திங்கள், ஜூன் 30, 2014

ஸ்டாலின் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும்.



2016ல் ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்ற கோரிக்கை இணையத்தில் இயங்கும் திமுகவினர் சிலரால் முன்னெடுக்கப்படுகிறது. அவரை முதல்வர் நாற்காலியில் அமரவைத்துவிட்டே ஓய்வோம் என பிரச்சாரம் செய்கிறார்கள். அந்த வகையினர் கொள்கை பார்க்ககூடாது, பதவிக்கு வர என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என கருத்து பதிவிடுகிறார்கள்.
திமுகவில் இனி பெரியார் எல்லாம் இனி வேலைக்கு ஆகாது, கொள்கை பேசினால் ஆட்சியை பிடிக்க முடியாது என்கிறார்கள். பெரியாரின் கொள்கையை எதிர்க்கும் எதிரிகள் அவரை  அழைப்பதை போல ஈ.வே.ரா என அழைக்க தொடங்கிவிட்டார்கள் கொள்கையில்லாத கோமகன்கள். கட்சிக்கு கொள்கையில்லை என்றால் திமுகவை வலுவிழக்க செய்யும் என்பதை மறந்துவிட்டு செயல்படுகிறார்கள்.

இந்தியாவில் திமுக தொடங்கிய காலக்கட்டத்தில் தொடங்கிய மாநில கட்சிகள் எல்லாம் தேய்பிறையாகி வளர்பிறையில்லாமல் மறைந்துவிட்டன. திமுக என்ற கட்சி மட்டும் தான் இயற்கை விதியை போல மாற்றம்மில்லாமல் இயங்கிக்கொண்டு இருக்கிறது. அதற்கு காரணம் கொள்கை உள்ள கட்சியாக இருப்பதால் தான். திமுக, கொள்கை என்ற அடித்தளம் உள்ள கட்சி. அந்த அடித்தளம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. அதைத்தான் சிதைக்க தொடங்கியுள்ளார்கள் தற்போதைய விசிலடிச்சான் தொண்டர்கள். திமுக என்பது மாபெரும் மாநில அரசியல் கட்சி. உங்களது விசிலடிச்சான் தொண்டர்கள் சொல்கிறார்கள் என கொள்கைகளை குப்பையில் போட நினைத்தால் நீண்ட காலத்துக்கு கட்சி இருக்காது.

இவர்கள் மீது குற்றம்மில்லை. திமுக கடந்த 30 ஆண்டுகாலமாக தன் வரலாறை இளைய சமுதாயத்தினருக்கு, குறிப்பாக தன் கட்சி இளைஞரணிக்கு கூட கற்று தர மறந்துவிட்டது. அதனால் தான் இடஒதுக்கீட்டை, சமூகநீதியை எதிர்க்கிறார்கள். திமுகவின் எதிரிகளான பெரும்பான்மையான செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் செய்யும் பொய்யான பரப்புரையை நம்புகிறார்கள். திமுகவை அழிக்க நினைத்து அவர்கள் எழுதும் பொய்யான தகவல்களை பகிர்ந்துக்கொண்டு அதனை ஆதரிக்கிறார்கள். கட்சியின், திராவிடத்தின் வரலாறு தெரிந்திருந்தால் இப்படி செய்யமாட்டார்கள். வரலாறு அறைகுறையாக தெரிந்த கொஞ்சமாக உள்ள நிர்வாகிகள் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதில் குறியாக உள்ளனர். ஆட்சியில் அமர்ந்தால் தானே சம்பாதிக்க முடியும். கட்சியை வளர்க்கவோ, கட்சியில் மாற்றம் செய்யவோ இவர்கள் தயாராகயில்லை என்பதை தற்போதைய செயல்பாடுகள் மூலம் அறியமுடிகிறது. 


கட்சியை, ஸ்டாலினை விமர்சித்தால் எகிறி குதிக்கிறார்கள், மிரட்டல் விடுக்கிறார்கள். திமுக தொடங்கிய காலம் முதலே பதவிக்கான போட்டி, விமர்சனம் போன்றவற்றை கண்டு வந்துள்ளது. விமர்சனத்தை எதிர்க்கொள்வது திமுகவினருக்கு புதியதல்ல. திமுகவின் தலைவரானது முதல் இன்று வரை பல விமர்சனங்களை எதிர்க்கொண்டு தான் இருந்து வருகிறார் கலைஞர். உச்சபட்சமாக தள்ளதா வயதில் குஷ்ப+வுடன் இணைத்து எழுதியபோதும் மற்ற கட்சி தலைவர்களை போல் குண்டர்களை வைத்து தாக்கவில்லை. அதை எதிர்க்கொண்டார். கட்சியை ஆரம்பித்த பேரறிஞர் அண்ணாவை ஒரு நடிகையுடன் இணைத்து எழுதியபோது அதற்கு தன் தன்மையில் பதில் சொல்லிவிட்டு போய்விட்டார். ஆனால் கட்சியில் அடுத்த தலைவராக வரவுள்ள ஸ்டாலின் ஆதரவாளர்களால் சாதாரண விமர்சனத்தை கூட தாங்கிக்கொள்ள முடியவில்லை.

எனக்கு தெரிந்து தயாளு அம்மாள் திமுகவின் விவகாரங்களில் தலையிட்டதாக இதுவரை எந்த செய்தியும் வந்ததில்லை. (ராஜாத்தியம்மாள் விலக்கு ) இன்னும் தலைவராகாத ஸ்டாலின் மனைவி இப்போதே அதிகார மையமாக செயல்படுகிறார். இதை எழுதினால் குதிக்கிறார்கள். இதற்கு காரணம் அவரது தொண்டர்கள் மட்டுமல்ல ஸ்டாலினும் தான். கட்சி தலைவராக தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்ட ஸ்டாலின் அதற்கான தகுதிகளில் ஒன்று இன்று வரை குறைகிறது என்றால் அது மற்றவர்களை அரவணைத்து செல்லாமல் இருப்பது, விமர்சனத்தை எதிர்க்கொள்ள மறுப்பது.
திமுகவில் இளைஞரணி தொடங்கிய பின் அதன் அமைப்பாளர் பதவியில் தன்னை அமர்த்திக்கொண்டபின் அதற்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிறார். இன்று வரை இயக்கத்தில் வேறு துணை அமைப்புகளாக உள்ள தொண்டரணி, மாணவரணி, மகளிரணி, இலக்கிய அணி, வழக்கறிஞர் அணி, நெசவாளர் அணி, மீனவரணி, ஆதிதிராவிடர் குழு, தொ.மு.சா, விவசாய அணி, விவசாய தொழிலாளர் அணி என பல அணிகள் உள்ளன. ஆனால் இளைஞரணிக்கு தரப்படும் முக்கியத்தும் போல் மேற்கண்ட வேறு எந்த அணிக்காவது வழக்கியிருக்களா என்றால் இல்லை.

முக்கியத்துவம் தரப்படும் இளைஞரணியினராவது அந்த அணியை வளர்த்தார்களா என்றால் இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இளைஞரணிக்கு நிர்வாகிகளை நியமித்தார் ஸ்டாலின் அதில் இருப்பவர்கள் யார்?, அவர்களுக்கு கட்சியைப்பற்றி என்னத்தெரியும், கட்சி வேண்டாம் இளைஞரணி பற்றியாவது தெரியுமா எனக்கேட்டால் அம்மாவசைக்கும் அப்துல்காதருக்கும் தொடர்பு உள்ளது என்பது போன்ற பதில்கள் தான் கிடைத்தன. இவர்களை நம்பித்தான் பொறுப்புகளை தந்துள்ளார் ஸ்டாலின். இவர்களை நம்பித்தான் தலைவராக ஆசைப்படுகிறார் ஸ்டாலின்.

தலைவராக இருப்பவர் கோஷ்டிகளை வளர்க்ககூடாது. கோஷ்டி தலைவர்களை கட்டுப்படுத்தவும், கட்டுக்குள் வைத்திருக்கவும் தெரிந்திருக்க வேண்டும். வருங்கால தலைவராகவுள்ள ஸ்டாலின் செய்தாரா என்றால் இல்லை. என்னிடம் அதிகாரம் இல்லை, கனிமொழி, அழகிரியை ஓரம் கட்ட எனக்கு கட்சியில் ஆதரவு வட்டம் வேண்டும் என தளபதி நினைக்கிறார் என்கிறார்கள். திமுகவின் அடுத்த தலைவர் ஸ்டாலின் தான் என்பதை கட்சியினர் மட்டுமல்ல மக்களும் ஏற்றுக்கொண்டனர். ஆனால் இன்னமும் அழகிரி, கனிமொழியை கண்டு பயப்படுகிறார் ஸ்டாலின். 


கட்சி தற்போதுள்ள நிலையில் ஒரு பெரும் மாற்றத்தை செய்யவேண்டும், தேர்தலில் தவறு செய்த கட்சியினர் மீது நடவடிக்கை எடுங்கள் என ஆறு பேர் குழு பரிந்துரை செய்கிறது. கட்சியின் பொருளாளராகவுள்ள ஸ்டாலின் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் கூட பாகுபாட்டுடன், தனக்கு வேண்டாதவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்துள்ளார். இதை காணும் போது தலைவர் என்ற அதிகாரம் கிடைத்தாலும் கட்சியில் தன்னை ஏற்றுக்கொள்ளாதவர்களை கட்சியில் இருந்து காலி பண்ண வைக்கும் வேலையை தான் செய்வார் என்பது என் திடமான நம்பிக்கை.

இதில் இருந்தே தெரிகிறது அரவணைத்து செல்லும் பக்குவம் இன்னும் வரவில்லை என்று. கலைஞர் இப்படி என்றும் செய்ததில்லை. தனக்கு எதிரானவர்களையும் தன்னை தலைவராக ஏற்றுக்கொள்ள வைத்தவர் கலைஞர். அந்தளவுக்கு அவர்களுடன் நெருக்கமாக பழகினார். அதுப்போன்ற பழக்கத்தை ஸ்டாலின் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

விசிலடிச்சான் குஞ்சுகள், பதவிக்காக அண்டியுள்ளவர்கள், தன் செல்வத்தை காத்துக்கொள்ள கட்சி பதவியில் இருப்பவர்கள், செயல்படாதவர்களை ஒதுக்கி வைத்துவிட்டு தன்னை சுற்றி முதலில் அறிவார்ந்த கூட்டம் ஒன்றிணை வைத்திருக்க வேண்டும். அவர்கள் பதவிக்கு ஆசைப்படாதவர்களாக, கட்சியைப்பற்றி, செயல்பாடுகள் பற்றி விமர்சனம் வைப்பவர்களாக, கழகத்தை எந்த நிலையிலும் தாங்கி பிடிப்பவராக இருப்பவர்களை தேர்வு செய்து தன் ஆலோசகர்களாக வைத்திருக்க வேண்டும். உண்மையான விமர்சனம், கட்சியின் நிலையைப்பற்றி, மக்களின் தேவைகள் பற்றி மறைக்காமல் சொல்பவர்களை நண்பர்காளக, தோழர்களாக பெற வேண்டும்.

பணம், அதிகாரம் இருந்தால் எதையும் சாதித்துவிடலாம் என நினைத்தால் அதைவிட அதிக அதிகாரமும், பணமும் இருப்பவர்களால் நீங்கள் தூக்கி எரியப்படுவீர்கள். வரலாறு அப்படித்தான் பல சாம்ராஜ்யங்களைப்பற்றி பதிவு செய்து வைத்துள்ளது.

புதன், ஜூன் 25, 2014

கமல் இடத்தை பிடிக்கும் முயற்சியில் விஜய்.





இந்திய சினிமாவுக்கு புதிய தொழில் நுட்பங்கள், வியாபார யுக்திகளை புகுத்துவதில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பல முகம் கொண்ட கமல்ஹாசன் அவர்களுக்கு பெரும் பங்கு உண்டு. அதேநேரத்தில் இந்திய சினிமாவில் பிற மொழிப்படங்களை பார்த்து காப்பியடிப்பதில் பெரும் பங்கும் கமல் அவர்களுக்கே உண்டு. அவரின் எண்ணற்ற படங்கள் காப்பி பேஸ்ட் வகையே. தற்போது வெளியே வரவுள்ள விஸ்வரூம் 2, உத்தமவில்லன் படத்தில் காப்பி வகை தான். கமல் காப்பியடித்தாலும் அதை தன் மண்ணுக்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொள்வார். காப்பி பற்றி அவர் மீது எத்தனை விமர்சகர்கள் விமர்சன கணையை வீசும்போதும், அதைப்பற்றி கேள்வி கேட்கும்போது புரிந்தும் புரியாத இலக்கிய சொற்களால் குழப்பி தன் ஒரு இலக்கியவாதி என்பதை பறைசாட்டிவிடுவார்.
காப்பியடி என்ற பெயரை உலக நாயகன் கமலிடம் இருந்து தற்போது நடிகர் விஜய் பங்கு போட சில ஆண்டுகாலமாக முயற்சித்து வருகிறார். தற்போது விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவரவுள்ள கத்தி என்ற திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. உலகின் பிரபலமான செய்தி ஏடான தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை தனது விற்பனையை உயர்த்த வெளியிடப்பட்ட ஒரு விளம்பரத்தை அப்படியே காப்பி அடித்து கத்தி பட டிரைலரை உருவாக்கியுள்ளது விஜய் முருகதாஸ் கூட்டணி. அதேபோல் அந்த விளம்பரத்தின் பின்னணி இசை மேற்கத்திய பாப் ஆல்பம் ஒன்றின் இசை என்பது குறிப்பிடதக்கது. அதையும் காப்பியடித்துள்ளார் அனிரூத். ( தம்பீ தான் கொலைவெறி பாடலுக்கு இசை அமைத்தவர் ). போஸ்டர் டிசைன் கூட காப்பியடிக்கப்பட்டுள்ளது.
இசை, டிரைலர் டிசைன், போஸ்டர் டிசைன் உட்பட எல்லாமே காப்பி. அந்த வரிசையில் கதையும் காப்பியாக தான் இருக்கும். இல்ல முருகதாஸ் அப்படி செய்யமாட்டார் என நம்பும் மேதாவியா நீங்கள் கஜினி என்ற படம் ஒரு மேற்கத்திய நாட்டில் வெளிவந்த ஒரு படத்தின் காப்பி என்பதை உணர்ந்துக்கொள்ளுங்கள். விஜய்க்கும் இது காப்பியென்று தெரியும் அவர் ஏன் இதை கண்டுக்கொள்ளவில்லை ?. கத்தி படம் மட்டுமல்ல இதற்கு முன் வந்த துப்பாக்கி, கில்லி என பலப்படங்கள் தெலுங்கு, ஹாலிவுட் படங்களில் இருந்து காப்பியடிக்கப்பட்டும், உரிமைப்பெற்றும் தயாரித்த படங்கள் தான்.
இதை ஏதோ கமல், விஜய் மட்டும் செய்யவில்லை. சமகாலத்தில் இசையமைப்பளார்கள் இளையராஜா, தேவா, ரஹ்மான், ஹாரிஸ்ஜெயராஜ், இயக்குநர்கள் மிஷ்கின், சங்கர், முருகதாஸ், அமீர் உட்பட என்னற்றோர் செய்கின்றனர். கமலும். விஜய்யும் வெளிப்படையாக செய்கின்றனர் அவ்வளவே. 

கடந்த வாரம் தமிழகத்தின் பிரபலமான ஒரு வார இதழ் தமிழகத்தின் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என அட்டைப்படம் போட்டு விஜய்யை ரஜினி இடத்தில் வைத்து அழகு பார்த்துள்ளது.
என்னைக்கேட்டால் கமல் இடத்தில் வைக்க பொருத்தமான நபர் விஜய் என்பேன்.

செவ்வாய், ஜூன் 03, 2014

மோடியின் மோசடி அரசாங்கம்…......



மோடி பிரதமரானால், விலைவாசி குறையும், முடிவுகள் வேகவேகமாக எடுக்கப்படும், சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு பலமாக இருக்கும், லஞ்ச – லாவண்யம்மே இருக்காது, ஊழல்கள் ஊதி தள்ளப்படும், கறுப்பு பணம் கைப்பற்றப்படும், பருப்பு பத்து ரூபாய்க்கு விற்கும், அரிசி 5 ரூபாய்க்கு விற்கும்,  சீனா, பாகிஸ்தான், இலங்கை, அமெரிக்கா உட்பட உலக நாடுகள் எல்லாம் மோடியை கண்டு நடுநடுங்கும். இரண்டு வருடத்தில் நாடு வல்லரசாகும், பெண்கள் பாதுகாப்பாக வலம் வருவார்கள், இலவசம்மே இருக்காது, அந்நிய முதலீடு துரத்தப்படும், சுதேசி முதலீடு உயர்த்தப்படும், எல்லையில் வாலாட்டினால் வெட்ட நறுக்கப்படும், இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டால், தமிழக மீனவர்கள் இலங்கை இராணுவத்தால் சுடப்பட்டால் அந்நாட்டு ராணுவம் துவம்சம் செய்யப்படும். ஈழத்தமிழர்களை கொன்ற இராஜபக்சே இந்தியாவுக்கு வரவைத்து அடிமைப்படுத்தப்படுவார் என இன்னும் என்னன்னவோ சொன்னார்கள், விளம்பரம் தந்தார்கள் அவரது ஆதரவாளர்கள். பி.ஜே.பிக்காரர்களை விட நடுநிலையென சொல்லிக்கொண்டு மோடிக்கு கோஷம் போட்டார்கள்.

மோடி பிரதமராகிவிட்டார். நடப்பதுயென்ன ?.

ஈழத்தமிழர்களை கொன்ற சிங்கள அதிபர் இராஜபக்சே மோடி பதவி ஏற்புக்கு அன்பாக அழைக்கப்பட்டார். தமிழர் அமைப்புகளும், பி.ஜே.பி கூட்டணியில் இருந்த கட்சியினரும் எதிர்த்தனர். மோடியும் அவரது சகாக்களும் கண்டுக்கொள்ளவில்லை. ராஜபக்சேவுக்கு சிறப்பான வரவேற்பு. தன் நாட்டுக்கு புன்னகையோடு திரும்ப போனார்.

மத்தியரசில் உயர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள். குறிப்பிட்ட காலத்துக்கு வேறு எங்கும் பணியில் சேரக்கூடாது, அரசியலுக்கு வரக்கூடாது என்பது அரசு விதி. அந்த விதி மாற்றம் செய்யப்பட்டு சி.ஏ.ஜீ தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்று வீட்டில் இருந்தவரை மோடியின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய அரசின் புதிய அட்டர்னி ஜெனரல் முகுல்ரோத்கி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அலைக்கற்றை வழக்கில் அம்பானியின் பினாமி நிறுவனமான ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் வழக்கறிஞர்.

கல்வியில் பொய், பித்தலாட்டம் செய்வர்கள், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆலோசகர்களாக, வழக்கறிஞர்களாக இருப்பவர்களை அமைச்சரவையில் சேர்த்தாகிவிட்டது. அமைச்சர்கள் சரியாக முடிவு எடுக்கிறார்களா என ஆராய்ந்து முடிவுகள் எடுக்க கடந்த வாஜ்பாய் காலத்தில் அமைக்கப்பட்ட கேபினட் அமைச்சர்கள் கொண்ட குழுக்கள் கலைக்கப்பட்டுவிட்டன.

இரயில்வே துறை தனியார் மயமாக்க முடிவு செய்யப்பட்டு விட்டது. இரயில்வே கட்டணம் உயரும் என இரயில்வே அமைச்சர் அறிவித்துவிட்டார்.

மோடி பதவிக்கு வந்த மூன்றாவது நாளே டீசல் லிட்டருக்கு 50 பைசா உயர்த்தியுள்ளது பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்கள்.

பங்கு சந்தையின் புள்ளிகள் படுவேகமாக உயர தொடங்கியுள்ளன. விலைவாசிகள் உயரவே செய்கின்றன.

நாட்டின் மிக மிக முக்கிய துறையான பாதுகாப்பு துறையில் 100 சதவிதம் அந்நிய முதலீட்டுக்கு கதவு திறந்துவிடப்பட்டுள்ளது. நாட்டின் நான்காம் தூண் எனப்படும் பத்திரிக்கை, மீடியா துறையில் 100 சதவிதம் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

காஷ்மீர்க்கான சிறப்பு சட்டம் ரத்து செய்ய பேச தொடங்கியாகிவிட்டது.

மோடி பதவியேற்ற நான்காவது நாள், மீன்பிடி தடைகாலம் முடிந்து கடலுக்கு சென்ற தமிழக மீனவர்கள் 33 பேரை இலங்கை இராணுவம் சிறை பிடித்து சென்றுள்ளது. இலங்கையில் மோடியை இந்தியாவில் புரமோட் செய்த அதானி நிறுவனம் இலங்கையில் மின்நிலையம் அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

மோடியின் அரசாங்கம் சொல்லில், செயல்பாட்டில் மோசடிகள் செய்ய தொடங்கிவிட்டது. தனை அறிந்தும் நடுநிலை பேசியவர்கள் ஜென் நிலையில் தங்களை வெளிப்படுத்துகிறார்கள். சிலர் இப்பதானே பதவிக்கு வந்தாரு என்கிறார்கள்.

பதவிக்கு வந்த இந்த 15 நாட்களிலேயே இத்தனை குளறுபடியென்றால் இனி எவ்வளவோ……….