திங்கள், ஜூன் 30, 2014

ஸ்டாலின் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும்.



2016ல் ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்ற கோரிக்கை இணையத்தில் இயங்கும் திமுகவினர் சிலரால் முன்னெடுக்கப்படுகிறது. அவரை முதல்வர் நாற்காலியில் அமரவைத்துவிட்டே ஓய்வோம் என பிரச்சாரம் செய்கிறார்கள். அந்த வகையினர் கொள்கை பார்க்ககூடாது, பதவிக்கு வர என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என கருத்து பதிவிடுகிறார்கள்.
திமுகவில் இனி பெரியார் எல்லாம் இனி வேலைக்கு ஆகாது, கொள்கை பேசினால் ஆட்சியை பிடிக்க முடியாது என்கிறார்கள். பெரியாரின் கொள்கையை எதிர்க்கும் எதிரிகள் அவரை  அழைப்பதை போல ஈ.வே.ரா என அழைக்க தொடங்கிவிட்டார்கள் கொள்கையில்லாத கோமகன்கள். கட்சிக்கு கொள்கையில்லை என்றால் திமுகவை வலுவிழக்க செய்யும் என்பதை மறந்துவிட்டு செயல்படுகிறார்கள்.

இந்தியாவில் திமுக தொடங்கிய காலக்கட்டத்தில் தொடங்கிய மாநில கட்சிகள் எல்லாம் தேய்பிறையாகி வளர்பிறையில்லாமல் மறைந்துவிட்டன. திமுக என்ற கட்சி மட்டும் தான் இயற்கை விதியை போல மாற்றம்மில்லாமல் இயங்கிக்கொண்டு இருக்கிறது. அதற்கு காரணம் கொள்கை உள்ள கட்சியாக இருப்பதால் தான். திமுக, கொள்கை என்ற அடித்தளம் உள்ள கட்சி. அந்த அடித்தளம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. அதைத்தான் சிதைக்க தொடங்கியுள்ளார்கள் தற்போதைய விசிலடிச்சான் தொண்டர்கள். திமுக என்பது மாபெரும் மாநில அரசியல் கட்சி. உங்களது விசிலடிச்சான் தொண்டர்கள் சொல்கிறார்கள் என கொள்கைகளை குப்பையில் போட நினைத்தால் நீண்ட காலத்துக்கு கட்சி இருக்காது.

இவர்கள் மீது குற்றம்மில்லை. திமுக கடந்த 30 ஆண்டுகாலமாக தன் வரலாறை இளைய சமுதாயத்தினருக்கு, குறிப்பாக தன் கட்சி இளைஞரணிக்கு கூட கற்று தர மறந்துவிட்டது. அதனால் தான் இடஒதுக்கீட்டை, சமூகநீதியை எதிர்க்கிறார்கள். திமுகவின் எதிரிகளான பெரும்பான்மையான செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் செய்யும் பொய்யான பரப்புரையை நம்புகிறார்கள். திமுகவை அழிக்க நினைத்து அவர்கள் எழுதும் பொய்யான தகவல்களை பகிர்ந்துக்கொண்டு அதனை ஆதரிக்கிறார்கள். கட்சியின், திராவிடத்தின் வரலாறு தெரிந்திருந்தால் இப்படி செய்யமாட்டார்கள். வரலாறு அறைகுறையாக தெரிந்த கொஞ்சமாக உள்ள நிர்வாகிகள் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதில் குறியாக உள்ளனர். ஆட்சியில் அமர்ந்தால் தானே சம்பாதிக்க முடியும். கட்சியை வளர்க்கவோ, கட்சியில் மாற்றம் செய்யவோ இவர்கள் தயாராகயில்லை என்பதை தற்போதைய செயல்பாடுகள் மூலம் அறியமுடிகிறது. 


கட்சியை, ஸ்டாலினை விமர்சித்தால் எகிறி குதிக்கிறார்கள், மிரட்டல் விடுக்கிறார்கள். திமுக தொடங்கிய காலம் முதலே பதவிக்கான போட்டி, விமர்சனம் போன்றவற்றை கண்டு வந்துள்ளது. விமர்சனத்தை எதிர்க்கொள்வது திமுகவினருக்கு புதியதல்ல. திமுகவின் தலைவரானது முதல் இன்று வரை பல விமர்சனங்களை எதிர்க்கொண்டு தான் இருந்து வருகிறார் கலைஞர். உச்சபட்சமாக தள்ளதா வயதில் குஷ்ப+வுடன் இணைத்து எழுதியபோதும் மற்ற கட்சி தலைவர்களை போல் குண்டர்களை வைத்து தாக்கவில்லை. அதை எதிர்க்கொண்டார். கட்சியை ஆரம்பித்த பேரறிஞர் அண்ணாவை ஒரு நடிகையுடன் இணைத்து எழுதியபோது அதற்கு தன் தன்மையில் பதில் சொல்லிவிட்டு போய்விட்டார். ஆனால் கட்சியில் அடுத்த தலைவராக வரவுள்ள ஸ்டாலின் ஆதரவாளர்களால் சாதாரண விமர்சனத்தை கூட தாங்கிக்கொள்ள முடியவில்லை.

எனக்கு தெரிந்து தயாளு அம்மாள் திமுகவின் விவகாரங்களில் தலையிட்டதாக இதுவரை எந்த செய்தியும் வந்ததில்லை. (ராஜாத்தியம்மாள் விலக்கு ) இன்னும் தலைவராகாத ஸ்டாலின் மனைவி இப்போதே அதிகார மையமாக செயல்படுகிறார். இதை எழுதினால் குதிக்கிறார்கள். இதற்கு காரணம் அவரது தொண்டர்கள் மட்டுமல்ல ஸ்டாலினும் தான். கட்சி தலைவராக தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்ட ஸ்டாலின் அதற்கான தகுதிகளில் ஒன்று இன்று வரை குறைகிறது என்றால் அது மற்றவர்களை அரவணைத்து செல்லாமல் இருப்பது, விமர்சனத்தை எதிர்க்கொள்ள மறுப்பது.
திமுகவில் இளைஞரணி தொடங்கிய பின் அதன் அமைப்பாளர் பதவியில் தன்னை அமர்த்திக்கொண்டபின் அதற்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிறார். இன்று வரை இயக்கத்தில் வேறு துணை அமைப்புகளாக உள்ள தொண்டரணி, மாணவரணி, மகளிரணி, இலக்கிய அணி, வழக்கறிஞர் அணி, நெசவாளர் அணி, மீனவரணி, ஆதிதிராவிடர் குழு, தொ.மு.சா, விவசாய அணி, விவசாய தொழிலாளர் அணி என பல அணிகள் உள்ளன. ஆனால் இளைஞரணிக்கு தரப்படும் முக்கியத்தும் போல் மேற்கண்ட வேறு எந்த அணிக்காவது வழக்கியிருக்களா என்றால் இல்லை.

முக்கியத்துவம் தரப்படும் இளைஞரணியினராவது அந்த அணியை வளர்த்தார்களா என்றால் இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இளைஞரணிக்கு நிர்வாகிகளை நியமித்தார் ஸ்டாலின் அதில் இருப்பவர்கள் யார்?, அவர்களுக்கு கட்சியைப்பற்றி என்னத்தெரியும், கட்சி வேண்டாம் இளைஞரணி பற்றியாவது தெரியுமா எனக்கேட்டால் அம்மாவசைக்கும் அப்துல்காதருக்கும் தொடர்பு உள்ளது என்பது போன்ற பதில்கள் தான் கிடைத்தன. இவர்களை நம்பித்தான் பொறுப்புகளை தந்துள்ளார் ஸ்டாலின். இவர்களை நம்பித்தான் தலைவராக ஆசைப்படுகிறார் ஸ்டாலின்.

தலைவராக இருப்பவர் கோஷ்டிகளை வளர்க்ககூடாது. கோஷ்டி தலைவர்களை கட்டுப்படுத்தவும், கட்டுக்குள் வைத்திருக்கவும் தெரிந்திருக்க வேண்டும். வருங்கால தலைவராகவுள்ள ஸ்டாலின் செய்தாரா என்றால் இல்லை. என்னிடம் அதிகாரம் இல்லை, கனிமொழி, அழகிரியை ஓரம் கட்ட எனக்கு கட்சியில் ஆதரவு வட்டம் வேண்டும் என தளபதி நினைக்கிறார் என்கிறார்கள். திமுகவின் அடுத்த தலைவர் ஸ்டாலின் தான் என்பதை கட்சியினர் மட்டுமல்ல மக்களும் ஏற்றுக்கொண்டனர். ஆனால் இன்னமும் அழகிரி, கனிமொழியை கண்டு பயப்படுகிறார் ஸ்டாலின். 


கட்சி தற்போதுள்ள நிலையில் ஒரு பெரும் மாற்றத்தை செய்யவேண்டும், தேர்தலில் தவறு செய்த கட்சியினர் மீது நடவடிக்கை எடுங்கள் என ஆறு பேர் குழு பரிந்துரை செய்கிறது. கட்சியின் பொருளாளராகவுள்ள ஸ்டாலின் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் கூட பாகுபாட்டுடன், தனக்கு வேண்டாதவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்துள்ளார். இதை காணும் போது தலைவர் என்ற அதிகாரம் கிடைத்தாலும் கட்சியில் தன்னை ஏற்றுக்கொள்ளாதவர்களை கட்சியில் இருந்து காலி பண்ண வைக்கும் வேலையை தான் செய்வார் என்பது என் திடமான நம்பிக்கை.

இதில் இருந்தே தெரிகிறது அரவணைத்து செல்லும் பக்குவம் இன்னும் வரவில்லை என்று. கலைஞர் இப்படி என்றும் செய்ததில்லை. தனக்கு எதிரானவர்களையும் தன்னை தலைவராக ஏற்றுக்கொள்ள வைத்தவர் கலைஞர். அந்தளவுக்கு அவர்களுடன் நெருக்கமாக பழகினார். அதுப்போன்ற பழக்கத்தை ஸ்டாலின் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

விசிலடிச்சான் குஞ்சுகள், பதவிக்காக அண்டியுள்ளவர்கள், தன் செல்வத்தை காத்துக்கொள்ள கட்சி பதவியில் இருப்பவர்கள், செயல்படாதவர்களை ஒதுக்கி வைத்துவிட்டு தன்னை சுற்றி முதலில் அறிவார்ந்த கூட்டம் ஒன்றிணை வைத்திருக்க வேண்டும். அவர்கள் பதவிக்கு ஆசைப்படாதவர்களாக, கட்சியைப்பற்றி, செயல்பாடுகள் பற்றி விமர்சனம் வைப்பவர்களாக, கழகத்தை எந்த நிலையிலும் தாங்கி பிடிப்பவராக இருப்பவர்களை தேர்வு செய்து தன் ஆலோசகர்களாக வைத்திருக்க வேண்டும். உண்மையான விமர்சனம், கட்சியின் நிலையைப்பற்றி, மக்களின் தேவைகள் பற்றி மறைக்காமல் சொல்பவர்களை நண்பர்காளக, தோழர்களாக பெற வேண்டும்.

பணம், அதிகாரம் இருந்தால் எதையும் சாதித்துவிடலாம் என நினைத்தால் அதைவிட அதிக அதிகாரமும், பணமும் இருப்பவர்களால் நீங்கள் தூக்கி எரியப்படுவீர்கள். வரலாறு அப்படித்தான் பல சாம்ராஜ்யங்களைப்பற்றி பதிவு செய்து வைத்துள்ளது.

2 கருத்துகள்:

  1. ஸ்டாலின் மாற நினைத்தாலும் அவரை சுற்றியுள்ளவர்கள் தங்கள் சுயநலனுக்காக தவறான தகவல்களைதான் அவரிடம் சொல்லுகிறார்கள் அதனால் இந்த பிரச்சனையே அதிலும் இப்போது இணையத்தில் போராடும் திமுக போராளிகள் பண்ணும் அட்டகாசம் தாங்க முடியலை இவர்களின் செயல்கள் ஸ்டாலினின் செல்வாக்கிற்கு பாதகத்தைதான் ஏற்படுத்துகிறது இந்த போராளிகள் தெருவில் இறங்கிப் போராடாமல் ஏசி ருமில் உட்கார்ந்து போராடி தங்கள் காரியத்தை மட்டும் நிறைவேற்றுகிறார்கள்

    பதிலளிநீக்கு
  2. //இந்தியாவில் திமுக தொடங்கிய காலக்கட்டத்தில் தொடங்கிய மாநில கட்சிகள் எல்லாம் தேய்பிறையாகி வளர்பிறையில்லாமல் மறைந்துவிட்டன// Regional parties got encouragement in rest of India too, with DMK as the flag-bearer. BSP, SP, BJD, TMC have captured power and ruling for full terms, without coalitions.

    பதிலளிநீக்கு