்ல நாட்டின் நான்காவுது தூண் எனப்படும் பத்திரிக்கை, மீடியாவும் நவ துவாரங்களை மூடிக்கொண்டு போய்க்கொண்டு இருக்கிறார்கள்.

பதக்கம் வாங்கியவர்களுக்கு அரசாங்கம் தரும் பண மதிப்பையும், பொருள் மதிப்பையும் பக்கம்பக்கம்மாய் எழுதியும், மணிக்கணக்கில் ஒளிப்பரப்பியும் சந்தோஷப்படுத்துகிறார்கள். விளையாட்டு வீர்ர்களை ஊக்குவிக்கவே இப்படி பணமும், பொருளும், பதவியும் தருகிறோம் என்பார்கள் அதிகார வர்க்கத்தினர். உண்மை அதுவல்ல, மக்களை திசை திருப்பவே அப்படி செய்கிறார்கள். தங்களை நோக்கி மக்கள் வெகுண்டெழுந்து கேள்வி கேட்க்க்கூடாது என்பதற்காகவே திசை திருப்புகிறார்கள். இதற்கு மீடியா உலகமும் துணை போகிறது.  

இதுப்பற்றி ஆட்டு மந்தையான மக்களுக்கு எந்த அக்கறையும் இருப்பதில்லை. விளையாடும் வீரர்களை பார்த்து முஷ்டியை மடக்கி, பல்லை கடித்துக்கொண்டு ஜெயிக்கனும் ஜெய்ஹிந்த் என கத்திவிட்டு நகர்ந்துவிடுவதே வேலையாக இருக்கிறது.


ஒலிம்பிக்கில் சாதனை புரிய வேண்டும் என்கிற வேட்கை வீரர்களுக்கு மட்டும் இருந்தால் போதாது. நம்மை ஆளும் அதிகார வர்க்கத்துக்கும், நாட்டு மக்களுக்கும் இருக்கவேண்டும். இல்லையேல் நாளை ஒலிம்பிக்கில் விளையாட போவதே சாதனையாக பார்க்கப்படும்.

செவ்வாய், ஆகஸ்ட் 02, 2016

ஜெ மீதான பயத்தை உடைத்த சசிகலாபுஷ்பா.






அதிரடி....... அதிரடி......... என தலைப்பு கொடுத்து எது எதற்கோ செய்தி போடுகிறார்கள் என் சக தோழர்கள். உண்மையான அதிரடி இதுதான். அதிமுக தலைமை பற்றி நன்கறிந்த அதே கட்சியை சேர்ந்த நாடாளமன்ற உறுப்பினர் சசிகலாபுஷ்பா, உலகம்மே உற்று நோக்கும் இந்திய நாடாளமன்றத்தில் பேசியபேச்சு, அஇஅதிமுக தலைவி ஜெயலலிதாவின் இமேஜ்சை சரித்துள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான மீடியாக்கள் வேண்டுமானால் நாம் கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விடும் என எண்ணி செய்தியை திரிக்கலாம். ஆனால், தமிழகத்தை தாண்டி எண்ணற்ற ஊடகங்கள் உள்ளன. இந்தியாவை தாண்டி பிரபலமான வெளிநாட்டு ஏடுகளும் இந்த செய்தியை பதிவு செய்துள்ளன என்பதை மறந்துவிடுகிறார்கள். சரி விவகாரத்துக்கு வருவோம்.

தூத்துக்குடியில் பிறந்து, திருமணமாகி, சென்னையில் வாழ்க்கை நடத்தியவர் சசிகலாபுஷ்பா. அதிமுகவில் பதவியில் இருந்த அமைச்சர்கள், அதிகாரிகளுடனான நெருக்கத்தால் அதிமுகவில் இணைந்து, கட்சி பதவி, தூத்துக்குடி மேயர் பதவி என வலம் வந்தர் மாநிலங்களவை எம்.பியாகி அதிமுகவின் மாநிலங்களவை கொறடா என முக்கிய பதவியும் வகித்தவர். ஓரிரு மாதங்களுக்கு முன்பு, தனது ஆண் தோழருடனான அந்தரங்க பேச்சு ஆடியோ, திமுகவின் முக்கிய எம்.பியான திருச்சிசிவாவுடனான ஜோடி புகைப்படம் என சர்ச்சை ரவுண்ட் கட்டியதில் இருந்து சசிகலாபுஷ்பாவுக்கு இறங்கு முகம். இறுதியாக கடந்த வாரம், டெல்லி விமான நிலையத்தில் சென்னை வர காத்திருந்தபோது, திமுக எம்.பி திருச்சி சிவா கன்னத்தில், அதிமுகவை சேர்ந்த சசிகலாபுஷ்பா அறைய தேசிய அளவிலான விவாதமாக மாறியது. உடனடியாக இரு எம்.பிகளையும் அவர்களது கட்சி தலைமை அழைத்து விசாரித்தது. 

விசாரணை எப்படி நடந்தது என்பதை இந்தியாவின் மாநிலங்களவையில் அதிமுக எம்.பி சசிகலா புஷ்பா கூறியது, எம்.பி பதவியை ராஜினாமா செய்யச்சொல்லி என் கன்னத்தில் அடித்தார் எங்கள் கட்சி தலைவி. அவர் மட்டும்மல்ல அங்கு சிலரும் தாக்கினார்கள். நாயை போல் அடைத்து வைத்திருந்தார்கள். என் குடும்பத்தை சந்திக்க அனுமதிக்கவில்லை என நாடாளமன்றத்தில் கதறினார். இதை கேட்ட இந்திய நாடாளமன்ற உறுப்பினர்கள் மட்டும்மல்ல, நேரடி ஒளிப்பரப்பில் கேட்டுக்கொண்டுயிருந்த தமிழகம் தவிர்ந்து இந்தியா முழுவதும்முள்ள மக்களை அதிர்ச்சியடைய வைத்துவிட்டது. 


தமிழக மக்கள் அதிர்ச்சியடையவில்லை, சசிகலாபுஷ்பாவை நினைத்து பரிதாபப்பட்டனர். காரணம், ஜெ கட்சி நிர்வாகிகளை அடிப்பார் என்பது இலை மறை காயாக மக்கள் அறிந்தது தான். அதனால் அதிர்ச்சியடையவில்லை. ஆனால் பரிதாப்படகாரணம், ஜெவை எதிர்த்தால் என்ன நடக்கும் என்பது அவர் அரசியலுக்கு வந்த காலம் முதல் இன்று வரை தமிழகம் கண்டுக்கொண்டு தான் இருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளாக கட்சி உறுப்பினர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், மீடியாக்கள், மடாதிபதிகள் என எல்லா மட்டத்திலும் பயத்தை உருவாக்கி வைத்துள்ளார் ஜெ. அந்த பயத்தை வைத்தே கட்சியையும், ஆட்சியையும் நடத்துகிறார். அந்த கட்டமைக்கப்பட்ட பய பிம்பத்தை தான் உடைத்திருக்கிறார் சசிகலாபுஷ்பா. 

நாடாளமன்றத்தில் ஜெ மீது குற்றம்சாட்டி தான் பேசினால் பின்விளைவு என்னவாக இருக்கும் என்பது சசிகலாபுஷ்பா அறியாமல் பேசியிருக்க 100 சதவிதம் வாய்ப்பில்லை. காரணம், முதல்வரான தன் மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய அனுமதி தந்தார் என்ற ஒரே காரணத்துக்காக என்னை கவர்னர் சென்னாரெட்டி என் கையை பிடித்து இழுத்தார் என்றவர் ஜெ. ஜெவை விட நான் அழகு எனச்சொன்ன ஒரே காரணத்துக்காக ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரலேகா முகத்தில் ஆசிட் அடிக்க வைத்தது, தனது ஆடிட்டர் தாக்கப்பட்டது, தனது தோழி சசிகலாநடராஜன் வாழ்வில் புகுந்ததால் இளம்பெண் செரினா வாழ்க்கையை சின்னாபின்னமாக்கியது, வளர்ப்பு மகனை கஞ்சா வழக்கில் கசக்கி எடுத்தது மத்திய அமைச்சராக இருந்த சிதம்பரம் ஓடஓட விரட்டி செருப்பால் அடிக்க வைத்தது, மணிசங்கர்அய்யரை சென்னை விமானநிலையம் முதல் பாண்டிச்சேரி வரை அடிக்க விரட்டியது, ஜனதா தலைவர் சுப்பிரமணியசாமிக்கு தரப்பட்ட அர்ச்சனை தமிழகம் மட்டும்மல்ல இந்தியாவே அறிந்தது தான், சசிகலாபுஷ்பா அறியாமல் இருப்பாரா என்ன. அறிந்துயிருப்பார். அப்படியிருந்தும் பேசியிருக்கிறார்.

என் யூகம், சசிகலா பின்னால் பெரும் பாதுகாப்பு அரண் உள்ளது. அவர்கள் தந்த தைரியம் தான் இவ்வளவு தைரியமாக நாடாளமன்றத்தில் சசிகலாபுஷ்பா வெடித்துள்ளார். சசிகலாபுஷ்பாவுக்கு பின்னால், கார்னட் மணல் வைகுண்டராஜன் உள்ளார் என்கிறது ஒரு தரப்பு, திமுக கனிமொழி உள்ளார் என்கிறது இன்னொரு தரப்பு. இன்னும் சிலரோ, காங்கிரஸ் சப்போட் உள்ளது என்கிறது. யார் இருந்தாலும் ஜெ கவலைப்படமாட்டார். தன்னை எதிர்த்தால் என்ன நடக்கும் என்பதை ஜெ காட்டியே தீருவார். அவர்கள் எத்தனை பெரிய அதிகார மையத்தின் உதவியுடன் இருந்தாலும் கவலைப்படமாட்டார். இந்திய அதிகாரத்தின் உச்சமான ஜனாதிபதியே காஞ்சி சங்கரமடம் வந்தால் பம்முவார்கள். அப்படிப்பட்ட காஞ்சி சங்கராச்சாரியாரை கைது செய்து சிறையில் அடைத்து பிதுக்கி எடுத்தவர் ஜெ. 

இப்படி மற்றவர்களை பழிவாங்குவதற்கு மற்றொரு காரணம், இந்த பயத்தை வைத்து தான் எல்லாரையும் அடக்கி ஒடுக்கி வருகிறார். அந்த பயம் போனால், கட்சியும், ஆட்சியும் தன் கைவிட்டு போய்விடும், தன்னை தூக்கி வீசிவிடுவார்கள் என்பதை உணர்ந்ததால் தான் எதிர்ப்பவன் எத்தனை பெரிய ஆளாக இருந்தாலும் நசுக்கி இதோப்பார் என்னை எதிர்த்தால் இதுதான் நிலைமை என எல்லா தரப்புக்கும் காட்டி பயத்துடன் வைத்திருக்க விரும்புவார். அதனால் நிச்சயம் சசிகலாபுஷ்பா எச்சிரிக்கையுடன் இருப்பது நல்லது.


அதிமுகவில் அடிஉதை என்பது புதியதல்ல. அதிமுகவை தொடங்கிய நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன், முதல்வரான பின், தன்னை எதிர்க்கும் கட்சியின் இரண்டாம், மூன்றாம் கட்ட தலைவர்களை அடித்து உதைக்க, வெளியே தன்னை எதிர்ப்பவர்களை அடக்கி ஒடுக்க சமீபத்தில் மறைந்த ஜேப்பியார் தலைமையில் பெரும் அடியாள் படையே ராமாவரம் தோட்டத்தில் வைத்திருந்தார் என்பது தமிழக மூத்தோர்கள் அறிந்தது. அதிமுகவை ஜெ கைப்பற்றியது போல. அடி உதை வழக்கத்தையும் ஜெ பின்பற்றுகிறார். முன்னவர் எதிர்ப்பவர்களை மிரட்டி பணிய வைப்பதோடு சரி. பின்னவர் எதிர்ப்பவர்களின் உயிரை எடுக்கவும் தயங்கமாட்டார். அவ்வளவு தான் வித்தியாசம்.